வெள்ளி, 30 செப்டம்பர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 7)




பேருந்து வடபழனி நிறுத்தத்தை அடையவும், கண்டெக்டர் நாங்கள் இறங்க வேண்டியதை நினைவுப் படுத்தினார். சுற்றும் முற்றும் பார்த்தோம். புதிய சூழலாக இருந்தது. அது வடபழனி தானா எனக் கேட்டு மீண்டும் உறுதிச் செய்துக் கொண்டு பேருந்தை விட்டு இறங்கினோம். புழுதியைக் கிளப்பியப்படி பேருந்து எங்களைத் தாண்டிச் சென்றது.

“தவறுதலாக இறங்கிவிட்டோமோ,” என அக்கா சந்தேகமாகக் கேட்டார். “இதுதான் வடபழனி. சற்று தூரம் நடந்துச் சென்றுப் பார்ப்போம்,” என்றேன். வெயில் இன்னும் குறையவில்லை. இருவரும் நடந்து நடந்து பெரிய சாலையை அடைந்தோம். கைத்தொலைப்பேசி மூலம் அருணைத் தொடர்புக் கொண்டு நாங்கள் இறங்கிய இடத்தையும் அங்கு இருக்கும் கடைகளின் பெயர்களையும் சொல்லி விடுதிக்குச் செல்வதற்காக வழி கேட்டோம். அப்போதுதான் அந்தப் புண்ணியவான் நாங்கள் தங்கியிருந்தது ‘வளசரவாக்கம்’ என்று தெரிவித்தார்.

“பின்பு என்ன #$%@-க்கு எங்களிடம் வடபழனி என்று சொன்னாய்,” என்று கேட்க வேண்டும் போல் இருந்தது. நான் கேட்க நினைத்ததை நாகரிகமாக அக்காவே கேட்டுவிட்டார். “நான் வளசரவாக்கம் என்றால் உங்களுக்குத் தெரியாது என்றுதான் வடபழனி என்றேன். வடபழனி பக்கம்தான் இருக்கிறது,” என காரணம் சொன்னான். ஏனோ தெரியவில்லை, நான் சென்னைக்கு வந்ததிலிருந்து எனக்கு அருணின் மேல் சொல்லமுடியா வெறுப்புணர்ச்சி. அக்காவின் நண்பர் என்ற ஒரே காரணத்தால் பேசாமல் இருந்தேன்.

கதைத்து முடிந்து அக்கா தொலைப்பேசியை வைத்தார். வெயிலில் அலைந்ததால் இரண்டு பேரும் சற்று களைத்துப் போயிருந்தோம். “என்னவாம்?” எனக் கேட்டேன். “இங்கேயே ஏதாவது ஒரு கடையில் காத்திருக்கச் சொன்னான். பிரகாஷ் வந்ததும் நம்மை வந்து அழைத்துச் செல்கிறார்களாம்,” என்றார். சற்று யோசித்தேன். “அக்கா, அதெல்லாம் வேண்டாம். நான் இங்கு வந்ததே அனுபவம் பெறுவதற்குத்தான். எனக்குக் காரில் பயணம் செய்ய பிடிக்கவில்லை. நான் இன்னும் சிறிது தூரம் காலார நடக்கப் போகிறேன். இங்குள்ள கடைகளைப் பார்க்க வேண்டும், மக்களின் வாழ்வியலைப் பார்க்க வேண்டும். நீங்கள் வேண்டுமானால் அவர்களுடன் செல்லுங்கள். நான் பிறகு வருகிறேன்,” என்றேன்.

ஏதோ ஒருவித நம்பிக்கை. மொழி தெரியாத ஊர்களுக்கே தனியாக சென்று வந்தாயிற்று. என் தாய்மொழிப் பேசும் உறவுகள் வாழும் ஊரில் தொலைந்துப் போய்விடுவேனா என்ன? “எனக்கும் காரில் பயணம் செய்யப் பிடிக்கவில்லை. நாம் இருவரும் நடந்துச் சென்று பிறகு ஆட்டோ பிடித்து விடுதிக்குச் சென்று விடுவோம். அருணிடம் நாம் தங்கியிருக்கும் தெருவின் பெயர் என்னவென்றுக் கேட்கிறேன்,” என்றார்.

“நல்ல யோசனை. ஆனால், அருணிடம் கேட்க வேண்டாம். நாம் யாருடைய துணையுமின்றி தனியாகத்தானே வந்தோம். அதே போல், நாமே சென்று விடுவோம்,” என்றேன். என் முகத்தில் இருந்த அதிருப்தியை அக்கா கவனித்திருக்க வேண்டும். “ஆனால், நமக்கு முகவரி தெரியாதே? என்ன சொல்லி ஆட்டோ எடுப்பது,” என்றார். பட்டென்றுச் சொன்னேன், “வளசரவாக்கம், முருகன் இட்லி கடை!”. இருவரும் ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டோம்.

எங்கள் நடைப்பயணம் தொடர்ந்தது. சாலையோரம் அமைந்திருந்தக் கடைகளைப் பார்வையிட்டபடியே நடந்தோம். வாகனங்கள் ‘ஹான்’ சப்தத்தை எழுப்பியபடியும், புழுதியைக் கிளப்பியபடியும் சென்றுக் கொண்டிருந்தன. எங்கள் நாட்டில் ஒரு வாகனம் தேவையில்லாமல் ‘ஹான்’ சப்தம் எழுப்பினாலே மற்ற வாகனமோட்டிகள் சண்டைக்கு வந்துவிடுவார்கள்.  இங்கே நொடிக்கொரு தரம் எல்லா வாகனங்களும் சத்தம் எழுப்பிய படியே சென்றுக் கொண்டிருந்தன. சாலையோரங்கள் பானிப்பூரி, சமோசா போன்றவை விற்பனையாகிக் கொண்டிந்தது. பேருந்து நிறுத்தம் ஒன்று தென்பட்டது. அதனைச் சட்டை செய்யாது நாங்கள் எங்கள் நடையைத் தொடர்ந்தோம்.

இனிப்புப் பலகாரக் கடை ஒன்று கண்ணில் தென்பட்டது. அதனுள்ளே ஒரு நீண்ட மேசையும், சில நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன. மிகச் சிறிய கடையாக இருந்தாலும் பலவகையான இனிப்பு வகைகள் அவ்விடம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இனிப்பு வகையிலேயே எனக்குப் பிடித்த ‘குலாப் ஜாமூனை’ அங்குக் கண்டதும் என்னால் நாவை அடக்க முடியவில்லை.

“அக்கா, சிறிது களைப்பாக இருக்கிறது. கடையின் உள்ளே நாற்காலி இருக்கிறது. சிறிது நேரம் அமர்ந்துக் களைப்பாறிச் செல்வோம்,” என்றேன். அக்காவும் சரியென்றபடியால் இருவரும் கடையின் உள்ளே நுழைந்தோம். நானும் அக்காவும் ஆளுக்கொரு குலாப் ஜாமூன் வாங்கிக்கொண்டு நாற்காலியில் வந்து அமர்ந்து இளைப்பாறினோம். எங்கள் நாட்டில் இனிப்புக் கடைகளில் யாரும் அமர்ந்து உண்ண மாட்டார்கள். பெரும்பான்மையான இனிப்புக் கடைகளில் நாற்காலிகளும் இருக்காது. இனிப்பு வகைகளைப் பொட்டலம் கட்டித்தான் வாங்கிச் செல்வார்கள். உணவகங்களில் இனிப்பு வகைகள் விற்பனைச் செய்யப்பட்டால் அங்கு அதனை வாங்கி உண்ணும் வழக்கம் உண்டு.

மாலை நேரமானதால் வேலை முடிந்துச் சிலர் கடைக்கு வந்து  இனிப்பு வகைகளைச் சுவைத்துவிட்டுச் சென்றனர். பெரும்பாலும் ஆண்களே கடைக்கு வந்துப் போயினர். நாங்கள் இரு பெண்கள் மட்டுமே அந்தக் கடையில் அமர்ந்திருந்ததை உணர்ந்தேன். அக்காவால் குலாப் ஜாமுனை சாப்பிட்டு முடிக்க இயலவில்லை. பெருந்தன்மையாக அதனையும் நானே உண்டு முடித்தேன். சில முறுக்கு வகைகளைப் பொட்டலம் கட்டிய பிறகு நாங்கள் அவ்விடத்தை விட்டு அகன்றோம்.

நடைப்பயணம் தொடர்ந்தது. பெரும்பான்மையான பெண்கள் சுடிதார், சேலை அணிந்திருந்தனர். பாவாடைத் தாவணி அணிந்தப் பெண்கள் கண்களின் அகப்படவில்லை. ஆண்கள் பெரும்பான்மையோர் முழுக்கைச் சட்டையும், முழுநீல காற்சட்டையும் அணிந்திருந்தனர். சற்று வயதானவர்கள் வேட்டி கட்டியிருந்தனர். சாலையின்  ஓரத்தில் பெண்ணொருத்தி மல்லிகைச் சரங்களை மலை போல் குவித்து வைத்து கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள். அந்த மலர்களைப் பார்க்கவே ஆசையாக இருந்தது. அத்தனையும் அள்ளி எடுத்து, நீண்ட பின்னலிட்டு, கூந்தலில் சூடிக்கொள்ளலாமா என்ற பேராசையும் எழுந்தது.

வெளிச்சம் குறைய ஆரம்பித்தது. அக்காவின் நடையின் வேகமும் குறைந்தது. “வேகம் குறைந்துவிட்டதே. களைத்து விட்டீர்களா அக்கா?” என வினவினேன். “எனக்கு உன்னைவிட பத்து வயது அதிகம் என்பதை நினைவில் வைத்துக்கொள்,” என்றார். பாவம் அக்கா. இளவயதான எனக்கே சற்று களைப்பாகத் தான் இருந்தது. என்னைவிட பத்து வயது அதிகமுள்ள அக்கா சீக்கிரம் களைத்துவிட்டதில் ஆச்சர்யமில்லைதான். அவர் கூறியதன் அர்த்தம் எனக்கு விளங்கிற்று.

இன்னும் சற்று தூரம் வரை நடந்துச் சென்றோம். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரை அழைத்து நான் இருக்கும் இடத்தின் அடையாளங்களைக் கூறி அங்கிருந்து எனது தங்கும் விடுதிக்குச் செல்ல ஆட்டோ வாடகைக்கு எடுத்தால் எவ்வளவு ஆகும் என வினவினேன். சுமார் 40 ரூபாய் ஆகுமென்று சொன்னார். ஆட்டோக்கள் சில நின்றுக்கொண்டிருந்தன. ஒரு ஆட்டோவை நெருங்கி, “வளசரவாக்கம், முருகன் இட்லி கடைக்குச் செல்ல வேண்டும்,” என்றோம். அவர் எங்களை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “100 ரூபாய் ஆகும்,” என்றார். “விலை அதிகம். வேண்டாம்,” என்று சொல்லிவிட்டோம். பின்னாலிருந்த இன்னொரு ஆட்டோக்காரர், “எங்கம்மா போகணும்?” என கேட்டார். இடத்தின் பெயரைச் சொன்னோம். “தலைக்குப் பத்து ரூபாய்,” என்றார். மட்டற்ற மகிழ்ச்சியுடன் ஓமென்று ஆட்டோவில் ஏறிக்கொண்டோம்.


வியாழன், 29 செப்டம்பர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 6)




அக்காவும் நானும் ஏற வேண்டிய பேருந்தில் ஏறினோம். நாங்கள் தங்கிருந்த இடத்தின் பெயர் வடபழனி என்று பிரகாஷ் மற்றும் அருண் சொல்லியிருந்ததால் வடபழனி நிறுத்தம் வந்ததும் எங்களிடம் தெரிவிக்குமாறு கண்டெக்டரிடம் கேட்டுக்கொண்டோம். வெயிலில் அலைந்துத் திரிந்ததால் உடல் முழுக்க தூசி படர்ந்துப் பிசுபிசுத்தது. குடம் குடமாய் வியர்வை வழிந்தோடியது. வேட்கை தாங்கமுடியாமல் விரித்து விட்டிருந்த கூந்தலை இழுத்துக் கட்டினேன்.

பேருந்து பல இடங்களில் நின்று பயணிகளை ஏற்றுவதும்  இறக்குவதுமாக இருந்தது. நான் சன்னல் அருகில் அமர்ந்திருந்ததால் வழி நெடுகிலும் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் பக்கத்தில் இருந்த புனிதா அக்கா அடிக்கடி எதற்காகவோ நெழிந்துக் கொண்டிருந்தார். என் கைகளில் வைத்திருந்த பைகளையும் வாங்கி தனது மடியில் வைத்துக் கொண்டார். அடிக்கடி நெகிழிப் பைகளை இடம் மாற்றவும் அதன் சத்தம் எமது கவனத்தை ஈர்த்தது.

“என்னாச்சு அக்கா? கனமாக இருந்தால் பைகளை என்னிடம் கொடுங்கள். நான் வைத்துக் கொள்கிறேன்,” என்றேன். “அங்கே பார்,” என்றார். அப்பொழுதுதான் அக்காவின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவன் கழுத்தைத் திருப்பி அக்காவின் கழுத்துக் கீழேயே பார்த்துக் கொண்டிருந்ததைக் கவனித்தேன். வினாடிக்குள் எனக்கு அனைத்தும் விளங்கிற்று. நாங்கள் அவனைக் கவனிக்கிறோம் என்று தெரிந்துக் கூட கொஞ்சம் கூட நாகரிகமே இல்லாமல் அவன் தொடர்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்கள் சிவந்துக் கிடந்தன. அவன் செய்கை எனக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணியது. போட்டிருந்த கறுப்புக் கண்ணாடியைக் கலட்டிவிட்டு அவனைப் பார்த்து முறைத்தேன்.

அவன் எதனையும் கண்டுக் கொள்வதாகத் தெரியவில்லை. என்ன நினைத்தானோ தெரியவில்லை, சற்று நேரத்தில் எழுந்து இன்னொரு இடத்தில் அமர்ந்துக்கொண்டான். நான் அவன் செய்கைகளையே கவனித்துக் கொண்டிருந்தேன். திடீரென அவன் வேட்டியைத் தூக்கி அதனுள் கைவிடவும் அதிர்ந்துப் போனேன். அடக்கடவுளே! சாராயப் போத்தல்! இதுவரை தமிழ்த் திரைப்படங்களில்தான் குடித்துவிட்டு போதையில் இருக்கும் ஆண்கள் வேட்டியில் கைவிட்டு சாராயப் பாட்டிலை எடுத்து குடிப்பதைப் பார்த்திருக்கிறேன். இப்போது நேரில்! பட்டப்பகலில்! அதுவும் அரசு பேருந்தில்!

என்னை ஏன் தனியாகப் பயணம் செய்யாதே; போகும் போது நிறைய துப்பட்டாக்கள் எடுத்துச் செல் என இதற்கு முன்பு தமிழ்நாட்டுக்குச் சென்ற நண்பர்கள் எச்சரித்தனர் என்று அப்போது விளங்கியது. அந்த மனிதன் இறங்கிச் சென்றுவிட்டான். எங்கள் பயணம் தொடர்ந்தது. நானும் வழக்கம் போல் பராக்குப் பார்க்க ஆரம்பித்தேன்.

“தமிழீழ விடுதலைப் புலிகள்,” என்று என் பின்னால் அமர்ந்திருந்த யாரோ சொல்வது கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். இரண்டு இளைஞர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் அப்போதுதான் பேருந்தில் ஏறியிருக்க வேண்டும். ஒரு வினாடிப் பார்த்துவிட்டு மீண்டும் திரும்பிக் கொண்டேன். அவர்கள் எதனைப் பார்த்து அதனைச் சொன்னனர் என்பது எனக்கு விளங்கிற்று. காற்றில் பரந்த கூந்தலைச் சரிசெய்வது போன்று கட்டியிருந்த பின்னலை அவிழ்த்துவிட்டேன். சரிந்து விழுந்து எம்முயிரை மறைத்தது.

