திங்கள், 3 அக்டோபர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 9)
அதிகாலை எனக்கு முன்னதாகவே புனிதா அக்கா எழுந்துவிட்டார். அக்காவின் திட்டத்தின்படி இன்று வடபழனி முருகன் கோவிலுக்குச் செல்ல வேண்டும். பின்னர் அக்காவின் உறவினர் வீட்டுக்குச் செல்ல வேண்டும். இன்றிரவு நான் மட்டும் தனியே பெங்களூர் செல்வதாக இருந்தது. இரவு முகம் கழுவாமல் உறங்கிவிட்டதால், மேலும் பல பருக்கள் தோன்றியிருந்தன. கடலை மாவை முகத்தில் அப்பிவிட்டு நேற்றைய சம்பவங்களைப் பற்றி அக்காவுடன் கதைத்துக் கொண்டிருந்தேன். அருணுக்கு அக்காவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதை அறிந்துக்கொண்டேன்.

இதுதான் நல்ல தருணம் என்று, “இனி அவன் நம்முடன் வரவேண்டாம். நாமே பார்த்துக் கொள்ளலாம். அவன் நமக்கு உதவி புரிவதாகத் தெரியவில்லை. நிலமையை இன்னும் மோசமடையச் செய்கிறான். நீங்கள் எங்காவது செல்ல வேண்டும் என்றால் என்னிடம் சொல்லுங்கள், நான் ஏற்பாடு செய்கிறேன்,” என்றேன். “அதுதான். எனக்கும் அவன் செய்கை பிடிக்கவில்லை. ஆனால், இன்று அவன் நம்மை கோவிலுக்கு அழைத்துச் செல்ல வருவதாகக் கூறியிருக்கிறான். இன்று மட்டும் அவனுடன் சென்று வருவோம்,” என்றார்.

எனக்கு அதில் உடன்பாடு இல்லாமல் இருந்தது. நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறை மிகவும் பெரிது. வாடகையும் அதிகம். குளிக்கவும், உறங்கவும் மட்டுமே பயன்படுத்தக் கூடிய அறைக்கு அதிகம் செலவழிப்பதில் எமக்கு உடன்பாடு இல்லை. தவர, அருண் எங்களை அழைத்துச் சென்ற உணவகங்கள் அனைத்தும் நவீனமாகவும் அதிக விலை கொண்டதாகவும் இருந்தது. இங்கு வந்து சுகபோக வாழ்க்கை வாழ நான் வரவில்லையே. அப்படி வாழ்வதற்கு நான் ஒன்றும் பணக்காரி அல்லவே? ஒரு வேளை, மலேசியாவில் வசிப்பதால் எங்களைப் பணக்காரர்கள் என அருண் நினைத்துவிட்டான் போலும். எங்குச் சென்றாலும் அவனுக்கும் சேர்த்து நாங்கள்தான் செலவழித்தோம்.  சரி, அக்காவுக்காகப் பொறுத்துக் கொள்வோம் என இருவரும் ஆயத்தமானோம்.

நேற்று போலவே இன்றும் விடுதியின் பணியாள் தேநீர் வேண்டுமா எனக் கேட்க, நேற்று வந்த சிறிய குவளை நினைவிற்கு வந்தது. “அக்கா, எனக்கு இரண்டு குவளைக் கொண்டு வரச்சொல்லுங்கள். தேநீர் சுவையாக இருந்தது. ஆனால், போதவில்லை,” என்றேன். அக்கா தனக்கும் சேர்த்து மொத்தம் 4 குவளைத் தேநீர் கொண்டு வரச் சொன்னார்.

தேநீர் கொண்டு வந்த பணியாள் கொஞ்சம் தயங்கித் தயங்கி, “அம்மா, சொல்கிறேன் என்று கோபித்துக் கொள்ளாதீர்கள். இந்த அறையில் இரண்டு பேர் மட்டுமே தங்க முடியும். நான்கு பேர் தங்குவதாக இருந்தால் அதிகம் வாடகைக் கொடுக்க வேண்டும்,” என்றார். “நாங்கள் இரண்டு பேர் தானே இருக்கிறோம்,” என்று அக்கா குழப்பத்தோடு சொல்ல, அவர் ஏன் அப்படிச் சொன்னார் என எனக்கு விளங்கியது.

“அண்ணா, நீங்கள் மிகவும் சிறிய குவளையில் தேநீர் கொடுக்கிறீர்கள். அது எங்களுக்குப் போதவில்லை. அதனால்தான் ஆளுக்கு இரண்டாக 4 குவளைக் கொண்டு வரச் சொன்னோம்,” என்றதும் அவர் அசடு வழியத் திரும்பிச் சென்றார். அருண் வந்துவிட்டதாக அக்காவின் கைப்பேசிக்குக் குறுந்தகவல் அனுப்பினான். உடனே நாங்கள் கோவிலுக்குச் செல்ல தயாரானோம். அந்த விடுதியின் ஸ்திரி செய்யும் பெட்டி இல்லை. எனவே கொண்டு வந்த பெட்டியைத் துருவி, அதிகம் கசங்காத கறுப்பு வெள்ளைச் சுடிதார் ஒன்றைத் தேடிப் பிடித்து அணிந்துக் கொண்டேன்.

கோவிலுக்குச் செல்வதில் எனக்கு அதிகம் ஈடுபாடு கிடையாது. ஆனால், என்னுடன் வந்த அக்காவுக்கோ அதீத கடவுள் பக்தி. அதற்கென்று எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என முடிவுச் செய்துவிடாதீர்கள். நம்மை மீறிய சக்தி ஒன்று உண்டு என்பதை நான் எப்பொழுதும் மறுத்ததில்லை. அதே சமயம் கோவிலில் நடைப்பெறும் சில வழக்கங்கள் எமக்குப் பிடிப்பதில்லை. அங்குச் சென்றால் அர்ச்சனைச் செய்ய வேண்டும். அதற்கென பணம் செலுத்த வேண்டும். பூசாரிக்கு தட்சணைக் கொடுக்க வேண்டும் என்பன கோவிலில் எழுத்தப்படாதச் சட்டங்களாக இருக்கின்றன.

நான் சிலை வடிவில் இருக்கும் கடவுளை தரிசிக்க எவனோ ஒருவனுக்கு (பூசாரிக்கு) எதற்குப் பணம் கொடுக்க வேண்டும்? எதற்கு அர்ச்சனை சீட்டு வாங்க வேண்டும். எம்மைப் பொறுத்த வரை, கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார், பல வடிவங்களில், பல பெயர்களில் இருக்கிறார். கடவுள் நம்மிடம் எதையும் வேண்டுவது கிடையாது. அப்படியிருக்கையில் கடவுளின் பெயரால், பூசை, வேண்டுதல், யாகம், அபிஷேகம் என செய்யப்படும் மூடநம்பிக்கைகளை எப்படி ஆதரிக்க முடியும்?

இந்தக் கடவுளுக்கு இதுதான் உகந்த நாள், இவருக்கு இதைத்தான் படைக்க வேண்டும் என்பதிலும் எமக்கு உடன்பாடு இல்லை. கடவுள் அனைத்தும் கடந்தவர் என்றால், நாள்களிலும், கோல்களிலும், உணவுகளிலும் பாகுபாடு எதற்கு? இந்தக் கடவுளைப் பற்றி பேச ஆரம்பித்தால் கதை நீண்டுக் கொண்டே போகும். நமது கதைக்கு வருவோம்.

