செவ்வாய், 17 பிப்ரவரி, 2009

எங்கே செல்லும்…? (13)


“இதோ வந்துட்டேன்,” என்று கவிதா கட்டிலிலிருந்துப் பாய்ந்தோடிச் சென்று கதவைத் திறந்தாள். அங்கே முகிலன் நின்றுக்கொண்டிருந்தான்.

“என்ன தூங்குறியா?” என்று பாதி தூக்கத்தில் எழுந்துவந்த கவிதாவைப் பார்த்துக் கேட்டான்.

“இல்ல, டான்ஸ் ஆடிக்கிட்டு இருந்தேன்,” என்று நக்கலாக பதிலளித்தாள் கவிதா.

“நக்கலு… ஹ்ம்ம், சரி, நீ கோவிலுக்குப் போறதா சொல்லியிருந்தியா. ஏன் போகல?” என்று கவிதாவைத் தவிர வேறு யாருக்கும் கேட்காத வண்ணம் மெதுவாகக் கேட்டான் முகிலன். கவிதா முகத்தில் ஆச்சர்யம் தோன்றிப் பின் கவலையாக மாறியது.

“அதான்…போகனும்’னு நினைச்சேன். யாருக்கூடப் போறதுன்னு தெரியல. பாட்டி தனியாப் போக விடமாட்டாங்கனுதான் உனக்கே தெரியுமே,” என்றாள் சோகமாக.

“சரி, ஐங்கரன் நம்ம தாமான் முன்னுக்கு உள்ள சீனக்கடையில வெயிட் பண்றான். உன்னைப் பார்க்கணுமாம்,” என்றான் சர்வசாதாரணமாக. கவிதா ஒரு கணம் திகைத்து நின்றாள்.

“ஏய், விளையாடுறியா? உண்மையாக் கடையில இருக்காங்களா?” என்று அவன் கூறுவதை நம்பாதது போல் கேட்டாள்.

“ஆமா! எனக்கு வேற வேலை வெட்டி இல்ல. அதான் உங்கூட ஓடிப்புடிச்சி விளையாடுறேன்! நான் என்னப் பொய்யா சொல்றேன்? உண்மையாதான். அவன் அங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கான். உன்கிட்டச் சொல்லச் சொன்னான். போய் பாரு போ!” என்றான் முகிலன்.

“என்னப் பேசுற நீ. பாட்டி வீட்ல இருக்காங்க. நான் எப்படிப் போய் பார்க்கிறது?”

“கடையில ஏதாவது வாங்கப் போறேன்னு சொல்லிட்டுப் போ. இப்ப நீ போகப் போறியா. இல்ல, நீ வரலை’னு நான் போய் சொல்லட்டுமா?”

“ஏய், லூசாடா நீ? மாமா, சித்தப்பா யாராவது பார்த்துட்டா என்ன செய்றது?”

“ஏய், உன்ன என்ன டேட்டிங் பண்ணவா சொன்னாங்க? உன்னைப் பார்க்கணும்’னு சொன்னான். நீ எப்போதும் போல கடைக்குப் போற மாதிரி போயிட்டு வா. அவன் பார்த்துட்டுப் போயிறுவான்.”

“அப்ப, என்கிட்ட பேசமாட்டாங்களா,” என்று ஏக்கத்துடன் கேட்டாள் கவிதா.

“ஆமா! அது மட்டும்தான் இப்பக் குறைச்சல். யாராவதுப் பார்த்துட்டா என்னப் பண்றது? ஏய், நீ போகப் போறியா இல்லையா? அவன் மொதல்லேர்ந்து அங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கான்,” என்று பொறுமையிழந்தான் முகிலன்.

கவிதாவிற்கு வேறு வழித் தெரியவில்லை. குழப்பத்துடன் கடைக்குக் கிளம்பிச் சென்றாள். அவள் இருதயம் படு வேகமாக அடித்துக்கொண்டிருந்தது. அவள் இருதயம் துடிக்கும் வேகம் அவள் காதுகளை அடைத்தது. அவள் வீட்டிற்கும் கடைக்கும் கொஞ்சம் தூரம்தான். அதோ பார்த்துவிட்டாள். பக்கத்துக் கடையில் ஐங்கரன்.
கவிதாவால் அவனை நேரடியாகப் பார்க்க முடியவில்லை. அவனைக் கண்ட மறுநிமிடமே தலையை நிலம் நோக்கித் தாழ்த்திக் கொண்டாள்.

அவளது கால்கள் தடுமாறின. அந்தச் சமயம் பார்த்து அவளுக்கு ஒரு சந்தேகம். ‘நாம் அழகாக நடக்கிறோமா? எப்படி நடப்பது?’ என்று. அவளால் மெதுவாக நடக்கவும் முடியவில்லை; வேகமாக ஓடவும் முடியவில்லை. ஒருவழியாகக் கடையை அடைந்தாள். ஐங்கரன் அரைக்கண்ணால் அவளைப் பார்ப்பதை உணர்ந்தாள்.

விடுவிடுவென்று அவனைக் கடந்துச் சென்றுக் கடைக்குள் புகுந்தாள். தான் வாங்க வேண்டியதை மின்னல் வேகத்தில் வாங்கினாள். அவளுக்கு வேர்த்துக் கொட்டியது. ஐங்கரனைப் பார்க்க வேண்டும் என்று அவள் மனம் துள்ளியது; வெட்கம் அவளைத் தடுத்தது. கடையை விட்டு வெளியாகும் போது லேசாகத் தலையைத் தூக்கி அவனை நோக்கி முறுவலித்தாள். ஐங்கரனின் முகம் சூரியனைக் கண்ட தாமரைப் போல மலர்ந்தது. ஒரு கணம்தான், ஒரே ஒரு கணம்தான் கவிதா ஐங்கரனைப் பார்த்தாள். மறுகணம் மீண்டும் தலையைத் தாழ்த்தி விடுவிடுவென்று வீடு நோக்கி நடந்தாள்.

அவளின் செயலை நினைக்க அவளுக்கே வியப்பாக இருந்தது. ஐங்கரனை மீண்டும் எப்போது காண்போம் என்று அவள் பல நாட்களாக ஏங்கிக்கிடந்தது உண்மையே. இப்போது கண் முன்னே அவன் இருந்தும் அவளால் அவனைக் கண் குளிரப் பார்க்க முடியவில்லை. கவிதா தன்னைத் தானே நொந்துக்கொண்டாள். இருந்தும் அவளுள் ஒரு கிளர்ச்சி உண்டாகவே செய்தது. சிறிது தூரம் சென்றப் பின், பட்டாம்பூச்சியாய் மகிழ்ச்சியுடன் வீடு நோக்கிப் பறந்தாள் கவிதா.

முகிலன் அவளுக்காக வாசலிலேயே காத்திருந்தான். அவனைக் கண்டதும் நடையைத் துரிதப்படுத்தினாள். அவளது முகத்தில் மகிழ்ச்சித் தாண்டவமாடியது அப்பட்டமாகத் தெரிந்தது. முகிலன் எதையோ நினைத்துச் சிரித்துக்கொண்டான்.

தொடரும்…

20 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

\\
“அப்ப, என்கிட்ட பேசமாட்டாங்களா,” என்று ஏக்கத்துடன் கேட்டாள் கவிதா.\\

அழகான ஏக்கம்.

நட்புடன் ஜமால் சொன்னது…

\\அவனைக் கண்ட மறுநிமிடமே தலையை நிலம் நோக்கித் தாழ்த்திக் கொண்டாள்.\\

தமிழ்ப்பெண்

நட்புடன் ஜமால் சொன்னது…

\\ங்கரனின் முகம் சூரியனைக் கண்ட தாமரைப் போல மலர்ந்தது\\

நல்ல வர்ணனனை

நட்புடன் ஜமால் சொன்னது…

\\முகிலன் எதையோ நினைத்துச் சிரித்துக்கொண்டான்.\\

ஆஹா - கிளம்பிட்டாங்கையா

கிளம்பிட்டாங்க

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம் ஜமால்,
உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

//ஆஹா - கிளம்பிட்டாங்கையா

கிளம்பிட்டாங்க//

நீங்க நினைக்கமாதிரி இல்லைங்க...

புதியவன் சொன்னது…

ஆஹா...கதையின் இந்தப் பகுதி வெகு சுவாரசியம் வெட்கம், ஏக்கம், எதிர் பார்ப்பு அனைத்தும் மிக அழகாக வந்திருக்கிறது...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

நட்புடன் ஜமால் சொன்னது…

\\நீங்க நினைக்கமாதிரி இல்லைங்க...\\

ஓஹ்! அது இல்லையா ...

சரி சரி

(நான் என்ன நினைக்கிறேன் புரிஞ்சிடிச்சே)

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம் புதியவன்,

//ஆஹா...கதையின் இந்தப் பகுதி வெகு சுவாரசியம் வெட்கம், ஏக்கம், எதிர் பார்ப்பு அனைத்தும் மிக அழகாக வந்திருக்கிறது...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...//

கருத்துக்கு நன்றி. அடுத்த பாகம் விரைவில் தொடரும்.

//நட்புடன் ஜமால் கூறியது...
\\நீங்க நினைக்கமாதிரி இல்லைங்க...\\

ஓஹ்! அது இல்லையா ...

சரி சரி

(நான் என்ன நினைக்கிறேன் புரிஞ்சிடிச்சே)//

வாசகர்களின் மனவோட்டத்தைப் புரிந்துக்கொண்டால்தான் எங்களால் எழுத முடியும் ஐயா..

பெயரில்லா சொன்னது…

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் தொடுத்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இப்பூக்களில் சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

அபுஅஃப்ஸர் சொன்னது…

//“இல்ல, டான்ஸ் ஆடிக்கிட்டு இருந்தேன்,” என்று நக்கலாக பதிலளித்தாள் கவிதா.//

ஒரு வெறுப்பின் வெளிப்பாடு

அபுஅஃப்ஸர் சொன்னது…

//அவளது கால்கள் தடுமாறின. அந்தச் சமயம் பார்த்து அவளுக்கு ஒரு சந்தேகம். ‘நாம் அழகாக நடக்கிறோமா? எப்படி நடப்பது?’ என்று//

ம்ம் எதார்த்தம்...
இது எல்லோருக்கும் நிகழக்கூடியதுதான்
ஐயங்கரன் கூட நினைத்திருப்பான் நாம் நல்லா இருக்கோமா என்று ஒரு கணம் அவளைக்கண்டதும்...

அபுஅஃப்ஸர் சொன்னது…

//மறுகணம் மீண்டும் தலையைத் தாழ்த்தி விடுவிடுவென்று வீடு நோக்கி நடந்தாள்//

நம்ம ஊருப்பொண்ணாச்சே அதான்

ஆதவா சொன்னது…

ரொம்ப ஆசையா படிச்சுட்டெ வந்தேன்... அப்பறம் பார்த்தா. அது தொடர்கதையா!!!!அப்ப மீதிக் கதைய படிச்சுட்டு வாரெஅன்..

அபுஅஃப்ஸர் சொன்னது…

//ஆதவா சொன்னது…
ரொம்ப ஆசையா படிச்சுட்டெ வந்தேன்... அப்பறம் பார்த்தா. அது தொடர்கதையா!!!!
//

ஹஹாஅ ஹாஆ நல்லா ஏமாந்தீங்க போல‌

பெயரில்லா சொன்னது…

பெண் தரப்பில் என்ன நிகழும் என்ற மன ஓட்டம் நன்றாக சித்தரித்துள்ளீர்கள்.

பெயரில்லா சொன்னது…

பெண் தரப்பில் என்ன நிகழும் என்ற மன ஓட்டம் நன்றாக சித்தரித்துள்ளீர்கள்.

Divyapriya சொன்னது…

அப்புறம் என்ன ஆச்சு?

து. பவனேஸ்வரி சொன்னது…

அபுஅஃப்ஸர் கூறியது...
//ம்ம் எதார்த்தம்...
இது எல்லோருக்கும் நிகழக்கூடியதுதான்
ஐயங்கரன் கூட நினைத்திருப்பான் நாம் நல்லா இருக்கோமா என்று ஒரு கணம் அவளைக்கண்டதும்...//

இருக்கலாம் நண்பரே. கவிதாவையே கவனித்துக் கொண்டிருந்ததால் ஐங்கரனைக் கவனிக்கத் தவறிவிட்டேன். இனி அவனையும் கவனித்துவிடுவோம். உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

து. பவனேஸ்வரி சொன்னது…

ஆதவா கூறியது...
//ரொம்ப ஆசையா படிச்சுட்டெ வந்தேன்... அப்பறம் பார்த்தா. அது தொடர்கதையா!!!!அப்ப மீதிக் கதைய படிச்சுட்டு வாரெஅன்..//

ஹஹஹா...தொடர்கதை என்று தெரியாமலேயே பசித்தீர்களா? நல்ல வேடிக்கை. இனி தொடர்ந்துப் படிப்பீர்கள் என எதிர்ப்பார்க்கிறேன்.

து. பவனேஸ்வரி சொன்னது…

சூர்யா ஜிஜி கூறியது...
//பெண் தரப்பில் என்ன நிகழும் என்ற மன ஓட்டம் நன்றாக சித்தரித்துள்ளீர்கள்.//

உங்கள் கருத்துக்கு நன்றி ஜிஜி.


Divyapriya கூறியது...
//அப்புறம் என்ன ஆச்சு?//

பொருத்திருந்துப் பார்ப்போம் திவ்யா. என்ன ஆகுமென்று எனக்கே தெரியாது. காலம்தான் பதில் சொல்லும்.