வெள்ளி, 21 ஜூன், 2013

அன்புள்ள பாட்டியும் சிடுமூஞ்சி பேத்தியும் (பாகம் 2)


அவள் தேடிய உறவு கடைசி வரை வரவே வராது என்பதை அவள் உணரவில்லை. பள்ளியில் புத்தகத்தில் இருக்கும் எண்களும் எழுத்துக்களும் அவளுக்கு பயம் காட்டின. அவள் பாலர் பள்ளிக்குச் செல்லாத காரணத்தினால் ஒன்றாம் வகுப்பில் பயிலும் மற்ற மாணவர்களைக் காட்டிலும் பின் தங்கியிருந்தாள். அவளது முகத்தைப் பார்த்து, 'இந்தப் பிள்ளை நன்றாய் படிப்பாள்' என தப்புக்கணக்குப் போட்ட ஆசிரியை மாணவர்களைக் குழு வாரியாகப் பிரித்து அவளை முதல் குழுவில் சேர்த்திருந்தாள். 'அம்மா' என்ற சொல்லைக் கூட படிக்கத் தெரியாமல் திணறிய போது அந்தப் பிஞ்சுக் கரங்களை மூங்கில் கம்பு முதன் முறையாகப் பதம் பார்த்தது.


அவளுக்கு அவமானமாய் இருந்தது. அழுகை வந்தது. எதுவும் விளங்கவில்லை. யாரிடம் முறையிடுவது என்று தெரியவில்லை. தனது எழுதுகோல் பெட்டிக்குள் ஏதோவொரு நாள்காட்டியிருந்து வெட்டி எடுத்த 'சரஸ்வதி' படம் இருந்தது. அதனைக் கையில் ஏந்திக்கொண்டு பார்த்து பார்த்து அழுதாள். தனது தாயே நேரில் தன் குறைகளைக் கேட்பது போல் பாவனை செய்து மனதிற்குள்ளேயே புலம்பினாள். வெள்ளித்தாமரையில் வீணையுடன் வீற்றிருந்த அந்தத் தாய் அவளதுக் குறைகளைக் காது கொடுத்து கேட்கிறாளா என்பது கூட அவளுக்குத் தெரியாது.


அவள் அவ்வாறு படத்தைப் பார்த்து அழுதுக்கொண்டிருக்க, பக்கத்து நாற்காலியில் அமர்ந்திருந்த சிறுமி ஒருத்தி அதனைச் சட்டென்று பிடுங்கி, "டீச்சர், கயல்விழி இந்தப் படத்தைப் பார்த்து பார்த்து அழறா" என்று ஆசிரியரிடம் அதனை நீட்டினாள். கயல்விழி! ஆம், அதுதான் நமது கதாநாயகியின் பெயர். கயலைப் போன்ற விழிகள் கொண்டவள். கறுப்பு நிறம், சுருண்ட கேசம், சிங்கப்பற்கள், பெரிய மூக்கு! அதுதான் அவளின் அடையாளம். சீத்தா ஆசிரியர் கயல்விழியை உற்று நோக்கினார். அவர் பார்வை மாறியிருந்தது. 'இந்தப் படம் உனக்கு யார் கொடுத்தா?" என்ற கேள்விக்கு அவளிடமிருந்து எவ்வித பதிலும் இல்லை.


"நாளைக்கு உன் அம்மாவை பள்ளிக்கு வரச்சொல்."


"பாட்டிதான் இருக்காக்க."


"அம்மா எங்கே?"


"தெரியாது." அழுகை நின்றபாடில்லை.


ஆசிரியருக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. கயல்விழியை இரண்டாம் குழுவிற்கு மாற்றிவிட்ட பிறகு அவர் அவளிடம் எதுவும் கேட்பதில்லை. கயல் அன்று முழுவதும் சோகமாக இருந்தாள். தன் தாய் இருந்திருந்தால் நிச்சயம் பாலர் பள்ளிக்குத் தன்னை அனுப்பியிருப்பாள். ஒன்றும் படிக்கத் தெரியாமல் தான் இன்றைக்கு அடிவாங்கியிருக்க நேர்ந்திருக்காது என வருந்தினாள். அவள் அடி வாங்கிய விடயத்தை ஒருவரிடமும் சொல்லவில்லை. வகுப்பில் இரண்டாவது குழுவில் இருந்தும் அவள் மூன்றாம் தர மாணவியாகவே இருந்துவந்தாள்.


அடுத்ததாக மலாய் படிக்கத் தெரியாத காரணத்தினால் மலாய் ஆசிரியர் ஒருவரிடம் கிள்ளு வாங்கினாள். அவள் அழும்போதெல்லாம் அவளுக்கு ஆறுதல் அளித்தது அவளிடம் இருந்த சரஸ்வதி படம் ஒன்று மட்டுமே. சக மாணவர்களுடன் அவள் அதிகம் சேர்வதில்லை. சின்னஞ்சிறு பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களைப் பற்றி பெருமையாகப் பேசும் போது பாவி இவள் என்ன செய்வாள்? பிஞ்சிலேயே கயல் தனிமையை நாடினாள். அதன் காரணமாக பாட்டியிடமும் அவள் சரியாகப் பேசுவதில்லை.


மற்றவர்கள் மெத்தையில் படுக்க, தம்மை பாட்டி தரையில் பாய் விரித்து படுக்க வைத்த போது அவள் தனிமையை உணர்ந்தாள். தன் வயதையொத்த பிள்ளைகள் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாய் வளர்கையில், தனக்கு மட்டும் அத்தைமார்கள் பிடிக்காமல் தூக்கி எறியும் துணிகளை மாட்டிவிட்டதில் அவளுக்கு உடன்பாடில்லை. பக்கத்து வீட்டு கல்யாணிக்கு இன்னமும் அவள் அம்மாதான் சோறூட்டிவிடுகிறாள். இவளோ ஏழு வயதிலேயே சட்டையைத் தானே 'அயர்ன்' செய்யவும், பள்ளிக் காலணியைத் துவைக்கவும் பழகியிருந்தாள். கயல்விழி வளர வளர அவளுள்ளே ஏங்கங்களும் தனிமையின் தாக்கங்களும் வளர்ந்துக்கொண்டே வந்தன.


பாட்டி அவளை பாசமாகவே பார்த்துக்கொண்டாள். தாயின் அன்பினை பாட்டியின் அன்பு ஈடு செய்ய முடியாது என்பதை அவள் உணரவில்லை. இரண்டாம் வகுப்புச் செல்லும் வேளையில் கயல் தம்மை 'டியூசன்' எனப்படும் துணை வகுப்பு அனுப்புமாறு பாட்டியிடம் கேட்டாள். இரண்டு மாதங்கள் சென்றும் வந்தாள். மூன்றாம் மாதம் தம்மால் பணம் செலுத்த முடியாது என்று பாட்டி அவளை துணை வகுப்பிலிருந்து நிறுத்திவிட்டார். பாவம் பாட்டி. கருமியான தாத்தாவிடம் குடும்ப செலவிற்கு பணம் கேட்டு சண்டையிட்டே அவளது குடும்ப வாழ்க்கை கசந்து போனது. எது எப்படியிருந்தும் இதில் பாதிக்கப்பட்டது கயல்விழி! அவளுக்கு அழுகையும் ஆத்திரமும் வந்தது. அழுதாள்...எப்பொழுதும் போல் சரஸ்வதி தேவியிடம் புலம்பித் தீர்த்தாள்.


மூன்றாம் வகுப்பிற்குச் செல்லும் போது அவளுள் பல மாற்றங்கள் ஏற்பட்டன. தானாக முயற்சி செய்து படிக்கக் கற்றுக்கொண்டாள். பள்ளிப் புறப்பாட நடவடிக்கைகள் அனைத்திலும் கலந்துக்கொண்டாள். வீட்டிற்கு வந்த பிறகும் எதையாவது படித்துக்கொண்டே இருந்தாள். ஆரம்பத்தில் பாட்டிக்கு வீட்டு வேலைகள் செய்ய உதவியாக இருந்தாள். காய்கறி நறுக்குவதிலிருந்து, வீடு பெருக்குவது வரை அனைத்தையும் செய்து வந்தாள். ஆனால், அந்தக் கூட்டுக் குடும்பத்தில் மற்ற பிள்ளைகள் ஒன்றும் செய்யாமல் இருக்க, தம்மை மட்டும் அத்தைமார்களும் சித்தப்பா பெரியப்பாமார்களும் கூப்பிட்டு கூப்பிட்டு வேலை கொடுத்தது அவளை என்னவோ செய்தது.


வெளியூரிலிருந்து வரும் அத்தையின் துணிப்பைகளை வண்டியிலிருது இறக்குவதிலிருந்து, அவர்கள் கேட்கும் சிறு சிறு பொருட்களைக் கடைக்கு ஓடிச் சென்று வாங்கி வந்த போதும், ஏதோ ஒன்று அவள் நெஞ்சைக் குத்திக்கொண்டிருந்தது. வீட்டில் அனைவரும் வெளியில் செல்லும் போது, வாகனத்தில் இடம் பற்றவில்லை என்று நொண்டிச்சாக்குச் சொல்லி அவளை மட்டும் தனியே விட்டுச் சென்ற மாமாவின் வஞ்சகம் அவளை அரித்துக்கொண்டுதான் இருந்தது. பழவகைகளும் சாப்பாட்டு வகைகளும் அளவாக இருக்கும் வேளையில், "கயல் இதெல்லாம் சாப்பிடமாட்டா. நீங்க எடுத்துக்கோங்க, " என பாட்டி முந்திக்கொண்டுச் சொல்லி தமது ஆசையில் மண் அள்ளிப் போட்டது அவளுக்குப் பிடிக்கவில்லை.


தனக்கு அங்கு எதுவும்/எவரும் சொந்தமில்லை என்ற எண்ணம் அவளுள் அடிக்கடி எழுந்தது. விளைவு? அவள் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. அளவோடு சிரிப்பாள். அதிகம் படிப்பாள்.


இப்பொழுதெல்லாம் அவள் எதற்கும் ஆசைப்படுவது இல்லை. வீட்டிற்கு உறவினர்கள் வந்தார்கள் என்றால், தனக்குப் புறப்பாட நடவடிக்கை என்று சொல்லி பள்ளிக்குச் சென்றுவிடுவாள். அதன் காரணமாகவே பள்ளி போட்டி விளையாட்டுக்கள் அனைத்திலும் கலந்துக்கொண்டு தன் கவனத்தை திசை திருப்பக் கற்றுக்கொண்டாள். வீட்டில் யாவரும் வெளியே செல்ல ஆயத்தமானால் தனக்குப் பாடம் இருக்கிறது வர இயலாது என்று இவளாக முன்கூட்டியே தெரிவித்துவிடுகிறாள். வீட்டில் புதுவகை உணவுகள் இருப்பின், "இதெல்லாம் நான் சாப்பிட மாட்டேன்," என்று பொய் சொல்ல பழகியிருந்தாள். பசித்தாலும் பசிக்கவில்லை என்பாள். சின்ன வயதிலேயே அவள் சுயகட்டுப்பாட்டினை ஏற்படுத்துக் கொண்டாள். அந்தப் பிஞ்சி மனசில் ஏற்பட்ட காயங்களைப் பாட்டி அறிந்திருக்கவில்லை.


....தொடரும்.....

கருத்துகள் இல்லை: