திங்கள், 3 அக்டோபர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 10)




அக்காவின் உறவினர் வீட்டில் எங்களை விட்டுவிட்டு அருண் சென்றுவிட்டான். அக்கா அவரது உறவுப் பெண் ஒருவருடன்  கதைத்துக் கொண்டிருந்தார். அப்பெண் கதைத்துக்கொண்டே எங்கள் இருவரையும் முடி முதல் பாதம் வரை கண்களாலேயே அளவெடுத்ததை நான் கவனித்துவிட்டேன். என்னென்னவோ பேசினார்கள். நான் அமைதியாக அமர்ந்திருந்தேன். சில மணித்துளிகள் அவ்விடம்  செலவழித்தப் பிறகு அருண் வந்து எங்களை ஏற்றிக் கொண்டான். மதியம் உணவு உண்ணவில்லை. காலையில் சாப்பிட்ட பொங்கல் இன்னமும் தொண்டையிலேயே நின்றது.

மூவரும் தி நகருக்குச் சென்றோம். அந்த வெய்யிலிலும் தி நகர் விழாக் கோலம் பூண்டிருந்தது. மக்கள் நெரிசல் மிக்க பகுதியில் நாங்கள் மூவரும் நடந்துச் சென்றுக்கொண்டிருந்தோம். போகும் வழியில் ஒருவர் பஞ்சுமிட்டாய் விற்க, அதில் ஒன்றை வாங்கிக் கொண்டேன். வண்ண வண்ண ஆடைகள், சேலைகள், சுடிதார் போன்றவைகளை சாலையில் ஓரங்களிலேயே சிலர் கடை விரித்து விற்றுக்கொண்டிருந்தனர். நானும் அக்காவும் ஒரு சில கடைகளுக்கு ஏறி இறங்கினோம். நாங்கள் எங்கே சென்றாலும் அருண் எங்கள் பின்னாலேயே வந்துக்கொண்டிருந்தான். அது எனக்கு மிகுந்த அசெளகரியத்தை உண்டாக்கியது.

ஐந்து மாடிக் கொண்ட சரவணா ஸ்டோரில் நானும் அக்காவும் நுழைந்தோம். அங்கே ஒரே மாதிரியான சீருடை அணிந்து சிறு வயதுப் பெண்களும் இளைஞர்களும் வேலை செய்துக் கொண்டிருந்தனர். அவர்களைக் கண்டவுடன் எனக்கு ‘அங்காடித் தெரு’ திரைப்படம் தான் நினைவுக்கு வந்தது. பெரும்பான வேலையாட்களின் முகத்தில் கிராமத்துக் களை ஓடியது. அக்கா தமது உறவினர்களுக்கு உடை எடுத்துக் கொண்டிருந்தார். நானும் சில சேலைகள் வாங்கலாம் என்று காட்டன் சேலைகள் இருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்தேன்.

இரட்டைப் பின்னலுடன் சுமார் 16 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணொருத்தி என்னையே உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். அவள் அணிந்திருந்த சீருடையிலிருந்து அவளும் அங்கே வேலை செய்யும் பெண் என்பதை அறிந்துக் கொண்டேன். அவளைப் பார்த்துப் புன்னகைத்தேன். அவளும் சிரித்தாள். அவளிடம் பேச்சுக் கொடுக்க வேண்டும் எனத் தோன்றியதால் ஏதோ ஒரு வர்ணத்தைச் சொல்லி சேலை இருக்கிறதா என்றுக் கேட்டேன். அவள் என் அருகில் வந்து எனக்காகச் சேலைத் தேட ஆரம்பித்தாள்.

“எங்கேயிருந்து வருகிறீர் அக்கா,” என வினவினாள். மலேசியா என்று சொல்ல இன்னும் சில கேள்விகள் கேட்டாள். நானும் அவளை மேலும் தெரிந்துக்கொள்ளும் நோக்கில் சில கேள்விகள் தொடுத்தேன். தான் தூத்துக்குடியைச் சேர்ந்தவள் என்றும் இரண்டு வருட காலமாக அங்கே வேலை செய்வதாகவும் கூறினாள். தமது வீட்டாரைச் சந்தித்து ஒரு வருடம் ஆகப் போகிறதென்றும், அடுத்த வாரம் வீட்டிற்குச் செல்ல தமக்கு விடுப்புக் கிடைத்துவிட்டது என மகிழ்ச்சியுடன் கூறினாள். அங்கேயே நின்று நாங்கள் கதைத்துக் கொண்டிருந்தோம். அவள் பேசிய தமிழ்மொழி சென்னைத் தமிழைவிட சற்று மாறுபட்டிருந்தது.

நாங்கள் இவ்விடம் கதைத்துக்கொண்டிருக்க அக்காவைத் தேடி அருண் வந்தான். அக்கா இன்னொரு பக்கம் இருக்கிறாள் என்றேன். தமக்கு அவசர வேலை ஒன்று இருப்பதாகவும், தாம் உடனே செல்ல வேண்டும் எனவும் கூறினான். உண்மையிலேயே அவனுக்கு அவசர வேலை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. சரி, தொல்லை ஒழிந்தது என, “அவசரமாக இருந்தால் நீங்கள் செல்லுங்கள். நாங்கள் பிறகு வருகிறோம்,” என்றேன். “சரி, நான் புனிதாவிடம் சொல்லிவிட்டுச் செல்கிறேன்,” என அவ்விடத்தை விட்டு அகல முற்பட்டான். அவன் மகிழுந்தில் எமது புத்தகங்கள் இருப்பது நினைவு வர, “காரில் என் புத்தகங்கள் இருக்கிறது. நான் வந்து எடுத்துக்கொள்கிறேன்,” எனச் சொன்னேன்.

“வேண்டாம். நான் பிறகு வந்து தருகிறேன்,” என்றான். இவன் முகத்தில் திரும்பவும் முழிக்க வேண்டுமா என மனதிற்குள் நொந்துக் கொண்டேன். அருண் அகன்ற சில நிமிடங்கள் கழித்து அக்கா எம்மைத் தேடிக் கொண்டு வந்தார். அருண் சென்றுவிட்டதை அவருக்குச் சொன்னேன். தம்மிடமும் வந்துச் சொன்னதாகச் சொன்னார். வாங்கியப் பொருட்களுக்குப் பணத்தைச் செலுத்தினோம். கடையைவிட்டு வெளியேறும் முன், முன்பு எம்மிடம் கதைத்த பெண்ணிடம் சொல்லி விடைப்பெற்றேன்.

கடையை விட்டு வெளியாக உடனேயே சாலையோரத்தில் இருந்த பலதரப்பட்ட வியாபாரிகள் எங்களை மொய்க்க ஆரம்பித்தனர். பொருட்கள் மிகவும் மலிவாகக் கிடைத்தன. இருந்தும் அந்தக் கூட்டத்தில் நடக்கவே மிகவும் சிரமமாக இருந்தது. ஒரு வழியாக கூட்ட நெரிசலிலிருந்து விடுபட்டு சாலையை வந்தடைந்தோம். மதியம் சாப்பிடாததால் பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. சுற்றும் முற்றும் உணவகம் தேடி அலைந்த வேலையில், ஒரே ஒரு பிரியாணிக் கடை மட்டும் கண்ணில் தென்பட்டது.

அது மிகவும் சிறிய கடை. கடையின் உள்ளே ஒரே ஒரு சிறிய மேசையும் நான்கு நாற்காலிகள் மட்டுமே போடப்பட்டிருந்தன. ஈக்கள் அங்குமிங்கும் மொய்த்துக் கொண்டிருந்தன. எங்களால் அதிகம் சாப்பிட முடியாது என்பதால் பகிர்ந்துச் சாப்பிட்டுக் கொள்ளலாம் என் கோழி பிரியாணி கேட்டோம். கை கழுவலாம் என்று குழாயைத் திறந்தேன். ‘தேவர் மகன்’ திரைப்படத்தில் ரேவதி சொல்வது போல் வெறும் காற்றுத்தான் வந்தது. அந்தக் கடைக்காரர் ஒரு செம்பில் நீர் எடுத்து வந்துக் கொடுத்தார். கைகளைக் கழுவிவிட்டு சாப்பிட அமர்ந்தேன். பிரியாணி வந்தது.
பசியோடு பிரியாணியை எடுத்து வாயருகே கொண்டு சென்ற வேளையில் ஒருவித துர்நாற்றம் வீசியது. சரியாக வேகாத, பச்சை இரத்த வாடை!

அக்கா கோழி சாப்பிட மாட்டார். எனவே கோழி எனக்கு, முட்டை அவருக்கு என்று ஏற்கனவே பகிர்ந்தாயிற்று. ஏதாவதுச் சொன்னால் அக்காவும் சாப்பிட மாட்டாரே என்று எதுவும் சொல்லாமல் மிகவும் சிரமப்பட்டு மூச்சைப் பிடித்துக் கொண்டு சாப்பிட்டேன். அந்தக் கடையில் இருந்த இரண்டு பேரும் எங்களை மிகவும் அன்போடு உபசரித்ததால் ஏதும் சொல்லி அவர்கள் மனதைப் புண்படுத்தவும் நான் விரும்பவில்லை. ஒருவழியாகச் சாப்பிட்டு முடித்து, புன்சிரிப்புடன் அக்கடையை விட்டு வெளியேறினேன். ஆனால், நான் சாப்பிட்டக் கோழியோ வயிற்றுக்கும் தொண்டைக்கும் நடுவில் சிக்கிக்கொண்டிருந்தது.

என் நண்பர் ஒருவரைத் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு தி நகரிலிருந்து வளசரவாக்கம்  செல்ல ஆட்டோவிற்கு எவ்வளவு செலவாகும் எனக் கேட்டுத் தெரிந்துக் கொண்டு ஆட்டோ எடுத்தோம். “அருண் நம் மீது மிகுந்த அக்கறை இருப்பது போல் காட்டிக்கொண்டான். எனக்குத் திருமணம் என்று சொன்னதும் நடுத்தெருவில் விட்டுச் சென்றுவிட்டான். இவனைப் போய் நம்பினேனே,” என அக்கா புலம்பிக் கொண்டே வந்தார். எனக்கோ அவன் மகிழுந்தில் மாட்டிக் கொண்டிருக்கும் எம் புத்தகங்கள் பற்றிய கவலை. அவனிடம் சொல்லி மறவாமல் எமது புத்தகங்களை வந்துக் கொடுக்கச் சொல்லும்படி அக்காவிடம் நினைவுறுத்தினேன்.

அக்கா ஏதோ சிந்தனையில் இருக்க, நான் ஆட்டோக்காரரிடம் பேச்சுக் கொடுத்தேன். அவர் பேசிய சென்னைத் தமிழை மிகவும் இரசித்தேன். தமிழக அரசியல், வாழ்வியல், பொருளாதாரம் என பல விடயங்களைப் பற்றி பேசினேன். அவ்விடயங்களைப் பற்றிய தெளிவு அவரிடம் இருப்பதாகத் தோன்றவில்லை. இருந்தாலும் அவரைப் பற்றி மேலும் தெரிந்துக் கொள்ளும் ஆவலில் பேச்சினைத் தொடர்ந்தேன். அவரும் உற்சாகமாகக் கதைத்தார்.

சீமானைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று மொட்டையாகக் கேட்டேன். “சீமான் இலங்கையைச் சேர்ந்தவர். அவரது மக்களுக்காகக் குரல் கொடுக்கிறார்,” என்றார். நான் சற்று அதிர்ந்தேன். “சீமான் தமிழ்நாட்டுக்காரர். ஈழ மக்களுக்காகக் குரல் கொடுக்கிறார். அவ்வளவே,” என்றேன். “அப்படிங்களா?” என அவர் அப்பாவியாக என்னைக் கேட்டார். “நமக்கு எங்கங்க இதெல்லாம் தெரியுது. காலம் பூரா உழைச்சு குடும்பத்தைப் பார்க்கவே சரியா இருக்கு. ஒரு தடவை என் நண்பர் சொன்னார். சீமான் ஈழத்துக்காரர், சின்ன வயதிலேயே இங்கே வந்துவிட்டார் என்று,” என தன் நிலமையைத் தெளிவுப்படுத்தினார்.

ஆட்டோக்கார அண்ணாவிடம் கதைத்துக்கொண்டே தங்கும் விடுதி வந்தாயிற்று. பிரகாசும் அருணும் எங்களுக்காக அவ்விடம் காத்திருப்பதாகக் கூறினார்கள். அக்காவும் மனம் மாறி என்னுடன் பெங்களூர் வருவதாகச் சொல்லியிருந்தார். விடுதி அறையை அடைந்தவுடன் அவசர அவசரமாக குளித்து, உடை மாற்றி துணிப்பைகளைக் கட்டிக் கொண்டு கிளம்பினோம். அருணும் பிரகாசும் மோட்டார் வண்டியில் வந்திருந்தனர். எனவே எங்களுக்காக ஆட்டோ ஒன்றும் பிடித்திருந்தனர்.

ஆட்டோ ஏறுவதற்கு முன்பு காலையில் வாங்கிய புத்தகங்களை உடன் எடுத்துச் செல்ல அருணிடம் கேட்டேன். “காரிலேயே வச்சிட்டேன். திரும்ப சென்னைக்கு வரும் போது வந்து தருகிறேன்,” என்றான். அவன் பதில் எனக்குத் திருப்தியளிக்கவில்லை. ஆசை ஆசையாக வாங்கிய புத்தகம். திரும்ப வந்து இவன் முகத்தைப் பார்க்க வேண்டுமா என்ற ஆதங்கம் ஒரு பக்கம். புனிதா அக்கா, தனது நண்பர் வித்யா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) வீட்டில் தனது பைகளில் சிலவற்றை வைக்க வேண்டும் எனச் சொல்ல, ஆட்டோ வித்யா வீட்டை நோக்கி பயணமானது. அருணும் பிரகாசும் ஆட்டோ முன்னால் மோட்டார் வண்டியில் சென்றனர். வித்யா ஒரு இசையமைப்பாளர் என்று போகும் வழியில்தான் அக்கா எம்மிடம் சொல்லிக் கொண்டு வந்தார். இவரும் அக்காவின் நண்பர் என்பதால் அருணைப் போன்று நடந்துக்கொள்வாரோ என்ற எண்ணமே முதலில் வந்து நின்றது.

வித்யா வீட்டில் அவரும் அவரது தம்பியும் இருந்தனர். வித்யா வீட்டிற்கு வந்ததுமே அருணும் பிரகாசும் தங்களுக்கு வேலை இருப்பதாகச் சொல்லி கலண்டுவிட்டனர். நாங்கள் சென்று அக்காவின் பைகளை வைத்துவிட்டு சிறிது நேரம் உரையாடினோம். வித்யா தாம் இசையமைத்த பாடல் ஒன்றை எங்களிடம் போட்டுக் காட்டினார். நன்றாகத்தான் இருந்தது. கோடம்பாக்கம் பேருந்து நிலைத்தில்தான் பெங்களூருக்குச் செல்லும் பேருந்து எடுக்க வேண்டும். அங்கே அக்காவின் வேறு சில நண்பர்களும் காத்துக்கொண்டிருந்தனர்.

அனைவரிடமும் சிறிது நேரம் உரையாடிவிட்டு, பேருந்து நிலையத்தில் அருகிலிருந்த ஒரு உணவகத்தில் இரவு உணவு உண்டோம். அந்த இரவிலும் பேருந்து நிலையம் கலை கட்டி இருந்தது. ஏதோ சந்தையில் நுழைந்த ஒரு உணர்வே மேலோங்கி இருந்தது. சரியாக இரவு மணி 10.30-க்கு பெங்களூர் செல்லும் பேருந்து வந்தது. அது ‘ஸ்லீபிங் கோட்ச்’. அதாவது, பேருந்தின் உள்ளே இரு பக்கமும் சில படுக்கைகள் போடப்பட்டிருக்கும். பயணிகள் படுத்துக் கொண்டே நீண்ட தூரப் பயணம் செய்வதற்கு ஏதுவாக அது அமைக்கப்பட்டிருந்தது. அக்காவின் நண்பர்கள் அனைவரிடமும் விடைப்பெற்று விட்டு பேருந்தில் ஏறிக் கொண்டோம். பெங்களூரை நோக்கி எங்கள் பயணம் தொடர்ந்தது.

கருத்துகள் இல்லை: