செவ்வாய், 29 மே, 2012

வலியும் அழுகையும்…
எதற்காக இந்த வலி?
என்ன தவறு செய்தேன் நான்
எப்படி மறக்க முடிகிறது உன்னால்?
கட்டி அணைத்து முத்தம் பதித்த நாட்களை?
கையோடு கைகோர்த்து சுற்றி திரிந்த இடங்களை?

இவ்வளவுதான் காதலா?
மரணிக்கும் வரையில் மடியில் கிடப்பேன் என்றாயே
காதலுக்கும் மரணம் உண்டா?

உயிர்ப்பூக்கள் வேண்டாம் என்றேன்
ஏன் என்று வினவினாய்
பூக்களின் வாட்டம் மனதை வாட்டும் என்றேன்
பூப்போன்ற எம் மனதை வாட்ட
எப்படி மனம் வந்தது உனக்கு?

எனது பலவீனம் நானே அறிகிறேன்
நீதான், உன் காதல் தான் எனக்கு எல்லாமே
நீயே எம்மை விட்டுச் சென்ற பிறகு
நான் மட்டும் எப்படி வாழ்வது?

சிறகொடிந்த பறவையாய் நான்
பறக்கச் சொன்னால் எப்படி பறப்பது?
காலொடிந்த குதிரையாய் நான்
பந்தயத்தில் எப்படி வெல்வது?
உயிரற்ற பிணமாக நான்
வாழச் சொன்னால் எப்படி வாழ்வது?

என் மனம் உனக்குத் தெரியாதா
என் காதல் உனக்குப் புரியாதா
எனக்கே துரோகம் இழைத்தாயே
எம்மிடமே பொய்யுரைத்தாயே?
இதுதான் உண்மைக் காதலா?
வலிதான் காதலின் பெயரா?

ஒன்றும் சொல்லாமல் சென்றுவிட்டாயே?
என்னைத் தனிமையில் தவிக்க விட்டுவிட்டாயே

என்னைத் தொட்ட கரங்களால்
இன்னொருவளைத் தொடுவது நியாயமா?
என்னிடம் பேசிய மொழிகளை
வேறொருத்தி கேட்கலாமா?
எனக்குச் சொந்தமான உன்னை
இன்னொரு கரங்களில் தரலாமா?

இது உண்மைக்குக் கிடைத்த பரிசா?
என் அன்பிற்கான சன்மானமா?
என் இதயத்திற்குத் தகுந்த விஷமா?
என் உயிரைக் கொல்லும் வழியா?

ஏன் வந்தாய் அன்பே?
என்னை விட்டுச் செல்லவா?
காதல் என்ற பெயர் சொல்லி
காமம் தீர்க்கவா?

சந்தோஷம் தருவேன் என்றாய்
வாழ்வே தோஷமானது ஏனோ?
கண் போன்று காப்பேன் என்றாய்
என் பார்வையை பறித்துச் சென்றாய்!
உயிரின் உயிரே என்றாய்
என்னுயிரே என்னை விட்டுச் சென்றாய்!
நண்பர்கள் நடுவே சிரிக்கிறேன்
கண்களில் ஓரம் அமைதியாய் நீர்த்துளிகள்
யாரும் காணா வண்ணம் துடைக்கிறேன்
மீண்டும் வழிகிறது….சிரிக்க முடியவில்லை
கழிவறைக்கு ஓடுகிறேன்
சத்தமின்றி உரக்க அழுகிறேன்
இதயம் வலிக்க வலிக்க அழுகிறேன்
கண்ணீர் ஊற்றாய் வழிந்தோடுகிறது!

கண்கள் காயும் வரை அழுகிறேன்
உன்னோடு நானிருந்த நாட்கள்
உன் மடி மீது துயில் கொண்ட இரவுகள்
நீ தூங்கி நான் பார்த்த பொழுதுகள்
அனைத்தும் கண் முன்னே நிழலாடுகின்றன
காய்ந்த கண்கள் மீண்டும் பனிக்கின்றன…

உன்னுடன் வாழவும் முடியவில்லை
உன்னை பிரிந்து இருக்கவும் இயலவில்லை
என்னைக் காயப்படுத்தவோ, கொல்லவோ
ஒரே ஒரு ஆயுதம் மட்டுமே உனக்குத் தேவை
அது ஏற்கனவே உன்னிடம் நான் கொடுத்த அன்பு!

என் பலவீனம் அறிந்துக்கொண்டாய்
அதன் மூலம் எம்மை பழித்தீர்த்தாய்?
என்ன கொடுமை செய்தேன் உனக்கு?
ஏன் இந்த தண்டனை எனக்கு?

நீ சிரிக்கிறாய், நான் அழுகிறேன்
உனக்காக நான் ஏன் அழ வேண்டும்?
அழ மாட்டேன், என்னருமை அறியாத
என் காதலின் புனிதத்தை உணராத
அறிவில்லா உனக்காக நான் அழவில்லை!

எனக்காக நான் அழுகிறேன்
என் முட்டாள்தனத்தை நினைத்து அழுகிறேன்
உனக்காக வீணாக்கிய நாட்களை எண்ணி அழுகிறேன்
என் மனதின் சுமை தீர்க்க அழுகிறேன்
என் வலியின் வேதனை தாங்காமல் அழுகிறேன்!
கருத்துகள் இல்லை: