வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

கண்ணீர் அஞ்சலி…




அம்மா
எம் தலைவனை கருவறையில்
ஈரைந்துத் திங்கள் சுமந்தவளே
நீ வாழ்ந்த காலத்தில் நான் வாழ்ந்த போதிலும்
உன்னை நேரில் சந்திக்க இயலா பாவியானேனே!

ஈடு இணையற்றத் தலைவனை
உலகத் தமிழர் போற்றும் தலைமகனை
தவமாய் பெற்று எங்களுக்கருளிய தாயே
உனக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவதற்கு
கண்ணீர் வற்றிய நிலையில் நாங்கள்

கோடிக்கணக்கான தமிழர்கள் மனதில்
கோயில் கொண்ட தெய்வமாய் நீயும் உன் மகனும்
ஆனால், உனக்கு இறுதி அஞ்சலிச் செய்யவும் துணிவின்றி
மண்ணை இழந்து, மானம் இழந்து எம் மக்கள்
மரம் போல் கிடக்கின்றனர்!

அரச மரியாதையுடன்
அடக்கம் செய்ய வேண்டிய உன்னை
அனாதைப் பிணம் போல் எரியவிட்டுவிட்டோமே
ஈனப்பிறவிகள் நாய்களை எரித்து கேவலம் செய்ததை
என்னவென்று சொல்வேனம்மா?

இரத்தம் கொதிக்கிறது
உடல் சூடேறி நரம்புகள் புடைக்கின்றன
விரல்கள் தானாக மேலுதட்டைத் தொட
எமக்கு முறுக்குவதற்கு மீசை மட்டும் அல்ல
வலிமையும் இல்லை என்பதை அறிந்துக்கொண்டேன்!

அஸ்தியைக் காற்றிலே பரக்கவிட்டவர்கள்
அந்தக் காற்றினையே சுவாசமாய் சுவாசிக்கப்போம்
என்பதனை மறந்தனர் போலும்
எங்கள் ஒவ்வோர் மூச்சினிலும் உன் ஆத்மா
சங்கமம் செய்திருக்கிறதம்மா

’கலைஞர் ஐயா ஏன் திருப்பி அனுப்பிவிட்டார்?’
கேட்டாயா தாயே இந்தக் கேள்வியினை
அவனை ஐயா என்று அழைத்தாயா அம்மா?
அந்தக் ‘கொலை’ஞனைக் கலைஞன் என்றாயா?
வலிக்கிறது தாயே இதயம் கனத்து வலிக்கிறது!

நீயுமா நம்பினாய் அவனை?
சிகிச்சைக்காகச் சென்ற உன்னை
சிம்மாசனம் பறிபோய்விடும் என்று
சென்னையிலேயே திருப்பியனுப்பிய பாதகனை
ஐயா என ஏன் அழைத்தாய் தாயே?

தமன்னாவுக்கும் அனுஷ்காவுக்கும்
கலைச் சேவைக்காக ‘கலைமாமணி’ விருது
உடுப்பும் இடுப்பும் குறைத்ததால் வழங்கினானோ?
உனக்காக விருது கொடுக்கவேண்டாம்
சிகிச்சைப் பெற அனுமதி கொடுத்திருக்கலாமே?

இவ்வளவு சீக்கிரம்
எங்களைப் பிரிந்துச் சென்றுவிட்டாயே
உன் காலில் விழுந்துத் தொழ வேண்டும்
உன்னை ஆரத்தழுவ வேண்டும் என்ற எண்ணமெல்லாம்
எட்டாக் கனியாய் ஆகிவிட்டதே அம்மா

பெற்ற மக்களுடன் இருக்க வேண்டிய நீ
எம் மக்களின் நலனுக்காக தனித்திருந்து
புத்திர சோகத்தில் வாடி வதங்கி
இன்று உதிர்ந்து போய் விட்டாயே
இதனை எப்படித் தாங்குவேன் தாயே?

வீரத்தமிழ்மகனைப் பெற்றெடுத்தவளே
கோழையாய் இருக்கிறதம்மா எமது இனம்
விரப்பாலூட்டி தாலாட்டி சீராட்ட
உன்னைப் போல் தாய் ஒருத்தி
இனி அவனியில் பிறப்பாளா?

என் அன்னையே,
எங்களை அழ வைத்துவிட்டாயே
எம்மைக் கதற வைத்துவிட்டாயே
எம் இனத்தைத் தவிக்க வைத்துவிட்டாயே
தாயே, நீ மீண்டும் பிறவியெடுக்க மாட்டாயா?

சிங்கள இனவெறி நாய்கள்
உன் சடலத்தைக் கூட விட்டுவைக்கவில்லையம்மா
இது உனக்கு வந்த அவமானம் அல்ல
நம் ஒட்டுமொத்த தமிழ் இனத்தினையே
பிணம் தின்னும் ஓநாய்கள் அழிக்கப்பார்க்கின்றன!

விடமாட்டோம் தாயே!
உனது தியாகமும் என் தலைவனின் கனவும்
கரைந்துப்போகவும் கலைந்துப்போகவும்
ஒரு காலும் நாங்கள் விடமாட்டோம்
கடைசி மூச்சி உள்ளவரைப் போராடுவோம்!

தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்
இதனை உலகிற்குப் புரிய வைப்போம்
துணிந்தவனுக்கு மரணமும் துச்சம்தான்
இனி இழப்பதற்கு எம்மிடம் ஒன்றுமில்லை
ஆனால் அடைவதற்கு இலட்சியம் உண்டு!

வீரத்தாயே, தியாகச் சுடரே
எந்த மண்ணில் நீ உயிர் நீத்தாயோ
அந்த மண்ணை நாம் மீட்போம்
இது தமிழீழம் என்று உரக்கச் சொல்வோம்
புலிக்கொடியை நாட்டுவோம்!

ஏழு கடல்கள் தாண்டி
ஏழு கண்டங்கள் கடந்து
உலகத் தமிழர்கள் இணைந்து
ஈழத்தை நெஞ்சில் சுமந்துப் போராடுவோம்
கடைசித் தமிழன் உள்ளவரை!

புதன், 23 பிப்ரவரி, 2011

கிழக்கு வாசல் திரைப்படம் காட்டும் பெண்களின் வாழ்க்கை



முன்னுரை
இயக்குனர் ஆர். வி. உதயகுமார் கைவண்ணத்தில் தலித் மக்களின் வாழ்க்கையைச் சித்தரித்துள்ள திரைப்படம் ‘கிழக்கு வாசல்’ ஆகும். இதில் முன்னனி கதாப்பாத்திரங்களாக கார்த்திக் (பொன்னுரங்கம்), மனோரமா (சின்னத்தாயி), ரேவதி (தாயம்மா), குஷ்பு (செல்வி), விஜயகுமார் ( கவுண்டர்) ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் பெண்ணியம் பற்றிய கருத்துக்கள் பரவலாகக் காணப்படுகின்றன. பெண்ணடிமைத்தனம், தாசிக்குலம், சாதி பேதம் ஆகியவைப் பற்றி இப்படத்தில் பேசப்பட்டுள்ளன.

கதைச்சுருக்கம்
இப்படத்தில் பொன்னுரங்கம் கூத்துக்கட்டும் இளைஞனாக வருகிறான். கதையின் தொடக்கத்திலேயே தன்னுடன் கூத்துக்கட்டும் பெண்ணை பலவந்தப்படுத்த முயன்ற பண்ணையாரையும் அவரது ஆட்களையும் வெளுத்துக்கட்டுகிறான் பொன்னுரங்கம். அவனிடம் விளையாட்டுத் தனமாக குறும்புகள் செய்யும் குறும்புக்காரப் பெண்ணாக செல்வி வருகிறாள். இதனிடையே கவுண்டரின் தோப்பு வீட்டிற்குத் தாயம்மாவும் பெரியகருப்புத்தேவரும் வருகின்றனர். தாயம்மாவுடன் பொன்னுரங்கத்தின் நட்பு தொடர்கிறது. ஒரு முறை தன்னைப் பெண் கேட்டு வருமாறு விளையாட்டுத்தனமாக செல்வி கூற அதனை உண்மை என்று நம்பி தனது தாயைப் பெண் கேட்க அனுப்புகிறான் பொன்னுரங்கம். பெண் கேட்கப் போன இடத்தில் வள்ளியூரானால் அடிக்கப்பெற்று அவமானப்படுத்தப்பட்ட பொன்னுரங்கத்தின் தாய் சின்னத்தாயி வேதனைத் தாங்க மாட்டாது உள்ளுக்குள்ளேயே புழுங்கி உயிர் மாய்க்கிறாள். உண்மை அறிந்த பொன்னுரங்கம் வள்ளியூரானிடம் நியாயம் கேட்கிறான். வள்ளியூரானும் தன் தவற்றை உணர்ந்து செல்வியைக் கண்டிக்கிறார். பின்னர் செல்விக்கு தன் மாமன் மகனுடன் திருமண ஏற்பாடுகள் நடைப்பெறுகின்றன.

செல்வியும் பொன்னுரங்கமும் தனிமையில் பேசுவதைக் கேட்ட கவுண்டரின் மகன் அவள் மீது சந்தேகம் கொள்கிறான். சொத்திற்காக மட்டும் அவளை மணக்க சம்மதிக்கிறான். இதனை அறிந்த வள்ளியூரான் திருமணத்தை நிறுத்துகிறார். இதனிடையே தாயம்மாவின் உண்மை நிலையை அறிந்து பொன்னுரங்கம் அவள் மீது பரிதாபம் கொள்கிறான். அவளுக்கு ஒரு ஆண் துணை வேண்டும் என்பதையறிந்து தான் அவளுக்குத் துணையாக வர ஆவல் கொள்கிறான். தாயம்மாவின் சம்மதத்தையும் பெறுகிறான். செல்வியின் மாமன் மகன் விஷம் தடவிய அரிவாளால் பொன்னுரங்கத்தை வெட்டிவிடுகிறான். விதிவசத்தால் பொன்னுரங்கம் உயிர் பிழைக்கிறான். இதனிடையே குஷ்பு பொன்னுரங்கத்தைத் திருமணம் புரிய விரும்புகிறாள். கவுண்டர் தாயம்மாவை பலவந்தமாக அடைய முயற்சி செய்கிறார். பொன்னுரங்கத்தையும் அடித்து கொடுமைப்படுத்துகிறார். இச்சம்பவத்தின் போது அவ்விடம் வந்த வள்ளியூரான் ஊர் மக்களைத் திரட்டி கவுண்டருக்கும் அவனது மகனுக்கும் சரியான தண்டனை வழங்குகிறார். கவுண்டரும் தாயம்மாள் சுத்தமானவள் என்பதை ஊர் மத்தியில் ஒப்புக்கொள்கிறார். பொன்னுரங்கமும் தாயம்மாவும் ஒன்று சேர்கின்றனர். இதுதான் ‘கிழக்கு வாசல்’ திரைப்படத்தின் கதைச்சுருக்கம்.

சின்னத்தாயி
தலித் குலத்தில் பிறந்த சின்னத்தாயி இப்படத்தில் மிகவும் இழிவுப் படுத்தப்படுகிறாள். முதலாவதாக பெண் என்ற அடிப்படையிலும், கீழ் சாதியானதாலும், விதவையாக இருப்பதாலும் அவள் பல அவமானங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. இருந்த போதிலும் இவளே இன்னொரு பெண்ணின் மனதைப் பிள்ளை இல்லாத வெறுஞ்சிருக்கி என்றுக் கூறிப் புண்படுத்துகிறாள். இவளிடம் தாழ்வு மனப்பான்மை அதிகமாகவே இருக்கிறது. பொன்னுரங்கம் வள்ளியூரான் மகள் செல்வியைப் பெண் கேட்கச் சொன்ன அடுத்த நிமிடமே சின்னத்தாயி அதிர்ச்சியுறுகிறாள். தம் தகுதிக்கு வள்ளியூரான் வீட்டுப் பெண்ணைக் கேட்கலாமா என்று தயங்கி நிற்கிறாள். இருந்தாலும் மகனின் ஆசைக்காகப் பெண் கேட்கச் சம்மதிக்கிறாள். போன இடத்தில் வள்ளியூரானால் மோசமாகத் திட்டி அடிக்கப்படுகிறாள். பெண் என்றும் பாராமல் வள்ளியூரானின் வேலை ஆட்கள் அவளைத் தரமட்டமாக அடிக்கின்றனர். அடித்த அடியின் வலியையும், வார்த்தைகளின் இரணத்தையும் தாங்க மாட்டாதச் சின்னத்தாயி மறுநாளே தன் உயிரை விடுகிறாள். தலித் குலத்தில் தோன்றியவளானாலும் சின்னத்தாயிடம் சுயமரியாதையும் தன்மானமும் இருப்பதை இதன் மூலம் காண முடிகின்றது. நம் சமுதாயத்தில் கீழ் சாதிப் பெண்களைப் பார்க்கும் பார்வையில் வேறுபாடு இருப்பதையும் இக்கதையில் அறிய முடிகிறது. உதாரணமாக, பெண் கேட்க வந்த சின்னத்தாயை வள்ளியூரான் ‘முண்டச் சிருக்கி’ என்று திட்டுகிறார். ஒரு வயதான பெண் என்றும் பாராமல் சின்னத்தயை அடிப்பது கொடுமையான ஒன்றாகத் தெரிகிறது. இதிலிருந்து மேல் சாதியினர் எவ்வாறு கீழ்சாதியினரை அடக்குமுறைச் செய்கின்றனர் என்பதும் தெளிவாகிறது.


செல்வி
              மேல்குலத்தைச் சார்ந்த பணக்கார வள்ளியூரானின் பெண்ணாகச் செல்வி காட்டப்படுகிறாள். இதனால் இவள் மற்ற கீழ்சாதிப் பையன்களை கிண்டல் கேளி செய்து விளையாடுகிறாள். ஆண்களின் உணர்வுகளோடு விளையாடுபவளாக இவள் சித்தரிக்கப்பட்டுள்ளாள். பின்விளைவுகளை யோசிக்கத் தெரியாத ஒரு முட்டாள் பெண்ணாகச் செல்வி காட்டப்படுகிறாள். விளையாட்டுத் தனமாகப் பொன்னுரங்கத்தைப் பெண் கேட்க வரச் சொல்வதிலிருந்து இக்கூற்றுத் தெளிவாகிறது. இவளது விளையாட்டுத்தனம் எல்லை மீறிப் போவதைக் கண்ட வள்ளியூரான், கவுண்டர் மகனுக்கு அவளைக் கட்டிக்கொடுக்க முடிவு செய்கிறார். இவ்விடம் செல்வியின் சம்மதம் சிறிதேனும் கேட்கப்படவில்லை. அவளது ஆசைகளுக்கும் உணர்வுகளுக்கும் தந்தை என்ற முறையில் வள்ளியூரான் முறையான மதிப்பளிக்கவில்லை. திருமண விசயத்தைப் பொருத்த மட்டில் செல்வி ஒரு கைபொம்யாகவே காட்டப்படுகிறாள். அவளது திருமணம் நின்ற பிறகே வள்ளியூரான் செல்வியைப் பொன்னுரங்கத்திற்குக் கட்டிக்கொடுக்க முன்வருகிறார். இதனை முதலிலேயே ஏன் வள்ளியூரான் செய்யவில்லை? மேலும் தன் தாயை இழந்த பின்பும் பொன்னுரங்கம் எப்படி செல்வியை ஏற்றுக்கொள்வான் என்று வள்ளியூரான் நினைத்துப் பார்க்கவில்லை. கெட்டுப்போன ஒரு பொருள் மேல் சாதியிடம் இருந்தால் என்ன கீழ் சாதியிடம் இருந்தால் என்ற நினைப்பில் செல்வியைப் பொன்னுரங்கத்திற்குக் கட்டி வைக்கத் துணிந்ததாகவே தோன்றுகிறது.

தாயம்மா
தாயம்மா நாச்சியம்மை என்ற தாசிக்கு வளர்ப்பு மகளாகக் காட்டப்படுகிறாள். சிறு வயதிலேயே நாச்சியம்மையிடம் தஞ்சமடைந்த தாயம்மாவிற்கு ஏன் வயது வந்தப் பிறகே நாச்சியம்மையைப் பற்றிய உண்மைத் தெரியவருகிறது. உண்மை தெரியாதவாறு தாயம்மா எவ்வாறு வளர்க்கப்பட்டாள் என்பது இவ்விடம் மிகப் பெரிய கேள்விக்குறியாக நிற்கிறது. பெண் என்பவள் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதனை மிகத் தாமதமாகவே அறிந்துக்கொள்கிறாள் என்பதை இயக்குனர் கூற வருகிறாரா என்று தெரியவில்லை. இப்படத்தில் தாயம்மா அடிமைப்படுத்தப்பட்ட தலித் பெண்ணாகக் காட்டப்படுகிறாள். நாச்சியம்மையின் மருத்துவச் செலவிற்காக வாங்கியப் பணத்தைத் திருப்பித் தர இயலாததால் கவுண்டருக்கு அடிமையாக வேண்டிய சூழல் இவளுக்கு ஏற்படுகிறது. இருப்பினும் இவள் தனது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறாள். நித்தம் ஒரு நாடகம் நடத்தி தனது கற்பைக் காப்பாற்றுகிறாள். இறுதியில் தான் இவ்வளவு நாட்களாக எதிர்ப்பார்த்திருந்த துணை பொன்னுரங்கம்தான் என அறிந்து அவனை ஏற்கிறாள். இக்கதையில் வரும் கவுண்டர் தாயம்மாவை வெறும் போகப்பொருளாகவே பார்க்கிறான். தன் மகள் வயதை ஒத்த தாயம்மாவுடன் உறவுக்கொள்ளத் துடிக்கிறான். இங்கே தாயம்மையின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படவில்லை. பல இன்னல்களுக்கிடையேயும் தாயம்மா உறுதியுடனும் கற்புடனும் வாழ்கிறாள். இயக்குனர் அவர்கள் தாயம்மா என்பவளை ஓர் உன்னத கதாப்பாத்திரமாகப் படைத்துள்ளார் என்றால் மிகையில்லை.



நாச்சியம்மை
‘கிழக்கு வாசல்’ திரைப்படத்தில் நாச்சியம்மை ஒரு தாசிப் பெண்ணாக, கவுண்டரின் போகப்பொருளாகக் காட்டப்படுகிறாள். இவளது நிலை கட்டுப்படுத்தப்பட்ட ஓர் எல்லைக்கு உட்பட்டே இருக்கிறது. தாசிக்குலத்தைச் சார்ந்தவளானாலும் தாயம்மாவை உத்தமியாகவே வளர்க்கிறாள். ஆதரவற்ற தாயம்மாவிற்கும் பெரியகருப்பத்தேவருக்கும் அடைக்கலம் தருகிறாள். இருந்தபோதிலும் தான் ஒரு தாசி என்ற உண்மையைத் தாயம்மாவிற்குத் தெரியாமல் மறைத்து வளர்க்கிறாள். இது இவளிடம் உள்ள தாழ்வு மனப்பான்மையைக் காட்டுகிறது. தாயம்மா தன்னை விட்டு போவதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் உயிர் விடுகிறாள். இங்கே பெண்ணை நிகழ்காலத்தை ஏற்றுக்கொள்ள முடியாத கோழையாகக் காட்டியுள்ளது வேதனைக்குறியதாகும்.

கவுண்டரின் மனைவி
இத்திரைப்படத்தில் கவுண்டர் தன் மனைவிக்கு உரிய உரிமையும் மரியாதையும் கொடுத்ததாகத் தெரியவில்லை. தன் மனைவியை ஒரு அடிமைப் போலவே நடத்துகிறான். அவளுக்கு பேச்சுரிமைக் கொடுக்கப்படவில்லை. கவுண்டரின் மனைவியும் கணவனை எதிர்க்கத் துணிவற்றப் பெண்ணாகவே காட்டப்படுகிறாள். கவுண்டர் தோப்பு வீட்டுச் சாவியை ஏன் எடுத்து வரச் சொல்கிறார் என்று தெரிந்திருந்தும் அதனை மறு பேச்சுப் பேசாமல் எடுத்து வருகிறாள். தன் கணவனின் நடத்தைத் தெரிந்திருந்தும் மரபு வழி வந்தப் பெண்ணாக அவனுடனேயே தன் வாழ்நாளைக் கழிக்கிறாள். இவ்விடம் ஒரு பெண் திருமணமானப் பிறகு கணவனுக்கு அடிபணிந்து அடிமைப் போல் வாழும் நிலை எடுத்துக்காட்டப்படுகிறது.

முடிவுரை
‘கிழக்கு வாசல்’ திரைப்படம் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. பெண்கள் எப்படியெல்லாம் மேல் சாதி மக்களாலும், ஆண்களாலும் அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை இத்திரைப்படத்தில் காணமுடிகின்றது. இப்படத்தில் வரும் அனைத்துப் பெண் பாத்திரங்களும் ஒருவித கோழைத்தனத்துடன் படைக்கப்பெற்றிருக்கிறார்கள். செல்வி தன் தந்தைக்குப் பயந்து கவுண்டர் மகனைத் திருமணம் செய்ய சம்மதிக்கிறாள்; சின்னத்தாயி மேல் சாதியான வள்ளியூரானைக் கண்டு பயப்படுகிறாள்; கவுண்டரின் மனைவி தன் கணவனுக்குப் பயப்படுகிறாள்; நாச்சியம்மை உண்மைக்குப் பயந்து தான் ஒரு தாசி என்பதை தாயம்மைக்குக் கூறாமலேயே வளர்க்கிறாள்; தாயம்மா கவுண்டருக்குப் பயந்து அவரது தோப்பு வீட்டில் குடியேறுகிறாள். இவ்வாறாகப் பெண்களின் பாத்திரப் படைப்பு என்பது ஒரு கோழைத்தனமான சூழலிலேயே படைக்கப்பட்டுள்ளது என்பது வருந்தத்தக்கச் செய்தியாகும்.



செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

என்னைச் சேர்வாயா?



காதலை விட கொடிய ஆயுதம்
அவனியில் வேறெதுவும் இல்லை
ஈவிரக்கமின்றி கதறக் கதற
உயிரோடு கொன்று புதைக்கின்றதே!

பேதை நான் என்ன செய்வேன்
ஏனடா உன்னைச் சந்தித்தேன்
உன்னுடன் கதைக்காமல்
உறக்கம் கூட வரமாட்டேன் என்கிறது!

உலாவலாம் என்று கடற்கரைச் சென்றேன்
‘துணை எங்கே?’ என்று முழு நிலா கேட்கிறது
உறங்கலாம் என்று பொம்மையை அணைத்தேன்
‘இப்பொழுது மட்டும் தேவையா?’ என்று முறைக்கிறது!

ஒரு பக்கம் இன்பமாகவும்
மறுபக்கம் துன்பமாகவும்
இரு பக்கமும் குழப்பமாக
தீர்வு காணாத நமது உறவு!

நான் என்ன செய்ய வேண்டும்
எப்படி இருக்க வேண்டும்
எது செய்தால் பிடிக்கும்
ஏதாவது சொன்னால் தானே தெரியும்?

இந்த உணர்ச்சி எனக்குப் பிடிக்கவில்லை
சில வேளைகளில் பிடிக்கிறது
சில வேளைகளில் வெறுப்பாய் உள்ளது
மொத்தத்தில் பைத்தியம் பிடிக்கிறது!

பசிக்கிறது, உண்ண முடியவில்லை
நித்திரை வருகிறது உறங்க முடியவில்லை
கதறி அழ வேண்டும் போல் இருக்கிறது
கண்ணீர் கூட வரமாட்டேன் என்கிறது!

அழுது அழுது கண்ணீர் வற்றிவிட்டதடா
இனி அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது
பெண்களின் கடைசி ஆயுதத்தையும் இழந்து
உன்னிடம் எவ்வாறு காதலை நிரூபிப்பேன்?

உன் மனதில் என்னதான் இருக்கிறது?
நான் வேண்டுமா, இல்லை வேண்டாமா?
முடிவாக கூறாமல் இழுபறி செய்கின்றாய்
பதிலேதும் கூறாமல் என்னை நீ கொல்கின்றாய்!

விலகி இருக்கவும் முடியாமல்
நெருங்கி வரமும் இயலாமல்
இந்த உறவிற்குப் பெயரும் தெரியாமல்
விழி பிதுங்கி வழி மறந்து நிற்கிறேன்!

கடந்து வந்த பாதைகளில்
விழுந்து எழுந்து பின் மீண்டும் விழுந்து
இப்படியே அடிப்பட்டு இரணப்பட்டு
ஆறாத வடுக்களுடன் தீராத ஆசைகளுடன் நான்!

தாய், தந்தை, அண்ணன், தம்பி
அனைவர் மீதும் வைக்க வேண்டிய அன்பை
ஒட்டுமொத்தமாக உன் மீது வைத்துவிட்டு
இப்போது வாடித் துடிக்கின்றேன்!

எதற்காகக் கோபிக்கின்றாய்
என்னதான் நினைக்கின்றாய்
ஒன்றுமே புரியாத, புரிந்துக்கொள்ள முடியாத
முட்டாளாய் நான்!

நான் பேசிய காதல் வார்த்தைகள் சத்தியம்
உன் மீது கொண்ட அன்பு நித்தியம்
அது அமுதசுரபி போல் பெருகுமே அன்றி
ஒரு நாளும் தேய்ந்து மறையாது!

எனக்குள் என்றுமே நீ இருப்பாய்
நீ என்னை வெறுத்தாலும் கூட
என்னுயிரோடு உயிராய், சுவாசமாய், ஆவியாய்
என்னுள்ளே நீ வியாபித்திருப்பது உண்மை!

உன்னைக் கோபிக்கக்கூட முடியவில்லை
கதைக்காத நில நிமிடங்கள் கூட வருடங்களாய்
உன் நினைவுகள் என்னை கொஞ்சம் கொஞ்சமாய்
இரத்தம் சொட்டச் சொட்ட அறுத்தெறிகின்றன!

உறக்கமில்லா இரவுகளில்
தவிர்க்க முடியா எண்ணங்களால்
பசலைப் பூத்து வாடுகிறேன்
கண்ணா உன்னைத் தேடுகிறேன்!

வாக்கொன்று கொடுப்பாயா
வருத்தத்தைத் துடைப்பாயா
கரம் பிடித்துச் செல்வாயா
பாதியிலே மறைவாயா?

உனக்காக நான் இருப்பேன்
இறக்கும் வரை பார்த்திருப்பேன்
காதல் ஒன்று வந்ததென்றால்
சொல்லிவிடு வந்திடுவேன்!

வெகுதூரம் இருப்பதனால்
நம்பிக்கை நீ இழக்காதே
காதலிக்கும் பாவையர்க்கு
கடலும் சிறு துளியே!

உன்னோடு நான் வாழ
என்னோடு நீ கூட
நாம் வாழும் வாழ்க்கையை
சரித்திரமும் கூறிடுமே!

நீரில்லாமல் மீனில்லை
கடலில்லாமல் அலைகளில்லை
ஊடல் இல்லாத காதல் இல்லை
நீ இல்லாது வாழ்க்கை இல்லை!

ஒரு கணம் இறக்கிறேன்
மறு கணம் பிறக்கிறேன்
இவ்வாறு இறப்பும் பிறப்பும் அருளிய
கண் கண்ட தெய்வம் நீயல்லவா?

கனத்த இதயத்தோடு காத்திருக்கிறேன்
நிறைந்த எதிர்ப்பார்ப்போடு பார்த்திருக்கிறேன்
உடலின் கடைசி இரத்தம் காயும் முன்பே
உயிரே என்னைச் சேர்வாயா?

அமைதியாய் இருப்பது ஏனோ?



மிச்சமிருந்த உணர்வுகளும்
இன்று அடக்கம் செய்யப்பட்டுவிட்டன
இதயத்தில் இருந்த சிறிதளவு ஈரமும்
இன்று காய்ந்துப் போய்விட்டது!

வலிகளைத் தாங்கித் தாங்கி
இருதயம் மரத்துப் போய்விட்டது
ஏமாற்றங்களைச் இடைவிடாது சந்தித்து
உயிர் நொந்துப் போய்விட்டது!

என்னை வெறுக்கிறேன் என்று
ஒவ்வொரு முறை நீ கூறும் போதும்
இதயம் சுக்கு நூறாய் உடைந்து
பின் ஒட்டப்பட்டு மீண்டும் உடைகின்றது!

விளையாட்டாய் ஒருமுறைக் கூறலாம்
கதைக்கும் போதெல்லாம் கூறுகிறாய்
என்னை வெறுக்கிறேன் என்று
இயல்பாகக் கூறுகின்றாய்!

வெறுக்கும் அளவிற்கு
நான் செய்த தவறுதான் என்ன?
பெண்ணாய் பிறந்தது தவறா?
அல்ல உம்மீது அன்பு கொண்டது தவறா?

யாரை நான் குறைசொல்வேன்?
யாரிடம் ஆறுதல் தேடுவேன்?
எங்குப் போய் முறையிடுவேன்?
எவரிடத்தில் பகிர்ந்துக்கொள்வேன்?

அழகாகத் தெரிவதெல்லாம்
அவஸ்தையில் முடிவது ஏனோ?
என் அகம் உனக்குத் தெரிந்திருந்தும்
அமைதியாய் இருப்பது ஏனோ?

திங்கள், 21 பிப்ரவரி, 2011

உடல் இங்கே உயிர் அங்கே



விரும்புகிறேன்
உன்னை விரும்புகிறேன்
உன்னோடு சேர்ந்து வாழ
மிகவும் விரும்புகிறேன்!

சொந்தம் என்ன சொல்லுமோ
பந்தம் என்னை இகழுமோ
குடும்பத்தில் உன்னைப் பிடிக்குமோ
கரம் பிடிக்கக் கூடுமோ?

உடல் மட்டும் இங்கே
உயிர் உன்னோடு அங்கே
இதயம் மட்டும் இங்கே
நினைவுகளெல்லாம் அங்கே!

காலங்கள் வேகமாய்
இறக்கைக் கொண்டு பறக்குமா
நம் வயதுதான் சீக்கிரம்
ஏணி வைத்து ஏறுமா?

இறுதிவரை உன் காதல்
மாறாமல் வளருமா?
காலங்கள் கடந்த பின்னர்
சலித்துப் போய் தேயுமா?

அச்சமாக உள்ளதே
மனதில் ஆசை துள்ளுதே
உன் நினைவு வாட்டுதே
காதல் என்னைக் கொல்லுதே!

என்னருகில் நீ வேண்டும்
உன் தோளில் சாயவேண்டும்
உன்னருகில் நான் வேண்டும்
என் மடியில் உறங்க வேண்டும்!

குழந்தைப் போல் உன்னை
செல்லமாய் கொஞ்ச வேண்டும்
உன் மனதில் என்றுமே
நான் மட்டும் இருக்க வேண்டும்!

எனக்கு நீ வேண்டும்
உனக்குள் நான் வேண்டும்
ஈருடல் ஓருயிராய்
என்றுமே வாழ வேண்டும்!

கனவுகள் வருதே
தனிமையில் சுடுதே
பகலெல்லாம் உறைகிறதே
இரவெல்லாம் கரைகிறதே!

மனதினிலே சிலுசிலுப்பு
கனவினிலே சலசலப்பு
இமைகளில் துடிதுடிப்பு
இதயத்தில் படபடப்பு!

சாகும் வரை உன் காதல்
உறுதியாய் இருக்குமா?
எதிர்ப்புகள் வந்தாலும்
சமாளித்து நிற்குமா?

சனி, 19 பிப்ரவரி, 2011

இறுதிவரை நீளுமா..?

இதயச்சுவற்றில் என்னை
எழுத மறந்தவனே
உன் உயிரோடு உயிராக
என்னுயிரைக் கலப்பாயா?

அடியோடு உன்னை
மறக்கவும் முடியவில்லை
உரிமையோடு உன்னை
நினைக்கவும் முடியவில்லை!

அலைபாய்கிறது உள்ளம்
அடக்க நினைக்கிறது நெஞ்சம்
ஆசைகள் ஆயிரம் ஆயிரமாய்
இதயத்தின் ஓரத்திலே!

இது வயதுக் கோளாரா
பருவ விளையாட்டா
அறியாத பொருளா
சுகமான சுமையா?

உன்னைப் போல் ஒருவனை
இதுவரையில் கண்டதில்லை
உள்ளத்தின் ஆசைகளை
ஒருமுறையும் சொன்னதில்லை!

காணாத ஏக்கங்கள்
நெஞ்சோடு தீருமா?
உன் அன்பான ஆறுதல்
இறுதிவரை நீளுமா?