புதன், 28 செப்டம்பர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 5)


அக்காவின் நண்பர், “இங்கே துணிகள் மலிவாகக் கிடைக்கும்,” என ஒரு துணிக்கடைக்கு அழைத்துச் சென்றார். புனிதா அக்கா தனது குடுத்தாருக்குத் துணிமணிகள் வாங்கிக் கொண்டிருந்தார். முதலில் எனக்கு எதுவும் வாங்கும் எண்ணம் இல்லை. அதிக நேரம் அங்கேயே நின்று வகைவகையான துணிகளைப் பார்த்துக் கொண்டிருக்க, ஒன்றாவது வாங்கலாமே என நானும் வாங்க ஆரம்பித்தேன். மூன்று துணிகள் எடுத்தாயிற்று.

கடையில் இருந்த தையல்காரரிடம் சுடிதார் தைக்கத் துணிகளைக் கொடுத்தேன். எனக்கு என்ன மாதிரி சுடிதார் வேண்டும் என நான்கைந்து முறை கூறினேன். அவரும் தெரியும் எனச் சொல்லி அளவெடுத்து துணிகளை வாங்கிக் கொண்டார். தைப்பதற்குத் தேவையான கூலியையும் கொடுத்தாயிற்று. இன்னும் ஒரு கிழமையில் திரும்ப வந்து தைத்தத் துணிகளை எடுத்துச் செல்கிறோம் எனக் கூறி கடையிலிருந்து விடைப்பெற்றோம்.

கடையிலிருந்து வெளியே வர, அக்கா பக்கத்தில் இருந்த இன்னொரு கடையில் நுழைந்தார். அங்கே நானும் சென்றால் ஏதாவது வாங்கிவிடுவேனோ என என் ஆசைகளுக்குப் பயந்து வெளியிலேயே காத்திருந்தேன். அப்போது, ‘சலக் சலக்’ என சத்தம் வர திரும்பிப் பார்த்தேன். ஆஹா… தலை நிறைய மல்லிகைச் சரம் தொங்க, கண்ணாடி வளையல்கள் குழுங்க, முழுக்க மணிகள் பதிக்கப்பட்ட வெள்ளிக் கொலுசணிந்து, பட்டுப்புடவை உடுத்தி, தமிழ்நாட்டுப் பெண் ஒருத்தி என்னைக் கடந்துச் சென்றாள். அந்த வேகாத வெய்யிலில் செருப்புக் கூட அணியாமல் அவள் சர்வ சாதரணமாக நடந்துச் சென்றாள். எல்லாம் சரிதான், ஆனால் ஏன் இவள் செருப்பு அணியவில்லை என்ற எண்ணம் மேலிட அங்குப் போவோர் வருவோர் கால்களையே கவனிக்க ஆரம்பித்தேன். பலர் செருப்புடன் சென்றாலும் சிலர் என்ன காரணத்தாலோ செருப்பு அணியாமல் செல்வதை கவனித்தேன்.

இப்படி நான் போவோர் வருவோரை கவனித்துக் கொண்டிருக்க, குழந்தையின் சிரிப்பொலி கேட்டு வலது பக்கம் திரும்பினேன். தாயொருத்தி ஒரு கடையின் வெளியே மண் தரையில் அமர்ந்துப்  பொட்டலத்தைப் பிரித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். அவள் அருகில் மேற்சட்டை அணியாமல், காற்சட்டை மட்டும் அணித குழந்தை ஒன்று சிரித்து விளையாடிக்கொண்டிருந்தது. அதனுடையத் தாய் குழந்தைக்கும் ஊட்டிவிட்டு தானும் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். நானோ விவரிக்க முடியாத உணர்ச்சி அலையில் கட்டுண்டு கிடந்தேன். அந்தக் குழந்தையின் விளையாட்டை இரசிப்பதா அல்லது அவர்களின் நிலையை எண்ணி வருந்துவதா?

அந்தத் தாயிடம் கேட்டு அப்படியே அந்தக் குழந்தையைத் தூக்கி வந்து நாமே வளர்க்கலாமா என்று கூட அந்த நொடியில் எனக்குத் தோன்றியது. அடுத்த நிமிடம் அது சாத்தியப்படாது என்ற உண்மையும் விளங்கியது. உச்சி வெயில் அதிகரிக்க தாகம் எடுக்க ஆரம்பித்தது. புனிதா அக்கா வந்தவுடனே ஏதாவது கடைக்குச் சென்று நீர் அருந்த வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கையிலேயே அக்கா வந்துவிட்டார்.

“அடுத்து எங்கே செல்லப் போகிறீர்கள்,” என அக்காவின் நண்பர் வினவ, சட்டென்று, “முதலில் தண்ணீர் குடிக்கலாம். பிறகு எங்கே செல்வது என்பதை முடிவுச் செய்யலாம்,” என்றேன். அவரும் ஒரு பழச்சாற்றுக் கடைக்கு எங்களை அழைத்துச் சென்றார். படங்களிலெல்லாம் சாத்துக்குடி, சாத்துக்குடி என்கிறார்களே அது என்ன சுவையாக இருக்கும் என்ற ஆவல் மேலிட சாத்துக்குடிச் சாறு கேட்டேன். பழச்சாறு வந்தது; குடித்தேன்; அட, ஆரஞ்சுச் சாறு! ஆரஞ்சுப் பழத்தைத்தான் சாத்துக்குடி என்கிறீர்களா என அக்காவின் நண்பரிடம் கேட்டேன்.

“ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சப் பழம் எல்லாம் ஒரே குடும்ப வகையைச் சார்ந்தது. ஆரஞ்சுப் பழத்தைவிட சற்று வேறுபட்டது சாத்துக்குடி,” என அவர் விளக்கம் அளித்தார். பின்னர், மேலும் ஒரு சில கடைகளுக்கு ஏறி இறங்கினோம். மீண்டும் கடைத்தெருவில் நாவல் பழங்களைப் பார்த்தேன். ஏற்கனவே வாங்கிய பழத்தை முழுவையாக சுவைக்கவில்லை. இப்பொழுதாவது வாங்கலாமே என அக்காவிடம் கூறினேன்.

“நாவல் பழம் அதிகம் சாப்பிட்டால் இரத்தம் சுண்டி விடும். இங்கே இந்தப் பழங்கள் அதிகம் கிடைக்கும். இன்றைக்கு வேண்டாம். இன்னொரு நாள் வாங்கிக்கொள்,” என்றார். சற்று ஏமாற்றத்துடன் தலையாட்டினேன். நேரமாகிக் கொண்டிருந்தது. புறப்படலாம் என்று பேருந்து நிலையம் செல்ல ஆட்டோ பிடித்தோம். மீண்டும் அந்தச் சிறுவர்கள் வந்து தொல்லைக் கொடுப்பார்களோ என்று சற்று தயக்கமாக இருந்தது.

புனிதா அக்கா முதலில் ஆட்டோவில் ஏற, அக்காவிற்கும் அவரது நண்பருக்கும் இடையில் நான் அமர்த்தப்பட்டேன். சற்று அசெளகர்யமாக இருந்தாலும், சிறிது நேரம் தானே என்றுப் பொறுத்துக் கொண்டேன். ஆட்டோ பேருந்து நிலையத்தை நெருக்கிய வேளையில் அவ்விடம் நடந்துச் சென்றுக் கொண்டிருந்த ஆண்கள் கும்பலில் இருந்த ஒருவன் ஆட்டோவின் ஓரத்தில் அமர்ந்திருந்த அக்காவின் இடுப்பைக் கிள்ளிவிட்டான். திடீரென அக்கா ஆட்டோவில் அலர நான் சற்று அதிர்ந்துத்தான் போனேன். “தெரியாமல் கை பட்டிருக்கும்” என சமாதானம் சொன்னேன். “இல்லை! அவன் தெரிந்தேதான் கிள்ளினான்!” என திரும்பத் திரும்பச் சொன்னார்.

சரி, யார் இதனைச் செய்தார்கள் என்று திரும்பிப் பார்ப்பதற்குள் அவர்கள் கண்ணுக்கெட்டா தூரத்திற்குச் சென்றுவிட்டார்கள். ஆட்டோவும் பேருந்து நிலையத்திற்கு வந்துவிட்டது. அக்கா முகத்தில் அதிர்ச்சி படர்ந்திருந்தது. அக்காவின் நண்பரோ நடந்த சம்பவத்தை நினைத்துச் சிரித்துக் கொண்டிருந்தார். “என்ன நீங்கள்? எங்களுக்குப் பாதுகாப்பு தருவீர்கள் எனப் பார்த்தால், சிரித்துக் கொண்டிருக்கிறீர்?” என அக்காவே வாய் திறந்துக் கேட்டுவிட்டார். “நான் என்ன செய்ய? அவர்கள்தான் போய் விட்டார்களே?” என முப்பத்திரண்டு பற்களையும் காட்டினார்.

நாங்கள் ஏற வேண்டிய பேருந்தினை அடையாளப்படுத்திவிட்டு அவர் விடைப்பெற்றுக் கொண்டார். பேருந்தில் ஏறும் முன், முன்பு என்னிடம் நாவல் பழங்கள் விற்ற பெண்மணியைப் பார்த்தேன். அவள் கூடையில் வைத்திருந்த பழங்கள் மீண்டும் எனக்கு ஆசையைத் தூண்ட, அடக்கமுடியாமல் கொஞ்சம் பழங்கள் வாங்கிக்கொண்டேன். அக்கா என்னைப் பார்த்துச் சிரித்தார்.

கருத்துகள் இல்லை: