செவ்வாய், 9 டிசம்பர், 2008

திசை மாறிய படகு (பாகம் 1)


‘புரூம் புரூம்’ என்ற இரைச்சலுடன் ஐந்தாறு மோட்டார் சைக்கிள்கள் அந்த இரவின் அமைதியைக் கிழித்துக்கொண்டுச் சென்றன. நடுநிசியின் யார் அப்படி மோட்டார் ஓட்டுகிறார்கள்? இப்படி நடுநிசியில் எல்லாருடைய தூக்கத்தையும் கெடுக்கும் இவர்கள் யார்?

பதினெட்டு வயதிலிருந்து இருபத்தைந்து வயதுக்குட்பட்ட ஓர் இந்திய இளைஞர் கும்பல்தான் அது. அதில் ஒருவன்தான் வாசு. பார்ப்பதற்கு பசு போல் சாதுவாக இருப்பான். உண்மையின் அவன் ஒரு பசு தோல் போர்த்திய புலி என்று அவனுடன் நெருங்கிப் பழகியவர்களுக்குத்தான் தெரியும்.

அவன் வயது பதினெட்டு. ஆறாம் படிவத்தில் படிக்கிறான். குடும்பத்தில் எந்தவிதக் குறையும் இல்லை. கேட்டதை உடனே வாங்கிக் கொடுக்கும் தந்தை. மகன் செய்யும் சின்ன சின்ன விசயத்திற்கெல்லாம் பாராட்டி புகழும் தாய். வேறென்ன குறை?

இவன் ஏன் இரவில் மோட்டாரில் இப்படித் திரிய வேண்டும்? நண்பர்கள்! ஆம், நண்பர்கள்தான் இதற்குக் காரணம்! வாசு என்று ஆறாம் படிவத்தில் காலடி எடுத்து வைத்தானோ, அன்றே அமைதியாக ஓடிக்கொண்டிருந்த அவனது வாழ்க்கைப் படகு திசை மாற ஆரம்பித்துவிட்டது.

வாசு நல்லவன்தான். அன்றொருநாள் போட்ட சண்டையில் ஈடுபடாமல் இருந்திருந்தால் இன்றும் அவன் நல்லவனாகத்தான் இருந்திருப்பான். இதுதான் விதியா? அன்று பள்ளிக்கு வெளியே ஏற்பட்ட கைகலப்பில் தன் சக மாணவன் ஒருவனை வேறு ஒருவன் அடித்துவிட்டான் என்ற வெறியில் இவனும் சேர்ந்து சண்டைப் போட்டான்.

சண்டை என்றால் என்னவென்றே அறியாதவன், ஏனோ அன்று மட்டும் கொதித்தெழுந்தான். இவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில், வெளியில் இருந்த ஒரு குண்டர் கும்பலும் கலந்துக்கொண்டது. பிறகென்ன? இவன் கட்டையைத் தூக்க, அவன் கல்லைத் தூக்க என்று சண்டை மிகவும் விறுவிறுப்பாக நடந்துக்கொண்டிருந்தது.

அப்பொழுது சற்றும் எதிர்ப்பார்க்காத நேரத்தில், ஒருவன் விட்டெறிந்த கல் ஒன்று வாசுவின் நெற்றியைப் பதம் பார்த்தது.

சின்ன காயம்தான். ஆனால், இரத்தம் கொட்டோ கொட்டென்று கொட்டியது. இரத்தத்தைக் கண்டதும் அவனைக் காயப்படுத்தியவர்கள் விழுந்தடித்துக்கொண்டு ஓடினார்கள்.

அங்கிருந்த குண்டர் கும்பலில் ஒருவன் தனது கைக்குட்டையை எடுத்து வாசுவின் நெற்றியில் கட்டினான். வாசுவை அறியாமலேயே அவனது கண்கள் கலங்கின.

“நீ ஒன்னும் கவலைப்படாதே! உன்னை இரத்தம் வர்ற அளவுக்கு அடிச்சிட்டானுங்கல்ல. பரவாயில்லை. இன்னொரு நாள் மாட்டாமலா போயிட போறானுங்க,” என்று ஆறுதல் கூறினார்கள் அந்தக் குண்டர் கும்பலில் உள்ளவர்கள்.

அன்றிலிருந்து வாசுவிற்கும் அவர்களுக்கும் இடையே நட்பு மலர்ந்தது. அவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளிலில் ‘புரூம் புரூம்’ என்ற இரைச்சலோடுதான் சுற்றுவார்கள். வாசுவிற்கு உணவு வாங்கித் தருவார்கள். சினிமாவிற்குக் கூட்டிச் செல்வார்கள். பற்றாக்குறைக்கு அவனை மோட்டாரிலும் ஏற்றிக்கொண்டு சுற்றுவார்கள்.

அவர்களின் நட்பு கிடைத்ததிலிருந்து வாசு வீட்டில் தங்குவதில்லை. அவனது நண்பர்கள் எங்கு, எப்போது கூப்பிட்டாலும் உடனே சென்று விடுவான். வாசுவின் பெற்றோரோ மகனிடம் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டும் காணாதது போன்று இருந்தனர். வாசு எப்பொழுது எவ்வளவு பணம் கேட்டாலும் ஏனென்று கேட்காமல் கொடுத்தனர்.

வாசுவிற்குக் கிடைத்த புதிய நட்பால் அவன் பல சமயங்களில் பள்ளிக்கு மட்டம் போட்டான். அவனுடைய நண்பர்கள் அவனுக்குப் புகைப்பிடிக்கக் கற்றுக் கொடுத்தனர். மோட்டார் சைக்கிள் ஓட்டவும் கற்றுக்கொடுத்தனர்.

ஒருநாள் அவர்கள் வாசுவிடம் “டேய் வாசு! நீயும் எங்களை மாதிரி ஒரு மோட்டார் வாங்கிக்கோடா. இராத்திரியெல்லாம் ஜோரா ரேஸ் விடலாம். நீ இன்னும் மோட்டார் ரேஸ் பார்க்கல இல்லையா? இன்னைக்கு வந்துப் பாரு. ஜோக்கா இருக்கும்!” என்றனர்.

“நீங்கள் எல்லாரும் ரேஸ் விடறீங்களா? என்னிடம் சொல்லவே இல்லையே! அப்படியே என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாமில்லே?” என்றான் வாசு.

“அது இல்லேடா. நாங்கள் எல்லாரும் மோட்டார் வச்சிருக்கோம். நாங்க ரேஸ் விடும் பொழுது நீ மட்டும் தனியா என்ன பண்ணப் போறேன்னுதான்…” என்றான் ஒருவன்.

“நீ கவலையை விடு. இப்ப உனக்கு ரேஸ் பார்க்கணும். அவ்வளவுதானே? இன்னைக்கு நாங்க உன்ன ரேஸ் விட கூட்டிட்டுப் போறோம். நான் வேணும்னா உன்னை ஏத்திக்கிறேன் ஓ.கே?” என்றான் மற்றொருவன்.

“ரொம்பெ தேங்ஸ்டா. நீ வேணும்னா பாரேன். அடுத்த மாசம் என் பிறந்த நாள் பரிசா என் அப்பாகிட்ட இதே மாதிரி ஒரு பெரிய மோட்டார் சைக்கிள் வாங்கித்தரச் சொல்றேன்,” என்றான் வாசு.

அன்று இரவு தனது புதிய நண்பர்களோடு மோட்டார் ரேசில் கலந்துக்கொண்டான். அமைதியான இரவில் ‘புரூம் புரூம்’ என்ற இரைச்சலுடன் காற்றைக் கிழித்துக்கொண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுவது அவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. தானும் ஒருநாள் தனது சொந்த மோட்டார் சைக்கிளில் ரேஸ் விட மிகவும் விரும்பினான்.
பள்ளி விட்டு வீட்டிற்கு வந்ததும் தனக்குப் பெரிய மோட்டார் சைக்கிள் வாங்கித் தரும்படி தனது பெற்றோரை சதா நச்சரித்தான். அவனது பெற்றோரும் பின் விளைவுகளைப் பற்றி எண்ணாமல் பையன் ஆசைப்பட்டுகிறானே என்று பிறந்தநாள் பரிசாக அவனுக்கு ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்தனர்.

மறுநாள் பள்ளிக்குச் சென்ற வாசு தன் சக பள்ளித் தோழர்களிடம் தனது புதிய மோட்டார் சைக்கிளின் புகழ் பாடிக்கொண்டிருந்தான். அன்று முழுவதும் பாடங்களில் அவன் கவனம் செல்லவில்லை.

“எப்பொழுது பள்ளி முடியும்? தனக்காக பள்ளியின் முன் காத்துக் கொண்டிருக்கும் தனது நண்பர்களிடம் புதிய மோட்டார் சைக்கிளுடன் போய் நின்றால் அவர்களது உணர்வு எப்படி இருக்கும்? இன்று எங்கெங்கெல்லாம் சுற்றலாம்?” என்ற எண்ணத்திலேயே லயித்திருந்தான்.

நொடிக்கொரு தரம் தனது கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டான். அன்று அவனுக்கு நேரம் மிகவும் மெதுவாக ஓடுவதாகவே தெரிந்தது. மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு அன்றைய பள்ளி நேரத்தை மிகவும் சிரமத்துடன் கழித்தான். நேரம் ஆக ஆக அவனுக்குள் மகிழ்ச்சி தாண்டவமாடியது.

கடிகாரத்தைப் பார்த்தான். இரண்டாவதற்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. விறுவிறுவென்று தனது புத்தகப்பையை கட்டினான். அதனுடன் சேர்த்து தனது அறிவு, ஒழுக்கம், நன்னடத்தை ஆகியவற்றையும் மூட்டைக் கட்டினான். பள்ளி மணி அடித்தது.

முதல் ஆளாக, புத்தகப் பையை தூக்கிக்கொண்டு தனது மோட்டார் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தான். பக்கத்தில் நடந்த தனது பள்ளித் தோழர்களைக் கண்டும் காணாதவாறு தனது புதிய நண்பர்கள் குழுமியிருந்த இடத்தை நோக்கி மோட்டார் சைக்கிளைச் செலுத்தினான். வாசுவின் பள்ளித் தோழர்களும் அவனது ஆசிரியர்களும் அவனிடம் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்தனர். ஆனால், அவனது பெற்றோர்கள் மட்டும் ‘இதெல்லாம் வயசுக் கோளாறு. இந்த வயசில் இப்படித்தான் நடப்பானுங்க. போகப் போக சரியாகிடும்’ என்று இருந்தனர்.

வாசுவின் மோட்டார் நண்பர்கள் அவனது புதிய மோட்டாரை வானளாவப் புகழ்ந்தனர். வாசுவிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அன்று இரவு மோட்டார் பந்தயம் விட அவனது நண்பர்கள் அவனையும் அழைத்தனர். ஆனால் வாசுவோ அன்று தன்னால் வர முடியாது என்று கூறினான். அதில் அவனுக்குச் சற்று வருத்தமும் இருந்தது.

“ஏய், உனக்கு என்னாச்சுடா? இவ்வளவு கஷ்டப்பட்டு மோட்டார் வாங்கிட்டு ரேஸ் விட கூப்பிட்டா வரமாட்ற? பின்ன எதுக்கு நீ இந்த மோட்டார் வாங்கின?” என்றான் அவர்களில் ஒருவன்.

“இல்ல…நேத்துதான் இந்த மோட்டார் வாங்கினேன். அதுக்காட்டியும் இன்னைக்கு இராத்திரி மோட்டாரை எடுத்துக்கிட்டுக் கிளம்பினால் வீட்ல சந்தேகப்படுவாங்க. இரண்டு மூன்று நாள் சென்ற பிறகு நானும் ரேஸில் கலந்துக்கிறேன். சரியா?” என்றான் வாசு.

“சரி, வீட்டுக்குப் போய் சாப்பிட்டு வா. நாங்க உனக்காக காத்திருக்கோம். அப்புறமா போய் எங்காவது சுத்தலாம். உன்னோட வண்டி எப்படி ஓடுதுன்னு நாங்களும் பார்க்கணுமில்ல,” என்றான் மற்றொருவன்.

வாசுவும் அவர்களிடம் விடைப்பெற்றுக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளை அழுத்தினான். ‘புரூம் புரூம்’ என்ற இரைச்சல் காதைப் பிளந்தது. வாசுவின் புதிய நண்பர்களைத் தவிர அங்கு நின்றிருந்த மற்றவர்கள் அவனை எரிச்சலோடு பார்த்தனர். வாசுவிற்கும் அவன் நண்பர்களுக்கும் அது மிகவும் பெருமையாக இருந்தது.
வாசு பேரிரைச்சலுடன் அவ்விடத்தை விட்டு நகர்ந்ததும், அவனது நண்பர்களும் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் அனைவரும் சென்றவுடன் அங்கிருந்த மற்றவர்கள் ‘இவனுங்கெல்லாம் திருந்தவே மாட்டானுங்க’ என்று முணுமுணுத்தனர்.

அன்று வாசுவும் அவன் நண்பர்களும் ஊர் முழுக்க மோட்டாரில் சுற்றினர். மதியம் மூன்று மணிக்கு வீட்டை விட்டு கிளம்பிய வாசு, இரவு எட்டுக்குத்தான் வீடு திரும்பினான். மகன் சோர்வுடன் இருந்ததால் அவன் தாயாரும் அவனிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. வாசுவுன் எதுவும் சொல்லவில்லை. குளித்தவுடன் உணவருந்திவிட்டு படுக்கைக்குச் சென்றான். இப்படியே பல நாட்கள் கடந்தன.

ஒருநாள் வாசு வழக்கம் போல் எழுந்து பள்ளிக்குத் தயாரானான். ஆனால் அவனது புத்தகப் பையிலோ புத்தகத்திற்குப் பதிலாக மாற்று உடையை வைத்திருந்தான். அதோடு கூட ஒரு சிகரெட் பாக்கெட்டும் வைத்திருந்தான்.

எப்பொழுதும் வேலை வேலை என்று பணத்தையே துரத்திக் கொண்டிருக்கும் தந்தை அன்று வீட்டில் இருந்து தனது நடவடிக்கைகளைக் கவனிப்பதைக் கண்டான். அன்றுதான் முதல் முதலாக தன் மகனைப் பார்ப்பது போல் வாசுவின் தந்தை அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். அம்மா தன்னைப் பற்றி ஏதாவது சொல்லியிருப்பாரோ என்ற பயம் வாசுவின் மனம் முழுவது பரவியது.

கணவன் மகனையே உன்னிப்பாக கவனிப்பதைக் கண்ட வாசுவின் தாயார் கணவனிடன் சென்று, “ஏங்க அவனை அப்படிப் பார்த்துக்கிட்டே இருக்கீங்க?” என்று வினவினாள்.


தொடரும்...

8 கருத்துகள்:

புதியவன் சொன்னது…

முதல் கதை அதுவும் தொடர்கதை...
நல்ல எழுத்து நடை...முதல் பகுதியின் முடிவை ஒரு எதிர் பார்ப்போடு முடித்திருப்பது முன்பே நிறைய கதைகள் எழுதி பழக்கப் பட்டவர்களால் தான் முடியும்...

தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்...

நட்புடன் ஜமால் சொன்னது…

தொடர் கதையுமா.

ம்ம்ம். தொடருங்கள்.

வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் சொன்னது…

\\அவனது பெற்றோரும் பின் விளைவுகளைப் பற்றி எண்ணாமல்\\

இப்படித்தான் நடந்துவிடுகிறது.

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

இன்றய இளைஞர்கள் மத்தியில் நடக்கும் ஒரு வருந்த தக்க செயல் தான்... கதையில் வடித்திருக்கிறீர்கள்... அடுத்த பாகத்தில் மீதியை காண்கிறேன்...

நட்புடன் ஜமால் சொன்னது…

ஏங்க நீங்களும் படகுல திசை மாறி போய்டீங்களா...

உங்கள கானோமேன்னு கேட்டேன்

பெயரில்லா சொன்னது…

கைங்க சாவடி.. மோட்டர் வாங்கி மறுநாளே ரேஸ் உடக்கூடாதுன்னு கைங்களுக்கு தெரியும். உங்களுக்கு தெரில பாவம்!

சரக்குங்க இருந்தாதான ரேஸ் உடுறானுங்க.. இந்த காலத்து பொம்பள பிள்ளங்க ரொம்ப யோக்கியமா இருக்குற மாறிலாம் கதை எழுத கூடாது.. என்ன நான் சொல்றது..

வாசு சரக்க பின்னாடி உக்கார வெச்சிகிட்டு ரேஸ் உடுறதா எழுதுங்க.. கத சாவடி சக்கோய்யா இருக்கும்..

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,

புதியவன் அவர்களே, இது தொடர்கதை அல்ல... நான் முதன் முதலில் எழுதிய சிறுகதை... 2000-ஆம் ஆண்டில் மலேசிய தமிழ் நேசன் நாளிதழில் வெளிவந்தது. 8 வருடங்களுக்கு முன்பிருந்த எனது எழுத்தினை சிறிதும் மாற்றம் செய்யாமலே பதிவேற்றியுள்ளேன். குறைகள் நிறைய உண்டு. தெரிந்திருந்தும் திருத்த மனம் வரவில்லை...

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,

அதிரை ஜமாஸ்...இதோ வந்துட்டேனுங்க... படகு திசை மாறவில்லை...செல்ல வேண்டிய இடத்துக்கு திசை மாறாமல் சென்று திரும்பியதால் சிறிது கால தாமதம்...
மன்னிக்கவும்...கருத்துக்கு நன்றி.

விக்னேஸ்வரன் அவர்களே,நீங்கள் கூறுவது உண்மைதான்... இது 8 வருடங்களுக்கு முன்பு நான் பள்ளியில் கண்ட இளைஞர்களின் போக்கு. இன்று இன்னும் மோசமாக மாறியிருக்கலாம்...

வணக்கம் Gvan,
//சரக்குங்க இருந்தாதான ரேஸ் உடுறானுங்க.. இந்த காலத்து பொம்பள பிள்ளங்க ரொம்ப யோக்கியமா இருக்குற மாறிலாம் கதை எழுத கூடாது.. என்ன நான் சொல்றது..//

சரக்கு இல்லன்னாலும் ரேஸ் விடரானுங்கப்பா... பொம்பள பிள்ளைங்க யோக்கியம்னு சொல்ல வரல...இன்னும் கதைகள் இருக்கு... அவங்களையும் விட்டுவைக்கல. அத வேற கதையில பார்ப்போம்... கருத்துக்கு நன்றி...