புதன், 21 ஜனவரி, 2009

எங்கே செல்லும்…? (8)


இருவரும் 1500 மீட்டர் ஓட்டத்திற்குத் தயாரானார்கள். அனைவரது மனதிலும் ஒரு வித படபடப்பு. ஜெயிக்கப் போவது யார் என்ற கேள்வி அங்கே குழுமியிருந்த அனைவரது உள்ளத்திலும் எழுந்தது. அனைவரது கண்களும் போட்டியில் பங்கேற்கப் போகும் அந்த இருவரையுமே மொய்த்துக் கொண்டிருந்தன.

கவிதா மிகவும் சாதாரணமாகக் காணப்பட்டாள். அவளிடம் படபடப்புக்குப் பதிலாக கோபமே மிஞ்சி நிற்பதை அவளது தோழிகள் கண்டார்கள். அவளுடன் போட்டியிட வந்தவனோ மிகவும் அலட்சியமாக நடந்து வந்தான். 500 மீட்டர் சுற்றளவைக் கொண்ட அந்த ஓட்டப்பந்தயத் திடலை அவர்கள் 3 முறை சுற்றிவர வேண்டும். போட்டி ஆரம்பமானது…

3, 2, 1, ரன்…

சொல்லியதுதான் தாமதம்…கவிதாவுடன் போட்டியிட வந்தவன் காற்றைப் போல் பறந்தான். அவன் முக்கால்வாசி திடலைக் கடக்கும்போது கவிதா பாதித் திடலை மட்டுமே கடந்திருந்தாள். இருப்பினும் அவளது தோழிகள் மனம் தளராது அவளுக்கு உற்சாகக் குரல் கொடுத்து வந்தனர். முதற்சுற்றை வேகமாக ஓடி முடித்தவனுக்கு மூச்சு வாங்க ஆரம்பித்தது. அவனது கால்கள் மெல்ல மெல்ல சக்தியை இழக்கத் தொடங்கின. அவனது வேகம் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. கவிதாவோ ஆரம்பித்த வேகத்திலேயே இன்னனும் ஓடிக்கொண்டிருந்தாள். அவளது வேகம் குறையவும் இல்லை கூடவும் இல்லை.

இரண்டாவது சுற்றின் இறுதிக்கட்டம். ஓடியவன் திரும்பிப் பார்த்தான். கவிதா அவனை நெருங்கிக் கொண்டிருந்தாள்.

“மச்சான், ஓடுடா! அது கிட்ட வந்துக்கிட்டு இருக்கு. விடாதே. ஓடு… உன்னால முடியும்… ஓடு!”

“டேய் விட்டுடாத’டா. ஓடு! கமான். இன்னும் ஒரு ரவுண்டு’தான். நீதான்’டா மொதல்’ல இருக்க. அப்படியே மெயிண்டன் பண்ணு. வா, வா, வா…”

“ரமேஷ், சீக்கிரம் வா’டா!”

ஓ, கவிதாவுடன் ஓடுபவன் பெயர் ரமேஷ் போலும். ரமேஷால் வேகத்தை அதிகப்படுத்த முடியவில்லை. பாவம்! 100, 200 மீட்டர் ஓடுபவனை 1500 மீட்டர் ஓடச் சொன்னால் அவன் எப்படி ஓடுவான்? பெண்தானே வென்றுவிடலாம் என்று அலட்சியமாய் ஒப்புக்கொண்டான். இப்போது மானமே போய்விடும் போலல்லவா இருக்கிறது? நண்பர்களின் உற்சாகக் குரல் கலவரக் குரலாக மாறியது.

இறுதிச் சுற்று வந்துவிட்டது. பாதித்திடலைக் கடக்கும் போது கவிதா ரமேஷை முந்திக்கொண்டு ஓடிவந்தாள். ஆண்களின் முகத்தில் ஈயாடவில்லை. அனைவரும் கவிதாவையே வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர். கவிதா தன்னைக் கடந்துச் செல்லும் போதே ரமேஷ் மிச்சமிருந்த நம்பிக்கையையும் இழந்துவிட்டான். இருந்தாலும் களத்தில் இறங்கிவிட்டோமே என்று தனது சக்தி அனைத்தையும் திரட்டி ஓடினான்.

போட்டி முடிந்தது! கவிதா ரமேஷை ஜெயித்துவிட்டாள். ரமேஷ் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டே திடலை விட்டு வெளியேறினான். பெண்களின் ஆரவாரம் திடலைச் சூழ்ந்துக் கொண்டது. ஆண்கள் கூட்டம் சத்தமே இல்லாமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்துக் கொண்டிருந்தது.

“ஹலோ, வெயிட்!” என்றவாறு அவர்களை நோக்கிச் சென்றாள் கவிதா.

கூட்டம் திகைத்து நின்றது. சிலர் வாய்க்குள் என்னவோ முணுமுணுத்துக் கொண்டனர். இன்னும் சிலர் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டனர். ரமேஷ் முகம் நிலத்தை நோக்கியிருந்தது. போட்டிக்கு முன்பு சமாதானம் பேச முயன்றவன் மட்டும் கவிதா வருவதையே பார்த்துக் கொண்டிருந்தான். கவிதா அவர்களை நெருங்கினாள்.

“உங்கப் பேர் என்ன?” என்று தன்னுடன் போட்டியிட்டவனை வினவினாள்.

“ரமேஷ்…” ஒற்றை வரியில் பதில் தந்தான் அவன்.

“நீங்க சோர்ட் டிஷ்தன்ஸ் (short distance) ஓடுவீங்க தானே? ஓடும்போதே தெரிஞ்சது. என்னைக்கும் யாரையும் குறைவா மதிப்பிடாதீங்க. அவங்கவுங்களுக்கு ஒரு ஒரு திறமை இருக்கும். குறிப்பா, கேர்ஸ் தானே’னு அலட்சியப்படுத்தாதீங்க. நாங்களும் உங்க மாதிரி ஒரு நார்மல் ஹியூமன் பியிங். நெக்ஸ் டைம் இந்த மாதிரி நடந்துக்காதீங்க!” என்று சொல்லிவிட்டு விடுவிடுவென்று திரும்பிச் சென்றுவிட்டாள்.

மூன்று நாட்கள் மாவட்ட அளவிலான போட்டி தொடர்ந்து நடைப்பெற்றது. மூன்று நாட்களும் கவிதாவும் தோழிகளும் போட்டியில் பங்கெடுக்கச் சென்றனர். மூன்று நாட்களும் அதே ஆண் கும்பல் அவ்விடம் வந்து நின்றது. ஒருவரையொருவர் பார்த்து லேசான புன்னகையைப் பரிமாறிக் கொண்டனர். மூன்றாவது நாள்… போட்டியின் இறுதிநாள்... வழக்கம் போல கவிதா தன் தோழிகளுடன் உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்தாள்….

தொடரும்…

இயந்திர மனிதன்!


எலும்பும் சதையும் கொண்ட மனிதன்
பாறையும் இரும்பும் போல
உணர்ச்சியற்றுக் கிடக்கிறான்…

இதயத்தில் ஈரம் இல்லை
மனிதாபிமானம் இல்லை
அன்பிற்கு நேரம் இல்லை
இவன் வசம் எதுவும் இல்லை!

இவன்
இயந்திர மனிதன்
எதையோ தேடுகிறான்
படிப்பு என்கிறான், வேலை என்கிறான்
பணம் என்கிறான், பதவி என்கிறான்
தெரியாத பதிலை தெளிவாகச் சொல்கிறான்!

வேண்டியது என்னவென்று
இவனுக்கே தெரியவில்லை
வாழ்க்கையின் தத்துவத்தைப்
புரிந்துக்கொள்ள முடியவில்லை!

பல நேரம் சிரிக்கின்றான்
திடீரென்று அழுகின்றான்
ஆரவாரம் அடங்கியப் பின்
தனிமையை நாடுகின்றான்!

அன்பிற்கு விலை கேட்கிறான்
ஆசைகளை அடகு வைக்கிறான்
இதுதான் வேண்டுமென்று
கிடைத்ததெல்லாம் தொலைக்கிறான்!

இவனது எதிர்ப்பார்ப்புக்கு அளவே இல்லை
பிறரைப் புரிந்துக்கொள்ள முயலுவதில்லை
மற்றவர் நலனில் அக்கறை இல்லை
காதல் செத்தால் கவலை இல்லை!

இவன்,
இயந்திர மனிதன்
இதயத்தை இரும்பாக்கியவன்
இறைவனை நம்பாதவன்
இயற்கையை இரசிக்காதவன்!

பணமும் மதுபாணமும்
இவனுக்கு பழரசங்கள்
பருப்புச்சாம்பாரும் இரசமும்
பஞ்சப் பறையனின் உணவு!

இவனுக்குத் தெரிந்ததெல்லாம்
பாக்கெட்டில் விற்கின்ற கோழியும்
பாதி வெந்த மீனும்தான்!

உடலை மறைத்த உடை
பட்டிக்காடு என்பான்
மார்பகங்கள் பாதி தெரிய
இடுப்புச் சிலுவார் அவிழ்ந்துவிழ
அங்கங்கே ஒட்டுப்போட்ட ஆடை
இவனுக்கு நாகரிகம்!

அன்பிற்கு விளக்கம் கேட்கிறான்
தாய்க்கு கூலி கொடுக்கிறான்
காதலியைக் கலட்டி விடுகிறான்
காரணம் கூற மறுக்கிறான்!

இவன்,
இயந்திர மனிதன்
இரத்தத்தை இரசாயனமாக்கியவன்
இரக்கத்தைக் கொன்றவன்
இல்லறத்தை உடைத்தவன்!

இவனுக்கு நன்றியில்லை
வாழ்க்கை நெறி ஒன்னுமில்லை
காதல் என்பது அவசியமில்லை
காசு பணமின்றி வாழ்க்கையில்லை!

இவன்,
இயந்திர மனிதன்
பம்பரமாய் சுழல்பவன்
சுழட்டிய கயிரை மறந்தவன்
ஒற்றைக் காலில் நின்றே
வாழ்க்கையை ஓட்டியவன்
ஆட்டம் அடங்கப்போவதை
அறியாதவன்!

இவனுக்கு வேண்டியது
பெட்டி நிறைய பணமும்
இடுப்பைச் சுற்றிப் பெண்களும்
எங்கும் நிறைந்த ஆடம்பரமும்
இறுதியில் ஆறடி மண்ணும்!

திங்கள், 19 ஜனவரி, 2009

எங்கே செல்லும்…? (7)



கவிதா உடற்பயிற்சியை நிறுத்தினாள். அந்தக் கூட்டத்தை நோக்கி ஒரு முறை முறைத்தாள். அத்தோடு நிற்காமல் நேரே விறுவிறுவென்று அவர்களை நோக்கி பெருநடை நடந்துச் சென்றாள். அந்தக் கூட்டத்திலிருந்த ஆண்கள் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். கவிதா ஆண்கள் நிறைந்த அந்தக் கூட்டத்தின் முன்பு பெண் சிங்கம் போல் கம்பீரமாக நின்றாள்.

“இப்ப யாரு நாங்க படம் காமிக்கிறோம்’னு சொன்னது?” என்று கடுமையானக் குரலில் கேட்டால். அவள் குரலைக் கேட்ட மாத்திரத்திலேயே சிலருக்குத் தொடை நடுங்க ஆரம்பித்துவிட்டது. ‘வீணா வம்புல மாட்டிட்டோமோ?’ என்று எண்ண ஆரம்பித்தனர்.

“ஹலோ, நீங்க படம் காமிக்கிறீங்கன்னு சொன்னோமா? நாங்க வேற ஆளப்பத்தி பேசிக்கிட்டு இருக்கோம். தெரிஞ்ச மாதிரி பேசாதீங்க!” என்று மழுப்ப ஆரம்பித்தான் கூட்டத்தில் இருந்த ஒருவன்.

“ஓ, அப்படியா? சரி, அப்புறம் எதுக்கு பொம்பளைங்க ஆமை மாதிரி ஓடுவாங்க, பொம்பளைங்க கூடப் போட்டிப் போட்டா உங்களுக்குத்தான் முதல் பரிசு கிடைக்கும்’னு சொன்னீங்க? அதப் பொதுவா தானே சொன்னீங்க?” என்று வெடித்தாள் கவிதா.

“ஆமா, சொன்னோம்! இப்ப, அதுக்கு என்ன?” என்று திமிராகக் கேட்டான் ஒருவன்.

“அப்படியா? அப்படினா வாங்க, ஓடிப் பார்ப்போம். யாரு மொதல்ல வராங்கன்னு பார்ப்போம்!”

இதனை யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கத் தொடங்கினர். அப்போது தனக்கும் இங்கு நடப்பவைகளுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் காலணி கயிற்றை சரி செய்துக் கொண்டிருந்தவன் பேசத் தொடங்கினான்.

“சாரி. தெரியாமப் பேசிட்டாங்க. மன்னிச்சிருங்க,” என்றான். அவனது குரலில் ஒருவித காந்த சக்தி இருந்தது என்றே சொல்ல வேண்டும். ஒரு கணம், ஒரே கணம்தான்! கவிதா அவனைப் பார்த்தாள். அவளது கோபமெல்லாம் எங்கோ கண் காணாத இடத்துக்கு ஓடிப் போய் ஒளிந்துக்கொண்டன.

“என்ன மச்சி அதுக்கிட்ட போயி சாரி கேட்குற,” என்று துள்ளி எழுந்தான் முதலில் திமிராகப் பேசியவன். அவ்வளவுதான்! கவிதாவுக்கு வந்ததே கோவம்!

“ஏய், இங்கப் பாரு! இந்த ‘அது, இது’னு’ கூப்பிடுற வேலையெல்லாம் இங்க வச்சுக்காத! தைரியம் இருந்தா போட்டிக்கு வா. இல்லாட்டி மூடிட்டுக் கிளம்பு!” என்றாள் கவிதா.

“ஏய், என்ன ரொம்பெ பேசுறே? மரியாதையா பேசு தெரியுமா?”

“நீ மொதல்ல மரியாதையாப் பேச பழகிக்கோ. யாருக்கிட்ட எப்படிப் பேசணும்’னு எனக்குத் தெரியும்!”

நிலமை மோசமானது. கவிதா விடுவதாக இல்லை. முதலில் சமாதனம் பேசியவனே மீண்டும் தலையிட்டான்.

“சண்டை வேணாம். டேய் மச்சான், சாரி கேட்டுடு,” என்றான். அவனது நண்பனுக்கு இன்னும் கோபம் வந்துவிட்டது.

“நான் எதுக்குடா சாரி கேட்கணும்? அதுக்கு வாய் சரியில்லை!” என்று துள்ளினான்.

“மறுபடியும் ‘அது இது’னு சொன்னே, மரியாதைக் கெட்டுடும்! தைரியம் இருந்தா போட்டிக்கு வா!” என்று பாய்ந்தாள் கவிதா.

மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது. ஆண்கள் கூடி என்னென்னமோ விவாதித்தனர். அதற்குள் கவிதாவின் தோழிகள் அவ்விடம் வந்து அவளைச் சூழ்ந்துக்கொண்டனர். கவிதாவுடன் போட்டியிடுவதற்கு அவர்களில் சிறந்த ஓட்டக்காரனான ஒருவனைத் தேர்வு செய்தனர். மீண்டும் சமாதானம் பேசியவன் கவிதாவிடம் வந்தான்.

“உங்கக்கூட இவன் ஓடுவான்,” என்றான்.

“முடியாது! மொதல்ல ரொம்பெ பேசின உங்க ப்பிரண் தான் ஓடனும்! வாய் கிழிய பேச மட்டும் முடியுது, ஓட முடியாதா?” என்றாள் கவிதா. கோபத்தில் அவள் மூச்சுக்காற்று மிகவும் உஷ்ணமாக வெளிவந்தது. வந்தவன் மீண்டும் திரும்பிச் சென்றான். திமிராகப் பேசியவன் திரும்பி வந்தான்.

“என்ன, ஓடலாமா? திடலு கோசமா’தான் (வெறுமை) இருக்கு. நான் ரெடி,” என்றான்.

கவிதா அவனை ஏற இறங்கப் பார்த்தாள். “ஒ.கே.” என்றாள் சுருக்கமாக. இருவரும் திடலை நோக்கிச் சென்றனர்.

“கவிதா, ஆல் தி பெஸ்ட்!” என்று கூச்சலிட்டார்கள் அவளது தோழிகள்.

“விடாத மச்சான்! நீதன் ஜெயிப்பெ!” என்று கத்தினார்கள் அவனது நண்பர்கள். இருவரும் 1500 மீட்டர் ஓட்டத்திற்குத் தயாரானார்கள்…

தொடரும்…

ஏன் இப்படி இருக்கின்றாய்?


தமிழனே
ஏன் இப்படி இருக்கின்றாய்?
உன்னைச் சுற்றி கொடுமைகள்
கைகொட்டி சிரிக்கின்றன-நீயோ
வாயிருந்தும் ஊமையாக…

தமிழனே
ஏன் இப்படி இருக்கின்றாய்?
ஆவேசத்துடன் எழுந்து வா
கொடுமைகளைத் தட்டிக் கேள்-நீ
இன்னொரு ஆப்ரஹாம் லிங்கன்!

தமிழனே
ஏன் இப்படி இருக்கின்றாய்?
நீதி இங்கே செத்து மடிகின்றது
அநியாயம் தலைவிரித்தாடுகிறது-நீயோ
உண்மைத் தெரிந்தும் கோழையாக…

தமிழனே
ஏன் இப்படி இருக்கின்றாய்?
உயிர் போனால் போகட்டும்
அநியாயத்தை ஒழித்துவிடு-நீ
என்றென்றும் நினைவில் வாழ்வாய்!

தமிழனே
ஏன் இப்படி இருக்கின்றாய்?
கொச்சை சொற்களைக் கொண்டு
பச்சை பச்சையான வார்த்தைகள்-நீயோ
காதிருந்தும் செவிடனாக…

தமிழனே
ஏன் இப்படி இருக்கின்றாய்?
பேச்சினிலே கசப்பா தமிழுக்கே இழுக்கா?
புதியதோர் புரட்சி செய்-நீ
நாளைய பாரதி ஆவாய்!

தமிழனே
ஏன் இப்படி இருக்கின்றாய்?
சமுதாயம் இங்கே சீரழிகின்றது
நிலைமை நன்கு அறிந்திருந்தும்-நீயோ
வலுவிருந்தும் கையாலாகாதவனாக…

தமிழனே
ஏன் இப்படி இருக்கின்றாய்?
துடித்தெழு துன்பத்தைத் தொடைத்திடு
சமுதாய சீர்த்திருத்தம் செய்திடு-நீ
பின்னாள் சரித்திரம் ஆவாய்!


தமிழனே
ஏன் இப்படி இருக்கின்றாய்?
எங்கு நோக்கினும் அக்கிரமங்கள்
தட்டிக் கேட்க வலுவின்றி-நீயோ
உயிரிருந்தும் பிணமாக…

தமிழனே
ஏன் இப்படி இருக்கின்றாய்?
நியாயத்தைத் தட்டிக்கேள்
அக்கிரமத்தை அழித்துவிடு-நீ
நல்ல மனிதனாய் வாழ்வாய்!

எங்கே செல்லும்…? (6)


பள்ளிவிடுமுறையும் வந்தது. கவிதா விடுமுறையில் பினாங்கில் இருக்கும் தனது அத்தை வீட்டுற்குச் சென்றுவிட்டாள். இடமோ அவளுக்குப் புதிது. எங்கு கணினி மையம் இருக்கின்றது என்று கூட அவளுக்குத் தெரியவில்லை. மற்றவர்களிடம் கேட்கவும் மனம் வரவில்லை. எனவே தனது நேரத்தையெல்லாம் தன் வயதையொத்த அத்தை மகள் குமாரியுடனேயே கழித்தாள். இருவருக்கும் ஒரே வயதாக இருந்ததால் மிகக் குறுகிய காலத்திலேயே இருவரும் நெருங்கியத் தோழிகளாயினர்.

குமாரியும் கவிதாவும் பல கதைப்புத்தகங்களை வாங்கி மாறி மாறிப் படித்தனர். பூப்பந்து, ‘கேரம்’, பல்லாங்குழி என விளையாடி நேரத்தைப் போக்கினர். அந்த ஒரு மாத காலத்தில் கவிதா நவநீதனை மறந்தே போனாள் என்றுதான் சொல்ல வேண்டும். நீண்ட நாள் விடுமுறைக்குப் பிறகு கவிதா மீண்டும் சுங்கை சிப்புட்டிற்கு வந்தாள். பள்ளித் தொடங்கியது.
மூன்றாம் படிவத்தில் காலடி எடுத்து வைத்தாள். அப்போதுதான் அவள் வாழ்க்கைப் படகு திசைமாற ஆரம்பித்தது.

பூவினைச் சூழும் தேனீக்கள் போன்று அவள் செல்லும் இடமெல்லாம் ஆண்கள் சூழத்தொடங்கினர். பதினைந்தே வயது நிரம்பிய கவிதாவின் மனம் சற்று தடுமாறவே செய்தது. கவிதாவுடன் படிக்கும் மாணவிகள் சிலர் காதல் மயக்கத்தில் மூழ்கியிருந்த சமயம். கவிதாவுக்கோ காதல் என்றால் என்னவென்றே விளங்கவில்லை. எந்தப் பையனாவது பேச்சுக் கொடுத்தால் நக்கலாகப் பேசினாள்; கிண்டல் செய்தாள்; கேள்வி மேல் கேள்வி கேட்டு அவர்களைத் திணறடித்தாள். அவளிடம் பேச வந்த ஆண்களுக்கோ ‘ஏன்’டா இவகிட்ட பேசினோம்’ என்றாகிவிடும்.

கவிதா விளையாட்டுத்தனமாகவே இருந்து வந்தாள். காதல் மயக்கத்தில் இருக்கும் தோழிகளைக் கண்டாள் அவளுக்குச் சிரிப்பு வரும். ஒருசமயம் மாவட்ட அளவிலான ஓட்டப்பந்தயத்தில் கவிதா கலந்துக்கொண்டாள். அவ்வேளையில் பிற பள்ளிகளிலிருந்தும் மாணவர்கள் வந்திருந்தனர். பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய இப்போட்டி மூன்று நாட்கள் தொடர்ந்து நடைப்பெறும். முதல்நாள் காலையிலேயே கவிதா போட்டி நடக்கும் திடலுக்கு அருகாமையில் உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்தாள். அப்போது அவ்விடத்தின் அருகே ஆண் மாணவர்கள் அடங்கிய கூட்டம் ஒன்று வந்தமர்ந்தது.

“ஏய், நாம வேற எங்கேயாவது போய் ‘வார்ம்-அப்’ பண்ணுவோம். அந்தக் குரங்குக் கூட்டம் கண்டிப்பா நம்பல கச்சோர் (தொந்தரவு) பண்ணுவானுங்க,” என்றாள் கோகிலா.

“நாம எதுக்குப் போகணும்? நாமதானே முதல்’ல வந்தோம்? ஏதாவது வாலாட்டிப் பார்க்கட்டும், அப்புறம் தெரியும்!” என்று கடுப்போடு கூறினாள் கவிதா. அவளுக்கு எப்போதும் எதற்கும் பயந்தோ பணிந்தோ போவது பிடிக்காது. என்ன நடந்தாலும் பார்த்துவிடுவோம் என்ற முடிவுடன் இருந்தாள். கவிதா அருகில் இருக்கும் போது அதிகம் பயப்படத்தேவையில்லை என்று எண்ணிய கோகிலா அத்தோடு பேச்சை நிறுத்தினாள்.

“டேய், அங்கப்பாருங்கடா! P.T. உஷா ‘வார்ம்-அப்’ பண்றாங்க,” என்றாள் கூட்டத்தில் ஒருவன்.

இன்னொருவன் திரும்பிப் பார்த்தான். பின்பு சட்டென முகத்தைத் திருப்பிக் கொண்டு தனது காலணிக்குக் கயிறு கட்டுவதில் முனைந்தான். அவனது செய்கையைக் கவிதா கவனிக்கத் தவறவில்லை.

“இன்னிக்கு முதல் பரிசு அவுங்களுக்குத்தான்’டா!” என்றான் இன்னொருவன்.

“ஆமா, பொம்பள பிள்ளைங்க ஓடுறத தான் நாம பார்க்கிறோமே. ஆமை மாதிரி ஓடுங்க. இதுங்க கூட போட்டிப் போட்டா நமக்குக் கூட முதல் பரிசுதான் கிடைக்கும். ஆனா, படம் காமிக்கிறதுல மட்டும் அடிச்சிக்க முடியாது மச்சி. அங்கப் பாரேன், என்னா மாதிரி பில்ம் காமிக்கிதுங்க,” என்றான் இன்னொருவன்.

கவிதா உடற்பயிற்சியை நிறுத்தினாள். அந்தக் கூட்டத்தை நோக்கி ஒரு முறை முறைத்தாள். அத்தோடு நிற்காமல் நேரே விறுவிறுவென்று அவர்களை நோக்கி பெருநடை நடந்துச் சென்றாள்…

தொடரும்…

வியாழன், 15 ஜனவரி, 2009

பேய்கள் கூட்டம்!


உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசும்
நரிகள் கூட்டமடா-இது
பேய்கள் கூட்டமடா!

போலியான பாசமும்
அப்பாவி வேசமும் போட்டு
ஏய்க்கும் கும்பலடா-இது
பேய்கள் கூட்டமடா!

கொட்டும் மழையினிலே
ஆடு நனைகிறதென்று அழும்
ஓநாய்கள் கூட்டமடா-இது
பேய்கள் கூட்டமடா!

அப்பாவி வேடம் பூண்டு
பாவங்கள் பல செய்யும்
கொடும்பாவி கூட்டமடா-இது
பேய்கள் கூட்டமடா!

முன்னேறப் பாதைக்காட்டி
தடைகளையும் தோற்றுவிக்கும்
மோசடி கும்பலடா-இது
பேய்கள் கூட்டமடா!

வாய் இனிக்க பேசிவிட்டு
தலையினிலே மண் போடும்
நயவஞ்சர் கூட்டமடா-இது
பேய்கள் கூட்டமடா!

எங்கே செல்லும்…? (5)


கவிதாவின் பாட்டி கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. இருவரும் ‘கப்சிப்’பென்று அமைதியானார்கள். கவிதா சென்று கதவைத் திறந்தாள்.

“பேசிக்கிட்டு இருக்கீங்களா? தண்ணி கலக்கிறேன். வந்து குடுச்சிட்டுப் பேசுங்க,” என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டார். பாட்டி கலக்கிக் கொடுத்த தண்ணியைக் குடித்துவிட்டு, இன்னும் சிறிது நேரம் கதையடித்து விட்டு தேவி வீடு சென்றுவிட்டாள்.

கவிதாவிற்கு நாட்கள் மிகவும் மெதுவாக ஊர்ந்துச் செல்வது போல் தோன்றியது. அடுத்த வாரத்தை எதிர்ப்பார்த்து ஆவலாகக் காத்துக்கொண்டிருந்தாள். பள்ளி முடிந்து வீட்டுக்கு வருவதும் தேவியுடன் கதையளப்பதுமாக அந்த ஒரு வாரத்தை எப்படியோ முடித்து விட்டாள். அவள் எதிர்ப்பார்த்திருந்த நாளும் வந்தது. கவிதா உற்சாகமானாள். பள்ளி முடிந்ததும் தேவியிடமிருந்து விடைப்பெற்றுக் கொண்டு நேரே கணினி மையத்திற்குச் சென்றாள். உரையாடல் பெட்டியைத் திறந்த போது அவளுக்கு முன்னமே நவநீதன் அங்கிருப்பதைக் கண்டாள்.

“ஹாய் கவிதா!”

“ஹாய்!”

“சாப்பிட்டீங்களா?”

“இன்னும் இல்லை. இனிமேலதான் சாப்பிடணும். நீங்க?”

“நான் சாப்பிட்டேன். சரி, இன்னிக்கு என்ன பேசலாம்?”

“உங்களைப் பத்தி சொல்லுங்களேன்.”

“என்னைப் பத்தியா? என்னோட முழுப்பெயர் நவநீதன். வயசு 17. பெர்லிஸ்’ல இருக்கேன். இன்னும் என்ன தெரிஞ்சுக்கணும்?”

“உங்க பேமிலி பத்திச் சொல்லுங்களேன்.”

“எனக்கு ஒரு தம்பி, பேரு நவனேஸ்வரன். அம்மா பேரு நவமணி. அப்பா பேரு நவக்குமார்.”

“அப்படியா? எல்லார் பேரும் ‘நவா’னு ஆரம்பிக்குது.”

“ஆமாம். உங்கள பத்தி சொல்லுங்களேன்.”

“என்னோடப் பெயர் கவிதா. அப்பா பேரு சுப்பிரமணியம். அம்மா பேரு கலாராணி. எனக்கு ரெண்டு அண்ணன்கள் இருக்காங்க.”

“அப்படியா? வீட்ல அம்மா அப்பா எல்லாம் செளக்கியமா?”

“தெரியல…”

“என்ன?”

“நான் பாட்டி தாத்தா வீட்ல இருக்கேன்.”

“அப்படியா? ஏன் அம்மா அப்பா கூட இல்ல?”

“அம்மா அப்பா பிரிஞ்சுட்டாங்க. சின்ன வயசிலேர்ந்து நானும் அண்ணன்களும் பாட்டி தாத்தா வீட்லதான் இருக்கோம்.”

“ஐ’ம் சாரி. எதனால பிரிஞ்சாங்க?”

“எனக்குத் தெரியாது. எனக்கு ஐஞ்சு வயசா இருக்கும் போதே பிரிஞ்சுட்டாங்க.”

“ஐஞ்சு வயசுலேர்ந்துப் பாட்டி தாத்தா வீட்லதான் இருக்கீங்களா? அண்ண ரெண்டு பேரும் என்னப் பண்றாங்க?”

“ஆமாம். ரெண்டு அண்ணனும் படிச்சு முடிச்சிட்டாங்க. சுங்கை சிப்புட்’ல வேலை செய்யிறாங்க.”

“அப்படியா?”

“ஆமாம். வேறு ஏதாவது பேசலாமா?”

“மன்னிச்சிருங்க. உங்க மனசைக் கஷ்டப்படுத்திட்டேனா?”

“நோ, நோ! அப்படியெல்லாம் ஒன்னுமில்ல. நாம வேற எதைப் பத்தியாவது பேசலாமே.”

“சரி, உங்களுக்கு என்ன பிடிக்கும்?’

“என்ன பிடிக்கும்’னா?”

“உங்க ஹாபி என்ன?”

“படிப்பது, எழுதுவது, ஊர் சுற்றுவது, கதையடிப்பது, மூட் இருந்துச்சுன்னா டான்ஸ் ஆடுவது.”

“நல்லது.”

“உங்க ஹாபி என்ன?”

“ஜங்கல் டிராக்கிங் பிடிக்கும். அடிக்கடி பேட்மிந்தன் விளையாடுவேன். பூட்பால் பைத்தியம்.”

“நானும் சம் தைம்ஸ் பேட்மிந்தன் விளையாடுவேன்…” இவ்வாறாக இவர்களது உரையாடல் நீண்டுக்கொண்டே சென்றது. நேரமாகியது, கவிதா வீடு திரும்பினாள்.

இப்பொழுதெல்லாம் வாரம் இரு முறை கவிதா கணினி மையத்திற்குச் செல்கிறாள். நவநீதனுடன் சாட்டிங் செய்யும் நாட்களில் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகிறாள். இப்புதிய தோழமை அவளுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருக்கிறது. இப்படியே நாட்கள் வாரங்களாயின; வாரங்கள் மாதங்களாயின. பள்ளி விடுமுறையும் வந்தது…

தொடரும்…

திங்கள், 12 ஜனவரி, 2009

இன்றைய உலகம்…


காதலித்துப்பார்
கவிதை வரும் என்றார்கள்
நானும் காதலித்தேன்
வந்தது கவிதை மட்டுமல்ல
கண்ணீரும் சேர்ந்துதான்!

பிறரை நேசித்துப்பார்
உன்னையும் நேசிப்பார்கள் என்றார்கள்
உயிரிலும் மேலாக நேசித்தேன்
என்னை நேசிக்க மட்டுமல்ல
வெறுக்கவும் செய்தார்கள்!

அன்பு செலுத்து
இன்பம் கிடைக்கும் என்றார்கள்
அன்பே உருவானேன்
இன்பம் மட்டுமல்ல
துன்பமும் சேர்ந்தே கிடைத்தது!

பாசத்தைக் கொட்டு
பந்தம் வரும் என்றார்கள்
எல்லை மீறி பாசமாயிருந்தேன்
சொந்தமும் உடன் வந்தது
பாசத்திற்காக அல்ல பணத்திற்காக!

பிறரை மன்னித்துப் பழகு
பாவங்கள் நீங்கும் என்றார்கள்
ஏசுவாய் மாறினேன்
என்னை ஏமாற்றி மட்டுமல்ல
ஏய்த்துவிட்டும் போனார்கள்!

பிறரை மதித்து வாழு
உன்னையும் மதிப்பார்கள் என்றார்கள்
அனைவரையும் மதித்தேன்
என்னை மதிக்க மட்டுமல்ல
மிதிக்கவும் செய்தார்கள்!

எங்கே செல்லும்…? (4)


கவிதா சட்டென எழுத்து கட்டிலில் அமர்ந்தாள். ‘ஐ! தேவி வந்துட்டாளா? அவகிட்ட இப்ப எதுவும் சொல்லக்கூடாது. சாட்டிங் ப்பிரண் பத்தி கேட்டால் ஏதாவது சொல்லி சமாளிக்க வேண்டியதுதான்!’ என்று நினைத்துக்கொண்டாள்.

“பாட்டி, கவிதா வீட்டிலேயா இருக்கு?” என்று வீட்டுப் பின்கட்டில் அமர்ந்திருந்த மூக்காயிடம் கேட்டாள் தேவி.

“ஆமாம்’மா. தூங்கிக்கிட்டு இருக்கு. போய் எழுப்பிப் பாரு,” என்று சொல்லி கமலத்திடம் பாதியில் கூறி விட்ட கதையைத் தொடர்ந்தாள் மூக்காயி.

அடி மேல் அடி வைத்து வந்த தேவி கவிதாவின் அறைக்கதவை லேசாகத் தட்டினாள்.

“கவிதா…, கவிதா…” என்று மெல்லியதாய் அழைத்தாள்.

“கதவுத் தொறந்துதான் இருக்கு. உள்ளுக்கு வா,” என்றாள் கவிதா.

“தூங்கிறயா?” என்றவாறு அறைக்குள் நுழைந்த தேவி கவிதாவின் கட்டிலோரத்தில் அமர்ந்தாள்.

“இல்ல… முழிச்சிதான் இருந்தேன்,” என்றவாறு கட்டிலை விட்டு எழுந்த கவிதா நேரே கதவருகே சென்று கதவைத் தாழிட்டாள்.

“எப்ப வீட்டுக்கு வந்த? உங்கப் பாட்டி வீட்டுக்கு வந்து நீ இன்னும் வரலை’னு அம்மாகிட்ட சொல்லிக்கிட்டிருந்தாங்க. உனக்கு ஸ்பெசல் கிளாஸ் இருக்குன்னு சொல்லிட்டேன். நீ என்ன சொன்னே?”

“ஹாஹா…என்னைக் கேட்டாதானே? எனக்குப் பஸ் கிடைக்கல. வீடு வந்து சேர லேட்டாயிடுச்சி. நல்ல வேளை! பாட்டி உங்க வீட்டுக்கு வந்துட்டாங்க. அவங்க வரும் போது நான் அப்படியே தூங்கற மாதிரி நடிச்சுட்டேன். இன்னும் ஒன்னும் கேட்டுக்கல. கேட்டாலும் நான் மொதல்லேயே வந்துட்டேன்னு சொல்லிருவேன்.”

“எப்படி’லா உன்னால மட்டும் இப்படினா முடியுது?”

“அதுக்கெல்லாம் தனித் திறமை வேணும் டியர்.”

“அப்புறம், என்ன கதை?”

“என்ன கதை?”

“சாட்டிங் பண்ணப் போனியே. என்ன ஆச்சு? யாருக்கூட சாட் பண்ணுனே? ஒன்னுமே சொல்லமாட்ற? எனக்குத் தெரியாம ஏதாவதுப் பண்றியா?”

“ச்சே... அப்படியெல்லாம் ஒன்னுமில்ல. உனக்குத் தெரியாம ஏதாவது செய்வேனா? நவநீதன்’னு ஒரு ப்பிரண். இன்னைக்கு சாட் பண்றதா சொல்லியிருந்தேன். அதான் போயிட்டு வந்தேன். கொஞ்ச நேரம் தான் சாட் பண்ணினோம்.”

“கொஞ்ச நேரம்?” நக்கலாய் கேட்டாள் தேவி.

“உண்மையா கொஞ்ச நேரம்தான்’லா. அவங்க வந்ததே லேட்டு. எனக்கும் மணியாயிருச்சு. கொஞ்ச நேரம் பேசிட்டு வந்துட்டேன்.”

“வருத்தப் படற மாதிரி தெரியுது?”

“அப்படி ஒன்னுமில்ல.”

“சரி, நம்பறேன். ஒன்னுமில்லன்னு நம்பறேன். இருந்தாலும், சாட் பண்றே, கொஞ்சம் பாத்துப் பண்ணு. சாட் பண்றவனுங்க ரொம்ப ஏமாத்துவானுங்கன்னுக் கேள்விப் பட்டிருக்கேன். பார்த்துக்கோ…”

“ஒ.கே. தாங்ஸ் ப்போர் யுவர் அட்வைஸ். பேச நல்லப் பையான் மாதிரிதான் தெரியுது. இன்னும் கொஞ்ச நாள் சாட் பண்ணிப் பார்ப்போம்.”

“பாரு, பாரு… ஏய், ஒங்கிட்ட சொல்ல மறந்துட்டேன். நான் மேட்ஸ் டியூசன் போலாம்’னு இருக்கேன். நீயும் வர்றியா?” என்று தேவி கேட்கவும் மீண்டும் கவிதாவின் பாட்டி கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. இருவரும் ‘கப்சிப்’பென்று அமைதியானார்கள்.


தொடரும்…

செவ்வாய், 6 ஜனவரி, 2009

எங்கே செல்லும்…? (3)


திடீரென சுயநினைவுப் பெற்றவள் போல் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். அவள் கண்கள் மிரண்டன!

‘ஐயோ, மணி நாலே முக்காலாச்சே! பஸ் இன்னும் வரலையே! வீட்ல கேட்டா என்ன சொல்றது? கிளாஸ் மூனு மணிக்கு முடிஞ்சிரும்’னு சொல்லிட்டேனே. இப்ப எப்படி சமாளிக்கறது?’

‘கிழவிக்கு நல்ல மூட் இருந்தா ஒன்னும் கேட்டுக்காது. நேரம் கெட்ட நேரத்துல அது கண்ணுல மாட்டினோம்’னா கேள்வி கேட்டுக் கொன்னுடுமே? அந்த நேரத்துல கிழவன் வந்தான்’னா அவ்ளோ தான்! செத்தோம்! நல்ல நாளுலேயே வீட்ல எனக்கு ரொம்பெ நல்ல பேரு! இந்த இலட்சணத்துல லேட்டா வேற போனோம்’னா அவ்ளோ தான்!’

கவிதா பலவாறாகக் குழம்பினாள். அவள் கிழவி கிழவன் என்றுச் சொன்னது அவளது பாட்டி தாத்தாவைத்தான். இவ்வாறாக அவள் குழம்பிக்கொண்டிருக்கும் போதே பேருந்து வந்துவிட்டது. ‘அப்பாடா…’ என்று பெருமூச்சுடன் பேருந்தில் ஏறி வீடு நோக்கிப் பயணமானாள் கவிதா.

நல்ல வேளையாக அவள் வீடு வந்த சமயத்தில் பாட்டி வீட்டில் இல்லை. பக்கத்து வீட்டிற்குக் கதையளக்கப் போயிருப்பார் போல. வீட்டு முன் கட்டிலுள்ள ஒட்டுக்கடையில் இருந்த தாத்தா கவிதா வந்ததை அறவே கவனிக்கவில்லை. நல்ல சமயம் என்றெண்ணிய கவிதா பூனை போல அடி மேல் அடி வைத்து வீட்டுப் பின்கட்டில் உள்ள தனது அறைக்குள் வந்தாள். கதவை ஓசைப்படாமல் தாழிட்டாள். அந்த நேரம் பார்த்து, பின்கட்டு வாசல் வழியாக பாட்டியின் பேச்சுக்குரல் கேட்டது.

‘ஐய்யோ, கிழவி வந்துருச்சா? நல்ல வேளை, ரூம்புக்கு வந்துட்டோம். இதுக்கு மேல பிரச்சனை இல்ல. சமாளிச்சுடலாம்’ என்று எண்ணிக்கொண்டே பள்ளிச்சீருடைகளைக் களைந்து உடைமாற்றிக் கொண்டாள். வெளியிருந்து பேச்சுக்குரல் கேட்டது. உற்றுக் கேட்டாள்.
ஆம்! பாட்டியின் பேச்சுக் குரல் தான் அது. யாருடன் பேசுகிறார்? காதைக் கதவோரமாக வைத்து இன்னும் உன்னிப்பாக என்னதான் பேசுகிறார்கள் எனக் கேட்க ஆரம்பித்தாள்.

“தேவி ஸ்கூலு முடிஞ்சி வந்திருச்சா? கவிதா இன்னும் வரலையே!? மூனு மணிக்குத்தான் கிளாசு முடியும்’னு சொன்னிச்சு. மணி அஞ்சு முப்பதாச்சு. ஆளக் காணோம்,” என்று யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார் கவிதாவின் பாட்டி மூக்காயி. கவிதாவின் நெஞ்சம் ‘படக் படக்’ என்று வேகமாக அடித்துக் கொண்டிருந்தது. காதை இன்னும் கூர்மையாகத் தீட்டினாள்.

“ஆமாவா? தேவி ரெண்டரை மணிக்கே வந்திருச்சே? கவிதாவுக்குக் கிளாஸ் இருக்குன்னு சொன்னிச்சு. இன்னும் வீட்டுக்கு வரலையா? எங்கப் போயிருக்கும்?” இம்முறைப் பேசியது கவிதாவின் வீட்டு வரிசையில் இருக்கும் தேவியின் அம்மா கமலம் தான்.

“அதான் தெரியல. இருங்க… அந்தப் பிள்ள வந்திருச்சான்னு பார்த்துட்டு வரேன்,” என்றவாறு கவிதாவின் அறையை நோக்கி நடந்து வந்தார் மூக்காயி. அறைக்கதவை வேகமாகத் திறக்க முற்பட்டார், முடியவில்லை. ‘டொக், டொக்’ என்று இரண்டு முறை வேகமாகத் தட்டி கவிதாவின் பெயரை அழைத்துப் பார்த்தார்.

“ஆ…வரேன்…” என்று பாதித்தூக்கத்தில் இருப்பவள் போல கதவைத் திறந்தாள் கவிதா. படுத்திருந்ததிற்கு அடையாளமாக கட்டிலில் நன்றாக புரண்டு எழுந்தாள். கட்டில் அலங்கோலமானது. கூந்தலையும் கொஞ்சம் கலைத்துவிட்டாள். அரைமயக்கத்தில் இருப்பது போல கண்களையும் முகத்தையும் வைத்துக் கொண்டாள்.

படீரென்று கதவைத் திறந்து பாட்டியை ஒரு பார்வைப் பார்த்தாள். ஒரு வினாடிதான்! ஒரே ஒரு வினாடிதான்! திறந்த கதவை அப்படியே விட்டுவிட்டு திரும்ப வந்து கட்டிலில் சாய்ந்தாள். அவளது தோரணை மிகுந்த களைப்பில் உறங்குவது போல் இருந்தது. பாட்டி இரண்டடி எடுத்து வைத்து அறைக்குள் வந்தார். கவிதாவைப் பார்த்தார்.

“வந்துட்டியா…” என்றவாறு தனக்குள்ளேயே முனகிக்கொண்டு மீண்டும் அறையை விட்டு வெளியேறி கதவைச் சாத்திவிட்டுச் சென்றார். அவருக்குத் தெரியும். தூங்கும் போது எழுப்பினால் கவிதாவிற்குப் பிடிக்காது என்று. கவிதாவிற்குத்தானே தெரியும் தான் தூங்குவது போல் நடித்தால்தான் பாட்டியின் கேள்விக் கணைகளிலிருந்து தப்ப முடியும் என்று!

பாட்டிச் சென்று விட்டார் என்று உறுதிப்படுத்திய பிறகு மீண்டும் அடி மேல் அடி வைத்துக் கதவருகே சென்றாள். காதுகளை கதவருகில் பொருத்திக்கொண்டாள்.

“கவிதா தூங்குது… மொதல்லயே வந்துருச்சுப் போல. நான் கவனிக்கவே இல்ல. பாவம் பிள்ள, அலுப்பு போல. நல்லா தூங்குது!” என்று கமலத்திடம் சொல்லிக்கொண்டிருந்தார் மூக்காயி.

“தூங்குதா…அதானே… தேவி கூட வீட்ல தூங்கிக்கிட்டுதான் இருக்கு. பாவம் பிள்ளைங்க. ஸ்கூலுக்குப் போயிட்டு வந்து அலுப்புல தூங்குதுங்க. நீங்க என்னான்னா பிள்ள இன்னும் வரலைன்னு காத்துக்கிட்டு உட்கார்ந்திருக்கீங்க!”

“என்ன செய்யிறது கமலம்… வயசாயிடுச்சில்ல. அதுகளும் ஸ்கூல் முடிஞ்சு வந்திட்டேன்னு வந்து சொல்ல மாட்டுதுங்க. எப்ப வருதுங்க, எப்பப் போவுதுங்கன்னு ஒன்னுமே தெரிய மாட்டுது!” என்று புலம்ப ஆரம்பித்தார் மூக்காயி.

சற்று நேரத்தில் கவிதாவைப் பற்றிய சிந்தனை மறந்து இருவரும் வேறு கதைகள் பேச ஆரம்பித்தனர். கதவருக்கில் ஒட்டுக்கேட்டுக் கொண்டிருந்த கவிதாவின் முகத்தில் வெற்றிப் புன்னகை மலர்ந்தது. நிம்மதியுடன் பஞ்சணையில் சாய்ந்தாள். அப்போது, மூக்காயி, கமலத்தின் குரல்களைத் தவிர்த்து வேறொரு குரலும் ஒலித்தது. கவிதா சட்டென எழுத்து கட்டிலில் அமர்ந்தாள்…

தொடரும்…

திங்கள், 5 ஜனவரி, 2009

எங்கே செல்லும்…? (2)


மணி மூன்றாகிவிட்டது. கவிதா காத்திருப்பதில் அர்த்தமில்லை என்பதை உணர்ந்தாள். அவள் எழுந்திருக்க முயன்றபோது, “ஹாய் கவி! சாரி போர் தெ லேட். சொன்ன நேரத்துக்கு வர முடியல. உங்கள ரொம்பெ நேரம் காக்க வச்சுட்டேன். மன்னிச்சிருங்க,” என்ற வரிகளுடன் உரையாடல் பெட்டி எட்டிப்பார்த்தது.

கவிதாவின் மனசுக்குள் ஓராயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறப்பது போல் இருந்தது. ஒரு முறைக்கு மூன்று முறை அந்த வரிகளையும் அதை அனுப்பியவர் பெயரையும் மாறி மாறிப் படித்தாள். உடனடியாக உரையாடல் பெட்டியை பெரிதாக்கினாள். அவளது விரல்கள் மின்னலை விட வேகமாக அச்சுப்பலகையில் விளையாடத் தொடங்கின. கவிதாவின் கண்களை அப்போது ஏதாவது கவிஞர் பார்த்திருந்தால் ஒரு கோடி கவிதைகள் எழுதித் தள்ளியிருப்பார். அப்படி ஒரு ஒளியும் அழகும் பெற்று விளங்கின அவளது கரிய விழிகள்.

“ஹாய்! உங்களுக்காகத்தான் காத்திருந்தேன். எப்படி இருக்கிங்க?” என்றாள் கவிதா.

“நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? லன்ஞ் முடிச்சாச்சா?”

கவிதாவின் வயிற்றுக்குள் எலிக்குஞ்சுகள் ஓடிவிளையாடு போல் இருந்தது. அப்படி ஒரு பசி. காலையில் சிற்றுண்டி உண்டவள்தான். மணி மூன்றாகிவிட்டது. இன்னும் மதிய உணவு உட்கொள்ளவில்லை.

“நான் சாப்பிட்டுட்டேன். நீங்க சாப்பிட்டிங்களா?” என்றாள் பசியை மறைத்துக்கொண்டு.

“நானும் சாப்பிட்டுட்டேன். இன்னிக்கு உங்க பேமிலி பத்தி சொல்றேன்னு சொன்னிங்களே?”

“கண்டிப்பா சொல்றேன். அதுக்கு முன்னாடி, நீங்க இன்னும் உங்க நிஜப் பேரை சொல்லலையே?”

“J நவநீதன்”

“ஓ, ஸ்வீட் நேம்.”

“தேங்ஸ். உங்களுக்கு அழகான பெயர். கவிதையைப் போலவே,” என்றான் நவநீதன்.

“நன்றி. உங்கள எப்படிக் கூப்பிடறது? நவா’ன்னு சொல்லலாமா இல்ல நீதன்’னு சொல்லலாமா?”

“உங்க இஷ்டம். வீட்ல எல்லாரும் நீதன்’னு கூப்பிடுவாங்க. ப்பிரண்ஸ் எல்லாரும் நவா’ன்னுதான் கூப்பிடுவாங்க.”

“அப்படியா. அப்ப நானும் உங்கள நவா’ன்னு கூப்பிடலாமா?”

“கூப்பிடலாம். ஆனா, அதுல ஒரு சின்ன சிக்கல்… என் தம்பி பேரு நவனேஸ்வரன். அவனையும் நவா’னுதான் சுருக்கமா கூப்பிடுவாங்க. நீங்க என்ன நீதன்’னே கூப்பிடலாம்.”

“தேங்ஸ் நீதன் J. உங்க பேமிலிய பத்தி சொல்லுங்களேன்.”

“நீங்க இன்னும் உங்க பேமிலியப் பத்தி சொல்லவே இல்லையே? இன்னைக்குச் சொல்றதா அன்னிக்கு சாட் பண்ணும் போது சொன்னீங்களே?”

“ஆமாம்… நீங்க தப்பா நினைச்சுக்கலனா நான் இன்னொரு நாள் சொல்லலாமா? நாம இன்னும் கொஞ்ச நாள் நல்லா சாட் பண்ணிப் ப்பிரண்ஸ்’சா ஆயிறலாமே?”

“ஹ்ம்ம்…. சரி. உங்க இஷ்டம். நான் உங்கள வற்புறுத்தல. இன்னிக்கு என்ன பேசலாம்?”

“சாரி. ஏற்கனவே லேட்டாயிடுச்சு. வீட்ல தேடுவாங்க. மூனு மணிக்குக் கிளாஸ் முடியும்’னு சொல்லியிருந்தேன். இப்ப போயாகணும். நாம அடுத்த வாரம் சாட் பண்ணலாமா?”

“அடுத்த வாரமா? கிழமை? நேரம்?”

“வழக்கம் போல புதன்கிழமை. ஆனா, கரேட்டா ரெண்டு மணிக்கு வந்திரணும்! இன்னிக்கு மாதிரி லேட்டாகிடாதீங்க. சரியா?”

“கண்டிப்பா வந்திருவேன். அப்படி ஏதாவது தடங்கல் வந்துச்சுன்னா உங்களுக்கு இ-மெயில் அனுப்புறேன்.”

“தேங்ஸ். அடுத்த வாரம் சாட் பண்ணுவோம். உங்களோட பேசுனதுல சந்தோஷம்.”

“எனக்கும் தான். தேக் கேர்.”

“தேக் கேர். பாய்…”

“பாய் கவிதா…”

உரையாடல் முடிந்தது. மணி மூன்று முப்பதாகிவிட்டது. கவிதாவிற்குக் காற்றில் மிதப்பது போல இருந்தது. தனக்குத் தானே சிரித்துக்கொண்டு அந்தக் கணினி மையத்தை விட்டு வெளியேறினாள். பேருந்து நிற்கும் இடத்தை நோக்கிச் சென்றாள். இருப்பினும் அவள் மனதில் கொஞ்சம் வருத்தம். ‘ச்சே, அவர் சீக்கிரமே வந்திருந்தா ரொம்பெ நேரம் சாட் பண்ணியிருக்கலாம். பரவால, எப்படியோ வந்து சேர்ந்துட்டார். அதுவரைக்கும் சந்தோஷம்!’.

கவிதாவின் மனம் ஒரு நிலையாக இல்லை. எதை எதையோ நினைத்தாள்… தனியாக சிரித்தாள். நேரம் ஆகிக்கொண்டே இருந்தது, பேருந்து வந்தப்பாடில்லை. எவ்வளவு நேரம் அவள் அங்கு அமர்ந்திருந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. கவிதா கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். திடீரென சுயநினைவுப் பெற்றவள் போல் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். அவள் கண்கள் மிரண்டன…

தொடரும்…