வியாழன், 3 நவம்பர், 2016

நிறைவு!


என்னுடன் வேலை செய்வபர்களில் 90% பதினெட்டிலிருந்து, இருபத்தைந்து வயதிற்கு உட்பட்ட மாணவர்கள். சுயமாக உழைத்துச் சொந்த சம்பாத்தியத்தில் படித்துக்கொண்டிருப்பர்கள். ஊழியம் குறைவாக இருப்பினும், படிப்புச் செலவுக்கு ஆகுமே என தமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ளப் போராடிக்கொண்டிருப்பவர்கள். அதில் இருவருக்குக் கடந்த வாரம் பிறந்தநாள். 

பெண்ணுக்குப் பதினெட்டு வயது. ஆணுக்கு இருபத்திரண்டு வயது. நேற்றைய தினம் அவர்களுடன் எனக்கு வேலை. கடையில் நாங்கள் மூவர் மட்டுமே வேலை பார்த்துக்கொண்டிருந்தோம்.  இங்குள்ள பிரபல தங்கும் விடுதியில் இருக்கும் கடை ஒன்றில் இரவு 9.30 வரையில் வேலை. காலையிலிருந்து மதியம் வரை வேறு சிலர் வேலை செய்வர். மதியத்திலிருந்து நாங்கள் வேலையைத் தொடங்குவோம். நேரமும் ஆட்களும்  மாறி மாறி வருவர். 

மாலை மணி 4.30-ஐத் தாண்டும் போது அந்தப் பெண் "கடையில் சாப்பாட்டு ஏதுமில்லையா?" என பசியுடன் கேட்டாள். தினசரி விடுதி சமையலறையிலிருந்துக் கொண்டுவரப்பட்ட உணவுகள் அனைத்தையும் விற்றாகிவிட்டது. அந்தப் பையனும் இன்னும் உணவு உண்ணவில்லை. "எதுவுமே இல்லை" என அவனும் பாவமாய் கூறினான். பசியின் கொடுமை அனுபவித்தவர்களுக்குத் தெரியும். பணியாளர்களுக்கென அமைக்கப்பட்ட அருந்தகமும் மாலை 4 மணிக்கெல்லாம் மூடிவிடும். மற்றபடி கடையில் இருக்கும் நொறுக்குத் தீணிகளும், ஏனைய உணவுப் பொருட்களையும் பணம் கொடுத்துத்தான் வாங்கி உண்ண வேண்டும். விலையோ ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும். 

"எதுவுமே இல்லை. வெளியிலிருந்து ஏதாவது வாங்கலாமே?" என்றேன். "அதிக விலையாக இருக்கும்," என இருவருமே சோகத்துடன் கூறினர். பசி படிந்த அந்த முகங்களைப் பார்க்கவே பாவமாய் இருந்தது. எனது வங்கியிலோ வெறும் 50 டாலர்கள் மட்டுமே இருந்தது. நம்மிடம் இருந்தால் கொடுக்கலாம், நமக்கே இல்லாதபோது எங்கிருந்துக் கொடுப்பது என பேசாமல் இருந்துவிட்டேன். நேரம் ஆக ஆக, அவள் பசிக்கிறது என முனக ஆரம்பித்தாள். மணி ஐந்தைத் தாண்டியபோது அவர்களின் முகங்களை என்னால் ஏறெடுத்துப் பார்க்க முடியவில்லை.

"உங்கள் இருவருக்கும் என்ன வேண்டுமோ வாங்கிச் சாப்பிடுங்கள். நான் பணம் தருகிறேன்," என்றேன். எப்படியும் 50 டாலர்களுக்கு மேல் சாப்பிட மாட்டார்கள் என்பது தெரியும். அவர்கள் இருவரும் நான் சொன்னதை நம்பாமல், "உண்மையாகவா?" என திரும்பத் திரும்பக் கேட்டனர். "உங்கள் இருவருக்கும் எனது பிறந்தநாள் உபசரிப்பாக இருக்கட்டும்," என்றேன். அப்பொழுதும் அவர்கள் நம்பவில்லை. 

"நான் பிட்சா சொல்லலாமா?" என அந்தப் பையன் கேட்டான். "சொல்" என்றேன். "உண்மையாகவா?" என அவள் மீண்டும் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டாள். ஒருவழியாக தொலைப்பேசியில் உணவுகளைக் கேட்டு அதற்கான கட்டணத்தைச் செலுத்தியவுடனேயே அவர்களின் முகம் மலர்வதைக் கண்டேன். உணவு வந்த பிறகு குறைந்தபட்சம் இருபது முறையாவது நன்றி சொல்லியிருப்பார்கள். "வயிறு நிறைந்துவிட்டது," என அவர்கள் சொன்ன போது என் மனம் நிறைந்துவிட்டது.

பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது, உணவு நேரத்தைத் தவறவிட்டு, ரொட்டித்துண்டு வாங்கிச் சாப்பிடக்கூட பணமில்லாமல், பசியில் அழுதுக்கொண்டே உறங்கிப் போன நினைவுகள் கண்முன் வந்துச் சென்றது. இவர்களின் பசியை இன்று போக்கிவிட்டோம் என்ற நிறைவு , மனம் முழுக்கப் பரவியது.