ஞாயிறு, 31 ஜனவரி, 2010

தைப்பூசம்!



தைப்பூச திருநாளில் காவடியாட்டம்
நம் இந்திய இளைஞர்களுக்கு குஷியாட்டம்
முருகனை தரிசிக்க பக்தர் செல்வர்
இளம்பெண்களை தரிசிக்க இளைஞர் செல்வர்
பக்தர் பக்தியோடு அலகு குத்திக்கொள்வர்
இவர்கள் முக்தியோடு கடுக்கண் மாட்டிக்கொள்வர்
பக்தர்கள் அருள் வந்து ஆடும் போது
இவர்கள் குஷிவந்து கும்மாளம் போடுகின்றனர்!

சனி, 30 ஜனவரி, 2010

உன் நினைவு!


உண்ணும் போது உன் நினைவு
உறங்கும் போது உன் நினைவு
படிக்கும் போது உன் நினைவு
பாடும் போது உன் நினைவு!

குளிக்கும் போது உன் நினைவு
கனவு காணும் போது உன் நினைவு
ஒவ்வொரு நிமிடமும் உன் நினைவு
எனக்கு மறந்துப் போனதே என் நினைவு!

வெள்ளி, 29 ஜனவரி, 2010

உன்னை மட்டும்!


உன்னருகில்
அமர்ந்திருக்கையில்
ஏதோ ஒரு சுகம்
உன் தோளில்
தலை சாய்த்திருக்கையில்
நெஞ்சுக்குள் நிம்மதி
என் விரல்களை
உன் விரலோடு
நீ அழுத்திப் பிடிக்கையில்
ஒருவித நம்பிக்கை!

இதற்குமுன்
எனக்கிது நிகழ்ந்ததில்லை
என்னுடன் இவ்வளவு
நெருக்கமாக இதுவரை
யாரும் பழகியதில்லை
பழகுவதற்கு நான்
அனுமதித்ததும் இல்லை
நீ மட்டும் எப்படி?

நாம் ஒருநாள் கூட
முழுமையாகப் பழகவில்லை
அப்படி இருக்கையில்
நமக்குள் எப்படி
இவ்வளவு நெருக்கம்?
நீ சிறிது நேரம்
என்னை விட்டு
விலகிச் சென்றால் கூட
என் மனம் சலனப்படுகிறது!

உன்னை நிரந்தரமாக
பிரிந்து விடுவேனோ என
நெஞ்சம் அஞ்சுகிறது
நானா இப்படி மாறிவிட்டேன்
எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது!

உன்னிடம் அப்படி
என்ன சக்தி உண்டு
எனது வாழ்க்கையில்
எத்தனையோ பேர்
வந்தார்கள் சென்றார்கள்
அவர்களுக்கெல்லாம்
இடம் தராத என் இதயம்
எப்படி உன்னை மட்டும்
அனுமதித்தது?

வியாழன், 28 ஜனவரி, 2010

என்ன பயன்?


நான் இறந்தால்தான்
என்னுடைய காதல்
உனக்குப் புரியுமென்றால்
அதற்கும் நான் தயார்
இறந்தும் என்ன பயன்?
உன்னுடன் சேர்ந்து
வாழ முடியாதே!

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

பொங்கல்


பொங்கும் பொங்கலே
எதற்கு வந்தாய்?
ஆழ் மனதில் உறங்கும்
ஆழமான இரணங்கள்
உறக்கம் கலைத்து விழித்தெழுந்து
நெஞ்சைப் பிழிந்து வலிக்க வைத்து
ஆறாத காயத்தை உண்டாக்கி
சோகத்தைப் பெருக வைத்து
என் விழி இரண்டிலும்
கண்ணீரைப் பொங்க வைக்கவா?


பொங்கலோ பொங்கலாம்…
பொங்கட்டும் பொங்கட்டும்
கண்ணீர் பொங்கட்டும்
வழியட்டும் வழியட்டும்
பாலைப் போல் என்னுயிர் வழியட்டும்!
நயவஞ்சகர்கள் மகிழ்கின்றார்கள்
கைத்தட்டி ஆர்ப்பரிக்கின்றார்கள்
பொங்கி வழிவதைக் கண்டு
பொங்கலை அல்ல…
என் கண்ணீரை!

சனி, 9 ஜனவரி, 2010

வேண்டாம் மனமே…


என்னவாயிற்று உனக்கு?
நேற்று வரை நன்றாக இருந்தாயே
இன்றென்ன வந்தது மனமே?
ஏன் தடுமாறுகின்றாய்?
என்ன குழப்பம் உன்னுள்ளே?
உறுதியை இழக்கின்றாயோ?
வேண்டாம் தளராதே
நிலையாக இரு!

நீ என்ன குரங்கா
நொடிக்கொரு தரம் மாறுகின்றாயே
நேற்றுவரை வேறொருவனை நினைத்தாய்
இன்று எப்படி இன்னொருவன்?
சே! நினைத்தாலே வெட்கம்
உன்னால் எப்படி முடிகின்றது?
நீ தடம் மாறுவது மட்டுமின்றி
என்னையும் இழுக்கின்றாயே!

என்ன பாவம் செய்தேன்
உனக்கு என்ன குறை வைத்தேன்?
நீ சொல்வதெல்லாம் கேட்டேனே
உன் வாக்கை வேதவாக்காகக் கொண்டேன்
இன்று நீயே என்னை இம்சிக்கலாமா?
உனக்கு என்னதான் வேண்டும்?
ஏன் என்னை அணுஅணுவாய்க் கொல்கிறாய்?
சொல் மனமே சொல்!

உன் போக்கில் தானே
என் வாழ்க்கையை அமைத்தேன்
மீண்டும் மீண்டும் சித்ரவதை ஏன்?
எவ்வளவு சீக்கிரம் மாறுகின்றாய்
நம்பமுடியவில்லை, நீ கூடவா?!
எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன்
எனக்கே துரோகம் செய்கின்றாயே
இது தகுமா சொல் மனமே!

யாருமறியாமல் கோட்டை கட்டினாய்
இரகசியமாய் என்னை வாழவைத்தாய்
திடீரென்று கட்டிய கோட்டை இடிந்ததே
இடிந்த கோட்டையை சரிப்படுத்தாமல்
இன்னொரு கோட்டை கட்டலாமோ?
அரசியலை விட சாக்கடையாய் இருக்கின்றாயே
இனி உன்னை நம்பி எப்படி வாழ்வேன்
எப்படி வாழ்வேன் மனமே?

கழுதை கெட்டால் குட்டிச் சுவர்
நீ கெட்டால் என் நிலமை என்ன?
மூளை சொல்வதையும் சற்று கேள்
உன் பாட்டுக்கு ஆடிக் கொண்டிருக்காதே
கட்டுப்படுத்து, உன்னை நீயே கட்டுப்படுத்து
பட்ட காயம் இன்னும் போதவில்லையா
காதல் வலி அதற்குள் மறந்துவிட்டதா?
வேண்டாம் மனமே வேண்டாம்!

அவனை நம்பாதே
மீண்டும் நம்பி ஏமாறாதே
நான் சொல்வதைச் சற்று கேள்
ஞாபகம் இருக்கிறதா உன் காதலனை
அவனையே நினைத்து உருகினாயே
இன்று என்னவாயிற்று?
நினைத்துப் பார் மனமே
சிந்தித்துப் பார்!

என் மனமே நீ பேதை
உன்னை நினையாதவனை நினைக்கின்றாயே
நீ படும் துன்பம் அவன் அறியமாட்டான்
அறிந்தாலும் இரங்க மாட்டான்
யாரை நினைக்கின்றாய் நீ?
எனக்குக் கொஞ்சம் தெளிவு படுத்திவிடு
மீண்டும் குழப்பத்தில் ஆழ்த்தாதே
எனக்குத் தெளியவில்லை!

திருந்தா மனமே
உடைந்த கண்ணாடிப் பூக்கள் போல்
உன்னைச் சிதைத்துச் சென்றவனை நினைக்கின்றாயா?
அல்லது, புதிதாய் கிடைத்த நட்பை நீ
காதாலாக்க முனைகின்றாயா?
அறிவிழந்த மனமே கேடு வந்து விட்டதா
புதைக் குழியில் விழுவதற்கு ஆசை வந்துவிட்டதா?
வேண்டாம் மனமே வேண்டாம்!

இரக்கம் காட்டு
என் மேல் சிறிதாவது இரக்கம் காட்டு
உன் வழியில் என்னை இழுக்காதே
என்னை முழுமையாக ஆட்கொள்ளாதே
என்னையும் சற்று வாழவிடு
நரக வேதனைத் தருகின்றாயே
காதல் இல்லாமல் வாழ முடியாதா
பாழாய் போன மனமே!

ஏமாறிய மனமே
எத்தனை முறை ஏமாற்றினாய் என்னை
மறுபடியும் ஏமாற மாட்டேன் நான்
உன் முயற்சியைக் கைவிடு!
எதிர்ப்பார்க்காதே; யாரையும் எதிர்ப்பார்க்காதே
எதனையும் யாரிடத்தும் எதிர்ப்பார்க்காதே
எத்தனை முறை ஏமாந்தும் புத்தியில்லை
அதனைத் தாங்க எனக்கு சக்தியில்லை!

வேண்டாம் விட்டுவிடு
நமது நன்மைக்காக விட்டுவிடு
உன் ஆசைகளைச் சற்று கட்டுப்படுத்து
என் இயலாமையை அறிந்துக் கொள்
எனக்குள் தானே நீ வாழ்கின்றாய்
கொஞ்சமாவது இரக்கம் காட்டு
என்னை அழவைக்காதே
தயது செய்து!

புதன், 6 ஜனவரி, 2010

ஆயிரம் கவிதைகள்


ஆயிரம் கவிதைகள்
உனக்காகத் தீட்டினேன்
அனுப்பியவை சில
அனுப்பாதவைப் பல!

உணர்ச்சிகள் அனைத்திற்கும்
உயிர் கொடுக்கத் துடிக்கிறேன்
அனைத்தையும் அறிந்துக்கொண்டு
அறியாதவன் போல் நடிக்கலாமா?

ஆசைகள் நீருற்றாய்
அடங்காமல் பெருங்கெடுக்கின்றன
அன்புக்குரியவன் நீயோ…
அக்கறையில் இருக்கின்றாய்!

இதயத்தில் துடிதுடிக்கும்
இருதயமும் நீதானோ
என்றுமே உடன் இருக்கும்
என்னுயிரும் நீதானோ!