திங்கள், 31 அக்டோபர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 22)





பாடல்களின் கரு ஈழத்தமிழர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் அமைந்திருந்தது. காட்சிகளிலும் எவ்வளவு இயலுமோ அவ்வளவு ஈழம் தொடர்பான செய்திகளைப் புகுத்தியிருந்தார்கள். நல்ல உணர்வுள்ள மனிதர் போலும் என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

“எதற்காக உங்கள் நாட்டில் அரசியலிலும், சினிமாவிலும் எங்களைப் பயன்படுத்தி ஆதாயம் தேடுகிறீர்?” என கவிதா சட்டெனக் கேட்டுவிட்டாள். அவள் கேள்வியால் நான் சற்று அதிர்ந்துத்தான் போனேன். ஈழப்பிரச்சனையை சிலர் அரசியல் ஆக்குவதும் மற்றும் சிலர் சினிமாவில் சம்மாதிக்க அதனையே ஆயுதமாக்குவதும் நாம் அனைவரும் அறிந்ததே. இருந்த போதும், உண்மையான போராட்டவாதிகளும், இந்தப் பிரச்சனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என பாடுபடும் திரைப்படக்காரர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

“எங்களுக்காக இந்த நாட்டுல யாருமே உண்மையாக போராடவில்லை,” என அந்தப் பெண் பொதுவான ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தாள். “அப்படி இல்லை, …….” என இயக்குனர் உண்மை நிலவரத்தை அவளுக்குப் புரிய வைக்க முயன்றுக் கொண்டிருந்தார். இவள் கேட்கட்டும், அவர்கள் சொல்லட்டும் என நான் மெளனமாக கேட்டுக்கொண்டிருந்தேன். அம்மா, அக்கா, அத்தான், சித்தி, குழந்தை, காதல் என தன்னைச் சுற்றி ஒரு பாச வட்டத்தினை அமைத்துக்கொண்டு வாழும் அந்தச் சின்னப் பெண்ணுக்கு இவர்களது போராட்டங்கள் தெரிய வாய்ப்பில்லைதான்.

‘இந்தியா கைவிட்டுவிட்டது. தமிழ்நாட்டு தமிழர்கள் ஒன்றும் உதவி செய்யவில்லை’ என்ற பொதுவான எண்ணம் மட்டும் அவள் மனதில் ஆழமாக பதிந்திருந்ததை உணர முடிந்தது. “இல்லையம்மா, தமிழ்நாட்டிலும் ஈழத்துக்கு ஆதரவான பல போராட்டங்கள் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது,” என இடையில் நானும் விளக்கப்படுத்த முனைந்தேன். “அப்படி என்றால், ஏன் எங்களுக்கு அதனைப் பற்றி எதுவுமே தெரியவில்லை?” என அவள் மீண்டும் கேட்டாள்.

“நீங்கள் தான் தெரிந்துக்கொள்ள வேண்டும். மலேசியாவில் உள்ள இந்தப் பெண்ணுக்கு இங்கே நடக்கும் போராட்டங்கள் தெரியும் போது, இங்கேயே இருக்கும் உங்களுக்குத் தெரியாதது யார் தவறு?” என கீரா கேட்க , அந்தப் பெண் திருதிருவென விழித்தாள். கேள்விகளும், விளக்கங்களும், விவாதங்களும் தொடர்ந்துக் கொண்டே சென்றன.

திடீரென ‘பச்சை என்கிற காத்து’ திரைப்படத்தின் கதாயாநாயகன் வாசகர் அறைக்குள் நுழைந்தார். இவர்தான் படத்தின் நாயகன் என நான் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. மிகவும் சாதாரணமாக இருந்தார். உயராமாக இருந்தார். முகத்தில் முக்கால் பாகத்தை தாடி மறைத்திருந்ததால் இவர்தான் உண்மையாகவே கதாநாயகனா என்ற சந்தேகம் எனக்குள் இருக்கவே செய்தது. படத்தில் சில காட்சிகளைக் கண்டுவிட்டதால், கிராமத்துக் கதைக்கு ஏற்ற முகமாக இருக்கலாம் என நானே கணக்கிட்டுக் கொண்டேன். உள்ளே நுழைந்த வாசகரை, இயக்குனர் கீரா எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். ஏதோ அவசர வேளையாக வந்த வாசகர், எங்களை வரவேற்றுவிட்டு நொடிப்பொழுதில் அறையை விட்டு வெளியேறினார்.

திருமணம் தொடர்பான கேள்விகள் தொடங்கின. “ஈழத் தமிழர்கள் ஏன் தமிழ்நாட்டுத் தமிழர்களைத் திருமணம் செய்யத் தயங்குகிறார்கள்? அங்கேயும் சாதியப் பிரச்சனையா?” என்ற வகையில் விவாதம் தொடர்ந்தது. பல வாதங்கள் முன் வைக்கப்பட்டன. எனக்குக் கவிதாவைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. நல்ல துடிப்புள்ள பெண். அறியாமையில் மூழ்கிக் கிடக்கிறாளே. அவள் வாழும் சூழலில் வெளி விடயங்களை அறிந்துக் கொள்வது சற்று கடினம்தான். அதனால் தான் என்னவோ பல விடயங்களைக் கேட்கும் போது ஆச்சர்யத்தால் அவளது புருவங்கள் உயர்ந்தன. அவர்களது விவாதங்களில் தலையிடாமல் நான் அமைதியாக அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டிருந்தேன்.


நேரமாகிக் கொண்டிருந்தது. நான் தனியே வந்திருந்தால் பரவாயில்லை. உடன் இந்தப் பெண்ணை வேறு அழைத்து வந்திருக்கிறோமே என்ற எண்ணம் வர, கீராவிடம் விடைப்பெற்றோம். முகிலன் பேருந்து நிலையம் வரை எங்களை வழியனுப்ப வந்தார். அங்கே சாலை ஓரமாக ஒரு தள்ளு வண்டியில் பானிப்பூரியும், பொரித்த காளான்களும் விற்பனையாகிக் கொண்டிருந்தன. தான் பானிப்பூரியைச் சாப்பிட்டதே இல்லை என கவிதா இதற்கு முன் எம்மிடன் சொல்லியிருந்தாள். அது நினைவிற்கு வர நான், முகிலன், கவிதா ஆகிய மூவரும் பானிப்பூரியும், பொரித்த காளான்களும் வாங்கி அங்கேயே உண்ண ஆரம்பித்தோம்.

நாங்கள் ஏதோ கதைத்துக்கொண்டிருக்க, “நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா?” என முகிலன் சட்டெனக் கேட்டார். சில வினாடி மெளனத்திற்குப் பிறகு, “இல்லை,” என்றேன். “அப்படியானால் நீங்கள் ஏன் ஒரு தமிழ்நாட்டுக்காரரைத் திருமணம் செய்து அவருக்கு வாழ்க்கைக் கொடுக்கக் கூடாது?” என தயக்கமின்றி கேட்டார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. இந்தக் கேள்வியை நான் எதிர்ப்பார்க்கவில்லை. ‘நான் வாழ்க்கைக் கொடுக்க வேண்டுமா? விசித்திரமாக இருக்கிறதே’ என நினைத்ததோடு நில்லாமல், “ நான் வாழ்க்கைக் கொடுக்கணுமா?” என வாய் திறந்தே கேட்டு விட்டேன்.

“ஏன் கொடுக்க மாட்டீர்களா? பெண்கள் சம உரிமையைப் பற்றி பேசுகிறீர்கள்? எப்போதுமே ஆண்கள் தான் திருமணம் செய்து, வேலைக்குச் சென்று பெண்களைக் காப்பாற்றுகிறார்கள். சம உரிமை கேட்கும் பெண்களும் ஆண்களைத் திருமணம் செய்து, வேலைக்குச் சென்று, அவர்களை காப்பாற்றலாமே?” என்றார். இது எனக்கு முற்றிலும் விசித்திரமாக இருந்தது. இப்படியும் கிளம்பிட்டாங்களா? என மனதிற்குள் சிரித்துக் கொண்டேன். எமது இதழ்களும் விரிந்தன.

“சிரிக்காதீங்க. நான் உண்மையாக கேட்கிறேன். உங்களைப் பார்த்த உடனே தோழர் ஒருவர் நினைவுக்கு வந்தார். முதல்ல முத்துக்குமார் இறப்பு பற்றி பேசினோம் அல்லவா. அவர் இறப்பின் இறுதிச் சடங்கிற்காக தனது வேலையையே உதறி தள்ளிட்டு வந்துட்டார். அப்படி ஒரு உணர்வாளர். உங்களுக்கு மிகவும் பொருத்தமானவர். யோசித்துப் பார்த்து பதில் சொல்லுங்கள். நீங்கள் தமிழ்நாட்டு மருமகளாக வரவேண்டும்,” என தனது ஆசையைத் தெரியப்படுத்தினார்.

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. “தற்போதைய சூழலில் திருமணம் செய்யும் எண்ணம் இல்லை,” எனச் சொல்லி தப்பிக்கலாம் என்று பார்த்தேன். “பரவாயில்லை. எப்போது உங்களக்குத் திருமணம் செய்யும் எண்ணம் வருதோ அப்போது கண்டிப்பாக நீங்கள் எங்கள் நாட்டு மருமகளாகத்தான் வரவேண்டும்,” என உரிமையுடன் கேட்டுக்கொண்டார். “பார்க்கலாம்” என சொல்லி மழுப்பினேன்.

நாங்கள் ஏற வேண்டிய பேருந்து வந்தது. முகிலனிடம் விடைப்பெற்றுக் கொண்டோம். “நான் சொன்னதை யோசித்துப் பாருங்கள்,” என மீண்டும் ஒருமுறை வலியுறுத்தினார். பேருந்தில் காலி இருக்கைகள் இல்லாத காரணத்தினால் நாங்கள் நின்றுக்கொண்டே பயணம் செய்ய வேண்டியதாயிற்று. வடபழனி வந்ததும் இருவரும் இறங்கிக் கொண்டோம். அங்கேயிருந்து ஆட்டோ எடுத்துச் செல்வதாக உத்தேசித்திருந்தோம். பேருந்து நிறுத்தத்தில் அருகில் இருந்த பழக்கடையில் சில மாம்பழங்கள் வாங்கிக் கொண்டேன். பின்னர் ஆட்டோ எடுத்து இருவரும் வளசரவாக்கம் சென்றோம்.

அங்கே சாலை ஓரத்தில் இறங்கிவிட்டு, குண்டும் குழியுமாக இருந்த செம்மண் சாலையில் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். வானம் நன்றாக இருட்டிவிட்டிருந்தது. போகும் வழியில் இருந்த கடை ஒன்றில் சித்தியின் குழந்தைகளுக்குச் சில நொறுக்குத் தீனிகள் வாங்கிக் கொண்டேன். போகும் வழியெல்லாம் கவிதா கதைத்துக் கொண்டே வந்தாள். வீட்டை அடைந்ததும் பாக்கியா அக்காவுடன் சிறிது நேரம் கதைத்த பிறகு, குளித்து, உணவு உண்டோம். பின்னர், சிறிது நேரம் இணையத்தில் உலாவிவிட்டு, படுக்கைக்குச் சென்றேன்.

அடுத்த நாள் அதிகாலையிலேயே எழுந்துவிட்டேன். இன்று நுங்கம்பாக்கம் ‘ஸ்ப்ரீங்’ விடுதியில் முக்கியமான சந்திப்பு ஒன்று இருந்தது. வீட்டில் வேறு வேலை இல்லாததால் பாக்கியா அக்கா என்னுடன் வர சம்மதித்தார். ஆட்டோ ஓட்டுனருக்கு வழி தெரியாததால் சற்று தாமதமாகவே விடுதியை அடைந்தோம். அங்கே அனைவரும் எங்கள் வருகைக்காகக் காத்திருந்தனர். இன்றும் தாமதமாகிவிட்டதே என சிறிய குற்ற உணர்வு எம்மை ஆட்டிப் படைத்தது. நிகழ்வு ஆரம்பமானது.

வியாழன், 20 அக்டோபர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 21)




காலையிலேயே எழுந்து, குளித்துப் பசியாறினேன். பாக்கியா அக்காவிடம் கதைத்துக் கொண்டிருந்தேன். எப்படியோ எனது முதுகில் இருந்தச் சின்னத்தைப் பார்த்துவிட்டார். பார்த்ததோடு நில்லாமல் வீட்டில் இருந்த மற்றவர்களுக்கும் சொல்லிவிட்டார். என்னால் இவர்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்துவிடுமோ என வருத்தமாக இருந்தது. ஆனால், அவர்களோ மிகுந்த சந்தோஷமடைந்தனர். நேற்று வரை எம்மிடம் ஒரு வார்த்தைக் கூட பேசாமல் இருந்த பாக்கியாவின் கணவனான கண்ணன் அண்ணா அதன் பிறகுதான் என்னிடம் சகஜமாக பேசவே ஆரம்பித்தார்.

திரைப்படங்களில் அதிகமாக உச்சரிக்கபடும் சத்யம் திரையரங்கத்திற்குச் செல்ல வேண்டும் என்ற எனது விருப்பத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன். அன்று மதியம் குடும்பத்தில் இருந்த அனைவரும் மகிழுந்தில் மகிழ்ச்சியாக சத்யம் திரையரங்கிற்குச் சென்றோம். அங்கே பாலன் அண்ணாவும் எங்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தார். படம் திரையிடப்படுவதற்கு இன்னும் பல நிமிடங்கள் இருந்தன. நானும் மற்ற பெண்களும் திரையரங்கிற்கு முன்னால் சாலை ஓரத்தில் ஒரு கல்லில் அமர்ந்துக் காத்திருந்தோம்.

பெரும்பான்மை இளையோர்களே அவ்விடம் குவிந்திருந்தனர். பெண்கள் காற்சட்டை, உடம்பைப் பிடித்த மேற்சட்டை என மலேசியப் பெண்கள் போல்தான் உடையணிந்திருந்தனர். விரித்துப் போட்டிருந்த அவர்களது சிகையலங்காரமும், சாயம் பூசிய உதடுகளும் அவர்கள் நவநாகரிக மங்கைகள் என பறைசாற்றியது. சிலர் தோள்களில் தொங்கிக்கொண்டிருந்த பை, கல்லூரி மாணவர்களாக இருக்கக்கூடும் என எம்மை அனுமானிக்கச் செய்தது.

நேரம் நெருங்கியவுடன் நாங்கள் அனைவரும் திரையரங்கிற்குள் நுழைந்தோம். நுழைவாயிலில் இருந்த காவலாளிகள் எனது பையைத் திறக்கச் சொல்லி சோதனையிட்டனர். எதற்காக திரையரங்கில் இவ்வளவு சோதனை என எனக்கு சற்று வியப்பாக இருந்தது. அரங்கிற்குள் நுழைந்தேன். எங்கள் இருக்கையின் எண் பார்த்து அமர்ந்துக் கொண்டோம். சாதாரண திரையரங்குதான். இதில் அப்படி என்னச் சிறப்பு? அதே வெண்திரை, நாற்காலிகள், விளக்குகள்! எனக்கு அது புதுமையாகத் தெரியவில்லை. அங்குள்ள மனிதர்கள் மட்டுமே புதுமையாகத் தெரிந்தனர்.

எமது பின்னால் குரல் தாழ்த்தி யாரோ பேசுவது கேட்க திரும்பிப் பார்த்தேன். முழுக்க முக்காடிட்ட பெண் ஒருத்தி பக்கத்தில் அமர்ந்திருந்த இளைஞனிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். அந்த இளைஞனின் பக்கத்தில் இன்னொரு ஆண். அவன் பக்கத்திலும் அதே போல் முழுக்க முக்காடிட்ட ஒரு பெண். முஸ்லிம் பெண்களாக இருக்கக் கூடும் என நினைத்துக்கொண்டேன். நான் அவர்களைப் பார்ப்பதை என்னருகில் அமர்ந்திருந்த கவிதா பார்த்துவிட்டாள். “இங்க காதலிக்கிறவங்கெல்லாம் யாருக்கும் தெரியக்கூடாதென்று இப்படித்தான் முக்காடிட்டு மூடிக்கொண்டு சினிமாவுக்கு வருவாங்க. அவங்க பெத்தவங்களுக்குத் தெரிஞ்சா பிரச்சனை தானே? இப்படி வந்தா யாருக்கும் அடையாளம் தெரியாது தானே?” என விளக்கினாள்.

எனக்குக் குழப்பமாக இருந்தது. நாங்கள் பேசுவது பின்னால் அமர்ந்திருந்தவர்களுக்கு விளங்கக் கூடிய வாய்ப்பு அதிகம் என்பதால் நான் எதுவும் பேசவில்லை. புரிந்தது என்பதற்கு அடையாளமாய் தலையை மட்டும் ஆட்டிக் கொண்டேன். படத்தின் தலைப்பு ‘108’. படம் ஓடிக்கொண்டிருந்த போது தற்செயலாகத் திரும்பிப் பார்த்தேன். கவிதா சொன்னது உண்மைதான். அந்தப் பெண்கள் தங்கள் முகத்தில் மூடியிருந்த துணியை விலக்கிவிட்டிருந்தனர். நெற்றியில் இருந்த பொட்டு அவர்கள் முஸ்லிம் அல்ல என்பதனைத் தெளிவுப்படுத்தியது. பெற்றோரின் மீது அவ்வளவு பயம் இருந்தால் இப்படிச் சுத்தாமல் அவர்களின் சொல் கேட்டு நடக்கலாமே? அல்லது காதலிக்கத் தைரியம் இருக்கும் இவர்கள் பெற்றோரிடம் அதனைத் தைரியமாகக் கூறி சுதந்திரமாகச் சுற்றலாமே? இவர்களின் இந்தச் செய்கை சரியா தவறா என அதற்கு மேலும் நான் குழப்பிக்கொள்ள விரும்பாமல் மீண்டும் படத்தில் ஆழ்ந்தேன்.

இடைவேளை வந்தது. அரங்கிற்குள் விளக்குகள் எரியப்பட்டன. அவரவர் இருக்கையை விட்டு வெளியே போக ஆரம்பித்தனர். “என்ன ஆனது?” என கவிதாவைக் கேட்டேன். கழிவறைக்குச் செல்பவர்கள், புகைப்பிடிப்பவர்கள், தின்பண்டம் வாங்குபவர்கள் எல்லாம் எழுந்துச் சென்று தங்கள் வேலைகளை முடித்து விட்டு மீண்டும் வந்துவிடுவார்கள் என அவள் விளக்கம் சொன்னாள். “உங்கட நாட்டுல இடைவேளை இருக்காதா? யாரும் எழும்பிப் போக மாட்டாங்களா?” எனக் கேட்டாள். “இடைவேளை என்ற எழுத்து மட்டும் படத்தில் வரும். தொடர்ந்து படம் ஓடும்,” என்றேன். சிறிது நேரம் இருவரும் கதைத்துக்கொண்டிருந்தோம். சித்தியின் மகள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தாள். வீட்டுக்குப் போகலாம் என்று சித்தியைத் தொந்தரவுச் செய்துக் கொண்டிருந்தாள்.

சற்று நேரத்திற்கெல்லாம் வெளியில் சென்றவர்கள் மீண்டும் தத்தம் இருக்கைக்குத் திரும்பினர். கண்ணன் அண்ணாவும் பாலன் அண்ணாவும் எங்களுக்குப் பொரித்த சோளக்கதிர்கள் (பாப்கோர்ன்) மற்றும் சுவை பானங்கள் வாங்கி வந்தனர். பொரித்த சோளக்கதிர்களின் சுவை எங்கள் நாட்டைக் காட்டிலும் சற்று மாறுபட்டிருந்தது. எங்கள் நாட்டில் அது இனிப்பாக இருக்கும். இங்கோ அதில் உப்பும், மிளகாய் தூளும் கலக்கப்பட்டிருந்தது. படம் முடிந்து அனைவரும் மகிழ்ச்சியாய் வீடு சென்றோம். அன்றிரவு பாக்கியா அக்காவும், கவிதாவும் எனது காதல் கதைகளைத் துருவித் துருவிக் கேட்டுத் தெரிந்துக் கொண்டனர். மீண்டும் மீண்டும் சீக்கிரம் திருமணம் செய்துக்கொள்ளும்படி வற்புறுத்தினர். “பார்க்கலாம்” என்ற ஒற்றை வரியுடன் புன்னகையையும் உதிர்த்தேன். இணையத்தில் சிறிது நேரம் நேரத்தை செலவழித்தப் பிறகு கண் மூடி நித்திரைக் கொண்டேன்.

மறுநாள் இரண்டு சந்திப்புக்கள் இருந்தன. முதல் சந்திப்பை முடித்துவிட்டு, இரண்டாவது சந்திப்புக்குத் தயாரானேன். வெள்ளிக்கிழமை நான் சேலை அணிவது வழக்கம். அன்று வீட்டிலிருந்த கவிதாவும் என்னுடன் வருவதாகச் சொல்லியிருந்தாள். செல்வது புதிய இடம் என்பதால் துணைக்கு ஆள் வருவது நல்லதுதான் என அவளையும் அழைத்துக் கொண்டேன். நான் சேலை அணிந்திருப்பதைப் பார்த்து அவளும் அதே மாதிரி ஒரு சேலை அணிந்துக் கொண்டாள். எனக்கு ஒரு தங்கை இருந்தாள் எப்படி இருப்பாளோ அப்படி அவள் அந்தச் சேலையில் காட்சியளித்தாள்.

இப்போது நாங்கள் சந்திக்கச் செல்வது அதிகம் அறிமுகமில்லாத ஒரு திரைப்பட இயக்குனர். செல்ல வேண்டிய இடம் கோடம்பாக்கம். ஏற்கனவே நேரமாகிவிட்டதால், பேருந்தில் செல்லாமல் ஆட்டோ எடுத்தோம். கோடம்பாக்கத்தில் இருந்த ஒரு கோவிலின் முன்புறம் இறங்கினோம். இயக்குனருக்கு நாங்கள் காத்திருக்கும் இடத்தைத் தெரியப்படுத்தினோம். எங்களை அழைத்துச் செல்ல ஆள் அனுப்புவதாகக் கூறினார். சற்று நேரத்திற்கெல்லாம் தோழர் முகிலன் அவ்விடம் வந்தார். இதற்கு முன் பாத்திராத போதிலும் எங்களைக் கண்டு பிடிப்பதில் அவர் சிரமப்படவே இல்லை. நாங்கள் மூவரும் இயக்குனரின் அலுவலகத்தை நோக்கி நடையைக் கட்டினோம்.

அது பல அறைகளைக் கொண்ட சிறிய வீடு போல் காட்சியளித்தது. “பச்சை என்கிற காத்து” என்ற தலைப்பிலான சுவரொட்டிகள் ஆங்காங்கே காணப்பட்டன. கூடத்தைத் தாண்டி ஒரு சிறிய அறையை அடைந்தோம். அதுதான் இயக்குனரின் அலுவலகம். அங்கே இயக்குனர் கீரா அமர்ந்திருந்தார். “வாங்க” என எங்கள் இருவரையும் வரவேற்றார். “மன்னிக்கனும். சற்று நேரமாகிவிட்டது,” என்றேன். “என்னுடைய மனைவி இவ்வளவு நேரம் உங்களுக்காகக் காத்திருந்து இப்பொழுதுதான் வீட்டிற்குச் சென்றார்,” என சற்று ஏமாற்றத்துடன் கூறினார். தாமதமாக வந்துவிட்டோமே என மனம் சற்று வருத்தப்பட்டது.

கீராவின் அறை மேசை மேல் ஒரு கணினி இருந்தது. அவரது இடப்புறத்தில் மடிக்கணினியோடு முகிலன் அமர்ந்துக்கொண்டார். எதிர்ப்புறம் இருந்த இரு நாற்காலிகளில் நானும் கவிதாவும் அமர்ந்துக் கொண்டோம். அந்த அறையின் சுவற்றில் புலி உருவ ஓவியம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது. ஒன்றும் வேண்டாம் என மறுத்தும் இரு குவளைகளில் பால் கலக்காத தேநீர் வரவழைக்கப்பட்டது. சற்று நேரம் அந்த அறையின் சூழலை நான் உள்வாங்கிக் கொண்டிருந்தேன். பல இலட்சம் பேர் கண்டு களிக்கும் திரைப்படத்தை இயக்கும் இயக்குனரின் அலுவலகம் இந்தச் சிறிய நான்குச் சுவர்கள்தானா என பரிதாபமாக இருந்தது.

இயக்குனரின் முகத்தில் ஏதோ ஒரு வகை சோகமும் இயலாமையும் படர்ந்திருந்தது. பல ஆண்டு கால கனவு! திரைப்படத்தை இயக்கி முடித்த பிறகும் வெளியிட முடியவில்லையே என்ற ஆதங்கம் அவருள் இருந்ததை உணர முடிந்தது. கதைக்கும் போது சில இடங்களில் அவரே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். ‘பச்சை என்கிற காத்து’ திரைப்பட காட்சிகள் சிலவற்றையும், பாடல்களையும் போட்டுக் காட்டினார்.

புதன், 19 அக்டோபர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 20)





சிறிது நேரத்திற்கெல்லாம் மற்றுமொரு நிறுத்தத்தில் மீதமிருந்தவர்களும் இறங்கிச் சென்றுவிட்டனர். புதிதாக 3 கல்லூரி மாணவிகளும் ஒரு மாணவனும் நான் இருந்த பெட்டிக்குள் ஏறினர். அதில் ஒரு மாணவி எனக்கருகில் அமர்ந்தாள். மாணவன் என் முன் புறம் இருந்த இருக்கையில் மாணவியின் நேர் எதிர் அமர்ந்துக் கொண்டான். மற்ற இரு மாணவிகளும் வேறு இடத்தில் சென்று அமர்ந்துக் கொண்டனர். மூன்று மாணவிகளும் வெள்ளை நிறச் சுடிதார் அணிந்திருந்தனர்.
எனக்கருகில் இருந்த மாணவியும் அந்த மாணவனும் காதலர்களாக இருக்க வேண்டும் என அனுமானித்துக் கொண்டேன்.

அவர்களுக்குள் ஏதோ பிரச்சனையாக இருக்க வேண்டும். அதனால்தான் அருகருகே அமரவில்லை போலும். அந்த மாணவியின் முகம் கடுத்திருந்தது. முகத்தில் புன்னகை இல்லை. அதற்கு மாறாக கோபம் கொப்பளித்தது. நொடிக்கொரு தரம் அந்த மாணவனைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள். மாணவனின் முகமோ பரிதாபமாக இருந்தது. அவனும் சளைக்காமல் கெஞ்சும் பார்வையை அவள் பக்கம் வீசிக்கொண்டிருந்தான். இவர்களின் இந்தச் செய்கையைப் பார்த்து நான் உள்ளுக்குள்ளேயே சிரித்துக் கொண்டேன். வெளியே ஒன்றும் கவனிக்காதது போல் முகத்தைச் சன்னல் பக்கம் திரும்பிக் கொண்டேன்.

சட்டென்று ஏதேச்சையாய் நான் திரும்பிய போது அவர்கள் சைகையால் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். அவர்களைத் தொந்தரவு செய்ய விரும்பாது நான் மீண்டும் சன்னல் பக்கம் பார்வையைச் செலுத்தினேன். சிறிது நேரத்திற்குப் பிறகு நான் திரும்பிப் பார்க்கையில் அவர்கள் இருவருமே அவ்விடத்தில் இல்லை. வேறொரு இருக்கையில் ஜோடியாக அமர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். அந்தப் பெண்ணின் கோபம் தீர்ந்துவிட்டது போலும்.

இறுதியாக நான் இறங்க வேண்டிய இடமும் வந்தது. என்னை அழைத்துச் செல்வதற்காக ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே பாலன் அண்ணா தொடர்வண்டி நிலையத்தில் காத்திருந்தார். சென்னை தொடர்வண்டி நிலையம் மிகவும் பெரியதாய் இருந்தது. நிறைய நடை மேடைகள் இருந்தன. அந்த நிலையத்தில் இரண்டு வாசல்கள் இருந்ததால் எனக்கு எந்தப் பக்கம் செல்ல வேண்டும் என தெரியவில்லை. வாகனங்கள் நிறுத்துமிடம் என பாலன் அண்ணா சொன்னதால் அது எங்கே இருக்கிறதென்று வழிப்போக்கர்களிடம் கேட்டுச் சென்றேன். இருந்தும் அண்ணாவைக் காணவில்லை. பிறகுதான் தெரிந்தது நான் தவறான திசைக்கு வந்துவிட்டேன் என்று. மீண்டும் மேம்பாலம் ஏறி எதிர்ப்புற திசையில் உள்ள நுழைவாயிலை நோக்கிச் சென்றேன்.

வாசலில் நின்றுக் கொண்டிருக்கையிலேயே ஈழத்தைச் சேர்ந்த  பாலன் அண்ணா என்னை அடையாளம் கண்டுக் கொண்டார். அவருடன் மேலும் ஒரு நண்பர் வந்திருந்தார். வழக்கமான விசாரிப்புகள் முடிந்தன. தொடர்வண்டி நிலையத்திலிருந்து நான் தங்க வேண்டிய வீட்டிற்குச் செல்ல வேண்டும். அந்த மாலைப் பொழுதில் வாகன நெரிசல் சற்று அதிகமாக இருந்தது. மகிழுந்துத் தார் சாலையிலிருந்து குண்டும் குழியும் நிறைந்த மண் சாலையில் பயணம் செய்யத் தொடங்கியது. நாங்கள் வளசரவாக்கத்தில் வீடு போய் சேர்வதற்குள் வானம் இருண்டுவிட்டது.

அந்த வீட்டிற்கு அன்றுதான் நான் முதன் முதலாகச் செல்கிறேன். நான் அங்குச் செல்வதற்கு முன்னரே, “உங்களை எங்கட ஆட்கள் வீட்லதான் தங்க வைக்க ஏற்பாடு செய்திருக்கோம்,” என இலண்டனில் வசிக்கும் உதயன் அண்ணா சொல்லியிருந்தார். நான் நடந்து வருவதை தூரத்திலிருந்தே பாக்கியா அக்காவும் கண்ணன் அண்ணாவும் பார்த்துவிட்டனர். அவர்கள் இருவரும் தம்பதிகள். நான் வீட்டினுள் நுழையுமுன் இரண்டு சிறுசுகள் என்னை எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டும், ஒளிந்துக் கொண்டும் இருந்தனர்.

பாக்கியா அக்கா எனக்காக ஏற்பாடு செய்திருக்கும் அறையைக் காட்டினார். தனது தங்கை கவிதா என்னுடன் அந்த அறையில் இருப்பார் எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கவிதா அவ்விடம் தோன்றினாள். எவ்வளவு நீளமான கூந்தல்! கவிதா என்னை விட ஒல்லியாக இருந்தாள். ஏதோ வேலையாக இருந்தாள் போல. அறைக்குள் வந்து அறிமுகம் செய்துவிட்டு மான் போல் துள்ளிச் சென்றுவிட்டாள்.

துவைக்க வேண்டிய துணிகள் சில இருந்தன. நெடுந்தூரம் பயணம் செய்ததால் உடல் களைப்புற்றிருந்தது. துணி துவைத்து, குளித்துவிட்டு வெளியே வந்தேன். துணி எங்கே காய வைப்பது என பாக்கியா அக்காவிடம் கேட்டேன். “கொண்டாங்க, நாங்க காய வைக்கிறோம்,” என கையில் இருந்த வாளியை வாங்கிக் கொண்டார். எனக்குத் தர்மச்சங்கடமாய் போய்விட்டது. “பரவாயில்லை, நானே காயப் போடுகிறேன்,” என சொல்லிக்கூட அவர் அதனைக் காதில் வாங்கவில்லை. வாளியை வாங்கிக் கொண்டு அவர்கள் படிகளில் ஏறிச் செல்ல நானும் அவரைப் பின்தொடர்ந்தேன். எனக்குப் பின்னால் கவிதாவும் அவர்களின் சித்தியும் வந்துக்கொண்டிருந்தனர்.

இரண்டாவது மாடியில் இருந்த கதவைத் திறந்து, சின்னதாய் கட்டப்பட்ட படிக்கட்டுகளில் பாக்கியா அக்கா ஏறினார். அட, மொட்டை மாடி! தமிழ்த்திரைப்படங்களில் என்னை அதிகமாகக் கவர்ந்தது இந்த மொட்டை மாடிதான். மெல்லிய காற்று வீச, நட்சத்திரங்கள் மின்ன, நிலா எங்களை ஒளிந்துப் பார்த்துக்கொண்டிருந்தது. அங்குதான் துணிகளை உலர வைப்பார்களாம். அந்த இரவு வேளையில், மொட்டை மாடிச் சூழல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பாக்கியா அக்கா, கவிதா, சித்தி மூவரும் என்னுடன் சேர்ந்து துணிகளை உலர வைக்க ஆரம்பித்தனர். நான் எவ்வளவோ தடுத்தும் அவர்கள் கேட்பதாய் இல்லை. பார்த்து ஒரு சில மணித்துளிகளிலே என் மீது இவ்வளவு அன்பு காட்டுகிறார்களே என உள்ளுக்குள் நெகிழ்ந்துப் போனேன்.

துணிகளை உலர வைத்த பிறகு அனைவரும் இறங்கி கீழ்த்தளத்திற்கு வந்தோம். “இன்டைக்கு இரவு புட்டுதான் சாப்பாடு. எங்கட ஸ்ரீ லங்கன் புட்டு சாப்பிட்டிருக்கீங்களா?” என பாக்கியா அக்காதான் கேட்டார். இதுவரையில் இலங்கைப் புட்டு நான் உண்டதில்லை. மலேசியாவில் சில காலம் தங்கியிருந்த எமது ஈழத்து நண்பர்கள் பலர் அடிக்கடிப் புட்டு செய்துதான் சாப்பிடுவார்கள். அதில் எனக்கு மிகவும் நெருக்கமான தோழரான கமல் என்பரிடம் “எனக்குச் செய்து கொடுக்க மாட்டீர்களா?” என நானே கேட்டுள்ளேன். “நாங்கள் செய்து தந்தா சாப்பிடிவீங்களோ?” என அவர் எம்மைச் சந்தேகத்தோடு கேட்டார். “அதனால் என்ன? நிச்சயம் சாப்பிடுவேன்,” என்று கூறியிருந்தேன். அதன் பின்னர் சில மாதங்களில் அவரும் மேற்கத்திய நாடொன்றுக்குச் சென்றுவிட்டது அவ்வேளையில் நினைவு வந்தது.

சட்டென்று நிகழ்காலத்திற்குத் திரும்பி, “இல்லை அக்கா. ஆனால், சாப்பிட வேண்டும் என வெகு நாளாய் ஆசை,” என்றேன். அக்கா சிரித்துக்கொண்டே ,”பிள்ளைக்கு பிடிக்குமோ இல்லையோ என்டு தெரியல,” என தட்டு நிறைய புட்டு வைத்துக் கொடுத்தார். எனக்கு அதன் ருசி மிகவும் பிடித்திருந்தது. சாப்பிட்டு முடித்துத் தட்டைக் கழுவும் போது சித்தி ஓடி வந்தார். “என்னதிது? தட்டைக் கொடுங்க,” என எனது தட்டைப் பறிக்க முயற்சி செய்தார். “பரவாயில்லை. கழுவிவிட்டேன். நான் எந்த வீட்டிற்குச்  சென்றாலும் இரண்டு விடயங்களில் விட்டுக்கொடுக்க மாட்டேன். ஒன்று எனது துணிகளை நானே துவைக்க வேண்டும்.  இன்னொன்று, சாப்பிட்ட தட்டுக் குவளைகளையும் நானே கழுவி வைக்க வேண்டும்,” எனக் கூறி மெல்லிய புன்னகைத்தேன்.

அதற்குள் பாக்கியா அக்கா அவ்விடம் வந்துவிட்டார். “ஐயோ, ஏன் நீங்கள் தட்டை கழுவினிங்கள்?” என சற்று வருத்தத்தோடு கேட்டார். “நான் சாப்பிட்ட தட்டை நான் தானே கழுவ வேண்டும்?” என புன்னகைத்தேன். பிறகு மூவரும் வரவேற்பரைக்குச் சென்றோம். சில நேரம் கதைத்துக் கொண்டிருந்தோம். பின்னர், சித்தி தனது இரு பிள்ளைகளையும் உறங்க வைக்க மேல் மாடிக்கு அழைத்துச் சென்றார். நானும் எனக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்றேன். கவிதா படித்துக் கொண்டிருந்தாள்.

“வாங்கள் அக்கா,” என தனது புத்தகத்தை மூடி வைத்தாள். “பரவாயில்லை. படியுங்கள்,” என்றேன். “படித்து முடித்துவிட்டேன். இனி நாளைதான்,” என்றாள். நான் எனது மின்னஞ்சல்கள் படிக்க வேண்டும் எனச் சொன்னதும் உடனே தனது மடிக்கணியைத் திறந்துக் கொடுத்தாள். 21 வயது நிரம்பியச் சுட்டிப் பெண்! நான் இணையத்தில் இருக்க, அவள் எம்முடன் விடாது கதைத்துக் கொண்டிருந்தாள். திடீரென்று, “உங்களுக்கு எப்ப கல்யாணம்?” என அவள் கேட்க, “தெரியவில்லை” என்றேன். அவளிடம், “உனக்கு எப்போது?” எனக் கேட்க, பட்டென்று “பத்தாவது மாசம், 27-ஆம் தேதி” என்றாள். நான் சற்று திகைத்துப் போனேன். “அவ்வளவு சீக்கிரமா? வாழ்த்துகள்” என்றேன். அவள் வெட்கத்துடன் தலையாட்டினாள்.

பிறகு மீண்டும் என்னென்னவோ கேட்டாள், பேசினாள், சொன்னாள். நானும் அவளுடன் கதைத்துக்கொண்டே நித்திரையில் ஆழ்ந்துப் போனேன்.

செவ்வாய், 18 அக்டோபர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 19)





“நீ எங்கே இறங்குவாய்?” என என் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண் வினவினாள். எனக்கு அவளிடம் பேச்சுக் கொடுக்கத் தோன்றவில்லை. “சென்னை” என்று ஒற்றை வரியில் பதிலை உதிர்த்துவிட்டுத் தலையை வேறு பக்கமாகத் திருப்பினேன். என்னிடம் கேள்வி கேட்டவள் தன்னுடன் வந்தவர்களுடன் பேச ஆரம்பித்தாள். வண்டியின் உள்ளேயும் வெளியேயும் மிகுந்த இரைச்சலாய் இருந்தது. நல்ல வேளை, அடுத்த நிறுத்தத்தில் இன்னொரு நீண்ட இருக்கை காலியாக அந்த மூன்று பெண்களும் காலியான இருக்கைக்குத் தாவினர். நான் நிம்மதி பெருமூச்சுடன் சற்று தாரளமாக அமர்ந்தேன்.

அதே நிறுத்தத்தில் ஒரு வயதான பாட்டியும், இளவயது பேத்தியும் ஏறினர். வேறு இடம் கிடைக்காததால் நான் அமர்ந்திருந்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டனர். நெரிசலாக இருந்த போதும் 6 பேரை விட 5 பேர் மேல் என நினைத்துக் கொண்டேன். தனது பேத்தி நெருக்கி அமர்ந்திருப்பதைப் பார்த்து அந்தப் பாட்டி கனிவுடன், “மேல் இருக்கையில் ஏறி படுத்துக்கொள்ளம்மா,” என்றார். “வேண்டாம் பாட்டி” என அந்தப் பெண் பாட்டியின் தோளில் சாய்ந்துக் கொண்டாள். தொடர்வண்டி நகர்ந்துக் கொண்டிருந்தது. சன்னலில் வெளியே என் கண் பார்வையை விட்டு ஓடிக்கொண்டிருக்கும் இயற்கை அழகை இரசித்தவாறு அமர்ந்திருந்தேன். காலையிலிருந்து சாப்பிடாமல் இருந்ததால் பசியெடுக்க ஆரம்பித்தது. வெய்யிலில் அலைந்ததால் தொண்டை எப்போதோ வறண்டிருந்தது.

வண்டியில் பயணிகளின் ஆரவாரம் ஒருவாறு அடங்கியிருந்தது. மதிய வேளை என்பதால் பலர் கண் மூடி உறங்க ஆரம்பித்திருந்தனர். என் முன்னே அமர்ந்திருந்த இள  வயது பெண்ணும் குழந்தையை மடியில் கிடத்தியவாறு உறங்கிவிட்டிருந்தாள். அந்த முதியர் மட்டும் விழித்திருந்து, குழந்தையில் கால்களை தன் மடியில் வைத்து மெல்லியதாய் வருடிக் கொண்டிருந்தார். அவர்கள் அருகில் வயதான பெண்மனி ஒருவர் மிகவும் அமைதியாக அமர்ந்திருந்தார். கழுத்தில் சிவப்பு நிறத்திலான மணி மாலையும், நெற்றியில் இருந்த பட்டையும் அவர் தீவிர தெய்வ நம்பிக்கைக் கொண்டவர் என்பதை பறைசாற்றிற்று. நான் அனைவரையும் நோட்டம் இடுவதை அவர் கவனித்திருக்க வேண்டும். நான் அவரைப் பார்த்தது மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்த்தார். பதிலுக்கு நானும் புன்னகைத்தேன். இருவருமே மெளனமாக இருந்தோம்.  

மணி மதியம் பன்னிரெண்டைத் தாண்டியதும், என் முன்னே இருந்த இளவயது பெண் எழும்பினாள். தனது கூடையிலிருந்து பெரிய அடுக்குச்சட்டியையும் ஒரு தட்டையும் எடுத்தாள். ஆஹா, ஓடும் வண்டியில் என்ன செய்யப் போகிறாள் இவள் என நான் கண்களைக் கூர்மையாக்கினேன். அடுக்குச்சட்டியைத் திறந்து வெள்ளை வெளேரென இருந்த சாதத்தைத் தட்டில் கொட்டினாள். அந்தத் தட்டை அப்படியே அந்த முதியவரிடம் நீட்டினாள். கிழவர் அதனை வாங்கி சாத மலையின் நடுவே குழித் தோண்டினார். தோண்டிய குழி நிரம்பி வழியும் வகையில் இன்னொரு பாத்திரத்திலிருந்து சாம்பார் ஊற்றப்பட்டது. தட்டின் ஒரு ஓரமாக காய்கறிக் கூட்டு. வீட்டில் அமர்ந்து உண்பது போல் அந்தக் கிழவர் அங்கே சாப்பிட ஆரம்பித்தது எனக்குச் சற்று புதுமையாக இருந்தது. சாப்பிட்டு முடிந்தவுடன் அந்த இளம்பெண் ஒரு பாட்டில் தண்ணீரை கிழவரின் கையில் கொடுத்தார். அவர் அதனை வாங்கிக் கை கழுவினார். பின்னர் தட்டில் கொஞ்சம் நீர் ஊற்றி அலசினார். கழுவிய நீரை தொடர்வண்டியின் சன்னல் கம்பிக்களுக்கிடையில் சட்டென்று ஊற்றிவிட்டு தட்டை அந்தப் பெண்ணிடம் திரும்பக் கொடுத்தார்.

பெண்ணின் மடியில் கிடந்த குழந்தை கிழவரின் மடிக்கு இடம் மாறியது. நித்திரையைத் தொந்தரவு செய்ததால் என்னவோ, கொஞ்சமாக சிணுங்கிவிட்டு குழந்தை மீண்டும் உறங்கியது. அந்த இளம்பெண் இன்னொரு பாத்திரத்தில் இருந்த சாதத்தை தட்டில் கொட்டினாள். இம்முறை அவளுக்கு அந்தக் கிழவர் பரிமாறினார். தட்டில் சாம்பாரும் கூட்டும் பரிமாறப்பட்டது. எனக்குப் பசியெடுக்க ஆரம்பித்தது. இன்னும் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தால் நமக்குப் பசியெடுத்துவிடும் என எண்ண அலையை மாற்றினேன். இளம்பெண்ணும் சாப்பிட்டு முடித்துவிட்டாள். தட்டும் முன் போலவே சுத்தம் செய்யப்பட்டு, கூடையில் வைக்கப்பட்டது. குழந்தை பெண்ணின் மடிக்கு மீண்டும் இடம் மாறியது.

சிறிது நேரம் சென்ற பின், நெற்றியில் பட்டையோடு அமர்ந்திருந்த வயதான பெண்மணி தனது கூடைக்குள் கையைவிட்டு ஒரு சிறிய உணவுப் பொட்டலத்தை எடுத்தார். அது நிச்சயம் புளிச்சாதமாக இருக்க வேண்டும். கையுடன் கரண்டியும் கொண்டு வந்திருந்தார். அவரும் சாப்பிட்டு முடித்து, நீர் அருந்தினார். இப்போது எனது பசி மேலும் கூடியது. இவர் சாப்பிட்டு முடித்த சில நிமிடங்களில் எனது பக்கத்தில் அமர்ந்திருந்த பாட்டி தனது பொட்டலத்தைப் பிரித்தார். யப்பா, முடியலடா சாமி! இப்படி இருக்கும் என்று தெரிந்திருந்தால் நானும் ஏதாவது வாங்கிக் கொண்டு வந்திருப்பேனே? நிறுத்தங்களில் ஏறி இறங்கும் வியாபாரிகளையும் காணவில்லையே.

பாட்டி தனது பேத்திக்கும் ஊட்டிவிட்டு தானும் உண்டாள். அவள் பேத்திக்கு என்னைவிட ஓரிரண்டு வயது மட்டுமே குறைவாக இருக்க வேண்டும். இருந்த போதும், பச்சிளங் குழந்தை போல அவள் பாட்டி ஊட்டிவிட்டதனை அப்பாவியாய் உண்டுக் கொண்டிருந்தாள். எனக்கும் இப்படியொரு பாட்டி இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஏக்கப் பெருமூச்சி வந்தது. எனக்கு நினைவுத் தெரிந்து முதன் முதலாக எனக்கு ஊட்டி விட்டவர் எனது முதல் காதலர். அதன் பின்னர் பல்கலைக்கழகத்தில் நண்பர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டுக் கொள்வோம். தவிர, எனது தம்பிகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் என்றால், “ஊட்டி விடுடா” என நானே உரிமையோடு கேட்டு மன திருப்திக்காக ஒரு வாய் சாப்பிட்டுக்கொள்வேன்.

பாட்டி பேத்தி இருவருமே சாப்பிட்டு முடித்துவிட்டனர். பலவகையான எண்ணங்களில் கட்டுண்டுக் கிடந்ததனால் எனது பசி கொஞ்சம் குறைந்திருந்தது. ஆனால், நா வறண்டு போயிருந்தது. தண்ணீர் கூட உடன் கொண்டு வராமல் விட்டோமே என என்னை நானே நொந்துக் கொண்டேன். நல்ல வேளையாக, வண்டி நின்ற அடுத்த நிறுத்தத்தில் சிலர் உணவுப் பொருட்களும், நீர் பாட்டில்களும் வண்டியில் ஏறி விற்றுக் கொண்டிருந்தனர். ஒரு நீர் பாட்டிலை வாங்கி மடமடவென்று பாதி பாட்டில் நீரை ஒரே மூச்சில் குடித்து முடித்தேன். பசியாக இருந்த போதும் எதுவும் வாங்கி உண்ணத் தோன்றவில்லை.

சற்று நேரத்திற்கெல்லாம் எனதருகில் அமர்ந்திருந்த ஆடவர் இறங்கிச் சென்று விட்டார். நாங்கள் இன்னும் கொஞ்சம் தாரளமாக அமர்ந்துக் கொண்டோம். சற்றுக் கொழுத்திருந்த பாட்டியின் மடி மீது தலை வைத்து பேத்தி படுத்துக் கொண்டாள். பாட்டி அவளை மெல்லமாய் தட்டித் தூங்க வைத்தார். எனக்கு மிகுந்த பொறாமையாய் இருந்தது. நான் தலை சாய்த்து உறங்க மடி ஒன்று இல்லையே. கடந்த காலமும், நிகழ்கால நிகழ்வுகளும் சேர்ந்து எம்மைச் சோர்வடையச் செய்தன. ஒருவாறு நானும் சில நிமிடங்கள் கண்ணயர்ந்துப் போனேன்.

நாம் கண் விழிக்கையில் எமது முன் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை விழித்துவிட்டிருந்தது. அந்த இளம் பெண் குழந்தைக்குப் பாட்டிலில் நீர் ஊட்டிக் கொண்டிருந்தாள். இவ்வளவு நேரம் உறங்கிக் கிடந்த பசியும் மீண்டும் விழித்தெழுந்தது. மற்றொருமொரு நிறுத்தத்தில் ஒரு பெண் கூடை நிறைய கொய்யாப் பழங்களைக் கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தாள். அவளிடம் சற்றுப் பெரியதாக ஒரு பழுத்த கொய்யாப்பழம் வாங்கிக் கொண்டேன். என் பக்கத்தில் இருந்த பாட்டியும் பேத்தியும் சில கொய்யாப்பழங்கள் வாங்கிக் கொண்டனர். பழத்தைச் சாப்பிட்டுப் பசியாற்றிக் கொண்டேன்.

நீண்ட நேரம் அமர்ந்திருந்ததால் லேசாக இடுப்பு வலி எடுத்தது. சிறிது நேரம் பெட்டிக்குள்ளேயே நடந்துத் திரியலாம் என எழுந்தேன். அந்தப் பெட்டியில் பெரும்பாலானோர் உறங்கிவிட்டிருந்தனர். சிலர் பக்கத்தில் அமர்ந்திருந்தவர்களிடம் மெல்லமாய் கதைத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரையும் தாண்டி தொடர்வண்டியின் கதவருகே வந்தேன். வண்டி வேகமாக ஓடிக்கொண்டிருந்ததால், காற்று பலமாக வீசியது. அது மனதிற்கு ஒருவித புத்துணர்ச்சியை ஊட்டியது. வயல் வெளிகளையும், பொட்டல் நிலங்களையும் கடந்து வண்டி சென்றது. சிறிது நேரம் அங்கேயே நின்று பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

பின்னர் மீண்டும் எனது இருக்கையில் வந்து அமர்ந்தேன். அடுத்த நிறுத்தத்தில் அந்த இளம் பெண்ணும் அவளது குழந்தையும் இறங்கிக் கொண்டனர். அவர்களை அழைத்துப் போக அப்பெண்ணின் கணவன் வந்திருந்தான். அப்போதுதான் அவளுடன் இருந்த வயதானவர் அவளது மாமனார் எனத் தெரிய வந்தது. எனதருகில் இருந்த பாட்டியும் பேத்தியும் இறங்கிவிட்டனர். மிகக் குறைந்த பயணிகளே அந்தப் பெட்டியில் அமர்ந்திருந்தோம். இன்னும் நான் இறங்க வேண்டிய இடம் வரவில்லை.

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 18)




யாரிடம் கேட்கலாம் என என்னைச் சுற்றியிருந்தவர்களை நோட்டமிட ஆரம்பித்தேன். எனது வலது பக்கத்தில் சற்று தூரத்தில் ஆண்கள் கூட்டமாக நின்று ஏதோ கதைத்துக் கொண்டிருந்தனர். அதில் ஒருவர் மட்டும் திரும்பித் திரும்பி என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். நானும் இதனைச் சில முறை கவனித்தேன். பையை இழுத்துக் கொண்டு நேரே அவரை நோக்கிச் சென்றேன். அவர் முகம் வெளிர ஆரம்பித்தது.

“சென்னைக்குச் செல்ல எந்த நடைமேடையில் காத்திருக்க வேண்டும்,” என நான் கேட்டதும் எனது பயணச் சீட்டை வாங்கிப் பார்த்துவிட்டு, நான் காத்திருக்க வேண்டிய இடத்தைக் காட்டினார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு நடைமேடைக்கு அருகில் வந்தேன். அங்கே உட்கார சில நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. சிறு குழந்தை ஒன்றை மடியில் வைத்தவாறு பெண்ணொருத்தி அமர்ந்திருக்க, அவள் அருகில் இருக்கை காலியாகக் கிடந்தது. தொடர்வண்டி வர எவ்வளவு நேரமாகும் எனத் தெரியாததால் நான் அவ்விடம் சென்று அமர்ந்துக் கொண்டேன்.

பயணிகள் போவதும் வருவதுமாக அந்த இடமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. திடீரென ஒருவகையான துர்நாற்றம் வீச திரும்பிப் பார்த்தேன். இளைஞன் ஒருவன் அவ்விடம் வந்து அமர்ந்தான். பார்க்க நாகரிகமாகத்தான் இருந்தான். ஏனோ அந்தக் காலை வேளையிலும் அவன் மேலிருந்து வியர்வை வாடை வெளிப்பட்டு குடலைப் பிடுங்கித் தின்றது. முகம் எந்தவொரு உணர்ச்சியையும் வெளிப்படுத்தாத வண்ணம் பார்த்துக் கொண்டேன். நல்ல வேளையாக அவன் நீண்ட நேரம் அங்கே அமரவில்லை. சற்று நேரத்திற்கெல்லாம் எழுந்துச் சென்றுவிட்டான்.

முதலில் நான் வழி கேட்ட நபர் ஏற வேண்டிய வண்டி வந்தது. அவரும் அவர் நண்பர்களும் உடன் செல்ல, நானும் இதில்தான் ஏற வேண்டுமா என சந்தேகமாக அவரைப் பார்த்தேன். எமது விழிகளின் மொழியை அவர் அறிந்திருக்க வேண்டும். “நீங்கள் ஏற வேண்டிய வண்டி இன்னும் பத்து நிமிடங்களில் வந்துவிடும். நான் போய் வருகிறேன்,” என அவசர அவசரமாகக் கூறிவிட்டு வண்டியை நோக்கி பெருநடைப் போட்டார்.

எமது பக்கத்தில் அமர்ந்திருந்த பெண் தனது துப்பட்டாவால் குழந்தையின் தலையை மூடி பால் கொடுக்கத் துவங்கியிருந்தாள். பொது இடமாக இருந்தாலும் குழந்தைக்குப் புட்டிப்பால் கொடுக்காமல் தயக்கமில்லாமல் தாய்ப்பால் கொடுத்த அவள் செய்கை என்னைக் கவர்ந்திருந்தது. ஒவ்வொரு முறை தொடர்வண்டி வரும் போதும் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு ஓடிச் சென்று இடம் பிடித்து ஏறினர். சிலர் தங்கள் உறவினர்களுக்காகவும் நண்பர்களுக்காவும் நடைமேடையில் காத்திருந்தனர். சற்று நேரத்திற்கெல்லாம் எமது அருகில் அமர்ந்திருந்த பெண் எழுந்துச் செல்ல இன்னொரு பெண் அவ்விடம் வந்து அமர்ந்துக் கொண்டாள்.

பச்சை வர்ண சுடிதார் அணிந்திருந்தாள். கையில் உணவுப் பொட்டலமும் குடிநீரும் அடங்கிய சின்னதாய் ஒரு பை. அதைத் தவிர்த்து சாக்லெட் சிற தோள்பை ஒன்றும் வைத்திருந்தாள். சிவப்பு நிற துப்பட்டா. தலையில் கொஞ்சம் மல்லிகை. காலில் மணி வைத்த கொலுசு. கையின் இடதுபுறத்தில் கறுப்பு வார்ப்பட்டைக் கொண்ட கைக்கடிகாரம். நான் அவளை கவனிப்பதை அவள் கவனிக்கவில்லை. இவளிடம் எப்படிப் பேச்சுக் கொடுக்கலாம் என நினைத்து, கடைசியாக, “சென்னைச் செல்லும் வண்டி எத்தனை மணிக்கு வரும்,” எனக் கேட்டேன்.

தொடர்வண்டி 10 மணிக்கு வரும் என்று எனக்குத் தெரியும். ஆனால், மணி 10.30 ஆகியும் வண்டி இன்னும் வரவில்லை. தவிர, அவளிடம் பேச்சுக் கொடுக்க எனக்கு வேறு எதுவும் தோன்றவில்லை. “வந்திருக்கணும். இன்றைக்குத் தாமதமாகிவிட்டது. நீங்கள் சென்னைக்குச் செல்ல வேண்டுமா?” என என்னைக் கேட்டாள்.

“ஓம், நீங்கள் எங்கே போக வேண்டும்?” என நான் உரையாடலைத் தொடர்ந்தேன். “கும்பகோணம்” என்றாள். “ஓ, உங்கள் வண்டி எத்தனை மணிக்கு வரும்?”
என நான் தான் கேட்டேன். அவள் வண்டி வரும் வரை எம்முடன் பேசிக்கொண்டிருப்பாள் அல்லவா. “நாம் ஒரே வண்டியில்தான் ஏறுவோம். கும்பகோணத்தைத் தாண்டித்தான் நீங்கள் செல்ல வேண்டும்,” என்றாள். எம் மனதிற்குள் மகிழ்ச்சி தாண்டவமாடியது. அதனை என் முகமும் காட்டிவிட்டது.

“எங்கிருந்து வருகிறீர்கள்?” என மீண்டும் அவள்தான் கேட்டாள். இவளிடம் மறைத்து என்ன இருக்கிறது? “மலேசியா. இங்கு வந்ததில்லை. முதன் முறையாக வந்துள்ளேன்,” என்றேன். அதற்குள் தொடர்வண்டி வரவும், “சீக்கிரம் வாங்கள்,” என மெல்ல ஓடிச் சென்றாள். அவளைத் தொடர்ந்து எமது பையை இழுத்துக்கொண்டு நானும் ஓடினேன்.

தொடர்வண்டி நிற்பதற்கு முன்பாகவே தமது கையில் இருந்தக் கைக்குட்டையை வண்டியில் அமர்ந்த ஒருவரிடம் அவசர அவசரமாக நீட்டி, “பக்கத்தில் போடுங்கள்,” என்றாள். எனக்கு எதுவும் புரியவில்லை. கூட்டத்தில் எங்கே அவளைத் தவறவிட்டு விடுவேனோ என்று அவள் பின்னாலேயே வாலைப் பிடித்துக் கொண்டுச் சென்றேன். வண்டி நிற்பதற்கு முன்னரே அவள் ஏற, எனக்குத் தமிழ்ச்சினிமா ஞாபகத்திற்கு வந்துவிட்டது. என்ன, எங்கள் மீது மோதவோ, இடிக்கவோ எந்த கதாநாயகனும் அவ்விடம் வரவில்லை.

ஒருவழியாக வண்டியில் ஏறிப்பார்த்தால் சில இருக்கைகளில் கைக்குட்டைகள். அந்தப் பெண் தன்னுடைய கைக்குட்டையைப் போட்ட இடத்தைக் கண்டுபிடித்து அவ்விடம் சென்று அமர்ந்துக்கொண்டாள். அவள் பக்கத்தில் கொஞ்சம் இடம் ஒதுக்கி என்னையும் அமரச் செய்தாள். கொண்டு வந்திருந்த பையை மேலிருக்கையில் வைத்துவிட்டு கீழிருக்கையில் இருவரும் அமர்ந்தோம். சற்று நேரம் இருவருமே அமைதியாக வண்டியில் ஏறி இடம் பிடிக்கும் ஏனைய பயணிகளைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.

“சென்னைச் செல்ல எவ்வளவு நேரமாகும்?” நான்தான் பேச்சைத் துவங்கினேன். “குறைந்தது 6 மணி நேரமாவது ஆகும். அதுதான் கடைசி நிறுத்தம்,” என்றார் அவர். ஊர், பேர், வேலை என விசாரிப்புகள் நீண்டுக் கொண்டே சென்றது. நான் தனியே வந்திருக்கிறேன் என்று தெரிந்தவுடன் அந்தப் பெண் மலைத்தாள். “நான் இங்கிலிருந்து அலுவலகத்திற்குச் சென்று வருவதற்குள் வீட்டிலிருந்து ஐந்தாறு முறை அழைத்துவிடுவார்கள். உங்களை மட்டும் எப்படி தனியே விட்டார்கள்?” என ஆச்சர்யத்தோடு பார்த்தாள். ‘கேட்பதற்கு நாதி இருந்தால் தானே?’ என சொல்வதற்கு வாயெடுத்தேன், பின்னர் நாவை அடக்கிக் கொண்டேன். அவளது கேள்விக்கு மெல்லிய புன்னகையை மட்டும் பதிலாக அளித்தேன். அவள் அதனைப் பற்றி மேலும் எதுவும் கேட்கவில்லை. எங்கள் உரையாடல் மேலும் பல விடயங்களை நோக்கி நகர்ந்தது. அதற்குள் அவள் இறங்க வேண்டிய இடமும் வந்துவிட்டது.

என்னிடமிருந்து அவள் விடைப்பெறும் வேளையில் மீண்டும் என்னுள் தனிமை குடிகொண்டது. இருந்த பேச்சுத் துணையும் இப்போது இல்லாமல் போனதே. சரி, வேறு யார் வருகிறார்கள் என்று பார்ப்போம் என அமைதியாக அமர்ந்திருந்தேன். அவள் இறங்கிச் சென்ற சற்று நேரத்திற்கெல்லாம் குபுகுபுவென சிலர் நான் இருந்தப் பெட்டியில் ஏறினர். நடுத்தர மற்றும் வயதான பெண்கள் சிலர் அந்தக் கும்பலில் இருந்தனர். இன்னொரு புறம் ஒரு வயதானக் கிழவரும், இளவயதுப் பெண்ணும் ஒரு கைக்குழந்தையுடன் பெட்டிக்குள் வந்தனர். நேரே நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு எதிர்ப்புறம் அவர்கள் இருவரும் அமர்ந்தனர்.

அந்தப் பெண்ணின் முகத் தோற்றமே அவள் முஸ்லிம் என்பதனைக் காட்டிக் கொடுத்தது. மிகவும் மெல்லியதாய் இருந்தாள். என்னை விட வயது குறைவாகத்தான் இருக்க வேண்டும். அவள் அருகில் இருப்பவர் யார்? கணவராக இருக்கக் கூடுமோ? மிகவும் வயதானவராக இருக்கிறாரே? ஒரு வேளை தந்தையாக இருக்குமோ? அவர்களின் உறவு முறையை என்னால் அனுமானிக்க முடியவில்லை. ஏன் இந்தத் தேவையில்லா வேலை என அதை அப்படியே ஒதுக்கிவிட்டு பற்ற பயணிகளை நோக்கினேன். முதலில் பெட்டிக்குள் ஏறி இடம் தேடிய பெண்கள் குழு, இடம் கிடைக்காததாலோ என்னவோ நான் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு அருகில் வந்தனர். “கொஞ்சம் தள்ளி உட்காரு,” என மரியாதைக் குறைவாகச் சொல்லிவிட்டு என்னை நெருக்கிக் கொண்டு மூன்று பெண்கள் அவ்விடம் அமர்ந்தனர்.

அந்த இருக்கையில் நான்கு பேர் மட்டுமே தாரளமாக அமரலாம். ஏற்கனவே இருவர் எனது அருகில் அமந்திருந்தனர். இப்போது இந்த மூன்று பெண்களையும் சேர்த்து 6 பேர் அமர வேண்டிய நிலையாயிற்று. ஏனைய பெண்கள் மற்ற இடங்களைத் தேடிச் சென்றனர். எனது வலப்புறத்தில் ஒரு ஆண் அமர்ந்திருந்த படியால் அந்த நெருக்கம் எனக்குச் சற்று எரிச்சலை ஊட்டியது. இயன்றவரை அந்த ஆடவரை உரசாமல் அமர முயற்சி செய்தேன். இந்தப் பெண்களோ என் நிலையை எண்ணிப் பார்த்ததாய் தெரியவில்லை. மேலும் மேலும் என்னை நெருக்கிக் கொண்டிருந்தனர். இவர்கள் எப்போதுதான் இறங்குவார்களோ என்று கடுகடுத்த முகத்துடன் அவ்விடம் அமர்ந்தேன்.

புதன், 12 அக்டோபர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 17)





சற்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசிவிட்டேனோ எனத் தோன்றியது. நண்பரை நினைக்கவும் பாவமாக இருந்தது. ஆனால், அத்தகைய சூழலில் வேறு எப்படி பேசுவது என எனக்குத் தெரியவில்லை. படுக்கையில் சாய்ந்தேன். நிம்மதியாக உறங்கமுடியவில்லை. இவ்வளவு பெரிய, வசதியான, குளிர்சாதனம் போடப்பட்ட அறையில் கூட நிம்மதியாக உறங்க முடியவில்லையே. அதிகாலை மூன்று மணியளவில் நண்பரிடமிருந்து குறுந்தகவல் வந்தது, “கவலை வேண்டாம். இனி அவன் உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டான்.” அதற்குப் பதில் கூட எழுதாமல் அழைப்பேசியைத் தூக்கி படுக்கையில் போட்டேன். புரண்டுப் புரண்டுப் படுத்துப் பார்த்தேன். தூக்கம் வருவதாக இல்லை.

மிகவும் சிரமப்பட்டு கண்ணயர்ந்தேன். அதிகாலை 5.30 மணிக்கு அழைப்பேசி சிணுங்கியது. சில வெளிநாட்டு நண்பர்களுடன் கதைத்துவிட்டு, காலைக் கடன்களை முடித்துவிட்டு வெளியில் கிளம்பத் தயாரானேன். பசிக்கவில்லை. தஞ்சைப் பெரியக் கோவிலைப் பார்த்துவிட்டு, சென்னைக்குத் திரும்ப வேண்டும். விடுதி பணியாட்களிடம் சொல்லி ஒரு ஆட்டோ பிடித்தேன். முதலில் தொடர்வண்டி நிலையம் சென்று சென்னைக்குப் பயணச் சீட்டு வாங்கினேன். பிறகு அதே ஆட்டோவிலேயே தஞ்சாவூர் பெரியக் கோவிலுக்குச் சென்றேன்.

கோவிலின் முன் ஆட்டோ நின்றது. காலைப் பொழுதாக இருந்த பொழுதும் வெயில் சூடேற ஆரம்பித்திருந்தது. கோவில் நுழைவாயில் முன்புறம் இரண்டு வரிசைகளிலும் பிச்சைக்காரர்கள் வரிசைப் பிடித்து அமர்ந்திருந்தனர். எதற்காக பெரும்பாலான கோவில்களுக்கு முன்பு பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள் என்று மட்டும் எனக்கு விளங்கவேயில்லை. மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடமாக இருப்பதாலா? அல்லது கோவிலுக்கு வருபவர்கள் மட்டுமே புண்ணியம் கிட்டும் என பிச்சையிடுவதாலா?

தட்டை ஏந்திக் கொண்டு, “அம்மா,” என பரிதாபக் குரல் கொண்டு அவர்கள் பிச்சைக் கேட்கும் போது மனம் இரங்கத்தான் செய்கிறது. கேட்பவர்களுக்கு அள்ளிக் கொடுக்க நான் ஒன்றும் பாரி வள்ளல் பரம்பரை அல்லவே? அவர்களின் கெஞ்சும் குரலைப் பொருட்படுத்தாமல் இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டு வாசலை நோக்கி நடந்தேன். கூடை நிறைய பூக்களுடன் பெண்ணொருத்தி அவ்விடம் வியாபாரம் செய்துக் கொண்டிருந்தாள். தமிழ்நாட்டில் பூக்களுக்கு மட்டும் பஞ்சமில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. மற்றொரு புறம் சாமிக் கயிறுகளும், தகடுகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அனைத்தும் தாண்டி வாசலை அடைந்தேன்.

தஞ்சைப் பெரிய கோவில் கம்பீரமாக நின்றுக்கொண்டிருந்தது. கோவிலுக்கு நுழையுமுன் பாதுகாவலர்கள் இருவர் எனது பைகளைத் திறக்கச் சொல்லி சோதனை செய்தனர். முன் புறம் பெரிய நந்தி சிலை ஒன்று இருந்தது. பழமையான கோவில் தான். அதனையே பார்த்தபடி நின்றிருந்தேன். சிலர் காலணிகளை கையில் எடுத்துக் கொண்டு கும்பலாக எங்கோ சென்றார்கள். கண்டிப்பாக காலணிகள் வைக்கும் இடத்திற்குத்தான் செல்வார்கள் என அனுமானித்துக் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தேன். எனது அனுமானம் சரியானது. கூடுதல் பணம் கொடுத்து எனது பைகளையும் அவ்விடம் விட்டுவிட்டு கோவிலைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டேன்.

தமிழகத்திற்கு வந்து இத்துணை நாட்களில் அன்றுதான் ஒரு வயதான வெள்ளைக்கார தம்பதிகளைக் கண்டேன். அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தேன். அவர்களும் புன்னகைத்தனர். “நல்ல பொழுதாக அமையட்டும் (Have a nice day),” என்றேன். “உங்களுக்கும் (u too)” என்றனர். எமக்குக் கோவிலைப் பார்க்க குறைந்த கால அவகாசமே இருந்ததால் அவர்களுக்குக் கையசைத்துவிட்டு நடையைக் கட்டினேன். கோவிலின் சிற்பங்களில் மெய்மறந்துக் கிடந்தேன். எமது இரு கரங்களால் பண்டைய காலத்துத் தூண்களையும் சிற்பங்களையும் கைகளால் தடவிப் பார்த்து பேரானந்தம் அடைந்தேன். சிறு வயதிலிருந்தே பழங்காலத்து பொருட்கள், கட்டிடங்கள் மீது எனக்கு அலாதிப் பிரியம்.

கோவிலின் உள்ளே நுழைந்த போது, அந்தக் காலத்து இராஜராஜ சோழன் இங்கே தானே நின்றிருப்பான் என நினைப்பு வர உடலெல்லாம் புல்லரித்தது. உட்புறம் உள்ள கட்டிட கலைகளை இரசித்த பிறகு கோவிலின் வெளிப்புறம் நடக்க ஆரம்பித்தேன். திடீரென பலத்த காற்று வீசிற்று. முன் ஒரு அடி எடுத்து வைக்கவே மிகுந்த சிரமமாய் இருந்தது. ஒருவேளை இதுதான் புயல் காற்றோ என்று கூட ஒரு கணம் அச்சப்பட்டேன். ஒரு கணம் எமது துப்பாட்டா காற்றில் பறக்க, நான் அதைப் பிடிக்க ஓட, ஒருவாறு அது எமது கையில் அகப்பட்டது. மீண்டும் பறக்காத வண்ணம் முடிச்சுப் போட்டு உடலில் குறுக்காக நன்றாகக் கட்டிக்கொண்டேன்.

பின்னர் கோவிலின் ஓரத்தில் ஏராளமான லிங்கங்கள் வரிசையாக இருந்ததைக் கண்டேன். ஒவ்வொரு லிங்கமாகப் பார்த்துக் கொண்டு வருகையில் மீண்டும் தொலைப்பேசி சிணுங்கியது. சென்னைக்கு எத்தனை மணிக்கு வந்து சேர்வேன் என அண்ணா கேட்டிருந்தார். அவரிடம் கதைத்துக்கொண்டு வருகையில் எமது பக்கத்தில் இன்னொரு இளைஞன் ஒருவன் தனியாக நடந்து வந்துக் கொண்டிருந்ததை கவனித்தேன். அவன் என்னைப் பார்த்து சிரித்தான். சிரிப்பதில் என்ன வந்தது என நானும் சிரித்து வைத்தேன். சரி இந்தப் பையனிடம் புகைப்படம் எடுக்கச் சொல்லலாம் என நினைத்துப் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன்.

“தனியாகதான் வந்தீர்களா?” என உரையாடலைத் துவங்கினேன். “ஆமாம் அக்கா,” என்றான். எமது தோற்றத்திலிருந்து எமது வயதை அவன் கணித்திருக்க வேண்டும். சின்னப் பையன் தான். அவன் அக்கா என்று அழைத்ததில் எனக்கு வியப்பேதும் இல்லை. “எந்த ஊர்?” என நான்தான் திரும்பவும் கேட்டேன். “இந்த ஊர்தான். தஞ்சாவூர். அடிக்கடி இந்தக் கோவிலுக்கு வந்து செல்வேன்,” என்றான். “சரித்திரப் புகழ் பெற்ற இடம். இங்கு எப்போதும் இப்படித்தான் பலத்த காற்று வீசுமா? பொல்லாத காற்றாக இருக்கிறதே?” என வினவினேன்.

“இல்லை அக்கா. இது பருவக் காற்று. கடந்த சில தினங்களாக இப்படித்தான் இருக்கிறது. இந்த மாதம் முழுவதும் இப்படித்தான் வீசும். சில பருவங்களில் காற்றே வீசாது. உங்களைப் பார்க்க வெளிநாட்டுக்காரர் மாதிரி இருக்கிறீர். நன்றாகத் தமிழ் பேசுகின்றீர். எங்கிருந்து வருகிறீர்?” என வினவினான். அவனது கேள்விகளுக்குப் பதில் கூறிவிட்டு எமது கைத்தொலைப்பேசியில் ஒரு புகைப்படம் எடுக்கச் சொன்னேன். அவனும் படம் பிடித்து உதவினான். சிறிய உரையாடலுக்குப் பிறகு அந்தப் பையனிடமிருந்து விடைப்பெற முனைகையில் பட்டப்படிப்பை முடித்த தனது அண்ணனுக்கு மலேசியாவில் வேலைப் பார்த்துத் தர முடியுமா எனக் கேட்டான்.

“எங்கள் இனத்திற்கு எங்கள் நாட்டில் நல்ல வேலை கிடைப்பதே சற்று கடினம்தான். உங்கள் அண்ணனை இங்கேயே நல்ல வேலையைத் தேடச் சொல்லுங்கள். இல்லையேல், ஐரோப்பா கண்டத்தில் தேடலாம். மலேசியாவில் தேசிய மொழியான மலாய் தெரிந்திருக்க வேண்டும். தனியார் துறைகளில் முயற்சிக்கலாம். ஆனால், எங்கள் நாட்டுப் பிரஜைகளுக்கே முன்னுரிமைக் கொடுக்கப்படும். உங்களிடம் நான் எதையும் மறைக்க விரும்பவில்லை. அங்கே வந்து சிரமப்பட வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்,” என சில அறிவுரைகள் வழங்கினேன். அவனும் தனது சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுப்பெற்றான்.
பின்னர், பைகளையும், காலணிகளையும் எடுத்துக் கொண்டு மீண்டும் ஆட்டோ பிடித்து தொடர்வண்டி நிலையம் சென்றேன். சென்னைச் செல்லும் தொடர்வண்டி நிற்கும் இடம் எதுவெனத் தெரியவில்லை. அங்கு நின்றுக்கொண்டிருந்த ஒரு ஆளிடம், “சென்னைச் செல்ல எந்த இடத்தில் ஏற வேண்டும்,” என கேட்கும் போதே அவன் பேயைக் கண்டவன் போல விலகிச் சென்றான். அடக்கடவுளே, வழி கேட்டால் கூட சொல்ல மாட்டார்களா? நான் என்ன இவனுடைய சொத்தில் பங்கா கேட்டேன் என மனதிற்குள் முனகியவாறு சுற்றும் முற்றும் பார்த்தேன். நிறைய தமிழ்மக்கள் தான்.

பெண்ணொருத்தி தனது தாயுடன் பேசிக்கொண்டுச் சென்றாள். இவளிடம் கேட்கலாம் என்று அவளை நெருக்கினேன். பயணச் சீட்டை அவளிடம் காட்டி, “இந்த வண்டியில் ஏற எப்படிச் செல்ல வேண்டும்?” எனக் கேட்டேன். அவள் அதனை ஏறெடுத்தும் பார்க்காமல், “இப்படியே போம்மா,” என ஒரு திசையை நோக்கிக் கைகாட்டினாள். நான் அடுத்தக் கேள்வி கேட்பதற்குள் சட்டென்று அவ்விடத்தை விட்டு அவர்கள் நகன்றுவிட்டனர். அவள் காட்டிய திசையை நோக்கினேன். நிறைய பேர் வருவதும் போவதுமாய் இருந்தார்கள். சரி, நாமும் போய்த்தான் பார்ப்போமே என அவள் கை நீட்டிய திசை நோக்கி நடந்தேன்.

அங்கே பல நடைமேடைகள் (ப்பிளாட்பார்ம்) இருந்தன. எங்கு நான் காத்திருக்க வேண்டும் என குழப்பமாக இருந்தது. ஏற்கனவே இரண்டு பேரிடம் கேட்ட அனுபவம் இன்னும் கசந்துக் கொண்டிருந்தது.

செவ்வாய், 11 அக்டோபர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 16)






திருச்சியை அடைவதற்கு சில நிமிடங்கள் இருக்கும் போது வாணனுக்குக் குறுந்தகவல் அனுப்பினேன். அவனும் அவ்விடம் எமக்காகக் காத்திருப்பதாகக் கூறினான். அழைப்பேசியில் உண்மையாகவே பாட்டரி முடியும் தருவாயில் இருந்தது. சரி, நண்பரின் வீட்டிற்குத் தானே செல்கிறோம், பின்னர் சார்ஜ் செய்து கொள்ளலாம் என இருந்துவிட்டேன். அவ்விடம் இறங்கியவுடன் தொந்தியும் தொப்பையுமாக இருந்த வாணன் எம்மை அடையாளம் கண்டுக் கொண்டான்.

“எப்படிக் கண்டுப் பிடித்தீர்கள்,” எனக் கேட்டேன். “எங்க ஊர் பெண்கள் உங்கள மாதிரி இருக்க மாட்டாங்க,” என்றான். நானும் இங்கே உள்ளவர்கள் மாதிரி சுடிதார் தானே போட்டிருக்கிறேன்? ஏதோ ஒன்று என நினைத்தவாறு அவனது காரில் ஏறி அமர்ந்தேன். இங்கிருந்து தஞ்சாவூர் எவ்வளவு தூரம் எனக் கேட்டேன். “இரண்டு மணி நேரம் பிடிக்கும்,” என்றான். எமக்கோ பசி வயிற்றைக் கிள்ளியது.

“எனக்குப் பசிக்கிறது. இங்கேயே சாப்பிட்டுவிட்டு பயணத்தைத் தொடர்வோமா?” எனக் கேட்டேன். அவனும் சரியென்று ஒரு உணவகத்திற்கு அழைத்துச் சென்றான். குளிர்சாதனம் பொருத்தப்பட்ட நல்ல பெரிய உணவகம்தான். ஏனோ, அங்கே எங்களைத் தவிர வேறு வாடிக்கையாளர்களே இல்லை. உணவக வேலையாட்கள் வேறு என்னை ஏற இறங்கப் பார்த்தனர். கை கழுவிவிட்டு வாணனின் எதிர்ப்புறம் அமரச் சென்ற போன்று, “இங்க பக்கத்தில் வந்து உட்காருங்க,” என அவன் பக்கத்து இருக்கையைக் காட்டினேன். எனக்குச் சற்றுக் கடுப்பானது.

“நான் இங்கேயே உட்கார்ந்துக்கிறேன்,” என்றேன். அமர்ந்த பின் குரலைத் தாழ்த்தி அவன் சொன்னான், “இங்க உள்ளவனுங்க எல்லாம் உங்களையே பார்க்குறானுங்க. பாருங்க, பின்னாடி ரெண்டு பேரு நாம என்ன பேசுறோம்னு கேட்டுக்கிட்டு இருக்கானுங்க. சுதந்திரமா பேச முடியாது. அதான் பக்கத்துல வந்து உட்காரச் சொன்னே. இங்க நாம பேசினா அவங்களுக்கு அவ்வளவா விளங்காது.”

எனக்கு சுர்ரென்று ஏறியது. “யாருக்கும் கேட்காமல் பேசுவதற்கு நாம என்ன இரகசியமா பேசப் போறோம்?” என சற்று சத்தமாகவே சொல்லிவிட்டு வேண்டிய உணவுகளைக் கேட்டேன். அவன் முகத்தில் அசடு வழிந்தது. ஏனோ, எனக்கு இவனையும் சுத்தமாகப் பிடிக்கவில்லை. நண்பர் எதற்காக இவனை அனுப்பி வைத்தார் என அவர் மீதும் கொஞ்சம் ஆத்திரம் வந்தது. இனி இவனிடம் எப்படிப் பேச வேண்டும், நடந்துக் கொள்ள வேண்டும் என முடிவுச் செய்துக் கொண்டேன். வீடு போய் சேரும் வரை இவனிடம் அளவோடுதான் பேச வேண்டும்.

சாப்பிட்டு முடிந்து வெளியே வந்த போது நன்றாக இருட்டிவிட்டது. முக்கியமான விடயம் தொடர்பாக எமது மின்னஞ்சல்களைப் பார்க்க வேண்டும். எங்குச் செல்வது? அவனிடம் சொன்னேன்; அவனது கைப்பேசியில் பார்த்துக்கொள்ளும்படிச் சொன்னான். அவன் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. “இல்லை, எனக்கு கணினி மையம் வேண்டும்,” என்றேன். ஏனெனக் கேட்டான். “தனிப்பட்ட விடயம், காரணம் சொல்ல முடியாது.  முடிந்தால் அழைத்துச் செல்லுங்கள். இல்லையேல் பரவாயில்லை,” என முகத்தில் எவ்வித உணர்ச்சியுமில்லாமல் சொன்னேன். அவனிடம் பேசக் கூட எனக்குப் பிடிக்கவில்லை. தேவையற்ற வெட்டிப் பேச்சுகள் அதிகம் பேசினான். நான் எதனையும் காதில் வாங்காது சாலையைப் பார்த்தபடி பயணித்தேன்.

ஒரு கணினி மையத்தின் அருகில் மகிழுந்தை நிறுத்தினான். மிகச் சிறிய படிகளில் ஏறி மேலே செல்ல வேண்டும். உள்ளே, சின்ன, சின்ன மேசைகளின் மேல் சில கணினிகள் வைக்கப்பட்டிருந்தன. பெண்கள் 2 பேர் மட்டுமே இருந்தனர். நானும் ஒரு கணினியைத் தேர்வு செய்து அதன் முன் அமரும் போது, அந்த நாதாரியும் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு என் பக்கத்தில் அமர்ந்தான். இவனை என்னவென்றுச் சொல்வது?
என் முகத்தில் இருந்த கொஞ்ச நஞ்ச புன்னகையும் முற்றாகத் தொலைந்துப் போனது.

“நான் தனிப்பட்ட முறையில் கணினி பயன்படுத்த வேண்டும். நீங்கள் வேறு எங்காவது சென்று அமர்கிறீர்களா?” என வெளிப்படையாகவே சொல்லிவிட்டேன். “மன்னிச்சிடுங்க,” என்று எழுந்துச் சென்றான். பத்து நிமிடங்களில் எமது வேலையை முடித்துவிட்டு, “கிளம்பலாம்,” என்றேன். “அதற்குள்ளவா?” என்றான். “வேலை முடிந்தது. அவ்வளவுதான்,” என்றேன். “அதற்கு எனது கைப்பேசியைப் பயன்படுத்தியிருக்கலாம் அல்லவா,” என்றான். அவனிடம் பேச்சை வளர்க்க விருப்பமில்லாது, கட்டணத்தைச் செலுத்திவிட்டு படிகளில் இறங்கிச் செல்ல ஆரம்பித்தேன். எமக்குப் பின்னால் அவனும் இறங்கினான்.

மகிழுந்தில் ஏறியவுடன், “அதிகம் இருட்டிவிட்டது. நீண்ட தூரம் பயணம் செய்ததால் உங்களுக்குக் களைப்பாக இருக்கும். இங்கேயே ஏதாவது ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கிவிடுகிறீர்களா?” எனக் கேட்டான். இவன் எதற்குத் தேவையில்லாமல் கேட்கிறான். நண்பர் வீட்டில் இறக்கிவிட்டுச் செல்ல இவனுக்கு என்ன வந்தது? நிஜமாகவே அவன் முகத்தைப் பார்க்கக் கூட எனக்குப் பிடிக்கவில்லை. தனக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும் என்ற பந்தா பேச்சு வேறு. என்ன மனிதன் இவன் என்றுதான் எனக்கு நினைக்கத் தோன்றியது. நண்பரின் நண்பன் என்பதால் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக அந்தக் கருமங்களையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தேன்.

“வேண்டாம், எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை. வீட்டிற்கே செல்லுங்கள்,” என்றேன். “தாஞ்சூர் செல்ல நேரமாகும்,” என்றான். இவன் ஏன் ஆங்கிலேயர் பாணியில் தஞ்சாவூரைச் சுருக்கி இப்படிக் கேவலமாக அழைக்கிறான் என எனக்கு வெறுப்பாக இருந்தது. கொடுமையிலும் கொடுமை தனக்கு அவ்விடம் செல்ல சரியாக பாதை தெரியாது என்று வேறு கூறினான். “நன்றாக வந்து மாட்டிக் கொண்டோமே,” என என்னை நானே நொந்துக் கொண்டேன். சரி வந்துவிட்டோம், நடப்பது நடக்கட்டும் என மனதை தைரியப்படுத்திக் கொண்டேன்.

எப்போதும் என்னுடனேயே வைத்திருக்கும் மிளகுத்தூள் மற்றும் ஒரு சிறிய கத்தி பத்திரமாக கைப்பையில் இருந்தது. “உங்கள் நண்பரிடம் கேட்கலாமே?” என்றேன். “அவன் பதில் கொடுக்க மாட்டேங்கறான்,” என்றான். நயவஞ்சகன்! ஏதோ திட்டம் தீட்டுகிறான் என்று மட்டும் தெரிந்தது. “பிறகு என்ன செய்வது?” எனக் கேட்டேன். “விடுதியில் தங்கிக் கொள்கிறீர்களா? நாளை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன்,” என்றான். வேறு வழி இல்லை, சம்மதித்தேன். அந்த எருமை மாடு தஞ்சாவூரில் இருந்த தங்கும் விடுதியின் முன்புதான் மகிழுந்தை நிறுத்தினான். நமட்டுச் சிரிப்பு வேறு. காரில் அந்த நாதாரியுடன் தனிமையில் இருந்த கொடுமையை விட, விடுதியில் சில மக்கள் நடமாட்டத்தைக் கண்டவுடன் மனம் சற்று ஆறுதல் அடைந்தது.

சரி, வருகிறேன் என மகிழுந்தை விட்டு இறங்கவும், “நானும் வருகிறேன்,” என என்னைப் பின்தொடர்ந்தான். வரவேற்பறையில் இருந்த பணியாளர்களிடம் என்னென்ன அறைகள் வாடகைக்கு இருக்கின்றன என விசாரித்துக் கொண்டிருக்கையில் அதிகப் பிரசங்கித்தனமாக, “இரண்டு படுக்கைகள் கொண்ட அறை எவ்வளவு,” என அவன் கேட்க நான் கடுப்பின் உச்சிக்குச் சென்றேன்! “எதற்கு இரண்டு படுக்கை? நான் ஒரு ஆள் தானே? ஒற்றைப் படுக்கை (சிங்கிள் ரூம்) கொண்ட அறைத் தாருங்கள்?” என நான் சற்றுக் கடுமையாகச் சொல்லவும் விடுதி பணியாள் குழப்பத்துடன் என்னை நோக்கினான். வாணனின் முகத்தில் ஈயாடவில்லை. “நான் மலேசியாவிலிருந்து வருகிறேன். இன்று மட்டும்தான் இங்குத் தங்கப் போகிறேன், தனியாக,” என சற்று அழுத்தமாகக் கூறிவிட்டு எனது கடவுச்சீட்டினை நீட்டினேன்.

வாணன் அங்கேயே நின்றிருந்தான். அறைக்கான வாடகைப் பணத்தைச் செலுத்திவிட்டு, “மிக்க நன்றி. நாளை சந்திப்போம்,” என கூறிவிட்டு விறுவிறுவென திரும்பிப் பார்க்காமல் அறைக்குச் சென்றுவிட்டேன். அப்போதுதான் எனக்கு நிம்மதிப் பெருமூச்சி வந்தது.

அறைக்கு வந்த சில நிமிடங்களில் எமது அழைப்பேசி அலறியது. ஏற்கனவே ‘பெட்டரி’ குறைவு. இப்பவோ அப்பவோ செத்துவிடும் தருவாயில் அது இருந்தது. வாணன்தான்! எதற்கு மீண்டும் அழைக்கிறான்? எடுக்கலாமா வேண்டாமா என்ற எண்ணிக் கொண்டிருந்தேன். அதுவும் ஓயாமல் அலறிக்கொண்டிருந்தது. இறுதியாக எடுத்தேன்.

“அறை பிடித்திருக்கிறதா?” எனக் கேட்டான். அதற்கு பதிலளிக்காமல், “எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. குளித்துவிட்டுத் தூங்கப் போகிறேன். தொலைப்பேசி எந்நேரத்திலும் நின்றுவிடும். நாளை சந்திக்கலாம். பாய்,” என்றேன். நள்ளிரவு மணி 12-ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. “உங்களுக்கு அறை கிடைத்தவுடன் சென்றுவிட்டீர்கள். என்னைப் பற்றி கவலைப் படவே இல்லை. நான் திரும்ப காரை ஓட்டிக் கொண்டுச் செல்ல வேண்டும். இன்னும் விடுதியின் முன் புறம்தான் இருக்கிறேன். எனக்கும் தூக்கம் வருகிறது,” என்றான்.

சனியன் விட்டுத் தொலையாது போலிருக்கிறதே! எக்கேடாவது கெட்டுப் போகட்டும் என, “வீட்டிற்குப் போய் தூங்குங்கள். சரி, நேரமாகிவிட்டது. பாய்,” என படக்கென்று தொடர்பைத் துண்டித்தேன். தொலைப்பேசி மீண்டும் அலறியது. எடுக்கவில்லை. அதன் சத்தம் எனக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. இவன் சரி வரமாட்டான். இவன் சகவாசமே கூடாது என அப்போதே முடிவெடுத்தேன். நாளை அவன் வருவதற்கு முன்னர் நான் சென்றுவிட வேண்டும் என மனதிற்குள் கணக்கிட்டுக் கொண்டேன்.

இவன் கொஞ்சம் பயங்கரமான ஆசாமிதான் போல. வெறுப்பை வெளிப்படையாகக் காண்பித்தும் அடங்கமாட்டேங்கறானே என பலவாறு எண்ணினேன். எனது தொலைப்பேசி கதறிக்கொண்டே செத்தது. அதை எடுத்து ‘சார்ஜ்சரில்’ பொருத்திவிட்டு அறையில் இருந்த அழைப்பேசி மூலம் விடுதியின் வரவேற்பறையைத் தொடர்புக் கொண்டேன். “நான் யாரையும் சந்திக்க விரும்பவில்லை. என்னைத் தேடி யார் வந்தாலும் எனது அனுமதியின்றி அறைக்குள் வர விடாதீர்கள்,” என ஒன்றுக்கு மூன்று முறை அழுத்தமாகச் சொல்லிவிட்டு வைத்தேன்.

பின்னர், அறைக்கதவை நன்றாகப் பூட்டினேன். இருக்கும் அத்தனை தாழ்பாள்களையும் போட்டேன். சிறிய கத்தியை எடுத்து தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டேன். அன்றைய தினம் நடந்த சம்பங்களை அசைபோட்டவாறே நீண்ட குளியல் எடுத்துக் கொண்டேன். குளித்த பிறகு செத்துக்கிடந்த தொலைப்பேசிக்கு உயிரூட்டினேன். தவறவிட்ட அழைப்புகள் வரிசைக் கட்டி நின்றன. அனைத்தும் அந்த நாதாரி அழைத்ததுதான். புனிதா அக்காவின் அழைப்பொன்றும் இருந்தது.
தவிர ஒரு குறுந்தகவல்.

“ஹஹஹா, நீ புத்திசாலி (hahaha, you are smart)” என வாணன் அனுப்பியிருந்தான். முதல் முறையாக எனது கைகளில் நடுக்கத்தை உணர்ந்தேன். என்ன ஒரு விஷமத்தனம்! சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தேன். கொஞ்சம் அசந்திருந்தால் எம்மாதிரியான விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது. எனது நண்பர் மீது கோபம் கோபமாக வந்தது. வாணனின் இலட்சணத்தைப் பற்றி ஒரு குறுந்தகவல் அனுப்பிவிட்டு, புனிதா அக்காவைத் தொடர்புக் கொண்டேன்.

கொடுமை கொடுமைன்னு கோவிலுக்குப் போனா அங்க ரெண்டுக்  கொடுமை தலையை விரித்துப் போட்டுட்டு அம்மணமா ஆடிச்சாம் என்ற கதையானது. நான் எனது அனுபவத்தைச் சொல்ல, பெங்களூரிலிருந்து சென்னைக்குப் போன பயணத்திலும், சென்னையிலும் தான் பட்ட அவலங்களை அவர் சொல்ல, “இனி தமிழ்நாட்டில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,” என இருவருமே முடிவு செய்துக் கொண்டோம்.

அக்காவுடன் கதைத்து முடிக்க வாணனை ஏற்பாடு செய்த நண்பர் அந்த நடு இரவிலும் அழைத்தார். நடந்த அத்தனையும் கூறி, இனி உங்கள் சகவாசமே வேண்டாம் என்றேன். “என்னை மன்னித்துவிடு. அவன் ஒரு மாதிரிதான். உன்னிடம் அப்படி நடந்துக்கொள்ள மாட்டான் என நினைத்தேன். அவனிடம் படித்துப் படித்துக் கூறினேன். உன்னிடம் நல்ல முறையில் நடந்துக்கொள்ளும்படி. அவனுக்கு உன்னைப் பற்றித் தெரியவில்லை,” என ஏதேதோ சமாதானம் கூறினார். அதனை ஏற்க என் மனம் தயாராக இல்லை.

“உங்களால் இயலவில்லை என்று சொன்ன போது நான் சென்னைக்கே திரும்பியிருப்பேன் அல்லவா? குடும்பத்தைச் சென்று பார், என் நண்பன் அழைத்துச் செல்வான் என எதற்காக கூறினீர்கள்? ஒரு தோழியின் பாதுகாப்பில் உங்களுக்கு இருக்கும் அக்கறை இவ்வளவுதானா? இனி யாருடையத் துணையும் வேண்டாம். எங்குச் செல்ல வேண்டும், எப்படிச் செல்ல வேண்டும் என எனக்குத் தெரியும்,” என பொரிந்துத் தள்ளி தொடர்பைத் துண்டித்தேன்.

திங்கள், 10 அக்டோபர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 15)




அதிக களைப்பால் எவ்வித கனவுமின்றி நிம்மதியாக உறங்கினேன். அதிகாலை 5.30 மணியளவில் நானாகவே விழித்துக் கொண்டேன். பறவைகளின் சத்தம் சன்னலின் ஊடே தவழ்ந்து வந்து எமது செவிகளில் நுழைத்து இதயத்திற்கு இதமூட்டின. வெளிநாட்டிலிருந்து சில அழைப்புகள் வந்த வண்ணமாகியிருந்ததால் மெல்லிய குரலில் அவர்களுடன் தொலைப்பேசியில் உரையாடிக் கொண்டிருந்தேன்.

காலை 7 மணியளவில் எதிர்பாராத (எதிர்ப்பார்த்து ஏமாந்த) அழைப்பு ஒன்று வந்தது. 9 மணி வரையில் அறையிலேயே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். இவ்வளவு நாட்கள் வராத அழைப்பு என்பதால் வைக்கவும் மனமில்லை. நேரமாகிக்கொண்டே இருந்ததால் மிகவும் சிரமப்பட்டு 9.30 மணிக்குத் தொலைப்பேசி தொடர்பைத் துண்டித்தேன். பின்னர் குளித்துத் தயாராகி அறையைவிட்டு வெளியான போது அறிவழகன் அங்கே நொந்து போய் அமர்ந்திருந்தார். “என்னங்க, இவ்வளவு நேரமா பேசுவாங்க,” என்ற அவரது கேள்விக்கு சும்மா சிரித்து மட்டும் வைத்தேன். உண்மையிலே அன்றைய காலைப் பொழுதில் நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தேன்.

காலை சிற்றுண்டியின் போது எங்களுக்குத் தோசை வார்த்துவிட்டு கோதை மட்டும் இரண்டு நாட்கள் ஊற வைத்த பாசிப்பயிற்றைப் பேரிச்சம் பழத்தோடு கலந்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். “ஏனம்மா இதை உண்கிறாய். தோசை சாப்பிடலாமே?” எனக் கேட்டதற்கு உடலுக்கு மிகவும் நல்லது என பதில் கூறினாள். கோதையின் தந்தை என்னையும் அறிவழகனையும் தமது மகிழுந்தில் சத்யமங்கலம் பேருந்து நிலையம் வரையில் கொண்டு விட்டார். போகும் போது, அந்தப் பெண் கோதையை ஆரத்தழுவி விடைப்பெற்றேன்.

அறிவழகன் திரும்ப பெங்களூர் செல்ல வேண்டும். நானோ தஞ்சாவூர் செல்ல வேண்டும். எனவே, பேருந்து நிலையத்திலேயே இருவரும் விடைப்பெற்றுப் பிரிந்தோம். நான் சரியாக சென்று விடுவேனா என்ற கவலை அறிவழகன் முகத்தில் படர்ந்திருந்தது. “கவலை வேண்டாம். நான் சென்று விடுவேன்,” என்று ஆறுதல் படுத்தி அனுப்பி வைத்தேன். தஞ்சாவூருக்கு எப்படிச் செல்ல வேண்டும் என ஏற்கனவே நண்பரிடம் கேட்டு அறிந்து வைத்திருந்ததால் எனக்கு அவ்வளவாகக் குழப்பம் ஏற்படவில்லை. அங்கிருந்து ஈரோடு செல்லும் பேருந்தில் ஏறியமர்ந்தேன்.

இரண்டு கூடை நிறைய பூக்களுடன் நடுத்தர வயது பெண்ணொருத்தி எனதருகில் வந்தமர்ந்தாள். பேருந்து புறப்பட ஆரம்பித்தது. குளிர்சாதன வசதி இல்லாததாலும், பேருந்தின் உள்ளே நெருக்கம் அதிகமாக இருந்ததாலும் புழுக்கமாக இருந்தது. பேருந்தின் சன்னலை திறக்க முயற்சித்தேன்; முடியவில்லை. அது மிகவும் கடினமாக இருந்தது. அதனை அந்தப் பெண் கவனித்திருக்க வேண்டும். “வேகமாக இழுக்கணும்,” என்றாள். மீண்டும் முயற்சித்தேன், இயலவில்லை. “முடியவில்லை,” என்றேன். அந்தப் பெண் எட்டி ஒரே இழுப்பாக சன்னலை இழுத்தாள், திறந்துக் கொண்டது. நல்ல பலசாலிதான்!

“நன்றி” என்றேன். “அதைக் காதில் வாங்காமல், இது இழுக்கக் கடினமாகத்தான் இருக்கும்,” என்றாள். கையோடு கொண்டு வந்திருந்த நெகிழிப் பையைப் பிரித்து பூக்கள் சிலவற்றை முந்தானையில் கொட்டினாள். கூடையில் ஒரு பக்கத்தில் வைத்திருந்த கயிற்றை எடுத்து பேருந்திலேயே பூக்களைக் கொண்டு சரம் கட்ட ஆரம்பித்தாள்.

அது மல்லிகை அல்ல. ரோஜாவும் அல்ல. அந்தப் பூவை நான் இதற்கு முன் பார்த்தவும் இல்லை. மார்க்க மல்லிகைப் போன்று ஆனால் சற்று கூர்மையாக இருந்தது. லேசாக சிகப்பு நிறம் கலந்திருந்தது. “இது என்னப் பூ?” என அவளிடமே கேட்டுவிட்டேன். எமக்கு அடுத்த வரிசையில் அமர்ந்திருந்த வயதான கிழவர் ஒருத்தருக்கு எமது கேள்வி விளங்கிவிட்டது. “அது, ……..,” என்று ஏதோ ஒரு பெயர் சொன்னார். (எமக்கு மறந்துவிட்டது, மன்னிக்கவும்.) அவரது அருகில் வயதான பாட்டி ஒருவர் அமர்ந்திருந்தார். அந்தக் கிழவரின் மனைவியாக இருக்க வேண்டும். அவர்கள் இருவரைவும் பார்த்து புன்னைகைத்தேன். அவர்களும் பதிலிக்குப் புன்னகைத்தனர்.

“எங்கம்மா போற?” என்று கிழவர் உரையாடலைத் துவக்கினார். அவருடன் மகிழ்ச்சியாகக் கதைத்துக் கொண்டிருந்தேன். வழியில் ஏதோ ஒரு நிறுத்தத்தில் அவர்கள் இறங்கிக் கொண்டனர். மீண்டும் பூக்காரியின் பக்கம் என் கவனம் திரும்பியது. “நீங்கள் எங்கே இறங்குவீர்கள்,” எனக் கேட்டேன். “ஈரோடு,” என்றார். ஆஹா, பேச்சுத் துணைக்கு இன்னொரு ஆள் கிடைத்துவிட்டது என சற்று மனநிம்மதியடைந்தேன். அவளுடன் பேச்சை வளர்த்தேன்.

அவர் சத்யமங்கலத்தைச் சேர்ந்தவர். பூ விற்பனைச் செய்வதற்காக தினமும் காலை ஈரோடு சென்று மாலை வீடு திரும்பிவிடுவதாகச் சொன்னார். பூ விற்பதற்கு இவ்வளவு தூரம் பயணம் செய்ய வேண்டுமா என நினைத்தேன். எனது வாய் அதனைக் கேட்டே விட்டது. “என்ன செய்வது? அங்க அவ்வளவா வியாபாரம் இல்லை. ஈரோடு போனால் கொஞ்சம் காசு பார்க்கலாம்,” என்றவாறு கையில் வைத்திருந்த பைலிருந்து கைத்தொலைப்பேசியை எடுத்தார். யாருக்கோ அழைத்து பூவில் காபித்தூளோ என்னவோ கலக்கச் சொன்னாள். தகவல் தொடர்புச் சாதனங்கள் பட்டித் தொட்டிகளிலெல்லாம் படர்ந்திருப்பதை எண்ணி வியந்தேன்.

பேருந்து ஈரோட்டை வந்தடைந்தது. வெயில் அதிகமாக இருந்ததால் தாகமாக இருந்தது. ஒரு கடைக்குள் நுழைந்து விலாம்பழம் சாறு வாங்கிக் குடித்துவிட்டு சற்று இளைப்பாறினேன். பின்னர் திருச்சிச் செல்லும் பேருந்தைத் தேடி அலைந்தேன். பேருந்து இன்னும் வரவில்லை. ஒரே இடத்தில் நிற்க மனமின்றி இங்கும் அங்கும் நடந்துக் கொண்டிருதேன். அங்கு நின்றுக் கொண்டிருந்த பேருந்து ஓட்டுநரிடம் திருச்சி செல்லும் பேருந்து எத்தனை மணிக்கு வரும் எனக் கேட்டேன். இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடும் என அவர் சொல்ல அங்கேயே காத்திருந்தேன். 20 நிமிடங்களுக்குப் பிறகே பேருந்து அவ்விடம் வந்தது. முதல் ஆளாக நான்தான் பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.

தஞ்சாவூரைச் சேர்ந்த எமது நண்பர் கொடுத்த எண்களுக்கு அழைத்து எமது வருகையைத் தெரியப்படுத்தினேன். அவன் பெயர் வாணன் (வழமை போல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). ஏனோ, அவன் என்னிடம் பேசிய விதம் எனக்குப் பிடிக்கவில்லை. நண்பரின் நண்பர் ஆயிற்றே, தவறாக நினைக்கக் கூடாது என எனக்கு நானே ஆறுதல் கூறிக் கொண்டேன். அப்படியே நண்பருக்கும் நான் சென்றுக் கொண்டிருப்பதாகத் தெரியப்படுத்தினேன். ஈரோட்டிலிருந்து திருச்சி செல்லும் வழியெங்கும் இயற்கை அழகு கொட்டிக் கிடந்தது. வயல் வெளிகள், கிராமங்கள், மலைகள், கிணறுகள், குளங்கள் என அனைத்துமே கண்களுக்கு விருந்தாக அமைந்தன.

ஒரு குளத்தில் பெண்கள் மார்பு வரையில் பாவாடையைக் கட்டிக் கொண்டு குளித்துக் கொண்டிருந்தனர். சிலர் துணி துவைத்துக் கொண்டிருந்தனர். சாலையில் வாகனங்களில் செல்பவர்கள் அவர்களைப் பார்க்கக் கூடுமே என்ற அச்சம் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு வேளை அவ்வாறே குளித்துப் பழகிவிட்டது போலும். சில சிறுவர்கள் அம்மணமாகவே குளித்துக் கொண்டிருக்க, நானோ பார்வையைத் திருப்பாமல் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்களின் செய்கை எனக்கு அநாகரிகமாகத் தெரியவில்லை. அதுதான் அவர்களது வாழ்க்கைச் சூழல். எனவே அவர்களது வாழ்வியலை நான் அங்கம் அங்கமாக இரசித்துக் கொண்டிருந்தேன்.

