புதன், 29 செப்டம்பர், 2010

தேங்காப்பூ ரொட்டி (கவிதாவும் பாட்டியும்)


கவிதாவிற்குப் பசித்தது. நேற்று வாங்கி வைத்திருந்த தேங்காப்பூ ரொட்டியைப் பிரிந்து வாயில் வைத்தாள். அவளது நா ரொட்டியைச் சுவைக்கத் தொடங்கிய மறுகணம் அவள் மூளையில் ஏதோ ஒன்று மின்னல் போல் வெட்டிச் சென்றது. என்னவென்று சொல்ல முடியாத சோகம் அவள் முகம் முழுவதும் பரவியது…

***

“எழுந்திருச்சிட்டியா? இரு மைலோ கலக்கிறேன்.”

“வேணாம். நானே கலக்கிக்கிறேன்,” என்றவாறு அடுப்படிக்குச் சென்று, ஒரு குவளை மைலோவுடன் திரும்பிவந்தாள் கவிதா. ஏதும் பேசாமல் அமைதியாக மைலோவைச் சுவைக்கத் தொடங்கினாள்.

“ரொட்டிக்காரன் இன்னைக்கு வரவே இல்லை,” என்றவாறு கவிதாவின் முகத்தைக் கவனித்தாள் அவளது பாட்டி கனகம்மாள். அவள் முகத்தில் எவ்வித உணர்ச்சியும் தென்படவில்லை. பாட்டி சொல்லியது காதில் விழுந்தும் எதுவும் கேட்காதது போல் அமர்ந்திருந்தாள் கவிதா.

“சாப்பிடறதுக்கு ஒன்னுமே இல்ல. ஒரு வெள்ளி இருக்கு, கடைக்குப் போய் ஏதாவது ரொட்டி வாங்கிச் சாப்பிட்டுக்கிறாயா?’ என்று கேட்டாள். கவிதா வேண்டாம் என்று தலையை மட்டும் ஆட்டினாள். கனகம்மாள் கவிதாவையே கவனித்த வண்ணம் இருந்தாள். சட்டென்று ஏதோ ஞாபகம் வந்தவள் போல் அடுப்பறைக்கு அவசரம் அவசரமாய் சென்றாள்.

அடுப்பறையில் இருந்த பழைய அலமாரி ஒன்றைத் திறந்து காகிதத்தால் சுற்றப்பட்ட பொட்டலம் ஒன்றை எடுத்து வந்தாள். கவிதாவின் அருகில் வந்து பொட்டலத்தைப் பிரித்தாள். கவிதா கண்டும் காணாமல் மைலோவை சுவைப்பதிலேயே குறியாய் இருந்தாள். கனகம்மாள் பொட்டலத்தைப் பிரித்து தேக்காப்பூ ரொட்டி ஒன்றை எடுத்தாள்.

“நேத்து பசியாற வாங்கினேன். காலையில சாப்பிட மறந்தே போயிட்டேன். இந்தா, இத சாப்பிடு,” என்று இருந்த ஒரே ஒரு ரொட்டியைக் கவிதாவிடம் நீட்டினாள் கனகம்மாள். கவிதா கண்களை மட்டும் திருப்பி ரொட்டியைப் பார்த்தாள். அவளுக்குப் பசித்தது. இருந்தாலும் அவள் தேங்காப்பூ ரொட்டி சாப்பிடமாட்டாள்.

“நான் தேங்காப்பூ ரொட்டி சாப்பிட மாட்டேன். நீங்க சாப்பிடுங்க,” என்றாள். பாட்டியின் முகத்தில் ஏமாற்றத்தின் சாயல் தென்பட்டது.

“எனக்கு இவ்ளோ வேணாம். ஆளுக்குப் பாதிப் பாதி எடுத்துக்குவோம்,” என்றாள் கனகம்மாள். உண்மையிலேயே அது மிகவும் சிறிய ரொட்டிதான். உள்ளங்கையில் அடங்கக்கூடிய அளவு சிறியது. கவிதா பாட்டியின் பரிதாபமான முகத்தைப் பார்த்தாள். தான் வேண்டாமென்றால் இவளும் சாப்பிடமாட்டாள் என்பதால் சரி என்று தலையாட்டினாள்.

கனகம்மாள் மிகுந்த உற்சாகத்தோடு ரொட்டியைப் பாதியாய் பிய்த்து, அதில் சற்றுப் பெரிதாகத் தெரிந்ததைக் கவிதாவிடம் நீட்டினாள். கவிதா ஒன்றும் சொல்லாமல் ரொட்டியை வாங்கி முதன் முதலாகத் தேங்காப் பூ ரொட்டியைச் சுவைக்கத் தொடங்கினாள். அதன் சுவை அவளுக்குப் பிடித்திருந்தது.

ஒன்றும் பேசாமல் ரொட்டியைத் தின்றுவிட்டு, மைலோவையும் குடித்து முடித்தாள். பின்னர் ஏதும் பேசாமல் மீண்டும் தன் அறைக்குச் சென்றுக் கதவைத் தாளிட்டுக்கொண்டாள்.

***

கவிதாவிற்கு மனசு லேசாக வலித்தது. வாங்கி வைத்திருந்த ஒரு ரொட்டியையும் தான் சாப்பிடாமல் தன்னை உண்ணச் சொன்ன பாட்டியின் பெருந்தன்மையை எண்ணி வியந்தாள். அப்படியொரு உறவு மீண்டும் தனக்குக் கிடைக்குமா அல்லது கடந்த காலங்கள் மீண்டும் திரும்பி வருமா என்ற ஏக்கத்துடன் தேங்காப்பூ ரொட்டியை மன வலியுடன் சேர்த்து விழுங்கினாள்.