வியாழன், 12 பிப்ரவரி, 2009

எங்கே செல்லும்…? (12)



கவிதா காத்திருந்தாள். அதோ, ஐங்கரன் வந்துவிட்டான். அவன் பெயரைக் கண்ட உடனே கவிதாவின் விரல்கள் அச்சுப்பலகையில் விளையாடத் தொடங்கின.

கவிதா: ஹாய்! நீங்கள் ஐங்கரன் தானே?

ஹரன்: ஹாய், ஆமாம் கவிதா! எப்படி இருக்கிங்க?

கவிதா: நலம். நீங்க எப்படி இருக்கீங்க?

ஹரன்: நல்லா இருக்கேன். சாரி, என்னால ரொம்பெ நேரம் சாட் பண்ண முடியாது. கொஞ்சம் வேலை இருக்கு.

கவிதா: அப்படியா? எவ்ளோ நேரம் சாட் பண்ணுவீங்க?

ஹரன்: நான் இப்ப கிளம்பியாகணும். நீங்க காத்திருப்பீங்கன்னுதான் வந்தேன். உங்கள நான் மீட் பண்ண முடியுமா?

கவிதா: எப்போ? எப்படி?

ஹரன்: இன்னைக்குக் கோவிலுக்கு வருவீங்களா?

கவிதா: எந்தக் கோவிலுக்கு?

ஹரன்: அன்னைக்கு மீட் பண்ணினோமே அந்தக் கோவிலுக்குத்தான்.

கவிதா: எத்தனை மணிக்கு?

ஹரன்: ஆறு மணிக்கு வர்றீங்களா?

கவிதா: முயற்சி பண்றேன். உறுதியா சொல்ல முடியாது.

ஹரன்: சரி, நான் இப்ப கிளம்பனும். உங்கக்கிட்ட சாட் பண்ணினதில் ரொம்பெ மகிழ்ச்சி. சாயந்தரம் கோவில்ல பார்ப்போம்.

கவிதா: சரி. பிறகு பார்ப்போம்.

ஹரன்: பாய்!

கவிதா: பாய்!

சீக்கிரம் சென்று விட்டானே என்ற கவலை ஒரு பக்கம், இன்று கோவிலில் அவனைக் காணலாம் என்ற மகிழ்ச்சி ஒரு பக்கம்! கவிதா இனம் புரியாத உணர்வால் அல்லாடினாள். சரி, என்னச் சொல்லிக் கோவிலுக்குச் செல்வது? இவ்வளவு காலமாக விசேஷ காலங்களில் மட்டுமே அவள் கோவிலுக்குச் செல்வது வழக்கம். இன்று வெள்ளிக்கிழமை…பாட்டியிடம் என்ன சொல்லலாம் என்று சிந்தித்துக்கொண்டே வீட்டிற்குச் சென்றாள். கண்டிப்பாக பாட்டி தன்னைத் தனியே அனுப்ப மாட்டார். யாரைத் துணைக்குக் கூப்பிடலாம்?

சட்டென்று அவளுக்கு ஞாபகம் வந்தது தேவியே. ஆனால், தேவி சோம்பேறியாச்சே? கொஞ்ச நேரம் வெளியே சென்று வர அழைத்தால் கூட தலை வலி, கால் வலி என்று வரமாட்டாள். வேறு யாரைக் கூப்பிடுவது என்று சிந்தனையில் ஆழ்ந்தாள். வீட்டிற்குச் சென்றவள் மதிய உணவைக் கூட உட்கொள்ளவில்லை. மணி ஐந்தாகிவிட்டது. வேறு வழியே இல்லை!

தேவியின் வீட்டுற்குச் சென்றாள். தேவியோ நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். தேவியின் தாயாரிடம் சிறிது உரையாடிவிட்டு வீடு வந்தாள். மணி 5.30 ஆகிவிட்டது. இதற்கு மேல் தான் மட்டும் கிளம்பிப் போவது முடியாதக் காரியம் என்று கோவிலுக்குச் செல்லும் எண்ணத்தைக் கைவிட்டாள்.

அவள் மனதில் சோர்வு குடிக்கொண்டது. அவள் மீது அவளுக்கே வெறுப்பு உண்டானது. ‘சே, பாவம் அவர். எனக்காகக் காத்திருப்பார். என்னால்தான் போக முடியவில்லை. தேவிக்கு என்னாயிற்று? என்றும் இல்லாமல் இன்று மட்டும் அதிக நேரம் தூங்கி வழிகிறாளே? தனியே போகவும் பயமாக இருக்க்கிறது. துணைக்கு வரவும் யாரும் இல்லை. என்னதான் செய்வது?’ என்று பலவாறாக எண்ணினாள்.

அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது. நேரே தனது அறைக்குச் சென்று படுத்துவிட்டாள். அவளையறியாமல் உறங்கியும் விட்டாள். மாலை நேரமாதலால் அவளைப் பாட்டி நீண்ட நேரம் தூங்கவிடவில்லை. சிறிது கண்ணயர்ந்த உடனேயே பாட்டியின் குரல் அவளை எழுப்பியது.

“ஆ…வரேன்!” என்றவாறு கட்டிலில் சோம்பல் முறித்தாள்.

“கவி!” என்ற அழைப்பு மீண்டும் ஒலித்தது. இந்த முறை பாட்டியின் குரலல்ல. அந்தக் குரலைக் கேட்டவுடன் கவிதாவின் சோர்வும் தூக்கமும் எங்கோ பறந்தோடி விட்டன.

“கவி, தூங்குறியா?” என்று மீண்டும் அந்தக் குரல் ஒலித்தது. கதவைத் தட்டும் சத்தமும் கேட்டது.

“இதோ வந்துட்டேன்,” என்று கவிதா கட்டிலிலிருந்துப் பாய்ந்தோடிச் சென்று கதவைத் திறந்தாள். அங்கே…

தொடரும்…

5 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

நல்லா போகுதே சாட்டிங்க்

நான் சொன்னது…

நன்று வாழ்த்துகள் பவன்

புதியவன் சொன்னது…

கதையின் இந்தப் பகுதி ரொம்ப சுருக்கமா முடிஞ்ச மாதிரி இருக்கு...தொடருங்கள் காத்திருக்கிறோம்...

Divyapriya சொன்னது…

இந்த பகுதி சின்னதா இருக்கு...சீக்கரம் அடுத்த பகுதி போடுங்க :)

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,

ஜமாலின் கருத்துக்கு நன்று. சாட்டிங் தொடரும்.

நானின் வாழ்த்துக்கு நன்றி.

புதியவனையும் திவ்யப்பிரியாவையும் காக்க வைத்தமைக்கு வருந்துகிறேன். அடுத்தப் பகுதி வந்துவிட்டது. படித்துப் பார்த்துக் கருத்துச் சொல்லவும். நன்றி.