வெள்ளி, 25 மே, 2012

என்னை நானே வதைக்கிறேன்!
கன்னத்தில் அறைகிறேன்
சுவற்றினிலே இடிக்கிறேன்
தலையினிலே அடிக்கிறேன்
தற்கொலைக்கு முயல்கிறேன்!

எனக்கு வாழ்க்கை சலிக்கவில்லை; வெறுத்துவிட்டது
நம்பிக்கை குறையவில்லை; இறந்துவிட்டது
உணர்ச்சி கூடவில்லை; மறத்துவிட்டது
ஆன்மாயில் உயிர்ச்சியில்லை; மடிந்துவிட்டது!

நான் பைத்தியமில்லை
இது தண்டனை…
எனக்கு நானே கொடுக்கும் தண்டனை
என் முட்டாள்தனத்திற்கு நான் கொடுக்கும் பரிசு!

நம்பி நம்பி ஏமாறும் முட்டாள் நான்
நம்பிக்கை இன்றி எப்படி வாழ்வது?
எனக்கு நானே தீர்மானம் செய்கிறேன்
தவறிழைத்து விட்டதால் தண்டனை விதிக்கிறேன்!

கசிந்துருகி காதல் செய்தேன்
இன்று கண்ணீரில் நனைகிறேன்
மழையிலும் வெயிலிலும் உலவுகிறேன்
என் தோல்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை
அதுவும் செத்துவிட்டதோ?

எக்கச்சக்கமான காயங்கள்
கணக்கு வழக்கு இல்லாத வடுக்கள்
வெந்த புண்ணில் பாயும் வேல்கள்
குற்றுயிரும் குலையுயிருமாக ஆன்மா!

அன்பைத் தேடி அலைந்த வேலையில்
கிடைத்தன கன்னத்தில் அறைகள்!
படும் கேவலமான வார்த்தைகள்
அனுதினமும் அர்ச்சனையாய் பூஜிக்கப்பட்டன…

நிறைகள் எல்லாம் குறையாகக் காணப்பட்டன
பிடித்தன எல்லாம் பிடிக்காததாய் மாறின
அதிக நம்பிக்கை துரோகத்தைப் பரிசளித்தது
ஆழமான காதல் புதைக்குழியில் சமாதியானது!

கண்ணீருக்கு மதிப்பில்லை
காயத்திற்கு மருந்தில்லை
உறவுகள் அனைத்தும் இழந்தேன்
அவனுக்காக ஏங்கி உருகினேன்
இன்று வருவான், நாளை வருவான் என
என்னை நானே சமாதானப்படுத்தினேன்!

மணித்துளிகள் நாட்களாயின
நாட்கள் வாரங்களாயின
வாரங்கள் மாதங்களாயின…
கரம் பிடிப்பதாய் சொன்னவன்
நிர்க்கதியாய் தவிக்கவிட்டான்
என் வேதனையைக் காணாது
கண்களை மூடிக்கொண்டான்!

வலிகள் பெருகி மரணத்தை நெருங்கியது
நம்பிக்கை உடைந்து ஏமாற்றமாகியது
ஏமாற்றங்கள் கூடி விரக்தியளித்தது
பொறுத்து பொறுத்து பொறுமை இழந்தேன்
ஆனால், பொங்கி எழவில்லை!

நியாயம் கேட்டேன்
அநியாயமான பதில்கள் வந்தன
வாக்குறுதிகள் கரைந்துப் போய்விட்டன
பழைய காதல் மரித்துப் போய்விட்டது
மனிதர்கள் மாறிப் போய்விட்டனர்!

மிரண்டு விழித்து உலகைப் பார்த்தேன்
சுற்றிலும் சாத்தான்கள் தாண்டவமாடின
அதன் கோரப்பற்கள் என் உதிரத்தை ருசிப்பார்த்தன
நரம்பில்லா நாக்குகள் கண்ணீரை சுவைத்தன
உருகுலைந்து சின்னாபின்னமானேன்!

தவறு செய்துவிட்டேன்
பொய் என்று தெரிந்தும் மெய் என்ற நம்பினேன்
போலியை அடையாளம் கண்டும் நிஜத்தை விட்டு ஓடினேன்
வலி என்று தெரிந்தும் மென்மேலும் விரும்பினேன்
அதற்கான தண்டனை இன்று பெறுகிறேன்
என்னை நானே வதைக்கிறேன்!


கருத்துகள் இல்லை: