வியாழன், 29 செப்டம்பர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 6)
அக்காவும் நானும் ஏற வேண்டிய பேருந்தில் ஏறினோம். நாங்கள் தங்கிருந்த இடத்தின் பெயர் வடபழனி என்று பிரகாஷ் மற்றும் அருண் சொல்லியிருந்ததால் வடபழனி நிறுத்தம் வந்ததும் எங்களிடம் தெரிவிக்குமாறு கண்டெக்டரிடம் கேட்டுக்கொண்டோம். வெயிலில் அலைந்துத் திரிந்ததால் உடல் முழுக்க தூசி படர்ந்துப் பிசுபிசுத்தது. குடம் குடமாய் வியர்வை வழிந்தோடியது. வேட்கை தாங்கமுடியாமல் விரித்து விட்டிருந்த கூந்தலை இழுத்துக் கட்டினேன்.

பேருந்து பல இடங்களில் நின்று பயணிகளை ஏற்றுவதும்  இறக்குவதுமாக இருந்தது. நான் சன்னல் அருகில் அமர்ந்திருந்ததால் வழி நெடுகிலும் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் பக்கத்தில் இருந்த புனிதா அக்கா அடிக்கடி எதற்காகவோ நெழிந்துக் கொண்டிருந்தார். என் கைகளில் வைத்திருந்த பைகளையும் வாங்கி தனது மடியில் வைத்துக் கொண்டார். அடிக்கடி நெகிழிப் பைகளை இடம் மாற்றவும் அதன் சத்தம் எமது கவனத்தை ஈர்த்தது.

“என்னாச்சு அக்கா? கனமாக இருந்தால் பைகளை என்னிடம் கொடுங்கள். நான் வைத்துக் கொள்கிறேன்,” என்றேன். “அங்கே பார்,” என்றார். அப்பொழுதுதான் அக்காவின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவன் கழுத்தைத் திருப்பி அக்காவின் கழுத்துக் கீழேயே பார்த்துக் கொண்டிருந்ததைக் கவனித்தேன். வினாடிக்குள் எனக்கு அனைத்தும் விளங்கிற்று. நாங்கள் அவனைக் கவனிக்கிறோம் என்று தெரிந்துக் கூட கொஞ்சம் கூட நாகரிகமே இல்லாமல் அவன் தொடர்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்கள் சிவந்துக் கிடந்தன. அவன் செய்கை எனக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணியது. போட்டிருந்த கறுப்புக் கண்ணாடியைக் கலட்டிவிட்டு அவனைப் பார்த்து முறைத்தேன்.

அவன் எதனையும் கண்டுக் கொள்வதாகத் தெரியவில்லை. என்ன நினைத்தானோ தெரியவில்லை, சற்று நேரத்தில் எழுந்து இன்னொரு இடத்தில் அமர்ந்துக்கொண்டான். நான் அவன் செய்கைகளையே கவனித்துக் கொண்டிருந்தேன். திடீரென அவன் வேட்டியைத் தூக்கி அதனுள் கைவிடவும் அதிர்ந்துப் போனேன். அடக்கடவுளே! சாராயப் போத்தல்! இதுவரை தமிழ்த் திரைப்படங்களில்தான் குடித்துவிட்டு போதையில் இருக்கும் ஆண்கள் வேட்டியில் கைவிட்டு சாராயப் பாட்டிலை எடுத்து குடிப்பதைப் பார்த்திருக்கிறேன். இப்போது நேரில்! பட்டப்பகலில்! அதுவும் அரசு பேருந்தில்!

என்னை ஏன் தனியாகப் பயணம் செய்யாதே; போகும் போது நிறைய துப்பட்டாக்கள் எடுத்துச் செல் என இதற்கு முன்பு தமிழ்நாட்டுக்குச் சென்ற நண்பர்கள் எச்சரித்தனர் என்று அப்போது விளங்கியது. அந்த மனிதன் இறங்கிச் சென்றுவிட்டான். எங்கள் பயணம் தொடர்ந்தது. நானும் வழக்கம் போல் பராக்குப் பார்க்க ஆரம்பித்தேன்.

“தமிழீழ விடுதலைப் புலிகள்,” என்று என் பின்னால் அமர்ந்திருந்த யாரோ சொல்வது கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். இரண்டு இளைஞர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் அப்போதுதான் பேருந்தில் ஏறியிருக்க வேண்டும். ஒரு வினாடிப் பார்த்துவிட்டு மீண்டும் திரும்பிக் கொண்டேன். அவர்கள் எதனைப் பார்த்து அதனைச் சொன்னனர் என்பது எனக்கு விளங்கிற்று. காற்றில் பரந்த கூந்தலைச் சரிசெய்வது போன்று கட்டியிருந்த பின்னலை அவிழ்த்துவிட்டேன். சரிந்து விழுந்து எம்முயிரை மறைத்தது.

பின்னால் பேச்சுக்குரல் தொடர்ந்தது. என்னப் பேசிக்கொள்கிறார்கள் என்று கேட்க ஆவலாக இருந்தது. கண்களை வெளியே ஓடவிட்டு, காதுகளை கூர்மைப்படுத்தினேன்.
“சுற்றுப்பயணிகளாக இருக்க வேண்டும்,” என்றார் ஒருவர். “பார்க்க அப்படித்தான் இருக்கிறார்கள். இலங்கையிலிருந்து வருகிறார்களோ?” என்று மற்றொருவர் தனது சந்தேகத்தை வெளிப்படுத்தினார். அவர்கள் மேலும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்றுத் தெரிந்துக்கொள்ள ஆவலாய் இருந்தது. அதற்குள் எனது வாய் முந்திக்கொண்டு, “மலேசியாவிலிருந்து வருகிறோம்” என்றுச் சொல்லிவிட்டது. திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தேன். பதிலுக்கு அவர்களும் புன்னகைத்தனர்.

“மலேசியாவா? பிறகு எப்படி உங்களுக்குத் தமிழ்ப் பேச தெரிகிறது?” என்ற கேள்வி எமக்கு மீண்டும் சிரிப்பை வரவழைத்தது. “நாங்கள் நன்றாகத் தமிழ் பேசுவோம்,” என்றுச் சொல்லி மலேசியத் தமிழர்களைப் பற்றி அவர்களுக்குச் சின்ன விளக்கம் கொடுத்தேன். அவர்களும் ஆர்வமாகப் பல கேள்விகள் கேட்டுத் தெரிந்துக் கொண்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துக் கொண்டோம். சின்னப் பொடியன்கள்தான். சிவா, குமார் (வழக்கம் போல் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) இருவருமே கால் சென்டரில் பணியாற்றுவதாகக் கூறினர்.

சிவா பேசிய சென்னைத் தமிழை நான் மிகவும் இரசித்தேன். அது எனக்கு வேடிக்கையாக இருந்தது. மிகவும் இயல்பாக வெகுநாட்கள் பழகிய நண்பர்கள் போல் பேசினார். குமார் மட்டும் ஏனோ தயங்கித் தயங்கித் தூயத் தமிழில் பேச முயன்றுக் கொண்டிருந்த்தார். “நீங்கள் பேசும் சென்னைத் தமிழ் எனக்குப் புரியும். புரியவில்லை என்றால் நானே கேட்டுத் தெரிந்துக்கொள்வேன். சரளமாகப் பேசுங்கள்,” என எவ்வளவோ சொல்லியும் அவரைக் கூச்சம் விடுவதாக இல்லை.

குமாரிடமும் சிவாவிடமும் பேசுவது மனதுக்கு உற்சாகத்தை அளித்தது. குறுகிய பயணத்தில் பல விடயங்களைப் பற்றி பேசினோம். சென்னையில் பார்க்க வேண்டிய இடங்களின் பெயர்களை எங்களுக்குப் பட்டிலிட்டுத் தந்தனர். தமக்குக் கிடைத்த முதல் வெளிநாட்டு நண்பர்களென எங்களைக் கூறினர். “ஏன் வெளிநாடு என்கிறீர்? எங்கள் நாட்டிலேயே எங்களை இந்தியன் என்றுதான் அழைக்கிறார்கள். நாமெல்லாம் உறவுகள் தான். என்னக் காரணத்தினாலோ பிரிந்து உலகம் முழுவதும் படர்ந்துக்கிடக்கிறோம்,” என்றேன்.

“நீங்கள் என்னென்னவோ பேசுறீங்க. எங்களுக்கு ஒன்னுமே புரியல,” என்றார் சிவா. அதற்குள் அவர்கள் இறங்க வேண்டிய இடம் வர, அவசர அவசரமாகத் தொலைப்பேசி எண்களை பரிமாறிக்கொண்டோம். “பாய்’ என்றுச் சொல்லிச் சிட்டாய் இறங்கிச் சென்றனர். மனதுக்கு மிகுந்த உற்சாகமாய் இருந்தது. “நல்ல பையன்கள்” என நானும் அக்காவும் பேசிக்கொண்டோம்.

கருத்துகள் இல்லை: