வெள்ளி, 19 ஜூன், 2015

திறந்த மேனியும் திறந்த மடலும்...



வணக்கம். என் பெயர் பவனேஸ்வரி துரைசிங்கம். சிலருக்கு என்னைத் தெரிந்திருக்கும். பலருக்கு என் பெயரைத் தவிர புகைப்படமே நினைவிலிருக்கும். இந்த மடலை நான் பல வருடங்களுக்கு முன்னரே எழுதியிருக்க வேண்டும். எனது பலவீனமான இதயமும், எதிர்ப்பார்க்காத துரோகமும், எதிர்க்கொள்ளமுடியா வலியும் எம்மை இத்தனைக் காலமும் முடக்கிப்போட்டுவிட்டன. அதுமட்டுமின்றி, சிறு வயது முதலே வலிகளையும் வேதனைகளும் எமக்குள்ளேயே முடக்கி அதுவே பழக்கமாகியும் போய்விட்டது. இன்று (ஜூன் 19) என் அண்ணனின் பிறந்தநாள். மரணத்தைவிட கொடியது வேறென்ன இருக்க முடியும்? எதுவுமே இல்லை என்பதை இந்த வேளையில், இந்த நொடியில் நான் உணர்கிறேன். மரணத்தை ஒப்பிடும் போது என்னுடைய அனைத்து வலிகளுமே அர்த்தமற்றவையாய் போய்விடுகின்றன.

உங்களுக்கெல்லாம் நான் நடந்த உண்மைகளைக் கூற கடமைப்பட்டுள்ளேன். ஏன் இத்தனைக் காலம் இதனைக் கூறவில்லை என நீங்கள் கேள்வி எழுப்பலாம். என் துன்பம் என்னோடு போகட்டும் என்ற மனநிலையும், என்னை எதற்காக யாரிடம் நிரூபிக்க வேண்டும் என்ற அலட்சியமும், என் சொந்தங்கள் இதனைப் படிக்க நேரிட்டால் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற அச்சமுமே இத்தனை நாட்களும் என்னை அடக்கிவைத்தன. காலப்போக்கில் எல்லாம் ஆறிவிடும், மாறிவிடும் என்பார்கள். இணையம் என்ற ஒன்று இருக்கும் வரை இந்தப் புகைப்படங்களும், புனைக்கதைகளும் தொடர்ந்துக்கொண்டே இருக்கும் என்கிற உண்மை அறிந்ததால் இருக்கும் சந்ததியினருக்கும், இனி வரப்போகும் தலைமுறைக்கும் விளக்கம் கூற விரும்புகிறேன்.
என்னை விமர்சிப்பதற்கு முன்பு முடிந்தால் என்னை அறிந்துக்கொள்ள முற்படுங்கள். தாய்வழி ஈழமாகவும், தந்தைவழி இந்தியமாகவும், இரு நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டு மலேசியத் திருநாட்டில், இரு சகோதரர்களைக் கொண்டு, கடைப்பெண்குட்டியாகப் பிறந்தவள் நான். கடைக்குட்டி என்பதால் செல்லமாக வளர்ந்தவள், புத்திக்கெட்டுவிட்டாள் என உடனே யாரும் முடிவுக்கு வரவேண்டாம். ஐந்து வயதிலேயே தாய் தந்தையர் பிரிவால் பாட்டி வீட்டில் வளர்ந்தேன். அக்காலக்கட்டத்தில் கூட்டுக்குடும்பங்கள் அதிகமிருந்ததால் அங்கும் செல்லம் கொஞ்சுவதற்கு யாரும் இல்லை. எனக்குப் பாட்டி வீடு ஒன்று என்றாலும் அந்த பாட்டி தாத்தாவிற்குப் பேரப்பிள்ளைகள் அதிகமல்லவா? வீட்டிற்கு வரும் உறவினர் முதல் அயலார் வரை, “அம்மா பார்க்கலையா? அப்பா வரலையா?” என்று கேட்கும் போதெல்லாம் எங்கேயாவது குழித்தோண்டி என்னைப் புதைத்துக்க்கொள்ளலாமா என்று தோன்றும். நல்ல வேளையாக என்னைத் தமிழ்ப்பள்ளியில் சேர்ந்தார்கள். தாயில்லா குறையைத் தமிழ்த் தீர்த்தது.  தமிழ் எனக்கு அனைத்தும் கற்றுக்கொடுத்தது. பள்ளியிலேயே அதிக நூல் வாசித்ததற்கான பரிசு என்றும் எனக்கே உரித்தானது. அவ்வளவு பைத்தியமாக இருந்தேன். தமிழாசிரியர்களுக்கு நான் என்றுமே செல்லப்பிள்ளை. எனது வாசிப்பின் பயன் எழுத்திலும் பிரதிபலித்தது.

எனது தமிழாசிரியர் தயவால் 14 வயதிலேயே எனது முதல் சிறுகதை மலேசிய நாளிதழில் வெளிவந்து பலரது பாராட்டையும் ‘இளம் எழுத்தாளர்’ என்ற பட்டத்தையும் பெற்றுத்தந்தது. தமிழே எனக்குப் பேரும் புகழையும் பெற்றுத் தந்தது. அதனால் நான் தமிழை அளவு கடந்து நேசித்தேன். தமிழர்களையும், தமிழ், தமிழர்களுக்காகப் போராடும் விடுதலைப்புலிகளையும் நேசித்தேன். இறக்கும்வரை என்னுடனேயே இருக்க வேண்டும், இறந்த பின்னும் என்னுடனேயே வேக வேண்டும் என்பதற்காகவே விடுதலைப் புலிகளின் சின்னத்தை என் முதுகில் பச்சைக்குத்திக்கொண்டேன். 2009 இறுதிப் போருக்குப் பின்னர் இலங்கைச் சென்று அங்கு வாழும் தமிழர்களின் நிலையையும், சிங்கள் இராணுவத்தினரின் கொடுங்கோலையும் நேரிடையாகக் கண்ட பின்னரே ‘எனக்கென்ன பயம்?’ என்ற திமிரில் குத்திக்கொண்டதுதான் இந்தப் பச்சை. விடுதலைப்புலிகளைப் பற்றி பேசுவதற்கே அச்சம் கொண்டிருந்த வேலையில், ‘ஒரு பெண்ணாகிய நான் எம்மினத்தின் சின்னத்தைப் பச்சைக் குத்தியிருக்கிறேன் பார்’ என்ற ஆணவத்திமிரில் செய்தது.

அப்பொழுதெல்லாம் காலையிலேயே முகநூலில் ஈழம் தொடர்பான சண்டைதான் நடக்கும். இறுதிக்கட்ட யுத்தத்தில் நடந்தவைகளைப் பற்றிய விவாதங்கள் இரவுவரை நீண்டுக்கொண்டே போகும். அப்பொழுதுதான் தன்னை ‘கரும்புலி’ படையைச் சார்ந்தவன் என்று அடையாளைப்படுத்திக்கொண்ட கயவனிடம் காதல் கொண்டேன். யார் அன்பைப் பொழிந்தாலும் மயங்கிவிடுபவள் நான். அது எனது பலவீனம் என்றுக்கூட சொல்லலாம். எனது நட்புவட்டம் அப்பொழுது பெரியது என்றே சொல்ல வேண்டும். என்னையும் மதித்துத் தகவல்களையும் கருத்துக்களையும் பரிமாறிக்கொள்ள ஒரு கூட்டம் இருந்தது. குளிர்சாதன அறையில் அமர்ந்தது இணையத்தில் மட்டும் ஈழத்திற்காகக் குரல் கொடுப்பவள் என்றுமட்டும் எண்ணிவிட வேண்டாம். ஈழத்தில் நடந்த இனப்படுக்கொலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டி ஐ.நாவிற்கு அனுப்புவதற்காக ஐயாயிரம் கையெழுத்துக்களை ஒரே ஆளாகப் பெற்றுத் தந்திருக்கிறேன். வேலை முடிந்து, தெருத்தெருவாக அலைந்து, ஈழம் என்றால் என்னவென்றே அறியாதவர்களிடம் அதனை விளக்கி, அவர்களின் அலட்சியமான பார்வைக்கும் ஏளனமான நகைப்புக்கும் இலக்காகியிருக்கிறேன். ‘முதலமைச்சர் அலுவலகத்தில் பணி செய்யும் உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை’ என்று பலர் என் முகத்துக்கு நேரே கேட்டிருக்கின்றனர். ‘இதனால் உனக்கு ஏதாவது வருமானம் வருகிறதா?’ என்று நாக்கூசாமல் கேட்டவர்களும் உண்டு. இதுமட்டுமன்றி தமிழகத்தில் நடந்த சில போராட்டங்களிலும் பங்கெடுத்துள்ளேன், தெரு ஆர்ப்பாட்டங்கள் உட்பட. ஒரு சமயம் கோலார் தங்க வயலில் நடைப்பெற்ற ‘நாம் தமிழர்’ கூட்டத்திற்கு முன்பு சீமானைச் சந்தித்து அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டேன். அதற்குப் பிறகு அவரை நான் சந்தித்தது எனது திருமண வரவேற்பில். இவையனைத்தும் நான் வெளியில் கூறி விளம்பரம் தேட விரும்பவில்லை. இப்பொழுது கூட இதனை நான் கூறுவதன் நோக்கம், எனது உணர்வின் புனிதத்தை வெளிப்படுத்தவே.

கரும்புலி என்று கூறிய கயவனைப் பற்றிச் சொன்னேன் அல்லவா? அவனுடன் சுமார் ஓராண்டு மேலாகவே பழக்கம். (பெயர் குறிப்பிட விரும்பவில்லை. அவன் இலண்டனில் வசிக்கிறான் என்பதை மட்டும் பதிவு செய்ய விரும்புகிறேன்). நல்லவனாகத்தான் தெரிந்தான். நாடுகடந்த தமிழீழ அரசின் அமைச்சர் ஒருவரும் அவனுக்கு நெருக்கம்தான். ஒரு காலகட்டத்தில் அவர்களுடன் இணைத்து சில பணிகள் செய்துள்ளேன். கவிதை எழுதுகிறேன் பேர்வழி என்ற தீக்கிரையான பெண்ணும், வாய்க்கூசாமல் தங்கை என்றழைத்த கயவனின் நண்பனும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது எனக்குக் காலம் கடந்தே தெரியவந்தன. இவர்களை நான் முழுமையாக நம்பினேன். சொந்தச் சகோதரன், சகோதரி போல் நட்பு பாராட்டினேன். சில காலங்கள் சென்ற பின்பு இவர்கள் நடவடிக்கைகளில் எனக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இலண்டனில் வருடந்தோரும் நடந்துவரும் மாவீர்ர் நினைவு தினத்தை இவர்கள் வேறு இடத்தில் கொண்டாட திட்டமிட்டனர். இதனால் ஈழத்தமிழர்களிடையே பிளவு ஏற்படக்கூடிய சூழல் இருந்தது. ஒரே நேரத்தில் எதற்காக இரண்டு இடங்களில் மாவீர்ர் தினம் கொண்டாட வேண்டும்? அதற்குப் பதில் ஏற்கனவே நடந்துவரும் இடத்திலேயே அனைவரும் ஒன்றுகூடினால் சிறப்பாக இருக்கும் என வாதிட்டேன். அன்று தொடங்கி எங்களுக்குள் சிறு சிறு கருத்துவேறுபாடுகள் உண்டாயின. இடையிடையே காதல் மழையும் தூறிக்கொண்டுதான் இருந்தது.

என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய பிழை, எனது அந்தரங்கப் புகைப்படங்களை நானே எடுத்தது. இரண்டாம் பிழை ‘பார்த்தவுடன் அழித்துவிடுகிறேன்’ என்று அவன் சொன்ன வாக்குறுதியை நம்பி அனுப்பியது. இவனைத் தானே திருமணம் செய்ய போகிறோம் என்ற குருட்டு நம்பிக்கையும் ஒரு காரணம். வெறும் படம்தானே இதில் என்ன இருக்கிறது என்ற அசட்டுத்தனமும் காரணம்தான். உலகத்தில் யார் யாரோ என்னென்னவோ செய்கிறார்கள். இந்தப் படங்களை அனுப்பிவிட்டு நான் படும் பாடு சொல்லில் அடங்காது. ஒருநாள், தமிழ்நாட்டு நண்பரிடமிருந்து அழைப்பு வந்தது. ”உன்னைப் பற்றிய செய்தியம்மா, காணக்கூடாத புகைப்படங்களுடன் வெளிவந்திருக்கிறது. யாருக்காவது உனது அந்தரங்கப் புகைப்படத்தை அனுப்பினாயா?” என்று கேட்டார். அதிர்ந்தேன். உடனடியாக அவைகளை எனக்கு அனுப்புமாறு கேட்டேன். அவரும் அனுப்பினார். ‘ஈழத்தமிழர்களிடம் பணம் பறிக்கும் பெண்’ என்ற தலைப்புடன் அவனுக்கு அனுப்பிய அத்தனைப் படங்களும் வந்திருந்தன..

தலை சுழன்றது. கதறியழுதேன். தேற்றுவதற்குக்கூட யாருமில்லை. யாரிடம் சொல்லி ஆறுதல் தேட? யாரை நம்பினேனோ அவனே என்னைக் கொன்று புதைத்துவிட்டானே? பூமி இரண்டாக பிளந்து என்னைத் தின்றுவிடக்கூடாதா என்று வேண்டினேன். உண்ணவில்லை, உறங்கவில்லை, அலுவலகமும் செல்லவில்லை. எனது நலன்விரும்பிகள் சிலர் தமிழ்நாட்டிலிருந்து எனக்குத் தொலைப்பேசி மூலமாக ஆறுதல் கூறிக்கொண்டே இருந்தனர். இவர்கள் மட்டும் ஏன் என்னை நம்புகின்றனர் என்றுகூட தோன்றியது. தமிழ் படித்தவள் நான், கவரிமானைப் பற்றியும் படித்திருக்கிறேன். மானம் போன பின் உயிர்வாழ ஆசை இருக்குமா? ’ஒருவனுக்கு மட்டும்’ என்று அனுப்பியதை ஊரே பார்க்கிறதே என்ற எண்ணம் என்னைக் கொன்று தின்றது. மற்றவர்கள் முகத்தில் எப்படி முழிப்பது என்று கூனி குறுகினேன். தற்கொலைக்கும் துணிந்தேன். சிறுவயது முதலே மருந்து மாத்திரைகள் உண்டு பழக்கமில்லாததால், விழுங்கிய அனைத்து மாத்திரைகளும் வாந்தியாய் வெளியேறின. நரம்பினை அறுத்துக்கொள்ளலாம் என்றால், ‘மூன்று’ பட தனுஷ் மாதிரி கத்தியைக் கொண்டு செல்வதும், பின்னர் தைரியம் இல்லாமல் கதறியழுவதுமாய் தோற்றுப்போனது. அதற்குள் எனது தொடர்பு கிடைக்காத தமிழ்நாட்டு நண்பர்கள் எப்படியோ துணை முதல்வரைத் தொடர்புக்கொண்டு விடயத்தை எடுத்துக்கூறியுள்ளனர். துணைமுதல்வர் அழைத்து ஆறுதல் கூறிய பிறகே சற்று தெம்பு வந்தது எனலாம். அதன்பிறகு நடந்தவை சகித்துக்கொள்ள முடியாதவை.

ஈழத்தமிழர் தொடர்பான இணையத்தளங்கள் எம்மைப் போட்டிப் போட்டுக்கொண்டு தொடர்புகொண்டன. நானும் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நடந்ததைக் கூறினேன். அவர்களும் பதிவிட்டனர், அதே படங்களைப் பிரசுரித்து! அதிர்ந்தேன்; துடித்தேன்; படங்களை நீக்குமாறு மன்றாடினேன்! எனது கதறல்கள் அவர்கள் காதில் விழவே இல்லை. எனது கண்ணீர் அவர்கள் இதயத்தை நனைக்கவே இல்லை. நடந்ததைக் கூறுங்கள் என்று கேட்டு, நயவஞ்சகமாக அதனைப் பதிவு செய்து, எனது புலி பச்சையுடன் சேர்த்து யுதியூப் (YouTube)-இல் பதிவேற்றினர். கயவனின் கூட்டமோ கண் காணாமல் மறைந்தோடியது, எனது அழைப்புகள் அனைத்தும் குரல்பெட்டிக்குள் முடங்கிப்போனது. இத்தனைச் சுமைகளையும் யாருக்கும் சொல்லாமலேயே சுமந்து வந்தேன். ஒரு சமயம் மனம் உடைந்து, துணை முதல்வரின் உதவியாளர் ஒருவனிடம் மனம் திறந்து கூறி, எனக்கு நானே புதைக்குழித் தோண்டிக்கொண்டேன். அவனுக்கு என் மீது என்ன வெறுப்போ, பொறாமையோ தெரியவில்லை, படங்கள் அனைத்தும் மலேசியாவைச் சார்ந்த முகநூலிலும் வலம்வர ஆரம்பித்துவிட்டன.

நான் யாரென்றே தெரியாத தெருநாய்கள் எல்லாம் என் உள்பெட்டிக்கு ஆபாசமாக தகவல் அனுப்பின. ‘ஈழத்தமிழர்களுக்குத் திறந்து காட்டும் உன் போன்ற ஈனப்பிறவிகள் போராட வேண்டாம்’ என்று ஒருவன் கூறியது இன்னமும் என்னுள்ளே வலித்துக்கொண்டே இருக்கிறது. இவர்களுக்காகவா போராடினேன்? இவர்களுக்காகவா உண்ணாவிரதம் இருந்தேன்? இரக்கமில்லா இந்த மனிதர்களுக்காகவா கண்ணீர் சிந்தினேன் என என்னை நானே வெறுத்தேன். எனது முகநூலில் இருந்த, நான் நேரில் பார்த்துப் பேசாத அத்தனைப் பேரையும் நீக்கினேன். எனது நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டேன்; எழுதுவது உட்பட. அப்படியிருந்தும் பல நேரங்களில் எம்மால் எனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தான் ஆடாது போனாலும் தன் சதை ஆடும் அல்லவா? இரணமாகிப் போனாலும் பல சமயங்களில் இதயம் இளகவே செய்கிறது.

அதே படங்கள் மீண்டும் வெளியாகின; சீமானுடன் நான் எடுத்துக்கொண்ட படங்களுடன் சேர்த்து. மலேசியப் பெண்ணுடன் சீமான் கள்ள உறவாம்! பக்கத்தில் இருந்து விளக்குப் பிடித்தவர்கள் போல இவர்கள் எழுதுவதைப் பார்த்தால் சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை. கொளத்தூர் மணி அய்யாவுடன்கூட புகைப்படம் எடுத்துள்ளேன். அதனையும் வெளியிட்டு, ஏற்கனவே வெளியான எனது அந்தரங்கப் படங்களுடன் இணைத்துப் பேசினால் கூட வியப்பதற்கில்லை. இவர்களின் இந்த ஈனத்தனமான தனிமனித தாக்குதல்கள் பாவம் என் படம்தான் கிடைத்தது போலும். அதுமட்டுமல்ல, சில ஆபாச முகநூல் பக்கங்களிலும் அதே படம் வெளிவந்துள்ளது. ஒவ்வொருமுறையும் ‘இங்கே உங்கள் படம் வந்திருக்கிறது. இது நீங்களா? உரிய நடவடிக்கை எடுங்கள்’ என்று எனக்குச் செய்திகள் வந்துக்கொண்டே இருக்கின்றன. அந்தப் பக்கங்களைப் புகார் செய்வதைத் தவிர்த்து நான் வேறு என்னதான் செய்ய முடியும்?

“அது என் படம் அல்ல” என்று ஒன்றை வரியில் சொல்லிவிட முடியும். அவ்வாறு பொய் சொல்வதால் எனக்கு நிம்மதி கிடைத்துவிடப்போவதில்லை. தவறு செய்வது மனித இயல்பு. அவ்வகையில் நான் செய்த பெருந்தவறு அந்தப் புகைப்படங்கள். இதனைப் பற்றி நான் காதலித்தவர்களிடமும் என கணவர் உட்பட சொல்லியிருக்கிறேன். நாளை எனக்குப் பிறக்கும் குழந்தைகளும் இதனைக் காண நேரலாம். எனது உற்றார் உறவினர், நண்பர்கள் என யார் வேண்டுமானாலும் இந்தப் புகைப்படங்களைக் காண நேரலாம். உங்கள் அனைவருக்கும் தனித்தனியாக விளக்கம் சொல்லி மிச்சமிருக்கும் என் வாழ்நாளையும் வீணடிக்க நான் விரும்பவில்லை. தமிழகத்தில் 2016-ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்தல் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்ட நிலையில், மீண்டும் சிலர் எனது அதே பழைய புகைப்படங்களைக் கொண்டு புதியதாக கதைகள் புனைந்து வெளியிடக்கூடிய சர்ந்தப்பம் நிலவுவதால், இதனைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். உங்களின் ஈனத்தனமாக அரசியல் தாக்குதலுக்கு எவனோ ஒருவனால் ஏமாற்றப்பட்ட என் படம்தானா கிடைத்தது? ‘நூலின் அட்டையினைக் கொண்டு அந்நூலினை மதிப்பிடலாகாது’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அது போல, எனது புகைப்படங்களைக் கொண்டு என்னை மதிப்பிடாதீர். மதிப்பிடும் உரிமையும் எவருக்கும் இல்லை.

இப்போது நான் முதல் அமைச்சர் அலுவலகத்தில் வேலை செய்யவில்லை. எந்தவொரு அரசியல் கட்சியிலும் இல்லை. நன்மைகள் செய்பவர்களைப் பாராட்டுகிறேன். ஊரை ஏமாற்றுபவர்களை விமர்சிக்கிறேன். நான் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்துவரும் ஒரு சராசரி மனிதன். என்னை மீண்டும் மீண்டும் சீண்டிப் பார்க்காதீர். பொறுமைக்கும் எல்லை உண்டு. வாழ்க்கை மிகவும் குறுகியது. இதனை எனது அண்ணனின் மரணம் உணர்த்திவிட்டது. எனக்குக் கிடைத்த இந்த வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்துவிட ஆசைப்படுகிறேன். உங்கள் வக்கிரங்களைக் கொண்டு அதனை அழிக்க முற்படாதீர். இதனை நான் மன்றாடிக் கேட்கவில்லை, கெஞ்சவில்லை, எச்சரிக்கிறேன்! உங்கள் உழைப்பில் நான் வாழவில்லை. உங்கள் வாழ்க்கையில் நான் குறுக்கிடவில்லை. சமயம் வரும் வேளையில் என் இனத்திற்காகவும் என் மொழிக்காகவும் நான் தொடர்ந்து போராடுவேன். உங்களால் முடிந்தால் நீங்களும் சேர்ந்துப் போராடுங்கள். முடியாவிட்டால் பொத்திக்கொண்டு போங்கள். (இன்னமும் திமிர் அடங்கவில்லை என்று நீங்கள் பொருமுவது என் காதில் விழுகிறது). இரத்தத்தில் ஊறியது, அடங்குவது கடினம்தான். உங்கள் அனுதாபத்தை வேண்டி இதனை நான் எழுதவில்லை. பல காலம் என்னுள்ளேயே அமிழ்ந்துக்கிடந்த சுமையின் ஒரு பகுதியினை இறக்கி வைக்கவே எழுதுகிறேன். உங்கள் அனுதாபங்களை உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள். என்னிடம் துக்கம் விசாரிக்க வேண்டாம். எனது படங்களைப் பற்றிய விளக்கம் இப்போது உங்களுக்கு ஓரளவு கிடைத்திருக்கும் என நம்புகிறேன். இவ்வளவு நேரம் பொறுமையுடன் இதனைப் படித்தமைக்கு நன்றி.

போற்றுவார் போற்றட்டும்
தூற்றுவார் தூற்றட்டும்-அது
எண்ணிக்கை இல்லா கணக்கு
கவலை இல்லை எனக்கு!


3 கருத்துகள்:

logu.. சொன்னது…

Humm..

பெயரில்லா சொன்னது…

Such a brave Girl..

கிருஷ்ணா சொன்னது…

இதுவும் கடந்து போகும்..