பின்னால் பேச்சுக்குரல் தொடர்ந்தது. என்னப் பேசிக்கொள்கிறார்கள் என்று கேட்க ஆவலாக இருந்தது. கண்களை வெளியே ஓடவிட்டு, காதுகளை கூர்மைப்படுத்தினேன்.
“சுற்றுப்பயணிகளாக இருக்க வேண்டும்,” என்றார் ஒருவர். “பார்க்க அப்படித்தான் இருக்கிறார்கள். இலங்கையிலிருந்து வருகிறார்களோ?” என்று மற்றொருவர் தனது சந்தேகத்தை வெளிப்படுத்தினார். அவர்கள் மேலும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்றுத் தெரிந்துக்கொள்ள ஆவலாய் இருந்தது. அதற்குள் எனது வாய் முந்திக்கொண்டு, “மலேசியாவிலிருந்து வருகிறோம்” என்றுச் சொல்லிவிட்டது. திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தேன். பதிலுக்கு அவர்களும் புன்னகைத்தனர்.

“மலேசியாவா? பிறகு எப்படி உங்களுக்குத் தமிழ்ப் பேச தெரிகிறது?” என்ற கேள்வி எமக்கு மீண்டும் சிரிப்பை வரவழைத்தது. “நாங்கள் நன்றாகத் தமிழ் பேசுவோம்,” என்றுச் சொல்லி மலேசியத் தமிழர்களைப் பற்றி அவர்களுக்குச் சின்ன விளக்கம் கொடுத்தேன். அவர்களும் ஆர்வமாகப் பல கேள்விகள் கேட்டுத் தெரிந்துக் கொண்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துக் கொண்டோம். சின்னப் பொடியன்கள்தான். சிவா, குமார் (வழக்கம் போல் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) இருவருமே கால் சென்டரில் பணியாற்றுவதாகக் கூறினர்.

சிவா பேசிய சென்னைத் தமிழை நான் மிகவும் இரசித்தேன். அது எனக்கு வேடிக்கையாக இருந்தது. மிகவும் இயல்பாக வெகுநாட்கள் பழகிய நண்பர்கள் போல் பேசினார். குமார் மட்டும் ஏனோ தயங்கித் தயங்கித் தூயத் தமிழில் பேச முயன்றுக் கொண்டிருந்த்தார். “நீங்கள் பேசும் சென்னைத் தமிழ் எனக்குப் புரியும். புரியவில்லை என்றால் நானே கேட்டுத் தெரிந்துக்கொள்வேன். சரளமாகப் பேசுங்கள்,” என எவ்வளவோ சொல்லியும் அவரைக் கூச்சம் விடுவதாக இல்லை.

குமாரிடமும் சிவாவிடமும் பேசுவது மனதுக்கு உற்சாகத்தை அளித்தது. குறுகிய பயணத்தில் பல விடயங்களைப் பற்றி பேசினோம். சென்னையில் பார்க்க வேண்டிய இடங்களின் பெயர்களை எங்களுக்குப் பட்டிலிட்டுத் தந்தனர். தமக்குக் கிடைத்த முதல் வெளிநாட்டு நண்பர்களென எங்களைக் கூறினர். “ஏன் வெளிநாடு என்கிறீர்? எங்கள் நாட்டிலேயே எங்களை இந்தியன் என்றுதான் அழைக்கிறார்கள். நாமெல்லாம் உறவுகள் தான். என்னக் காரணத்தினாலோ பிரிந்து உலகம் முழுவதும் படர்ந்துக்கிடக்கிறோம்,” என்றேன்.

“நீங்கள் என்னென்னவோ பேசுறீங்க. எங்களுக்கு ஒன்னுமே புரியல,” என்றார் சிவா. அதற்குள் அவர்கள் இறங்க வேண்டிய இடம் வர, அவசர அவசரமாகத் தொலைப்பேசி எண்களை பரிமாறிக்கொண்டோம். “பாய்’ என்றுச் சொல்லிச் சிட்டாய் இறங்கிச் சென்றனர். மனதுக்கு மிகுந்த உற்சாகமாய் இருந்தது. “நல்ல பையன்கள்” என நானும் அக்காவும் பேசிக்கொண்டோம்.

புதன், 28 செப்டம்பர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 5)






அக்காவின் நண்பர், “இங்கே துணிகள் மலிவாகக் கிடைக்கும்,” என ஒரு துணிக்கடைக்கு அழைத்துச் சென்றார். புனிதா அக்கா தனது குடுத்தாருக்குத் துணிமணிகள் வாங்கிக் கொண்டிருந்தார். முதலில் எனக்கு எதுவும் வாங்கும் எண்ணம் இல்லை. அதிக நேரம் அங்கேயே நின்று வகைவகையான துணிகளைப் பார்த்துக் கொண்டிருக்க, ஒன்றாவது வாங்கலாமே என நானும் வாங்க ஆரம்பித்தேன். மூன்று துணிகள் எடுத்தாயிற்று.

கடையில் இருந்த தையல்காரரிடம் சுடிதார் தைக்கத் துணிகளைக் கொடுத்தேன். எனக்கு என்ன மாதிரி சுடிதார் வேண்டும் என நான்கைந்து முறை கூறினேன். அவரும் தெரியும் எனச் சொல்லி அளவெடுத்து துணிகளை வாங்கிக் கொண்டார். தைப்பதற்குத் தேவையான கூலியையும் கொடுத்தாயிற்று. இன்னும் ஒரு கிழமையில் திரும்ப வந்து தைத்தத் துணிகளை எடுத்துச் செல்கிறோம் எனக் கூறி கடையிலிருந்து விடைப்பெற்றோம்.

கடையிலிருந்து வெளியே வர, அக்கா பக்கத்தில் இருந்த இன்னொரு கடையில் நுழைந்தார். அங்கே நானும் சென்றால் ஏதாவது வாங்கிவிடுவேனோ என என் ஆசைகளுக்குப் பயந்து வெளியிலேயே காத்திருந்தேன். அப்போது, ‘சலக் சலக்’ என சத்தம் வர திரும்பிப் பார்த்தேன். ஆஹா… தலை நிறைய மல்லிகைச் சரம் தொங்க, கண்ணாடி வளையல்கள் குழுங்க, முழுக்க மணிகள் பதிக்கப்பட்ட வெள்ளிக் கொலுசணிந்து, பட்டுப்புடவை உடுத்தி, தமிழ்நாட்டுப் பெண் ஒருத்தி என்னைக் கடந்துச் சென்றாள். அந்த வேகாத வெய்யிலில் செருப்புக் கூட அணியாமல் அவள் சர்வ சாதரணமாக நடந்துச் சென்றாள். எல்லாம் சரிதான், ஆனால் ஏன் இவள் செருப்பு அணியவில்லை என்ற எண்ணம் மேலிட அங்குப் போவோர் வருவோர் கால்களையே கவனிக்க ஆரம்பித்தேன். பலர் செருப்புடன் சென்றாலும் சிலர் என்ன காரணத்தாலோ செருப்பு அணியாமல் செல்வதை கவனித்தேன்.

இப்படி நான் போவோர் வருவோரை கவனித்துக் கொண்டிருக்க, குழந்தையின் சிரிப்பொலி கேட்டு வலது பக்கம் திரும்பினேன். தாயொருத்தி ஒரு கடையின் வெளியே மண் தரையில் அமர்ந்துப்  பொட்டலத்தைப் பிரித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். அவள் அருகில் மேற்சட்டை அணியாமல், காற்சட்டை மட்டும் அணித குழந்தை ஒன்று சிரித்து விளையாடிக்கொண்டிருந்தது. அதனுடையத் தாய் குழந்தைக்கும் ஊட்டிவிட்டு தானும் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். நானோ விவரிக்க முடியாத உணர்ச்சி அலையில் கட்டுண்டு கிடந்தேன். அந்தக் குழந்தையின் விளையாட்டை இரசிப்பதா அல்லது அவர்களின் நிலையை எண்ணி வருந்துவதா?

அந்தத் தாயிடம் கேட்டு அப்படியே அந்தக் குழந்தையைத் தூக்கி வந்து நாமே வளர்க்கலாமா என்று கூட அந்த நொடியில் எனக்குத் தோன்றியது. அடுத்த நிமிடம் அது சாத்தியப்படாது என்ற உண்மையும் விளங்கியது. உச்சி வெயில் அதிகரிக்க தாகம் எடுக்க ஆரம்பித்தது. புனிதா அக்கா வந்தவுடனே ஏதாவது கடைக்குச் சென்று நீர் அருந்த வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கையிலேயே அக்கா வந்துவிட்டார்.

“அடுத்து எங்கே செல்லப் போகிறீர்கள்,” என அக்காவின் நண்பர் வினவ, சட்டென்று, “முதலில் தண்ணீர் குடிக்கலாம். பிறகு எங்கே செல்வது என்பதை முடிவுச் செய்யலாம்,” என்றேன். அவரும் ஒரு பழச்சாற்றுக் கடைக்கு எங்களை அழைத்துச் சென்றார். படங்களிலெல்லாம் சாத்துக்குடி, சாத்துக்குடி என்கிறார்களே அது என்ன சுவையாக இருக்கும் என்ற ஆவல் மேலிட சாத்துக்குடிச் சாறு கேட்டேன். பழச்சாறு வந்தது; குடித்தேன்; அட, ஆரஞ்சுச் சாறு! ஆரஞ்சுப் பழத்தைத்தான் சாத்துக்குடி என்கிறீர்களா என அக்காவின் நண்பரிடம் கேட்டேன்.

“ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சப் பழம் எல்லாம் ஒரே குடும்ப வகையைச் சார்ந்தது. ஆரஞ்சுப் பழத்தைவிட சற்று வேறுபட்டது சாத்துக்குடி,” என அவர் விளக்கம் அளித்தார். பின்னர், மேலும் ஒரு சில கடைகளுக்கு ஏறி இறங்கினோம். மீண்டும் கடைத்தெருவில் நாவல் பழங்களைப் பார்த்தேன். ஏற்கனவே வாங்கிய பழத்தை முழுவையாக சுவைக்கவில்லை. இப்பொழுதாவது வாங்கலாமே என அக்காவிடம் கூறினேன்.

“நாவல் பழம் அதிகம் சாப்பிட்டால் இரத்தம் சுண்டி விடும். இங்கே இந்தப் பழங்கள் அதிகம் கிடைக்கும். இன்றைக்கு வேண்டாம். இன்னொரு நாள் வாங்கிக்கொள்,” என்றார். சற்று ஏமாற்றத்துடன் தலையாட்டினேன். நேரமாகிக் கொண்டிருந்தது. புறப்படலாம் என்று பேருந்து நிலையம் செல்ல ஆட்டோ பிடித்தோம். மீண்டும் அந்தச் சிறுவர்கள் வந்து தொல்லைக் கொடுப்பார்களோ என்று சற்று தயக்கமாக இருந்தது.

புனிதா அக்கா முதலில் ஆட்டோவில் ஏற, அக்காவிற்கும் அவரது நண்பருக்கும் இடையில் நான் அமர்த்தப்பட்டேன். சற்று அசெளகர்யமாக இருந்தாலும், சிறிது நேரம் தானே என்றுப் பொறுத்துக் கொண்டேன். ஆட்டோ பேருந்து நிலையத்தை நெருக்கிய வேளையில் அவ்விடம் நடந்துச் சென்றுக் கொண்டிருந்த ஆண்கள் கும்பலில் இருந்த ஒருவன் ஆட்டோவின் ஓரத்தில் அமர்ந்திருந்த அக்காவின் இடுப்பைக் கிள்ளிவிட்டான். திடீரென அக்கா ஆட்டோவில் அலர நான் சற்று அதிர்ந்துத்தான் போனேன். “தெரியாமல் கை பட்டிருக்கும்” என சமாதானம் சொன்னேன். “இல்லை! அவன் தெரிந்தேதான் கிள்ளினான்!” என திரும்பத் திரும்பச் சொன்னார்.

சரி, யார் இதனைச் செய்தார்கள் என்று திரும்பிப் பார்ப்பதற்குள் அவர்கள் கண்ணுக்கெட்டா தூரத்திற்குச் சென்றுவிட்டார்கள். ஆட்டோவும் பேருந்து நிலையத்திற்கு வந்துவிட்டது. அக்கா முகத்தில் அதிர்ச்சி படர்ந்திருந்தது. அக்காவின் நண்பரோ நடந்த சம்பவத்தை நினைத்துச் சிரித்துக் கொண்டிருந்தார். “என்ன நீங்கள்? எங்களுக்குப் பாதுகாப்பு தருவீர்கள் எனப் பார்த்தால், சிரித்துக் கொண்டிருக்கிறீர்?” என அக்காவே வாய் திறந்துக் கேட்டுவிட்டார். “நான் என்ன செய்ய? அவர்கள்தான் போய் விட்டார்களே?” என முப்பத்திரண்டு பற்களையும் காட்டினார்.

நாங்கள் ஏற வேண்டிய பேருந்தினை அடையாளப்படுத்திவிட்டு அவர் விடைப்பெற்றுக் கொண்டார். பேருந்தில் ஏறும் முன், முன்பு என்னிடம் நாவல் பழங்கள் விற்ற பெண்மணியைப் பார்த்தேன். அவள் கூடையில் வைத்திருந்த பழங்கள் மீண்டும் எனக்கு ஆசையைத் தூண்ட, அடக்கமுடியாமல் கொஞ்சம் பழங்கள் வாங்கிக்கொண்டேன். அக்கா என்னைப் பார்த்துச் சிரித்தார்.

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 4)



பேருந்தில் அதிகம் கூட்டம் இல்லை. ஏறியவுடன் இடம் கிடைத்தது. ஏதோ பழங்காலத்து வண்டியில் பயணம் செய்வது போல் ஒரு அனுபவம். கண்டெக்டரிடம் பாரிஸ் வந்தவுடன் எங்களுக்கு அறியப்படுத்துமாறு தெரிவித்தோம். அவரும் சரியென்றார். பேருந்துச் செல்லும் வழியெங்கும் சென்னையில் அழகை இரசித்தவாறுச் சென்றேன். வழி நெடுகிலும் ஏதாவது கட்சியின் பெயரையோ, கட்சித் தலைவர் பெயரையோ சுவற்றில் எழுதி வைத்திருந்தனர்.

பேருந்தில் கல்லூரி மாணவ மாணவியர் சிலர் ஏறினர். சில மாணவிகளில் கண்கள் நொடிக்கொரு தரம் எம்மை நோக்குவதை உணர்ந்தேன். அணிந்திருந்தக் கருப்புக் கண்ணாடியைக் கலட்டிவிட்டு அவர்களை நோக்கி புன்னகைத்தேன். அவர்களும் புன்னகைத்தினர். ‘படிக்கிறீர்களா?’ என பேச்சுக் கொடுத்தேன். ‘உங்களுக்குத் தமிழ் தெரியுமா?’ என ஆச்சர்யத்துடன் கேட்டனர். புன்னகையுடன் அவர்களுடன் சிறிது நேரம் உரையாடினேன். புனிதா அக்கா யாருடனே கைப்பேசியில் கதைத்துக்கொண்டிருந்தார். மாணவிகள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் மகிழ்வுடன் கையசைத்துச் சென்றனர். அவர்கள் கதைத்துவிட்ட பிறகு என்னுள் இனம் புரியாத ஒரு உற்சாகம்.

இழுத்துப் பின்னிய கூந்தல், அதில் மல்லிகைச் சரம், கையில் வளையல், காலில் கொலுசு என தமிழ்நாட்டு மக்களை இரசித்துக் கொண்டிருந்தேன். வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. பாரிசில் இருந்த பேருந்து நிலையத்தில் புனிதா அக்காவின் நண்பருக்காகக் காத்துக்கொண்டிருந்தோம்.

அங்கே திராட்சைப் பழங்கள் போன்று நாவற்பழங்கள் கூடை கூடையாக விற்பனையாகிக் கொண்டிருந்தது. பார்க்கவே நா ஊறியது. சிறுவயதில் பாட்டி வீட்டின் அருகில் இருந்த நாவல் மரத்தில் பழுக்காத நாவல் பழங்களை எக்கி எக்கி பறித்து உண்டது நினைவுக்கு வந்தது. பத்து ரூபாய்க்கு கொஞ்சம் நாவல் பழங்கள் வாங்கி உண்ண ஆரம்பித்தேன். திடீரென்று குழந்தைகள் கூட்டமொன்று என்னைச் சூழ ஆரம்பித்தது.

அவர்கள் பேசிய மொழி எனக்கு விளங்கவில்லை. மிகவும் கறுப்பாக இருந்தார்கள். ஆடைகள் கிழிந்தும் சிலர் ஆடை அணியாமலும் இருந்தனர். பலநாள் குளிகாததைப் போன்று அழுக்காகத் தோன்றினர். அதில் ஒரு சிறுவன் கையில் குரங்குக் குட்டி ஒன்று வைத்திருந்தான். எங்கேயிருந்து வந்தார்கள் இவர்கள்? இவர்களைப் பெற்றவர்கள் எங்கே? யோசித்துப் பார்ப்பதற்குள் அவர்கள் என்னிடம் என்னவோ கேட்டுச் சைகை செய்தனர். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நாவல் பழம் கேட்கிறார்களோ என நினைத்து கையில் வைத்திருந்த நாவல் பழங்களைக் கொடுத்தேன். ஒரு சிறுமி அதனைப் படக்கென்று வாங்கிக்கொண்டாள்.

பழங்களைக் கொடுத்த பிறகும் அவர்கள் என்னை விட்டு விலகுவதாக இல்லை. மீண்டும் மீண்டும் எதையோ சொல்லி சைகை செய்தனர். இன்னும் அதிகமான சிறுவர் சிறுமியர் கூட்டம் என்னைச் சூழ ஆரம்பித்தது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒருவாறு அவர்கள் பணம் கேட்கிறார்கள் என்பதனைப் புரிந்துக்கொண்டேன். ‘என்னிடம் ஒன்றுமில்லை, செல்லுங்கள். சாப்பாடு வேண்டுமானால் வாங்கித் தருகிறேன். பணமில்லை’ என்றேன்.

நான் சொல்வதை அவர்கள் கேட்பதாகத் தெரியவில்லை. ஒரு சிறுமி எனது கைகளைப் பிடித்து இழுக்கத் துவங்கினாள். இன்னொரு சிறுவன் எனது சட்டையைப் பிடித்து இழுத்தான். சிறுவர்கள் என்னை நெருக்கத் துவங்கினர். நானும் சற்று எரிச்சலடைந்து, ‘தள்ளிப் போங்கள்!’ கோபமாகக் கூறினேன். அங்கு நடந்துக் கொண்டிருந்தத கூத்தைக் கண்ட சிலர் ஓடிவந்து அந்தச் சிறுவர்களை படு மோசமாக மிரட்டி விரட்டினர். எனக்குக் கொஞ்சம் பாவமாக இருந்தது. இருந்தாலும் அந்த சிறுவர்கள் நடந்துக் கொண்ட விதம் சரியில்லைதானே?

“இதுகள் இப்படித்தான். வெளியூர்க்காரர்கள் வந்துவிட்டால் இப்படித்தான் பணம் கேட்டுத் தொந்தரவு செய்வார்கள். நீ ஒன்னும் கொடுக்காதேம்மா,” என பேருந்து நிலையத்தில் பூ வியாபாரம் செய்துக்கொண்டிருந்த மாது அறிவுரைக் கூறினார்.

அவ்வேளையில் புனிதா அக்காவின் நண்பர் ஒருவர் அவ்விடம் வர, நாங்கள் மூன்று பேரும் நடந்த சம்பவங்களைப் பற்றிப் பேசிக்கொண்டே கடைத்தெருவுக்குச் சென்றோம். சுடிதார் துணிகள் வாங்கி அங்கேயே தைக்கக் கொடுத்தேன். இனி தமிழ்நாட்டுப் பெண்கள் மாதிரிதான் உடுத்த வேண்டும் என மனதில் முடிவுப் பண்ணிக் கொண்டேன். கடைத்தெருக்களில் வெயில் என்று கூட பாராமல் அலைந்துத் திரிந்துக்கொண்டிருந்தோம்.

அவ்விடம் சாலை ஓரமாக இளைஞர் கும்பல் ஒன்று சீட்டு விளையாடிக் கொண்டிருந்தது. படம் பிடிக்கலாம் என்று முயற்சித்த வேளையில் சிறுவன் ஒருவன் எங்களை கவனித்து விட்டான். ‘அக்கா, போட்டொ எல்லாம் எடுக்காதீங்க. நாங்களே பொழுது போகாமல் விளையாடுறோம். நீங்க பாட்டுக்கு போட்டோ எடுத்து பேப்பெர், டி.வி’னு போட்டுறாதீங்க,’ என கெஞ்சும் குரலில் கேட்டுக் கொண்டான்.

அப்படியெல்லாம் செய்ய மாட்டோம். நாங்கள் பயண அனுபவமாக வைத்துக் கொள்வோம் என்று தெளிவுப் படுத்திய பின்னரே புகைப்படம் எடுக்க எங்களை அனுமதித்தனர். அடுத்தது, அரசாங்க மதுபானக் கடை! ‘டாஸ்மார்க்’! ‘குடி’மக்களின் நலன் காக்கும் அருமையான அரசு! வாழ்க தமிழ்மக்கள் என நினைத்தவாறு ‘தலப்பாக்கட்டி’ உணவகத்தில் நுழைந்தோம்.

அக்காவின் நண்பர் என்னிடம், “முதல்ல இங்க உள்ள பிள்ளைகள் மாதிரி சுடிதார் ஒன்னு வாங்கிப் போடுங்க. ரோட்டுல போறவ வர்றவன் எல்லாம் உங்களைத்தான் பார்க்குறானுங்க,”என்றார். நான் வாய்விட்டுச் சத்தமாக சிரித்துவிட்டேன். “ஏன் சிரிக்குறீங்க,” எனக் கேட்டார். “ஒன்றுமில்லை,” என்று சாப்பிட ஆரம்பித்தேன். சேலை, சுடிதார் அணிந்தால் மட்டும் பார்க்க மாட்டார்களா என்ன?

சாப்பிட்டு முடிந்து கை கழுவச் சென்றேன். சவர்க்காரம் இல்லை. சவர்க்கார பாட்டிலை எத்தனையோ முறை அமுக்கிவிட்டேன். ஒன்றும் வருவதாக இல்லை. வெள்ளை வேட்டிச் சட்டை அணிந்த ஒருவர் என்னருகில் உள்ள இன்னொரு குழாயில் கை கழுவிக் கொண்டிருந்தார். ‘சவர்க்காரம் இல்லையம்மா,’ என்று கனிவோடு கூறினார். மிகவும் சாந்தமான முகம். நல்ல அரசியல்வாதி மாதிரி தோற்றமளித்தார். நன்றி சொன்னேன். சிரித்துவிட்டுச் சென்றார்.

“அண்ணா,” என அழைத்தேன். திரும்பி, ‘என்னம்மா?’ எனக் கேட்டார். “குழாயை அடைக்காமல் போகிறீர்,” என்றேன். அசடு வழிய குழாயை அடைத்துவிட்டுச் சென்றார். நான் சிரித்துக்கொண்டே இருக்கையில் வந்தமர்ந்தேன். சிறிது நேரத்தில் அந்த மனிதர் கடையைவிட்டு வெளியே செல்ல ஆயத்தமானார். சற்றும் யோசிக்காமல், “அண்ணா கொஞ்சம் இங்க வாங்களேன்,” என அழைத்தேன். புனிதா அக்காவும் அவர் நண்பரும் எனது இந்தச் செய்கையால் திகைத்தனர்.

அந்த மனிதர் வந்தார். “நீங்கள் எந்த அரசியல் கட்சியிலாவது இருக்கிறீர்களா?” எனப் பட்டென்று கேட்டேன். “அ.தி.மு.க-வில் இருக்கிறேன். கன்னியாகுமரி எம்.ஜி.ஆர் மன்றத் தலைவராகவும் உள்ளேன்,” என்றார். நீங்கள் ஏன் செருப்பு அணியவில்லை என்றேன். அப்பொழுதுதான் அனைவரும் அவரது காலை கவனித்தனர். “தங்கும் விடுதியிலேயே விட்டுவிட்டேனம்மா. அருகில்தான் இருக்கிறது, அப்படியே நடந்து வந்துவிட்டேன்,” என்றார்.

என்னமோ தெரியவில்லை, அவரிடம் இன்னும் கதைக்க வேண்டும் போல் இருந்தது. என்னென்னமோ கேட்டேன். அவரும் சளைக்காமல் பதில் சொன்னார். அவருடைய பெயர் அட்டையை எம்மிடம் கொடுத்தார். கன்னியாகுமரி வந்தால் அவசியம் வந்து சந்திக்கும்படி கேட்டுக்கொண்டார். நானும் எமது பெயர் அட்டையும் தொடர்பு எண்களையும் கொடுத்தேன். எமக்கு இந்த விசித்திர பழக்கம் உண்டு. யாரிடமும் அதிகம் கதைக்க மாட்டேன். சிலரிடம் பார்த்தவுடேனே வெகுநாள் பழகியதைப் போல பேச ஆரம்பித்துவிடுவேன். அவர்கள் மேல் இனம் புரியாத அன்பு ஏற்படும். இந்த அண்ணாவிடமும் எனக்கு அப்படியொரு அன்பு ஏற்பட்டது. செல்லும் போது, “போய்ட்டு வாரேன் தங்கச்சி,” என அவர் கூறியது எமது நெஞ்சத்தை நெகிழச் செய்தது.

திங்கள், 26 செப்டம்பர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 3)


விமான நிலையத்திலிருந்து நானும் புனிதா அக்காவும் வெளியேறினோம். அங்கே எங்களை வரவேற்பதற்காக புனிதா அக்காவின் நண்பர்களான அருண் மற்றும் பிரகாஷ் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) காத்திருந்தனர். விமான நிலையத்தின் வெளிப்புறம் ஏதோ பேருந்து நிலையம் போல இருந்தது. அதிகம் வெயில் இல்லை. நீண்ட தூரம் பயணம் செய்ததால் எனக்கு லேசாக பசித்தது.

சாப்பிட்டுவிட்டு வாடகை அறைக்குச் செல்லலாம் என அக்காவிடம் கூறினேன். சென்னையில் என்ன உணவு ருசியாக இருக்கும் என அக்காவின் நண்பர்களிடம் கேட்டோம். உடனே ‘பிரியாணி’ என்றார்கள். சரி, ஒரு கை பார்த்துவிடுவோம் என்று ஒரு உணவகத்திற்குச் சென்றோம். தட்டு நிறைய வந்த பிரியாணியைக் கண்டு ஒரு கணம் திகைத்தேன். அவ்வளவு அதிகமான எம்மால் சாப்பிட இயலாது; உணவை வீணாக்கவும் எனக்குப் பிடிக்காது. ‘அதிகமாக இருக்கிறது,’ என்றேன். முதலில் சாப்பிடுங்கள் என்றார்கள்.

பிரியாணி பூப்போல மிகவும் மெதுவாகவும் சுவையாகவும் இருந்தது. இந்த மாதிரி பிரியாணியை என் வாழ்நாளில் சாப்பிட்டதே இல்லை. கொஞ்சமும் சிரமப்படாமல் அத்தனையும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடித்தேன்.

இந்தியாவில் சில நண்பர்களைப் பார்க்க வேண்டியிருந்தது. அவர்களைத் தொடர்பு கொள்வதற்கு ‘சிம் கார்ட்டு’ தேவைப்பட்டது. எமது தேவையை ஏற்கனவே அக்காவிடம் தெரிவித்திருந்தபடியால், அருண் எங்களுக்காக சிம் கார்ட்டு கொண்டு வந்திருந்தார். உடனே நண்பர்களைத் தொடர்பு கொண்டு எனது வரவினைத் தெரியப்படுத்தினேன். தங்கும் விடுதியின் அறைக்குச் செல்லும் முன் சாலை ஓரத்தில் பானிப்பூரி வாங்கிச் சாப்பிட்டேன். கைத் துடைக்க ‘திசு’ கேட்டதற்கு எனது கையில் காகிதத்தைத் திணித்தனர். ‘இதில் துடைத்துக் கொள்ளுங்கள்’, என உடனிருந்த பிரகாஷ் சொன்னார். கையைக் காகிதத்தில் துடைத்து கையோடு கொண்டு வந்திருந்த கிருமிநாசினி திரவத்தைக் கைகளில் தடவிக்கொண்டேன். அந்தப் பாட்டிலை பிரகாஷிடம் நீட்டினேன். எங்களுக்கு இது பழகிவிட்டது, நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள்; அதிகம் தேவைப்படும் என்றார்.

பின்னர் தொலைப்பேசிக்கு பணம் போடுவதற்கு கடைத் தேடித் திரிந்தோம். சாலையில் போவோரும் வருவோரும் எம்மை ‘ஒரு மாதிரியாக’ நோக்கினர். நான் கண்டும் காணாமல் விட்டு விட்டேன். என்னுடன் வந்துக்கொண்டிருந்த பிரகாஷ் இதனைக் கவனித்துவிட்டார் போலும். நான் அறைக்குச் செல்லும் முன்பாக, ‘பவனேஸ், இந்த ஊரில் இந்த மாதிரி உடுத்தாதீங்க. எல்லாரும் ஒரு மாதிரியாக பாக்குறாங்க. எனக்குக் கோபம் கோபமா வருது. தேவை இல்லாமல் பிரச்சனைகள் வரும். புரிந்துக்கொள்ளுங்கள்’ என்றார்.

‘அடடா, ஆரம்பித்துவிட்டார்களே,’ என எண்ணியவாறு அறைக்குச் சென்றேன். அதிகக் களைப்பாக இருந்தது. அன்றைய தினம் இரவு தமிழ் ஆர்வலர்களால் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான் தமிழ்நாடு வருவதனை அவர்களுக்கு முன் கூட்டியே தெரிவித்திருந்தபடியால் எமது வருகைக்காகக் காத்திருந்தனர். சரி, குளித்துவிட்டுச் செல்லலாம் என குளியலறைக்குள் நுழைந்துக் குழாயைத் திறந்தேன். சாத்துக்குடி நிறத்தில் குழாயிலிருந்து நீர் வந்தது. புனிதா அக்காவிடம் தெரிவித்தேன். ‘இங்கு இப்படித்தான் இருக்கும்,’ என்றார்.

எமக்கு மிகவும் மென்மையான சருமம். சரும நோய்கள் விரைவில் பரவிவிடும். என்ன செய்வது? வந்தாகிற்று, சமாளித்துதான் ஆக வேண்டும் என குளித்துவிட்டு சந்திப்பிற்குச் சென்றேன். பகலியேயே ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். எதற்கு வம்பு என்று இரவு நேரத்திலும் அதிகம் கசங்காத சுடிதார் ஒன்று அணிந்துச் சென்றேன். வழக்கம் போல சந்திப்பிற்கு வந்த அனைவரும் ஆண்கள். இந்தப் பெண்கள் எல்லாம் எங்கே மறைந்துவிட்டார்கள் என்றுதான் தெரியவில்லை. சந்திப்பு முடிந்து இந்திய நேரம் அதிகாலை 12.30 மணிக்கு அறைக்கு வந்தேன். மிகவும் களைப்பாக இருந்ததால், வந்தவுடன் உறங்கிவிட்டேன்.

அதிகாலையிலேயே எழும்பி குளித்து உடைமாற்றினோம். காலையிலேயே விடுதியின் பணியாள் ஒருவர் தேநீர் வேண்டுமா எனக் கேட்டார். சரி, கொண்டு வாருங்கள் என்றோம். மிகவும் சிறிய குவளையில் தேநீர் வந்தது. அதனுள்ளும் பாதி தேநீர் தான் இருந்தது, எங்கள் ஊரில் பெரிய குவளையில் தேநீர் குடித்த பழக்கப்பட்ட எங்களுக்கு அது உண்மையிலேயே போதவில்லை. வெளியே செல்லும் வழியில் சிற்றுண்டி சாப்பிடலாம் என விட்டுவிட்டோம்.

எமது திட்டத்தின்படி இன்று யாருடைய வழிக்காட்டலும் இல்லாமல் சென்னையைச் சுற்ற வேண்டும். முக்கியமாக அரசு பேருந்தில் ஏற வேண்டும். புனிதா அக்காவிடம் நான் தனியே செல்வதாகக் கூறினேன். தனக்கும் இன்று பாரிசுக்குச் செல்லும் திட்டம் இருப்பதாகவும் தானும் என்னுடன் வருவதாகக் கூறினார். ‘பாரிஸ்’ என்று சொல்லப்படுவது கடைத்தெருக்கள் சூழ்ந்த ஒரு இடத்தைக் குறிப்பதாகும். நான் கூட முதலில் பிரான்சுக்குத்தான் செல்கிறோமோ என்று அதிர்ந்தேன். சரி செல்வோம் என்று வெளியே கிளம்பினோம். இன்றும் ஊர் சுற்றுவதற்கு வசதியாக இருக்கட்டுமே என்று முட்டி வரையில் நீளமுள்ள, கைகளில்லாத சட்டை ஒன்று அணிந்திருந்தேன்.

நாங்கள் சாலையில் நடக்க ஆரம்பித்த உடனே மக்கள் கண்கள் எங்கள் மேல் மொய்ப்பதை உணர்ந்துக்கொண்டோம். எங்கள் நாட்டில் நான் சேலை அணிந்துச் சென்றால் இப்படித்தான் பார்ப்பார்கள். எனவே, மக்களின் விசித்திர பார்வை எனக்குப் பழக்கப்பட்டுவிட்டது. வளசரவாக்கத்தில் இருந்த ‘முருகன் இட்லி கடை’ கண்களில் தென்பட்டது. அங்கே சென்று இட்லி சாப்பிட்டோம். இட்லிக்கு மீன் கறி இருக்கிறதா என்று கேட்டதற்கு உணவக ஊழியர் என்னை ஏற இறங்கப் பார்த்தார். ‘இங்கு அசைவம் கிடையாது’ என்றார்.

யப்பாஇப்பவே கண்ணக் கட்டுதே, எம்மால் அசைவம் இல்லாமல் உண்ண முடியாது. இது என்னுடன் வந்த அக்காவுக்கும் தெரியும். காலை உணவு தானே சமாளித்துக்கொள்ளலாம் என ஒருவாறு சாப்பிட்டு முடித்தேன். அந்த ஊழியரிடமே பாரிசுக்கு எந்த எண் கொண்ட பேருந்து எடுப்பது, எவ்வளவு செலவாகும் என கேட்டு அறிந்துக் கொண்டேன். காலையிலேயே வெயில் கொளுத்தத் துவங்கிவிட்டது.

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 2)


விமானம் ஆகாயத்தில் பறக்கத் தொடங்கியது. விமானம் முழுக்க பெரும்பான்மையான இந்தியர்களே இருந்தனர். சில சிறுவர்கள் இங்கும் அங்கும் ஓடித் திரிந்துக் கொண்டிருந்தனர். அவர்களது தாய்மார்கள் சிலர் இருந்த இடத்திலிருந்தே உரக்கக் கத்தி சிறுவர்களை அழைத்துக்கொண்டிருந்தனர். இன்னொரு பெண்  அவரது மகனைத் துரத்திகொண்டு நடந்துக்கொண்டிருந்தார். இன்னொரு பெண் பக்கத்தில் இருந்த காலியான இருக்கையில் கால்களை தூக்கிப் போட்டுக் கொண்டார். விமானப் பயணம் எனக்கு முதல் முறை அல்ல. ஆனால், இந்தியா செல்லும் விமானப் பயணத்தின் சூழல் எமக்குப் புதுமையாக இருந்தது.

விமானத்தில் எப்போதும் புன்சிரிப்போடு இருக்கும் பணிப்பெண்கள் முகத்தில் சிறிய ‘கடுப்பு’ ரேகை படர்ந்திருந்தது. அமைதியாக இருக்கையில் அமரும்படி பல முறை கேட்டுக்கொண்டும் யாரும் அதனைப் பொருட்படுத்துவதாக இல்லை. எச்சரிக்கை விளக்குகள் எரியப்பட்டபோது கூட சிலர் கவலையில்லாமல் நடந்துத் திரிந்துக் கொண்டிருந்தது எமக்கே எரிச்சலை உண்டாக்கியது. இருந்தும், ‘இவர்கள் இப்படித்தான் போல’ என நினைத்து அமைதிக் கொண்டேன்.

என்னுடன் பயணித்துக் கொண்டிருந்த புனிதா அக்காவிற்குக் கோபம் உச்சத்தில் இருந்தது. ‘என்ன மனிதர்கள் இவர்கள்? கொஞ்சம் கூட நாகரிகமே இல்லாமல் இருக்கிறார்கள். குழந்தைகளைக் கூட பார்த்துக்கொள்ள முடியவில்லை. குப்பைகளைக் கண்டபடி விமானத்தின் உள்ளேயே வீசுகின்றனர். தூங்க முடியவில்லை. சந்தையில் இருப்பது போன்று சத்தம் போடுகின்றனர்’ என புலம்பிக் கொண்டே வந்தார்.

‘என்ன அக்கா? இந்திய சூழல் எனக்குச் சரிவராது என்று சொன்னீர். இப்போதே நீங்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டீரே’ என்றேன். ‘நீயே பாரேன்!’ என்றார். புன்னகைத்துவிட்டு, விமானத்தில் நடக்கும் ‘நாடகங்களைப்’ பார்த்துக் கொண்டிருந்தேன். சரியாக இந்திய நேரம் மாலை 5.15-க்கு விமானம் சென்னையை வந்தடைந்தது.

நான் எப்பொழுதும் வெளிநாடு பயணம் செய்யும் போது வசதியாகக் குட்டைப் பாவாடைகளும் கைகளில்லாத மேற்சட்டையும் அணிவது வழக்கம். இம்முறையும் அப்படித்தான் வந்தேன். ஏனோ, விமான நிலையத்தில் நான் நடந்துச் செல்லும் போதே பலர் எம்மை உற்று நோக்குவது போல் இருந்தது. எதனையும் பொருட்படுத்தாது எங்களுடைய துணிப்பைகளை எடுத்துக் கொண்டு நடந்தோம். பயணிகள் பரிசோதனை முடிந்து வரும்போது அதிகாரி ஒருவர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். ‘மனிதனைப் பார்க்காதது போல் பார்க்கிறான்’ என அக்காவிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் என்னை அழைத்தான் (இவனுக்கு மரியாதைக் கொடுக்க விரும்பவில்லை).

சுமார் 25 கிலோ எடை கொண்ட எனது பையை திரும்பவும் ‘ஸ்கேன்’ செய்ய வேண்டும் என்றான். மற்ற பயணிகள் அனைவரும் சென்றுவிட்டனர். ஏற்கனவே ஒருமுறை ‘ஸ்கேன்’ செய்தாகிற்று. மீண்டும் எதற்கு? பாரம் அதிகமாக இருந்ததால், ‘சரி, நீங்களே தூக்கி வையுங்கள்,’ என ஆங்கிலத்தில் கூறினேன். ‘நீங்கள் இரு பெண்கள் இருக்கிறீர்களே? சேர்ந்து தூக்கி வையுங்கள்’ என்றான். எனக்கு வந்த ஆத்திரத்தில் நான் ஒருத்தியாகவே பையைத் தூக்கி ‘டொக்’கென்று ‘ஸ்கேன்’ செய்யும் இயந்திரத்தில் போட்டேன். பரிசோதனை முடிந்தது.

சொல்ல விரும்பாத கெட்ட வார்த்தைகள் பலவும் என் நாவில் வரிசைப் படுத்தி நின்றன. அத்தனையும் அடக்கிக் கொண்டு, ‘என்னைப் பார்க்க தீவிரவாதி மாதிரி இருக்கிறதா? #$% (do I look like a terrorist? Fuck!) என உறக்க அவன் காதில் விழுமாறு கூறிவிட்டு, விறுவிறுவென துணிப்பையை இழுத்துக்கொண்டு வெளியேறினேன். சென்னை எமக்கு நல்ல வரவேற்பு அளித்தது!

புதன், 21 செப்டம்பர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 1)


என்னதான் மலேசியாவில் பிறந்து வளர்ந்த எங்களை ‘இந்தியன்’ என்று மற்றவர் அழைத்தாலும் இந்த 25 வருடங்களில் ஒரு முறை கூட நான் அங்கே சென்றதில்லை. சிறு வயதில் வெளிநாடு சென்றால் இந்தியாவிற்குத்தான் முதலில் செல்ல வேண்டும் என்று அடிக்கடி நினைத்ததுண்டு. ஈழத்தின் நடந்த படுகொலைகளுக்கு இந்தியா எனும் நாடு முக்கிய பங்காற்றியுள்ளது என்ற உண்மையை உணர ஆரம்பித்ததிலிருந்து அங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருந்தது. சில இன உணர்வுள்ள நண்பர்களின் சகவாசம் கிடைத்தப் பிறகு அவர்களைச் சென்று நேரில் காண வேண்டும், அங்கு நடக்கும் போராட்டங்களில் நேரில் பங்கு கொள்ள வேண்டும் என்ற ஆசையும் துளிர்விட ஆரம்பித்தது.

இத்தகைய ஆசைகள் தோன்றிய வேளையில் ஒரு முறை எனது அக்காவும், தோழியுமான புனிதாவிடம் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) எமது எண்ணத்தைத் தெரியப்படுத்தினேன். வழக்கமாக வெளிநாடுகளுக்குத் தனியே சென்று பழக்கப்பட்டவள் நான். திடீரென்று அக்காவும் உடன் வருவதாகக் கூறினார். ஆஹா, துணை ஒன்று கிடைத்த பிறகு தடை எதற்கு? உடனே விமானச் சீட்டுகளை வாங்கினோம். இந்தியா பெரிய நாடாகிற்றே? ஒரு கிழமை பத்தாது, இரண்டு கிழமைகள் சென்று வரலாம் என்று முடிவு செய்து, பின்னர், நடப்பது நடக்கட்டும், ஒரு மாதம் சென்று வருவோம் என்று முடிவெடுத்தோம்.

அலுவலகத்தில் விடுப்பு கிடைக்காதே? என்ன செய்யலாம்? அதிகம் யோசிக்கவில்லை. இதுவரையில் என்னைப் பெற்றதைத் தவிர்த்து வேறு எதுவுமே எனக்காகச் செய்யாத தாயின் பெயரைப் பயன்படுத்த வேண்டியதுதான். தாய் என்பவள் இதற்காகவாவது உதவியாய் இருக்கிறாளே (*நன்றி அம்மா). நான் அதிகம் பொய் சொல்வது கிடையாது. சில சந்தர்ப்ப சூழ்நிலைகளில், அதனால் நன்மை கிட்டும் என்ற அடிப்படையில் மிகச் சில பொய்களே சொல்வதுண்டு. அதனையும் யாராவது துருவித் துருவிக் கேட்டால் உண்மையை உடைத்து விடுவேன். ஆனால், இரகசியங்கள் எம்மிடம் காக்கப்படும். அம்மாவிற்கு உடல் நலக்குறைவு, மருத்துவத்திற்காக இந்தியா கொண்டு செல்கிறேன் என்றேன். அதற்காக மேலிடத்தின் உத்தரவு கேட்டு சில கடிதங்கள், தொலைப்பேசி அழைப்புகள், சந்திப்புகள் என ஒருவாறு விடுப்பு கிடைத்தது.

எப்பொழுதும் நான் வெளிநாடு பயணம் செய்யும் போது மனதிற்குள் ஒரு துள்ளல் இருக்கும், ஆர்வம் இருக்கும், இனம் புரியாத உற்சாகம் இருக்கும். ஏனோ, இந்த பயணத்தில் இது எதுவுமே எனக்கு இல்லை. என்னுடன் பயணம் வருவதாகச் சொன்ன புனிதா அக்காவுடனும் வேலை பளுவின் காரணமாகத் தொடர்புக்கொள்ளவில்லை. எந்தவொரு முன்னேற்பாடும் செய்யவில்லை. தெரிந்த ஒரு சில நண்பர்களிடம் மட்டும் நான் அவ்விடம் வருவதாகத் தெரிவித்தேன். புறப்படுவதற்கு இரண்டு நாட்கள் இருக்கும் முன் எமக்கு மிகவும் நெருக்கமான உறவுகளான அத்தையிடமும், அண்ணியிடமும் எமது பயணத்தைத் தெரிவித்தேன். திடீர் அறிவிப்பால் சற்று அதிர்ந்தனர், ஆனால் ஒன்றும் கேட்டுக்கொள்ளவில்லை. கேட்டும் பயன் இல்லை என்பதைப் புரிந்துக்கொண்டனர் போலும்.

ஒரு மாத காலத்திற்குத் தேவையான 25 கிலோ எடைக்கொண்ட பொருட்களைக் கட்டிக்கொண்டு பயணத்திற்கு ஆயத்தமானேன். ஜூலை 5-ஆம் திகதி காலையிலேயே புனிதா அக்காவை கே.எல் சென்ட்ரலில் சந்தித்தேன். ரிங்கிட்டினை ரூபாய்க்கு மாற்றிய பிறகு நாங்கள் இருவரும் அங்கிருந்த பேருந்தில் ஏறி விமான நிலையத்திற்குப் பயணமானோம். பேருந்தில் பயணம் செய்த வேளையில் நெருங்கிய சில நண்பர்களுக்குத் தொலைப்பேசி அழைப்பு விடுத்து எமது பயணத்தைத் தெரியப்படுத்தினேன். எனது நெருங்கிய தோழி ஒருத்திக்கும் அழைத்து வழக்கம் போல் நான் வெளிநாடு சென்ற வேளையில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் என்ன செய்ய வேண்டும், எதைச் செய்ய வேண்டும் என தெளிவுப்படுத்தினேன். சுமார் 1 மணி நேர பயணத்திற்குப் பிறகு எல்.சி.சி.தி விமான நிலையத்தை வந்தடைந்தோம். சரியாக மலேசிய நேரம் மாலை 3.55-க்கு விமானம் கோலாலம்பூரிலிருந்து சென்னை நோக்கிப் பயணமானது.




செவ்வாய், 20 செப்டம்பர், 2011

ஆயிரம் மடங்கு!