புதன், 5 அக்டோபர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 12)





மேட்டூர் பேருந்து நிலையத்தை அடைந்துவிட்டோம் என ஐயா கொளத்தூர் மணி அவர்களுக்குத் தெரியப்படுத்தினோம். அவரும் எங்களைச் சிறிது நேரம் காத்திருக்கச் சொன்னார்.  அறிவழகனுக்குப் பசித்திருக்க வேண்டும். இரண்டு வாழைப் பழங்கள் வாங்கி எனக்கொன்று கொடுத்து அவர் ஒன்று சாப்பிட ஆரம்பித்தார். நானும் பழத்தைச் சாப்பிட்டுக்கொண்டே பேருந்து நிலையத்தை நோட்டமிட்டேன். நல்ல வெயில். அந்த வெய்யிலிலும் மக்கள் நெரிசல் குறையவில்லை. சுற்றிலும் ஒட்டுக் கடைகளில் பழச்சாறுகள், முறுக்கு வகைகள், பழங்கள், தின்பண்டங்கள், இதழ்கள் போன்றவை விற்பனையாகிக் கொண்டிருந்தன.

அறிவழகனின் தொலைப்பேசி மீண்டும் அலறியது. கொளத்தூர் மணி ஐயா எங்களைப் பேருந்து நிலையத்தின் அருகில் இருந்த பெரியார் பாசறையில் காத்திருக்கச் சொன்னார். நானும் தோழர் அறிவழகனும் பெரியார் பாசறையை நோக்கி நடந்தோம். ஒரு சிறியக் குறுக்குச் சந்தில் நுழைந்தவுடன் பெரியார் படிப்பகம் கண்களில் தென்பட்டது. அது சற்றுச் சிறிய அறை. உள்ளே சில புத்தகங்களும், நாளிதழ்களும் பொது மக்கள் வாசிப்பதற்காக வைக்கப்பட்டிருந்தன. ஒரு நீண்ட மேசையும், அதன் இரு பக்கங்களியும் இரு நீண்ட நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன. படிப்பகத்தின் உள்ளே இருந்த இரண்டு ஆண்கள் ஐயா வரும் வரையில் எங்களை அங்கே அமர்ந்திருக்கச் சொன்னனர்.

அந்த நீண்ட நாற்காலில் நான் ஒரு புறமும் அறிவழகன் எனக்கு எதிர்ப்புறமும் அமர்ந்துக் கொண்டோம். நீண்ட பயணக் களைப்பின் அறிகுறியாக அமர்ந்ததுடன் வழக்கம் போல “கிருஷ்ணா” எனக் கூறி ஆயாசப் பெருமூச்சு விட்டேன். அது அறிவழகனின் காதில் விழ திடுக்கிட்டவராய் மெல்லிய குரலில், “எங்கே அமர்ந்துக்கொண்டு யாரை அழைக்கிறீர்கள்,” என்றார். சுவற்றில் மாற்றி இருந்த பெரியார் படம் என் கண்ணில் பட பதில் ஏதும் சொல்லாமல் சிரித்துவிட்டு அமைதியானேன். சற்று நேரத்திற்கெல்லாம் கொளத்தூர் மணி அவ்விடம் வந்துச் சேர்ந்தார். படிப்பகத்தின் பக்கத்தில் இருந்த அவரது அலுவலகத்திற்கு எங்களை அழைத்துச் சென்றனர்.

வெள்ளை வேட்டிச் சட்டையுடன் பளிச்சென்று காட்சி தந்தார். வணக்கம் கூறிய எங்களை அன்போடு வரவேற்று தமது எதிரில் அமர வைத்தார். சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம். நான் அதிகம் பேசவில்லை. அறிவழகனுக்கும் கொளத்தூர் மணி ஐயாவுக்கும் நிகழ்ந்த உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். நான் கதைத்துக் கொண்டிருக்கும் போதே நெடுமாறன் ஐயாவின் புதல்வியும் அவரது தோழர்களும் அவ்விடம் வந்துச் சேர்ந்தனர். நேற்றைய தினம்தான் அவர்கள் ‘மிளகாய் பொடி’ என்ற மேடை நாடகத்தை நடத்தியதாக மணி ஐயா தெரியப்படுத்தினார்.

நெடுமாறன் ஐயாவின் புதல்வி மிகவும் இயல்பாக இருந்தார். முகத்தில் எந்தவித பூச்சுக்களும் இல்லை. அணிகலன்கள் எதனையும் அணியவில்லை, காதணிகள் உட்பட. பட்டாசு போல படபடவென்று பேசினார். மணி ஐயாவிடம் அவர் பேசிய முறையே அவர்கள் இருவரும் தந்தை, மகள் போல உறவாடி வருவதை உணர்த்தியது. சில நிமிடங்களில் இன்னொரு வாகனத்தில் நாடகக் குழுவில் நடித்தவர்கள் வந்துச் சேர்ந்தனர். அந்தச் சின்ன அலுவலத்தில் அனைவரும் அமர்வதற்காக மேலும் சில நாற்காலிகள் போடப்பட்டன. இடப்பற்றாக்குறையால் சிலர் நிற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. நானும் அறிவழகனும் நாற்காலியிலிருந்து எழுந்து அவர்களுக்கு இடமளிக்க முற்பட்ட வேளையில் அனைவரும் எங்களை அப்படியே அமரச் சொல்லி கட்டாயப்படுத்தினர். அனைவருக்கும் தேநீர் வரவழைக்கப்பட்டது.

அந்த நாடக்குழுவில் பெரும்பாலும் திருநங்கைகள் இடம்பெற்றதைக் கண்டுக்கொண்டேன். ஆண் பெண் பேதமின்றி அனைவரும் மிகவுக் இயல்பாக நட்புடன் பேசிப் பழகினர். அதில் ஒரு பெண் மலேசியப் பெண்கள் போல் முட்டிவரை உள்ள காற்சட்டையும், உடலைப் பிடித்த மேற்சட்டையும் அணிந்திருந்தார். அவர்களுடன் அவ்விடம் அமர்ந்திருந்தது ஏதோ எமது நாட்டில் எமது தோழர்களுடன் இருப்பதைப் போல் எமக்கு உணர்த்திற்று. இரண்டு அந்நியர்கள் இருக்கிறார்கள் என அவர்கள் கவலைப்படவில்லை. ஒருவரை ஒருவர் கேலி செய்து, மிகவும் மகிழ்ச்சியாகக் கதைத்தனர்.

அந்தக் குழுவில் சின்னத்திரை துணை நடிகர் ஒருவர் வந்திருந்தார். அவரை அடையாளம் கண்டுக்கொண்ட கிராம மக்கள் சிலர் அலுவலகத்தின் உள்ளே எட்டி எட்டிப் பார்த்துகொண்டிருந்தனர். அதனைப் பார்த்த அந்த நபரின் ஏனைய நண்பர்கள், “டேய், உன் இரசிகர்கள் உன்னைத்தான் தேடுகிறார்கள். நீ வெளியே போய் அவர்களைப் பார். அப்போதுதான் நாங்கள் இங்கே நிம்மதியாகப் பேச முடியும்,” என அவரை விரட்டியடித்தனர். அவரும் உற்சாகத்துடன் தமது இரசிகர்களைக் காண எழுந்துச் சென்றார். அவரை வெளியே கண்டதுமே, அவரைச் சுற்றி மக்கள் கூட ஆரம்பித்தனர். 

உள்ளே கூத்தும் கும்மாளமுமாக இருந்தது. அந்தச் சூழல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர்களது கிண்டல் கேளிகளை நான் மிகவும் இரசித்தேன். நேற்றைய தினம் நடந்த நாடகத்தைப் பற்றியும் கதாப்பாத்திரங்கள் பற்றியும் பேசினர். மேடை நாடகத்தில் எமக்கு அனுபவம் இருந்ததால், அந்த நாடகத்தைப் பார்க்காத ஏக்கம் என்னுள் குடிகொண்டது. முன் கூட்டியே தெரிந்திருந்தால் நானும் பார்த்திருப்பேனே என்று சற்று கவலையடைந்தேன். அவர்கள் அங்கே இருந்ததால் நேரம் போனதே தெரியவில்லை.

அலுவலகத்தின் வெளியேயும் கூட்டத்திற்கு குறைவில்லை. பாவம் அந்தச் சின்னத்திரை நடிகர். கையெழுத்துப் போட்டு போட்டு களைத்துப் போனார். அவரைப் பார்க்க மக்கள் வந்தவண்ணமாக இருந்தனர். அவர் யார் என்று பெரும்பான்மையான மக்களுக்குத் தெரிந்திருந்தது. அப்போதுதான் ஊடகத்தின், தொலைக்காட்சியின் வலிமையை நான் அறிந்துக் கொண்டேன். ஒரு சின்னத்திரை துணை நடிகருக்கே இவ்வளவு ஆதரவு என்றால், நடிகர்களுக்குச் சொல்லவா வேண்டும்? இப்போது தெரிகிறது ஏன் பெரும்பான்மையான நடிகர்கள் அரசியலில் குதிக்கிறார்கள் என்று. எல்லாம் ஒரு விளம்பரம்தான்!

ஆனால், இந்த மக்களில் எத்தனைப் பேருக்கு ஈழத்தில் நடந்தப் படுகொலைகள் பற்றித் தெரியும்? அதனைத் தொடர்ந்து உலகெங்கும் நடத்தப்பட்ட போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்கள் பற்றியும் தெரியும்? ஒரு ஆட்டோக்காரர் சீமான் தமிழ்நாட்டுக்காரர் இல்லை என்று சொல்கிறார். பெரும்பான்மையான தமிழர்கள் வாழும் தமிழகத்தில் ஏன் இந்த நிலமை? ஒரு சாதாரண துணை நடிகரையே பிரபலமாக்கும் சக்தி தொலைக்காட்சிக்கும் ஊடகங்களுக்கும் இருக்கிறதே. ஏன் அவர்களை அதனைப் பயன்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு உருவாக்கக் கூடாது? இப்படி பலதரப்பட்ட எண்ணங்கள் குறுக்கும் நெடுக்குமாக என் மூளையில் ஓடிக்கொண்டிருந்தன.

அவ்வேளையில் யாரோ இரு பெண்கள், அலுவலகத்தின் உள்ளே அமர்ந்திருந்த எம்மை உற்று நோக்கி, “இவங்களும் நாடகத்துல நடிக்கிறாங்களா?” என கேட்க எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. “இவங்களும் நடிகைதான். மலேசிய நாடகத்துல நடிக்கிறாங்க,” என அந்த நாடக கோஷ்டியில் இருந்த இன்னொருவர் பதில் சொல்ல, “மலேசியா நாடகமா? அது எப்ப வருது?” என அந்தப் பெண்களில் ஒருவர் அப்பாவியாய் கேட்டார். அடப்பாவிகளா! மலேசியா என்பது ஒரு நாடு. அதனை நாடகத்தின் தலைப்பு என்று நினைத்துவிட்டார்கள் போலும். பாவம், அந்த கிராம மக்களைத்தான் எப்படிக் குறைச் சொல்வது? ஆட்சியாளர்கள் அல்லவா அவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட தகுந்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

“இவர்களெல்லாம் கிராமத்தான்கள். இவர்களுக்கு வெளியுலகம் தெரியாதம்மா. தொலைக்காட்சி தொடர் நாடகங்களைப் பார்த்து காலம் கழிப்பவர்கள்,” என மணி ஐயா சொன்னார். அவரது குரலில் சற்று ஏமாற்றமும் இயலாமையும் பிரதிபலித்தது. உள்ளே இருந்த நாடகக் குழுவினர் சிலர் துணை நடிகரைக் கிண்டல் செய்ய வெளியே செல்லவும், அந்த நாடகத்தின் இயக்குனர் அன்புச்செல்வன் என்னுடன் பேச்சுக் கொடுத்தார். மேடை, தொலைக்காட்சித் தொடர்களில் எனக்குச் சற்று அனுபவம் இருந்ததால் நானும் ஆர்வமுடன் சில விடயங்களை அவரிடம் கேட்டுத் தெரிந்துக் கொண்டேன். அறிவழகனோ உள்ளே இருந்த இடப்பற்றாகுறையை குறைக்க எப்போதோ வெளியே சென்றுவிட்டார்.

சற்று நேரம் உரையாடியப் பிறகு நாடகக் குழுவினர் எங்களிடம் விடைப்பெற்றுச் சென்றனர். பெருத்த மழை பெய்து ஓய்ந்தது போல் இருந்தது! நெருங்கிய உறவுகள் நீண்ட நாள் உடனிருந்து திடீரெனப் பிரிவதைப் போல் ஓர் உணர்வு. மணி ஐயாவிடம் மேலும் சில நிமிடங்கள் கதைத்துக் கொண்டிருந்தோம். அதற்குள் அவரிடம் உதவி வேண்டி கிராம மக்கள் இருவர் வந்துவிட்டனர். ஒருத்தனுக்கு உதவி செய்தாலே அதை நாளிதழில் பிரசுரித்து சுய விளம்பரம் தேடும் இந்த கலியுகத்தில், இப்படி பலருக்கு உதவி புரிந்து விளம்பரமில்லாமல் எளிமையான வாழ்க்கை வாழும் மணி ஐயா என்னுள்ளத்தில் உயர்ந்து நின்றார். இவர்தான் உண்மையான கதாநாயகன்!



கருத்துகள் இல்லை: