வெள்ளி, 26 ஜூலை, 2013

அன்புள்ள பாட்டியும் சிடுமூஞ்சி பேத்தியும் (பாகம் 3)பாட்டிக்குக் கயல்விழி மீது கோபம் வரும் போதெல்லாம், "சனியன், அம்மாவைப் போலவே புத்தி," என திட்டும் போது கயல் நிஜமாகவே நொறுங்கிவிடுவாள். அவள் தாய் எத்தகைய புத்திக் கொண்டவள் என்று அவளுக்கு எப்படித் தெரியும்? என்றாவது ஒருநாள் தன் தாய் தன்னை அவளோடு அழைத்துச் செல்லமாட்டாளா என்று ஏங்க தொடங்கினாள். ஏக்கத்தின் ஊடே வளர்ந்துப் படித்தாள். பல போட்டிகளில் பங்கெடுத்து பரிசுகளை அள்ளிக்குவித்தாள். அவள் கொண்டு வரும் பரிசுகளைப் பாட்டியின் கண்களில் படுமாறு வரவேற்பறையில் வைத்துவிட்டு அமைதியாக தன் அறைக்குள் சென்றுவிடுவாள். எதற்காக பரிசு கிடைத்தது என்று தெரியாமலேயே பாட்டி அதனைத் தூக்கிக்கொண்டு அக்கம் பக்கத்து வீடுகளில் பெருமை பாராட்டச் சென்றுவிடுவாள். கயல்விழியுடன் ஒரே வகுப்பில் படிக்கும் கல்யாணிதான் பாட்டிக்கு விபரம் சொல்வாள்.

6-ஆம் ஆண்டுத் தேர்வில் சிறப்பாக தேர்ச்சிப் பெற்று பள்ளியிலேயே சிறந்த மாணவிக்கான விருதினைத் தட்டிச் சென்றாள். அந்த விருதினை கயல்விழியின் சார்பாக அவளது பாட்டித்தான் பெற்றுக்கொண்டாள். பாட்டிக்குப் பேத்தி மீது அன்புதான். ஆனால், கயல்விழிக்கோ யார் மீதும் பிடிப்பு இல்லை. சொல்லாத சோகத்தை கண்ணோடும் , பாரத்தை நெஞ்சோடும் சுமந்து வந்தாள். யாரோடும் அவள் பிடி கொடுத்தும் பேசுவது இல்லை. அனாவசிய பேச்சுகளை அறவே தவிர்த்தாள். இதனாலேயே அவளுக்குச் 'சிடுமூஞ்சி' என்ற பெயர் ஏற்பட்டது. அந்தப் பெயரே அவளுக்குப் பாதுகாப்பாகவும் விளங்கியது. பாட்டிதான் அவளைப் பற்றி மிகவும் கவலைப்பட்டாள்.  எந்நேரமும் சிடுசிடுவென இருக்கும் கயல்விழியின் மேல் பாட்டிக்கு எரிச்சல் கூட வந்தது.

காலங்கள் உருண்டோடி கயல்விழி பருவம் எய்தினாள். அப்போதுதான் தனது வாழ்நாளில் கொடிய அனுபவங்களை அவள் சந்தித்தாள். அவளுக்கு எதுவும் புரியவில்லை;பாட்டி எதையும் விளக்கவில்லை. தாயின் நினைவுகளே அவளைக் கல்லாக மாற்றியது. பாட்டியின் அன்பு புரிந்தாலும் அதனை முழுமையாக அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன்னைத் தாயிடமிருந்து பிரித்தவள் தானே இவள் என்ற எண்ணம் இதயத்தில் நெருஞ்சி முள்ளாய் குத்திக்கொண்டிருந்தது. அவள் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தாள். பாட்டிக்கு அதுவும் தெரியவில்லை. தனது சிடுமூஞ்சிப் பேத்தியை அவளால் வெறுக்கவும் முடியவில்லை.

கயல்விழி படித்து முடித்து வேலைக்குச் செல்ல தொடங்கினாள். பாட்டியை விட்டு நெடுந்தூரம் பிரிந்து, தனியாக வசித்து வந்தாள். இன்று அவளுக்குச் செய்தி வந்தது... பாட்டி ஆபத்தான கட்டத்தில் சுயநினைவு இழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள். கயலுக்கு இதயமே வெடித்து விடும் போல இருந்தது. தான் எவ்வளவு தான் சிடுசிடுவென இருந்தாலும் அதனைப் பெரிதுபடுத்தாமல் அன்பு செலுத்தும் பாட்டி இப்போது சுயநினைவோடு இல்லை. என்ன செய்வாள் இந்த சிடுமூஞ்சி பேத்தி? சென்று அமைதியாக பார்த்தாள்....வழக்கம் போல தனியாகக் கதறுகிறாள்....

***முற்றும்***

கருத்துகள் இல்லை: