புதன், 21 செப்டம்பர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 1)


என்னதான் மலேசியாவில் பிறந்து வளர்ந்த எங்களை ‘இந்தியன்’ என்று மற்றவர் அழைத்தாலும் இந்த 25 வருடங்களில் ஒரு முறை கூட நான் அங்கே சென்றதில்லை. சிறு வயதில் வெளிநாடு சென்றால் இந்தியாவிற்குத்தான் முதலில் செல்ல வேண்டும் என்று அடிக்கடி நினைத்ததுண்டு. ஈழத்தின் நடந்த படுகொலைகளுக்கு இந்தியா எனும் நாடு முக்கிய பங்காற்றியுள்ளது என்ற உண்மையை உணர ஆரம்பித்ததிலிருந்து அங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருந்தது. சில இன உணர்வுள்ள நண்பர்களின் சகவாசம் கிடைத்தப் பிறகு அவர்களைச் சென்று நேரில் காண வேண்டும், அங்கு நடக்கும் போராட்டங்களில் நேரில் பங்கு கொள்ள வேண்டும் என்ற ஆசையும் துளிர்விட ஆரம்பித்தது.

இத்தகைய ஆசைகள் தோன்றிய வேளையில் ஒரு முறை எனது அக்காவும், தோழியுமான புனிதாவிடம் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) எமது எண்ணத்தைத் தெரியப்படுத்தினேன். வழக்கமாக வெளிநாடுகளுக்குத் தனியே சென்று பழக்கப்பட்டவள் நான். திடீரென்று அக்காவும் உடன் வருவதாகக் கூறினார். ஆஹா, துணை ஒன்று கிடைத்த பிறகு தடை எதற்கு? உடனே விமானச் சீட்டுகளை வாங்கினோம். இந்தியா பெரிய நாடாகிற்றே? ஒரு கிழமை பத்தாது, இரண்டு கிழமைகள் சென்று வரலாம் என்று முடிவு செய்து, பின்னர், நடப்பது நடக்கட்டும், ஒரு மாதம் சென்று வருவோம் என்று முடிவெடுத்தோம்.

அலுவலகத்தில் விடுப்பு கிடைக்காதே? என்ன செய்யலாம்? அதிகம் யோசிக்கவில்லை. இதுவரையில் என்னைப் பெற்றதைத் தவிர்த்து வேறு எதுவுமே எனக்காகச் செய்யாத தாயின் பெயரைப் பயன்படுத்த வேண்டியதுதான். தாய் என்பவள் இதற்காகவாவது உதவியாய் இருக்கிறாளே (*நன்றி அம்மா). நான் அதிகம் பொய் சொல்வது கிடையாது. சில சந்தர்ப்ப சூழ்நிலைகளில், அதனால் நன்மை கிட்டும் என்ற அடிப்படையில் மிகச் சில பொய்களே சொல்வதுண்டு. அதனையும் யாராவது துருவித் துருவிக் கேட்டால் உண்மையை உடைத்து விடுவேன். ஆனால், இரகசியங்கள் எம்மிடம் காக்கப்படும். அம்மாவிற்கு உடல் நலக்குறைவு, மருத்துவத்திற்காக இந்தியா கொண்டு செல்கிறேன் என்றேன். அதற்காக மேலிடத்தின் உத்தரவு கேட்டு சில கடிதங்கள், தொலைப்பேசி அழைப்புகள், சந்திப்புகள் என ஒருவாறு விடுப்பு கிடைத்தது.

எப்பொழுதும் நான் வெளிநாடு பயணம் செய்யும் போது மனதிற்குள் ஒரு துள்ளல் இருக்கும், ஆர்வம் இருக்கும், இனம் புரியாத உற்சாகம் இருக்கும். ஏனோ, இந்த பயணத்தில் இது எதுவுமே எனக்கு இல்லை. என்னுடன் பயணம் வருவதாகச் சொன்ன புனிதா அக்காவுடனும் வேலை பளுவின் காரணமாகத் தொடர்புக்கொள்ளவில்லை. எந்தவொரு முன்னேற்பாடும் செய்யவில்லை. தெரிந்த ஒரு சில நண்பர்களிடம் மட்டும் நான் அவ்விடம் வருவதாகத் தெரிவித்தேன். புறப்படுவதற்கு இரண்டு நாட்கள் இருக்கும் முன் எமக்கு மிகவும் நெருக்கமான உறவுகளான அத்தையிடமும், அண்ணியிடமும் எமது பயணத்தைத் தெரிவித்தேன். திடீர் அறிவிப்பால் சற்று அதிர்ந்தனர், ஆனால் ஒன்றும் கேட்டுக்கொள்ளவில்லை. கேட்டும் பயன் இல்லை என்பதைப் புரிந்துக்கொண்டனர் போலும்.

ஒரு மாத காலத்திற்குத் தேவையான 25 கிலோ எடைக்கொண்ட பொருட்களைக் கட்டிக்கொண்டு பயணத்திற்கு ஆயத்தமானேன். ஜூலை 5-ஆம் திகதி காலையிலேயே புனிதா அக்காவை கே.எல் சென்ட்ரலில் சந்தித்தேன். ரிங்கிட்டினை ரூபாய்க்கு மாற்றிய பிறகு நாங்கள் இருவரும் அங்கிருந்த பேருந்தில் ஏறி விமான நிலையத்திற்குப் பயணமானோம். பேருந்தில் பயணம் செய்த வேளையில் நெருங்கிய சில நண்பர்களுக்குத் தொலைப்பேசி அழைப்பு விடுத்து எமது பயணத்தைத் தெரியப்படுத்தினேன். எனது நெருங்கிய தோழி ஒருத்திக்கும் அழைத்து வழக்கம் போல் நான் வெளிநாடு சென்ற வேளையில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் என்ன செய்ய வேண்டும், எதைச் செய்ய வேண்டும் என தெளிவுப்படுத்தினேன். சுமார் 1 மணி நேர பயணத்திற்குப் பிறகு எல்.சி.சி.தி விமான நிலையத்தை வந்தடைந்தோம். சரியாக மலேசிய நேரம் மாலை 3.55-க்கு விமானம் கோலாலம்பூரிலிருந்து சென்னை நோக்கிப் பயணமானது.