சனி, 29 நவம்பர், 2008

இதுதான் உலகம்!

நடந்தேன் கோணல் என்றார்கள்
படித்தேன் பைத்தியம் என்றார்கள்
தவித்தேன் நடிப்பு என்றார்கள்
முறைத்தேன் திமிர் என்றார்கள்!

சிரித்தேன் நெனப்பு என்றார்கள்
அழுதேன் காரியக்காரி என்றார்கள்
தூங்கினேன் சோம்பேறி என்றார்கள்
ஆடினேன் கூத்தாடி என்றார்கள்!

பேசினேன் தப்பு என்றார்கள்
அமைதியாக என் வேலையை
மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன்
சுயநலவாதி என்றார்கள்!

புதன், 26 நவம்பர், 2008

என் பாத்திரமென்ன?

ஒவ்வொரு விடியலும்
இரவாகிப் போவது ஏன்?
நெஞ்சில் உரம் போட்டு
காதல் வளர்த்ததாலா?
நிலவு சூரியனாய்
மாறியதில் ஆச்சர்யமில்லை
எனக்கு மட்டும் எப்படி
சூரியன் கூட நிலவாய்?

கனவில் நீ வருவதனால்
இரவெல்லாம் விழித்திருந்தேன்
விடிந்ததும் உறக்கம் கொண்டேன்
இருந்தும் நிம்மதியில்லை!
ஆயிரம் பேர் கொண்ட சபையில் நான்
கேளிக் கதைப் பேசி சிரித்த வேளை
உள்ளத்தில் எங்கோ ஓர் மூலையில்
உணர முடியா தனிமை…!

தனிமையில் இனிமையா?
சொன்னவன் நிச்சயம் பைத்தியக்காரன்
தனிமையை விட கொடுமையா?
அப்படி ஒன்றும் தோன்றவில்லை
தனிமையை விட சிறந்ததையும்
நான் இன்னும் காணவில்லை
தனிமை இனிமையா கொடுமையா?
பதில் சொல்லத் தெரியவில்லை!

உடலின் ஒவ்வொரு அணுவிலும் நீ
காணும் காட்சியெல்லாம் உன் முகம்
உன்னை நான் நினைக்கவில்லை;
இனி நினைக்கவும் மாட்டேன்
மறந்தால்தானே நினைப்பதற்கு!
மன்னிக்கவும்…மறக்க முடியவில்லை
முயன்று முயன்று பார்க்கிறேன்
தோல்வியே நிச்சயம் என்று தெரிந்த போதும்…!

நான் செய்த பாவமா
இல்லை பிறர் கொடுத்த சாபமா
அரை பைத்தியமாய் திரிகின்றேன்
என்னை நானே கேட்கிறேன்
நான் யார்? உனக்காவது தெரியுமா?
‘நீ என் காதலி’ என்ற உதடுகள்
இன்று சுவடு கூட தெரியாமல்
எங்கோ ஓர் மூலையில்…!


எல்லாம் வார்த்தைகள்
எறும்பு மொய்க்கும் வார்த்தைகள்
உன்னைச் சோல்லிக் குற்றமில்லை
ஏமாந்த முட்டாள் நானல்லவா…?
வானளாவிய கனா கண்டேன்
விடிந்ததும் தெளிந்துவிட்டேன்
கண்டது வெறும் கனவுதான்;
நிஜம் என்று எதுவுமில்லை!

உன்னுடன் இருந்த நாட்களைவிட
நாம் பிரிந்து வாழ்ந்த நாட்கள் அதிகம்
ஆனால், அதுதான் என் வாழ்வின் சரித்திரம்!
மிச்சமிருக்கும் வாழ்க்கையை
சொச்சம் வைக்காமல் வாழ்வதற்கு
உன்னுடன் சேர்ந்து வாழ்வதை விட
உன் நினைவுகளுடன் வாழ்வதே
சிறந்தது…!

உன்னை நான் வெறுக்கவில்லை
எந்த உரிமையில் வெறுப்பது?
அன்பு, பாசம், நேசம், காதல்
அத்தனையும் புரிய வைத்தவன் நீயல்லவா?
எனக்குப் புரிய வைத்த உனக்கு
என்னைப் புரிந்துக்கொள்ள முடியவில்லையே
வேடிக்கையாகத்தான் இருக்கின்றது;
எனது வாழ்க்கையே…!

நீ இல்லாத வாழ்க்கை
நினைக்கக் கூட முடியவில்லை
நினைத்துப் பார்க்கிறேன்; அழுது பார்க்கிறேன்
அனைத்தும் மறந்து சிரித்துப் பார்க்கிறேன்
என்னையே வெறுத்து நடித்துப் பார்க்கிறேன்
உலகமே நாடக மேடையாமே…?
நடிப்பதற்குத் தயாராக நான்
பாத்திரம்தான் தெரியவில்லை!

திங்கள், 17 நவம்பர், 2008

அவளும் இவளும்…


அன்று மைதீட்டிய கண்களுடன்
அபிநயம் பிடித்தாள் அவள்
இன்று கண்களில் வெறியுடன்
ஆயுதம் ஏந்துகிறாள் இவள்!

வாரி பின்னிய அவள் கூந்தலில்
சரம் சரமாய் மல்லிகை
இவளின் செம்பட்டை கூந்தலில்
விதவிதமாய் காட்டுச் செடிகள்!

அவளின் காசு மாலையும் ஒட்டியானமும்
பார்ப்போரை மயக்கங்கொள்ள வைத்தன
இவள் அணிந்திருக்கும் துப்பாக்கிக் குண்டுகளோ
காண்போரை பீதிக்கொள்ள வைக்கின்றன!

கைவளையல் குலுங்க பட்டாடை பளபளக்க
அன்ன நடையிட்டாள் அவள்
காக்கிச் சட்டையுடன் துப்பாக்கி வெடிவெடிக்க
சீறி வருகிறாள் இவள்!!

அன்று புலியிடம் போரிட்டாள்
அவளாகிய புறநானூற்று மங்கை
இன்று புலியாகிப் போரிடுகிறாள்
என் தமிழீழத் தங்கை!

புதன், 12 நவம்பர், 2008

மகாகவி பாரதியும், புரட்சிக்கவி பாரதிதாசனும்




முன்னுரை:
1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி எட்டயபுரத்தில் சின்னச்சாமி ஜயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். ஜந்து வயதாக இருக்கும் போதே தாயாரை இழந்துவிட்டார். இவர் இந்த மண்ணில் வாழ்ந்ததோ 39 ஆண்டுகள் மாத்திரமே. ஆனாலும் இந்தக் குறுகிய கால வாழ்வில் இவர் சாதித்தவையே இவரை மகாகவியாக இனம்காண வைத்தன. "கலைத் துறையில் துணிவோடிருப்பது மிகவும் அவசியம். இல்லாவிட்டால் அற்பமானவற்றைத் தவிர வேறு எதையும் நீங்கள் படைத்துவிட முடியாது " என்று கூறினார் லியோ டால்ஸ்டாய். பாரதியிடம் இருந்த துணிவாற்றலே தன் சாதியையும் சமுகத்தையும் எதிர்த்து நின்று கவிதைபாட முடிந்தது. பாரதி 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார்.

1891 ஆண்டு ஏப்ரல் 29, அறிவன் (புதன்) இரவு பத்தேகால் மணிக்குப் புதுவையில் சுப்புரத்தினம் பிறந்தார். இவரது தந்தை கனகசபை, தாய் இலக்குமி. உடன்பிறந்தோர் தமையன் சுப்புராயன். தமக்கை சிவகாமசுந்தரி. தங்கை இராசாம்பாள் ஆவர். 1895 ஆண்டு ஆசிரியர் திருப்புளிச்சாமி ஐயாவிடம் தொடக்கக் கல்விக் கற்றார். இளம் அகவையிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றார். பாட்டிசைப்பதிலும் நடிப்பதிலும் ஊரில் நற்பெயர் பெற்றார். பத்தாம் அகவையிலேயே சுப்புரத்தினத்தைப் பெற்றதால் புகழ் பெற்றது புதுவை. புதுவை அருகில் உள்ள சாரம் முதுபெரும் புலவர் (மகா வித்துவான்) பு.அ. பெரியசாமியிடமும் பின்னர் பெரும் புலவர் பங்காரு பத்தரிடமும் தமிழ் இலக்கண இலக்கியங்களையும் சித்தாந்த வேதாந்த பாடங்களையும் கசடறக் கற்றார். மாநிலத்திலேயே முதல் மாணவராகச் சிறப்புற்றார். 1909 ஆம் ஆண்டு புலவர் சுப்புரத்தினத்தை வேணு "வல்லூறு" வீட்டுத் திருமணத்தில் பாரதியார் காணும் பேறு பெற்றார். பாரதியாரின் தேர்வு எடையில் நின்றார்; வென்றார். நட்பு முற்றியது. பாரதியாரின் எளிய தமிழ், புலமை மிடுக்கேறிய சுப்புரத்தினத்தைப் பற்றியது. பாரதியின் மேல் கொண்ட ஈடுபாட்டால் தன்னை ‘பாரதிதாசன்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர் புரட்சிக்கவிஞர் என பெரியாரால் அழைக்கப்பட்டார். 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் இறைவனடிச் சேர்ந்தார்.

பாடுபொருள்:
பாரதியார்

தேசபக்தி , சர்வதேசியத்துவம் , சுதந்திரம் , சமுக நீதி , மற்றும் மொழியை ஜனநாயகமாக்குவது , கவிதை மற்றும் வசனத்தின் நடையை ஜனரஞ்சகமாக்கவது போன்ற கருத்துக்கள் யாவுமே பாரதியின் பெயரோடு சம்பந்தப்பட்டவையேயாகும். இவரது அற்புதமான ஞானரதம் என்னும் படைப்பு இதற்கு சான்றுபகர்கின்றது. தேசபக்தியே தெய்வபக்தியாகி தேசத்தின் விடுதலையே எல்லாவிடுதலைகளுக்கும் ஆதாரம் என்பதில் பாரதி என்றுமே தளம்பியதில்லை. தேசபத்தி பாரதியாரின் பெரும்பாலான கவிதைகளில் பாடுபொருளாக அமைந்துள்ளது. சமயம், நீதிநெறிகள் ஆகிய இரண்டு துறைகளில் மட்டுமே விளங்கி வந்த தமிழ்க் கவிதையைப் பல துறைகளையும் உள்ளடக்கியதாக ஆக்கினார். இதனால் தமிழ்க்கவிதையின் பாடுபொருளின் எல்லை விரிவடைந்தது. கவிதை இலக்கியம் சமுதாயத்தைத் தழுவுகின்ற ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தினார்.

பாரதிதாசன்
பாரதியைப் போன்றே பாரதிதாசனும் இலக்கியம் பற்றிய பாடல்கள், அரசியல், பொருளாதாரம், சமுதாயம், தமிழ்மொழி என விரிந்த தளத்தில் செயல்பட்டுள்ளார். தமிழர்களுக்குப் புதிய ஆவேசக்கனலை ஏற்றவும், தமிழ் உலகமொழி ஆகவும், தமிழர் கூட்டம் உலகில் புகழ்பெற்று விளங்கவும் பாடுபட்டவர் பாரதிதாசனாவார். பாரதியைக் குருவாகக் கொண்டு வளர்ந்த பாரதிதாசன், தனக்கென்று தனிக்கொள்கைகளை வகுத்துக்கொண்டு சுதந்திரமாகப் பாடும் வல்லமைப் பெற்றிருந்தார்.

1) கடவுள் நம்பிக்கை
பாரதியார் ஆத்திகன். பாரதி எல்லா செயல்களுக்கும் துணையாகக் கடவுளின் அருளை வேண்டுகிறார். இவர் பெருமளவில் பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார். பராசக்தியிடம் பாரதி வரம் வேண்டும் காட்சி தமிழ் இலக்கியத்தில் தரமான இடத்தைப் பெற்றுள்ளது[1].

காணிநிலம் வேண்டும் – பராசக்தி
காணிநிலம் வேண்டும்

என்று பாரதியார் இவ்வுலக வாழ்க்கைக்காக பராசக்தியிடம் வேண்டுகிறார். அதுமட்டுமின்றி,

நம்பினார் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு
அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிகவரம் பெறலாம்

என்றும் பாரதியார் பாடியுள்ளார். இவ்வுலக வாழ்க்கைக்கு கடவுளின் அருள் என்றென்றும் வேண்டும் என்பதனை வலியுறுத்திப் பாரதி பல பாடல்கள் பாடியுள்ளார்.

அடிப்படையில் பாரதிதாசன் நாத்திகன் என்ற கருத்து பரவலாக உள்ளது. இது முற்றுலும் தவறு. பாரதிதாசனும் கடவுள் நம்பிக்கை உடையவரே.

ஓர்கடவுள் உண்டு – தம்பி
உண்மை கண்ட நாட்டில்
உள்ளதொரு தெய்வம் – அதற்கு
உருவம் இல்லை தம்பி

என்று பாரதிதாசன் கடவுள் இருப்பதை ஒப்புக்கொள்கின்றார். அவர் கடவுள் என்ற பெயரால் மக்களிடம் விளங்கி வந்த மூடநம்பிக்கையையும், அனைத்தையும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்ற அலட்சிய போக்கையுமே கடுமையாகச் சாடியுள்ளார். சமுதாயத்தில் மக்கள் எதற்கெடுத்தாலும் கடவுளின் பெயரைச் சொல்லுகிறார்கள். கடவுள் பெயரை மக்கள் சொல்லுவதற்கு முன்பு நாட்டில் பொருள்களெல்லாம் பொதுவுடைமையாக இருந்தன. மக்கள் செம்மையாக வாழ்ந்தனர். ஆனால், ‘கடவுள்’ என்ற பெயர் தோன்றிய பிறகு உலகில் ‘கடையர்’ ‘செல்வர்’ என்ற வேறுபாடு தோன்றியது என்பதனை பாரதிதாசனின் ‘தளை அறு’ என்ற கவிதையில் கீழ்க்கண்ட வரிகளில் காண முடிகின்றது[2].
கடவுள்கடவுள் என்றெதற்கும்
கதறுகின்ற மனிதர்காள்!
கடவுள்என்ற நாமதேயம்
கழறிடாத நாளிலும்
உடைமையாவும் பொதுமையாக
உலகுநன்று வாழ்ந்ததாம்;
"கடையர்ரு"செல்வர்" என்றதொல்லை
கடவுள்பேர் இழைத்ததே!

2) இயற்கை
பாரதியார் இயற்கையோடு இணைந்து வாழ்ந்துள்ளார். எனவே அவர் இயற்கையையும் மனிதர் வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்தி பாடியுள்ளார்.

அக்கினிக் குஞ்சொன்றுக் கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் ;
வெந்து தணிந்தது காடு; - தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

என்று பாடுகிறார். அதுமட்டுமின்றி, சிற்றெறும்புகளைக் கூட உன்னிப்பாக கவனித்துப் பாரதி கீழ்க்கண்டவாறு புதுக்கவிதை எழுதியுள்ளார்.

சிற்றெறுப்பைப் பார்
எத்தனைச் சிறியது!
அதற்குள்ளே கை, கால், வயிறு எல்லா அவயங்களும்
கணக்காக வைத்திருக்கிறது.

பாரதிதாசனும் மயில், சிரித்த முல்லை, உதய சூரியன், காடு, கானல், மக்கள் நிலை, காட்சி இன்பம் என்று இயற்கைப் பாட்டுக்கள் பாடியுள்ளார். தமிழில் இயற்கைப்பாடல்களைத் தனியாகப் பாடி, அதனைத் தனியொரு துறையாகவே வளர்த்த பெருமை பாரதிதாசனையே சேரும். இவர் இயற்கையை இயற்கைக்காகவே என்று கருதிப் பாடினார். ‘மயில்’ என்ற தலைப்பில் பாரதிதாசன் கீழ்க்கண்டவாறு கவிதை படைத்துள்ளார்.

அழகிய மயிலே! அழகிய மயிலே!
அஞ்சுகம் கொஞ்ச, அமுத கீதம்
கருங்குயி லிருந்து விருந்து செய்யக்
கடிமலர் வண்டுகள் நெடிது பாடத்
தென்றல் உலவச் சிலிர்க்கும் சோலையில்
அடியெடுத் தூன்றி அங்கம் புளகித்
தாடுகின்றாய் அழகிய மயிலே!

3) தமிழ்
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல
இனிதாவது எங்கும் காணோம்

என்று பாரதியார் தமிழைப் பாடினார். தமிழின் சிறப்பைத் தமது கவிதையின் மூலம் பாமர மக்களும் உணரும் வகையில் பாரதி மிக அருமையாகப் பாடினார்.

பாரதியையும் மிஞ்சி தமிழைப் பாடியவர் பாரதிதாசன். அவருக்குக் காணும் எல்லாம் தமிழாகத் தெரிந்தது. தமிழின் இனிமை, இன்பத் தமிழ், தமிழ் உணவு, தமிழ்ப் பேறு, எங்கள் தமிழ், தமிழ் வளர்ச்சி, தமிழ்க் காதல், எந்நாளோ, சங்க நாதம், தமிழ்க் கனவு என்று தமிழை மையமாகக் கொண்டு கவிதைகள் புனைந்தார். கனி, கரும்பு, தேன், பாகு, பால், இளநீர் போன்ற பொருள்கள் இயற்கையில் இனிமை பயப்பன, சுவையுடையன. ஆனால், அவற்றை விடத் தமிழ் சிறப்புடையது என்று மொழியின் இனிமையைப் பாரதிதாசன் பின்வருமாறு பாடுகிறார்[3].

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சும்
பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன்
4) காதல்
பாரதியார் காதலை பற்றியும் பாடியுள்ளார். இவர் தனது கனவில் வாழும் காதல் நாயகிக்கு ‘கண்ணம்மா’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். ‘கண்ணம்மாவின் காதல்’, ‘கண்ணம்மா என் காதலி’ என்ற தலைப்புடைய கவிதைகளையும் பாரதி படைத்துள்ளார். கீழ்வரும் கவிதை வரிகள் பாரதியின் காதல் வரிகளில் அடங்கியதாகும்.

வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!
மாணுடைய பேரர சே! வாழ்வு நிலையே கண்ணம்மா![4]

பாரதிக்கு இணையாக பாரதிதாசனும் காதலை பாடியுள்ளார். மாந்தோப்பில், காதற் கடிதங்கள், காதற் குற்றவாளிகள், எழுதாக் கவிதை, காதற் பெருமை, காதலைத் தீய்த்த கட்டுப்பாடு, தலைவி காதல், விரகதாபம் என்ற தலைப்புகளில் பலவாறாகக் காதலைப் பாடியுள்ளார்.

5) பெண்ணடிமை
பாரதியார் பெண்ணடிமைத் தனதிற்கு எதிராகக் குரல் கொடுக்கின்றார். எந்தவொரு நாட்டில் பெண்ணடிமைக் காணப்படுகிறதோ, அந்த நாடு முன்னேறாது; அதனால்தான் இந்தியா அடிமையானது போன்ற கருத்துக்களை ‘பாஞ்சாலி சபதம்’ என்னும் தமது காவியத்தின் வழி உணர்த்துகிறார். அறிவுகொண்ட பெண்ணினத்தை அடிமை கொள்ள நினைக்கும் ஆணினம் பித்தயினம் என்று சீறுகிறார்[5]. அதுமட்டுமின்றி தனது ‘பெண்கள் விடுதலைக் கும்மி’ என்ற பாடலில், பெண்ணடிமைத்தனத்தைப் பற்றி பின்வருமாறு பாடுகின்றார்.

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்

பாரதிதாசனும், பெண்ணடிமைத்தனத்தைக் கடுமையாகச் சாடுகின்றார். பாரதிதாசன் பெண்களைப் பற்றி பலவாறாக விரிவாகப் பேசுகின்றார். கைம்மைப் பழி, கைம்மைக் கொடுமை, மூடத் திருமணம், கைம்பெண் நிலை, கைம்மைத் துயர், கைம்மை நீக்கம் என்று அதிக அளவில் இவர் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையைப் பாடியுள்ளார். இந்தியாவில் நிலவிய ஆணாதிக்க மனப்பான்மையும், சமூக, அரசியல், பொருளாதார, சொத்து, கல்வி உரிமைகள் பெண்களுக்கு மறுக்கப்பட்டு வந்ததாலும் பெண் விடுதலை வேண்டி பாரதிதாசன் கவிதைகள் படைத்துள்ளார்[6]. பொருத்தமில்லா மூடத்திருமணங்களால் பெண் சமுதாயம் சீரழிந்துள்ளது. வயதாலும், அறிவாலும், உடலாலும், உள்ளத்தாலும் சிறிதும் பொருத்தமில்லாத ஒருவனுக்கு ஓர் இளம் பெண்ணைத் திருமணம் செய்து வைப்பது பொருந்தாத் திருமணம் ஆகும்[7]. பெண்களுக்கு எதிராக நடக்கும் பொருந்தா மணத்தைப் பற்றியும் பின்வருமாறு பாடுகிறார்.

மண்ணாய்ப் போக , மண்ணாய்ப் போக
மனம்பொருந்தா மணம் மண்ணாய்ப் போக
சமுகச் சட்டமே, சமுக வழக்கமே
நீங்கள் மக்கள் அனைவரும்
ஏங்காதிருக்க மண்ணாய்ப் போகவே.

6) சாதி எதிர்ப்பு
பாரதியார் சாதி மத வேற்றுமைகளைக் களைய பெரிதும் பாடுபட்டார். அவர் தமது பாடல்களில் சமத்துவத்தை நிலைநாட்ட முயன்றார். தனது ‘வந்தேமாதரம்’ என்ற கவிதையில் கீழ்கண்டவாறு பாரதி சமத்துவத்தைப் பாடுகிறார்.

ஜாதி மதங்களைப் பாரோம் -
உயர் ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே -
அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே.

பாரதியாரைப் போலவே பாரதிதாசனும் சாதி மத பேதங்களை வெறுத்தார். சாதிக் கொடுமையைப் பற்றி இவர் பாடும் போது சொற்களில் அதிக அளவில் கனல் வீசுவதை நம்மால் உணரமுடிகின்றது. மக்களின் அறிவொளியைக் கெடுத்து இருண்ட உலகத்திற்கு அனுப்புவது சாதி. சாதியைப் பற்றி பேசுகிற மக்களும் அறிவு வெளிச்சம் இல்லாதவர்களாகவே உள்ளனர். பாவேந்தர் உணர்ச்சி வேகத்தோடு சாதியினால் ஏற்படும் குறையை,

இருட்டறையில் உள்ளதடா உலகம்; சாதி
இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே

என்று சுட்டிக்காட்டுகிறார்[8]. சமுதாய முன்னேற்றத்திற்குச் சாதி தடையாக இருந்து வருகிறது என்று பாவேந்தர் குறிப்பிடுகின்றார்.

இலக்கிய வகைகள்
மகாகவி பாரதியார் கவிதை, கட்டுரை, நாவல் போன்ற இலக்கியங்களைப் படைத்துள்ளார். இவர் சுய சரிதை, தேசிய கீதங்கள், பல்வகைப் பாடல்கள், தோத்திரப் பாடல்கள், பகவத் கீதை முன்னுரை, கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், சந்திரிகையின் கதை, பாப்பாபாட்டு ஆகியவை இவரது கைவண்ணத்தில் உருவான படைப்புகளாகும். கவிதை புனைவதில் பெயர்போன பாரதி நாவல்களும் எழுதியுள்ளார். ஐடவல்லவன் ஜெயலட்சுமி, நவநீதம், விஜயபாஸ்கரன் அல்லது ஒரு குற்றத்திற்கு ஒன்பது குற்றம், ஷண்பகவிஜயம் ஆகியவை பாரதியாரின் நாவல் படைப்புகளாகும்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதை, நாடகம், திரை வசனம், சிறுகதை, கட்டுரை ஆகிய இலக்கிய வகைகளைப் படைத்துள்ளார். ஼மயிலன் சுப்பிரமணியர் துதியமுது, சஞ்சீவி பர்வதத்தின் சாரல், எதிர்பாராத முத்தம், அழகின் சிரிப்பு, குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, தமிழ் இலக்கியம், இந்தி எதிர்ப்புப் பாடல்கள் ஆகியவை இவரது படைப்புகளில் அடங்கும். பாரதிதாசனின் கவிதைகளைக் காதல் பாடல்கள், இயற்கைப் பாடல்கள், சீர்த்திருத்தப்பாடல்கள் என்று முப்பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

பார்வை
மகாகவி பாரதியார், கவிஞன் என்பவன் தன் நாட்டு எல்லையோடு நின்றுவிடாமல் வெளியுலகையும் பார்க்க வேண்டும் என்கிறார். உலகில் நடைபெறும் மாற்றங்களையும் முக்கிய நிகழ்வுகளையும் கவிதைகளில் காட்ட வேண்டும் என்கிறார். பாரதியாரின் பார்வையும் இந்தியா என்ற எல்லைக்குள் நின்றுவிடாமல் ரஷ்ய புரட்சி, பெல்ஜிய அரசியல் என்று உலகம் முழுவதும் பரவலாகப் பட்டது. பிற நாட்டு இலக்கியங்களையும் பாரதியார் மொழிப்பெயர்த்தார். ரஷ்யாவில் ஜார் மன்னர் வீழ்ச்சி பெற்றதைப் ‘புதிய ரஷ்யா’ எனுன் தலைப்பில் பாரதியார் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாரதிதாசனின் பார்வையோ தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ் நாடு என்ற குறுகிய வட்டத்துக்குள்ளேயே நின்றுவிட்டது. தமிழ் பாரதிதாசனின் உயிர் மூச்சாக இருந்தது. ஒரு மனிதனுக்கு மொழிதான் உயிர் மூச்சாகவும், உணர்வாகவும், வாழ்வாகவும், இன்பமாகவும் அமைகிறது என்று பாரதிதாசன் கூறுகின்றார்[9]. இவரின் பார்வை கைம்மை நிலை, இயற்கை, காதல், சீர்த்திருத்தம் என்ற வகையில் விரிந்தது. பாரதிதாசன் தமிழ்த்தேசியத்தை வலியுறுத்தினார். பிறநாடுகளைப் பற்றி அதிகம் அக்கறைக்கொள்ள வில்லை. தமிழினப் பற்று இவரிடம் அதிகம் காணப்பட்டது.

அணுகுமுறை
பாரதியாரின் பாடல்களில் புரட்சி இருந்தது. அவர் உணர்ச்சிகரமானப் பாடல்கள் புனைந்தார். இருப்பினும் அவரது புரட்சி கட்டுக்குள் இருந்தது. பாரதியார் மக்களிடையே தேசிய உணர்வினை வலுப்படுத்த சுதந்திர உணர்ச்சியைக் கவிதைகளில் ஊட்டினார். கவிஞன் என்பவன் சமுதாயத்தீன் ஒரு கூறு என்பதை மக்களுக்கு உணர்த்தினார். பாரதி கவிதை புனைவதை தமது தொழிலாகவே கொண்டார். சமுதாயத்திற்குத் தன்னம்பிக்கையையும் ஊக்கத்தையும் ஊட்டுவதற்குக் கவிதைகளைப் பயன்படுத்தினார். அதுமட்டுமின்றி, உள்ளத்திலிருந்து பொங்கியெழும் உணர்ச்சிகளுக்கு முதன்மை தந்து கவிதைகளைப் படைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
புரட்சிக்கவிஞர் என்றாலே அது தன் ஒருவனையே குறிக்குமாறு தமிழ் இலக்கிய வரலாற்றில் புரட்சிகரமானப் படைப்புகளை உருவாக்கியவர் பாரதிதாசன். இவரது பாடல்களில் ஆத்திரமும் ஆவேசமும் கலந்திருக்கும். இவரது கவிதைகளில் அனல் தெறிக்கும். பாரதிதாசன் சமுதாயக்குறைபாடுகளை அடியோடு அழிக்க வேண்டும் என்று உணர்ச்சிகரமாகப் பாடுகிறார். சாதி, சமயம், கடவுள் ஆகியவற்றின் பெயரால் நடத்தப்படும் மூடப்பழக்க வழக்கங்களை எல்லாம் ஒருசேர அழித்துவிட வேண்டும் என்கிற ஒருவித வெறி அவரிடம் காணப்படுகிறது. சமுதாயப் பிரச்சனைகளைக் காட்டுவதில் ஒரு வேகத்தையும் ஆவேசத்தையும் உடையவராகப் பாரதிதாசனை அவரது பாடல்களில் அடையாளம் காண முடிகிறது.

முடிவுரை
மகாகவி பாரதியார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆகிய இருவரையும் ஒப்பிடுகையில், இவ்விருவருக்கும் அதிக அளவில் வேறுபாடு எதுவும் காணப்படவில்லை. பாடுபொருள், இலக்கிய வகைகளில் இவ்விருவருக்கும் அதிக அளவில் ஒற்றுமையையே காண முடிகின்றது. பார்வை, அணுகுமுறையை ஒப்பிடுகையில் இவர்களிடையே சிறிது வேறுபாடு உள்ளதை அறிய முடிகிறது. எனிலும், தமிழ்கூறு நல்லுலகிற்கு இவர்கள் இருவரும் ஆற்றிய தொண்டு அளப்பெரியது. இவர்களது படைப்புகள் காலத்தால் அழியாதது என்றால் அது மிகையாகாது.



[1] வி. கு. சந்திரசேகரன், பாடிப் பறந்த குயில், மலர்விழிப் பதிப்பகம், கோலாலும்பூர், 1982, பக். 38.
[2] முனைவர் நா. வேலுசாமி, பாரதிதாசன் கவிதைகளில் பகுத்தறிவு அழகியல், தி பார்க்கர், சென்னை, 2003, பக். 213.
[3] முனைவர் நா. வேலுசாமி, பாரதிதாசன் கவிதைகளில் பகுத்தறிவு அழகியல், தி பார்க்கர், சென்னை, 2003, பக். 90.
[4] விகரு. இராமநாதன், மகாகவி பாரதியார் கவிதைகள், ஼ இந்து பப்ளிகேஷன்ஸ், 1992, பக். 335.
[5] வி. கு. சந்திரசேகரன், பாடிப் பறந்த குயில், மலர்விழிப் பதிப்பகம், கோலாலும்பூர், 1982, பக். 31.
[6] முனைவர் மு. அருணாசலம், ரூசோவும் பாரதிதாசனும், தி பார்க்கர், சென்னை, 2004, பக். 128.
[7] முனைவர் நா. வேலுசாமி, பாரதிதாசன் கவிதைகளில் பகுத்தறிவு அழகியல், தி பார்க்கர், சென்னை, 2003, பக். 163.
[8] முனைவர் நா. வேலுசாமி, பாரதிதாசன் கவிதைகளில் பகுத்தறிவு அழகியல், தி பார்க்கர், சென்னை, 2003, பக். 131.
[9] முனைவர் நா. வேலுசாமி, பாரதிதாசன் கவிதைகளில் பகுத்தறிவு அழகியல், தி பார்க்கர், சென்னை, 2003, பக். 268.

செவ்வாய், 11 நவம்பர், 2008

தமிழனே…

தமிழனே
ஏனடா உறங்குகின்றாய்
விழித்திட நேரம் வரவில்லையோ? -அல்ல
விழித்திடும் எண்ணம் உனக்கில்லையோ?

நீண்ட காலம் உறங்குவதால்
கனவுகள் மட்டுமே காணுகின்றாய்
சீக்கிரம் நீ விழித்தால்தான்
கனவுகள் நனவாய் ஆகுமடா!

தரம் கெட்டுப் போகின்றாய்
தண்டச் சோறாய் திரிகின்றாய்
பெரியவர் பேச்சை மதிக்காமல்
தெருவில் ஆட்டம் போடுகின்றாய்!

தமிழில் பேச தயங்குகின்றாய்
'தமிங்கிலம்' பேசி அலைகின்றாய்
தமிழன் என்று சொல்வதற்கே
வெட்கித் தலை குனிகின்றாய்!

அறைகுறை ஆடையில் திரிகின்றாய்
பாரம்பரியம் மறந்து விட்டாய்
கொஞ்சம் கோபம் வந்தாலும்
கையில் ஆயுதம் ஏந்துகின்றாய்!

ஒற்றுமையை மறந்துவிட்டாய்
சுயநலவாதியாய் ஆகிவிட்டாய்
பெற்ற தாயை மதிக்காமல்
முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டாய்!

காதல் செய்கிறாய்
கவலைக் கொள்கிறாய்
தற்கொலையும் இங்கு பெருகுதடா
இதை உணர வைப்பது யாரடா?

சூது செய்கிறாய்
சூழ்ச்சி செய்கிறாய்
'நண்டு கதையாய்' இருக்குதடா
மண்டாய் போனாய் தமிழனடா!

பேதம் பார்க்கிறாய்
ஜாதி பார்க்கிறாய்
வேடிக்கையாக இருக்குதடா
யாருக்கு இதனால் லாபமடா?

சீக்கிரம் விழியடா
நிலமையை உணரடா
நம்மினத்தின் நிலையை
சிந்தித்துப் பாரடா!

காலம் தாழ்த்தினால்
கடமை தவறினால்
இழப்பே வாழ்க்கை ஆகுமடா
இனமே அழிந்து போகுமடா!

உறங்காதே
தமிழா உறங்காதே
ஏதும் அறியாமல் உறங்காதே
உறக்கத்தில் வாழ்க்கையை இழக்காதே!