வியாழன், 6 அக்டோபர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 13)






மணி ஐயாவின் துணையாட்கள் எங்களை மகிழுந்தில் கோபி பாளையம் வரையில் சென்று விட்டனர். அந்தப் பயணத்தை நான் அணுவணுவாக இரசித்தேன். வழி நெடுகிலும் பச்சைப் பசுமையான வயல் வெளிகள், நீண்டு வளர்ந்த தென்னை மரங்கள், கரும்புக் காடுகள் என கண்களுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. கிராமத்துக் கதையம்சம் கொண்ட பெரும்பாலான திரைப்படங்கள் இங்குதான் படமெடுக்கப்படும் என வண்டி ஓட்டுனர் எங்களுக்குத் தெரியப்படுத்தினார்.  படப்பிடிப்பின் போது பயிர்களுக்குச் சேதம் விளைந்தால் என்ன செய்வார்கள் என அறிவழகன் கவலையோடு கேட்க, அதற்கு உரியத் தொகையினைப் படப்பிடிப்பாளர்கள் கொடுத்துவிடுவார்கள் என ஓட்டுநர் பதில் கூறினார்.

இதுவரையில் நான் பயணித்த அனைத்து இடங்களையும் விட கோபி பாளையம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வயல் வெளிகள் சூழ்ந்த கிராமமாக இருந்தாலும் அவ்விடம் நேர்த்தியான தார் சாலைகள் போடப்பட்டிருந்தன. சாலையில் அதிகம் வண்டிகள் இல்லை. தலை வலியை உண்டாக்கும் வாகன ‘ஹான்’ சத்தங்கள் இல்லை. இரசாயனக் கரும்புகைகள் இல்லை. இயற்கை அழகுக் கொட்டிக் கிடக்கும் சொர்க்க பூமியாக கோபி பாளையம் காட்சியளித்தது. பயணத்தின் போது அதிகம் பேசாமல் அந்த கிராமத்து அழகில் நான் கட்டுண்டுக் கிடந்தேன்.

மகிழுந்து கோபி பாளையம் பேருந்து நிலையத்தை அடைந்தது. அறிவழகன் யாருடனோ தொலைப்பேசியில் கதைத்துக்கொண்டிருக்க முதலில் என்னை பேருந்தில் ஏறி அமரச் சொன்னார். சத்யமங்கலம் செல்லும் பேருந்தைக் கண்டுபிடித்து நானும் அமர்ந்துக் கொண்டேன். இந்தப் பேருந்திலும் மூன்று இருக்கைகள் சேர்ந்தார் போல போடப்பட்டிருந்தன. நான் மட்டும் தனியே சன்னல் ஓரம் இருந்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டேன். அறிவழகனை இன்னும் காணவில்லை.

அந்தச் சமயம் சுமார் 26 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் எனதருகில் வந்து அமர்ந்தான். அமர்ந்துவிட்ட பிறகு கேட்டான், “இங்கு யாராவது அமர்கிறார்களா?” என்று. “நண்பர் ஒருவர் சற்று நேரத்தில் வந்து விடுவார்,” என்றேன். “யார்? காதலரா?” என்றான். “இல்லை, நண்பர்,” என்றேன். “ஓ, சரி,” என அங்கேயே அமர்ந்துவிட்டான். அந்த நேரம் பார்த்து மலேசியாவிலிருந்து தொலைப்பேசி அழைப்பு வர, அவன் எனது உரையாடலை உற்று நோக்குவதை உணர்ந்துக் கொண்டேன்.

“நீங்கள் மலேசியரா?” என்றான். “ஓம்,” என்றேன். “எங்கே போகிறீர்,” எனக் கேட்டான். ஒன்றும் யோசிக்காது பட்டெனச் சொன்னேன், “சத்திய மங்கலம்,” என்று. “உறவினர் வீட்டிற்கா,” எனக் கேட்டான். “இல்லை, தெரிந்தவர் வீட்டிற்கு,” என நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அறிவழகன் பேருந்தில் நுழைந்துவிட்டார். என்னருகில் அவன் அமர்ந்திருப்பதைப் பார்த்ததுமே அவருக்கு முகம் மாறிவிட்டது.

அறிவழகன் நான் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி வரவும், “என் நண்பர் வந்துவிட்டார்,” என பக்கத்தில் அமர்ந்திருந்தவனிடம் கூறினேன். அவன் அப்பவும் பிடித்த வைத்த பிள்ளையார் சிலை மாதிரி அங்கேயே அமர்ந்திருந்தது எனக்குச் சற்று எரிச்சலை உண்டாக்கியது. அறிவழகன் வந்து, “கொஞ்சம் விலகுங்கள்,” என்று சொன்ன பிறகே அவன் இடத்தைக் காலி செய்தான். அறிவழகன் என் அருகில் அமர அவன் அறிவழகனின் பக்கத்துச் இருக்கையில் அமர்ந்துக் கொண்டான். அப்போதும் எட்டி எட்டி என்னிடம் பேச்சுக் கொடுக்க முற்பட அதை அறிவழகன் தவிர்த்துக் கொண்டிருந்தார்.

அந்த இளைஞன் எம்மிடம் பேசுவது அறிவழகனுக்குப் பிடிக்கவில்லை என்பதை அறிந்துக் கொண்டேன். அதனால், அவனிடம் பேசுவதைத் தவிர்க்க முகத்தை சன்னல் பக்கம் திருப்பிக் கொண்டேன். ஒரு வழியாகச் சத்திய மங்கலம் வந்திறங்கினோம். காலையிலிருந்துச் சரியாகச் சாப்பிடவில்லை. அறிவழகனுக்கும் பசிக்க, பேருந்திலிருந்து இறங்கியவுடன் சாப்பாடு கடையைத் தேடினோம். சற்று தொலைவில் உணவகம் ஒன்று கண்ணில் பட இருவரும் அதனை நோக்கி நடந்துச் சென்றோம்.

மாலை நேரமானதால் உணவகத்தில் சோறு இல்லை. அறிவழகனின் முகத்தில் சற்று ஏமாற்றும் தெரிந்தது. அவர் தோசை வேண்ட, நான் இதற்கு முன் கேட்டிராத பெயர் கொண்ட உணவு ஒன்றை வேண்டினேன். அது என்னவென்று அறிவழகனுக்கும் தெரியவில்லை. ஏதோ, சுவையாக இருந்ததால் இருசித்துச் சாப்பிட்டேன். பின்னர், இருவரும் ஆட்டோ எடுத்து, அறிவழகனின் தோழி கோதை வீட்டை நோக்கி பயணமானோம். சத்ய மங்கலமும் அழகான கிராமம்தான். கோதையின் வீட்டின் பின்னால் நெல் வயல்களும் வாழைத் தோட்டமும் இருந்தன. வீட்டு நுழைவாயிலில் நுழையும் முன்னரே வீட்டுப் பின்னால் சென்று நெல் வயல்களைப் பார்வையிட்டேன். அந்த இடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அதை விட அழகாய் இருந்தாள் அந்தப் பெண். நீண்ட வளர்ந்தக் கூந்தலை அழகாய் பின்னிவிட்டிருந்தாள். நெற்றியில் சிறிய கறுப்புப் பொட்டு. எளிமையான சுடிதார். முன்பக்கத்தை முழுமையாக மறைத்த துப்பட்டா. வட்ட வடிவமான முகம். அதில் எந்நேரமும் தவழும் சிறு புன்னகை. இனிமையான குரல். வாசல் வரை வந்து எங்களை வரவேற்று வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். வீட்டு வாசலுக்கு முன் இருந்த வேப்பமரம் கண்களுக்கும் மனதிற்கும் குளிர்ச்சியளித்தது.

அந்த வீட்டிற்குள் நுழையுமுன் ஒரு கணம் திடுக்கிட்டு நின்றேன். ஒருவித பரவச நிலை உடலெங்கும் பரவ சில வினாடிகள் கண்ணசைக்காமல் அதனையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். எமது தேசியச் சின்னம்! அந்த வீட்டின் வாசற்கதவின் தமிழீழ தேசியச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது! எனது விரல்களால் அதனைத் தடவி உள்ளூர நெகிழ்ந்தேன். அந்த நொடியில், பெருமை, கர்வம், ஆனந்தம், நெகிழ்ச்சி என பலதரப்பட்ட உணர்வுகள் எம்மை ஆட்டிப் படைத்தன. எனது உணர்வுகள் தோழர் அறிவழகனுக்குப் புரிந்திருக்க வேண்டும்.

“கோதையின் அப்பாவும் ஈழ ஆதரவாளர். நீங்கள் கண்டிப்பாக அவரைச் சந்திக்க வேண்டும்,” என என்னிடம் சொல்லிவிட்டு, “கோதை, நீங்கள் அவரின் முதுகைப் பார்க்க வேண்டும்,” என அந்தப் பெண்ணிடம் வேண்டினார். அந்தப் பெண் குழப்பமாகத் தயங்கித் தயங்கி என்னருகில் வரவும், நான் சிரித்துக்கொண்டே விரித்து விட்டிருந்த எமது கூந்தலை விலக்கிக் காட்டினேன். இந்த முறை அந்தப் பெண் அதிர்ச்சியில் சிலையானாள்.

வாசலிலேயே நின்று சில விடயங்கள் பேச ஆரம்பிக்க, கோதை எமது கைகளில் இருந்த பைகளை உள்ளே எடுத்துச் சென்று வைத்தாள். மீண்டும் வெளியே வந்து திண்ணையில் அமர்ந்து அந்திப் பொழுதின் அழகை இரசித்தவாறு கதைப் பேச ஆரம்பித்தோம். சின்னப் பெண்தான். ஆனால், அடக்கமும் மரியாதையும், யாரிடம் எப்படிப் பேச வேண்டும் என்பதையும்  நன்றாய் அறிந்து வைத்திருந்தாள். நொடிக்கொரு தரம் தந்தைக்குத் தொலைப்பேசி அழைப்பு விடுத்து விரைவில் வீட்டுக்கு வருமாறு நினைவூட்டிக் கொண்டிருந்தாள். பொறுப்புள்ள பெண்!


கருத்துகள் இல்லை: