வெள்ளி, 26 செப்டம்பர், 2014

அவளும் அதுவும்... (பாகம் 3)



2. நாணயத்திற்குள் வா!
பவானிக்கு இரவு தூங்கவே பயமாக இருந்தது. இப்பொழுதெல்லாம் வீட்டிற்கு வெளியே நாய்களின் ஊளை நள்ளிரவில் அதிகம் கேட்கின்றன. தான் இதுவரைக் கதைகளில் கேட்ட நாயின் ஊளையை நிஜவாழ்க்கையில் கேட்கும் போது அவளை பயம் தீண்டவே செய்தது. மேகலாவும் வாணியும் உறங்கிய பிறகும் பவானி அதிக நேரம் விழித்திருந்தாள். விடிவிளக்கின் வெளிச்சத்தில் தெரியும் வீட்டுப் பொருட்களின் நிழல் கூட அவளது இதயத்தைப் படபடக்கச் செய்தது. ஒருநாள் பகல் வேளையில் தனக்குள் இருக்கும் பயத்தை அவள் மேகலா, வாணியிடம் தெரிவித்தாள்.

பயப்படாதே! நாம பயந்தாதான்அதுநம்மள தொந்தரவு செய்யும். தைரியமா இருந்தா ஒன்னும் செய்யாது,” என்றாள் மேகலா.

உனக்குக் கே.எல். பாட்டி வீட்டில நடந்தக் கதை தெரியுமா? “ என்று கேட்டாள் வாணி. அவர்களது தாய்வழிப் பாட்டி கோலாலம்பூரில் இருப்பதால் அவரை அனைவரும் சுருக்கமாககே.எல். பாட்டிஎன்று அழைப்பது வழக்கம்.

என்னக் கதை?” என மேகலாவும் பவானியும் ஒருசேரக் கேட்டனர்.

கே.எல். பாட்டி வடை, பலகாரம் செஞ்சு கடையில கொடுத்து விப்பாங்கல்ல?,” என்று வாணி கதைச் சொல்லத் தொடங்கவும் மேகலாவும் பவானியும்ஊம்கொட்டத் தொடங்கினர்.

பாட்டி எப்போதும் விடியற்காலை 4 மணிக்கே எழுந்து பலகாரம் செய்ய ஆரம்பிச்சிடுவாங்க. அப்போ, பாலாவும் பவானியும் இன்னும் பிறக்கல. நம்ம அம்மா அப்பாவோட சண்டை போட்டுட்டு கொஞ்ச காலம் கே.எல் பாட்டி வீட்ல தங்கி வேலை செய்துகிட்டு இருந்தாங்க. பள்ளி விடுமுறை காலத்துல நானும் இந்திரனும் ஒரு வாரம் அங்கே தங்கியிருந்தோம். சசி, ராம், மேகலா மூனு பேரும் இங்கேயே இருந்துட்டாங்க.”

ஆமா. எனக்கு ஞாபகம் இருக்கு. அம்மா மூனு மாசத்துக்கு மேலே கே.எல். பாட்டி வீட்டில தங்கியிருந்தாங்க,” என்று உறுதிப்படுத்தினாள் மேகலா.

ஆமாம். சில சமயம் அம்மா இராத்திரி வேலை முடிஞ்சு வர நேரமாகிடும். காலை வேலைன்னா, விடியற்காலை இரண்டு மூனு மணிக்கே எழுந்துக் கிளம்பனும். ’கீலாங்[1] வேலைன்னால அம்மாவோடஷிப்ட்[2] மாறிமாறி வரும். ஒருநாள் அம்மாவுக்குக் காலை வேலை. ’கீலாங் பஸ்[3] விடியற்காலை நாலு மணிக்கெல்லாம் வந்திரும்னு அம்மா சீக்கிரமே கிளம்பிப் போய்ட்டாங்க.”

அம்மா வெளியில போன கொஞ்ச நேரத்துல கதவை யாரோபடார்னு ஓங்கி அடிக்கிற சத்தம். பாட்டிக்கு முழிப்பு வந்திருச்சு. நானும் இந்திரனும் நல்லா தூங்கிக்கிட்டிருந்தோம்கொஞ்ட நேரத்துல சட்டிப் பானை உருட்டுற சத்தம் கேட்டுச்சு. யாரோ அடுப்பாங்கறையில நடமாடுற மாதிரி இருந்திச்சு. பாட்டி எழுந்துட்டாங்க. அடுப்பாங்கறையில போய் பார்த்தா வடை செய்ய ஊற வச்சிருந்த பருப்பெல்லாம் தரையில கொட்டிக்கிடக்கு. பாட்டி அதைச் சுத்தம் பண்ணிக்கிட்டிருக்கும் போது, அவங்க பின்னாடியிலிருந்து ஒரு பானை திடீர்னு கேழே விழுந்துச்சு; யாரோ அதை தட்டிவிட்ட மாதிரி. பாட்டிக்கு ரொம்ப கடுப்பாயிடுச்சு. “யாரு?!!” அப்படின்னு சத்தமா கத்திக் கேட்டாங்க. இன்னொரு வெள்ளிக் குவளைக் கீழே விழுந்திருச்சுபாட்டி விளக்குமாத்தைக் கையில எடுத்தாங்க.

ஏய்!!! யாருக்கிட்ட விளையாட்டுக் காட்டுற? எப்படி வந்தியோ அப்படியே போகப் போறியா இல்லையா? விளக்குமாறு பிஞ்சிறும்! #$%^&*((%#@!!!” அப்படின்னு கெட்ட வார்த்தைல நல்லா ஏசினாங்க. ‘படார்னு கதவைக் கோவமா சாத்தி அடிக்கிற சத்தம் கேட்சுச்சு. அதுக்குப் பிறகு ஒரு சத்தமும் கேட்கல; ஒரு தொந்தரவும் இல்ல. இராத்திரி அம்மா வந்தப் பிறகு பாட்டி நடந்தது எல்லாத்தையும் சொன்னாங்க. அப்பத்தான் எனக்கே தெரியும். அம்மா விடியற்காலைக் கதவைத் திறந்து வெளியே போகும் போதுஅதுஉள்ளே வந்திருக்கும்னு பாட்டி சொன்னாங்க.”

பாட்டி பயப்படவே இல்லையா?” என்று பவானி கேட்டாள்.

பயந்தவங்களைப் பார்த்தா அதுக்கு ரொம்பெ சந்தோஷமாயிடுமாம். வேணும்னே அவங்களைக் கச்சோர்[4] பண்ணுமாம். ரொம்ப பயமுறுத்துமாம். அதனால, அதக்கண்டுப் பயப்படக்கூடாதுன்னு பாட்டி சொல்லுவாங்க,” என்று விளக்கமளித்தாள் வாணி.

ஆமா. அதப்பத்தி பேசினாலும் அதுக்கு ரொம்ப குஷியாயிடுமாம். நம்மள பத்தி என்ன பேசுராங்கன்னு பக்கத்துல வந்து உட்கார்ந்துக் கேட்குமாம்.” என்று யாரும் கேட்காதக் கேள்விக்கு பதில் சொன்னாள் மேகலா.

பவானிக்கு உடல் சிலிர்த்தது. தனக்கும் தன் சகோதரிகள் அமர்ந்திருந்த இடத்திற்கும் இருந்த கொஞ்ச நஞ்ச இடைவெளியையும் நெருங்கி அமர்ந்து அடைத்தாள். சிறுது இடைவெளி இருந்தாலும்அதுவந்து அமர்ந்துக்கொள்ளும் என்ற பயம் அவளுள் இருந்தது. இருப்பினும் பயத்தினை வெளிக்காட்டினால், ‘அதுகுஷியாகித் தன்னைத் தொந்தரவு செய்யும் என்று பயந்து முகத்தை இயல்பாக வைத்துக்கொள்ள வெகுவாக முயன்றாள். தான் கொஞ்சம் அமைதியாக இருப்பதை உணர்ந்து, “பேயைப் பார்க்க முடியுமா?” என்று அப்பாவியாய் கேட்டு வைத்தாள்.
அதற்கு மற்றவர்கள் பதில் சொல்லும் முன் வெளியில் நண்பர்களுடன் காற்பந்து விளையாடச் சென்றிருந்த சசி, ராம், இந்திரன் மூவரும் வீடு வந்து சேர்ந்தனர். பாலா வழக்கம் போல் தாத்தாவிற்கு உதவியாக வீட்டின் முன் புறத்தில் இருந்தான்.

! மூனு பேரும் ஒன்னா உட்கார்ந்து குசுகுசுன்னு என்னப் பேசுறீங்க?” எனக் கேட்டவாறு ராம் அவர்கள் அருகில் வந்து அமர்ந்தான். சசியும் இந்திரனும் அவனைப் பின் தொடர்ந்தனர். அவர்களின் வட்டம் பெரிதாகியது.

பேய்க்கதை!” என்றாள் மேகலா. சசியின் முகம் பிரகாசம் பெற்றது.

பேயைப் பார்க்க முடியுமா?” பவானி மறுபடியும் கேட்டாள்.

முடியுமே. போய் உன் மூஞ்சியைக் கண்ணாடியிலப் பாரு!” என்று இந்திரன் நக்கலடித்தான்.

பார்க்கணும்னா சொல்லு, நாங்க காட்டுறோம்,” என்று ராம் இந்திரனுடன் சேர்ந்து அவளைச் சீண்டினான்.

பவானி கோபத்தில் பற்களைக் கடித்தாள். பவானியின் முகத்தில் இருந்த ஏமாற்றத்தினைச் சசி கவனித்தான். மற்றவர்களைக் காட்டிலும் கடைசிப் பெண் பிள்ளையான பவானியின் மீது சசிக்குச் சற்றுப் பாசம் அதிகம். இருப்பினும் அதனை வெளியில் காட்டிக்கொள்ள மாட்டான்.

மோகினியைப் பார்க்கறது ரொம்பெ சுலபம். ஆனா, அது ஆம்பிளைங்களைப் பார்க்கத்தான் விரும்பும். ஆம்பிளைங்களைத்தான் கச்சோர் பண்ணும். அதுக்கு ஆம்பிளைக்களைத்தான் பிடிக்கும்,” என்று சசி சற்றுத் தீவிரமாகவே சொன்னான்

ஏன்?” “எப்படி?” “எதனால?” என்று பல குரல்கள் ஒரே நேரத்தில் எழுந்தன.

சசி உள்மூச்சினை ஆழமாக இழுத்து பொறுமையாக வெளியிட்டான். பின்பு மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தான்.

கல்யாணமே ஆகாம செத்துப் போகிற பொண்ணுங்க தான் மோகினியா மாறும். அதனால, அதுங்களுக்கு எப்பவுமே ஆம்பிளைங்க மேல ரொம்ப ஆசை இருக்கும். மோகினிங்க ரொம்ப அழகா இருக்கிறதால ஆம்பிளைங்க சுலபமா அதுக்கிட்ட மயங்கிடுவாங்க. மோகினிங்க எப்பவும் வாழை மரத்துல தான் இருக்கும். அதனாலதான் வயசுப் பையனுங்க, கல்யாணம் ஆகாத ஆம்பிளைங்க இறந்துப் போனா, வாழை மரத்துக்குத் தாலிக் கட்டச் சொல்லுவாங்க. வாழை மரத்துக்குத் தாலி கட்டினா, அந்த மரத்துல இருக்கிற மோகினிக்குத் தாலி கட்டின மாதிரி. இந்த மாதிரி செஞ்சா, செத்துப் போன ஆம்பிளை ஆவிக்கும் துணை கிடைச்ச மாதிரி இருக்கும்; மோகினிக்கும் துணை கிடைச்ச மாதிரி இருக்கும்.”

சரி, மோகினியை எப்படிப் பார்க்கிறது?” என ராம் கேட்டான். அதற்கும் சசி பதில் சொல்லத் தொடங்கினான்.




[1] தொழிற்சாலை
[2] வேலை நேரம்
[3]தொழிற்சாலைப் பேருந்து
[4] தொந்தரவு

...தொடரும்