வியாழன், 19 டிசம்பர், 2013

நண்பேன்’டா!

நினைத்துப்பார்க்கவில்லை
நிம்மதியாய் சென்றுவிட்டாயே
எங்கள் நிம்மதியைக் கொன்றுவிட்டாயே!

‘நான் செத்தால் நீ வரமாட்டியா?’
நாம் வழக்கமாக சொல்லும் வாசகம்தான்
நீ செத்தாய், நான் வந்தேன்
நான் செத்தால், யார் வருவார்?
நண்பன் நீ சென்றுவிட்டாயே?

என் பிறந்தநாள்
நீ இறுதியாக என்னை அழைத்திருந்தாய்
உன் அழைப்பினை நான் தவறவிட்டேன்
இன்று உன்னையும் இழந்துவிட்டேன்

ஏழு வயது தொடங்கிய நட்பு
ஏமாற்றத்தில் விட்டுச் சென்றதே
அமைதியின் சின்னம் நீ
ஆசிரியர்களின் செல்லம் நீ
அடிக்கடி மயங்கிவிழுவாய்
நாங்கள் பதறிதுடிப்போம்
நன்றாகப் படித்தாய்
நட்புடன் பழகினார்
உதவி என்று கேட்டுவிட்டால்
மறுக்காமல் உதவினாய்
இறுதியில், இன்னொரு உயிருக்கு உதவச் சென்று
உன்னுயிரைத் தந்துவிட்டாயே!

யாருக்கு வரும் இந்த மனம்?
யாருக்குத் தெரியும் உன் குணம்?

என் மகிழுந்து உனக்கு மிகவும் பிடிக்கும்
நான் ஊருக்கு வரும் போதெல்லாம்
உன் காரை நிறுத்திவிட்டு என் காரை ஓட்டச் சொல்லுவேன்
இரசித்து ஓட்டுவாய்… ‘நன்றாக இருக்கிறது’ என்பாய்
நீ போனதிலிருந்து அதனைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கவில்லை!

நான் கேட்காமலேயே பல உதவிகள் செய்தவன் நீ
என் கார் ஊரின் விரைவுச்சாலை சாவடிப் பக்கம் வந்தாலே
உன் எண்ணிலிருந்து அழைப்பு வந்துவிடும்
எப்படித்தான் கண்டுப்பிடிக்கிறாயோ தெரியவில்லை!

சொந்த மண்ணுக்கு வரும்போதெல்லாம்
உன்னை சந்திக்க மறந்ததில்லை
எவ்வளவு வேலைகள் இருந்தபோதும்
ஒரு போதும் நீ சந்திக்க மறுத்ததில்லை!

’நீ வரும் போதுதான் எனக்கு நிறைய வேலை வருகின்றன
வேலையை விட்டுவிடு, என் காரியதரிசி ஆகிவிடு’ என்பாய்
வேலைகளைச் சாமர்த்தியமாக பிறருக்குக் கொடுத்துவிடுவாய்
சந்தோஷமாய் இருக்கும்! நட்பிற்கு நீ கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பார்க்கையில்…
சங்கடமாய் இருக்கும்! உன் வேலைகளை கெடுக்கிறோமோ என்ற குற்ற உணர்ச்சியில்…

உன்னை மறக்கவே முடியவில்லை
நீ இல்லை என்பதை ஏற்க முடியவில்லை
செல்லும் இடமெல்லாம் உன் நினைவுகள்
நீ பேசிய வார்த்தைகள், நமது சந்திப்புகள்
எல்லாமே என்னை நோகச் செய்கின்றன!

என் வார்த்தைக்கு மறு வார்த்தை நீ பேசியதில்லை
சொல்வதெல்லாம் கேட்பாய்
அறிவுரைகளை அமைதியாக ஏற்றுக்கொள்வாய்
நீ புகைப்பிடிப்பாய், இதுவரையும் என் முன் புகைத்ததில்லை
மது அருந்துவாய், அதன் வாடை கூட பெண்கள் மேல் பட்டதில்லை
யாருக்கும் கிடைக்காத அரிய பொக்கிஷம் நீ
ஒரு நல்ல நண்பனின் இலக்கணம் நீ!

இறுதியாக நாம் சந்தித்தது நினைவிருக்கிறதா?
எனக்குச் சரியான காய்ச்சல், மருந்தும் சாப்பிடவில்லை
விடியற்காலை 2 மணிக்கு நீ அழைத்தாய்
‘நீ மருந்து சாப்பிடமாட்டாய், பரவாயில்லை.
கீழிறங்கி வா, சாப்பிட போவோம்’ என்றாய்
நான் இன்னும் சாப்பிடவில்லை என்று அறிந்து வைத்திருந்தாய்
காய்ச்சலுக்குக் கோழிச்சாறு நல்லது என்று யாரோ சொன்னார்கள்
கடைகடையாய்  ‘கோழிச்சாறு’ கிடைக்குமா என்று தேடினாய்
வேண்டாம் என்று மறுத்தபோதும், நீ விடவில்லை!
இறுதியாய் கடைக்கு வந்து சாப்பிட்டோம்
நீ பரிதாபமாக என்னையே பார்த்துக்கொண்டிருந்தாய்!
உன் கண்ணில் இருந்த இரக்கம் வேறெங்கும் கண்டதில்லை!

’என் நண்பன் இருக்கிறான்’
என்ற காரணத்திற்காகத்தான் நான் ஊருக்கே வருவான்
இப்பொழுது யாருக்காக வருவது?
என் திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்தேன்
உன் அண்ணனிடம் கொடுத்தேன்
சிரிப்பு ஒரே கணத்தில் அழுகையாக மாறும் என்று ஒருபோது நினைத்ததில்லை!

இன்னமும் என்னை அழ வைக்கிறாய்!
என் கண்ணங்கள் கண்ணீரில் நனைய எழுதுகிறேன்
இது கவிதை அல்ல, கட்டுரையும் அல்ல
உனக்காக நான் எழுதும் மடல்!

உன் இறப்பு என்னை மிகவும் பாதித்துவிட்டது!
எத்தனை முறை அழுதுவிட்டேன் தெரியுமா?
இன்னமும் கண்ணீர் வற்றவில்லை
இப்படியொரு நண்பன் யாருக்கும் கிடைக்கமாட்டான்!

உன் இறுதி ஊர்வலம்!
உயிரற்ற உன் சடலத்தைப் பார்க்கவும் முடியவில்லை
தூங்குவது போல இருந்தாயடா!
கண்ணீர்விட்டு கதறியழுதோம்!
முடியவில்லை நண்பா! திரும்பி வந்துவிடு!
உலகத்தில் உயர்ந்தது காதல் என்றால்,
அவன் மீது காறி உமிழ்வேன்!
நல்ல நட்பினைப் போல் உயர்ந்த்து வேறெதுவுமில்லை!
காதல் என்னை அழ வைத்ததுண்டு…
ஒரு முறை அழுவேன், பின்னர் மறந்துவிடுவேன்
உன் நட்பு இன்னமும் என்னை அழவைக்கிறது!

உன்னைச் செல்லமாக ‘டோன்’ என்றழைப்போம்
ஊருக்கு நீ நிஜமான ‘டோன்’ தான்
எங்களுக்கு மட்டும் ‘சிரிப்பு டோன்’!
அவ்வளவு சிரிக்க வைத்தாய்!
வயிறு குலுங்க, கன்னம் வலிக்க சிரித்திருக்கிறோம்!
இப்பொழுது நெஞ்சம் எரிய அழுகிறோம்!

முடியவில்லை நண்பா
நண்பேன்’டா என்று அடிக்கடிச் சொல்லிக்கொள்வோமே
இப்பொழுது எங்கே சென்றுவிட்டாய்?

உன் நினைவுகளை எங்கெங்கும் சுமந்துச் செல்கிறேன்
கேரளா சென்றேன், மலையாளம் பேசினார்கள்
என் நண்பன் மலையாளி என்றேன்
என்னையும் அறியாமல் கண்கள் கலங்கின
அன்றிரவு முழுதும் அழுதேன்; கண்ணீர் நிற்கவில்லை!
இன்று அமெரிக்காவில் இருக்கிறேன்!
ஆயிரம் மைல்கள் கடந்து இருக்கிறேன் நண்பா
உன் நினைவுகள் மட்டும் அருகில் இருக்கின்றன!
இங்கும் அழுகிறேன்! இன்னமும் நெஞ்சம் வலிக்கிறது!
ஏனென்னை விட்டுச் சென்றாய்??!!

அடுத்தத் திங்களோடு
நீ மறைந்து ஓர் வருடமாகிறது!
நாட்கள்தான் ஓடியதே தவிர-உன்
நினைவுகள் இங்கேயே வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன!

உன்னைப் போல் நண்பன்
இனி எனக்குக் கிடைக்கமாட்டான்!
இறந்தும் வாழ்கிறாயடா –ஏனெனில்
நீ என் நண்பேன்’டா!