வியாழன், 31 மே, 2012

எப்பொழுதும் உன் கற்பனைகள்…



அதிகாலை அலாரம் அலறியது
நீ எழுவதற்குள் எக்கி அதை அணைத்தேன்
என் கரங்களுக்குள் கட்டுண்டு கிடந்தாய்
உலகை மறந்து உறக்கம் கொண்டாய்
மெல்ல இதழ் பதித்து எழுப்பினேன்…

பனிக்காலை இதழ் பிரிக்கும் மலர் போல
மெல்ல இமை விரித்து எமை பார்த்தாய்
இதழோடு இதழ் பதித்து சுவை தந்தாய்
உடலோடு உடல் இணைத்து சுகம் தந்தாய்…

நீ குளித்து உடைமாற்றி தயாராக
நான் காப்பி கலந்து வைத்தேன் சுமாராக…
கட்டி அணைத்தபடி முத்தம் தந்தாய்
சுகத்தோடு எம்மிடத்தில் விடைப்பெற்றாய்!

நொடிக்கொரு குறுந்தகவல்
இதயத்தில் மென்மை வருடல்
மணிக்கொரு அழைப்பு
மனதினிலே தவிப்பு…

கடிகார முட்கள் மெதுவாய் நகர்ந்தன
முகநூலில் உன் புகைப்படங்கள்
பார்த்து பார்த்து ஏக்கம் தீர்த்தேன்
நீ எழுதிய கவி வார்த்தைகள்
படித்துக் குடித்துத் தாகம் தீர்த்தேன்!

வேலை முடிந்து வீடு நோக்கினேன்
போகும் வழியெல்லாம் உன்னுடன் பேசினேன்
மகிழுந்து நிறுத்துமிடத்தில் உமது வாகனம்!

இதயத்தில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள்
வண்ண வண்ணமாய் சிறகடித்தன
களைப்பு நீங்கி கண்கள் பிரகாசமாயின
கால்களுக்கு புதுத்தெம்பு கிடைத்தது
ஓட்டமும் நடையுமாக குடியிருப்பை அடைந்தேன்!

மின்தூக்கியின் சில நிமிட தாமதம்
அதற்குள் யுகங்கள் வீணாகியது போன்று கலக்கம்
வீட்டு வாசல் நெருங்கிவிட்டேன்…

அதோ என் உயிர்!
நானின்றி தனிமையில்
எனக்குமுன்னே வாசலில்
அளவில்லா பாசத்தில்
காத்திருக்கிறது நேசத்தில்!

ஓடிச்சென்று கட்டி அணைத்தேன்
ஏக்கம் அனைத்தும் சொல்லித் தீர்த்தேன்
வீட்டில் சென்று சமைத்து முடித்தேன்
அவன் பசித்தீர்க்க சோறு ஊட்டினேன்…

என் பாசம் கண்டாய்
கண் கலங்கி நின்றாய்
உன்னைப் போல் பெண்ணை
வாழ்வில் கண்டதில்லை என்றாய்!

மகிழ்ந்தேன் நெகிழ்ந்தேன்
உன் வார்த்தைகளில் கரைந்தேன்!

மாலை மங்கும் நேரம்
சிறு தூறல் போடும் வானம்
தென்றல் வீசும் காற்று
சுகம் அள்ளித் தெளிக்கும் காதல்!

கடற்கரைச் சென்றோம்
கரம்தனை பற்றினாய்
“என் கரத்தில் உன் கரம்
என்றுமே அடக்கம்
நீயின்றி ஒரு வாழ்க்கை
அது உண்மையில் நரகம்”
காதலில் கசிந்துருகி
கவிதை மழை பொழிந்தாய்…

உன் தோளினிலே தலைசாய்த்தேன்
மாரோடு அணைத்துக் கொண்டாய்
அலை ஓசை இரைச்சலிலும் -உன்
இதயத்தின் ஓசைக் கேட்டேன்!

நேரமாகி வீடு சென்றோம்
களைப்பினில் சோர்வுற்றாய்
கால் பிடித்து வலி தீர்த்தேன்
உன் கேசத்தை வருடிவிட்டேன்
அசதியில் நீ தூங்க
இரவெல்லாம் இரசித்திருந்தேன்!

மீண்டும் அலாரம் அடித்தது
அலறியடித்து அணைத்தேன்
கண் இமை பிரிக்காமலேயே
என் அணைப்பில் கிடந்த உன்னை
முத்தமிட்டு எழுப்பினேன்...

உதட்டில் குளிர்ச்சி
கண்விழித்துப் பார்த்தேன்
இரவெல்லாம் கண்ணீரை உள்வாங்கி
உன் சட்டை அணிவித்த என் தலையணை!
இதுதான் நீயா? அத்தனையும் கற்பனையா?

நாம் வாழ்ந்த நாட்கள்
பசுமையான நினைவுகள்
இனிப்பான வார்த்தைகள்
சுகமான பயணங்கள்
அத்தனையும் மறந்துவிட்டாய்?
எம்மை நீங்கிச் சென்றுவிட்டாய்…

நீர்த்துளிகள் தலையணை நனைத்தன
மெல்ல குனித்து முத்தமிட்டேன்
‘லவ் யூ அத்தான்’ என்றேன்
நீ அமைதியாய் சிரித்தாய்
மீண்டும் கட்டி அணைத்தாய்…

நிழல் போல உன் நினைவுகள்
என்றும் மாறா என் காதல்
இன்னொரு கற்பனை தொடங்கிவிட்டது
இனி எப்பொழுதும் உன் கற்பனைகள்!