திங்கள், 23 பிப்ரவரி, 2009

எதற்கு ஆர்ப்பாட்டம்?


காதலில் தோன்றி
சாதலில் முடியும் வாழ்க்கை
நடுவே எத்தனை ஆர்ப்பாட்டம்?
ஆசை, இன்பம், துன்பம், போராட்டம்
அனைத்திலும் திருப்தியின்மை
வாழ்க்கையின் நோக்கம்தான் என்ன?
வாழ்க்கை என்பதன் பொருள்தான் என்ன?
அகராதியிலாவது விடை கிடைக்குமா?

ஏன் பிறந்தோம்
எதற்காக வாழ்கிறோம்
எதற்காக இறக்க வேண்டும்?
நமது பிறப்பின் நோக்கம்தான் என்ன?
சொந்தங்கள் என்பவை யாவை?
எத்தனை கேள்விகள் பிறந்தாலும்
‘தெரியாது’ என்ற பதிலே கிடைக்கிறது
ஏனோ இப்படி?

குழந்தையாய் பிறந்து
குமரியாய் குதூகலமாய் வளர்ந்து
பெண்ணாய் பூப்பெய்து மலர் சூடி
திருமணம் செய்து குழந்தைப் பெற்று
முதுமைத் தட்டி கூன் விழுந்து
நோயில் வாடி கல்லறைச் செல்லும்
வாழ்க்கையில் எதற்கு ஆர்ப்பாட்டம்?

முடிந்தால் முடியும்!


மன்ணை எண்ண முடிந்தால்
அதனையும் உண்ண முடிந்தால்
நிலவைத் தொட முடிந்தால்
அதனை பூமிக்குள் நுழைக்க முடிந்தால்
சூரியனை நெருங்க முடிந்தால்
அதனை குளிர்ச்சியாக்க முடிந்தால்
நட்சத்திரத்தை பறிக்க முடிந்தால்
அதனை கூந்தலில் சூட முடிந்தால்
நிச்சயமாக (?) என்னாலும் – உன்னை
மறக்க முடியும்!

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009

எங்கே செல்லும்…? (15)



“சாரி. நான் வீட்டுக்குப் போகணும். வீட்ல யாராவதுப் பார்த்தா


பிரச்சனையாகிடும்,” என்றுச் சொல்லிக் கொண்டே சுற்றும் முற்றும் வந்துப் போகிறவர்களைக் கலவரத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் அவளை வேடிக்கையாகப் பார்த்தான்.

“கொஞ்ச நேரம் கூட பேச முடியாதா?” என்று பரிதாபமாய் கேட்டான் அவன். கவிதா தர்மசங்கடமான நிலைக்கு ஆளானாள். பேந்தப் பேந்த விழித்தாள். அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அதற்குள் அங்கே யாரோ நடந்துவரும் சத்தம் கேட்கவே, “ஐயோ, யாரோ வராங்க. நான் கிளம்பறேன்,” என்று கூறிக்கொண்டே தன் தோழிகள் இருவர் நின்றுக்கொண்டிருந்த இடத்தை நோக்கிச் சிட்டாய் பறந்தாள்.

கோவிலைவிட்டு வெளியேறும் முன்பு ஐங்கரனை நோக்கிக் கையசைத்தாள். அவன் முகத்தில் மகிழ்ச்சித் தாண்டவமாடியது. கவிதா கோவிலை விட்டுப் புறப்பட்டதிலிருந்து வீட்டை அடையும் வரை குறைந்தது நான்கு முறையாவது அவளைச் சுற்றி சுற்றி மோட்டார் வண்டியில் வட்டமடித்துவிட்டான் ஐங்கரன்.

கவிதாவிற்கு உள்ளூர மகிழ்ச்சித் தாண்டவமாடியது. பற்றாக்குறைக்கு அவளது தோழிகள் வேறு அவளை உசுப்பேற்றிக் கொண்டிருந்தனர்.

“ஏய், ஆள எங்கலா பிடிச்சே? பையன் நல்லாதான் இருக்கான்,” என்றாள் கோமளா. கவிதா வெட்கப் புன்னகை ஒன்றை உதிர்த்தாள்.

“பையனுக்கு எத்தனை வயசு?” என்றாள் சங்கரி.

“என்னோட மூனு வயசு கூட,” என்றாள் கவிதா.

“நல்லதுதான். நம்மளோட வயசுக் கூட இருந்தாதான் நம்பள புரிஞ்சி நடந்துக்குவாங்க,” என்றாள் சங்கரி.

“ஆமா, அப்பதான் நம்பளவிடச் சின்னப்புள்ள’னு விட்டுக்கொடுத்துப் போவாங்க. வீணாப் பிரச்சனை வராது,” என்று ஒத்து ஊதினாள் கோமளா.

கவிதாவிற்குக் கனவுலகில் சஞ்சரிப்பது போல் இருந்தது. நடுநடுவே ஐங்கரன் வேறு அவளை வட்டமிட்டுக் கொண்டிருந்ததால் அவள் கால்கள் நிலத்தில் ஊன்றவே இல்லை.

“பையனுக்கு உன் மேல ஒரே ‘லவ்சு’ போல. சுத்தி சுத்தி வராரு,” என்று கிண்டலடித்தாள் கோமளா. கவிதாவிற்கு வெட்கமாக இருந்தது.

“இல்லக்கா. சும்மாதான்…” என்று இழுத்தாள் கவிதா.

“கதை விடாதே. எனிவேய், விஸ் யூ கூட் லக். நல்லா இருந்தா சரி. அப்புறம் எல்லா ஒகே ஆனப் பிறகு எங்களைக் கலட்டி விட்டிருராதே!” என்றாள் சங்கரி.

“என்னக்கா இப்படிச் சொல்றீங்களா? நான் என்ன அந்த மாதிரிப் பிள்ளையா?” என்று முகத்தைச் சோகமாக்கினாள் கவிதா.

“ச்சே, சும்மாதான் சொன்னோம். அப்புறம் திரும்ப எப்ப உன்னோட ஆளப் பார்க்கப் போறே?” என்று வினவினாள் சங்கரி.

“அடுத்த வெள்ளிக்கிழமைதான். வருவீங்க தானே?” என்றாள் கவிதா. அவர்களை விட்டால் அவளுக்கு வேறு துணை ஏது? சகோதரிகள் இருவரும் ஒருவரை ஒருவர் விஷமமாகப் பார்த்துக்கொண்டு புன்னகைத்தனர்.

“வர்றோம், என்னப் பண்றது? நீ எங்களுக்குப் பிரண்டா ஆகித் தொலைச்சிட்டியே,” என்றாள் கோமளா. அதற்குள் கவிதாவின் வீடு வந்துவிட்டது. ஐங்கரனும் கடைசிச் சுற்றை அத்துடன் முடித்துக்கொண்டான். தோழிகளும் கவிதாவுடன் விடைப்பெற்றுக்கொண்டு தங்கள் வீட்டிற்குக் கிளம்பினர்.

கவிதாவிற்கு அன்று இரவு தூக்கமே வரவில்லை. ஐங்கரனின் நினைவு அவளை வாட்டிக்கொண்டிருந்தது. புரண்டுப் புரண்டுப் படுத்துப் பார்த்தாள்; போர்வையை இழுத்து தலை வரை மூடிப்பார்த்தாள்; அப்பொழுதும் தூக்கம் வரவில்லை. ஐங்கரனின் நினைவிலேயே திளைத்த அவள் எப்பொழுது உறங்கிப்போனாள் என்பது அவளுக்கே தெரியவில்லை.

ஒருவாரம் ஒரு மாதம் போல் ஓடியது அவளுக்கு. அதற்கிடையில் முகிலனும் பாட்டி வீட்டிற்கு வரவில்லை. ஐங்கரனைப் பற்றி எந்தவொரு தகவலும் தெரியவில்லை. தனது நெருங்கியத் தோழியான தேவியிடம் சற்று இடைவெளி விட்டே பழகினாள். எங்கே தனக்குள் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அவள் கண்டுப்பிடித்துவிடுவாள் என்று அஞ்சினாள் போலும்.

வியாழக்கிழமை அன்று தேவியே கவிதாவைத் தேடிக்கொண்டு பாட்டி வீட்டிற்கு வந்துவிட்டாள். வழக்கம் போல கவிதா அவளது அறையில் இருந்தாள். அறைக்குள் நுழைந்துச் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த தேவி, “கவிதா, உன்கிட்ட ஒன்னு சொல்லணும்,” என்றுப் பீடிகைப் போட்டாள்.

“என்ன,” என்றாள் கவிதா.

“முக்கியமான விசயம். ஆமா, உன்னோட பாட்டி எங்கே?” என்று வினவினாள்.

“இங்க இல்லை’னா உங்க வீட்லதான் இருப்பாங்க. என்ன விஷயம்?”



தொடரும்...

வெள்ளி, 20 பிப்ரவரி, 2009

பிறந்த தினம்!



பிறந்த தினம்
கொண்டாட்டம்தான்
ஏன் பிறந்தாய் என்று யோசித்தாயா?
எதற்குப் பிறந்தாய் என்று சிந்தித்தாயா?

பிறந்த ஒவ்வொருவருக்கும்
முடிவு எனும் இறப்பு உறுதி
பிறந்தநாள் ஞாபகம் உனக்குண்டு
இறக்கும் நாள் எப்போது சொல்வாயா?

மகிழ்ச்சிக் கடலில் நீந்துகின்றாய்
துன்பக் கடலில் மூழ்குகின்றாய்
உறவுகளோடு சிரிக்கின்றாய்
தனிமையிலே அழுகின்றாய்!

அஞ்சி அஞ்சி சாகின்றாய்
பயத்தில் மூழ்கிக் கிடக்கின்றாய்
வாழ்ந்துப் பார்க்கப் பிறந்தாய்
வாழாமல் இருப்பது ஏனோ?

சிவனை நம்பிப் பிறந்தாயா?
எமனை நம்பி இறப்பாயா?
எவனை நம்பி வாழ்ந்தாலும்,
உன்னை நம்பத் தயங்காதே!

எங்கே செல்லும்…? (14)



முகிலன் எதையோ நினைத்துச் சிரித்துக்கொண்டான். அவனை நோக்கிச் சென்ற கவிதா நாணத்துடன் புன்னகைத்தாள்.

“அப்புறம், உன் ஆளப் பார்த்தாச்சா? என்ன சொன்னாரு?” என வினவினான் முகிலன்.

“ஒன்னுமே சொல்லல. கடைக்கிட்ட நின்னுக்கிட்டு இருந்தாங்க, பார்த்துச் சிரிச்சாங்க. அவ்ளோதான். பேசக்கூட இல்ல…” என்று வருத்தம் தோய்ந்தக் குரலில் சொன்னாள் அவள்.

“ஓ, மேடத்துக்குப் பார்த்த போதாதோ? கிட்டவந்து பேசணுமோ? நம்ம வீட்ல யாராவது பார்க்கணும் அப்பதான் நீ அடங்குவே!”

“ஹஹஹா… நாங்கனா மாட்டிக்க மாட்டோமா. எதச் செஞ்சாலும் ப்பிளான் பண்ணி செய்யணும்,” என்று வடிவேலு பாணியில் கூறினாள் அவள்.

“செய்வீங்க, செய்வீங்க! நீங்க யாரு? நீங்க எல்லாத்தையும் செய்வீங்க. என்னை மாட்டி விட்டிடாம இருந்தா சரி,” என்றான் முகிலன்.

“என்ன முகி இப்படிச் சொல்ற? நாம அப்படியா பழகுறோம்? எனக்கு ஏதாவது பிரச்சனைனா அது உனக்கு வந்த மாதிரிதானே?” என்று கிண்டலாய் கேட்டாள் கவிதா.

முகிலன் அவளைப் பார்த்துச் செல்லமாய் முறைத்தான். அந்நேரம் பார்த்து பாட்டி அவ்விடம் வரவும் அவ்விருவரும் பேச்சை மாற்றினர். முகிலன் பாட்டியிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுச் சென்றுவிட்டான்.

அவ்வாரம் முழுவதும் கவிதா ஐங்கரனின் நினைவிலேயே கழித்தாள். அவனை மீண்டும் சந்திக்கும் மார்க்கத்தை யோசித்துக்கொண்டிருந்தாள். முகிலனும் பாட்டி வீட்டிற்கு வந்தபாடியில்லை. இறுதியாக அவ்வார இறுதியில் ஐங்கரன் அன்று வரச்சொன்ன கோவிலுக்குச் சென்று பார்ப்பது என்று முடிவுக்கட்டினாள். எப்படியாயினும் அவன் கோவிலுக்கு வந்தே தீருவான் என்று அவள் உள்மனம் கூறியது.

கவிதாவுடன் பள்ளியில் பயிலும் ஆனால் அவளைவிட வயது மூத்த சங்கரி, கோமளா என்ற இரு சகோதரிகளிடம் தனதுக் கதையைக் கூறி தன்னுடன் கோவிலுக்கு வருமாறு வேண்டினாள். அவர்களும் இந்த மாதிரி விசயங்களில் கில்லாடிகள் என்பதால் அவளுக்கு உதவுவதாக ஒப்புக்கொண்டனர்.

வெள்ளிக்கிழமை வந்தது. சங்கரி, கோமளா, கவிதா ஆகிய மூவரும் கோவிலுக்குக் கிளம்பினர். போகும் வழியிலேயே ஐங்கரனைச் சந்திக்க வேண்டும் என்று கவிதா தனக்குத் தெரிந்த சாமிப்பெயர்களை எல்லாம் கூறி வேண்டிக்கொண்டாள். அவள் வேண்டுதல் வீண்போகவில்லை. அவள் எதிர்ப்பார்த்தபடியே ஐங்கரன் அவளுக்கு முன்னதாகக் கோவிலில் அமர்ந்திருந்தான். ஏனோ தெரியவில்லை, அவனைப் பார்த்த மறுவினாடியே கவிதாவின் தலை தரை நோக்கித் தாழ்ந்தது. இது அவளுக்கே வியப்பாக இருந்தது.

இறைவனை தரிசித்துக் கோவிலை வலம் வரும்போது கூட கவிதாவின் கண்கள் ஐங்கரன் இருக்கும் இடத்தையே நாடின. தலைக் கவிழ்ந்திருந்தாலும் ஓரக்கண்ணால் அவனைப் பார்ப்பதை அவளால் தவிர்க்க முடியவில்லை.

அவளும் தோழிகளும் கோவிலைவிட்டுக் கிளம்ப முற்படும் போது ஐங்கரனின் நண்பன் ஒருவன் அவ்விடம் வந்தான். நேரே கவிதாவிடம் வந்த அவன்,

“எக்ஸ்கியூஸ்மீ, ஐங்கரன் உங்கக்கிட்ட பேசணும்’னு சொன்னாங்க. கொஞ்ச நேரம் வர்றீங்களா?” என்றான்.

கவிதாவிற்கு நெஞ்சம் பதைப்பதைத்தது. தான் ஒரு ஆண் மகனுடன் பேசுவதை யாராவதுப் பார்த்துவிடுவார்களோ என்ற அச்சம் பரவியது. அவள் மருண்ட விழிகளுடன் தன் தோழிகளைப் பார்த்தாள். அவர்கள் கண்ணாலேயே அவளுக்குத் தைரியம் சொல்லி போய் வரும்படி சைகைக் காட்டினர். கவிதா கால்கள் நடுங்க அவனைத் தொடர்ந்துச் சென்றாள்.

அங்கே சாந்தமே உருவாக ஐங்கரன் கோவிலின் பின்னால் அமர்ந்திருந்தான். அவளைக் கண்டதும் எழுந்து நின்றான்.

“ஹாய்!” என்றான்.

“ஹாய்,” என்று புன்னகைத்தாள் அவள்.

“தெரியாத மாதிரிப் போறீங்க? என்கிட்ட பேச மாட்டீங்களா?” என்றான் அவன்.

கவிதாவிற்கு அவனிடம் நிறைய பேச வேண்டும் போல் இருந்தது. ஆனால் அவனுடன் பேசுவதை யாராவதுப் பார்த்து வீட்டின் சொல்லிவிடுவார்களோ என்று அஞ்சினாள். அதனால் அவளால் அவனைச் சரியாகப் பார்க்கக் கூட முடியவில்லை.

“சாரி. நான் வீட்டுக்குப் போகணும். வீட்ல யாராவதுப் பார்த்தா பிரச்சனையாகிடும்,” என்றுச் சொல்லிக் கொண்டே சுற்றும் முற்றும் வந்துப் போகிறவர்களைக் கலவரத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் அவளை வேடிக்கையாகப் பார்த்தான்.

தொடரும்…

காத்திருக்கிறேன்…


சோகங்களே
வாழ்க்கையாகிவிட்டது
ஏனென்றுத் தெரியவில்லை
காரணம் புரியவில்லை
விடைக்காண துடிக்கிறேன்
விடைத்தருவோர் யாருமில்லை!

மேகங்கள் சுமையானால்
மொழிந்துவ்டுகிறது வானம்
உடல்கள் சுமையானால்
பிரிந்துவிடுகிறது உயிர்
மனம் சுமையானால்
என்ன செய்வது?

மனதில் தோன்றும் ஆசைக்கு
அளவே இல்லை – அதை
நிறைவேற்றி வைப்பதற்கு
ஆளே இல்லை
ஆறுதல் கூறுவதற்கும்
எவரும் இல்லை!

கண்மூடிப் பார்க்கிறேன்
ஒரே இருள்
கண் திறப்பதற்கோ
ஒரே பயம்
உலகைக் கண்டு
என் மனம் அஞ்சுகிறது
சோகத்தை மறக்க
நெஞ்சு துடிக்கிறது!

மறக்கிறேன் மறக்கிறேன்
மறக்க முடியவில்லை
தவிர்க்கிறேன் தவிர்க்கிறேன்
தவிர்க்க முடியவில்லை
நிம்மதியைத் தேடினேன்
அதுவும் கிடைக்கவில்லை!

அழுது அழுது
கண்ணீரும் வற்றிவிட்டது
துடைத்து விடுவதற்கு
விரல்களும் மறுத்துவிட்டது!

இன்று,
வாடிய ரோஜாவாக நான்
தண்ணீர் வார்ப்பதற்கும்
எவரும் இல்லை…
இன்னமும் காத்திருக்கிறேன்
உதிரும் நாட்களுக்காக!

வியாழன், 19 பிப்ரவரி, 2009

இருவர் 11 (மேடை நாடகம்)





விவாகரத்து! நமது இந்திய சமூகத்திடையே அதிகரித்துவரும் ஒரு சமூதாய சீர்கேடாகும். திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பது மூத்தோர் வாக்கு. ஆனால், இந்நவீன காலத்தில் திருமண வாழ்க்கையே நரகமாகிக் கொண்டிருக்கிறது.

ஆயிரங்காலத்துப் பயிர் என்பர் திருமணத்தை. அத்தகையப் பயிரானது நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களாகி இன்று அடிக்கும் சூறாவளியில் சிதைந்துப் போகிறது.

கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன் என்ற பழமொழி வழக்கில் உண்டு. இன்றோ நிலமைத் தலைகீழாகி தொட்டதெற்கெல்லாம் விவாகரத்துக் கேட்கும் பழக்கம் நம்மிடையே வந்துவிட்டது.

விவாகரத்துப் பெருகுவதற்கான காரணங்கள் யாவை, அதனை எவ்வாறு களையலாம் என்பதனைத் தாங்கி வருவதே இருவர் 11 மேடை நாடகம். இயக்குனர் எஸ்.தி.பாலா அவர்களின் மற்றுமொரு சிறந்த படைப்பு இந்நாடகம்.

இந்நாடகம் எதிர்வரும் மார்ச் 3-ஆம் திகதியிருந்து 7-ஆம் திகதி வரை தலைநகரில் அமைந்திருக்கும் கலாச்சார மாளிகையில் (இஸ்தானா புடாயா) நடைப்பெறவிருக்கிறது. 21 வயதிற்கு மேற்பட்டவர்களே இந்நாடகத்தைக் காண இயலும்.

தமிழ் மற்றும் கலை ஆர்வலர்கள் அனைவரும் இந்நாடகத்தைக் காண அழைக்கப்படுகின்றனர். நாடகத்திற்கான நுழைவுச் சீட்டுகள் மலேசிய ரிங்கிட் 20 மற்றும் 30 வெள்ளிகளில் கிடைக்கும். மாணவர்களுக்கு 50% கழிவும் வழங்கப்படுகிறது.


நாடகம் அரங்கேறும் நாள்:
3-7 மார்ச் 2009 @ 8.31 (இரவு)
7-8 மார்ச் 2009 @ 3.00 (மாலை)

பிடித்தவை…



நிலவின் வெளிச்சம் பிடிக்கும்
இரவில் குளுமைப் பிடிக்கும்
மழையில் நனைதல் பிடிக்கும்
வீசும் தென்றல் பிடிக்கும்!

நிறத்தில் கருமைப் பிடிக்கும்
தமிழின் இனிமைப் பிடிக்கும்
பூவில் ரோஜா பிடிக்கும்
பகலில் கனவு பிடிக்கும்!

இயற்கை அழகு பிடிக்கும்
ஊரைச் சுற்ற பிடிக்கும்
தோழர் தோழி பிடிக்கும்
இளமைப் பருவம் பிடிக்கும்!

கதைகள் படிக்கப் பிடிக்கும்
அரட்டை அடிக்கப் பிடிக்கும்
சோகப் பாடல் பிடிக்கும்
காதல் கவிதைப் பிடிக்கும்!

நல்ல ரசிகன் பிடிக்கும்
உண்மை நட்பு பிடிக்கும்
கண்ணில் கருணைப் பிடிக்கும்
பேச்சில் இனிமைப் பிடிக்கும்!

தாயின் பாசம் பிடிக்கும்
அண்ணன் அன்பு பிடிக்கும்
உண்மை மனிதன் பிடிக்கும்
கவிதை ரொம்பெ பிடிக்கும்!

அழிவை நோக்கி…



ஓர் இனத்தின் அடையாளமே அவர்கள் பேசும் மொழிதான். உலகத்தில் எத்தனையோ மொழிகள் இருப்பினும் பழமை வாய்ந்த மொழியாய், செம்மொழியாய் இருப்பது நமது தாய்மொழியாம் தமிழ்மொழியாகும். உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரையில் எத்தனையோ மொழிகள் தோன்றி அழிந்துவிட்டன. உலகிலேயே முதன் முதலில் சங்கம் வைத்து மொழியை வளர்த்த இனம் நாம்.

தமிழ்மொழியில் உள்ள சிறப்பு வேறெந்த மொழியிலும் இல்லை என ஆணித்தரமாகக் கூறலாம். வையம் புகழும் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் தமிழில் எழுதப்பட்டது. நமது பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் எடுத்தியம்பும் எத்தனையோ நூல்கள் நமது இலக்கியத்தில் உண்டு. பன்மொழிக் கற்ற மகாகவி பாரதியார் கூட “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதானது எங்கும் காணோம்” என்றுதான் பாடியிருக்கிறார்.

அத்தகையச் சிறப்புமிக்க நம் தாய்மொழி, செழுமை வாய்ந்த தமிழ்மொழி இன்று அழிவை நோக்கிச் செல்கிறது என்றால் அது மிகையில்லை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் முதலில் அவ்வினத்தின் மொழியை ஒழிக்க வேண்டும் என்பது நாமறிந்த உண்மை. நமது மலேசிய மலைநாட்டில் வசிக்கும் நம்மினக் குழந்தைகளுக்கு தமிழறிவு ஊட்டுவது தமிழ்ப்பள்ளிகளே. அத்தகைய தமிழ்ப்பள்ளிகள் இன்று அழிவை நோக்கிச் சென்றுக்கொண்டிருக்கின்றன.

நம்மின மக்களே ‘ஏன் வேறு பள்ளிக்கு அனுப்பக்கூடாதா?’, ‘தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவதால் என்ன பயன்?’, ‘தமிழ் சோறு போடுமா?’ என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். இவர்களது இச்செயலானது மல்லாக்கப் படுத்து தன் மேலேயே உமிழ்வது போல்தான் இருக்கிறது. என்ன ஒரு மடத்தனமான கேள்வி!

உன் மொழியை நீ கற்காவிட்டால் பிற இனத்தவனா அக்கறையுடன் வந்துப் படிக்கப் போகிறான்? தங்கள் பிள்ளைகளைச் சீனப் பள்ளிக்கும் தேசியப் பள்ளிக்கும் அனுப்பும் மரத்தமிழர்களே, எத்தனை சீனர்களும் மலாய்க்காரர்களும் அவர்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புகிறார்கள் என்று சிந்தித்துப் பார்த்தீர்களா? வீட்டிலிருக்கும் அம்மாவை (தமிழ்) விட பக்கத்து வீட்டிலிருக்கும் ஆண்ட்டி (பிறமொழி) உங்களுக்கு உயர்வோ? ஏன் தமிழ் படிக்க வேண்டும் என்று மூக்கால் அழும் முட்டாள்களே கேளுங்கள்!

நமக்கென்று இந்நாட்டில் சொல்லிக்கொள்ளும்படியாக எதுவும் இல்லை. இருக்கும் மொழியையும் நமது பண்பாடு, கலாச்சாரத்தையாவது காப்பாற்றலாம் அல்லவா? தமிழ்ப்பள்ளிகளில் மொழியோடு சேர்ந்து சமயமும் நன்னெறியும் போதிக்கப்படுகிறது. அதனால் நம்மின பிள்ளைகள் சிறு வயதிலேயே சமயத்தை அறிந்துக்கொள்ள ஏதுவாகயிருக்கிறது. பழமொழியும், செய்யுளும், ஆத்திச்சூடியும், ராமாயண மகாபாரத கதைகளும், சிலப்பதிகாரமும், மணிமேகலையும் தமிழ்ப்பள்ளியைத் தவிர்த்து வேற்று பள்ளிகளில் சொல்லிக் கொடுப்பார்களா?

‘நான் தமிழன்’; ‘நான் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியன்’; ‘நான் தமிழ்ச் சமுதாயத்தின் பிரதிநிதி (அரசியல்வாதி); நான் தமிழாசிரியன்; நான் தமிழ் எழுத்தாளன் என்று மார்தட்டிக்கொள்ளும் மரத்தமிழனே, உன் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளியில் சேர்க்க மட்டும் எப்படியடா நீ மறந்து போனாய்? ‘தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பாவிட்டால் என்ன? நான் தான் வீட்டிலேயே பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லிக்கொடுக்கிறேனே’ என்று சமாதானம் கூற முனையாதே!

வேற்றுமொழிப் பள்ளிகளில் தமிழ் ஒரு பாடமாக அமையலாம். ஆனால், அதைப் படித்தே தீர வேண்டும் என்ற கட்டாயம் ஒரு போதும் விதிக்கப்படமாட்டாது. நீங்கள் வேற்றுப் பள்ளிகளுக்குப் பிள்ளைகளை அனுப்புவதால் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக் குறைகிறது. குறைந்த மாணவர்களைக் கொண்ட பள்ளிகளை இழுத்து மூடுவதற்கு நம் நாட்டில் சிலர் வழி மேல் விழி வைத்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். தமிழ்ப்படித்தவர்கள் எண்ணிக்கைக் குறைந்தால் அடுத்தபடியாக தமிழ் சார்ந்த துறைகளும் வீழ்ச்சியைச் சந்திக்கும். வானொலியிலும் தொலைக்காட்சியிலும் இப்பொழுது உள்ளதை விட பன்மடங்கு தமிழ்க்கொலை நடக்கும்.

எனதருமைத் தோழர்களே இந்நாட்டில் தமக்கென சொந்த மொழியில்லாது பிறமொழிச் சொற்களை (தமிழ்மொழி உட்பட) இரவல் வாங்கி (கொள்ளையிட்டு) ஒரு மொழியினை உருவாக்கி அதுவே தமது தாய்மொழி என்றும் அதிகாரப்பூர்வ மொழியென்றும் அடையாளம் காட்டி மார்த்தட்டிக்கொள்கின்றனர் சிலர். இவர்களின் நடுவே தொன்மையான மொழியினைத் தாய்மொழியாகக் கொண்ட நாமோ தமிழ்ப்படிப்பதற்கும் தயங்கி நம்மை நாமே தாழ்த்திக்கொள்ளலாமா?

இனம், மொழி உணர்வுக்காக உயிரையே துச்சமெனக் கருதிப் போராடும் புலிகள் மரபில் வந்தவர்களல்லவா நாம்? நமக்கு மட்டும் என்னவாயிற்று? வாய்ப்பு இருந்தும் பயன்படுத்திக்கொள்ளாமல் எதற்காக அகம்பாவத்தோடுத் திரிய வேண்டும்?

தாயை இழந்தவன் அனாதை; மொழியை இழந்தவனும் அனாதை தானே? சொந்த மொழிக்கூடத் தெரியாமல் நம் பிள்ளைகள் அனாதையாக வாழ வேண்டுமா? உலகம் அவர்களைப் பார்த்து நகைக்க வேண்டுமா? நமது இலக்கியங்களைப் படிக்கத் தெரியாமல் அவர்கள் திகைக்க வேண்டுமா? பிறநாட்டில் வசிக்கும் நம்மின சகோதரர்கள் அவர்களைப் பழிக்க வேண்டுமா? இதனைத் தமிழர்களாகிய நாம் சகிக்க வேண்டுமா? சிந்தித்துப்பாருங்கள்; விடை காணுங்கள்…

வீழ்வது நாமாக இருப்பினும்
வாழ்வதும் வளர்வதும் தமிழாக இருக்கட்டும்!

செவ்வாய், 17 பிப்ரவரி, 2009

தமிழனா?


வாழ்க்கை என்பது
வாழ்வதற்காகத்தானே?
வாழத் தெரியாதவன் முட்டாள்
வாழ அஞ்சுபவன் கோழை
வாழ்க்கையை வாழத் தெரிந்தும்
வாழாமல் இருப்பவன்…?
தமிழனா?

வஞ்சனைகள் பல செய்து
வருத்தத்தைத் தானே தேடி
வன்முறையில் ஈடுபட்டு
வலது கால், கை இழந்து
வழிகளிலே கண்ணீர் தேங்கி
நிற்பவன்...?
தமிழனா?

வீரபாண்டி கட்டபொம்மன்
வசனங்கள் பல பேசி
வீச்சறுவாள் கையில் ஏந்தி
வெட்டி குத்தி, கொலை செய்து
வீழ்பவன்…?
தமிழனா?

கம்பீரமாய் படிக்கச் சென்று
கல்லூரிக்கே தீயை வைத்து
காவல் துறையினரால் பிடிபட்டு
கண்ணீர் சிந்துபவன்…?
தமிழனா?

காலையிலே எழுந்திரிச்சு
கண்ணியமாய் தண்ணியடிச்சு
கடமைக்குச் செல்லாமல்
கண்டபடி உளறிவிட்டு
கண்மூடித்தனமாக தெருவினிலே
கல்தடுக்கி விழுபவன்…?
தமிழனா?

பொன் மீது ஆசை கொண்டு
பொருள் மீது மோகம் கொண்டு
பெண் மீது காமம் கொண்டு
பொறுக்கியாய் திரிபவன்…?
தமிழனா?

பெருமைக்குக் குண்டர் கும்பல்
புகழ் பரப்ப சுற்றிக் கும்பல்
பெற்றோரை கவனியாமல்
பொல்லாங்குப் பல பேசி
பொறுப்பின்றி திரிபவன்…?
தமிழனா?

எங்கே செல்லும்…? (13)


“இதோ வந்துட்டேன்,” என்று கவிதா கட்டிலிலிருந்துப் பாய்ந்தோடிச் சென்று கதவைத் திறந்தாள். அங்கே முகிலன் நின்றுக்கொண்டிருந்தான்.

“என்ன தூங்குறியா?” என்று பாதி தூக்கத்தில் எழுந்துவந்த கவிதாவைப் பார்த்துக் கேட்டான்.

“இல்ல, டான்ஸ் ஆடிக்கிட்டு இருந்தேன்,” என்று நக்கலாக பதிலளித்தாள் கவிதா.

“நக்கலு… ஹ்ம்ம், சரி, நீ கோவிலுக்குப் போறதா சொல்லியிருந்தியா. ஏன் போகல?” என்று கவிதாவைத் தவிர வேறு யாருக்கும் கேட்காத வண்ணம் மெதுவாகக் கேட்டான் முகிலன். கவிதா முகத்தில் ஆச்சர்யம் தோன்றிப் பின் கவலையாக மாறியது.

“அதான்…போகனும்’னு நினைச்சேன். யாருக்கூடப் போறதுன்னு தெரியல. பாட்டி தனியாப் போக விடமாட்டாங்கனுதான் உனக்கே தெரியுமே,” என்றாள் சோகமாக.

“சரி, ஐங்கரன் நம்ம தாமான் முன்னுக்கு உள்ள சீனக்கடையில வெயிட் பண்றான். உன்னைப் பார்க்கணுமாம்,” என்றான் சர்வசாதாரணமாக. கவிதா ஒரு கணம் திகைத்து நின்றாள்.

“ஏய், விளையாடுறியா? உண்மையாக் கடையில இருக்காங்களா?” என்று அவன் கூறுவதை நம்பாதது போல் கேட்டாள்.

“ஆமா! எனக்கு வேற வேலை வெட்டி இல்ல. அதான் உங்கூட ஓடிப்புடிச்சி விளையாடுறேன்! நான் என்னப் பொய்யா சொல்றேன்? உண்மையாதான். அவன் அங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கான். உன்கிட்டச் சொல்லச் சொன்னான். போய் பாரு போ!” என்றான் முகிலன்.

“என்னப் பேசுற நீ. பாட்டி வீட்ல இருக்காங்க. நான் எப்படிப் போய் பார்க்கிறது?”

“கடையில ஏதாவது வாங்கப் போறேன்னு சொல்லிட்டுப் போ. இப்ப நீ போகப் போறியா. இல்ல, நீ வரலை’னு நான் போய் சொல்லட்டுமா?”

“ஏய், லூசாடா நீ? மாமா, சித்தப்பா யாராவது பார்த்துட்டா என்ன செய்றது?”

“ஏய், உன்ன என்ன டேட்டிங் பண்ணவா சொன்னாங்க? உன்னைப் பார்க்கணும்’னு சொன்னான். நீ எப்போதும் போல கடைக்குப் போற மாதிரி போயிட்டு வா. அவன் பார்த்துட்டுப் போயிறுவான்.”

“அப்ப, என்கிட்ட பேசமாட்டாங்களா,” என்று ஏக்கத்துடன் கேட்டாள் கவிதா.

“ஆமா! அது மட்டும்தான் இப்பக் குறைச்சல். யாராவதுப் பார்த்துட்டா என்னப் பண்றது? ஏய், நீ போகப் போறியா இல்லையா? அவன் மொதல்லேர்ந்து அங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கான்,” என்று பொறுமையிழந்தான் முகிலன்.

கவிதாவிற்கு வேறு வழித் தெரியவில்லை. குழப்பத்துடன் கடைக்குக் கிளம்பிச் சென்றாள். அவள் இருதயம் படு வேகமாக அடித்துக்கொண்டிருந்தது. அவள் இருதயம் துடிக்கும் வேகம் அவள் காதுகளை அடைத்தது. அவள் வீட்டிற்கும் கடைக்கும் கொஞ்சம் தூரம்தான். அதோ பார்த்துவிட்டாள். பக்கத்துக் கடையில் ஐங்கரன்.
கவிதாவால் அவனை நேரடியாகப் பார்க்க முடியவில்லை. அவனைக் கண்ட மறுநிமிடமே தலையை நிலம் நோக்கித் தாழ்த்திக் கொண்டாள்.

அவளது கால்கள் தடுமாறின. அந்தச் சமயம் பார்த்து அவளுக்கு ஒரு சந்தேகம். ‘நாம் அழகாக நடக்கிறோமா? எப்படி நடப்பது?’ என்று. அவளால் மெதுவாக நடக்கவும் முடியவில்லை; வேகமாக ஓடவும் முடியவில்லை. ஒருவழியாகக் கடையை அடைந்தாள். ஐங்கரன் அரைக்கண்ணால் அவளைப் பார்ப்பதை உணர்ந்தாள்.

விடுவிடுவென்று அவனைக் கடந்துச் சென்றுக் கடைக்குள் புகுந்தாள். தான் வாங்க வேண்டியதை மின்னல் வேகத்தில் வாங்கினாள். அவளுக்கு வேர்த்துக் கொட்டியது. ஐங்கரனைப் பார்க்க வேண்டும் என்று அவள் மனம் துள்ளியது; வெட்கம் அவளைத் தடுத்தது. கடையை விட்டு வெளியாகும் போது லேசாகத் தலையைத் தூக்கி அவனை நோக்கி முறுவலித்தாள். ஐங்கரனின் முகம் சூரியனைக் கண்ட தாமரைப் போல மலர்ந்தது. ஒரு கணம்தான், ஒரே ஒரு கணம்தான் கவிதா ஐங்கரனைப் பார்த்தாள். மறுகணம் மீண்டும் தலையைத் தாழ்த்தி விடுவிடுவென்று வீடு நோக்கி நடந்தாள்.

அவளின் செயலை நினைக்க அவளுக்கே வியப்பாக இருந்தது. ஐங்கரனை மீண்டும் எப்போது காண்போம் என்று அவள் பல நாட்களாக ஏங்கிக்கிடந்தது உண்மையே. இப்போது கண் முன்னே அவன் இருந்தும் அவளால் அவனைக் கண் குளிரப் பார்க்க முடியவில்லை. கவிதா தன்னைத் தானே நொந்துக்கொண்டாள். இருந்தும் அவளுள் ஒரு கிளர்ச்சி உண்டாகவே செய்தது. சிறிது தூரம் சென்றப் பின், பட்டாம்பூச்சியாய் மகிழ்ச்சியுடன் வீடு நோக்கிப் பறந்தாள் கவிதா.

முகிலன் அவளுக்காக வாசலிலேயே காத்திருந்தான். அவனைக் கண்டதும் நடையைத் துரிதப்படுத்தினாள். அவளது முகத்தில் மகிழ்ச்சித் தாண்டவமாடியது அப்பட்டமாகத் தெரிந்தது. முகிலன் எதையோ நினைத்துச் சிரித்துக்கொண்டான்.

தொடரும்…

திங்கள், 16 பிப்ரவரி, 2009

ஏன் வந்தாய்?


எங்கே சென்றாயடா
இவ்வளவு நாட்களாய்?
எங்கே ஒளிந்திருந்தாய்?
என்னைக் காண பிடிக்காமல்
தூர தேசம் ஓடிச் சென்றாயா?
பூமிக்குள் புதைந்துக்கொண்டாயா?
உன் உருவத்தை மறைத்துக்கொண்டாயா?

அறியா வயதில்
புரியாத உணர்வாய் வந்த காதலை
துளிர்த்த பசுமைப் பயிரை
புது வெள்ளம் அடித்ததைப் போல்
புத்தம் புது மலரை
சூறாவளி தாக்கியது போல்
அழகான மயில் ஒன்றை
தீயில் கருக்குவது போல்
உளம் கொதிக்க மனம் வாட
விட்டுச் சென்றாயே!

என்ன தவறு செய்தேன்
வாய் விட்டுச் சொல்வாயா?
என்ன செய்ய வேண்டும்
மனமுவந்து கேட்பாயா?

எத்தனையோ ஆண்டுகள்
உருண்டோடி விட்டன
எத்தனையோ நாடகங்கள்
அரங்கேறி விட்டன
காய்ந்துப்போன பட்டமரமாய்
வெயிலோ மழையோ
வித்தியாசம் தெரியாமல்
வாழப் பழகிவிட்டேன் – நான்
சாகத் துணிந்துவிட்டேன்!

மறந்துக்கிடந்தேனடா
மீண்டும் காணும்வரை
பேதையாய் இருந்தேனடா
மீண்டும் பேசும் வரை
சாயம் போன சிலைக்கு
புது வண்ணம் பூசுவது போல்
ஈரம் காய்ந்த இதயத்தில்
ஊதக்காற்றாய் வருகின்றாயே!

கைக்கோர்த்து நடந்ததில்லை
அருகருகே அமர்ந்ததில்லை
தூயக் காதலொன்றை
இதயத்தில் சுமந்தோமே
சுற்றுலாச் சென்ற போது
சுனாமியால் மூழ்கியது போல்
காதலில் திளைத்த போது
பிரிவினில் மூழ்கச் செய்தாயே!

பேசிய பேச்சு
சொன்ன வார்த்தைகள்
நேற்று பெய்த மழை போல்
இன்னமும் பசுமையாய்…
எப்போது சேர்ந்திருந்தோம்
எப்படிப் பிரிந்துச் சென்றோம்
காரணமே தெரியவில்லை
கண்ணீர் இன்னும் காயவில்லை!

மறந்துதான் விட்டேனடா
உன்னையும் – உன்
கண்ணிலிருந்த மச்சத்தையும்…
சென்ற ஜென்ம நிகழ்ச்சி என்று
மூட்டைக்கட்டி வைத்துவிட்டேன்!
கட்டவிழ்ந்த மூட்டையிலிருந்து
சரிந்துவிழும் தானியம் போல்
அலையலையாய் பெருகுதடா
கடந்த கால நினைவலைகள்!

நொந்துப் போன நெஞ்சத்தை
முள்ளொன்று குத்துதே – அதைப்
பிடுங்கிப் போட வலுவில்லாமல்
இதயமும் கதறுதே….

இறந்துப்போன உணர்ச்சியொன்று
பிழைத்து வந்ததோ
மறந்துப் போன காதலொன்று
நினைவு வந்ததோ…
ஏன் வந்தாய் அன்பே
என்னைக் கொன்றுப் போடவா?
உயிரோடு தீயிலிட்டு
கருக்கி எடுக்கவா?

வியாழன், 12 பிப்ரவரி, 2009

எங்கே செல்லும்…? (12)



கவிதா காத்திருந்தாள். அதோ, ஐங்கரன் வந்துவிட்டான். அவன் பெயரைக் கண்ட உடனே கவிதாவின் விரல்கள் அச்சுப்பலகையில் விளையாடத் தொடங்கின.

கவிதா: ஹாய்! நீங்கள் ஐங்கரன் தானே?

ஹரன்: ஹாய், ஆமாம் கவிதா! எப்படி இருக்கிங்க?

கவிதா: நலம். நீங்க எப்படி இருக்கீங்க?

ஹரன்: நல்லா இருக்கேன். சாரி, என்னால ரொம்பெ நேரம் சாட் பண்ண முடியாது. கொஞ்சம் வேலை இருக்கு.

கவிதா: அப்படியா? எவ்ளோ நேரம் சாட் பண்ணுவீங்க?

ஹரன்: நான் இப்ப கிளம்பியாகணும். நீங்க காத்திருப்பீங்கன்னுதான் வந்தேன். உங்கள நான் மீட் பண்ண முடியுமா?

கவிதா: எப்போ? எப்படி?

ஹரன்: இன்னைக்குக் கோவிலுக்கு வருவீங்களா?

கவிதா: எந்தக் கோவிலுக்கு?

ஹரன்: அன்னைக்கு மீட் பண்ணினோமே அந்தக் கோவிலுக்குத்தான்.

கவிதா: எத்தனை மணிக்கு?

ஹரன்: ஆறு மணிக்கு வர்றீங்களா?

கவிதா: முயற்சி பண்றேன். உறுதியா சொல்ல முடியாது.

ஹரன்: சரி, நான் இப்ப கிளம்பனும். உங்கக்கிட்ட சாட் பண்ணினதில் ரொம்பெ மகிழ்ச்சி. சாயந்தரம் கோவில்ல பார்ப்போம்.

கவிதா: சரி. பிறகு பார்ப்போம்.

ஹரன்: பாய்!

கவிதா: பாய்!

சீக்கிரம் சென்று விட்டானே என்ற கவலை ஒரு பக்கம், இன்று கோவிலில் அவனைக் காணலாம் என்ற மகிழ்ச்சி ஒரு பக்கம்! கவிதா இனம் புரியாத உணர்வால் அல்லாடினாள். சரி, என்னச் சொல்லிக் கோவிலுக்குச் செல்வது? இவ்வளவு காலமாக விசேஷ காலங்களில் மட்டுமே அவள் கோவிலுக்குச் செல்வது வழக்கம். இன்று வெள்ளிக்கிழமை…பாட்டியிடம் என்ன சொல்லலாம் என்று சிந்தித்துக்கொண்டே வீட்டிற்குச் சென்றாள். கண்டிப்பாக பாட்டி தன்னைத் தனியே அனுப்ப மாட்டார். யாரைத் துணைக்குக் கூப்பிடலாம்?

சட்டென்று அவளுக்கு ஞாபகம் வந்தது தேவியே. ஆனால், தேவி சோம்பேறியாச்சே? கொஞ்ச நேரம் வெளியே சென்று வர அழைத்தால் கூட தலை வலி, கால் வலி என்று வரமாட்டாள். வேறு யாரைக் கூப்பிடுவது என்று சிந்தனையில் ஆழ்ந்தாள். வீட்டிற்குச் சென்றவள் மதிய உணவைக் கூட உட்கொள்ளவில்லை. மணி ஐந்தாகிவிட்டது. வேறு வழியே இல்லை!

தேவியின் வீட்டுற்குச் சென்றாள். தேவியோ நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். தேவியின் தாயாரிடம் சிறிது உரையாடிவிட்டு வீடு வந்தாள். மணி 5.30 ஆகிவிட்டது. இதற்கு மேல் தான் மட்டும் கிளம்பிப் போவது முடியாதக் காரியம் என்று கோவிலுக்குச் செல்லும் எண்ணத்தைக் கைவிட்டாள்.

அவள் மனதில் சோர்வு குடிக்கொண்டது. அவள் மீது அவளுக்கே வெறுப்பு உண்டானது. ‘சே, பாவம் அவர். எனக்காகக் காத்திருப்பார். என்னால்தான் போக முடியவில்லை. தேவிக்கு என்னாயிற்று? என்றும் இல்லாமல் இன்று மட்டும் அதிக நேரம் தூங்கி வழிகிறாளே? தனியே போகவும் பயமாக இருக்க்கிறது. துணைக்கு வரவும் யாரும் இல்லை. என்னதான் செய்வது?’ என்று பலவாறாக எண்ணினாள்.

அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது. நேரே தனது அறைக்குச் சென்று படுத்துவிட்டாள். அவளையறியாமல் உறங்கியும் விட்டாள். மாலை நேரமாதலால் அவளைப் பாட்டி நீண்ட நேரம் தூங்கவிடவில்லை. சிறிது கண்ணயர்ந்த உடனேயே பாட்டியின் குரல் அவளை எழுப்பியது.

“ஆ…வரேன்!” என்றவாறு கட்டிலில் சோம்பல் முறித்தாள்.

“கவி!” என்ற அழைப்பு மீண்டும் ஒலித்தது. இந்த முறை பாட்டியின் குரலல்ல. அந்தக் குரலைக் கேட்டவுடன் கவிதாவின் சோர்வும் தூக்கமும் எங்கோ பறந்தோடி விட்டன.

“கவி, தூங்குறியா?” என்று மீண்டும் அந்தக் குரல் ஒலித்தது. கதவைத் தட்டும் சத்தமும் கேட்டது.

“இதோ வந்துட்டேன்,” என்று கவிதா கட்டிலிலிருந்துப் பாய்ந்தோடிச் சென்று கதவைத் திறந்தாள். அங்கே…

தொடரும்…

செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

காதல்…


துன்பத்தின் எல்லை
கண்ணீரின் மறு உருவம்
உடலின் கடைசி இரத்தத்தையும்
உறிஞ்சி எடுக்கும் பிசாசு!

நிம்மதியைக் கெடுத்து
நன்னெறியைச் சாகடித்து
பிஞ்சிலேயே பழுக்க வைத்து
அழுகி விழும் கசப்பான பழம்!

இதயம் திறந்து உயிரில் நுழைந்து
நமக்கே தெரியாமல் உயிரைக் கொல்லும்
விழியில் விழுந்து நினைவில் கரைந்து
உயிரை வாங்கும்!

பாம்பினிலே விஷம் மிக்கது
துன்பத்திலே கொடுமையானது
கொடுமைகளிலே கொடூரமானது
உயிரைக் கொல்லும் கிருமியானது!

அனைவருக்கும் பொதுவானது
ஒரு சிலருக்கே அதிஷ்டமானது
அன்புக்குரியவரையும் கொல்லும் ஆயுதம்
வாழ்வை அழிக்கும் அழிவில்லா காதல்!

எங்கே செல்லும்…? (11)


ஆனால், கவிதா விசயத்தைக் கூறிய மறு நிமிடமே முகிலனின் முகம் மாறியது. “அடப்பாவி…!” என்று தன்னையும் மீறி கூறிவிட்டான். அப்படி அவன் வாய் பிளக்கும் அளவிற்குக் கவிதா கூறியது இதைதான்.

“எனக்கு அந்தப் பையனை ரொம்பெ பிடிச்சிருக்கு. அவருக்கும் என்னைப் பிடிச்சிருக்கான்’னு நீதான் கேட்டுச் சொல்லனும். ப்பிளீஸ்… நீதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்.”

இதனைக் கேட்டப் பிறகுதான் முகிலனின் முகம் மாறியது. “அடிப்பாவி! நான் உனக்கு மாமா பையன் தான். அதுக்கு’னு என்னை ‘மாமா’ வேலைப் பார்க்கச் சொல்றியா?” என்று நொந்துக்கொண்டான்.

“என்ன’லா இப்படிச் சொல்ற? உன்னைப் போய் அப்படி நினைப்பேனா? எனக்கு யார்கிட்ட போய் கேட்கிறது’னு தெரியல. நீங்க ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல் தானே? உ னக்குத் தான் அவரைப் பத்தி நிறைய தெரியும். சோ, ப்பிளீஸ் எனக்காக செய்யேன். நாளைக்கு உனக்கு ஏதாவது ஒன்னுன்னா நான் தானே உதவி பண்ணனும்?” என்று கெஞ்சாதக் குறையாகக் கேட்டாள் கவிதா.

கவிதாவைப் பார்க்க முகிலனுக்கு வேடிக்கையாக இருந்தது. அவள் பேச்சும் செயலும் அவனுக்குப் புதுமையாக இருந்தது. வயது வித்தியாசம் அதிகமில்லாத காரணத்தினால் இது இயற்கையான விசயம்தான் என்று புரிந்துக்கொண்டான்.

“ஹ்ம்ம்… நான் போய்ட்டு நேரடியா அவன்கிட்ட கேட்க முடியாது. ஜாடை மாடையா கேட்டுப் பார்க்கிறேன். ஆமா, உனக்கு எப்படி அவனைத் தெரியும்?” என்று வினவினான்.

கவிதா போட்டி விளையாட்டுத் தொடங்கி, கோவில் வரை நடந்த அனைத்தையும் அவனிடம் சொல்லி முடித்தாள்.

“ஓ, அதுதான் கதையா. சரி, சரி. நான் கேட்டுட்டு உன்கிட்ட சொல்றேன்,” என்றான் முகிலன். சிறிது நேரம் உரையாடிவிட்டு அவனும் வீட்டுக்குச் சென்றுவிட்டான். ஐங்கரனைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள போகிறோம் என்ற ஆவலில் கவிதா சந்தோஷ வானில் சிறகடித்துப் பறந்தாள்.

முகிலனிடமிருந்து தகவலை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தாள். இரண்டு வாரம் கழித்து முகிலன் மீண்டும் பாட்டி வீட்டிற்கு வந்தான்; நல்ல செய்தியோடு!

“கவி, ஐங்கரன் உங்கிட்டப் பேசணுமாம். எப்ப பார்க்கலாம்’னு கேட்டான்,” என்றான். கவிதாவிற்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை!
“நான் எப்படி’லா பார்க்கிறது? சித்தப்பா, மாமா யாராவது பார்த்தா என்ன ஆவறது? கஷ்டம்’லா… நீ பார்க்க முடியாதுன்னு சொல்ல வேண்டியது தானே?” என்றாள்.

“ஏய், என்ன விளையாடுறியா? அன்னைக்கு நீ தானே அவனைப் பிடிச்சிருக்குன்னு கேட்ட?”

“ஆமா, கேட்டேன். ஆனா, எப்படிப் பார்க்கிறது? நம்ம குடும்பத்தைப் பத்திதான் உனக்குத் தெரியுமே? சாதரணமா ஒரு பையன்கிட்ட பேசுனாலே பாட்டுப்பாட ஆரம்பிச்சுடுவாங்க…” என்று இழுத்தாள்.

“இப்ப ஐங்கரன் கிட்ட நான் என்ன சொல்லனும்?”

“கடுப்பாகாத! எனக்கே என்னப் பண்றது’னு தெரியல…” என்று குழம்பினாள் கவிதா. முகிலன் எதையோ யோசித்தான்.

“ஹேய், நீ ‘சாட்’ பண்ணுவே தானே?” என்று கேட்டான்.

“ஆமா!”

“அப்படினா, நான் அவனை உன் கூட ‘சாட்’ பண்ணச் சொல்றேன். நீ என்னைக்குச் சாட் பண்ணுவேனு சொல்லு. நான் அவன்கிட்ட சொல்லிடுறேன்.”

“ஐய்ய்யோ…உனக்குக் கூட மூளை வேலை செய்யுது! தாங்ஸ் முகி. நான் வெள்ளிக்கிழமை சாட் பண்றேன். நீ ஐங்கரன்கிட்ட சொல்லிடு. ஒகே’வா?”

“சரி,” என்றான் முகிலன்.

கவிதா மிகவும் மகிழ்ச்சியாகப் பொழுது போக்கினாள். அனைவரிடமும் கலகலப்பாகப் பேசினாள். வீட்டு வேலைகளைத் தானே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தாள். ஐங்கரனை மனக்கண் முன் கொண்டு வர முயற்சி செய்தாள். இருப்பினும் பாதியிலேயே அவன் உருவம் கலைந்துப் போனது. அதனால் தன்னைத் தானே நொந்துக்கொள்ளவும் செய்தாள்.

அவள் ஆவலோடு எதிர்ப்பார்த்திருந்த வெள்ளிக்கிழமையும் வந்தது. பள்ளி முடிந்து ஆவலோடு கணினி மையத்திற்குச் சென்றாள். ஐங்கரன் இன்னும் ஆன்லைனில் வரவில்லை. காத்திருந்தாள்…

தொடரும்…

வெள்ளி, 6 பிப்ரவரி, 2009

யார் நீ?


யார் நீ
இருண்ட என் உலகில்
எப்படி பிரவேசித்தாய்?
வெகு காலம் பழகியதைப் போல்
நீண்ட நாள் உறவு போல்
நெருக்கமாய் அறிந்ததைப் போல்
இன்னும் சொல்லத் தெரியாத
ஏதோ ஒன்று...

உன்னருகில் இருக்கையில்
கடந்த கால நினைவுகள்
பட்டாம்பூச்சியாய் சிறகடிக்கின்றன
ஒரு வகை மகிழ்ச்சி, இன்பம்
விவரிக்க முடியா கவலை, துக்கம்
அனைத்தும் கலந்து என்னை
இம்சிக்கின்றன!

பேச்சினிலே வெகுளி
கண்களிலே கனிவு
உதட்டினிலே சிரிப்பு
இவையாவும் உன்னுள்ளே
நான் கண்ட சிறப்பு!

நடப்பது எதுவும் புரியவில்லை
விடிய விடிய பேசியும்
பேசி முடிக்காத ஏதோ ஒன்று
இன்னும் பேச வேண்டும் போல்
உள்ளுக்குள் உணர்வு!

என்னை எனக்கே புரியவில்லை
செய்வது சரியா தெரியவில்லை
நட்பின் நோக்கம் விளங்கவில்லை
நீ நினைப்பது என்ன? அறியவில்லை!

உன்னோடு இருப்பது
மனதிற்கு ஆறுதலாய்
நெஞ்சுக்கு நிம்மதியாய்
உயிருக்கு சுகமாய்
ஆத்ம திருப்தியாய்...

வாழ்க்கையே புதிராய்
அதில் நீ வினாக் குறியாய்
விடை தேடும் முயற்சியில் நான்!
எதற்கு இதெல்லாம் நடக்கின்றது?
நான் சுயநினைவோடு இருக்கின்றேனா
இல்லை மதியிழந்து திரிகின்றேனா?

பாலைவனத்தில் நதியாய்
இருளுக்கு மத்தியில் நிலவாய்
முட்களின் மத்தியில் மலராய்
எனது தனிமையின் மத்தியில்
ஓசையாய் நீ...
சொல்லத் தெரியவில்லை
என் கவிதைக்கு வார்த்தையில்லை!

எங்கே செல்லும்…? (10)



“கவிதாவோட பாட்டி தேடுவாங்களாம். சொல்லிக்காமல் வந்திருச்சி. அதான் போவுது,” என்று சமாளித்தாள் தேவி. ஐங்கரன் ஏமாற்றத்துடன் அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

கோவிலைச் சுற்றி சுற்றி வந்தக் கவிதா அடிக்கடி ஐங்கரன் இருக்கும் திசையைக் கடைக்கண்ணால் காணவே செய்தாள். ஐங்கரனும் அவளைக் காணத் தவறவில்லை.

‘ஐங்கரன்! இதுதானா உங்கள் பெயர்? எவ்வளவு அழகானப் பெயர். அன்றுத் திடலில் பெயரைக் கூடச் சொல்லாமல் சென்று விட்டீர்கள். உங்களை நினைத்து எத்தனை நாட்கள் ஏங்கினேன் தெரியுமா? இப்பொழுது மறுபடியும் உங்களைச் சந்தித்தும் பேசும் சக்தியை அறவே இழந்து நிற்கிறேனே. என்ன வந்தது என் கண்களுக்கு? உங்கள் கண்களை நோக்கவும் சக்தியின்றி தானாகவே நிலத்தை நோக்குகின்றதே. நான் ஏன் இப்படி மாறிவிட்டேன்?’ என்ற பலவாறாக மனதுக்குள்ளேயே பேசிக்கொண்டாள்.

‘அட, என்ன இது? இலக்கியமாக எண்ணுகின்றேனே? ஒரு வேளை அதிகமாக நாவல்கள் படிப்பதனால் ஏற்படும் தாக்கமாக இருக்குமோ? இருக்கலாம், இருக்கலாம். இருந்தால்தான் தவறு என்ன?” என்று தனக்குள் சிரித்தும் கொண்டாள்.

பூசை அனைத்தும் முடிந்து அவரவர் இல்லம் திரும்பினர். ஐங்கரன் என்ற பெயரும் அவனது அழகிய முகமும் அவளைத் தூங்கவிடாது இம்சித்தன. மீண்டும் எப்போது அவனைக் காணுவோம் என்று அனுதினமும் ஏங்கத் தொடங்கினாள். பலவாறாகச் சிந்தித்து பின்னர் ஒரு முடிவுக்கு வந்தாள்.

தனது மாமன் மகனான முகிலன் படிக்கும் அதே பள்ளியில்தான் ஐங்கரனும் படிக்கிறான் என்பது அவள் முன்பே அறிந்த விஷயம்தான். இம்முறைக் கொஞ்சம் துணிவை வரவழைத்துக் கொண்டு முகிலனிடமே ஐங்கரனைப் பற்றி விசாரிக்கத் துணிவுக் கொண்டாள். ஒருநாள், முகிலன் பாட்டி வீட்டிற்கு வந்திருந்தான். தேவியின் வீட்டிலிருந்து அப்பொழுதுதான் திரும்பி வந்த கவிதா முகிலனைக் கண்டதும் உற்சாகம் கொண்டாள்.

“ஹாய் முகி! எப்போ வந்தே? ரொம்ப நாளாச்சி உன்னைப் பார்த்து,” என்று சொல்லியவாறு அவனது தோளை உறுமையுடன் தட்டினாள் கவிதா. தன்னைவிட இரண்டு வயது மூத்தவனாக இருந்த போதிலும் சிறு வயதிலிருந்து ஒன்றாக வளர்ந்து வந்த காரணத்தால் ஒருமையுடனே அவனை அழைக்க உரிமைப் பெற்றிருந்தாள் அவள்.

“ஹாய்… இப்பதான் வந்தேன். நீ எங்கப் போய் சுத்திட்டு வர்றே? தேவி வீட்லேர்ந்து வர்றியா?” என்றான் முகிலன்.

“ஆமா! ஏய், நானே உன்னைப் பார்க்கணும்’னுதான் நினைச்சிக்கிட்டு இருந்தேன். நல்ல வேளை நீயே வந்துட்டே. ஒங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.”

“என்ன, சொல்லு,” என்றான் முகிலன்.

“மொதல்ல இந்த விஷயத்தை நீ யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன்’னு சத்தியம் பண்ணு. அப்புறமாதான் சொல்லுவேன்.”

“சரி, சத்தியமா சார்கிட்டேயும் சொல்ல மாட்டேன். சொல்லு, என்ன விஷயம்?”

“உனக்கு உன்னோட ஸ்கூல்’ல படிக்கிற ஐங்கரனைத் தெரியுமா?”

முகிலன் அவளை ஏற இறங்கப் பார்த்தான். “ம்ம்…தெரியும். ஏன்?”

“ஆள் எப்படி? ஒ.கே’வா?” அன்று ஆர்வத்துடன் கேட்டாள் கவிதா. முகிலன் சந்தேகக் கண்களை அவள் மீது நாட்டினான்.

“என்னப் பார்க்கிறே? அன்னைக்குக் கோவில்’ல பார்த்தேன். உன்னோட ஸ்கூல்’னு கேள்விப் பட்டேன். அதான் உனக்குத் தெரியுமான்னு கேட்டேன்.”

“என்ன? அவன் உனக்கு ‘லைன்’ போடுறானா?”

“அப்படிப் போட்டாலும் பராவாயில்ல,” என்று முனுமுனுத்தாள் கவிதா.

“என்ன சொன்ன?” என்று தன் காதில் சரியாகத்தான் அவள் முனகியது விழுந்ததா என்று காதுகளையே நம்ப மாட்டாமல் கேட்டான் முகிலன்.

“ஒன்னுமில்ல… நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும். முடியுமா?”

“ஹ்ம்ம்ம்…சொல்லு. செய்யறேன்,” என்றான் முகிலன். அவளிடம் முடியாது என்று கூற முடியுமா என்ன? சின்ன வயதிலிருந்தே அவளை நன்கு அறிந்து வைத்திருப்பவன் தானே.

ஆனால், கவிதா விசயத்தைக் கூறிய மறு நிமிடமே முகிலனின் முகம் மாறியது. “அடப்பாவி…!” என்று தன்னையும் மீறி கூறிவிட்டான்.

தொடரும்…

தேடல்…


பிறக்கும் போது
அழ ஆரம்பித்தேன்
இன்னும் தொடர்கிறது
இது தொடர்கதையா
அல்லது புரியாத புதிரா
எனக்கே தெரியவில்லை!

அன்று அழுதபோது
பாலூட்டி ஆதரித்தார்கள்
இன்று அழும் போது
எட்டி உதைக்கிறார்கள்
அன்று அழுதேன் பசிக்காக
இன்று அழுகிறேன் அன்புக்காக!

அன்பு செலுத்த யாருமில்லை
பாசமூட்ட எவரும் இல்லை
ஆறுதல் சொல்ல ஒருவருமில்லை
கண்களில் வழிந்தோடும்
கண்ணீரைத் துடைக்கும்
விரல்கள் இல்லை!

இன்னமும் ஏங்குகிறேன்
அன்பு கிடைக்காதா என்று
உலகெங்கும் அலைகிறேன்
உண்மை நேசத்தைத் தேடி
தேடல் தொடர்கிறது
தேடிய பொருள்தான்கிடைக்கவில்லை!

செவ்வாய், 3 பிப்ரவரி, 2009

எங்கே செல்லும்…? (9)


வழக்கம் போல கவிதா தன் தோழிகளுடன் உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்தாள். அப்போது அவ்விடம் முதல் நாளன்று சமாதானம் பேச வந்தவன் வந்தான். சிறிது தூரம் தள்ளி அமர்ந்து கவிதாவையே பார்த்துக்கொண்டிருந்தான். அவனைக் கவிதாவும் கவனிக்கத் தவறவில்லை. இருப்பினும் அந்த வாலிபன் கவிதாவைப் பார்த்துச் சிரிக்கவோ பேசவோ முயலவில்லை.

கவிதாவும் அவ்வப்போது அவனைக் கடைக்கண்ணால் கவனிக்கவே செய்தாள். அவன் தன்னைப் பார்த்துச் சிரிப்பான் என்று பெரிதும் எதிர்ப்பார்த்தாள். எதிர்ப்பார்த்த அவள் தனது உணர்ச்சிகளை முகத்தில் காட்டாமல் மறைத்தாள்.

இறுதிநாள் போட்டியும் முடிந்தது. அனைவரும் வேண்டியவர்களிடம் விடைப்பெற்றுக்கொண்டு வீட்டிற்குக் கிளம்பினர். கவிதாவும் அவ்வாலிபனும் கண்ணாலேயே விடைப்பெற்றுக் கொண்டனர். திடலை விட்டு வெளியே செல்லும் போது அவ்வாலிபன் கவிதாவை நோக்கிக் கையாட்டி புன்முறுவல் செய்தான்.

கவிதாவிற்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. நிஜமாகவே அவன்தான் கையசைத்துப் புன்னகைத்தானா? இல்லை அது தனது மனப்பிராந்தியா என்று சந்தேகித்தாள். இருந்தும் என்ன செய்வது? அவன் பெயர் கூட அவளுக்குத் தெரியாதே? ஒரு வார்த்தைக் கூட அவனிடம் பேசமுடியவில்லையே?

பெயர் தெரியாத அவ்வாலிபன் கவிதாவின் எண்ணங்களில் அடிக்கடி சஞ்சரித்தான். அவனை மீண்டும் ஒருமுறைப் பார்ப்போமா என்று அவள் பெரிதும் ஏங்கினாள். வாரங்கள் உருண்டோடின. கவிதா வழக்கம் போல் தனது அலுவல்களைக் கவனிக்கத் தொடங்கினாள்.

ஏனோ இப்போதெல்லாம் அவள் அடிக்கடி கணினி மையம் செல்வது கிடையாது. எப்போதாவது ஒருநாள் தனது மின்னஞ்சல்களைப் பார்க்கச் செல்வாள். அப்போதெல்லாம் அவளது சாட்டிங் நண்பன் நவனீதனிடமிருந்து அவளுக்குக் மின்கடிதம் வந்திருக்கும். அவளும் பதில் எழுதுவாள். ஆனால் முன்பிருந்த உற்சாகம் இப்போது அவளிடம் இல்லை.

சித்திரைப் புத்தாண்டு வந்தது. கவிதா காலையிலேயே தனது சொந்த பந்தங்களுடன் கோவிலுக்குச் சென்றிருந்தாள். அவளுடைய தோழி தேவியும் குடும்பத்தாருடன் அவ்விடம் வந்திருந்தாள். காலைப் பூசைக்குப் பிறகு கவிதாவும் தேவியும் கோவில் படிக்கட்டுகளில் அமர்ந்துப் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கே தேவியின் உறவினர் பெண்ணொருத்தி அவ்விடம் வந்தாள். அவள் பெயர் சாமினி. அவள் அவர்களிருவரிடத்தும் தனக்குத் தெரிந்த நண்பர் இருவரை அறிமுகம் செய்து வைப்பதாகக் கூறி அழைத்துச் சென்றாள். அவள் கூப்பிட்ட உடனேயே தேவி பாய்ந்தெழுந்து அவளைத் தொடர ஆரம்பித்துவிட்டாள். வேறு வழியில்லாமல் கவிதாவும் அவர்கள் இருவரையும் தொடர்ந்துச் சென்றாள்.

தனது வாழ்நாளில் அன்றுதான் முதன்முதலாகக் கவிதா பாவாடைத் தாவணி அணிந்திருந்தாள். அதனால் அவளையும் அறியாமல் ஆண்களைக் கடக்கும் போது அவளை வெட்கம் பிடுங்கித் தின்றது. தரையை நோக்கியவாறு தனது தோழியைத் தொடந்துச் சென்ற கவிதா அவர்களிருவரும் ஓரிடத்தில் நின்ற பிறகே தலை தூக்கிப் பார்த்தாள்.

கவிதாவின் முன்பு இரு ஆடவர்கள் நின்றிருந்தனர். அவர்களில் ஒருவன் சாமினியிடம் பேசிக்கொண்டிருக்க மற்றொருவன் கவிதாவையே பார்த்துக் கொண்டிருந்தான். தலை நிமிந்து அவர்களைப் பார்த்த கவிதா அதிர்ச்சியடைந்தாள். ஆனந்தம், குழப்பம், ஆச்சர்யம் அனைத்தும் அவளை ஒருசேர ஆக்கிரமித்து அவளை நிலைக்கொள்ளாது செய்தன.

“தேவி, கவிதா, இதுதான் வாசு. இது ஐங்கரன். வாசு, இதுதான் என்னோட சொந்தக்காரத் தங்கச்சி தேவி. இது தேவியோட கூட்டாளி கவிதா,” என்று அறிமுகப்படுத்தி வைத்தாள். அவர்கள் “ஹாய், ஹலோ!” சொல்லிக் கைக்குலுக்கிக் கொண்டனர். ஐங்கரன் கவிதாவுடன் கைக்குலுக்க கையை நீட்டினான்.

“வணக்கம்,” என்றவாறு கவிதா தனது இருகரங்களையும் குவித்தாள். முகத்தில் அசடு வழிய நீட்டிய கையினை இழுத்துக்கொண்டான் ஐங்கரன்.

“என்னலா? மானம் போச்சா?” என்று சபையில் மானத்தை வாங்கினாள் சாமினி.

“அதெல்லாம் ஒன்னுமில்லை. ரொம்பெ பண்பாடா இருக்காங்க. எனக்கு ரொம்பெ பிடிச்சிருக்கு,” என்று சமாளித்தான் ஐங்கரன். அனைவரும் சிரித்துப் பேச ஆரம்பித்தனர். கவிதா மட்டும் மெளனமானாள்.

சிறிது நேரத்திற்குப் பிறகு தேவியின் காதுக்கருகில் வந்து, “தேவி, என் சித்தப்பா இங்கதான் இருக்காரு. என்னோட வீட்டைப் பத்திதான் உனக்குத் தெரியுமே? நான் இவங்கக்கூட பேசிக்கிட்டு இருக்கிறத பார்த்தா அவ்ளோதான். நான் கிளம்பறேன். அப்புறமா பார்ப்போம்,” என்று கிசுகிசுத்துச் சென்றாள்.

ஏதும் சொல்லாமல் கவிதா திடுதிப்பென கிளம்பிச் செல்வதையே ஐங்கரன் பார்த்துக் கொண்டிருந்தான். “ஏன் கிளம்பிட்டாங்க?” என்று வாசு சாமினியைக் கேட்டான். சாமினி தேவியைப் பார்த்தாள்.

“கவிதாவோட பாட்டி தேடுவாங்களாம். சொல்லிக்காமல் வந்திருச்சி. அதான் போவுது,” என்று சமாளித்தாள் தேவி.


தொடரும்…