நான், அக்கா, அருண் ஆகிய மூவரும் ஒருவழியாக வடபழனி கோவிலுக்கு வந்துச் சேர்ந்தோம். மகிழுந்தை உரிய இடத்தில் விட்டுவிட்டு கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். சில பிச்சைக்காரர்கள் எங்களைத் தொடர்ந்து வந்து நச்சரித்தனர். நான் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாது நேரே நடந்துச் சென்றுக் கொண்டிருந்தேன். பாவம் அக்கா அவர்களிடம் மாட்டிக்கொள்ள, அருண் அவரை மீட்டு வந்தான்.

கோவிலின் வழி நெடுகிலும் பூக்கடைகள். பூக்கடைகளுக்கு முன்னே பலரின் செறுப்புகள் கிடந்தன. அக்கா ரோஜா மாலை ஒன்று வாங்கினார். இரண்டு முழம் மல்லிகைச் சரம் வாங்கிக் கூந்தலில் சொருகிக் கொண்டாள். எனக்கும் மல்லிகைப் பூச்சூட ஆசைதான். சூடினால் தலை நிறைய சூட வேண்டும். சேலை அணிந்திருந்தால் அழகாக இருக்கும். சுடிதாருக்குப் பூ எதற்கு என ஒன்றும்  வேண்டாமல் அக்காவைப் பின்தொடர்தேன். அவர் பூ வாங்கிய கடையிலேயே எங்கள் செறுப்புகளை விட்டு வைத்தோம்.

கோவிலின் உள்ளே அர்ச்சனைச் சீட்டுகள் விற்பனையாகிக் கொண்டிருந்தன. அக்காவும் பணம் செலுத்தி அர்ச்சனைச் சீட்டுகளை வாங்கி இறைவனை தரிசிக்கப் போனார். கூடவே அருணும் போனான். நான் கோவிலில் உள்ள சிற்பங்களையும், பக்தர்களையும் இரசித்தவாறு அங்கும் இங்கும் நடந்துக் கொண்டிருந்தேன். திடீரென, “யாருப்பா அங்க போட்டோ பிடிக்கிறது,” என ஒரு குரல் சத்தமாக எழுந்தது. அதனைத் தொடர்ந்து, “யாருப்பா அது? யாருப்பா அது?” என பல குரல்கள் எழும்பி ஒரு சிறு கலவரம் போல் உண்டாக, சத்தம் வந்த திசையை நோக்கினேன்.

அங்கே கையில் புகைப்படக் கருவியுடன் அருண் நின்றிருக்க பூசாரி ஒருவர் அவனைக் கண்டித்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் அக்கா. எனக்குள் உள்ளூர சிறு மகிழ்ச்சி. நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்ளட்டும்! அந்தக் கோவிலில் யாரும் எதையும் யாரையும் புகைப்படம் எடுக்கக் கூடாதாம். இது வடபழனியில் வாசம் செய்யும் அருணுக்கு எப்படித் தெரியாமல் போனது என்றுதான் எனக்கு விளங்கவில்லை. நல்ல வேளை, புகைப்படக் கருவி அவன் கையில் இருந்தது.

அக்கா இறைவனைத் தரிசனம் வைத்துவிட்டு அவ்விடம் இருந்த சிறு கடையினுள் சாமிக் கயிறு வாங்குவதற்குச் சென்றார். அவ்விடம் கறுப்பு, சிகப்பு, மஞ்சள் நிறத்திலான சாமிக் கயிறுகள், சின்னச் சின்னச் சிலைகள், தகடுகள், பூசைப் பொருட்கள் என ஏராளமான பொருட்கள் இருந்தன. அதில் எதிலும் மனம் இலயிக்காது திரும்பிச் செல்ல முற்படுகையில், புத்தகக் குவியல் ஒன்று கண்ணில் தென்பட்டது.

எனக்குப் புத்தங்கள் என்றால் கொள்ளைப் பிரியம். தமிழ், மலாய், ஆங்கிலம் என எதுவாக இருந்தாலும் மனதைக் கவர்ந்திருந்தால் வாங்கி வந்து விடுவேன். இரும்பைக் காந்தம் கவர்வது போல புத்தங்கள் என்னைக் கவர்ந்தன. ஏற்கனவே நூல்நிலையத்தில் இரவல் வாங்கிப் படித்திருந்தாலும் அவ்விடம் மலேசியாவைக் காட்டிலும் விலை குறைவாக இருந்ததால் நாயன்மார்கள் வரலாறு, ஐம்பெருங்காப்பியக் கதைகள், இராமாயணம் என புத்தகங்களை அள்ளிக்கொண்டேன். சுமார் இரண்டாயிரம் ரூபாய் பெருமானமுள்ள புத்தகங்கள். எங்கள் நாட்டில் வாங்கினால் அதுவே ஐயாயிரம் ரூபாய் தேறும்.

நேற்று துணிக்கடையில் துணி எடுக்க 200 ரூபாய் செலவழிப்பதற்கே தயங்கியவள் இன்று 2000 ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்குகிறாளே என அக்காவே மலைத்தார். கோவிலை விட்டு வெளியேறி, அருகே இருந்த சரவண பவன் உணவகத்தில் நுழைந்தோம். இதுவும் சைவமா என்ற ஒருவகையான நொந்த மனநிலை. என்ன சாப்பிடுவது என்றே தெரியவில்லை. நான் யோசித்துக் கொண்டிருந்த வேளையிலே, “இங்கு பொங்கல் நன்றாக இருக்கும். பவனேஸ் இதைச் சாப்பிட்டுப் பார். அண்ணே, 2 செட் பொங்கல் எடுத்துட்டு வாங்க,” என அருண் ஆர்டர் செய்துவிட்டான்.

எனக்கு ஒரு பக்கம் கோபம் தலைக்கேறியது. நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நிர்ணயிக்க வேண்டியவள் நானல்லவா? மிகவும் சிரமப்பட்டு எம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். பொங்கல் வந்தது. முன்பின் அதனைச் சாப்பிட்டுப் பழக்கம் இல்லாததாலும், முழுக்கச் சைவமாக இருந்ததாலும், எம்மால் சாப்பிட்டு முடிக்க முடியவில்லை. உணவை வீணாக்குவது எமக்குப் பிடிக்காது. “அருண், என்னால் சாப்பிட முடியவில்லை. நீங்களே சாப்பிடுங்கள்,” என்றேன்.

“நல்லாயிருக்கும் சாப்பிடு,” என்றான். “எனக்குப் பிடிக்கவில்லை,” என்றுச் சொல்லி பார்வையை வேறு பக்கம் திருப்பினேன். “உங்களை யார் அதிகப்பிரசங்கித் தனமாக ஆர்டர் செய்யச் சொன்னது. ஒழுங்காகச் சாப்பிட்டு முடியுங்கள்,” என அக்கா அருணைக் கடிந்துக் கொண்டார். அவனும் அதனைச் சிரமப்பட்டுச் சாப்பிட்ட மாதிரிதான் தெரிந்தது.

அடுத்ததாக அக்காவின் உறவினர் வீட்டுக்குச் செல்ல வேண்டும். எங்களை இறக்கிவிட்டுச் செல்லுமாறும் நாங்கள் சொந்தமாகப் பயணித்துக் கொள்கிறோம் என்று சொல்லியும் அருண் விடுவதாக இல்லை. தமக்கு வேலை இல்லை என்றும் தாமே உடன் வருவதாகவும் கூறினான். எனக்கு அவனிடம் பேசக் கூடப் பிடிக்கவில்லை. மகிழுந்தில் சென்றுக் கொண்டிருக்கும் போது புனிதா அக்கா தாம் விரைவில் ஒருவரைத் திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறினார். அருணின் முகம் சற்று மாறியது. குரலிலும் கொஞ்சம் ஏமாற்றம் தெரிந்தது.

கருத்துகள் இல்லை: