புதன், 24 டிசம்பர், 2008

அன்பு!


அன்பு என்பது
அழகான வார்த்தை மட்டுமல்ல
ஆழமானதும் கூட…
‘அன்பு’ என்று சொல்லும் போதே
இரு இதழ்களும் இணைகின்றன
பல அற்புதங்களை நிகழ்த்தும்
வல்லமையுடையது அன்பு!

அம்மாவின் அன்பு அரவணைப்பில்
அப்பாவின் அன்பு கண்டிப்பில்
ஆசானின் அன்பு போதிப்பில்
அண்ணனின் அன்பு அதிகாரத்தில்
ஆண்டவனின் அன்பு அருளில்
ஆன்மாவின் அன்பு உடலில்!

அன்பு செலுத்து
அதையும் அளவோடு செலுத்து
யாரிடம் அன்பாக இருக்கிறாய்
என்பது முக்கியமான ஒன்றல்ல
எதனால் அன்பு செலுத்துகிறாய்
எப்படி அன்பாய் இருக்கிறாய்
என்பதுவே முக்கியம்!

வாழ்க்கைக்கு முடிவுண்டு
அன்பிற்கு அழிவில்லை
மனிதனுக்கு விதியுண்டு
அன்பினிலே சதியில்லை
பணம் பந்தியிலே
குணம் குப்பையிலே
அன்பு உயிரிலே!

பிறருக்கு அன்பு செலுத்துவதைவிட
பிறரிடமிருந்து கிடைக்கும் அன்பில்
நீ சொர்க்கத்தைக் காண்பாய்
எது உனக்கு வேண்டுமென்று
நீ நினைக்கின்றாயோ-அதை
மற்றவர்களுக்குக் கொடு!

எதையும் கொடுத்தால்தானே
திரும்பவும் பெற முடியும்?
அன்பு மட்டும் அதற்கு
விதிவிலக்கா என்ன?


அன்பு என்பது
தங்கக் கட்டிகள் அல்ல
சிக்கனம் பிடித்து சேர்த்து வைப்பதற்கு
அன்பை பணம் கொடுத்தா
வாங்கப் போகிறாய்?
பின்பு ஏன் இந்தக் கஞ்சத்தனம்?
அன்பை அள்ளி வீசு-உன்னையும்
உலகம் ‘ஏசு’ என்று புகழும்!

மிருகத்திடம் செலுத்தும் அன்பில்
சிறிதாவது மனிதனிடம் காட்டியிருக்கலாம்
ஏனெனில், அன்பு பஞ்சமாகி
மனிதன் மிருகமாகி வருகிறான்!

அன்புக்காக ஏங்கும் ஜீவன்கள் பல
அன்பே உருவான ஜீவன்கள் சில
இவற்றுள் நீயும் நானும் எங்கே?

எங்கே செல்லும்…?


“ஏய், ஸ்கூல் முடிஞ்சி எங்கப் போற? எங்க வீட்டுக்கு வர்றியா?” என்றவாறு புத்தகப்பையை மூட்டைக்கட்டினாள் தேவி.

“சாரி டார்லிங். இன்னைக்கு முக்கியமான அப்பாய்மெண்ட் இருக்கு. ஒரு ப்பிரண் கூட சாட் பண்றதா சொல்லியிருக்கேன். நான் போயே ஆகணும்,” என்று உறுதியுடன் கூறினாள் கவிதா.

“ஹ்ம்ம்… வர வர அடிக்கடி சாட்டிங் பண்றே. என்ன நடக்குதுன்னே தெரியல. வெறும் ப்பிரண் தானே? எனக்குத் தெரியாம ஒன்னும் செய்யலையே?” என்றால் தேவி.

“உன்கிட்ட சொல்லாம ஏதாவது செய்வேனே. ஜஸ்ட் ப்பிரண் தான். கவலைப்படாதே. ஏதாவது இருந்தா கண்டிப்பாக உங்கிட்டதான் மொதல்ல சொல்லுவேன். ஒ. கே. வா?” என்று கவிதா தன் வாக்கியத்தை முடிக்கும் முன் பள்ளி மணி அடித்தது.

மாணவர்கள் குதூகலமாக புத்தகப்பைகளைத் தூக்கிக்கொண்டு பள்ளியறைகளிலிருந்து வெளியாகினர். அப்பப்பா…என்ன குதூகலம்! அதோ தேவியும் கவிதாவும். தேவி மிதிவண்டியை உருட்டிக்கொண்டு வர கவிதா அவள் அருகே நடந்து வருகிறாள். பள்ளி முன் வாசலை நெருங்கியவுடன் தேவி மிதிவண்டியில் ஏறிப் புறப்படுகிறாள்.

கவிதா முகத்தில் புன்முறுவல் ததும்ப பள்ளி அருகே இருக்கும் கணினி மையத்தில் நுழைகிறாள். அவளுக்கு ஒரே அவசரம். விறுவிறுவென்று இணையத்திள் நுழைந்து சாட்டிங் அறைக்குள் பிரவேசிக்கிறாள். ஒரே படபடப்பு!

‘அவர் எனக்கு முன்னமே வந்து விட்டாரா? மணி இரண்டாகிவிட்டதே? எவ்வளவு நேரம் காத்திருந்தாரோ? எங்கே அவர் பெயரைக் காணவில்லையே? ஒருவேளை வேறு பெயர் பயன்படுத்துகிறாரோ?’ கவிதாவின் மனம் பலவாறு சிந்தித்தது.

அவள் தேடி வந்த நண்பரின் பெயர் அந்தப் பெயர் பட்டியலில் இல்லை. கவிதாவின் முகத்தில் ஏமாற்றம். தன்னுடன் உரையாட வந்தவர்களையும் சட்டை செய்யாது பெயர் பட்டியலையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவள் அங்கு வந்து ஏறக்குறைய முப்பது நிமிடங்கள் ஆகிவிட்டன. இன்னும் அவள் எதிர்ப்பார்த்த நண்பர் வந்துச் சேரவில்லை. கவிதாவின் முகமும் மனமும் சோர்வுற ஆரம்பித்தது.

‘அவர் வரவே மாட்டாரோ? ஒருவேளை மறந்துவிட்டாரோ? திங்கட்கிழமை பேசலாம் என்று சொன்னேனே. சரி என்றுதானே சொன்னார். இன்னும் சிறிது நேரம் காத்திருந்துப் பார்க்கலாமா?’

மணி மூன்றாகிவிட்டது. கவிதா காத்திருப்பதில் அர்த்தமில்லை என்பதை உணர்ந்தாள். அவள் எழுந்திருக்க முயன்றபோது…


தொடரும்….

செவ்வாய், 16 டிசம்பர், 2008

இதய வீடு…


நேற்றுவரை
நீ குடியிருந்த இதயம்
இன்று இருட்டில் கிடக்கின்றது
இதயத்தின் ஒளியாகிய நீயே
எனக்கென்ன? என்று சென்றபின்
ஒளியும் ஒரு கேடா?

எவ்வளவு குதூகலமாய்
என் இதய வீட்டில் குடிகொண்டாய்
வண்ண விளக்குகளால் அலங்கரித்தாய்
கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்தாய்
தண்ணீர் தெளித்துக் கோலம் போட்டாய்
சுண்ணாம்பு பூசி புதுமை தந்தாய்?

என் இதயம் கோவிலல்ல
அதில் நீ தெய்வமும் அல்ல
உனக்குப் பூசை செய்யவுமில்லை
மலர் மாலை சூட்டவுமில்லை
உன் நாமம் ஜெபித்ததும் இல்லை
உன்னை நான் வணங்கவும் இல்லை!

இதயத்தை வீடாய் வைத்தேன்
உன்னை அதில் வசிக்கும் ஒருவனாய்
என்னைப் போல் சராசரி மனிதனாய்
என் மனதைத் தெரிந்த அறிஞனாய்
வாழ்வைப் பகிர்ந்துக்கொள்ளும் கணவனாய்
நினைத்ததில் தவறேதும் உண்டோ?


இங்கேப் பார்!
நீ குடியிருந்த வீடு இன்று
ஈக்கள் மொய்க்கும் குப்பையாய் நாறி
ஒளியிழந்து பொலிவிழந்து மங்கி
பயனற்ற பொருளாய் மதிப்பிழந்து
பாழாய்ப் போவதைப் பார்!

அன்று நீயிருந்த வீட்டில்
இன்று எலிகளும் பூனைகளும்
ஓடி விளையாடி சண்டையிட்டு
எகத்தாளமாய் என் முன்னே கண்ணடித்து
நக்கலாய், கேளியாய், கிண்டலாய்
கைக்கொட்டிச் சிரிக்கின்றன!

திங்கள், 15 டிசம்பர், 2008

ஓ, இலங்கை இராணுவமே!



இலங்கை இராணுவத்தினரின் அராஜகம் அத்துமீறிக் கொண்டிருக்கிறது! புலிகளிடம் நேருக்கு நேர் போரிட வலுவில்லாத கோழைகள் அப்பாவி மக்களின் இரத்தத்தைக் குடித்து தாகம் தீர்க்கின்றனர்.


ஏன் இந்த கொலைவெறி? தனிநாடு கேட்டது அப்படியென்ன பெரியதொரு குற்றமாகிவிட்டது? குடிகளை காத்து அரவணைக்க வேண்டிய இலங்கை அரசு தமிழ் மக்களிடம் மட்டும் ஏன் பாராபட்சம் காட்டவேண்டும்? சரி, போர்தான் மூண்டுவிட்டதே. அறப்போர் புரியவேண்டியது தானே? எதற்காக அப்பாவி மக்களைக் கொன்று குவிக்க வேண்டும்? இதுதான் இலங்கை இராணுவத்தினரின் வீரச்செயலா?


குடிகளின் பசியைத் தீர்க்க வக்கில்லை! அவர்களின் நோயைத் தீர்க்க மருந்தும் கொடுப்பதில்லை! நடப்பது அரசாட்சியா அல்லது பேயாட்சியா? எத்தனை முறை எத்தனைப் பேர் கண்டனம் தெரிவித்தும் அவிந்துப் போன மூளைக்கு விளங்கவில்லை போலும்! அப்பாவி மக்களை ஏனடா கொன்று குவிக்கின்றீர்?


இலங்கை இராணுவமே! மனதில் தைரியம் என்ற ஒன்று உண்டென்றால் புலிகளிடம் நேரடியாக மோது! அதைவிடுத்து அப்பாவி மக்களைச் சித்திரவதைச் செய்யாதே! மனிதாபிமானம் என்ற ஒன்று உண்டல்லவா? மன்னிக்கவும்! தவறான கேள்வி...மனிதர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை வெறி நாய்களிடம் கேட்டால் பதில் எங்கே கிடைக்கப்போகிறது?!


என்ன பாவம் செய்தது அந்த பிஞ்சுக் குழந்தை? உனது கண்மூடித்தனமான தாக்குதலுக்கு அந்தச் சிசு தானா பலியாக வேண்டும்? இலங்கை இராணுவ மிருகங்களே, உங்களுக்கு ஈவிறக்கமே கிடையாதா? இதயமில்லா ஜந்துக்களே, கேளுங்கள்! என்னருமை தமிழீழச் சகோதரர்கள் உங்களை வெற்றிக்கொள்ளும் நாள் வெகுதூரம் இல்லை! விரைவில் தனிநாடு உருவாகும்!


நீங்கள் சிதைத்து சுடுகாடாய் ஆக்கிவிட்டப் போன இடங்கள் தமிழ் சுவாசம் பெற்று நந்தவனமாய் குலுங்கும்! விடிவு வெகுதூரம் இல்லை; அதனை அடைவதற்கு வெகுநாட்களும் இல்லை! புலிகள் புத்தாடை உடுத்தி புல்லாங்குழல் வாசிக்கும் நாள் விரைவில் வரும். குழலின் இசைக்கேற்ப ஆடுவதற்கு, ஓநாய்களே, நீங்கள் தயாராக இருங்கள்!!!


குறிப்பு: இன்றைய மக்கள் ஓசை நாளிதழில் இலங்கை இராணுவத்தின் தாக்குதலால் ஐந்து மாதக் குழந்தைப் பலியான செய்தியைக் கண்டேன். ஜீரணிக்க முடியவில்லை. மனம் வலிக்கிறது... அதன் வெளிப்பாடே மேற்கண்ட கட்டுரை.

எப்படிய்யா மனசு வந்துச்சு?



ஐந்து வயதல்ல...
ஐந்து மாத குழந்தை அய்யா
ஈவிரக்கமின்றி கொல்வதற்கு
எப்படிய்யா மனசு வந்தது?

அம்மா வாங்க, அய்யா வாங்க
அஞ்சடியில் படுத்துறங்கும்
எந்தமிழன் நிலை கேளுங்க...


காசு பணம் கேட்கல
ஆட்சியைப் பறிக்கல
சொந்தம்னு சொல்லிக்க
தனிநாடு கேட்டோமய்யா
செந்தமிழ்நாடு கேட்டோமய்யா!


என்ன தவறுன்னு எனக்கும் புரியல
அடிக்கிறானுங்க, விரட்டுறானுங்க
வெறி நாய் மாதிரி கடிக்கிறானுங்க!


என்னைக் கொன்னா
சந்தோஷமா சாவேன்
இனத்தையே கொன்னா
என்னய்யா செய்வேன்?


சங்கம் வச்சி வளர்த்த மொழிய
நாங்க பேசினா சங்கை அறுக்கிறானுங்க!
எங்கே போய் முறையிடுவேன்?
யார்கிட்ட போய் உதவி கேட்பேன்?


அழகா பேசிப் பார்த்தோம்
அரசாங்கம் அசையவில்லை
தெளிவா முடிவைச் சொன்னோம்
அலட்சியம் பண்ணவில்லை!


ஆயுதம் ஏந்திதான்
தனிநாடு கிடைக்கும் என்றால்
அதுக்கும் துணிந்துவிட்டோம்
துணிவிருந்தால் மோதிப் பார்ப்போம்!


பள்ளிக்கு போற பச்சப்புள்ள
காட்டுல பயிற்சி எடுக்குதய்யா
துள்ளிக்குதிக்கிற வயசுப்புள்ள
காக்கிசட்டைக்குள்ள முடங்குதய்யா!


இன மான உணர்வுக்காக
இரும்பாக்கினோம் உணர்ச்சியெல்லாம்
எந்தமிழ் மொழிக்காக சமர்ப்பித்தோம்
ஈழத் தமிழ் மக்கள் உயிரையெல்லாம்!


பூச்சூட வேண்டிய கன்னிப்பொன்னு
புலியாகி உலவுது காட்டுக்குள்ள
மக்களைக் காக்கும் ராணுவம்
நாயாகி வேட்டையாடுது ஊருக்குள்ள!


மனசாட்சி இல்லாம
மனுசங்கள சுட்டுப்போட்டான்
ஈவிறக்கம் இல்லாம
அராஜகம் செஞ்சி வரான்!


போராடுறோம் போராடுறோம்
உயிருக்காக இல்ல அய்யா
இன மான உணர்வுக்காக...
உயிர் கொடுத்து போராடுறோம்
தனிநாடு பெறுவதற்காக!


குண்டு பாஞ்சா தாங்கும் நெஞ்சு
செய்தி பார்த்து ஒடிஞ்சிப் போச்சி!


தமிழ் மண்ணின் கால் பதிச்சு
துள்ள வந்த பச்சப்புள்ள
கலியுக உலகில் வாழ
பிறவியெடுத்த பிஞ்சுப்புள்ள
ராணுவத் தாக்குதல்ல செத்துப்போச்சு
ஐந்து மாத சின்னப்புள்ள!


திசை மாறிய படகு (பாகம் 2)


தொடர்ச்சி....
கணவன் மகனையே உன்னிப்பாக கவனிப்பதைக் கண்ட வாசுவின் தாயார் கணவனிடன் சென்று, “ஏங்க அவனை அப்படிப் பார்த்துக்கிட்டே இருக்கீங்க?” என்று வினவினாள்.

“இல்ல. சின்னப் பையனாக இருந்தான். அப்பா அப்பான்னும் என்னையே சுத்தி சுத்தி வருவான். இப்ப எப்படி மலை மாதிரி வளர்ந்துட்டான் பார்த்தியா? நானும் எப்ப பார்த்தாலும் வேலை வேலைன்னு அலைந்துக் கொண்டிருக்கேன். அவனோடு ஒருநாள் கூட முழுசா இருந்ததில்ல. பையன் ரொம்பெ மாறிட்டான். இருந்தாலும் அவனது பழக்க வழக்கங்கள் எல்லாம் முன்ன மாதிரியே இருக்குது பார்த்தியா? அதுதான் பார்த்துக்கிட்டிருந்தேன்,” என்றார் வாசுவின் தகப்பனார்.

அறைக்குள் இருந்த வாசு தனது பெற்றோர் பேசிக்கொண்டிருந்த அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தான். தனது தந்தையிடன் நல்ல பேர் எடுக்க, நல்ல பிள்ளையைப் போல் பூஜை அறைக்குள் நுழைந்தான். என்றும் இல்லாமல் அன்று மட்டும் கண்களை முடிக்கொண்டு இறைவனைப் பிராத்தனை செய்வது போன்று பாவனைச் செய்தான்.

ஆனால் அவனது மனமோ நேற்று அவனும் அவனது நண்பர்களும் இன்று என்ன செய்யப் போகிறார்கள் என்று தீட்டிய திட்டத்தை நோக்கியே சென்றுக் கொண்டிருந்தது. வாசுவின் தந்தையோ மகன் பக்தியுடன் இறைவனை தரிசிப்பதைக் கண்டு மனம் பூரித்துப் போனார்.

ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு பூஜை அறையை விட்டு வெளியே வந்தான் வாசு. அவனது நெற்றி முழுவதும் திருநீற்றால் பட்டைத் தீட்டியிருந்தான். தனது தாயிடம் அன்று தான் வீட்டிற்குச் சற்று தாமதமாக வருவதாகக் கூறினான். அவனது தாய் ஏனென்று கேட்பதற்குள் சக மாணவர்களோடு சேர்ந்துப் படிக்கப் போவதாகக் கூறினான். அவனது தாயும் நல்லதென்றுக் கூறி, வாசுவின் கையில் பத்து ரிங்கிட் நோட்டைத் திணித்தாள்.

வாசு மகிழ்ச்சியுடன் அதனை அவனது சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான். தனது தந்தையிடம் அடக்கத்துடன் விடைப்பெற்றுக் கொண்டு தனது மோட்டார் வண்டியில் ஏறிப் புறப்பட்டான். அளவுக்கதிகமான சத்தமில்லாமல் மிதமான சத்தத்துடன் மெதுவாக வண்டியைச் செலுத்தினான். வாசுவின் தந்தை மகனின் அடக்கத்தைக் கண்டு அகமகிழ்ந்துப் போனார். என்னே அடக்கம்! என்னே அடக்கம்!

சற்று தொலைவு சென்ற பின் வாசு தனது வண்டியை வேறு பாதையில் திருப்பினான். தூரத்தில் ஓர் ஒட்டுக்கடையில் அவனது நண்பர்கள் குழுமி இருந்தது தெரிந்தது. சட்டென்று தான் வீட்டில் தீட்டிய திருநீற்றுப் பட்டை ஞாபகம் வர உடனே அதைத் துடைத்துக் கொண்டான். நண்பர்கள் கண்டால் கேலி செய்வார்கள் என்று அஞ்சினான் போலும். வாசுவின் நண்பர்கள் அவனது வரவை ஆவலோடு எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தனர்.

வாசு மோட்டாரிலிருந்து இறங்கியதுதான் தாமதம். அவனது நண்பர்களில் ஒருவன், “இப்பவே மணி 7.15 ஆயிருச்சி. எட்டு மணிக்கெல்லாம் நமக்காக அங்க இன்னொரு கேங் காத்துக்கிட்டு இருக்கும். நீ போய் சட்டுன்னு சட்டை மாத்திட்டு வா. அப்புறமா போய் எல்லாரையும் கூட்டிட்டுப் போவலாம்,” என்றான்.

“டென்ஷன் ஆகாதடா! இன்னைக்கு எங்கப்பா விட்ல இருந்ததால லேட்டாயிடுச்சி. இப்பப் பாரு, ஒரு நிமிஷத்துல வந்துடுறேன்,” என்று பக்கத்தில் இருந்த சிறிய காட்டுக்குள் தனது புத்தகப் பையுடன் நுழைந்தான். சிறிது நேரத்திற்கெல்லாம் உடையை மாற்றிக்கொண்டு வெளியே வந்தான்.

பேரிரைச்சலுடன் அந்த கும்பல் அவ்விடத்தை விட்டு அகன்றது. அந்தக் குண்டர் கும்பலில் உள்ளவர்கள் ஆளுக்கொரு கட்டையை கையில் ஏந்தியவாறு “ஆ, ஊ” என்று என்று கத்திக்கொண்டே சென்றனர்.

அன்று வாசுவின் கும்பலுக்கும் இன்னொரு கும்பலுக்கும் சண்டை அமோகமாக நடந்தது. அவர்கள் சண்டை போட்ட இடத்தில் இருந்த கடைகளில் உள்ள நாற்காலிகளும் மேசைகளும் அங்கும் இங்கும் ஆகாயத்தில் பறந்தன. பசு போல் சாதுவாக இருந்த வாசு தனது எதிரிகள் மீது புலி போல் பாய்ந்தான்.

அப்பொழுது அவர்கள் சற்றும் எதிர்ப்பாராத விதமாக போலீஸ் வண்டி ஒன்று வேகமாக சண்டை நடந்துக் கொண்டிருந்த இடத்திற்கு வந்தது. சண்டைப் போட்டுக் கொண்டிருந்த இரண்டு குண்டர் கும்பல்களும் விழுந்தடித்துக்கொண்டு ஓடின.

வாசு தப்பித்தோம் பிழைத்தோம் என்று தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு கண்மண் தெரியாமல் அழுத்தினான். ‘டமார்!” என்ற சத்தத்துடன் வாசுவின் மோட்டார் எதிரே வந்து கொண்டிருந்த பேருந்தின் மீது மோதியது. வாசு, “ஆ…” என்றுக் கத்திக்கொண்டே மயங்கி விழுந்தான். அவன் உடல் முழுவதும் இரத்த வெள்ளத்தில் மிதந்தது. அவனுடைய மோட்டார் சைக்கிள் சுக்கு நூறாக நொறுங்கிக் கிடந்தது.

வாசு கண் விழித்த போது அவனது உடல் முழுவதும் கட்டுப் போடப்பட்டு இருந்தது. எழுந்திருக்க முயன்றான். ஆனால் அவனது உடல் முழுவதும் வலித்தது. அப்பொழுது அவன் அருகில் போலீஸ் அதிகாரி ஒருவர் வந்து நின்றார். அவர் பக்கத்தில் வாசுவின் தாயும் தந்தையும் நின்றுக் கொண்டிருந்தனர். அவர்களது முகம் அழுது அழுது வீங்கிக் கிடந்தது.

வாசுவைக் கண்டதும் அவனது தாய் இன்னும் குலுங்கிக் குலுங்கி அழுதாள். அப்பொழுது அங்கு வந்த டாக்டர், “வாசு…விபத்தின் போது உன்னோட இடது கால்…” என்று இழுத்தார். அப்பொழுது தான் வாசு தனது காலை கவனித்தான்.

தனக்கு ஒரே ஒரு கால் மட்டுமே இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் அலறியேவிட்டான். “அம்மா…அம்மா….என்னோ…என்னோட காலைக் காணோம். அம்மா என் காலை காணோம்மா!” என்று தேம்பி தேம்பி அழுதான்.

“ஏன்’டா… ஏன்’டா இப்படி செய்தே?” என்று அவந்து தாய் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டாள். வாசுவின் தந்தையோ, செய்வதறியாது திகைத்துப் போய் நின்றார்

“அம்மா என்னை மன்னிச்சிருங்க. அப்பா நீங்களும் என்னை மன்னிச்சிருங்க. வயசான காலத்துல உங்கள பார்த்துக்க வேண்டிய நானே இன்னைக்கு உங்களுக்கு பாரமாயிட்டேன். இனிமே யாரோடும் சேரமாட்டேன். நான் நல்லா படிச்சு உங்கப் பேரை காப்பாத்துவேன்!” என்று கண்ணீர் மல்க கூறினான்.

நீதிமன்றத்தில், வாசு அறியாமல் செய்த தவறுக்காக மன்னித்து எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், வாசுவின் நண்பர்கள் வசமாக போலீசாரிடம் மாட்டிக் கொண்டனர்.

சில தினங்களுக்குப் பின்னர், ‘உணவகத்தில் இரண்டு இந்திய குண்டர் கும்பல்கள் மோதல். ஐவர் கைது’ என்ற தலைப்பில் வாசுவின் நண்பர்களுடையப் புகைப்படம் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது.

செய்தித்தாளை படித்து முடித்த வாசு பக்கத்தில் இருந்த மேசை மீது அதனை வைத்தான். சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருந்தவன் தனது கால்களையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனை அறியாமலேயே அவனது கண்கள் கலங்கின.


***முற்றும்***


தமிழ் நேசன், ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 5, 2000

செவ்வாய், 9 டிசம்பர், 2008

திசை மாறிய படகு (பாகம் 1)


‘புரூம் புரூம்’ என்ற இரைச்சலுடன் ஐந்தாறு மோட்டார் சைக்கிள்கள் அந்த இரவின் அமைதியைக் கிழித்துக்கொண்டுச் சென்றன. நடுநிசியின் யார் அப்படி மோட்டார் ஓட்டுகிறார்கள்? இப்படி நடுநிசியில் எல்லாருடைய தூக்கத்தையும் கெடுக்கும் இவர்கள் யார்?

பதினெட்டு வயதிலிருந்து இருபத்தைந்து வயதுக்குட்பட்ட ஓர் இந்திய இளைஞர் கும்பல்தான் அது. அதில் ஒருவன்தான் வாசு. பார்ப்பதற்கு பசு போல் சாதுவாக இருப்பான். உண்மையின் அவன் ஒரு பசு தோல் போர்த்திய புலி என்று அவனுடன் நெருங்கிப் பழகியவர்களுக்குத்தான் தெரியும்.

அவன் வயது பதினெட்டு. ஆறாம் படிவத்தில் படிக்கிறான். குடும்பத்தில் எந்தவிதக் குறையும் இல்லை. கேட்டதை உடனே வாங்கிக் கொடுக்கும் தந்தை. மகன் செய்யும் சின்ன சின்ன விசயத்திற்கெல்லாம் பாராட்டி புகழும் தாய். வேறென்ன குறை?

இவன் ஏன் இரவில் மோட்டாரில் இப்படித் திரிய வேண்டும்? நண்பர்கள்! ஆம், நண்பர்கள்தான் இதற்குக் காரணம்! வாசு என்று ஆறாம் படிவத்தில் காலடி எடுத்து வைத்தானோ, அன்றே அமைதியாக ஓடிக்கொண்டிருந்த அவனது வாழ்க்கைப் படகு திசை மாற ஆரம்பித்துவிட்டது.

வாசு நல்லவன்தான். அன்றொருநாள் போட்ட சண்டையில் ஈடுபடாமல் இருந்திருந்தால் இன்றும் அவன் நல்லவனாகத்தான் இருந்திருப்பான். இதுதான் விதியா? அன்று பள்ளிக்கு வெளியே ஏற்பட்ட கைகலப்பில் தன் சக மாணவன் ஒருவனை வேறு ஒருவன் அடித்துவிட்டான் என்ற வெறியில் இவனும் சேர்ந்து சண்டைப் போட்டான்.

சண்டை என்றால் என்னவென்றே அறியாதவன், ஏனோ அன்று மட்டும் கொதித்தெழுந்தான். இவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில், வெளியில் இருந்த ஒரு குண்டர் கும்பலும் கலந்துக்கொண்டது. பிறகென்ன? இவன் கட்டையைத் தூக்க, அவன் கல்லைத் தூக்க என்று சண்டை மிகவும் விறுவிறுப்பாக நடந்துக்கொண்டிருந்தது.

அப்பொழுது சற்றும் எதிர்ப்பார்க்காத நேரத்தில், ஒருவன் விட்டெறிந்த கல் ஒன்று வாசுவின் நெற்றியைப் பதம் பார்த்தது.

சின்ன காயம்தான். ஆனால், இரத்தம் கொட்டோ கொட்டென்று கொட்டியது. இரத்தத்தைக் கண்டதும் அவனைக் காயப்படுத்தியவர்கள் விழுந்தடித்துக்கொண்டு ஓடினார்கள்.

அங்கிருந்த குண்டர் கும்பலில் ஒருவன் தனது கைக்குட்டையை எடுத்து வாசுவின் நெற்றியில் கட்டினான். வாசுவை அறியாமலேயே அவனது கண்கள் கலங்கின.

“நீ ஒன்னும் கவலைப்படாதே! உன்னை இரத்தம் வர்ற அளவுக்கு அடிச்சிட்டானுங்கல்ல. பரவாயில்லை. இன்னொரு நாள் மாட்டாமலா போயிட போறானுங்க,” என்று ஆறுதல் கூறினார்கள் அந்தக் குண்டர் கும்பலில் உள்ளவர்கள்.

அன்றிலிருந்து வாசுவிற்கும் அவர்களுக்கும் இடையே நட்பு மலர்ந்தது. அவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளிலில் ‘புரூம் புரூம்’ என்ற இரைச்சலோடுதான் சுற்றுவார்கள். வாசுவிற்கு உணவு வாங்கித் தருவார்கள். சினிமாவிற்குக் கூட்டிச் செல்வார்கள். பற்றாக்குறைக்கு அவனை மோட்டாரிலும் ஏற்றிக்கொண்டு சுற்றுவார்கள்.

அவர்களின் நட்பு கிடைத்ததிலிருந்து வாசு வீட்டில் தங்குவதில்லை. அவனது நண்பர்கள் எங்கு, எப்போது கூப்பிட்டாலும் உடனே சென்று விடுவான். வாசுவின் பெற்றோரோ மகனிடம் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டும் காணாதது போன்று இருந்தனர். வாசு எப்பொழுது எவ்வளவு பணம் கேட்டாலும் ஏனென்று கேட்காமல் கொடுத்தனர்.

வாசுவிற்குக் கிடைத்த புதிய நட்பால் அவன் பல சமயங்களில் பள்ளிக்கு மட்டம் போட்டான். அவனுடைய நண்பர்கள் அவனுக்குப் புகைப்பிடிக்கக் கற்றுக் கொடுத்தனர். மோட்டார் சைக்கிள் ஓட்டவும் கற்றுக்கொடுத்தனர்.

ஒருநாள் அவர்கள் வாசுவிடம் “டேய் வாசு! நீயும் எங்களை மாதிரி ஒரு மோட்டார் வாங்கிக்கோடா. இராத்திரியெல்லாம் ஜோரா ரேஸ் விடலாம். நீ இன்னும் மோட்டார் ரேஸ் பார்க்கல இல்லையா? இன்னைக்கு வந்துப் பாரு. ஜோக்கா இருக்கும்!” என்றனர்.

“நீங்கள் எல்லாரும் ரேஸ் விடறீங்களா? என்னிடம் சொல்லவே இல்லையே! அப்படியே என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாமில்லே?” என்றான் வாசு.

“அது இல்லேடா. நாங்கள் எல்லாரும் மோட்டார் வச்சிருக்கோம். நாங்க ரேஸ் விடும் பொழுது நீ மட்டும் தனியா என்ன பண்ணப் போறேன்னுதான்…” என்றான் ஒருவன்.

“நீ கவலையை விடு. இப்ப உனக்கு ரேஸ் பார்க்கணும். அவ்வளவுதானே? இன்னைக்கு நாங்க உன்ன ரேஸ் விட கூட்டிட்டுப் போறோம். நான் வேணும்னா உன்னை ஏத்திக்கிறேன் ஓ.கே?” என்றான் மற்றொருவன்.

“ரொம்பெ தேங்ஸ்டா. நீ வேணும்னா பாரேன். அடுத்த மாசம் என் பிறந்த நாள் பரிசா என் அப்பாகிட்ட இதே மாதிரி ஒரு பெரிய மோட்டார் சைக்கிள் வாங்கித்தரச் சொல்றேன்,” என்றான் வாசு.

அன்று இரவு தனது புதிய நண்பர்களோடு மோட்டார் ரேசில் கலந்துக்கொண்டான். அமைதியான இரவில் ‘புரூம் புரூம்’ என்ற இரைச்சலுடன் காற்றைக் கிழித்துக்கொண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுவது அவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. தானும் ஒருநாள் தனது சொந்த மோட்டார் சைக்கிளில் ரேஸ் விட மிகவும் விரும்பினான்.
பள்ளி விட்டு வீட்டிற்கு வந்ததும் தனக்குப் பெரிய மோட்டார் சைக்கிள் வாங்கித் தரும்படி தனது பெற்றோரை சதா நச்சரித்தான். அவனது பெற்றோரும் பின் விளைவுகளைப் பற்றி எண்ணாமல் பையன் ஆசைப்பட்டுகிறானே என்று பிறந்தநாள் பரிசாக அவனுக்கு ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்தனர்.

மறுநாள் பள்ளிக்குச் சென்ற வாசு தன் சக பள்ளித் தோழர்களிடம் தனது புதிய மோட்டார் சைக்கிளின் புகழ் பாடிக்கொண்டிருந்தான். அன்று முழுவதும் பாடங்களில் அவன் கவனம் செல்லவில்லை.

“எப்பொழுது பள்ளி முடியும்? தனக்காக பள்ளியின் முன் காத்துக் கொண்டிருக்கும் தனது நண்பர்களிடம் புதிய மோட்டார் சைக்கிளுடன் போய் நின்றால் அவர்களது உணர்வு எப்படி இருக்கும்? இன்று எங்கெங்கெல்லாம் சுற்றலாம்?” என்ற எண்ணத்திலேயே லயித்திருந்தான்.

நொடிக்கொரு தரம் தனது கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டான். அன்று அவனுக்கு நேரம் மிகவும் மெதுவாக ஓடுவதாகவே தெரிந்தது. மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு அன்றைய பள்ளி நேரத்தை மிகவும் சிரமத்துடன் கழித்தான். நேரம் ஆக ஆக அவனுக்குள் மகிழ்ச்சி தாண்டவமாடியது.

கடிகாரத்தைப் பார்த்தான். இரண்டாவதற்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. விறுவிறுவென்று தனது புத்தகப்பையை கட்டினான். அதனுடன் சேர்த்து தனது அறிவு, ஒழுக்கம், நன்னடத்தை ஆகியவற்றையும் மூட்டைக் கட்டினான். பள்ளி மணி அடித்தது.

முதல் ஆளாக, புத்தகப் பையை தூக்கிக்கொண்டு தனது மோட்டார் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தான். பக்கத்தில் நடந்த தனது பள்ளித் தோழர்களைக் கண்டும் காணாதவாறு தனது புதிய நண்பர்கள் குழுமியிருந்த இடத்தை நோக்கி மோட்டார் சைக்கிளைச் செலுத்தினான். வாசுவின் பள்ளித் தோழர்களும் அவனது ஆசிரியர்களும் அவனிடம் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்தனர். ஆனால், அவனது பெற்றோர்கள் மட்டும் ‘இதெல்லாம் வயசுக் கோளாறு. இந்த வயசில் இப்படித்தான் நடப்பானுங்க. போகப் போக சரியாகிடும்’ என்று இருந்தனர்.

வாசுவின் மோட்டார் நண்பர்கள் அவனது புதிய மோட்டாரை வானளாவப் புகழ்ந்தனர். வாசுவிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அன்று இரவு மோட்டார் பந்தயம் விட அவனது நண்பர்கள் அவனையும் அழைத்தனர். ஆனால் வாசுவோ அன்று தன்னால் வர முடியாது என்று கூறினான். அதில் அவனுக்குச் சற்று வருத்தமும் இருந்தது.

“ஏய், உனக்கு என்னாச்சுடா? இவ்வளவு கஷ்டப்பட்டு மோட்டார் வாங்கிட்டு ரேஸ் விட கூப்பிட்டா வரமாட்ற? பின்ன எதுக்கு நீ இந்த மோட்டார் வாங்கின?” என்றான் அவர்களில் ஒருவன்.

“இல்ல…நேத்துதான் இந்த மோட்டார் வாங்கினேன். அதுக்காட்டியும் இன்னைக்கு இராத்திரி மோட்டாரை எடுத்துக்கிட்டுக் கிளம்பினால் வீட்ல சந்தேகப்படுவாங்க. இரண்டு மூன்று நாள் சென்ற பிறகு நானும் ரேஸில் கலந்துக்கிறேன். சரியா?” என்றான் வாசு.

“சரி, வீட்டுக்குப் போய் சாப்பிட்டு வா. நாங்க உனக்காக காத்திருக்கோம். அப்புறமா போய் எங்காவது சுத்தலாம். உன்னோட வண்டி எப்படி ஓடுதுன்னு நாங்களும் பார்க்கணுமில்ல,” என்றான் மற்றொருவன்.

வாசுவும் அவர்களிடம் விடைப்பெற்றுக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளை அழுத்தினான். ‘புரூம் புரூம்’ என்ற இரைச்சல் காதைப் பிளந்தது. வாசுவின் புதிய நண்பர்களைத் தவிர அங்கு நின்றிருந்த மற்றவர்கள் அவனை எரிச்சலோடு பார்த்தனர். வாசுவிற்கும் அவன் நண்பர்களுக்கும் அது மிகவும் பெருமையாக இருந்தது.
வாசு பேரிரைச்சலுடன் அவ்விடத்தை விட்டு நகர்ந்ததும், அவனது நண்பர்களும் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் அனைவரும் சென்றவுடன் அங்கிருந்த மற்றவர்கள் ‘இவனுங்கெல்லாம் திருந்தவே மாட்டானுங்க’ என்று முணுமுணுத்தனர்.

அன்று வாசுவும் அவன் நண்பர்களும் ஊர் முழுக்க மோட்டாரில் சுற்றினர். மதியம் மூன்று மணிக்கு வீட்டை விட்டு கிளம்பிய வாசு, இரவு எட்டுக்குத்தான் வீடு திரும்பினான். மகன் சோர்வுடன் இருந்ததால் அவன் தாயாரும் அவனிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. வாசுவுன் எதுவும் சொல்லவில்லை. குளித்தவுடன் உணவருந்திவிட்டு படுக்கைக்குச் சென்றான். இப்படியே பல நாட்கள் கடந்தன.

ஒருநாள் வாசு வழக்கம் போல் எழுந்து பள்ளிக்குத் தயாரானான். ஆனால் அவனது புத்தகப் பையிலோ புத்தகத்திற்குப் பதிலாக மாற்று உடையை வைத்திருந்தான். அதோடு கூட ஒரு சிகரெட் பாக்கெட்டும் வைத்திருந்தான்.

எப்பொழுதும் வேலை வேலை என்று பணத்தையே துரத்திக் கொண்டிருக்கும் தந்தை அன்று வீட்டில் இருந்து தனது நடவடிக்கைகளைக் கவனிப்பதைக் கண்டான். அன்றுதான் முதல் முதலாக தன் மகனைப் பார்ப்பது போல் வாசுவின் தந்தை அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். அம்மா தன்னைப் பற்றி ஏதாவது சொல்லியிருப்பாரோ என்ற பயம் வாசுவின் மனம் முழுவது பரவியது.

கணவன் மகனையே உன்னிப்பாக கவனிப்பதைக் கண்ட வாசுவின் தாயார் கணவனிடன் சென்று, “ஏங்க அவனை அப்படிப் பார்த்துக்கிட்டே இருக்கீங்க?” என்று வினவினாள்.


தொடரும்...

வெள்ளி, 5 டிசம்பர், 2008

நீ இல்லாததால்…


பூவில் வாசம் இல்லை
வானில் நிலவு இல்லை
இரவில் கனவு இல்லை
நீ என்னருகில் இல்லாததால்!

தென்றல் சுடுகின்றது
நிலவு கொதிக்கின்றது
தேன் கூட கசக்கின்றது
நீ என்னருகில் இல்லாததால்!

காது கேட்கவில்லை
கண்ணில் பார்வையில்லை
மொழிகள் நினைவில்லை
நீ என்னருகில் இல்லாததால்!

நெஞ்சம் தவிக்கின்றது
உடல் கனக்கின்றது
ஆன்மா துடிக்கின்றது
நீ என்னருகில் இல்லாததால்!

பேச்சில் பொருளில்லை
உணவில் ருசியில்லை
உடலில் வலுவில்லை
நீ என்னருகில் இல்லாததால்!

தனிமையில் வாழ்கிறேன்
நம்பிக்கை இழக்கிறேன்
உலகையே வெறுக்கிறேன்
நீ என்னருகில் இல்லாததால்!

யவன ராணி – சாண்டில்யன்

முன்னுரை
சாண்டில்யனின் பாராட்டத்தக்கப் படைப்புகளில் ஒன்று ‘யவன ராணி’ என்ற நாவலாகும். இந்நாவல் சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமிழகத்தைப் பற்றிக் கூறுகிறது. தமிழர்களின் சிறப்பையும் வெளிநாட்டார் அவர்களிடம் கைக்கட்டி சேவகம் புரிந்ததையும் இந்நாவலின் வழி அறிய முடிகிறது. இதில் முக்கியக் கதாப்பாத்திரங்களாக, யவன ராணி, இளஞ்செழியன், ஹிப்பலாஸ், டைபீரியஸ், பூவழகி, கரிகாலன் ஆகியோர் வருகின்றனர். ஏராளமான துணைக்கதாப்பாத்திரங்கள் காணப்படுகின்றன.

கதையோட்டம்
ஒருநாள் கரையோரத்தில் படைத்தலைவனான இளஞ்செழியனின் கால்களில் யவன ராணி தட்டுப்படுகிறாள். அவள் தமிழகத்தில் கால் வைத்த அன்றே சோழ நாடு மன்னரை இழந்து குழப்பத்தில் ஆழ்கிறது. இளவரசர் கரிகாலன் தலைமறைவாகிறார். கொடியவனான இருங்கோவேள் ஆட்சிபீடத்தில் அமருகிறான். புகாரை யவனர்களுக்கு அளிக்க முடிவு செய்கிறான். இதனையறிந்த இளஞ்செழியன் புகாரையும் தமிழகத்தையும் காப்பாற்ற போராடுகிறான். டைபீரியஸ் படைத்தலைவனுக்கு மயக்கத் துளிகளைக் கொடுத்து யவனர் கப்பல் ஒன்றில் அனுப்பிவிடுகிறான். கப்பல் பயணத்தில் இளஞ்செழியன் பல வாறான இன்னல்களுக்கு ஆளாகினாலும், அத்தனையும் வெற்றிக்கொண்டு தாயகத்திற்குத் திரும்புகிறான். ஆட்சி புரியும் எண்ணத்துடன் வந்த யவன ராணி படைத்தலைவன் மேல் காதல் கொண்டு அவனுக்கு பல வழிகளில் உதவி புரிகிறாள். ஏற்கனவே பூவழகியிடம் இதயத்தைப் பறிக்கொடுத்த இளஞ்செழியன் யவன ராணியின் அழகில் தடுமாறவே செய்கிறாள். இறுதியாக, இளஞ்செழியன் வகுத்த போர் திட்டத்தால் கரிகாலன் வெற்றியுடன் அரியணையில் அமருகிறான். யவண ராணி டைபீரியஸால் கொல்லப்படுகிறாள். இளஞ்செழியன் பூவழகியை மணந்து இன்பமாக வாழ்கிறான்.

காதல்
இந்நாவலில் அக்காலத்து தமிழர்களின் செல்வமும், வீரமும், திறமையும், தந்திரங்களும் பல இடங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இருப்பினும், நாவலைப் படித்து முடித்தப் பிறகு யவன ராணியின் காதலும் தியாகமுமே மனதில் மேலோங்கி நிற்கிறது. தமிழகத்தில் ஆட்சி புரியும் எண்ணத்துடன் வந்த யவன ராணி தமிழனான இளஞ்செழியன் மீது மையல் கொள்கிறாள். படைத்தலைவன் மீது அவள் கொண்ட காதல், சொந்த நாட்டையும் கடமையையும் மறக்கச் செய்கிறது. யவன ராணி தனது இலட்சியத்தை விட தான் மனதால் வரித்திருக்கும் படைத்தலைவனின் இலட்சியத்தை நிறைவேற்ற அரும் பாடுபடுகிறாள். இதனால் ராணியாக இருந்தும் டைபீரியஸால் அரண்மனையிலேயே சிறை வைக்கப்படுகிறாள். பல சோதனைகளைச் சந்தித்த போதும் ராணியின் காதல் சிறிதும் உறுதி குலையவில்லை. படைத்தலைவனின் மனதில் பூவழகி இருப்பதை அறிந்திருந்தும் அவள் அவனை விரும்புவதை நிறுத்தவில்லை. தன் காதலின் மீது அவளுக்கிருந்த உறுதி வியப்பளிக்கிறது. உயிருக்கே அபாயம் விளையும் தருணத்தில் கூட அவள் படைத்தலைவனுக்கு உதவுதை பேருவகையாக, மனைவி கணவனுக்குச் செய்யும் கடமையாகக் கருதுகிறாள். இறுதியாக கடமையை மறந்து தேச துரோகம் செய்தமைக்காக டைபீரிஸால் கொல்லப்படுகிறாள். அவள் இறுதி மூச்சி படைத்தலைவனின் அணைப்பில் நிற்கிறது. யவன ராணியின் காதலும் தியாகமும் மகத்தானது. அதனை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

முடிவுரை
சாண்டில்யன் இந்நாவலுக்கு மற்ற பெயர்களை விடுத்து ‘யவன ராணி’ என்று பெயர் வைத்தமைக்கு அர்த்தம் இருக்கவே செய்கிறது. யவன ராணியின் தியாகம் படைத்தலைவன் திறமையையும், கரிகாலன் வீரத்தையும், பூவழகியின் அழகையும் மிஞ்சி நிற்பதை யாராலும் மறுக்க முடியாது. ராணியின் காதல் அவளைப் போலவே அழகானது. தான் காதலித்தவன் தன்னை முழு மனதோடு காதலிக்கவில்லை என்பதை அறிந்தும் அவள் அவனை வெறுக்கவோ அவன் மீது கோபப்படவோ இல்லை. மாறாக, அவனுக்குப் பல வகைகளில் உதவி புரிந்து உறுதுணையாக இருக்கிறாள். யவன ராணியின் காதல் மரணத்தையும் மிஞ்சி நிற்கின்றது. நாவலில் விமர்சிப்பதற்கு பல விசயங்கள் இருப்பினும் யவன ராணியின் காதலை மட்டுமே சிறப்பித்துக் கூறுவதற்கு மன்னிக்கவும். என்னைப் பொருத்தமட்டில் யவன ராணியின் காதல் தியாகத்திற்கு நாவலில் காணப்படும் எவரும், எதுவும் இணையாகாது!

திங்கள், 1 டிசம்பர், 2008

பாசம்!

பந்தமாம் பாசமாம்
பந்தாவில் குறைச்சலில்லை
பணத்தில் நேர்மையில்லை
பாசத்தில் உண்மையில்லை!

போலியான பாசத்தைக் காட்டி
பணத்தைக் கறக்கும் காலமிது
பாசமெனும் கயிரைக் கட்டி
பல மனிதனை இழுக்கும் உலகமிது!

பெண்ணின் பாசம் வேசமடா
ஆணின் பாசம் மோசமடா
பெற்றோர் பாசம் கடமையடா
பக்தனின் பாசம் பக்தியடா!

பாவிகள் நிறைந்த உலகத்திலே
பாசத்தைச் தேடுதல் மடமையடா
பாசம் என்பது உள்ளத்திலே
பரவிக் கிடக்கும் உணர்ச்சியடா!

பந்தம் பாசம் எல்லாமே
தன்னால் வந்தால் பெருமையடா
பணத்தைப் பார்த்து வருவதென்றால்
அதுவே உனக்கு எதிரியடா!