புதன், 12 மார்ச், 2014

சுவர்க்கம் வேண்டாம்!


மாலை வேளை,
அழகிய நடைப்பாதை
நீண்ட நடைப்பயணம்
ஆழ்ந்த சிந்தனை…
தீடீரென உணர்கிறேன்!

நான் சுவர்க்கத்தில் இருக்கிறேன்
கவலையற்று இருக்கிறேன்
அனைத்தையும் மறந்திருக்கிறேன்
’என்னை’ இழந்திருக்கிறேன்!

மனிதர்கள் அதிகமில்லை
பேய்களின் கூச்சலில்லை
தெய்வத்தின் தோன்றல் இல்லை
சுற்றத்தித்தில் இறைச்சல் இல்லை!

இங்கே அதிசயம் நிகழ்கிறது
சூரியனும் சந்திரனும் ஒருங்கே காண்கிறேன்
உடலில் வெளியேறிய வியர்வைத் துளிகள்
நொடிகளில் காய்ந்து மறைகின்றன!

சாலை, வாகனங்கள், மரங்கள்
ஓவியம் போன்ற வீடுகள்…
எனது உலகம் போலவே இருக்கிறது
ஆனால், இது என்னுலகம் இல்லை…

எனது இதயத்தின் துடிப்பை கேட்க இயலவில்லை
நடையைத் துறந்து ஓடுகிறேன்
என்னிதயம் இன்னமும் மெதுவாகவே துடிக்கிறது
சுவர்க்கத்தில் இதயத்தின் படபடப்பு குறைந்துவிடுமோ?

இங்கே காற்றின் இறைச்சலும்
இலைகளின் சலசலப்பும் மட்டுமே கேட்கின்றன
மனிதர்களின் பேச்சுக்குரல் அதிசயமாக ஒலிக்கிறது
காணும் இடமெல்லாம் அற்புதம் நிறைந்திருக்கிறது!

இது தேவதைகளின் வசிப்பிடம்
இங்கே துன்பம் இல்லை, கவலை இல்லை
மனிதர்கள் தொல்லை இல்லை, உறவுகள் இல்லை
இங்கே நண்பனும் இல்லை; எதிரியும் இல்லை!

இது சுவர்க்கம்!
சுதந்திரமான, அமைதியான சுவர்க்கம்!

ஆனால்…
சொர்க்கம் இறந்தவர்களுக்குத்தானே?

நான் வாழ வேண்டும்
எனக்கு என்னுலகம் வேண்டும்
மனிதர்களின் பேச்சுக்குரல்கள் சூழ்ந்த உலகம்
நண்பர்களும் எதிரிகளும் நிறைந்த உலகம்
என் இதயத்தைத் துடிப்போடு வைத்திருக்கும் உலகம்!

கண்களில் நீரை வரவழைக்கும் உலகம்
என் இதயத்தைக் குத்திக்கிழிக்கும் உலகம்
என்னை மகிழ்ச்சியில் குளிப்பாட்டும் உலகம்
என்னை உயிரோடு வைத்திருக்கும் உலகம்!

ஆம்,
எனக்குச் சுவர்க்கம் வேண்டாம்!
என் உலகம் வேண்டும்!