செவ்வாய், 18 அக்டோபர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 19)





“நீ எங்கே இறங்குவாய்?” என என் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண் வினவினாள். எனக்கு அவளிடம் பேச்சுக் கொடுக்கத் தோன்றவில்லை. “சென்னை” என்று ஒற்றை வரியில் பதிலை உதிர்த்துவிட்டுத் தலையை வேறு பக்கமாகத் திருப்பினேன். என்னிடம் கேள்வி கேட்டவள் தன்னுடன் வந்தவர்களுடன் பேச ஆரம்பித்தாள். வண்டியின் உள்ளேயும் வெளியேயும் மிகுந்த இரைச்சலாய் இருந்தது. நல்ல வேளை, அடுத்த நிறுத்தத்தில் இன்னொரு நீண்ட இருக்கை காலியாக அந்த மூன்று பெண்களும் காலியான இருக்கைக்குத் தாவினர். நான் நிம்மதி பெருமூச்சுடன் சற்று தாரளமாக அமர்ந்தேன்.

அதே நிறுத்தத்தில் ஒரு வயதான பாட்டியும், இளவயது பேத்தியும் ஏறினர். வேறு இடம் கிடைக்காததால் நான் அமர்ந்திருந்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டனர். நெரிசலாக இருந்த போதும் 6 பேரை விட 5 பேர் மேல் என நினைத்துக் கொண்டேன். தனது பேத்தி நெருக்கி அமர்ந்திருப்பதைப் பார்த்து அந்தப் பாட்டி கனிவுடன், “மேல் இருக்கையில் ஏறி படுத்துக்கொள்ளம்மா,” என்றார். “வேண்டாம் பாட்டி” என அந்தப் பெண் பாட்டியின் தோளில் சாய்ந்துக் கொண்டாள். தொடர்வண்டி நகர்ந்துக் கொண்டிருந்தது. சன்னலில் வெளியே என் கண் பார்வையை விட்டு ஓடிக்கொண்டிருக்கும் இயற்கை அழகை இரசித்தவாறு அமர்ந்திருந்தேன். காலையிலிருந்து சாப்பிடாமல் இருந்ததால் பசியெடுக்க ஆரம்பித்தது. வெய்யிலில் அலைந்ததால் தொண்டை எப்போதோ வறண்டிருந்தது.

வண்டியில் பயணிகளின் ஆரவாரம் ஒருவாறு அடங்கியிருந்தது. மதிய வேளை என்பதால் பலர் கண் மூடி உறங்க ஆரம்பித்திருந்தனர். என் முன்னே அமர்ந்திருந்த இள  வயது பெண்ணும் குழந்தையை மடியில் கிடத்தியவாறு உறங்கிவிட்டிருந்தாள். அந்த முதியர் மட்டும் விழித்திருந்து, குழந்தையில் கால்களை தன் மடியில் வைத்து மெல்லியதாய் வருடிக் கொண்டிருந்தார். அவர்கள் அருகில் வயதான பெண்மனி ஒருவர் மிகவும் அமைதியாக அமர்ந்திருந்தார். கழுத்தில் சிவப்பு நிறத்திலான மணி மாலையும், நெற்றியில் இருந்த பட்டையும் அவர் தீவிர தெய்வ நம்பிக்கைக் கொண்டவர் என்பதை பறைசாற்றிற்று. நான் அனைவரையும் நோட்டம் இடுவதை அவர் கவனித்திருக்க வேண்டும். நான் அவரைப் பார்த்தது மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்த்தார். பதிலுக்கு நானும் புன்னகைத்தேன். இருவருமே மெளனமாக இருந்தோம்.  

மணி மதியம் பன்னிரெண்டைத் தாண்டியதும், என் முன்னே இருந்த இளவயது பெண் எழும்பினாள். தனது கூடையிலிருந்து பெரிய அடுக்குச்சட்டியையும் ஒரு தட்டையும் எடுத்தாள். ஆஹா, ஓடும் வண்டியில் என்ன செய்யப் போகிறாள் இவள் என நான் கண்களைக் கூர்மையாக்கினேன். அடுக்குச்சட்டியைத் திறந்து வெள்ளை வெளேரென இருந்த சாதத்தைத் தட்டில் கொட்டினாள். அந்தத் தட்டை அப்படியே அந்த முதியவரிடம் நீட்டினாள். கிழவர் அதனை வாங்கி சாத மலையின் நடுவே குழித் தோண்டினார். தோண்டிய குழி நிரம்பி வழியும் வகையில் இன்னொரு பாத்திரத்திலிருந்து சாம்பார் ஊற்றப்பட்டது. தட்டின் ஒரு ஓரமாக காய்கறிக் கூட்டு. வீட்டில் அமர்ந்து உண்பது போல் அந்தக் கிழவர் அங்கே சாப்பிட ஆரம்பித்தது எனக்குச் சற்று புதுமையாக இருந்தது. சாப்பிட்டு முடிந்தவுடன் அந்த இளம்பெண் ஒரு பாட்டில் தண்ணீரை கிழவரின் கையில் கொடுத்தார். அவர் அதனை வாங்கிக் கை கழுவினார். பின்னர் தட்டில் கொஞ்சம் நீர் ஊற்றி அலசினார். கழுவிய நீரை தொடர்வண்டியின் சன்னல் கம்பிக்களுக்கிடையில் சட்டென்று ஊற்றிவிட்டு தட்டை அந்தப் பெண்ணிடம் திரும்பக் கொடுத்தார்.

பெண்ணின் மடியில் கிடந்த குழந்தை கிழவரின் மடிக்கு இடம் மாறியது. நித்திரையைத் தொந்தரவு செய்ததால் என்னவோ, கொஞ்சமாக சிணுங்கிவிட்டு குழந்தை மீண்டும் உறங்கியது. அந்த இளம்பெண் இன்னொரு பாத்திரத்தில் இருந்த சாதத்தை தட்டில் கொட்டினாள். இம்முறை அவளுக்கு அந்தக் கிழவர் பரிமாறினார். தட்டில் சாம்பாரும் கூட்டும் பரிமாறப்பட்டது. எனக்குப் பசியெடுக்க ஆரம்பித்தது. இன்னும் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தால் நமக்குப் பசியெடுத்துவிடும் என எண்ண அலையை மாற்றினேன். இளம்பெண்ணும் சாப்பிட்டு முடித்துவிட்டாள். தட்டும் முன் போலவே சுத்தம் செய்யப்பட்டு, கூடையில் வைக்கப்பட்டது. குழந்தை பெண்ணின் மடிக்கு மீண்டும் இடம் மாறியது.

சிறிது நேரம் சென்ற பின், நெற்றியில் பட்டையோடு அமர்ந்திருந்த வயதான பெண்மணி தனது கூடைக்குள் கையைவிட்டு ஒரு சிறிய உணவுப் பொட்டலத்தை எடுத்தார். அது நிச்சயம் புளிச்சாதமாக இருக்க வேண்டும். கையுடன் கரண்டியும் கொண்டு வந்திருந்தார். அவரும் சாப்பிட்டு முடித்து, நீர் அருந்தினார். இப்போது எனது பசி மேலும் கூடியது. இவர் சாப்பிட்டு முடித்த சில நிமிடங்களில் எனது பக்கத்தில் அமர்ந்திருந்த பாட்டி தனது பொட்டலத்தைப் பிரித்தார். யப்பா, முடியலடா சாமி! இப்படி இருக்கும் என்று தெரிந்திருந்தால் நானும் ஏதாவது வாங்கிக் கொண்டு வந்திருப்பேனே? நிறுத்தங்களில் ஏறி இறங்கும் வியாபாரிகளையும் காணவில்லையே.

பாட்டி தனது பேத்திக்கும் ஊட்டிவிட்டு தானும் உண்டாள். அவள் பேத்திக்கு என்னைவிட ஓரிரண்டு வயது மட்டுமே குறைவாக இருக்க வேண்டும். இருந்த போதும், பச்சிளங் குழந்தை போல அவள் பாட்டி ஊட்டிவிட்டதனை அப்பாவியாய் உண்டுக் கொண்டிருந்தாள். எனக்கும் இப்படியொரு பாட்டி இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஏக்கப் பெருமூச்சி வந்தது. எனக்கு நினைவுத் தெரிந்து முதன் முதலாக எனக்கு ஊட்டி விட்டவர் எனது முதல் காதலர். அதன் பின்னர் பல்கலைக்கழகத்தில் நண்பர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டுக் கொள்வோம். தவிர, எனது தம்பிகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் என்றால், “ஊட்டி விடுடா” என நானே உரிமையோடு கேட்டு மன திருப்திக்காக ஒரு வாய் சாப்பிட்டுக்கொள்வேன்.

பாட்டி பேத்தி இருவருமே சாப்பிட்டு முடித்துவிட்டனர். பலவகையான எண்ணங்களில் கட்டுண்டுக் கிடந்ததனால் எனது பசி கொஞ்சம் குறைந்திருந்தது. ஆனால், நா வறண்டு போயிருந்தது. தண்ணீர் கூட உடன் கொண்டு வராமல் விட்டோமே என என்னை நானே நொந்துக் கொண்டேன். நல்ல வேளையாக, வண்டி நின்ற அடுத்த நிறுத்தத்தில் சிலர் உணவுப் பொருட்களும், நீர் பாட்டில்களும் வண்டியில் ஏறி விற்றுக் கொண்டிருந்தனர். ஒரு நீர் பாட்டிலை வாங்கி மடமடவென்று பாதி பாட்டில் நீரை ஒரே மூச்சில் குடித்து முடித்தேன். பசியாக இருந்த போதும் எதுவும் வாங்கி உண்ணத் தோன்றவில்லை.

சற்று நேரத்திற்கெல்லாம் எனதருகில் அமர்ந்திருந்த ஆடவர் இறங்கிச் சென்று விட்டார். நாங்கள் இன்னும் கொஞ்சம் தாரளமாக அமர்ந்துக் கொண்டோம். சற்றுக் கொழுத்திருந்த பாட்டியின் மடி மீது தலை வைத்து பேத்தி படுத்துக் கொண்டாள். பாட்டி அவளை மெல்லமாய் தட்டித் தூங்க வைத்தார். எனக்கு மிகுந்த பொறாமையாய் இருந்தது. நான் தலை சாய்த்து உறங்க மடி ஒன்று இல்லையே. கடந்த காலமும், நிகழ்கால நிகழ்வுகளும் சேர்ந்து எம்மைச் சோர்வடையச் செய்தன. ஒருவாறு நானும் சில நிமிடங்கள் கண்ணயர்ந்துப் போனேன்.

நாம் கண் விழிக்கையில் எமது முன் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை விழித்துவிட்டிருந்தது. அந்த இளம் பெண் குழந்தைக்குப் பாட்டிலில் நீர் ஊட்டிக் கொண்டிருந்தாள். இவ்வளவு நேரம் உறங்கிக் கிடந்த பசியும் மீண்டும் விழித்தெழுந்தது. மற்றொருமொரு நிறுத்தத்தில் ஒரு பெண் கூடை நிறைய கொய்யாப் பழங்களைக் கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தாள். அவளிடம் சற்றுப் பெரியதாக ஒரு பழுத்த கொய்யாப்பழம் வாங்கிக் கொண்டேன். என் பக்கத்தில் இருந்த பாட்டியும் பேத்தியும் சில கொய்யாப்பழங்கள் வாங்கிக் கொண்டனர். பழத்தைச் சாப்பிட்டுப் பசியாற்றிக் கொண்டேன்.

நீண்ட நேரம் அமர்ந்திருந்ததால் லேசாக இடுப்பு வலி எடுத்தது. சிறிது நேரம் பெட்டிக்குள்ளேயே நடந்துத் திரியலாம் என எழுந்தேன். அந்தப் பெட்டியில் பெரும்பாலானோர் உறங்கிவிட்டிருந்தனர். சிலர் பக்கத்தில் அமர்ந்திருந்தவர்களிடம் மெல்லமாய் கதைத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரையும் தாண்டி தொடர்வண்டியின் கதவருகே வந்தேன். வண்டி வேகமாக ஓடிக்கொண்டிருந்ததால், காற்று பலமாக வீசியது. அது மனதிற்கு ஒருவித புத்துணர்ச்சியை ஊட்டியது. வயல் வெளிகளையும், பொட்டல் நிலங்களையும் கடந்து வண்டி சென்றது. சிறிது நேரம் அங்கேயே நின்று பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

பின்னர் மீண்டும் எனது இருக்கையில் வந்து அமர்ந்தேன். அடுத்த நிறுத்தத்தில் அந்த இளம் பெண்ணும் அவளது குழந்தையும் இறங்கிக் கொண்டனர். அவர்களை அழைத்துப் போக அப்பெண்ணின் கணவன் வந்திருந்தான். அப்போதுதான் அவளுடன் இருந்த வயதானவர் அவளது மாமனார் எனத் தெரிய வந்தது. எனதருகில் இருந்த பாட்டியும் பேத்தியும் இறங்கிவிட்டனர். மிகக் குறைந்த பயணிகளே அந்தப் பெட்டியில் அமர்ந்திருந்தோம். இன்னும் நான் இறங்க வேண்டிய இடம் வரவில்லை.

கருத்துகள் இல்லை: