திங்கள், 10 அக்டோபர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 14)


நாங்கள் திண்ணையில் அமர்ந்து கதைத்திருக்க, கொசுக்கள் எங்கள் உதிரத்தை ருசி பார்க்க ஆரம்பித்தன. மூவரும் எழுந்து வீட்டின் உள்ளே சமயலறைக்குச் சென்றோம். அவ்விடம் ஒரு கூடையில் பல வகையான பழங்கள் நிரப்பப்பட்டிருந்தன. அதில் எங்கள் நாட்டுப் பழமான ‘மங்கீஸ்’ பழம் ஊதா நிறத்தில் என் கண்களைக் கவர, நான் ஆர்வமாய் அதனைக் கைகளில் எடுத்தேன். “இங்கேயும் ‘மங்கீஸ்’ விளைகிறதா,” என நான் கேட்க அவர்கள் இருவரும் என்னைச் சற்றுக் குழப்பத்துடன் பார்த்தனர்.

“என்ன பெயர் சொன்னீர்கள்?” என கோதை மீண்டும் எம்மிடம் வினவினாள். “இதன் பெயர் மங்குஸ்தீன். மங்கீஸ் என்று சுருக்கமாகச் சொல்வோம்,” என்றேன். “ஓ, எந்த நாட்டுப் பழம் என்று தெரியாது. அப்பா வாங்கி வந்தார். அதை எப்படிச் சாப்பிடுவது என்று கூட தெரியவில்லை,” என்றாள். அறிவழகனும் ஒரு பழத்தை எடுத்துச் சுற்றி சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார். அதை எப்படி உடைத்துச் சாப்பிட வேண்டும் என அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தேன். வெள்ளை வெளேரென்ற இனிப்பான மங்கீஸ் சுளைகளை அவர்கள் இருவரும் சுவைத்து உண்டனர்.

நானும் கோதையும் ஏதோ கதைத்துக்கொண்டிருக்க, அறிவழகன் நீராடச் சென்றார். சற்று நேரத்தில் கோதையும் சமையல் வேளைகளில் ஈடுபட ஆரம்பிக்க நான் இணையத்தில் மூழ்கினேன். அதற்குள் கோதையின் தந்தை வீட்டிற்கு வந்துவிட்டார். எங்களின் வருகை முன்கூட்டியே அவருக்கு அறிவிக்கப் பட்டிருந்ததால் எங்களைக் கண்டு அவர் ஆச்சர்யப் படவில்லை. கிராமத்துப் பெரிய மனிதர்கள் போல் வெள்ளை வேட்டியும் சட்டையும் அணிந்திருந்தார். வீட்டின் முன்புறக் கதவில் பொறிக்கப்பட்டிருந்த புலிச் சின்னத்தைக் கண்டதாலும், வீடு முழுக்க அங்காங்கே புலிச் சின்னங்கள் இருந்ததாலும் அவரைக் காண்பதற்கு முன்பே அவர் மீது நான் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தேன். அவர் பெரியாரின் பாதையில் வாழ்பவர் என்றும் அறிவழகனும் கோதையும் எம்மிடம் தெரிவித்திருந்தனர்.

வீட்டிற்கு வந்தவுடன் எங்களின் பயணத்தைப் பற்றி கேட்டார். நாங்களும் உற்சாகமாக பதில் சொன்னோம். எம்மையும் புலிகளின் தீவிர ஆதரவாளர் என தோழர் அறிமுகம் செய்துவிக்க, “ஓ, அப்படியா” என்று பட்டும் படாமல் கேட்டு வைத்தார். பின்னர், அவர் புலிகளைப் பற்றி எம்மிடம் கேட்ட விடயங்களும் அவர் சொன்ன விடயங்களும் எமக்கு மிகுந்த எரிச்சலூட்டுவனவாக அமைந்திருந்தன. இதே, எமது நாட்டில் யாராவது எம்மிடம் இப்படிப் பேசியிருந்தால் அவர்கள் வீட்டில் ஒரு கணமும் தங்கியிருக்க மாட்டேன். எமது உணர்ச்சிகள் மேலெழும்பிய போதெல்லாம் மிகுந்த சிரமப்பட்டு அதனை அடங்க வேண்டியிருந்தது. எந்த சூழ்நிலையிலும் எம்மை அங்கு அழைத்து வந்த தோழர் அறிவழகனுக்கு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கக் கூடாது என அமைதியாயிருந்தேன்.

“புலிகள் நிறைய தவறு செய்துவிட்டார்கள். அவர்களால் இன்று தமிழினமே இலங்கையில் அழிக்கப்பட்டுவிட்டது. இதனால் யாருக்கு என்ன இலாபம்?” என அவர் கேட்டது, “புரிந்துதான் கேட்கிறாரா அல்லது இவருக்குச் சித்தம் பேதலித்துவிட்டதா?” என நினைக்க வைத்தது. இவ்வாறு எம்மால் சிறிதளவேனும் ஏற்றுக் கொள்ள முடியாத கூற்றுகளை அவர் முன் வைத்தார். முதலில் எம் பக்கம் இருந்த நியாயங்களை முன் வைத்தாலும் பின்னர் அவருடன் விவாதிப்பது எந்தவித பலனையும் கொண்டு வராது என்பதை அறிந்து அமைதியானேன். புலிகள் மீதான தமது அத்தனை அதிருப்திகளையும் கொட்டித் தீர்த்த பிறகு, எம்மை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.

குடும்பப் பின்னணியைப் பற்றி அவர் கேட்ட வேளையில் எதையும் மறைக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லாத காரணத்தால் அவர் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தேன். அது எமது அந்தரங்கம் என்ற போதும் பெரியவர் என்ற முறையில் அவரது கேள்விகளுக்குப் பதிலளிக்கும் பொறுப்பு எம்மிடம் இருந்தது. எமது குடும்பப் பின்னணி அவரின் முகத்தைச் சுளிக்க வைத்ததை உணர்ந்தேன்.

“பெற்றோர் சரியில்லை என்றால் பிள்ளைகள் கெட்டுக் குட்டிச் சுவராய் போய்விடுகிறார்கள்,” என்றெல்லாம் என்னென்னவோ சொன்னார். அவர் சொன்ன பெரும்பாலான கருத்துகளுக்கு எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு மனிதன் எப்படி உருவாக வேண்டும் என்பதனை அந்த மனிதனே முடிவுச் செய்கிறான் என்பதுவே எமது கருத்து. பெற்றோர் உடன் இருந்தாலும் தன்னலன் மீது அக்கறை இல்லாதவன் தீய வழிச் சென்று கெடத்தான் செய்வான். அதற்குப் பெற்றவரைக் குறைக் கூறுவது நியாயமல்ல. எம்மைப் பெற்றவர் எம்மை வளர்க்கும் பொறுப்பிலிருந்து விலகியிருக்கலாம். அதற்காக நான் செய்யும் செயல்களுக்கு அவர்கள் எப்படி பொறுப்பேற்க முடியும்?

ஒரு தனி மனிதனின் வெற்றித் தோல்விகளை அவனே முடிவு செய்கிறான். அதற்குத் தூண்டுகோலாக பலர் (பெற்றோர் உட்பட) இருக்கலாம், ஆனால் அவர்கள் அதற்குக் காரணமாக இருக்க முடியாது. சரி, நான் கூடத்தான் எமது பெற்றோருடன் இல்லை. அதற்காக நான் தீய வழியில் சென்று விட்டேனா? நமக்கென்று சுயபுத்தி இருக்கிறது அல்லவா? அதே போல் அனைவருக்கும் அந்தரங்கம், தனி மனித சுதந்திரமும் இருக்கிறது. எவ்வாறு எனது சுதந்திரத்தில், அந்தரங்கத்தில் பிறர் தலையீடு இருக்கக் கூடாது என நான் விருப்புகிறேனோ அவ்வாறே பிறர் சுதந்திரத்திலும், அந்தரங்கத்திலும் நான் தலையிடுவது இல்லை, எமது பெற்றோர் உட்பட. ஆனால், இதனை அந்த மனிதருக்கு விளக்கிச் சொல்லக்கூடிய நிலையில் நானும் இல்லை, அதைப் புரிந்துக்கொள்ளக் கூடிய நிலையில் அவரும் இல்லை.

அடுத்ததாக நிகழ்ந்த உரையாடல் எம்மை மேலும் எரிச்சலடைய வைத்தது. அவரது பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறாராம். நல்ல விடயம்தான். எனக்குக் கூட மகிழ்ச்சியாக இருந்தது. “எங்க சாதியில நல்ல வரன் வந்தது. எதுக்கு விடணும்? உடனே சரின்னுட்டேன். நீ என்ன சாதி’மா?” என்று அவர் கேட்டதும் எனக்குச் சற்று தூக்கிவாரிப் போட்டது. இவர்தான் பெரியார் கொள்கையைப் பின்பற்றுபவரா? இவர் திடீரென்று சாதியைப் பற்றி பேசியது எம்முடன் வந்த அறிவழகனையும் அதிர்ச்சியில் மூழ்க வைத்திருக்க வேண்டும். அதற்கு அறிவழகன் விளக்கம் கேட்கவும் செய்தார்.

“சாதி என்பது குலத்தொழிலை அடிப்படையாகக் கொண்டது. எங்கள் சாதியினர் (அவரது சாதியைக் குறிப்பிட நான் விரும்பவில்லை) வேளாண்மை செய்கின்றனர். என் பொண்ணுக்கும் வேளாண்மை தெரியும். எங்கள் சாதியில் கட்டிக் கொடுத்தால் தான் அவளுக்கு நல்லது. வேறு குலத்தொழில் செய்யும் சாதிக்காரனுக்குக் கட்டிக் கொடுத்தால் சரி வராது. வெவ்வேறு வாழ்க்கைச் சூழல்களாக இருக்கும் பட்சத்தில் அவளது மண வாழ்க்கையை அது பாதிக்கக் கூடும். அதற்கென நான் தீண்டாமையை ஆதரிக்கிறேன் என நினைக்க வேண்டாம். பெரியார் எதிர்த்த தீண்டாமையில் எனக்கும் உடன்பாடு இல்லை. அதே வேளை மண வாழ்க்கை என வரும் போது நமது சாதியில் உள்ளவர்களை மணந்தால்தான் மண வாழ்க்கை சிக்கல் இல்லாமல் இருக்கும்,” என அவர் தரப்பு (அ) நியாயங்களைச் சொன்னார்.

நான் எதுவும் பேசவில்லை. அவர் பேசுவதைக் கேட்கும் பொறுமையையும் நான் எப்போதோ இழந்திருந்தேன். மிகவும் கடினப்பட்டு எமது முகத்தில் எப்பொழுதும் இளையோடும் இள நகையை மட்டும் பிடித்து வைத்திருந்தேன். அறிவழகன் மட்டுமே சில கேள்விகளைக் கேட்டு அவருடன் இன்னும் கதையை வளர்த்துக் கொண்டிருந்தார். நான் அவ்வப்போது சிரித்து மழுப்பி இணையத்தில் மூழ்கியிருப்பது போல் பாவணை காட்டிக் கொண்டிருந்தேன்.

மறுநாள் வேலூர் செல்வதாக இருந்தது. சில தவிர்க்க முடியாத காரணங்களினால் எமது எண்ணைத்தை கைவிட நிர்ப்பந்திக்கப்பட்டேன். சரி, வேறு எங்கே செல்லலாம் என நினைக்கும் போது, தஞ்சையில் நண்பர் ஒருவர் நினைவிற்கு வந்தார். நாளை அங்கு வருவதாக அவருக்குக் குறுஞ்செய்தி அனுப்பினேன். எனது கெட்ட நேரம் அவர் ஊரில் இல்லை. வேலை நிமித்தமாக வேறு ஊருக்குச் சென்றிருப்பதாகக் கூறினார். சரி, அப்படியானால் சென்னை திரும்ப வேண்டியது தான் என முடிவு செய்கையில், நண்பரிடமிருந்து மீண்டும் குறுஞ்செய்தி வந்தது. தனது நண்பர் ஒருவர் எனக்கு வழிகாட்டியாக வருவார் எனவும் எனது திட்டத்தின்படி தஞ்சாவூர் செல்லலாம் எனவும் தெரிவித்திருந்தார்.

நண்பரின் நண்பர் எனக்கு அறிமுகம் கிடையாது. முதலில் சற்றுத் தயக்கமாக இருந்தது. பின்னர் நண்பரின் உத்தரவாதத்தின் பேரில் சரியென்றேன். நேரமாகிக் கொண்டிருந்ததால், அனைவரும் படுக்கைக்குச் சென்றனர். அறிவழகன் தான் திண்ணையில் படுக்கப் போவதாகச் சொன்னார். கொசுத் தொல்லை அதிகம் என கோதை எவ்வளவு சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை. எனக்கு இணையத்தில் இன்னும் வேலை இருந்தது. அனைத்தையும் முடித்து, குளித்துவிட்டு நான் படுக்கைக்குச் செல்கையில், அதிகாலை 1 மணி. அனைவரும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர். எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு நானும் படுக்கையில் சாய்ந்தேன். நித்திரை தேவி எம்மை ஆரத்தழுவிக் கொண்டாள்.

கருத்துகள் இல்லை: