செவ்வாய், 18 அக்டோபர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 18)
யாரிடம் கேட்கலாம் என என்னைச் சுற்றியிருந்தவர்களை நோட்டமிட ஆரம்பித்தேன். எனது வலது பக்கத்தில் சற்று தூரத்தில் ஆண்கள் கூட்டமாக நின்று ஏதோ கதைத்துக் கொண்டிருந்தனர். அதில் ஒருவர் மட்டும் திரும்பித் திரும்பி என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். நானும் இதனைச் சில முறை கவனித்தேன். பையை இழுத்துக் கொண்டு நேரே அவரை நோக்கிச் சென்றேன். அவர் முகம் வெளிர ஆரம்பித்தது.

“சென்னைக்குச் செல்ல எந்த நடைமேடையில் காத்திருக்க வேண்டும்,” என நான் கேட்டதும் எனது பயணச் சீட்டை வாங்கிப் பார்த்துவிட்டு, நான் காத்திருக்க வேண்டிய இடத்தைக் காட்டினார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு நடைமேடைக்கு அருகில் வந்தேன். அங்கே உட்கார சில நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. சிறு குழந்தை ஒன்றை மடியில் வைத்தவாறு பெண்ணொருத்தி அமர்ந்திருக்க, அவள் அருகில் இருக்கை காலியாகக் கிடந்தது. தொடர்வண்டி வர எவ்வளவு நேரமாகும் எனத் தெரியாததால் நான் அவ்விடம் சென்று அமர்ந்துக் கொண்டேன்.

பயணிகள் போவதும் வருவதுமாக அந்த இடமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. திடீரென ஒருவகையான துர்நாற்றம் வீச திரும்பிப் பார்த்தேன். இளைஞன் ஒருவன் அவ்விடம் வந்து அமர்ந்தான். பார்க்க நாகரிகமாகத்தான் இருந்தான். ஏனோ அந்தக் காலை வேளையிலும் அவன் மேலிருந்து வியர்வை வாடை வெளிப்பட்டு குடலைப் பிடுங்கித் தின்றது. முகம் எந்தவொரு உணர்ச்சியையும் வெளிப்படுத்தாத வண்ணம் பார்த்துக் கொண்டேன். நல்ல வேளையாக அவன் நீண்ட நேரம் அங்கே அமரவில்லை. சற்று நேரத்திற்கெல்லாம் எழுந்துச் சென்றுவிட்டான்.

முதலில் நான் வழி கேட்ட நபர் ஏற வேண்டிய வண்டி வந்தது. அவரும் அவர் நண்பர்களும் உடன் செல்ல, நானும் இதில்தான் ஏற வேண்டுமா என சந்தேகமாக அவரைப் பார்த்தேன். எமது விழிகளின் மொழியை அவர் அறிந்திருக்க வேண்டும். “நீங்கள் ஏற வேண்டிய வண்டி இன்னும் பத்து நிமிடங்களில் வந்துவிடும். நான் போய் வருகிறேன்,” என அவசர அவசரமாகக் கூறிவிட்டு வண்டியை நோக்கி பெருநடைப் போட்டார்.

எமது பக்கத்தில் அமர்ந்திருந்த பெண் தனது துப்பட்டாவால் குழந்தையின் தலையை மூடி பால் கொடுக்கத் துவங்கியிருந்தாள். பொது இடமாக இருந்தாலும் குழந்தைக்குப் புட்டிப்பால் கொடுக்காமல் தயக்கமில்லாமல் தாய்ப்பால் கொடுத்த அவள் செய்கை என்னைக் கவர்ந்திருந்தது. ஒவ்வொரு முறை தொடர்வண்டி வரும் போதும் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு ஓடிச் சென்று இடம் பிடித்து ஏறினர். சிலர் தங்கள் உறவினர்களுக்காகவும் நண்பர்களுக்காவும் நடைமேடையில் காத்திருந்தனர். சற்று நேரத்திற்கெல்லாம் எமது அருகில் அமர்ந்திருந்த பெண் எழுந்துச் செல்ல இன்னொரு பெண் அவ்விடம் வந்து அமர்ந்துக் கொண்டாள்.

பச்சை வர்ண சுடிதார் அணிந்திருந்தாள். கையில் உணவுப் பொட்டலமும் குடிநீரும் அடங்கிய சின்னதாய் ஒரு பை. அதைத் தவிர்த்து சாக்லெட் சிற தோள்பை ஒன்றும் வைத்திருந்தாள். சிவப்பு நிற துப்பட்டா. தலையில் கொஞ்சம் மல்லிகை. காலில் மணி வைத்த கொலுசு. கையின் இடதுபுறத்தில் கறுப்பு வார்ப்பட்டைக் கொண்ட கைக்கடிகாரம். நான் அவளை கவனிப்பதை அவள் கவனிக்கவில்லை. இவளிடம் எப்படிப் பேச்சுக் கொடுக்கலாம் என நினைத்து, கடைசியாக, “சென்னைச் செல்லும் வண்டி எத்தனை மணிக்கு வரும்,” எனக் கேட்டேன்.

தொடர்வண்டி 10 மணிக்கு வரும் என்று எனக்குத் தெரியும். ஆனால், மணி 10.30 ஆகியும் வண்டி இன்னும் வரவில்லை. தவிர, அவளிடம் பேச்சுக் கொடுக்க எனக்கு வேறு எதுவும் தோன்றவில்லை. “வந்திருக்கணும். இன்றைக்குத் தாமதமாகிவிட்டது. நீங்கள் சென்னைக்குச் செல்ல வேண்டுமா?” என என்னைக் கேட்டாள்.

“ஓம், நீங்கள் எங்கே போக வேண்டும்?” என நான் உரையாடலைத் தொடர்ந்தேன். “கும்பகோணம்” என்றாள். “ஓ, உங்கள் வண்டி எத்தனை மணிக்கு வரும்?”
என நான் தான் கேட்டேன். அவள் வண்டி வரும் வரை எம்முடன் பேசிக்கொண்டிருப்பாள் அல்லவா. “நாம் ஒரே வண்டியில்தான் ஏறுவோம். கும்பகோணத்தைத் தாண்டித்தான் நீங்கள் செல்ல வேண்டும்,” என்றாள். எம் மனதிற்குள் மகிழ்ச்சி தாண்டவமாடியது. அதனை என் முகமும் காட்டிவிட்டது.

“எங்கிருந்து வருகிறீர்கள்?” என மீண்டும் அவள்தான் கேட்டாள். இவளிடம் மறைத்து என்ன இருக்கிறது? “மலேசியா. இங்கு வந்ததில்லை. முதன் முறையாக வந்துள்ளேன்,” என்றேன். அதற்குள் தொடர்வண்டி வரவும், “சீக்கிரம் வாங்கள்,” என மெல்ல ஓடிச் சென்றாள். அவளைத் தொடர்ந்து எமது பையை இழுத்துக்கொண்டு நானும் ஓடினேன்.

தொடர்வண்டி நிற்பதற்கு முன்பாகவே தமது கையில் இருந்தக் கைக்குட்டையை வண்டியில் அமர்ந்த ஒருவரிடம் அவசர அவசரமாக நீட்டி, “பக்கத்தில் போடுங்கள்,” என்றாள். எனக்கு எதுவும் புரியவில்லை. கூட்டத்தில் எங்கே அவளைத் தவறவிட்டு விடுவேனோ என்று அவள் பின்னாலேயே வாலைப் பிடித்துக் கொண்டுச் சென்றேன். வண்டி நிற்பதற்கு முன்னரே அவள் ஏற, எனக்குத் தமிழ்ச்சினிமா ஞாபகத்திற்கு வந்துவிட்டது. என்ன, எங்கள் மீது மோதவோ, இடிக்கவோ எந்த கதாநாயகனும் அவ்விடம் வரவில்லை.

ஒருவழியாக வண்டியில் ஏறிப்பார்த்தால் சில இருக்கைகளில் கைக்குட்டைகள். அந்தப் பெண் தன்னுடைய கைக்குட்டையைப் போட்ட இடத்தைக் கண்டுபிடித்து அவ்விடம் சென்று அமர்ந்துக்கொண்டாள். அவள் பக்கத்தில் கொஞ்சம் இடம் ஒதுக்கி என்னையும் அமரச் செய்தாள். கொண்டு வந்திருந்த பையை மேலிருக்கையில் வைத்துவிட்டு கீழிருக்கையில் இருவரும் அமர்ந்தோம். சற்று நேரம் இருவருமே அமைதியாக வண்டியில் ஏறி இடம் பிடிக்கும் ஏனைய பயணிகளைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.

