செவ்வாய், 4 அக்டோபர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 11)






10 நாட்கள் பெங்களூர், கோலார் தங்க வயல், கோவா என கடந்துச் சென்றன. புனிதா அக்கா பெங்களூர் வந்த 5-வது நாளில் மீண்டும் சென்னைக்கே திரும்பிச் சென்றுவிட்டார். நானும் மீண்டும் தமிழ்நாடு செல்ல தயாரானேன். ஜூலை 18-ஆம் திகதியன்று அதிகாலை 4.30 மணிக்கே எழும்பிவிட்டேன். ஊடகத் துறையைச் சார்ந்த நண்பர் அறிவழகன் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) எம்மை அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருந்ததால், அவருக்குத் தொலைப்பேசி அழைப்பு விடுத்து எழுப்பிவிட்டேன்.

பெங்களூரில் இரவிலும் அதிகாலையிலும் குளிர் அதிகம். நடுங்கியபடியே சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறியை அடைத்தேன். அறையின் ஓரத்தின் சுருட்டிப் போட்டிருந்த துணிகளை எல்லாம் எடுத்து பெட்டியில் மடித்து வைத்தேன். நல்ல வேலை அந்த வீட்டில் சுடுநீர் வசதி இருந்தது. காலையிலேயே குளித்துத் தயாராகி எமது 25 கிலோ எடைக்கொண்ட பையை இழுத்துக் கொண்டு வெளியே வந்தேன். அந்த வீட்டில் இருந்த அனைவரிடமும் விடைப்பெற்ற நிலையில் எமது பையைக் கண்ட வாசன் (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது)  அண்ணா, அதனை அப்படியே வாங்கிக் கொண்டார்.

“இவ்வளவு பாரம் எதுக்கம்மா? அதிகம் அலைச்சல். இங்கே வைத்துவிட்டுப் போ. நீ மலேசியா போகும் போது நானே சென்னை வந்துத் தருகிறேன்,” என்றார். சரியென்று தேவைப்படும் பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு, அந்தப் பெரிய பையை அவ்விடமே விட்டுவிட்டு வந்தேன். வாசன் அண்ணா மோட்டார் வண்டியில் தொடர்வண்டி நிலையத்திற்கு ஏற்றிச் சென்றார். அந்த அதிகாலைப் பொழுதில் குளிர் காற்றைக் கிழித்துக் கொண்டு மோட்டார் சென்றது. அது மனதிற்கு மிகவும் இதமாக இருந்தது. தொடர்வண்டி நிலையத்தில் புத்தூருக்குச் செல்ல அறிவழகனுக்கும் சேர்த்து சீட்டு வாங்கினேன்.

முன் கூட்டியே பதிவு செய்யாததால் நெருசலில் சிக்க வேண்டிவரும் என அறிவழகன் எனக்குப் பயமூட்டிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்திலேயே புத்தூர் செல்லும் வண்டி வந்தது. வாசன் அண்ணாவோ முன்பதிவு செய்த பெட்டிக்குள் ஏறச் சொல்லி எங்களை வற்புறுத்தினார். அந்தப் பெட்டிகள் காலியாக இருந்ததால் இருவருமே சற்றுத் தயக்கத்தோடு அந்தப் பெட்டுக்குள் ஏறி அமர்ந்தோம். அறிவழகன் எனக்கு நேர் எதிரில் அமர்ந்துக் கொண்டார்.

அறிவழகன், பிரபலமான ஒரு இதழில் எழுத்தாளராகப் பணிபுரிபவர். எம்மை விட வயதில் சிறியவர். இருப்பினும், பல விடயங்களை அறிந்து வைத்திருந்தார். எதனையும் துருவித் துருவிக் கேட்டுத் தெரிந்துக்கொள்ளும் ஆர்வம். எதனையும் முகத்துக்கு நேரே சொல்லிவிடும் துணிவு. பிறர் மனதை புண்படுத்தாத சுபாவம். கொஞ்சம் சிறுபிள்ளைத்தனம், நிரம்பக் காதல் என ஒரு அழகானக் கதாப்பாத்திரம். சாயலில் சினிமா நடிகர் ஜீவா போல் இருப்பார். அவரது பேச்சும் அப்படித்தான் இருக்கும்.

எனது முதல் தொடர்வண்டிப் பயணம் அது. வண்டி புறப்பட்ட சில நிமிடங்களில் நானும் அறிவழகனும் பல விடயங்களைப் பற்றி கதைக்க ஆரம்பித்தோம். அனைத்தையும் இரசித்து காதலிக்கும்  தன்மை கொண்டவர் அறிவழகன் . அப்படிப்பட்டவர் தனது காதலியைப் பற்றி கூறிய போது ஏதோ கனவுலகில் மிதப்பது போல் இருந்தது. அவர் கண்கள் எங்கோ செல்ல, அணுவணுயாய் இரசித்து தமது காதல் கதையை எம்மிடம் பகிர்ந்துக் கொண்டார். பின்னர், தமது நெருங்கிய தோழி, கோதையைப் பற்றியும் சொன்னார். பெண்கள் மேல் அவருக்கு நல்ல மதிப்பு இருந்ததை அவரது பேச்சின் ஊடே அறிந்துக் கொண்டேன்.

எங்கே சென்றாலும் தன்னுடம் ஒரு சில பத்திரிக்கைகள் அல்லது புத்தகங்கள் உடன் வைத்திருந்தார். தன் தோழிக்குக் கொடுப்பதற்காக வைத்திருந்த கவிதை புத்தகம் ஒன்றை எம்மிடம் நீட்டினார். நட்பைப் பற்றிய அழகான கவிதைகள். “தொடாமல் பேசுதல் காதலுக்கு அழகு, தொட்டுப் பேசுதல் நட்புக்கு அழகு” என்ற வரிகள் எம்மை வெகுவாகக் கவர்ந்தன. அந்த அழகிய தொடர்வண்டிப் பயணத்தில் எம்மை மறந்து நட்புக் கவிதைகளில் மூழ்கினேன். இப்படிப்பட்ட நண்பன் கிடைப்பதற்குப் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

பயணத்தின் போது ஒரு சிலர் வண்டியின் உள்ளே தேநீர், காப்பி, பலகாரங்கள் விற்றுக்கொண்டிருந்தனர். அந்தப் பெட்டியில் நாங்கள் இருவர் மட்டுமே இருந்ததனால் சுதந்திரமாகப் பேச முடிந்தது. அறிவழகன் மட்டும் சுற்றும் முற்றும் திரும்பிப்  பயணச் சீட்டுப் பரிசோதகர் வந்துவிடுவாரா என்று பார்த்துக்கொண்டிருந்தார். பயப்பட வேண்டாம் என்று நான் எவ்வளவோ சொல்லியும் அவர் பயம் நீங்குவதாக இல்லை. ஒருவழியாக புத்தூர் வந்துச் சேர்ந்தோம். அங்கே ஒரு ஆட்டோ பிடித்துப் புத்தூர் பேருந்து நிலையத்தை அடைந்தோம்.

காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை. லேசாகப் பசித்தது. அவ்விடம் ஆளுக்கொரு குவளை பழச்சாறு வாங்கிக் குடித்தோம். பின்னர் அங்கிருந்து மேட்டூர் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்துக் கொண்டோம். ஏற்கனவே பல பயணிகள் பேருந்தில் இருந்ததால் எங்களுக்குச் சேர்ந்து அமர இடம் கிடைக்கவில்லை. மூவர் அமருர்ந்துச் செல்லும் வகையில் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. கால்கள் நீட்டும் இடம் மிகவும் சிறியதாக இருந்தது. நான் ஒரு பெண்மணியின் அருகில் சென்று அமர, அறிவழகன் எனக்குப் பின்னே அமர்ந்துக் கொண்டார்.

அதனால் பயணத்தின் போது அதிகம் பேச முடியவில்லை. அவ்வப்போது தலையை மட்டும் திருப்பி லேசாக புன்னகைத்து வைத்தேன். நீண்ட தூரம் பயணம், வெயில், பசி என அனைத்தும் கலந்து எம்மை அறியாமலேயே உறங்கிவிட்டேன். பேருந்து திடீரென்று சற்று அதிகமாகக் குழுங்க சட்டென்று கண் விழித்தேன். அப்போதுதான் எம் அருகில் அமர்ந்திருந்த பெண்ணின் தோளில் என்னையும் அறியாது தலை சாய்த்துத் தூங்கியதை உணர்ந்தேன். உணர்ந்ததும் கண்களில் இருந்த தூக்கம் அனைத்து எங்கோ பறந்துச் சென்றுவிட்டது.

அந்தப் பெண் என்னிடம் எதுவும் கேட்கவில்லை, சொல்லவும் இல்லை. அப்போதுதான் அந்தப் பெண்ணை உற்று கவனித்தேன். லேசான இளஞ்சிவப்பு நிறத்தில் சேலை கட்டியிருந்தார். சுமார் 35 வயது இருக்கும். தலையில் கொஞ்சம் மல்லிகைச் சரம், வெய்யிலில் சற்று வாடியிருந்தது. திருமணமானவர் என்பதன் அடையாளச் சின்னமாகக் கழுத்தில் மஞ்சள் நிற கயிறு. நல்ல கலையான முகம். நான் அவரை உற்று நோக்குவதை அவர் கவனித்திருக்க வேண்டும். எம் பக்கம் முகத்தைத் திருப்பிச் சிரிக்க, நான் அசடு வழிந்தேன். என்னவோ, அவரிடம் பரிபூரணமாகத் தாய்மை குணம் குடிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். மீண்டும் அதே தோளில் சாய உள்ளம் துடித்தது. சிரமப்பட்டு அதனை அடக்கிக்கொண்டேன்.

ஏற்கனவே நெருக்கித்தான் அமர்ந்திருந்தோம். நான் வேண்டுமென்றே அந்தத் தாய்மையின் கதகதப்பை உணர இன்னும் நெருங்கி உரசி அமர்ந்தேன். அவர் அதனைக் கண்டுக்கொள்வதாக இல்லை. அவரிடம் பேச வேண்டும் போல் இருந்தது. என்ன பேசுவது? “மேட்டூர் செல்ல இன்னும் எவ்வளவு நேரமாகும்?” எனக் கேட்டேன். “இன்னும் 30 நிமிடங்களில் வந்துவிடும். அணையைச் சுற்றிக் கொண்டுச் செல்ல வேண்டும். அதனால்தான் நேரமாகிவிட்டது,” என்றார். என்ன அழகான குரல்.

மீண்டும் என்ன பேசுவதென்று எனக்குத் தெரியவில்லை. எதனையும் யோசிக்கவும் தோன்றவில்லை. பேருந்து மேட்டூர் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. நானும் அறிவழகனும் இறங்கிக் கொண்டோம். தற்செயலாக அந்தப் பெண்ணின் தோளில் சாய்ந்து உறங்கிவிட்டதைச் சொன்னேன். ,”ஐயையோ, பிறகு என்னாச்சு?” என அலறினார். ஒன்றும் ஆகவில்லை எனச் சிரித்தேன்.


கருத்துகள் இல்லை: