வியாழன், 25 நவம்பர், 2010

காதலன்!


காதலிக்க ஆள் தேடி
காத்துக்கொண்டிருக்கிறேன்
காதலன் கிடைப்பானா
காணாமலே போவானா?

கண்ணாமூச்சி விளையாட்டு
இன்னும் உனக்கு ஏன்?
கண்ணாரக் கண்டிட
வந்திட தயக்கம் ஏன்?

கொட்டும் மழையினிலே
இருவரும் நனைய வேண்டும்
உந்தன் அணைப்பினிலே
இவள் குளிர்காய வேண்டும்!

பார்க்கும் போதெல்லாம்
புன்னகைச் செய்ய வேண்டும்
பார்க்காத போதெல்லாம்
உன்னையே நினைக்க வேண்டும்!

ஆறுதல் நீ சொல்ல
உன் தோளில் நான் சாய்வேன்
ஒவ்வொரு இரவினிலும்
உன் மடியில் நான் துயில்வேன்!

தவழ்ந்து வரும் காற்றினில்
உன் சுவாசம் கலந்திருக்குமா?
சபை கூடும் இடத்தினில்
உன் பாதச்சுவடு பதிந்திருக்குமா?

உருவத்தைக் காட்டாமல்
உருமாறி வருகின்றாய்
ஏனடா என்னை- நீ
இம்சை செய்கின்றாய்?

என் உயிருக்கு உரியவனே
விரைந்தோடி வந்துவிடு
இதயத்தில் வசிப்பவனே
நல்வாழ்க்கைத் தந்துவிடு!

புதன், 24 நவம்பர், 2010

உன்னால்!


பூவாகத்தான் இருந்தேன்
உனது வெப்பக் கதிர்களால்
வாடினேன் வதங்கினேன்
இறுதியில் உதிர்ந்தேன்!

கனியாகத்தான் இருந்தேன்
நீ சுவைத்ததால்
தித்திப்பிழந்து அழுகிவிட்டேன்!

பனியாகத்தான் இருந்தேன்
உன் நிழல் பட்டதும்
நீராகி வற்றிவிட்டேன்!

அமுதாகத்தான் இருந்தேன்
உன் பல் பட்டதும்
கொடிய நஞ்சாகிவிட்டேன்!

பெண்ணாகத்தான் இருந்தேன்
மலருக்கு மலர் தாவும்
வண்டு நீ என்பதை அறிந்தவுடன்
மனம் நொந்து பைத்தியமாகிவிட்டேன்!


வியாழன், 18 நவம்பர், 2010

கொச்சைப் படுத்தாதே!

முன் கூட்டியே
சொல்லிக் கொண்டு
வருவதல்ல காதல்
எவருமே அறியாமல்
யாருக்குமே தெரியாமல்
மிக மிக இரகசியமாக
உருவாகும் காதலை
பத்துப் பேரிடம் சொல்லி
கொச்சைப் படுத்தாதே!

தோழா!


தோழா
ஆழ்கடலில் எடுத்த
முத்தைப் போன்றது
நமது நட்பு
பூவிலிருந்து எடுத்த
தேனைப் போன்றது
நமது நட்பு!

உனது வருகையால்
நான் என்னை அறிந்தேன்
உனது உறவால்
நட்பின் புனிதத்தை அறிந்தேன்!

சோகத்தில் வாடிய போது
ஆறுதல் கூறினாய்
மகிழ்ச்சியில் திளைத்தபோது
நீயும் பகிர்ந்துக் கொண்டாய்!

தோல்வியில் துவண்டபோது
உற்சாகம் கொடுத்தாய்
வெற்றி கண்டபோது
நீயும் கொண்டாடினாய்!

கல் தடுக்கி விழுந்த போது
கை கொடுத்து உதவினாய்
வாழ்க்கைப் பாதை தவறியபோது
சரியான வழியைக் காட்டினாய்!

தாயாக இருந்து
பாசம் காட்டினாய்
தந்தையாக இருந்து
அறிவுரைக் கூறினாய்!

ஆசானாக இருந்து
சந்தேகம் தீர்த்தாய்
தோழியாக இருந்து
உதவிகள் புரிந்தாய்!

தோழா,
இப்பிறப்பில் மட்டுமல்ல
இனி எப்பிறவியிலும்
நீயே என் தோழனாக
வர வேண்டும்!

புதன், 17 நவம்பர், 2010

மனம்…


மனம்
ஒரு கண்ணாடி
உடைந்தால்…
ஒட்ட இயலாது!

வருவாயா?

நான் எங்குச் சென்றாலும்
முன்னும் வருகிறாய்
பின்னும் வருகிறாய்
கனவிலும் வருகிறாய்
நனவிலும் வருகிறாய்
எனது வாழ்க்கைக்குத்
துணையாக நீ…
வருவாயா?

அடுக்குமா?


ஜோதியாக நானிருந்தால்
திரியாக நீ இருப்பாய்
என்று நினைத்திருந்தேன்!

நீயோ…

புயலாக மாறி
ஜோதியையே அணைத்துவிட்டாயே
இது உனக்கே அடுக்குமா?

நன்றி!

நன்றி
நண்பனே நன்றி
நான் உன்னிடம் கொண்ட
நம்பிக்கைக்கும் அன்பிற்கும்
நீ கொடுத்த ‘ஏமாற்றம்’ என்ற பரிசிற்கு
மிக்க நன்றி!