புதன், 1 ஜனவரி, 2014

துரத்தும் நினைவுகள்…


மரண பயம் அடிக்கடி வருகிறது
நண்பன் மறைந்ததும் மாமா இறந்த்தும்
இன்னமும் கனவு போல் உள்ளது!

நள்ளிரவில் திடீரென உயிர்பயம் வருகிறது
இதயம் துடிக்கும் ஒலி கலக்கத்தை ஏற்படுத்துகிறது
இந்த ஒலி நின்றுவிட்டால் என்ன ஆகும்?
நான் எங்கே செல்வேன்? என்னுடன் யார் வருவார்?
தனிமையில் சிறைப்பட்டுக் கிடப்பேனா?
அல்லது சிறகடித்துப் பறப்பேனே?

எதற்காக இந்த வாழ்க்கை
ஏன் இந்த உலகிற்கு வந்தோம்?
எப்படி வாழ்ந்தோம்? ; திரும்பிப் பார்க்கிறேன்…

பாட்டில் ஊஞ்சல் ஆடுகிறாள்
பக்கத்தில் நானும் சில பிள்ளைகளும்
ஏதோ பேசுகிறோம்; சிரிக்கிறோம்..

நானும் சிறுவர்களும் எங்கோ ஓடுகிறோம்
திடீரென தடுக்கி விழுந்து கால் முட்டி தேய்கிறது
பிய்ந்த சதையின் ஊடே எலும்பு தெரிய
பாட்டி கண்ணீர் வடிக்கிறார்…

அழகான மாலை வேலை
மேகம் பூமாரி பொழிகிறது
நான் தோழிகளுடன் ஆனந்தமாக ஆடுகிறேன்
பாட்டி வருகிறார்; அனைவரும் ஓடி ஒளிகிறோம்…

நினைவு தடைப்படுகிறது…
இவ்வளவு அழகான வாழ்க்கையா எனது?
மீண்டும் திரும்பிச் செல்ல ஆசைதான்…
வழி யார் அறிவார்?

பள்ளிக்கூடம் தெரிகிறது
ஒவ்வொரு அறையும், பள்ளித் திடலும்
இன்னமும் பசுமரத்தாணியாய் நெஞ்சில்,
அதோ நான்! புத்தம் புதிய சீருடையில்!
’அம்மா’ இந்த சொல்லைக் கூட படிக்கத்தெரியவில்லையே
ஆசிரியரின் பிரம்பு கையை பதம் பார்க்கிறது
கண்களில் கண்ணீர்; கைகளில் சரஸ்வதிப் படம்!

அடுத்தது மலாய் வகுப்பு
பச்சை நிற வண்ணத்தைக் காட்டி ஆசிரியர் ஏதோ கேட்கிறார்
எனக்கு எதுவும் விளங்கவில்லை
மிரண்ட விழியால் அவரைப் பார்க்கிறேன்
என்ன செய்யப் போகிறார் என்று அறிவதற்குள்
‘ஹீஜாவ்’ என்று சொல்லி தொடையை அழுத்திக் கிள்ளுகிறார்
கண்களில் மீண்டும் கண்ணீர்…

முட்டாளாக இருந்திருக்கிறேன்
பிறகு எப்படி இப்படி மாறினேன்?
அதோ மனக்கண்ணில் தெரிகிறது
நான் மூன்றாம் ஆண்டில் இருக்கிறேன்
ஆசிரியர் வருகிறார்
புதிய தமிழ் எழுத்துக்களை அறிமுகம் செய்கிறார்
இல்லை, புதிய எழுத்துகள் இல்லை
எழுத்துருமாற்றம்!
அனைவரும் குழம்புகின்றனர்
நான் தெளிவாகிவிட்டேன்!

மலாய் பேச்சுப்போட்டி வருகிறது
கைத்தூக்கி நானாக பெயர் பதிகிறேன்
காலை மாலை மனனம் செய்கிறேன்
இதோ பரிசு! மலாய் மாலை வகுப்பிற்கு நான் தலைமை!

பள்ளி வாழ்க்கை நன்றாக போகிறது
மிக மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கிறேன்
இது ஐந்தாம் ஆண்டு!
கொடூர முகத்துடன் கணக்காசிரியர்
எதிரே நான் மட்டும்
என்னமோ சொல்லி திட்டுகிறார்
இடைஇடையே குடும்ப விவகாரங்களும் கேட்கிறார்
கண்களில் நீர் இடைவிடாமல் சுரந்துக்கொண்டிருக்கிறது!
ஜன்னல் வழியே சிலபேர் வேடிக்கைப் பார்க்கிறார்கள்!

பாட்டி வீட்டு ஜன்னலின் அருகே நான்
ஏதோ செய்கிறேன்… ஓ கணக்குப் படிக்கிறேன்!
இப்போது அனைத்துப் பாடமும் கைவசம்
பள்ளியில் யாரும் திட்டுவதில்லை
அனைத்துப் போட்டிகளிலும் பரிசு வாங்கி குவித்தாயிற்று!
ஆரம்பப்பள்ளி முடிவில் சிறந்த மாணவி பட்டம்!
அப்பப்பா, இத்தனைக் கோப்பைகளா? நானா வாங்கியது??

பதிநான்கு வயது
அது ஒரு ஞாயிறு காலை
தொலைப்பேசி அலறுகிறது
சில நொடிகளில் பாட்டி என்னை அழைக்கிறார்
என் தமிழாசிரியர் பேசுகிறார்
‘வாழ்த்துகள், உனது முதல் சிறுகதைக்கு’
ஓடிச்சென்று நாளிதழைப் புரட்டுகிறேன்
இதோ! என் கதை! எனது முதல் சிறுகதை!
பெருமையால் முகம் பூரிக்கிறது!

அடுத்தது எத்தனையோ கதைகள்
சில எழுத்தாளர் சந்திப்புகள்
நானும் எழுத்தாளர்?!

அதோ, பாழடைந்த வீடு
உள்ளே செல்கிறேன்
முதல் அறையைத் தாண்டி இரண்டாம் அறை
இங்கேதான் சிறுவயதில் பாட்டியுடன் படுத்திருப்பேன்
அந்தக் கட்டில் அப்படியே இருக்கிறது
இங்கே விடிவிளக்கு ஒன்று இருக்குமே
அதில்தானே திருட்டுத்தனமாக இரா முழுவதும் கதை படிப்பேன்!

வரவேற்பறை, தொலைக்காட்சி, வானொலி
அனைத்தும் அப்படியே இருக்கிறது
மாலை பொழுதுகளில் இப்படி அமர்கிறேன்
பாடல் கேட்கிறேன்; பாட்டி ‘மைலோ’ கொடுக்கிறார்
இது எனது தினசரி நடவடிக்கையாய் இருந்திருக்கிறது!

அந்த ஜன்னல் ஓரம்
இங்குதான் பல மணி நேரம் நான் உட்கார்ந்திருப்பேன்
இங்குதான் படிப்பேன்; உணவருந்துவேன்
வருவோர் போவோரைப் பார்த்துக் கொண்டிருப்பேன்
எனக்கு மிகவும் பிடித்த ஜன்னல் ஓரம்!
‘எனது இடம்’ என்று எழுத்தப்படாத சொத்து!

ஜன்னல் ஓரம் அமர்கிறேன்
கார்த்திகாவின் அம்மா செல்கிறார்
‘மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்’
கிண்டலாக பாட்டுப் படிக்கிறேன்
விளையாட்டாக அடிக்க வருகிறார்!

கார்த்திகா! ஆம், என் பின் வீட்டுத் தோழி!
சமையல்கட்டிற்கு வந்து பின் வாசல் கதவைத் திறக்கிறேன்
அதோ! இன்னொரு ஜன்னல்!
அந்த இரட்டை மாடி பலகை வீட்டில்
நன்றாகப் பாருங்கள்!
‘கார்த்திகா’ என்று கத்தினால்
அவள் எட்டிப் பார்ப்பாள்
இருவரும் இப்படி கத்திக் கத்திப் பேசி இருக்கிறோம்
எத்தனையோ நாட்கள் அவள் இங்கும் நான் அங்கும்
ஒன்றாக சாப்பிட்டிருக்கிறோம்
அவள் முன் அடிக்கடி அழுதிருக்கிறேன்
ஆனால், அவள் அழுது பார்த்த்தில்லை!

பாட்டி
அதோ என் பாட்டி
தினமும் சேலை அணிந்து
உடல் சோராமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்
பாட்டி சமையல் இன்னமும் மணக்கிறது
‘என்ன சிந்தனை’ என்று அடிக்கடி கேட்பார்
நான் சிந்திக்கிறேன் என்று அப்போதுதான் நினைவு வரும்!
தாயின் பாசம் அறியவில்லை; பாட்டியின் அன்பு அறிந்திருக்கிறேன்.

சமையல் அறையில் இருக்கிறேன்
எவ்வளவு விலாசமாக இருக்கிறது
இங்குதான் அமர்ந்து காய்கறி நறுக்குவேன்
இங்குதான் தேங்காய் துருவுவேன்
இங்கே இருந்த அம்மிக்கல் எங்கே?
இதோ தொட்டில் கட்டும் இடம்
எத்தனை குழந்தைகளைக் தூங்க வைத்திருக்கிறேன்?

குழந்தை?! கனகேஸ்வரி! எங்கே அவள்?
என் அத்தை மகள்
பிறந்த மூன்றாவது நாள் கையில் ஏந்தினேன்
ஒரு விரலைக் கொடுத்தால் கெட்டியாகப் பிடித்துக்கொள்வாள்
தலையை வருடி மணிக்கணக்காக அமர்ந்திருப்பேன்
அந்தப் பிஞ்சு முகத்தைப் பார்த்தாலே கவலைகள் தீரும்
உடை மாற்றி, பாலூட்டி, கொஞ்சிக் கொண்டிருப்பேன்
நல்ல வேலை, அவளும் பாட்டி வீட்டில் வளரப்போகிறாள்
என்னைப் போல!

மூம்று வயது வரை அவள் என்னுடன் இருந்தாள்
பின்னர் தாயுடன் சென்றுவிட்டாள்
அவளைத் தூக்கிக்கொண்டு இங்கும் அங்கும் நடக்கிறேன்
புரண்டு படுக்க முயற்சிக்கிறாள்
நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்
இதோ! புரண்டுவிட்டாள்!
’பாட்டி!! கனகேஸ் குப்பாந்துவிட்டாள்”
அலறி பாட்டியை அழைக்கிறேன்
அனைவரும் அதனைப் பார்த்து மகிழ்கின்றனர்!
இப்படியே ஒருநாள் தவழ ஆரம்பித்தாள்
உட்கார்ந்தாள்; முட்டியிட்டாள்; நின்றாள்
நடைப்பயிலவும் ஆரம்பித்தாள்…
அவள் ஓடுகிறாள்; நான் துரத்திப் பிடிக்கிறேன்
இப்போது ‘அக்கா’ என்று அழைக்கிறாள்!
எத்தனை வளர்ச்சிகள்! அத்தனையும் என் கண் முன்னே!

என் திருமணத்தில் பார்த்தேன்
என் தோளுயரம் இருக்கிறாள்
வளர்ந்துவிட்டாள்; என் முதல் குழந்தை!

சமையலறையை ஒட்டிய அறைக்குச் செல்கிறேன்
இங்குதான் என் அண்ணன்கள் இருந்தார்கள்
இங்குதான் சிறுவயதில் விளையாடுவோம்
அண்ணன்களுக்குப் பிறகு என் அறையாகிப்போனது…

’தட்டுங்கள் திறக்கப்படும்’
கதவின் முன்னே நான் எழுதியது
இன்னமும் அழியாமல் இருக்கிறது
உள்ளே செல்கிறேன்; என் கடந்தகாலத்திற்குச் செல்கிறேன்
அறை முழுக்க ஓவியங்கள், தன்னம்பிக்கை வாசகங்கள்!
என்னுடையது! என்னுடையதா இது??
இவ்வளவு அழகாக வரைந்திருக்கிறேன்!
இப்படியெல்லாம் சிந்தித்திருக்கிறேன்!

கதவை தாழிடுகிறேன்
கதவின் பின்னால் நான்கு வரி கவிதை
‘நான் ஓர் புரியாத புதிர்
விடை தேட முயற்சிக்காதே
அது முடியாத காரியம் –ஏனெனில்
எனக்கு நானே கேள்விக்குறி’!
எப்போது எழுதினேன்??
சரியாக நினைவில்லை
பதிமூன்று வயதாக இருக்கலாம்…

என் புத்தக அலமாரி
எத்தனை புத்தகங்கள்? மு.வா.’வின் நாவல்கள்?
பழம்பெரும் தமிழ் அகராதி
அதன் பக்கங்கள் கூட நைந்துவிட்டன
இவ்வளவு மலாய் நாவல்களா?
என்னதிது? ஓ, நான் எழுதிய சிறுகதைகள்
ஓவிய புத்தகங்கள்; பாடநூல்கள்….
இவையெல்லாம் எங்கே? காலியாகிக் கிடக்கிறதே?

சுற்றும் முற்றும் பார்க்கிறேன்
அறையில் மூலைகளில் சிலந்தி வலைகள்
நான் ஒட்டி வைத்த ஓவியங்கள் தூசிப்படிந்து கிடக்கின்றன
பல ஓவியங்களை யாரோ கிழித்திருக்கிறார்கள்
சில வாசகங்கள் அழியாமல் இருக்கின்றன
இந்த அறை! இதில்தான் நான் பல இரவுகளை கழித்திருக்கிறேன்
இங்குதான் என் சிந்தனை துளிர்விட ஆரம்பித்துள்ளது!

இல்லை! இது என் அறை இல்லை!
எப்படி இப்படி ஆனது? பாட்டி எங்கே?
பாட்டி! ஓ, வயதாகிவிட்ட்து அவருக்கு
மகள் வீட்டில் இருக்கிறார்
அனைத்தையும் மறந்துவிடுகிறாராம்
என்னை மட்டும் ஞாபகம் இருக்கிறது
பெயரை அழகாகச் சொல்கிறார்
நான் என்ன செய்வேன் என்றும் சொல்கிறார்
அவ்வளவு ஞாபகம், என்னைப் பற்றி மட்டும்!

அவர் எலும்பின் வடிவங்கள் தெளிவாகத் தெரிகின்றன
வெற்றெலும்பின் மேல் தோல் சுற்றியது போல் இருக்கிறார்
கைகள் நடுங்குகின்றன… பார்வை குறைந்துவிட்டதாம்
அவரால் சொந்தமாக சேலை கட்ட முடியவில்லை
எத்தனைப் பேருக்குச் சேலை கட்டிவிட்டவர்??
நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறாராம்!
எப்படி? அதற்குள் எப்படி? அவ்வளவு சீக்கிரமாக?
எனக்கும் இதே கதி தானா?

அதோ, கார்த்திகா கத்துகிறாள்
பின் கதவைத் திறக்கிறேன்
தலையணை நனைந்திருக்கிறது
நான் இன்னும் உறங்கவில்லை
எங்கே இருக்கிறேன்?
குரட்டைச் சத்தம் வருகிறது
பக்கத்தில் கணவர்!