வியாழன், 28 ஏப்ரல், 2011

ஆத்துக்குப் போகணும் நாவல் பெண் பாத்திரங்களும் ஆறுமுகம் நாவலில் வரும் பெண் பாத்திரங்களும் ஓர் ஒப்பீடு -பாகம் 2




தொடர்ச்சி...

ஆணாதிக்கம்

ஒரு பெண் பிறந்தவுடன் தந்தையின் அரவணைப்பிலும், வளரும்போது சகோதரனின் கண்காணிப்பிலும், திருமணமானவுடன் கணவனின் கட்டுப்பாட்டிலும், வயதானவுடன் ஆண் பிள்ளையின் ஆதரவிலும் வாழ்கிறாள். இவ்வாறாக ஒரு பெண்ணின் வாழ்க்கையில் முழுக்க முழுக்க ஆண்களின் ஆதிக்கம் நிறைந்துள்ளது. காவேரியின் ‘ஆத்துக்குப் போகணும்’ என்ற நாவலிலும் இந்த ஆணாதிக்கப் போக்கை நம்மால் காண முடிகின்றது. இந்நாவலில் திருமணமானப் பெண்கள் தங்கள் திறமைகளைத் தொடர முடியாமல் முடக்கி வைக்கப்படுவது காட்டப்படுகிறது. திருமணத்திற்கு முன்பு காயத்ரி நாட்டியத்திலும் ரமா எழுதுவதிலும் ஈடுபட்டிருந்தனர். ஆனால், திருமணத்திற்குப் பிறகு ரமாவுக்கு எழுவது ஒரு பொழுதுபோக்காகவும், காயத்ரிக்கு நாட்டியம் ஒரு உடற்பயிற்சியாகவும் தேய்ந்துவிட்டது. இருவருக்கும் தங்களின் கலைகளைத் தொடர நேரமும் வசதியும் இல்லாமல் போய்விட்டது.



பெண்கள் திருமணத்திற்குப் பிறகு தங்கள் திறமைகளையும் கலைகளையும் தொடர முடியாத சூழல் ஏற்படுகிறது. இதனை கணவர்களான ஆண்களும் கண்டுக்கொள்வதில்லை. மனைவியின் திறமை அல்லது ஆசைகளுக்குக் கணவன்மார்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பெண்களுக்கும் ஆண்களைப் போல் மனதில் ஆசைகளும் இயற்கையாகச் சில திறமைகளும் இருக்கும் என்பதை ஆண்கள் மறந்துவிடுகின்றனர். பெண்களை எப்போதும் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் வைத்துக்கொள்ளவே விரும்புகின்றனர். உதாரணமாக, ரமா தன்னுடைய கணவன் துரைசாமி தன் எழுத்துத் திறமையை அங்கீகரிக்காததோடு தன்னைச் சந்தேகப்படுவதைக் கண்டு கவலைப் படுகிறாள். கணவன் மட்டுமல்லாது இந்தச் சமுதாயமே தன்னைச் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதையும் அவளால் உணர முடிகிறது. பெண் எழுத்தாளர்களின் விஷயத்தில் மட்டும் இலக்கிய படைப்புகளை அவர்களின் சொந்த வாழ்க்கையுடன் தொடர்பு படுத்திப் பேசப்படுவதை எண்ணி நோகிறாள். இவ்விடம் எழுத்தாளர்களின் மத்தியில் கூட ஆண் பெண் பேதம் பார்க்கப்படுவதைக் காண முடிகிறது.



பெற்றோர்களே தன் பிள்ளைகள் மத்தியில் ஆண் பெண் பேதம் பார்த்து வளர்ப்பதையும் இந்நாவலில் காண்கிறோம். சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் பிறக்கும் பெண் குழந்தைகளைக் கள்ளிப்பால் கொடுத்து சாகடிக்கும் பழக்கம் இருந்து வந்ததை நாம் நன்றாய் அறிவோம். இந்நாவலில் வரும் ரமாவின் அண்ணன் முட்டாள் உதவாக்கரையாக இருந்தபோதிலும் ரமாவின் பெற்றோர்கள் அவனை ரமாவை விடச் செல்லமாக வளர்த்தனர். அனைத்து விசயத்திலும் ரமா கெட்டிக்காரியாக இருந்தபோதிலும் அவளை அவளது பெற்றோர்களே மதிக்கவில்லை. ரமாவுக்குச் சிறிதும் பொருத்தமில்லாத துரைசாமியை அவளுக்குக் கட்டிவைத்து அவளை அத்தோடு கைக்கழுவி விடுகின்றனர். சொந்த பெற்றோர்களே ரமாவின் உணர்வுகளைப் புரிந்துக்கொள்ளாமல் அவளை உதாசீனம் செய்கின்றனர்.



ஆறுமுகம் நாவலிலும் ஆணாதிக்கப் போக்குப் பரவலாகக் காட்டப்படுகிறது. ஜெரி ஆல்பட் தன்னிடம் வேலைப் பார்க்கும் தனபாக்கியத்திற்கு திருமணமாகி ஒரு மகனும் உண்டு என்பதை அறிந்திருந்தும் தனது காமப்பசிக்கு அவளை இரையாக்குகின்றான். தனது ஒரே மகனை நன்றாகப் படிக்க வைத்து இன்ஜினியராக்க வேண்டும் என்ற கனவு அவளை ஜெரி ஆல்பட்டின் ஆசைக்கு இணங்க வைத்தது. இதனால் தனபாக்கியம் தனது தந்தையை இழந்து மகனைப் பிரிய நேரிடுகிறது.



செக்குமேட்டில் வாழ்ந்து வரும் சின்னப் பொண்ணுவிற்கும் தருமமூர்த்திக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லாத போதிலும் பெண் என்ற ஒரே காரணத்தால் சின்னப் பொண்ணு அடிமைப்படுத்தப்படுகிறாள். தருமமூர்த்தி அவளைத் தகாத வார்த்தைகளால் திட்டுகிறான்; பணம் கேட்டு அடிக்கிறான். சின்னப் பொண்ணு, அபிதா போன்றோரிடம் தங்களது காமப்பசியைப் போக்கிக்கொள்ள வரும் ஆண்களும் அவர்களை ஒரு போகப்பொருளாக, உணர்ச்சியற்ற பிண்டமாகவே பார்க்கின்றனர். ஒரு சில ஆண்கள் அவர்களின் தேவைத் தீர்ந்த பின்பு இவர்களுக்குப் பணம் கொடுக்காமல் அடிக்கவும் செய்கின்றனர். இவ்விடம் ஆணாதிக்கப் போக்கு நன்கு வெளிப்படுகிறது.

...தொடரும்

புதன், 27 ஏப்ரல், 2011

இப்படியும் நடக்குமா?




தடுப்புக் காவலிலுள்ள முன்னாள் போராளிகளின் கலைக் கண்காட்சி அண்மையில் இலங்கையில் நடைப்பெற்றுள்ள செய்தியினையும் படங்களையும் இணையத்தளத்தில் பார்க்கும் துர்பாக்கியம் எமக்குக் கிட்டியது. தமிழினக் கொலைக்காரன் இராஜபக்சேவின் படம் பெரிதாக வரையப்பட்டு சுவரில் தொங்கிக் கொண்டிருக்கிறது. தமது இனத்தை அழித்தவனின் உருவத்தை எந்தப் போராளி அணுஅணுவாய் இரசித்து வரைந்தான் என்று எமக்குத் தெரியவில்லை. புத்தர் தியானம் செய்வது போல் மற்றொரு படம். இந்து தெய்வங்களின் ஓவியங்கள் நான் பார்த்த இணையத்தள செய்தியில் இல்லை.



‘புனர்வாழ்வின் ஊடாக மீள்சிந்தனை’ எனும் தொனிப்பொருளில் இக்கண்காட்சி கொழும்பில் நடைப்பெற்றதாம். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பலவந்தமாகச் சேர்க்கப்பட்டதனால் தமது எதிர்காலம் பாழாய் போனது போன்ற தொனியில் முன்னாள் போராளி ஒருவர் வரைந்திருந்தாராம். இயக்கத்தில் சேர்ந்த கணவர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையை இழந்து பெண் ஒருவள் காத்திருப்பது போல், சிறுவர்கள் கல்வி கற்கும் உரிமையை இழந்து வாடுவது போல், இளைஞர்கள் சுதந்திரத்தை இழந்துத் தவிப்பது போல் ஏராளமான ஓவியங்கள் கண்காட்சியில் இடம் பெற்றனவாம்.



இந்தச் செய்தியைப் படிக்கும் போதும் படங்களைப் பார்க்கும் போதும் ‘நாண்டுக்கிட்டுச் சாகலாம்’ என்று கிராம வழக்கில் சொல்வார்கள் அல்லவா? அப்படி இருந்தது எமக்கு! பல்லாயிரக்கணக்கான போராளிகள் எதற்காக அய்யா உயிர்த்தியாகம் செய்தார்கள்? விடுதலைப்புலிகள் உங்களை எல்லாம் கட்டாயப்படுத்தி இயக்கத்தில் சேர்த்தார்களா இல்லையா என்று எமக்குத் தெரியாது. போராட ஆட்கள் வேண்டும் என்று சொன்னால் அவர்கள் பின்னே அனைத்தையும் துறந்துச் செல்வதற்கு உலகெங்கிலும் எத்தனையோ தமிழர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். அப்படியிருக்கையில் இயக்கத்தில் சேர உங்களை வற்புறுத்த என்னக் காரணம்?



தமிழர்களின் தாயகத்தை மீட்டெடுக்கும் போராட்டத்தில் உங்களை இணைத்துக்கொண்டதற்காக நீங்கள் பெருமைப் பட வேண்டும். அதைவிடுத்து வீண் பழி சுமத்தி இயக்கத்திற்கு கலங்கம் விளைவிக்கும் முயற்சியில் தாங்கள் ஈடுபட்டிருப்பது போன்ற தோற்றத்தை அல்லவா இது ஏற்படுத்தித் தருகிறது? அடிமையாய் கோழையாய் தினம் தினம் செத்துப் பிழைப்பதை விட வீரனாய் வாழ்ந்து மடிவது மேல்!



தவிர இரு முன்னாள் போராளிகள் மருத்துவப் பீடத்திற்குத் தெரிவுச் செய்யப்பட்டுள்ளனராம். இது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் புனர்வாழ்வு செயற்பாடுகளுக்குப் பாரிய வெற்றியினைக் கொடுத்துள்ளதாம். மிகவும் அழகாய் இருக்கிறது! இலட்சக்கணக்கில் எமது இனத்தைக் கொன்றுவிட்டு இரண்டே இரண்டு மருத்துவர்களை உருவாக்கினால் அனைத்தும் சரியாகிவிடுமா?



என்ன நடக்கிறது அங்கே? என்ன செய்துக்கொண்டிருக்கிறார்கள் நமது மக்கள்? இவற்றையெல்லாம் வரைந்தது உண்மையிலேயே முன்னாள் போராளிகள் தானா அல்லது இது இலங்கை அரசாங்கத்தின் கண்கட்டி வேலையா? இது பொய்யா மெய்யா என்று தெரியவில்லை. ஆனால், நெஞ்சம் வலிக்கிறது. தமிழர்களை அழித்த கொடியவனின் உருவத்தை இன்னொரு தமிழன் வடிவாய் வரைந்து காட்சிப் பொருளாய் வைப்பானா? ஒரு போராளியால் இவ்வாறு செய்ய முடியுமா? மனம் வருமா? இப்படியும் நடக்குமா?

சனி, 23 ஏப்ரல், 2011

ஆத்துக்குப் போகணும் நாவல் பெண் பாத்திரங்களும் ஆறுமுகம் நாவலில் வரும் பெண் பாத்திரங்களும் ஓர் ஒப்பீடு -பாகம் 1




முன்னுரை

‘பெண்ணியம்’ என்ற சொல் பெண் என்பவள் ஆணுக்கு நிகரானவளே; எந்த நிலையிலும் எந்தக் காலத்திலும் அவள் அடக்கி வைக்கப்படக்கூடாது; தனிமைப்படுத்தி வைக்கப்படக்கூடாது என்று பொருள்படும். தலைமுறை தலைமுறையாக ஒடுக்கப்பட்டு, வதைக்கப்பட்டு, அடிமை போல் நடத்தப்படும் பெண்களுக்குக் கல்வியறிவும் பொதுவறியும் ஊட்டி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, சமூகத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களின் நிலையை உயர்த்துவதே பெண்ணியத்தின் இலக்காகும். ஆண் ஆதிக்கத்தால் ஒடுக்கப்பட்டு, அவர்களின் பாலியல் தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு, அவர்களுக்காகவே வாழ்நாள் முழுவதும் சேவை செய்து, தங்களின் அனைத்துத் தேவைகளுக்கும் ஆணையே நாடும் மரபு வழி வாழ்க்கை முறையிலிருந்து அவர்களை வெளியே கொண்டு வந்து, அவர்களின் உணர்ச்சிக்கு மதிப்பளித்து, அவர்களின் உரிமைகளை நிலைநாட்ட அனைத்துத் தடைகளையும் எதிர்கொண்டு போராடும் ஓர் இயக்கமாகப் பெண்ணியம் திகழ்கிறது. சுருங்கக்கூறின், பெண் என்பவளை சக உயிரியாக மதிப்பதே பெண்ணியம். ‘ஆத்துக்குப் போகணும்’ என்ற நாவலும் ‘ஆறுமுகம்’ என்ற நாவலும் இப்பெண்ணியத்தை அடிப்படையாகக் கொண்டுப் படைக்கப்பட்டதே.



‘ஆத்துக்குப் போகணும்’ கதைச்சுருக்கம்

‘ஆத்துக்குப் போகணும்’ என்ற நாவல் காவேரி என்ற பெண் எழுத்தாளரால் எழுதப்பட்டதாகும். இந்நாவல் முற்றிலும் பெண்ணியச் சிந்தனையை அடியுற்றி எழுதப்பட்டுள்ளது. சங்கர்-காயத்ரி மற்றும் துரைசாமி-ரமா ஆகிய இரு தம்பதிகளின் வாழ்க்கையைச் சுற்றி பின்னப்பட்டதே ‘ஆத்துக்குப் போகணும்’ என்ற நாவல். காயத்ரியின் ஒவ்வொரு செய்கையிலும் திருப்தி அடைந்த கணவனாக சங்கர் விளங்குகிறான். காயத்ரி தன் குடும்பத்தாருக்கு ஏற்புடைய ஒரு மகளாக, மனைவியாக, தாயாக நடந்துக்கொள்கிறாள். காயத்ரியும் சங்கரும் டெல்லியில் ஒரு வீடு வாங்குகின்றனர். இருந்த போதிலும், காயத்ரி தான் சிறு வயதில் பெங்களூரில் தாத்தாவின் விசாலமான வீட்டில் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து ஏங்குகிறாள். ஏக்கங்கள் அவளது அடி மனதில் ஆழமான தாக்கங்களை உ ண்டாக்குகின்றது. காயத்ரி தன்னுடைய உடலையே ஒரு வீடாக எண்ணிக்கொள்கிறாள்.



துரைசாமி-ரமா ஆகியோரின் இல்லற வாழ்க்கை சுமூகமாக இல்லை. பிறந்தகத்திலும் புக்ககத்திலும் ரமா தன்னுடைய உணர்வுகளைப் புரிந்துக்கொள்ளாத மனிதர்களின் மத்தியில் சிக்கித் தவிக்கிறாள். துரைசாமி மரபு வழி வந்த ஆண் ஆதிக்கம் நிறைந்த கணவனாக இருக்கிறான். ரமாவின் கஷ்டங்களைச் சிறிதும் புரிந்துக்கொள்ளாமல் அவளைச் சந்தேகப்பட்டு அவளது மனதை மென்மேலும் காயப்படுத்துகிறான். ரமாவின் மாமனார் மாமியாரும் அவளைப் புரிந்துக்கொள்ளாது சுடுசொற்களை வீசுகின்றனர். ஒரு மனைவியின் உணர்வுகளைப் புரிந்துக்கொள்ளாத துரை அவளது எழுத்து பணிகளுக்கும் முட்டுக்கட்டையாக இருக்கும் வேளையில் ரமா மனதளவில் துரையை ஒதுக்கி விடுகிறாள். அதே சமயம் தன்னுடன் பணி புரியும் தாமோதரன் என்ற நண்பனை மனதளவில் கணவனாக ஏற்றுக்கொள்கிறாள்.

‘ஆறுமுகம்’ கதைச்சுருக்கம்

இமையத்தின் ‘ஆறுமுகம்’ என்ற நாவல் முழுக்க முழுக்க தலித் மக்களைச் சுற்றிப் பின்னப்பட்ட கதையாகும். இந்த நாவலின் முக்கியக் கதாபாத்திரமே ஆறுமுகம்தான். அவனது அழகான அம்மாவான தனபாக்கியம் கணவன் ராமன் இறந்தவுடன் தனது தந்தையுடன் பிறந்த வீட்டில் வாழ்கிறாள். தனது மகன் ஆறுமுகத்தை நன்றாகப் படிக்க வைத்து இன்ஜினியராக்கக் கங்கணம் கட்டுகிறாள். அதற்காகத் தனது தகப்பன் பேச்சையும் மீறி தன் கணவன் பணிபுரிந்த ஆரோவில் வேலைக்குச் சேர்கிறாள். அங்கே தனது மேலதிகாரியான ஜெரி ஆல்பட்டுடன் அவளுக்குத் தொடர்பு ஏற்படுகிறது. இது அரசல் புரசலாக தனபாக்கியத்தின் தந்தையான முத்துக் கிழவரின் காதில் விழ கிழவர் தனது உயிரை மாய்த்துக்கொள்கிறார். ஒரு சமயம் ஜெரி ஆல்பட்டுடன் தனது தாயை நிர்வாணமாகப் படுக்கை அறையில் காணும் ஆறுமுகம் மனம் வெறுத்து வீட்டை விட்டே ஓடுகிறான்.



பின்னர் ரிக்ஷாக்காரன் தருமமூர்த்தியைக் காண்கிறான். அவன் மூலமாக செக்குமேட்டில் சின்னப்பொண்ணுவிடம் தஞ்சமடைகிறான். செக்குமேட்டு வாழ்வு ஆறுமுகத்திற்கு நிறைய வாழ்க்கை அனுபவங்களைக் கொடுக்கிறது. எதைப் பார்த்து, நொந்து ஓடி வந்தானோ அதுவே செக்குமேட்டின் வாழ்க்கை முறையாக இருப்பதைக் காண்கிறான். அங்கு சின்னப்பொண்ணு, அபிதா, பாக்கியம் , வசந்தா போன்ற பெண்களைச் சந்திக்கின்றான். தலித் பெண்கள் படும் அவதியையும் அவர்களது வாழ்க்கை முறைகளையும் கண் கூடாகக் காண்கிறான். தனது தாய் தனபாக்கியத்தின் நிலையை உணர்ந்து அவளை மன்னிக்கிறான். இறுதியில் ஒருநாள் தனது தாயை ஒரு விபச்சாரியாகச் செக்குமேட்டில் பார்க்கிறான். மகனை என்றாவது ஒருநாள் சந்திப்போம் என்ற எதிர்ப்பார்ப்புடன் நடைப்பிணமாக வாழ்ந்துக் கொண்டிருந்த தனபாக்கியம் ஆறுமுகத்தைச் சந்தித்த மறுநாளே உயிர் துறக்கிறாள்.

-தொடரும்

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

எமது தாகம்!






எமது தாகம்


தமிழீழத் தாயகம் என்றேன்

நன்றாய் பேசுகிறாய் என்றார்கள்

புலிச்சின்னத்தை முதுகில் ஏந்தினேன்

நன்றாய் நடிக்கிறாய் என்றார்கள்!



ஈழமக்கள் நிலைக் கருதி

கண்ணீர் விட்டுக் கதறிழுதேன்

ஆஹா, முதலைக் கண்ணீர்

உனக்கும் வருகிறதே என்றார்கள்!



உதவாக்கரைத் தலைவர்களை

ஏசிப் பேசினேன்…

சாணக்கிய அரசியல்

உனக்கென்ன தெரியும் என்றார்கள்!



தமிழர்களே ஒன்றுப்படுங்கள்

தாயகத்தை மீட்டெடுப்போம் என்றேன்

நான் மலேசிய இந்தியன் என்றான்

தமிழ்ப் பேசும் சகோதரன்!

ஏன் தேவையில்லாமல் பிரச்சனை?

சமரசம் பேசவேண்டியது தானே என்றான்

சரித்திரம் தெரியாத இளைஞன்!



இதற்குள் நான் வரவில்லை

ஒதுங்கிப் போனான் அரசியல்வாதி

பாவம் இலங்கையர் என்று பரிதாபித்தான்

பாரம்பரியம் தெரியாத ஒருவன்!



தமிழர்கள் இனவெறியாளர்கள் என்றான்

இலங்கை வாழ் முஸ்லிம் தமிழன்

நீயும் தமிழன் தானே என்றேன்

இல்லை, நான் முஸ்லிம் என்றான்

தன் நிலைமை அறியாதவன்!



உனக்கேன் இவ்வளவு மொழி வெறி

கேட்டான் இன்னொரு தமிழன்

ஏன் இனவெறிப் பிடித்து அலைகிறாய்?

எம்மினத்தில் பிறந்தவன் சலிப்போடு கேட்டான்!



நீ இலங்கை அரசின் கைக்கூலி

தமிழர்களைக் குழப்புகிறாய் என்றான்

தமிழன் என்று அடையாளம் காட்டியவன்!

உனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை

ஒதுங்கி நின்று வேலையைப் பார்

மிரட்டினான் அடையாளம் தெரியாதவன்!



தமிழன் ஓர் இனம் தானே

இத்தனைப் பிரிவினை அதற்குள் ஏன்?

எத்தனை மனிதரடா- அவர்

எத்தனை விதங்களடா?

புரியாமல் தளர்ச்சியுற்றேன்!



கவலைக் கொண்டு கரைய வேண்டாம்

கண்ணீர் விட்டு அழுக வேண்டாம்

உணர்ச்சியுள்ள தமிழர் நாம்

ஒன்றுப்பட்டு போராடுவோம் என்றான்

இன மொழி உணர்வுள்ள தமிழன்!



போற்றுவார் போற்றட்டும்

தூற்றுவார் தூற்றட்டும்

அதை எண்ணி வருந்த வேண்டாம்

நான் உண்டு உன்னோடு என்றான்

உறுதியுடையத் தமிழன்!



வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை

வருந்தாதே தோழி, சரித்திரம் படைப்போம்

தரணியில் செழிப்போம் என்றான்

தன்மானத் தமிழன்!



எட்டப்பன் குவிந்துவிட்டான்-அவனை

எட்டி உதைத்துவிடு

தமிழன் என்று சொல்லி நம்

ஒற்றுமைக் கலைக்க வந்த-அவன்

குரவளை நெறித்துவிடு என்றான்

வீரத்தமிழன்!



நெகிழ்ந்தேன், மகிழ்ந்தேன்

எம்மினத்தின் விடியலை உம்மில் கண்டேன்

தன்மானப் புலிகள் பதுங்கி இருப்பது

பயத்தால் அல்ல பாய்வதற்கென்று

விரைவில் புரிய வைப்போம்-நம்

நாட்டை மீட்டெடுப்போம்!



தமிழன் என்ற குடையின்கீழ்

அனைவரும் ஒன்றிணைவோம்

விடியும் வரை போராடுவோம்!

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

தரணிக்கு உணர்த்திடுவோம்

தமிழர் உரிமைக் காத்திடுவோம்!

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

இறைவா…இருக்கின்றாயா???



இறைவா!!!
எங்கே இருக்கிறாய்?
எமது சகோதரிகள் கதறியழுகிறார்களே
உமது காதில் விழவில்லையா?

கூட்டம் கூட்டமாக
அவர்களது கற்பு சூறையாடப்படுகிறதே
அதனை நீ பார்க்கவில்லையா!
எங்களைக் காப்பாற்றுங்கள் என்று
ஓலமிட்டு அலறுகிறார்களே
உன் காதுகளைப் பொத்திக்கொண்டாயா?

உம்மைச் சிலையாகப் பார்த்ததினால்
கல்லாக சமைந்து விட்டாயா?
இறைஞ்சி அழைப்பதனால்
இம்சையென்று ஒதுக்கிவிட்டாயா?

பிறவி கொடுக்கும் பிறப்புறுப்பில்
துப்பாக்கி வைத்துச் சுட்டால்
என்ன துடிதுடிப்பாள்-அவள்
எப்படி மடிந்திருப்பாள்?

நிழற்படத்தைப் பார்க்கும் போதே
அடிவயிறும் கலங்கிடுதே
அவள் பட்டத் துன்பம் எண்ணும் போது
உடல் ஆவிப் பிரிகிறதே!

ஏன் படைத்தாய் இறைவா
துடிதுடித்துச் சாகத்தானோ?
வாழும் இளம் குருத்து
வெயிற்பட்டு வேகத்தானோ?