சனி, 27 ஜூலை, 2013

புழலில் ஒரு நாள் (2)

 
 


முகாம் உள்ளே இருக்கும் பழக்கடை

முகாம் மக்கள் மட்டுமே ஒருங்கிணைந்து நடத்தும் அந்த உண்ணாவிரதக் கூட்டத்தில் வெளி ஆட்களான எங்களைக் கண்டதும் அம்மக்கள் மகிழ்ச்சியடையவே செய்தனர். தங்களது மனநிலையை அவர்களே எங்களிடம் கொட்டினர். தங்களுக்கு நீதி வேண்டி போராடும் தமிழ்நாட்டு மாணவர்களை அவர்கள் வெகுவாகப் பாராட்டினர்.  சரியாக மாலை 5.30 மணிக்கு அனைவருக்கும் பழரசம் வழங்கப்பட்டு உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. காலையிலிருந்து அங்கே கூடியிருந்த சிறார்களும் அப்போதுதான் பழரசம் அருந்தி தங்கள் தொண்டையினை நனைத்துக் கொண்டனர். அங்கே குழுமியிருந்த மக்களைக் கண்ட போது சொல்ல இயலா சோகம் ஒன்று தொண்டையை அடைத்தது.
 
அறிவிப்பு பலகைகள்

உண்ணாவிரதம் முடிந்து அனைவரும் அவரவர் இல்லம் செல்லத் தொடங்கினர். ஒருசிலரே எங்களைத் தேடி வந்து எங்கள் விபரம் கேட்டனர். இதுதான் சமயம் என்று அவர்களின் வாழ்வியலை அறிந்துக்கொள்ள நானும் சில கேள்விகள் தொடுத்தேன். எனது கேள்விகளுக்கு பலரும் தயங்கியபடி பதில் கூற, ஒரு பெண்மணி மட்டும் மிக தைரியமாக தங்களது முகாம் வாழ்க்கையை விவரிக்கத் தொடங்கினார். அவரை அக்கா என்று உரிமையோடு அழைத்து, முகாமை சுற்றிப் பார்க்க இயலுமா என்று கேட்டேன். மற்ற பெண்கள் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்து தயங்கி நின்றனர். அந்த அக்கா சற்று யோசித்தார். "சரி, வாங்கோ" என அழைத்தார். என்னுடன் வந்த மாணவர்களிடம் சற்று நேரத்தில் வந்து விடுவதாகக் கூறி அக்காவைப் பின் தொடர்ந்தேன்.
பாலர் பாடசாலை

அப்போதுதான் உண்ணாவிரதம் நடந்த பந்தலுக்கு அருகில் பழக்கடை ஒன்று இருப்பதைப் பார்த்தேன். முகாம் மக்கள் தங்களுக்கு வேண்டிய பழ வகைகளை அவ்விடமே வாங்கிக்கொள்வார்கள். முகாமிலிருந்து வெளியில் சென்றால் மற்ற பொருட்களை வாங்க இயலுமாம். பழக்கடையைத் தள்ளி சிறிது தூரம் சென்றவுடன் பாலர் பாடசாலை ஒன்று தென்பட்டது. முகாமில் வாழும் சிறுவர் சிறுமியர் இவ்விடமே தங்கள் பாலர் கல்வியைத் தொடங்கலாம் என்றும், மேற்கொண்டு படிப்பதற்கு வெளியில் செல்ல வேண்டும் என்றும் அக்கா கூறினார்.
ஒற்றையடி சந்து

முகாமின் ஒரு பகுதியில் இரு கரும்பலகைகள் இருந்தன. அவற்றில்தான் பொது நிகழ்வுகள், முக்கியமான செய்திகள் அனைத்தும் எழுதப்பெற்று முகாம் மக்களுக்கு அறிவிக்கப்படும் என அக்கா தெரிவித்தார்.  அதில் ஒரு பலகையில் அன்றைய உண்ணாவிரத நிகழ்வு குறித்து தகவல் பகிரப்பட்டிருந்தது. மற்றொரு பலகையில், 'ரேஷன்' பொருட்கள் எப்போது வழங்கப்படும் என குறிக்கப்பட்டிருந்தது. அந்தக் குறுகிய சாலையில் பல ஒத்தை சந்துகள் பிரிந்துச் சென்றன. ஒவ்வொரு சந்துக்குள்ளும் தீப்பெட்டிகள் போல் பல சிறு வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. "என்ன அக்கா, வீடுகள் இவ்வளவு சிறியதாக இருக்கிறதே?" எனக் கேட்டேன். முகாம் வாசலை ஒட்டி அமைந்திருப்பதனால் முகாமிலேயே சற்று வசதியான வீடுகளையே நான் பார்ப்பதாக அவர் சொன்னார். சற்று தள்ளி இருக்கும் முகாம் வீடுகள் இன்னும் சிறியதாக, நெருக்கமாக இருக்கும் எனவும் கூறினார். அவ்விடம் செல்ல முடியுமா எனக் கேட்டேன். நேரமாகிவிட்டதால் சந்தேகப்படுவார்கள் என தயங்கியப்படி சொன்னார். நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லவும், "உங்களை ஒன்றும் செய்யமாட்டார்கள். நீங்கள் சென்ற பிறகு கேள்வி மேல் கேள்வி கேட்டு எங்களை சித்ரவதை செய்து விடுவார்கள்," என்றார். அதற்கு எதுவும் கேட்க எனக்கு மனம் வரவில்லை.
சமையல் செய்யும் இடம்

அந்த அக்காவிற்கு மிகவும் பழக்கமான ஒரு வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார். அந்த வீட்டின் முன்முறம் சற்று விசாலமாக இருந்தது. "பரவாயில்லையே, வீட்டிற்கு முன்புறம் இவ்வளவு இடம் இருக்கிறதே!" என்றேன். அதற்கு அந்த அக்கா சொன்ன பதில் எனது ஆச்சர்யக்குறியை அதிர்ச்சிக்குறியாக மாற்றியது. அவ்விடம்தான் அந்த வீட்டு ஆட்கள் சமையல் செய்ய வேண்டுமாம். வீட்டின் உள்ளே சமையல் செய்வதற்கான வசதியும் போதிய இடமும் இல்லையாம். அதற்குப் பக்கத்துக் குழாயில் சொட்டுச் சொட்டாகத் தண்ணீர் வந்துக்கொண்டிருந்தது. எங்கேயிருந்தோ சில பலகைகளைக் கொண்டும், தெருவோர விளம்பர பதாகைகளைக் கொண்டும் மறைவிடம் ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. அதுதான் குளியல் அறையாம்!
குளிப்பதற்காக செய்யப்பட்ட மறைவிடம்

அதிர்ச்சியை மறைத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றேன். எனக்கு மூச்சி முட்டியது. அந்த வீட்டின் வரவேற்பறை இரண்டு அங்குலம், பத்தடி நீளமாக இருக்கும். சரியாக கணக்குத் தெரியவில்லை. பாதி சுவர் மட்டுமே எழுப்பப்பட்டிருந்தது. மீதி அட்டைப்பெட்டிகளைக் கொண்டுச் சுவராக எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு மேல் ஓட்டை ஒடிசலுடன் தகரமும், எர்நேரத்திலும் கலண்டு விழும் தருவாயில் இருக்கும் ஒரு மின்விசிறியும் இருந்தது. வீட்டிற்குள் நுழைந்த சில நொடிகளிலேயே எனக்கு வேர்த்துக்கொட்டத் தொடங்கியது. சில ஓவியச் சுவரொட்டிகளைக் கொண்டு தங்களால் இயன்ற மட்டும் அந்த வீட்டினை அலங்காரம் செய்து வைத்திருத்கனர். ஒரு அலைப்பேசியும் பழைய சிறிய தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றும் சிறிய மேசை மீது வைக்கப்பட்டிருந்தது.
வீட்டின் வரவேற்பறை

அதனையொட்டி, இரண்டு சிறு அறைகள் இரண்டு அமைக்கப்பெற்றிருந்தன. ஒற்றைக் கட்டில், இரு நெகிழி நாற்காலிகள்,பழைய மேசையோடு, சிறு சிறு மூட்டைகள் (உடைமைகள்), மடிக்கணினி மற்றும் சில புத்தகங்கள்  இருந்தன. இந்த அறையில் சற்று தாரளமாகப் படுக்கலாம் போலும். அடுத்த அறையில் அலமாரிகளும் ஒரு சில மரப்பெட்டிகளும் இருந்தன. மூன்று பேர் ஒரே சமயத்தில் நுழைந்தால் இந்த அறை நிறைந்துவிடும் போல இருந்தது. இவ்வளவுதான் இவர்கள் உடைமை! இதுதான் இவர்கள் வாழ்க்கை! மறுபடியும் வரவேற்பறைக்கு வந்தேன். வீட்டுப் பெண்மணியும் என்னை அழைத்து வந்த அக்காவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர்.  வீட்டில் உள்ளவர்களைப் பற்றி விசாரித்தேன்.

அந்த அம்மாவின் வீட்டுக்காரர் போரில் உயிரிழந்துவிட்டார். இரண்டு பெண் பிள்ளைகள். அதில் இளையவள் இன்னமும் படித்துக்கொண்டிருக்கிறாள். பெரியவள் எங்கே என்று கேட்டேன். அந்த அம்மா, அக்காவின் முகத்தைப் பார்த்தார். அவர் கண்கள் கலங்க ஆரம்பித்துவிட்டன. "இவங்ககிட்ட சொல்லுங்க. வெளியில போய் சொன்னாதான் ஏதாவது தகவல் தெரியும்," என அக்கா தைரியம் கூறினார்.  பெரிய பிள்ளையை வெளிநாட்டிற்கு கள்ளத்தனமாக முகவருக்குப் (ஏஜெண்ட்) பணம் கொடுத்து அனுப்பி வைத்துள்ளார். அனுப்பி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், இன்னமும் அவர்களிடமிருந்து எந்தவொரு தகவலும் வரவில்லை. முதலாவதாக இந்தோனேசியா கடல் எல்லையில் அவர்கள் சென்ற கப்பல் பிடிபட்டுவிட்டது என்ற செய்தி வந்ததாம். அதன் பின்னர் ஒரு தகவலும் வரவில்லையாம்.  யார் யாரையோ விசாரித்துப் பார்த்தும் ஒரு தகவலும் பிடிபடவில்லையாம். அந்தத் தாய் அதற்கு மேலும் தாங்க மாட்டாமல் கதறியழ ஆரம்பித்தார். நான் செய்வதறியாது திகைத்து நின்றேன்.
தகர ஓடும், அபாய நிலையில் இருக்கும் மின்விசிறியும்

அந்தப் பெண்ணோடு முகாமிலிருந்து மொத்தம் 9 பேர் கள்ளத்தனமாகக் கப்பலில் சென்றுள்ளனர். அவர்களின் நிலையும் இன்று வரையில் கேள்விக்குறியாகவே இருக்கிறது. அவர்கள் எந்த நாட்டில் எல்லையிலாவது கைது செய்யப்பட்டார்களா? அல்லது கடல் அவர்களைக் காவு வாங்கி விட்டதா என்று யாருக்குமே தெரியவில்லை. அவர்களுக்கு நிச்சயம் தெரிந்த விடயம் ஒன்றுதான். சென்றவர்கள் ஒருவர் கூட செல்ல வேண்டிய இலக்கைச் சென்றடையவில்லை. பெற்ற பிள்ளை எங்கே இருக்கிறாள்? அவளுக்கு என்ன நேர்ந்தது? உயிரோடு இருக்கிறாளா இல்லையா? என்று அறியாமல் அந்தத் தாய் தவித்த தவிப்பு இன்னமும் என் கண்களுக்குள்ளேயே இருக்கிறது. அவருக்கு என்ன ஆறுதல் கூறுவதென்று எனக்கே தெரியவில்லை. முந்தைய காலமாக இருந்தால், ஏதாவது முயற்சி செய்ய வழியிருக்கும். அனைத்திலிருந்தும் விலகி, அனைத்துத் தொடர்புகளையும் அறுத்தெறிந்துவிட்டு வாழும் என்னால் இப்போது என்ன செய்ய இயலும்? மனம் வலித்தது. அந்தத் தாய்க்கு என் கண்ணீர் மட்டுமே சமாதானம் சொல்லியது. 
சற்று வசதியாக இருக்கும் முதல் அறை

அதற்கு மேலும் அவ்விடம் நிற்க மாட்டாமல் வீட்டை விட்டு வெளியே வந்தேன்.  என்னுடன் வந்த சட்டப்பல்கலைக்கழக மாணவர்களுடன் முகாம் இளைஞர்கள் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் முகத்தில் சலிப்பு, ஆற்றாமை, கோபம் என பல்வகை உணர்வுகளும் கொப்பளித்ததால் விடயம் அறிய அவர்களை நோக்கிச் சென்றேன். "எங்கட தமிழர்கள் இங்க இருங்காங்கன்னு நம்பி வந்தோம். ஆனா, இங்க வந்த பிறகு அங்கச் சண்டையிலேயெ செத்திருக்கலாமோன்னு தோணுது, " என ஒரு பையன் கோபத்துடனும் ஏமாற்றத்துடனும் கூறினான். அப்படி என்ன தான் நடந்தது என விசாரித்தேன். எனக்கே கோபம் வந்தது!`
மிகவும் குறுகலாக இருக்கும் இரண்டாம் அறை

சுதந்திரத்திற்காக போராடிய இவர்களுடைய சுதந்திரம் இவ்விடம் அடியோடு பறிக்கப்பட்டுவிட்டது. நான்கு பேர் ஒன்றாக அமர்ந்துப் பேச முடிவதில்லை. வெளியில் சென்று தாமதமாக வரமுடிவதில்லை.  இரவில் புழுக்கம் தாங்காமல் வீட்டுக்கு வெளியே உலாவ நினைத்தாலும் முடிவதில்லை. காவல் துறையினரின் அதிகப்படியான கெடுபிடி, கேவலமான வார்த்தைகள் என அனைத்தும் இவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கத் தொடங்கிவிட்டது. ஈழத்தமிழர்களுக்கு வேலை கிடைப்பதும் அரிதாக இருக்கிறதாம். அப்படியே கிடைத்தாலும் சம்பளம் என்று வரும் போது மற்றவர்களைக் காட்டிலும் குறைந்த சம்பளமே இவர்களுக்கு வழங்கப்படுகிறது. இப்படியான பலப்பல குற்றச்சாட்டுக்களை அவர்கள் முன் வைத்தனர்.

வானம் சற்று இருட்டத் தொடங்கியது. பெரியவர் ஒருவர் வந்து, அந்த இளைஞர்களைக் களைந்துப் போகுமாறு கேட்டுக்கொண்டார். "உங்ககிட்ட கதைச்சத கண்டிப்பா பொலீஸ் பார்த்திருக்கும். நீங்க போன பிறகு எங்களை விசாரிப்பானுங்க. இங்க இப்படித்தான்," என்று சலிப்புடன் கூறிய இளைஞன் ஒருவன் களைந்துச் சென்றான். அவனைத் தொடர்ந்து மற்றவர்களும் களைய ஆரம்பித்தனர்.  பலவிதமான எண்ணங்கள் ஆட்கொள்ள வேறு எதுவும் பேசாமல் நாங்களும் வீடு நோக்கிப் புறப்பட்டோம். போகும் வழியில் புழல் சிறை. மீண்டும் சொல்கிறேன். புழல் சிறைக்கும் புழல் முகாமிற்கும் எனக்கு அதிக  வித்தியாசம் தெரியவில்லை.

***முற்றும்***

புழலில் ஒரு நாள் (1)

 
 வள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்ற ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதத்தின் போது, தமிழீழ கொடியினை ஆடையாக தரித்து வந்த சிறுவர்கள்

மார்ச் 2013  தமிழகமெங்கும் மாணவர் போராட்டம் எழுச்சிப்பெற்று நடந்துக்கொண்டிருந்தது. இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடாது; இனப்படுகொலை செய்த இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும்; ஆசிய நாடுகள் சர்வதேசிய விசாரணைக் குழுவில் இடம்பெறக் கூடாது; இலங்கை அரசின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்; தனித்தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னெடுத்து லயோலா கல்லூரி மாணவர்கள் சிலர் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்.  லயோலா கல்லூரி மாணவர்கள் சிலரால் மூட்டப்பட்ட இத்தீப்பொறி தமிழகமெங்கும் காட்டுத்தீ போல் பரவிய காலகட்டம். தமிழகத்தில் மூலை முடுக்குகளில் உள்ள அனைத்துக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.

இம்மாணவர்களின் போராட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தமிழக வாழ் ஈழ அகதிகள் மார்ச் 22-ஆம் திகதி அன்று ஒன்று திரண்டு ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தை வள்ளுவர் கோட்டத்தின் அருகே மேற்கொண்டனர். அதே நாளன்று 'புழல்' அகதிகள் முகாமிலும் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது.  முதல் நாள் இரவே கேணல் கிட்டுவின் மாமியார் அலைப்பேசியில் தொடர்புக்கொண்டு விபரம் கூறியிருந்தபடியால், அன்று காலையிலேயே வள்ளுவர் கோட்டத்திற்குக் கிளம்பிவிட்டேன். வீட்டைவிட்டு புறப்படும் போதே, "இன்டைக்கும் உண்ணாவிரதமா?" என அம்மா கவலையுடன் கேட்டார். சிரித்துவிட்டு, "இரவுக்குள் வந்துவிடுவேன்" என சமாதானம் கூறினேன். கடந்த சில நாட்களாகவே மாணவர் போராட்டம், உண்ணாவிரதம் என அடிக்கடி வெளியில் சென்று விடுவதால் அந்தத் தாயின் உள்ளம் பதற ஆரம்பித்துவிட்டது. போகும் இடங்களில் கைது நடவடிக்கைகள் இருப்பதாலும் , என்னுடைய தோழர்கள் சிலர் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்ததாலும் அம்மா கொஞ்சம் பயப்படவும் செய்தார். எம்மை சுமந்து பெறா தாயாக இருந்த போதிலும், பெற்றப் பிள்ளைப் போல் எம்மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் அந்த ஈழத்துத் தாயின் பாசம் எம்மை நெகிழ வைத்தது.
அடையாள உண்ணாவிரதத்தில் கலந்துக்கொண்ட ஈழ ஆதரவாள திரையுலக பிரபலங்கள்

வாடகை வண்டியில் வள்ளுவர் கோட்டம் சென்றடைந்தேன். மிகப்பெரிய கூடாரம் அமைத்து ஈழத்தமிழர்கள் பலர் உண்ணாவிரதப் பந்தலில் கூடியிருந்தனர். இயக்குனர் சேரன், தேனிசைத் தென்றல் செல்லப்பா, மைசூர் அலிகான், இயக்குனர் களஞ்சியம் ஆகியோருடன் இன்னும் சில திரையுலக பிரபலங்களும் அவ்விடம் கூடியிருந்தனர். நேரம் ஆக ஆக கூட்டம் கூடிக்கொண்டே சென்றது. பிற்பகல் வரை அவர்களுடன் நேரம் செலவிட்டுக்கொண்டிருந்தேன். உண்ணாவிரதப் பந்தலில் நெற்பயிரோடு கலந்திருக்கும் களை போல சில துரோகிகளும் கலந்திருக்கக் கண்டேன். "உங்களை இங்கே சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. ஒதுங்கியிருந்தீர்களே?" என ஒருவன் அவனாகவே வந்து கேட்டது எரிச்சலூட்டியது. நெஞ்சம் படபடத்தது. "அடப்பாவிகளா? இங்கேயும் கலந்துவிட்டீர்களா" என மனம் கதறியது. ஒரு புன்னகையோடு விலக முற்பட்டேன். வேண்டுமென்றே போராட்டங்களிலிருந்து என்னை நானே விலக்கிக்கொள்ள காரணமாக இருந்த சம்பவங்களை அவனாகவே நினைவூட்டினான்.

அதற்கு மேலும் அவ்விடம் இருக்க மனம் விரும்பவில்லை.  அதற்குள் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய  மாணவர்கள் அவ்விடம் வர, அவர்களோடு புழல் நோக்கிச் சென்றேன். தமிழ்நாட்டில் புழல் சிறை பிரபலமானது. அதனை அடுத்து புழல் அகதிகள் முகாம். இவ்விரண்டிற்கும் அதிக வித்தியாசம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆரம்ப காலத்தில், ஈழத்து அகதிகளை இடம் பற்றாக்குறைக் காரணமாக புழல் சிறையின் உள்ளேதான் வைத்திருந்தார்களாம். பின்னர்தான் அதன் அருகாமையிலேயே அகதிகள் முகாம் ஒன்றினை உருவாக்கியுள்ளனர் என பெரியவர் ஒருவர் கூறி அறியப்பெற்றேன்.
புழல் அகதிகள் முகாமில் நடைப்பெற்ற அடையாள உண்ணாவிரதத்தில் கலந்துக்கொண்ட ஈழத்தமிழர்கள்

மிகவும் குறுகலான செம்மண் சாலை. சிறைக்கதவுகள் போன்று பெரிய வாயிற்கதவுகள் அதனைத் தாண்டிய அடுத்த நொடியே புழல் அகதிகள் முகாமின் எல்லை ஆரம்பமாகிறது. காலையிலேயே உண்ணாவிரதம் தொடங்கிவிட்டதால், முகாமிலுள்ள அனைத்து ஈழத்தமிழர்களும் உண்ணாவிரதப் பந்தலில் கூடியிருந்தனர். இவ்விடம் பெரும்பான்மை பெண்களும் குழந்தைகளுமே கண்ணில் பட்டனர். மிக நீண்ட உண்ணாவிரதப் பந்தலின் கடைசியில் சில ஆண்கள் நின்றுக்கொண்டிருந்தனர். அவர்கள் முன்னிலையில் ஈழத்தமிழர் ஒருவர் உணர்ச்சிப்பொங்க உரையாற்றிக் கொண்டிருந்தார். ஈழத்தில் நடந்த கொடுமைகளை விவரிக்கும் வேளையில் தாங்க மாட்டாமல் அவரது கண்கள் பனித்துவிட்டன. நாம் அறிந்த, அறிந்திராத சில திடுக்கிடும் விடயங்களை அவர் அன்று அனைவர் மத்தியிலும் பகிர்ந்துக்கொண்டார்.

தமிழ்ப்பெண்களின் மார்பை அறுத்து, "தமிழச்சிகளின் மார்பு கறி இங்கே கிடைக்கும்" என்று எழுதிப்போட்ட சிங்கள வெறிநாய்களின் அராஜகத்தைச் சொன்னார். போர் காலகட்டத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச அரிசி வழங்குகிறோம் என்று பொய்யுரைத்து, சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களை ஒரே இடத்தில் ஒன்றுகூட வைத்து வெடி வைத்துக் கொன்ற சிங்களவனின் வெறிச்செயலைச் சொன்னார். இன்னும் என்னென்னவோ சொன்னார். நாம் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத விடயங்களைச் சொன்னார். என் பக்கத்தில் அமர்ந்திருந்த சட்டப் பல்கலைக்கழக மாணவியின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய் ஊற்றெடுத்தது. அந்தத் தெலுங்கு மாணவி தமிழர்களுக்காக வடிக்கும் கண்ணீர் எம்மையும் உருக்கியது.
 
***தொடரும்***

வெள்ளி, 26 ஜூலை, 2013

அன்புள்ள பாட்டியும் சிடுமூஞ்சி பேத்தியும் (பாகம் 3)



பாட்டிக்குக் கயல்விழி மீது கோபம் வரும் போதெல்லாம், "சனியன், அம்மாவைப் போலவே புத்தி," என திட்டும் போது கயல் நிஜமாகவே நொறுங்கிவிடுவாள். அவள் தாய் எத்தகைய புத்திக் கொண்டவள் என்று அவளுக்கு எப்படித் தெரியும்? என்றாவது ஒருநாள் தன் தாய் தன்னை அவளோடு அழைத்துச் செல்லமாட்டாளா என்று ஏங்க தொடங்கினாள். ஏக்கத்தின் ஊடே வளர்ந்துப் படித்தாள். பல போட்டிகளில் பங்கெடுத்து பரிசுகளை அள்ளிக்குவித்தாள். அவள் கொண்டு வரும் பரிசுகளைப் பாட்டியின் கண்களில் படுமாறு வரவேற்பறையில் வைத்துவிட்டு அமைதியாக தன் அறைக்குள் சென்றுவிடுவாள். எதற்காக பரிசு கிடைத்தது என்று தெரியாமலேயே பாட்டி அதனைத் தூக்கிக்கொண்டு அக்கம் பக்கத்து வீடுகளில் பெருமை பாராட்டச் சென்றுவிடுவாள். கயல்விழியுடன் ஒரே வகுப்பில் படிக்கும் கல்யாணிதான் பாட்டிக்கு விபரம் சொல்வாள்.

6-ஆம் ஆண்டுத் தேர்வில் சிறப்பாக தேர்ச்சிப் பெற்று பள்ளியிலேயே சிறந்த மாணவிக்கான விருதினைத் தட்டிச் சென்றாள். அந்த விருதினை கயல்விழியின் சார்பாக அவளது பாட்டித்தான் பெற்றுக்கொண்டாள். பாட்டிக்குப் பேத்தி மீது அன்புதான். ஆனால், கயல்விழிக்கோ யார் மீதும் பிடிப்பு இல்லை. சொல்லாத சோகத்தை கண்ணோடும் , பாரத்தை நெஞ்சோடும் சுமந்து வந்தாள். யாரோடும் அவள் பிடி கொடுத்தும் பேசுவது இல்லை. அனாவசிய பேச்சுகளை அறவே தவிர்த்தாள். இதனாலேயே அவளுக்குச் 'சிடுமூஞ்சி' என்ற பெயர் ஏற்பட்டது. அந்தப் பெயரே அவளுக்குப் பாதுகாப்பாகவும் விளங்கியது. பாட்டிதான் அவளைப் பற்றி மிகவும் கவலைப்பட்டாள்.  எந்நேரமும் சிடுசிடுவென இருக்கும் கயல்விழியின் மேல் பாட்டிக்கு எரிச்சல் கூட வந்தது.

காலங்கள் உருண்டோடி கயல்விழி பருவம் எய்தினாள். அப்போதுதான் தனது வாழ்நாளில் கொடிய அனுபவங்களை அவள் சந்தித்தாள். அவளுக்கு எதுவும் புரியவில்லை;பாட்டி எதையும் விளக்கவில்லை. தாயின் நினைவுகளே அவளைக் கல்லாக மாற்றியது. பாட்டியின் அன்பு புரிந்தாலும் அதனை முழுமையாக அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன்னைத் தாயிடமிருந்து பிரித்தவள் தானே இவள் என்ற எண்ணம் இதயத்தில் நெருஞ்சி முள்ளாய் குத்திக்கொண்டிருந்தது. அவள் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தாள். பாட்டிக்கு அதுவும் தெரியவில்லை. தனது சிடுமூஞ்சிப் பேத்தியை அவளால் வெறுக்கவும் முடியவில்லை.

கயல்விழி படித்து முடித்து வேலைக்குச் செல்ல தொடங்கினாள். பாட்டியை விட்டு நெடுந்தூரம் பிரிந்து, தனியாக வசித்து வந்தாள். இன்று அவளுக்குச் செய்தி வந்தது... பாட்டி ஆபத்தான கட்டத்தில் சுயநினைவு இழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள். கயலுக்கு இதயமே வெடித்து விடும் போல இருந்தது. தான் எவ்வளவு தான் சிடுசிடுவென இருந்தாலும் அதனைப் பெரிதுபடுத்தாமல் அன்பு செலுத்தும் பாட்டி இப்போது சுயநினைவோடு இல்லை. என்ன செய்வாள் இந்த சிடுமூஞ்சி பேத்தி? சென்று அமைதியாக பார்த்தாள்....வழக்கம் போல தனியாகக் கதறுகிறாள்....

***முற்றும்***

ஞாயிறு, 14 ஜூலை, 2013

எழுத்தாளராகப் பாருங்கள்!



எழுத்தாளராக பாருங்கள்
எம்மை எழுத்தாளராக மட்டும் பாருங்கள்
எம் அவயங்களைப் பார்க்காதீர்
எம் பின்னனியைப் பார்க்காதீர்
எம் பாலினத்தைப் பார்க்காதீர்
எம்மைப் பெண்ணாகப் பார்க்காதீர்!

பெண்ணுறுப்பு இருப்பதனால்
பெருந்தன்மைக் காட்ட வேண்டாம்
வளைவுகள் இருப்பதனால்
விருதுகள் கொடுக்க வேண்டாம்
விரிந்த இலக்கியத்தில்
வித்தியாசம் கொள்ள வேண்டாம்!

மருமகன் என்பவன்
மறுவீடு செல்வதில்லை
தாய்வீட்டில் இருப்பதனால்
மாமியார் சண்டை இல்லை!
மருமகள் என்பவள்
புகுவீடு செல்வதனால்
புதிய இடம் என்பதனால்
பிரச்சனையில் வியப்பில்லை
பலருக்கு இது புரிவதில்லை!

எழுத்தாளரைப் பெண்ணாக்கி
பெண்ணை மருமகளாக்கி
அவளைப் பிரச்சனையாக்கி
பெருவிழாவில் பேசுகின்றீர்
'பெருந்தன்மை' காட்டுகின்றீர்!
பேனாவைப் பிடித்துக்கொண்டு
'பெண்ணாக' அமர்ந்துக்கொண்டு
எழுத்தாளர் பார்க்கின்றார்
கைத்தட்டி இரசிக்கின்றார்!

எப்போது வருந்துவார்?
எப்போது திருந்துவார்?
பெண் என்பவள் மனிதன் என்று
எப்போது உணருவார்?

பிரித்துப் பார்க்காதீர்
பாகுபாடு கொள்ளாதீர்
பரந்த இலக்கியத்தில்
பெண்னென்று ஒதுக்காதீர்!
படைப்பு என்று வந்தால்
படைப்பாளி ஒருவர்தான்
பாகுபாடு காட்டிவிட்டு
பெருந்தன்மைக் கொள்ளாதீர்!

எம்மை எழுத்தாளராகப் பாருங்கள்
எழுத்தாளராக மட்டும் பாருங்கள்!