ஞாயிறு, 14 ஜூலை, 2013

எழுத்தாளராகப் பாருங்கள்!எழுத்தாளராக பாருங்கள்
எம்மை எழுத்தாளராக மட்டும் பாருங்கள்
எம் அவயங்களைப் பார்க்காதீர்
எம் பின்னனியைப் பார்க்காதீர்
எம் பாலினத்தைப் பார்க்காதீர்
எம்மைப் பெண்ணாகப் பார்க்காதீர்!

பெண்ணுறுப்பு இருப்பதனால்
பெருந்தன்மைக் காட்ட வேண்டாம்
வளைவுகள் இருப்பதனால்
விருதுகள் கொடுக்க வேண்டாம்
விரிந்த இலக்கியத்தில்
வித்தியாசம் கொள்ள வேண்டாம்!

மருமகன் என்பவன்
மறுவீடு செல்வதில்லை
தாய்வீட்டில் இருப்பதனால்
மாமியார் சண்டை இல்லை!
மருமகள் என்பவள்
புகுவீடு செல்வதனால்
புதிய இடம் என்பதனால்
பிரச்சனையில் வியப்பில்லை
பலருக்கு இது புரிவதில்லை!

எழுத்தாளரைப் பெண்ணாக்கி
பெண்ணை மருமகளாக்கி
அவளைப் பிரச்சனையாக்கி
பெருவிழாவில் பேசுகின்றீர்
'பெருந்தன்மை' காட்டுகின்றீர்!
பேனாவைப் பிடித்துக்கொண்டு
'பெண்ணாக' அமர்ந்துக்கொண்டு
எழுத்தாளர் பார்க்கின்றார்
கைத்தட்டி இரசிக்கின்றார்!

எப்போது வருந்துவார்?
எப்போது திருந்துவார்?
பெண் என்பவள் மனிதன் என்று
எப்போது உணருவார்?

பிரித்துப் பார்க்காதீர்
பாகுபாடு கொள்ளாதீர்
பரந்த இலக்கியத்தில்
பெண்னென்று ஒதுக்காதீர்!
படைப்பு என்று வந்தால்
படைப்பாளி ஒருவர்தான்
பாகுபாடு காட்டிவிட்டு
பெருந்தன்மைக் கொள்ளாதீர்!

எம்மை எழுத்தாளராகப் பாருங்கள்
எழுத்தாளராக மட்டும் பாருங்கள்!

4 கருத்துகள்:

Mathi Mugilan சொன்னது…

ஒரு பெண்ணை அரசியலாக எதிர்க்க முடியாத போது அவரை வீழ்த்த முற்ப்படும் ஆணாதிக்க சிந்தனையாளர்கள் முன்னெடுக்கும் ஆயுதம் தான், ஒரு பெண்ணை பாலியல் ரீதியில் வீழ்த்த முயல்வது. பெரும்பாலான ஆணாதிக்க சிந்தனையாளார்களுக்கு பெண் எழுத்தளர் எழுதும் கருத்தில் பிரச்சனை இல்லை. ”ஒரு பெண் இதை எழுதிவிட்டாரே...” என்பதை தான் அவர்களால் தாங்க முடிவதில்லை. பெண்கள் பொதுவெளிக்கு வந்து ஆண்கள் பேசும் புரட்சியையும், அரசியலையும் பேசுவதையும் அவர்களால் சீரணித்துக் கொள்ள முடிவதில்லை.

போராட்டங்களால் ஒழிக்க முடியாத ஒடுக்குமுறைகளை எல்லாம் அறிவியல் சார்ந்த பரிணாம வளர்ச்சி ஒழித்துக்கட்டியுள்ளது. "பல்லக்கில் பயணிப்பவன் புண்ணியவான், அவனை தூக்கிச் சுமப்பவன் பாவி" என்று மனு தர்மம் போதித்தது. ஆனால் தந்தை பெரியாரும், புரட்சியாளர் அம்பேத்கரும் வந்த பிறகு, "பல்இலக்கில் பயணம் செய்பவன் ஆதிக்கவாதி, அவனைத் தூக்கிச் சுமப்பவன் ஏமாளி" என்கிற தெளிவு நமக்குப் பிறந்தது. இந்த பல்லக்கு தூக்கிற முறை எப்படி ஒழிந்தது? அதை ஒழிக்கப் போராடியவர்களால் கூட அதை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. அனால், ஒரு அறிவியல் மாற்றம் அதை ஒழித்துக்கட்டியது. எவனோ ஒருவன், மகிழ்வூந்தைக் கண்டு பிடித்தான். அப்போது ஒழிந்தது. மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது. பேருந்தையும் ,அகப்பளையும், தொடர்வண்டி முறையையும் கண்டு பிடித்த போது தாழ்த்தப்பட்டவன், உயர் சாதியாக உள்ளவன் பின்னால் தான் ஓடி வர வேண்டும் என்கிற நிலை ஒழிக்கப் பட்டது. கட்டைவண்டியில் இருந்த சாதி, பேருந்திலும், வானூர்தியிலும், தொடர்வண்டியிலும் தொலைந்து போனது. ஒரு பரிணாம வளர்ச்சி, விஞ்சான வளர்ச்சி அந்த மாற்றத்தை நிகழ்த்திக் காட்டியது.

அது போலவே, சமூக வலைத்தளங்கள், வலைப்பூக்கள் ஆண்/பெண் வேற்றுமையையும், பெண்கள் மீதான ஒடுக்குமுறையையும் ஒழித்துக்கட்டும். எனவே, பெண்கள் தற்போது தங்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் ஒடுக்குமுறையை புறம்தள்ளி தொடர்ந்து எழுதுவது அவசியம்.

சங்கவி சொன்னது…

நறுக்கென்ற வரிகள்...

Senthamizh Selvan சொன்னது…

ரசித்தேன்...சிந்தனைக்கு வித்திட்ட கவிதை...

து. பவனேஸ்வரி சொன்னது…

கருத்துரைகளுக்கு நன்றி