பேருந்துச் சென்றுக் கொண்டிருக்க, சாலையில் ஓரத்தில் கூட்டமாக பன்றிகள் மேய்ந்துக் கொண்டிருந்தன. இதுவரையில் எங்கள் நாட்டு மிருகக்காட்சி சாலைகளில் சிகப்பு சிறத்திலான பன்றிகளையே நான் கண்டுள்ளேன். அப்பொழுதுதான் முதல் முதலாக கறுப்பு நிற பன்றிகள் இருப்பதைக் கண்டேன். அதுவும் கூட்டமாகவும் சுதந்திரமாகவும் சாலை ஓரத்தில் மேய்ந்துக் கொண்டிருந்தன. இவைதான் காட்டுப் பன்றிகள் போலும் என நானே அனுமானித்துக் கொண்டேன். அந்தப் பயணம் மிகவும் அழகானதாக அமைந்திருந்தது. பேருந்தை விட்டிறங்கி அப்படியே நடந்துச் செல்லலாமா என்று கூட தோன்றியது. புதிய இடம், புதிய மனிதர்கள் என்பதால் ஆசைகளுக்கு அணைக்கட்டிவிட்டு, பேருந்தில் பயணித்தபடியே கிராமத்து அழகுகளை எமது கண்களால் பருகிக்கொண்டிருந்தேன்.

அதற்குள் வாணன் எனக்கு ஐந்தாறு முறை அழைத்துவிட்டான். என்னைக் கொண்டு போய் நண்பரின் வீட்டில் விடுவது மட்டுமே அவன் வேலை. அதற்கு ஏன் இப்படி அலட்டிக் கொள்கிறான் என்றுதான் தெரியவில்லை என மனதுக்குள் நொந்தவாறு கிளிப்பிள்ளை போல், “வந்துக்கொண்டிருக்கிறேன், வந்துக்கொண்டிருக்கிறேன்,” என அவன் அழைக்கும் போதெல்லாம் ஒரே பதிலைச் சொல்லிக் கொண்டிருந்தேன். ஏனோ, அவன் தேவையில்லாமல் பேச்சை வளர்ப்பது போல் இருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல், “எனது தொலைப்பேசியில் பாட்டெரி முடிய போகிறது. அடிக்கடி அழைக்க வேண்டாம். இடம் நெருங்கியதும் அல்லது வந்து சேர்ந்ததும் நானே அழைக்கிறேன்,” என்று சொல்லிய போதும் குறுஞ்செய்தி மட்டும் பஞ்சமில்லாமல் வந்துக் கொண்டிருந்தது.

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 14)






நாங்கள் திண்ணையில் அமர்ந்து கதைத்திருக்க, கொசுக்கள் எங்கள் உதிரத்தை ருசி பார்க்க ஆரம்பித்தன. மூவரும் எழுந்து வீட்டின் உள்ளே சமயலறைக்குச் சென்றோம். அவ்விடம் ஒரு கூடையில் பல வகையான பழங்கள் நிரப்பப்பட்டிருந்தன. அதில் எங்கள் நாட்டுப் பழமான ‘மங்கீஸ்’ பழம் ஊதா நிறத்தில் என் கண்களைக் கவர, நான் ஆர்வமாய் அதனைக் கைகளில் எடுத்தேன். “இங்கேயும் ‘மங்கீஸ்’ விளைகிறதா,” என நான் கேட்க அவர்கள் இருவரும் என்னைச் சற்றுக் குழப்பத்துடன் பார்த்தனர்.

“என்ன பெயர் சொன்னீர்கள்?” என கோதை மீண்டும் எம்மிடம் வினவினாள். “இதன் பெயர் மங்குஸ்தீன். மங்கீஸ் என்று சுருக்கமாகச் சொல்வோம்,” என்றேன். “ஓ, எந்த நாட்டுப் பழம் என்று தெரியாது. அப்பா வாங்கி வந்தார். அதை எப்படிச் சாப்பிடுவது என்று கூட தெரியவில்லை,” என்றாள். அறிவழகனும் ஒரு பழத்தை எடுத்துச் சுற்றி சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார். அதை எப்படி உடைத்துச் சாப்பிட வேண்டும் என அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தேன். வெள்ளை வெளேரென்ற இனிப்பான மங்கீஸ் சுளைகளை அவர்கள் இருவரும் சுவைத்து உண்டனர்.

நானும் கோதையும் ஏதோ கதைத்துக்கொண்டிருக்க, அறிவழகன் நீராடச் சென்றார். சற்று நேரத்தில் கோதையும் சமையல் வேளைகளில் ஈடுபட ஆரம்பிக்க நான் இணையத்தில் மூழ்கினேன். அதற்குள் கோதையின் தந்தை வீட்டிற்கு வந்துவிட்டார். எங்களின் வருகை முன்கூட்டியே அவருக்கு அறிவிக்கப் பட்டிருந்ததால் எங்களைக் கண்டு அவர் ஆச்சர்யப் படவில்லை. கிராமத்துப் பெரிய மனிதர்கள் போல் வெள்ளை வேட்டியும் சட்டையும் அணிந்திருந்தார். வீட்டின் முன்புறக் கதவில் பொறிக்கப்பட்டிருந்த புலிச் சின்னத்தைக் கண்டதாலும், வீடு முழுக்க அங்காங்கே புலிச் சின்னங்கள் இருந்ததாலும் அவரைக் காண்பதற்கு முன்பே அவர் மீது நான் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தேன். அவர் பெரியாரின் பாதையில் வாழ்பவர் என்றும் அறிவழகனும் கோதையும் எம்மிடம் தெரிவித்திருந்தனர்.

வீட்டிற்கு வந்தவுடன் எங்களின் பயணத்தைப் பற்றி கேட்டார். நாங்களும் உற்சாகமாக பதில் சொன்னோம். எம்மையும் புலிகளின் தீவிர ஆதரவாளர் என தோழர் அறிமுகம் செய்துவிக்க, “ஓ, அப்படியா” என்று பட்டும் படாமல் கேட்டு வைத்தார். பின்னர், அவர் புலிகளைப் பற்றி எம்மிடம் கேட்ட விடயங்களும் அவர் சொன்ன விடயங்களும் எமக்கு மிகுந்த எரிச்சலூட்டுவனவாக அமைந்திருந்தன. இதே, எமது நாட்டில் யாராவது எம்மிடம் இப்படிப் பேசியிருந்தால் அவர்கள் வீட்டில் ஒரு கணமும் தங்கியிருக்க மாட்டேன். எமது உணர்ச்சிகள் மேலெழும்பிய போதெல்லாம் மிகுந்த சிரமப்பட்டு அதனை அடங்க வேண்டியிருந்தது. எந்த சூழ்நிலையிலும் எம்மை அங்கு அழைத்து வந்த தோழர் அறிவழகனுக்கு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கக் கூடாது என அமைதியாயிருந்தேன்.

“புலிகள் நிறைய தவறு செய்துவிட்டார்கள். அவர்களால் இன்று தமிழினமே இலங்கையில் அழிக்கப்பட்டுவிட்டது. இதனால் யாருக்கு என்ன இலாபம்?” என அவர் கேட்டது, “புரிந்துதான் கேட்கிறாரா அல்லது இவருக்குச் சித்தம் பேதலித்துவிட்டதா?” என நினைக்க வைத்தது. இவ்வாறு எம்மால் சிறிதளவேனும் ஏற்றுக் கொள்ள முடியாத கூற்றுகளை அவர் முன் வைத்தார். முதலில் எம் பக்கம் இருந்த நியாயங்களை முன் வைத்தாலும் பின்னர் அவருடன் விவாதிப்பது எந்தவித பலனையும் கொண்டு வராது என்பதை அறிந்து அமைதியானேன். புலிகள் மீதான தமது அத்தனை அதிருப்திகளையும் கொட்டித் தீர்த்த பிறகு, எம்மை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.

குடும்பப் பின்னணியைப் பற்றி அவர் கேட்ட வேளையில் எதையும் மறைக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லாத காரணத்தால் அவர் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தேன். அது எமது அந்தரங்கம் என்ற போதும் பெரியவர் என்ற முறையில் அவரது கேள்விகளுக்குப் பதிலளிக்கும் பொறுப்பு எம்மிடம் இருந்தது. எமது குடும்பப் பின்னணி அவரின் முகத்தைச் சுளிக்க வைத்ததை உணர்ந்தேன்.

“பெற்றோர் சரியில்லை என்றால் பிள்ளைகள் கெட்டுக் குட்டிச் சுவராய் போய்விடுகிறார்கள்,” என்றெல்லாம் என்னென்னவோ சொன்னார். அவர் சொன்ன பெரும்பாலான கருத்துகளுக்கு எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு மனிதன் எப்படி உருவாக வேண்டும் என்பதனை அந்த மனிதனே முடிவுச் செய்கிறான் என்பதுவே எமது கருத்து. பெற்றோர் உடன் இருந்தாலும் தன்னலன் மீது அக்கறை இல்லாதவன் தீய வழிச் சென்று கெடத்தான் செய்வான். அதற்குப் பெற்றவரைக் குறைக் கூறுவது நியாயமல்ல. எம்மைப் பெற்றவர் எம்மை வளர்க்கும் பொறுப்பிலிருந்து விலகியிருக்கலாம். அதற்காக நான் செய்யும் செயல்களுக்கு அவர்கள் எப்படி பொறுப்பேற்க முடியும்?

ஒரு தனி மனிதனின் வெற்றித் தோல்விகளை அவனே முடிவு செய்கிறான். அதற்குத் தூண்டுகோலாக பலர் (பெற்றோர் உட்பட) இருக்கலாம், ஆனால் அவர்கள் அதற்குக் காரணமாக இருக்க முடியாது. சரி, நான் கூடத்தான் எமது பெற்றோருடன் இல்லை. அதற்காக நான் தீய வழியில் சென்று விட்டேனா? நமக்கென்று சுயபுத்தி இருக்கிறது அல்லவா? அதே போல் அனைவருக்கும் அந்தரங்கம், தனி மனித சுதந்திரமும் இருக்கிறது. எவ்வாறு எனது சுதந்திரத்தில், அந்தரங்கத்தில் பிறர் தலையீடு இருக்கக் கூடாது என நான் விருப்புகிறேனோ அவ்வாறே பிறர் சுதந்திரத்திலும், அந்தரங்கத்திலும் நான் தலையிடுவது இல்லை, எமது பெற்றோர் உட்பட. ஆனால், இதனை அந்த மனிதருக்கு விளக்கிச் சொல்லக்கூடிய நிலையில் நானும் இல்லை, அதைப் புரிந்துக்கொள்ளக் கூடிய நிலையில் அவரும் இல்லை.

அடுத்ததாக நிகழ்ந்த உரையாடல் எம்மை மேலும் எரிச்சலடைய வைத்தது. அவரது பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறாராம். நல்ல விடயம்தான். எனக்குக் கூட மகிழ்ச்சியாக இருந்தது. “எங்க சாதியில நல்ல வரன் வந்தது. எதுக்கு விடணும்? உடனே சரின்னுட்டேன். நீ என்ன சாதி’மா?” என்று அவர் கேட்டதும் எனக்குச் சற்று தூக்கிவாரிப் போட்டது. இவர்தான் பெரியார் கொள்கையைப் பின்பற்றுபவரா? இவர் திடீரென்று சாதியைப் பற்றி பேசியது எம்முடன் வந்த அறிவழகனையும் அதிர்ச்சியில் மூழ்க வைத்திருக்க வேண்டும். அதற்கு அறிவழகன் விளக்கம் கேட்கவும் செய்தார்.

“சாதி என்பது குலத்தொழிலை அடிப்படையாகக் கொண்டது. எங்கள் சாதியினர் (அவரது சாதியைக் குறிப்பிட நான் விரும்பவில்லை) வேளாண்மை செய்கின்றனர். என் பொண்ணுக்கும் வேளாண்மை தெரியும். எங்கள் சாதியில் கட்டிக் கொடுத்தால் தான் அவளுக்கு நல்லது. வேறு குலத்தொழில் செய்யும் சாதிக்காரனுக்குக் கட்டிக் கொடுத்தால் சரி வராது. வெவ்வேறு வாழ்க்கைச் சூழல்களாக இருக்கும் பட்சத்தில் அவளது மண வாழ்க்கையை அது பாதிக்கக் கூடும். அதற்கென நான் தீண்டாமையை ஆதரிக்கிறேன் என நினைக்க வேண்டாம். பெரியார் எதிர்த்த தீண்டாமையில் எனக்கும் உடன்பாடு இல்லை. அதே வேளை மண வாழ்க்கை என வரும் போது நமது சாதியில் உள்ளவர்களை மணந்தால்தான் மண வாழ்க்கை சிக்கல் இல்லாமல் இருக்கும்,” என அவர் தரப்பு (அ) நியாயங்களைச் சொன்னார்.

நான் எதுவும் பேசவில்லை. அவர் பேசுவதைக் கேட்கும் பொறுமையையும் நான் எப்போதோ இழந்திருந்தேன். மிகவும் கடினப்பட்டு எமது முகத்தில் எப்பொழுதும் இளையோடும் இள நகையை மட்டும் பிடித்து வைத்திருந்தேன். அறிவழகன் மட்டுமே சில கேள்விகளைக் கேட்டு அவருடன் இன்னும் கதையை வளர்த்துக் கொண்டிருந்தார். நான் அவ்வப்போது சிரித்து மழுப்பி இணையத்தில் மூழ்கியிருப்பது போல் பாவணை காட்டிக் கொண்டிருந்தேன்.

மறுநாள் வேலூர் செல்வதாக இருந்தது. சில தவிர்க்க முடியாத காரணங்களினால் எமது எண்ணைத்தை கைவிட நிர்ப்பந்திக்கப்பட்டேன். சரி, வேறு எங்கே செல்லலாம் என நினைக்கும் போது, தஞ்சையில் நண்பர் ஒருவர் நினைவிற்கு வந்தார். நாளை அங்கு வருவதாக அவருக்குக் குறுஞ்செய்தி அனுப்பினேன். எனது கெட்ட நேரம் அவர் ஊரில் இல்லை. வேலை நிமித்தமாக வேறு ஊருக்குச் சென்றிருப்பதாகக் கூறினார். சரி, அப்படியானால் சென்னை திரும்ப வேண்டியது தான் என முடிவு செய்கையில், நண்பரிடமிருந்து மீண்டும் குறுஞ்செய்தி வந்தது. தனது நண்பர் ஒருவர் எனக்கு வழிகாட்டியாக வருவார் எனவும் எனது திட்டத்தின்படி தஞ்சாவூர் செல்லலாம் எனவும் தெரிவித்திருந்தார்.

நண்பரின் நண்பர் எனக்கு அறிமுகம் கிடையாது. முதலில் சற்றுத் தயக்கமாக இருந்தது. பின்னர் நண்பரின் உத்தரவாதத்தின் பேரில் சரியென்றேன். நேரமாகிக் கொண்டிருந்ததால், அனைவரும் படுக்கைக்குச் சென்றனர். அறிவழகன் தான் திண்ணையில் படுக்கப் போவதாகச் சொன்னார். கொசுத் தொல்லை அதிகம் என கோதை எவ்வளவு சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை. எனக்கு இணையத்தில் இன்னும் வேலை இருந்தது. அனைத்தையும் முடித்து, குளித்துவிட்டு நான் படுக்கைக்குச் செல்கையில், அதிகாலை 1 மணி. அனைவரும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர். எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு நானும் படுக்கையில் சாய்ந்தேன். நித்திரை தேவி எம்மை ஆரத்தழுவிக் கொண்டாள்.