“சென்னைச் செல்ல எவ்வளவு நேரமாகும்?” நான்தான் பேச்சைத் துவங்கினேன். “குறைந்தது 6 மணி நேரமாவது ஆகும். அதுதான் கடைசி நிறுத்தம்,” என்றார் அவர். ஊர், பேர், வேலை என விசாரிப்புகள் நீண்டுக் கொண்டே சென்றது. நான் தனியே வந்திருக்கிறேன் என்று தெரிந்தவுடன் அந்தப் பெண் மலைத்தாள். “நான் இங்கிலிருந்து அலுவலகத்திற்குச் சென்று வருவதற்குள் வீட்டிலிருந்து ஐந்தாறு முறை அழைத்துவிடுவார்கள். உங்களை மட்டும் எப்படி தனியே விட்டார்கள்?” என ஆச்சர்யத்தோடு பார்த்தாள். ‘கேட்பதற்கு நாதி இருந்தால் தானே?’ என சொல்வதற்கு வாயெடுத்தேன், பின்னர் நாவை அடக்கிக் கொண்டேன். அவளது கேள்விக்கு மெல்லிய புன்னகையை மட்டும் பதிலாக அளித்தேன். அவள் அதனைப் பற்றி மேலும் எதுவும் கேட்கவில்லை. எங்கள் உரையாடல் மேலும் பல விடயங்களை நோக்கி நகர்ந்தது. அதற்குள் அவள் இறங்க வேண்டிய இடமும் வந்துவிட்டது.

என்னிடமிருந்து அவள் விடைப்பெறும் வேளையில் மீண்டும் என்னுள் தனிமை குடிகொண்டது. இருந்த பேச்சுத் துணையும் இப்போது இல்லாமல் போனதே. சரி, வேறு யார் வருகிறார்கள் என்று பார்ப்போம் என அமைதியாக அமர்ந்திருந்தேன். அவள் இறங்கிச் சென்ற சற்று நேரத்திற்கெல்லாம் குபுகுபுவென சிலர் நான் இருந்தப் பெட்டியில் ஏறினர். நடுத்தர மற்றும் வயதான பெண்கள் சிலர் அந்தக் கும்பலில் இருந்தனர். இன்னொரு புறம் ஒரு வயதானக் கிழவரும், இளவயதுப் பெண்ணும் ஒரு கைக்குழந்தையுடன் பெட்டிக்குள் வந்தனர். நேரே நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு எதிர்ப்புறம் அவர்கள் இருவரும் அமர்ந்தனர்.

அந்தப் பெண்ணின் முகத் தோற்றமே அவள் முஸ்லிம் என்பதனைக் காட்டிக் கொடுத்தது. மிகவும் மெல்லியதாய் இருந்தாள். என்னை விட வயது குறைவாகத்தான் இருக்க வேண்டும். அவள் அருகில் இருப்பவர் யார்? கணவராக இருக்கக் கூடுமோ? மிகவும் வயதானவராக இருக்கிறாரே? ஒரு வேளை தந்தையாக இருக்குமோ? அவர்களின் உறவு முறையை என்னால் அனுமானிக்க முடியவில்லை. ஏன் இந்தத் தேவையில்லா வேலை என அதை அப்படியே ஒதுக்கிவிட்டு பற்ற பயணிகளை நோக்கினேன். முதலில் பெட்டிக்குள் ஏறி இடம் தேடிய பெண்கள் குழு, இடம் கிடைக்காததாலோ என்னவோ நான் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு அருகில் வந்தனர். “கொஞ்சம் தள்ளி உட்காரு,” என மரியாதைக் குறைவாகச் சொல்லிவிட்டு என்னை நெருக்கிக் கொண்டு மூன்று பெண்கள் அவ்விடம் அமர்ந்தனர்.

அந்த இருக்கையில் நான்கு பேர் மட்டுமே தாரளமாக அமரலாம். ஏற்கனவே இருவர் எனது அருகில் அமந்திருந்தனர். இப்போது இந்த மூன்று பெண்களையும் சேர்த்து 6 பேர் அமர வேண்டிய நிலையாயிற்று. ஏனைய பெண்கள் மற்ற இடங்களைத் தேடிச் சென்றனர். எனது வலப்புறத்தில் ஒரு ஆண் அமர்ந்திருந்த படியால் அந்த நெருக்கம் எனக்குச் சற்று எரிச்சலை ஊட்டியது. இயன்றவரை அந்த ஆடவரை உரசாமல் அமர முயற்சி செய்தேன். இந்தப் பெண்களோ என் நிலையை எண்ணிப் பார்த்ததாய் தெரியவில்லை. மேலும் மேலும் என்னை நெருக்கிக் கொண்டிருந்தனர். இவர்கள் எப்போதுதான் இறங்குவார்களோ என்று கடுகடுத்த முகத்துடன் அவ்விடம் அமர்ந்தேன்.

கருத்துகள் இல்லை: