புதன், 19 அக்டோபர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 20)

சிறிது நேரத்திற்கெல்லாம் மற்றுமொரு நிறுத்தத்தில் மீதமிருந்தவர்களும் இறங்கிச் சென்றுவிட்டனர். புதிதாக 3 கல்லூரி மாணவிகளும் ஒரு மாணவனும் நான் இருந்த பெட்டிக்குள் ஏறினர். அதில் ஒரு மாணவி எனக்கருகில் அமர்ந்தாள். மாணவன் என் முன் புறம் இருந்த இருக்கையில் மாணவியின் நேர் எதிர் அமர்ந்துக் கொண்டான். மற்ற இரு மாணவிகளும் வேறு இடத்தில் சென்று அமர்ந்துக் கொண்டனர். மூன்று மாணவிகளும் வெள்ளை நிறச் சுடிதார் அணிந்திருந்தனர்.
எனக்கருகில் இருந்த மாணவியும் அந்த மாணவனும் காதலர்களாக இருக்க வேண்டும் என அனுமானித்துக் கொண்டேன்.

அவர்களுக்குள் ஏதோ பிரச்சனையாக இருக்க வேண்டும். அதனால்தான் அருகருகே அமரவில்லை போலும். அந்த மாணவியின் முகம் கடுத்திருந்தது. முகத்தில் புன்னகை இல்லை. அதற்கு மாறாக கோபம் கொப்பளித்தது. நொடிக்கொரு தரம் அந்த மாணவனைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள். மாணவனின் முகமோ பரிதாபமாக இருந்தது. அவனும் சளைக்காமல் கெஞ்சும் பார்வையை அவள் பக்கம் வீசிக்கொண்டிருந்தான். இவர்களின் இந்தச் செய்கையைப் பார்த்து நான் உள்ளுக்குள்ளேயே சிரித்துக் கொண்டேன். வெளியே ஒன்றும் கவனிக்காதது போல் முகத்தைச் சன்னல் பக்கம் திரும்பிக் கொண்டேன்.

சட்டென்று ஏதேச்சையாய் நான் திரும்பிய போது அவர்கள் சைகையால் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். அவர்களைத் தொந்தரவு செய்ய விரும்பாது நான் மீண்டும் சன்னல் பக்கம் பார்வையைச் செலுத்தினேன். சிறிது நேரத்திற்குப் பிறகு நான் திரும்பிப் பார்க்கையில் அவர்கள் இருவருமே அவ்விடத்தில் இல்லை. வேறொரு இருக்கையில் ஜோடியாக அமர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். அந்தப் பெண்ணின் கோபம் தீர்ந்துவிட்டது போலும்.

இறுதியாக நான் இறங்க வேண்டிய இடமும் வந்தது. என்னை அழைத்துச் செல்வதற்காக ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே பாலன் அண்ணா தொடர்வண்டி நிலையத்தில் காத்திருந்தார். சென்னை தொடர்வண்டி நிலையம் மிகவும் பெரியதாய் இருந்தது. நிறைய நடை மேடைகள் இருந்தன. அந்த நிலையத்தில் இரண்டு வாசல்கள் இருந்ததால் எனக்கு எந்தப் பக்கம் செல்ல வேண்டும் என தெரியவில்லை. வாகனங்கள் நிறுத்துமிடம் என பாலன் அண்ணா சொன்னதால் அது எங்கே இருக்கிறதென்று வழிப்போக்கர்களிடம் கேட்டுச் சென்றேன். இருந்தும் அண்ணாவைக் காணவில்லை. பிறகுதான் தெரிந்தது நான் தவறான திசைக்கு வந்துவிட்டேன் என்று. மீண்டும் மேம்பாலம் ஏறி எதிர்ப்புற திசையில் உள்ள நுழைவாயிலை நோக்கிச் சென்றேன்.

வாசலில் நின்றுக் கொண்டிருக்கையிலேயே ஈழத்தைச் சேர்ந்த  பாலன் அண்ணா என்னை அடையாளம் கண்டுக் கொண்டார். அவருடன் மேலும் ஒரு நண்பர் வந்திருந்தார். வழக்கமான விசாரிப்புகள் முடிந்தன. தொடர்வண்டி நிலையத்திலிருந்து நான் தங்க வேண்டிய வீட்டிற்குச் செல்ல வேண்டும். அந்த மாலைப் பொழுதில் வாகன நெரிசல் சற்று அதிகமாக இருந்தது. மகிழுந்துத் தார் சாலையிலிருந்து குண்டும் குழியும் நிறைந்த மண் சாலையில் பயணம் செய்யத் தொடங்கியது. நாங்கள் வளசரவாக்கத்தில் வீடு போய் சேர்வதற்குள் வானம் இருண்டுவிட்டது.

அந்த வீட்டிற்கு அன்றுதான் நான் முதன் முதலாகச் செல்கிறேன். நான் அங்குச் செல்வதற்கு முன்னரே, “உங்களை எங்கட ஆட்கள் வீட்லதான் தங்க வைக்க ஏற்பாடு செய்திருக்கோம்,” என இலண்டனில் வசிக்கும் உதயன் அண்ணா சொல்லியிருந்தார். நான் நடந்து வருவதை தூரத்திலிருந்தே பாக்கியா அக்காவும் கண்ணன் அண்ணாவும் பார்த்துவிட்டனர். அவர்கள் இருவரும் தம்பதிகள். நான் வீட்டினுள் நுழையுமுன் இரண்டு சிறுசுகள் என்னை எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டும், ஒளிந்துக் கொண்டும் இருந்தனர்.

பாக்கியா அக்கா எனக்காக ஏற்பாடு செய்திருக்கும் அறையைக் காட்டினார். தனது தங்கை கவிதா என்னுடன் அந்த அறையில் இருப்பார் எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கவிதா அவ்விடம் தோன்றினாள். எவ்வளவு நீளமான கூந்தல்! கவிதா என்னை விட ஒல்லியாக இருந்தாள். ஏதோ வேலையாக இருந்தாள் போல. அறைக்குள் வந்து அறிமுகம் செய்துவிட்டு மான் போல் துள்ளிச் சென்றுவிட்டாள்.

துவைக்க வேண்டிய துணிகள் சில இருந்தன. நெடுந்தூரம் பயணம் செய்ததால் உடல் களைப்புற்றிருந்தது. துணி துவைத்து, குளித்துவிட்டு வெளியே வந்தேன். துணி எங்கே காய வைப்பது என பாக்கியா அக்காவிடம் கேட்டேன். “கொண்டாங்க, நாங்க காய வைக்கிறோம்,” என கையில் இருந்த வாளியை வாங்கிக் கொண்டார். எனக்குத் தர்மச்சங்கடமாய் போய்விட்டது. “பரவாயில்லை, நானே காயப் போடுகிறேன்,” என சொல்லிக்கூட அவர் அதனைக் காதில் வாங்கவில்லை. வாளியை வாங்கிக் கொண்டு அவர்கள் படிகளில் ஏறிச் செல்ல நானும் அவரைப் பின்தொடர்ந்தேன். எனக்குப் பின்னால் கவிதாவும் அவர்களின் சித்தியும் வந்துக்கொண்டிருந்தனர்.

இரண்டாவது மாடியில் இருந்த கதவைத் திறந்து, சின்னதாய் கட்டப்பட்ட படிக்கட்டுகளில் பாக்கியா அக்கா ஏறினார். அட, மொட்டை மாடி! தமிழ்த்திரைப்படங்களில் என்னை அதிகமாகக் கவர்ந்தது இந்த மொட்டை மாடிதான். மெல்லிய காற்று வீச, நட்சத்திரங்கள் மின்ன, நிலா எங்களை ஒளிந்துப் பார்த்துக்கொண்டிருந்தது. அங்குதான் துணிகளை உலர வைப்பார்களாம். அந்த இரவு வேளையில், மொட்டை மாடிச் சூழல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பாக்கியா அக்கா, கவிதா, சித்தி மூவரும் என்னுடன் சேர்ந்து துணிகளை உலர வைக்க ஆரம்பித்தனர். நான் எவ்வளவோ தடுத்தும் அவர்கள் கேட்பதாய் இல்லை. பார்த்து ஒரு சில மணித்துளிகளிலே என் மீது இவ்வளவு அன்பு காட்டுகிறார்களே என உள்ளுக்குள் நெகிழ்ந்துப் போனேன்.

துணிகளை உலர வைத்த பிறகு அனைவரும் இறங்கி கீழ்த்தளத்திற்கு வந்தோம். “இன்டைக்கு இரவு புட்டுதான் சாப்பாடு. எங்கட ஸ்ரீ லங்கன் புட்டு சாப்பிட்டிருக்கீங்களா?” என பாக்கியா அக்காதான் கேட்டார். இதுவரையில் இலங்கைப் புட்டு நான் உண்டதில்லை. மலேசியாவில் சில காலம் தங்கியிருந்த எமது ஈழத்து நண்பர்கள் பலர் அடிக்கடிப் புட்டு செய்துதான் சாப்பிடுவார்கள். அதில் எனக்கு மிகவும் நெருக்கமான தோழரான கமல் என்பரிடம் “எனக்குச் செய்து கொடுக்க மாட்டீர்களா?” என நானே கேட்டுள்ளேன். “நாங்கள் செய்து தந்தா சாப்பிடிவீங்களோ?” என அவர் எம்மைச் சந்தேகத்தோடு கேட்டார். “அதனால் என்ன? நிச்சயம் சாப்பிடுவேன்,” என்று கூறியிருந்தேன். அதன் பின்னர் சில மாதங்களில் அவரும் மேற்கத்திய நாடொன்றுக்குச் சென்றுவிட்டது அவ்வேளையில் நினைவு வந்தது.

சட்டென்று நிகழ்காலத்திற்குத் திரும்பி, “இல்லை அக்கா. ஆனால், சாப்பிட வேண்டும் என வெகு நாளாய் ஆசை,” என்றேன். அக்கா சிரித்துக்கொண்டே ,”பிள்ளைக்கு பிடிக்குமோ இல்லையோ என்டு தெரியல,” என தட்டு நிறைய புட்டு வைத்துக் கொடுத்தார். எனக்கு அதன் ருசி மிகவும் பிடித்திருந்தது. சாப்பிட்டு முடித்துத் தட்டைக் கழுவும் போது சித்தி ஓடி வந்தார். “என்னதிது? தட்டைக் கொடுங்க,” என எனது தட்டைப் பறிக்க முயற்சி செய்தார். “பரவாயில்லை. கழுவிவிட்டேன். நான் எந்த வீட்டிற்குச்  சென்றாலும் இரண்டு விடயங்களில் விட்டுக்கொடுக்க மாட்டேன். ஒன்று எனது துணிகளை நானே துவைக்க வேண்டும்.  இன்னொன்று, சாப்பிட்ட தட்டுக் குவளைகளையும் நானே கழுவி வைக்க வேண்டும்,” எனக் கூறி மெல்லிய புன்னகைத்தேன்.

அதற்குள் பாக்கியா அக்கா அவ்விடம் வந்துவிட்டார். “ஐயோ, ஏன் நீங்கள் தட்டை கழுவினிங்கள்?” என சற்று வருத்தத்தோடு கேட்டார். “நான் சாப்பிட்ட தட்டை நான் தானே கழுவ வேண்டும்?” என புன்னகைத்தேன். பிறகு மூவரும் வரவேற்பரைக்குச் சென்றோம். சில நேரம் கதைத்துக் கொண்டிருந்தோம். பின்னர், சித்தி தனது இரு பிள்ளைகளையும் உறங்க வைக்க மேல் மாடிக்கு அழைத்துச் சென்றார். நானும் எனக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்றேன். கவிதா படித்துக் கொண்டிருந்தாள்.

“வாங்கள் அக்கா,” என தனது புத்தகத்தை மூடி வைத்தாள். “பரவாயில்லை. படியுங்கள்,” என்றேன். “படித்து முடித்துவிட்டேன். இனி நாளைதான்,” என்றாள். நான் எனது மின்னஞ்சல்கள் படிக்க வேண்டும் எனச் சொன்னதும் உடனே தனது மடிக்கணியைத் திறந்துக் கொடுத்தாள். 21 வயது நிரம்பியச் சுட்டிப் பெண்! நான் இணையத்தில் இருக்க, அவள் எம்முடன் விடாது கதைத்துக் கொண்டிருந்தாள். திடீரென்று, “உங்களுக்கு எப்ப கல்யாணம்?” என அவள் கேட்க, “தெரியவில்லை” என்றேன். அவளிடம், “உனக்கு எப்போது?” எனக் கேட்க, பட்டென்று “பத்தாவது மாசம், 27-ஆம் தேதி” என்றாள். நான் சற்று திகைத்துப் போனேன். “அவ்வளவு சீக்கிரமா? வாழ்த்துகள்” என்றேன். அவள் வெட்கத்துடன் தலையாட்டினாள்.

பிறகு மீண்டும் என்னென்னவோ கேட்டாள், பேசினாள், சொன்னாள். நானும் அவளுடன் கதைத்துக்கொண்டே நித்திரையில் ஆழ்ந்துப் போனேன்.

கருத்துகள் இல்லை: