செவ்வாய், 28 ஜூலை, 2015

காலமான கலாமும், மரணித்த மனிதமும்!




சேற்றிலே பிறந்த செந்தாமரை

சொர்க்கம் சென்று சேர்ந்தது

அணுவை ஆராய்ந்த ஆன்மா

அண்டத்தைப் பிரிந்துச் சென்றது

கனவு காணச் சொன்னவன்

கண் மூடி அயர்ந்துவிட்டான்!



ஒருபக்கம் உலகமே துயரக்கடலில்

மறுபக்கம் மரணித்த மானிடம்!

ஒருவன் இருந்த போது தூற்றினர்

அவன் இறந்த போதும் பழித்தனர்

அமர்ந்த இடத்தில் இருந்துக்கொண்டே

குறைச் சொல்லி அலைந்தனர்…



தமிழனாய் பிறப்பெய்து -அந்தத்

தமிழுக்குப் புகழ் சேர்த்து

வெளிநாட்டு அவைகளிலும்

திருக்குறளை உரக்கச் சொன்னான்

விஞ்ஞான உலகத்தில் -புதிதாகத்

தடம் பதித்தான்!



சாகும்வரை அவன் செய்த

சாதனைகள் கணக்கில் இலா

அத்தனையும் மறந்துவிட்டு

அலட்சியமாய் பேசுகிறார்

இவர் என்ன செய்தனரோ

அறிந்தவர் யாரும் இலார்…



எத்தனையோ சோதனைகள்

அத்தனையும் கடந்து வந்தான்

ஏழையாக இருந்த போதும்

அயராத முயற்சியினால்

தன்னறிவைப் பெருக்கிக்கொண்டு

சரித்திடத்தில் இடம் பெற்றான்!



கதறியழச் சொல்லவில்லை

கண்ணீர் வடிக்கத் தேவையில்லை

காலமாகிப் போன பின்னே

கண்டபடிப் பேசாதீர்

வாய் திறந்து புகழ வேண்டா

தூற்றாமல் இருக்கலாமே?



குறையில்லா மனித இனம்

இதற்கு முன்பு இருந்ததுண்டா?

இனி இருப்பதுவும் சாத்தியமோ?

நம்மீது குறையிருக்க

அடுத்தவரைப் பழிப்பது ஏன்?

சுடுஞ்சொல்லால் துளைப்பது ஏன்?



மாமேதை மடிந்துவிட்டான்

செய்தியறிந்து கலங்கிடவே

முகநூலைப் பார்க்கயிலே

மூடர்களின் நிலைத்தகவல்

உணர்த்தியது என்னவென்றால்…

காலமான கலாமோடு மரணித்தது மனிதமுமே!!!