வியாழன், 3 நவம்பர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 24)


மறுநாள் காலையிலேயே எழும்பியாயிற்று. இன்று நண்பர் ஒருவருடன் மாமல்லபுரம் செல்வதாக இருந்தது. காலை சிற்றுண்டியை முடித்துக்கொண்டு சிறிது நேரம் இணையத்தில் உலாவினேன். கண்ணன் அண்ணா என்னை வடபழனி சாலை போக்குவரத்து சமிக்ஞை (சிக்னல்) அருகே மோட்டார் வண்டியில் அழைத்துச் செல்வதாகக் கூறினார். நண்பர் மாறன் அவ்விடம் காத்துக்கொண்டிருந்தார். அண்ணா குளித்து தயாராகி வருவதற்கு எனக்கு ஏகப்பட்ட குறுந்தகவல்கள் வந்துவிட்டன. நண்பரை சிறிது நேரம் காக்கச் சொல்லிவிட்டு, கண்ணன் அண்ணாவுடன் வடபழனி நோக்கிப் பயணமானேன்.

வடபழனியில் இருந்த ஒரு பேருந்து நிறுத்தத்தில் நண்பர் மாறனுடன் பேருந்துக்காகக் காத்திருந்தோம். இந்த முறை குளிர்சாதனம் பொருத்தப்பட்ட பேருந்தில் ஏறும் வாய்ப்புக் கிடைத்தது. சுமார் 3.30 மணியளவில் மாமல்லபுரத்தை அடைந்தோம். அங்கே இருந்த ஒரு கடையில் மதிய உணவை முடித்துக் கொண்டு சுற்றுலா ஆட்டோ எடுத்தோம். ஆட்டோவின் மூலம் பிரசித்திப்பெற்ற சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட்டோம். வெயில் அதிகமாக இருந்ததால் எம்மால் அதிகமாக அலைந்துத் திரிய முடியவில்லை. ஆங்காங்கே பெரும்பான்மையாக சிலைகளே சுற்றுப் பயணிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.

இந்தோனேசியாவில் உள்ள ஜோக்ஜகர்த்தா நகரில் இந்துப் பாரம்பரியம் இருந்த வேளையில் கட்டப்பட்ட சிற்பங்கள் போலவே இவ்விடமும் காணப்பட்டன. ஆனால், எனக்கென்னவோ, இந்தோனேசியாவில் இன்னும் பழமையான, அதிகமான சிற்பங்கள் இருப்பதாகவே தோன்றுகிறது. மாமல்லபுரத்தில் அதிகப்படியான சிவலிங்கங்கள் இருப்பதைக் கண்டேன். தஞ்சைப் பெரிய கோவிலில் இருந்த நந்தியைப் போன்று இங்கேயும் ஒன்று இருந்தது. நாங்கள் பார்க்க வேண்டிய தலங்கள் அனைத்தும் மிக அருகருவே இருந்ததால் மிக விரைவாகவே அனைத்தையும் பார்த்து முடித்துவிட்டேன். வெய்யிலின் காரணமாகவோ இல்லை அதிகக் களைப்பாலோ எம்மால் சிற்பங்களை முழுமையாக இரசிக்க முடிக்கவில்லை.

மாமல்லபுரச் சுற்றுபயணத்தை முடித்துக்கொண்டு பேருந்தின் மூலம் ‘மாயாஜாலம்’ எனும் திரையரங்கிற்குச் சென்றோம். அரங்கம் மலேசியாவைப் போலவே நவீனமாகக் கட்டப்பட்டிருந்தது. இரவு உணவை அங்கேயே முடித்துக் கொண்டு ‘ஹரி போட்டர்’ திரைப்படத்தைப் பார்த்தோம். படம் முடிந்து வெளியே வந்த பிறகுதான் அவ்விடம் அடை மழை பொழிந்துக் கொண்டிருப்பதை இருவருமே உணர்ந்தோம். இரவு நேரம் ஆனதால், சாலையில் மிகக் குறைவான வாகனங்களே சென்றுக் கொண்டிருந்தன. நாங்கள் ஏற வேண்டிய பேருந்துக்காக அதிகம் நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்த பிறகுதான் பேருந்து அவ்விடம் வந்தது.

மீண்டும் வடபழனி போக்குவரத்து சமிஞ்சை விளக்கின் அருகில் நாங்கள் இறங்கிக் கொண்டோம். அங்கே கண்ணன் அண்ணா மோட்டார் வண்டியில் எனக்காகக் காத்துக்கொண்டிருந்தார். பாவம்! மழையில் முழுமையாக நனைந்துவிட்டிருந்தார். மாறனிடம் விடைப்பெற்றுக் கொண்டு கண்ணன் அண்ணாவின் மோட்டார் வண்டியில் ஏறி வீடு நோக்கி பயணமானோம். இப்போது மழையின் காரணமாக என் நிலை பரிதாபத்துகுரியதாயிற்று. குளிர்காற்று எலும்பின் உள்ளே ஊடுருவ, அடை மழை உடல் முழுவதும் நனைக்க, குளிரில் நடுக்கிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

பாக்கியா அக்கா எங்களுக்காக நித்திரைக் கொள்ளாமல் காத்திருந்தார். முழுகி உடைமாற்றி, அண்ணாவுடனும் அக்காவுடனும் சிறிது நேரம் கதைத்திருந்தேன். பின்னர் அவர்களது திருமண ஒளிவட்டை எமக்குத் திரையிட்டுக் காட்டினர். அதிக களைப்பின் காரணமாக என் கண்கள் அதில் இலயிக்காமல் தானாகவே சொருக ஆரம்பித்தன. அதைக் கவனித்த பாக்கியா அக்கா எம்மை படுக்கைக்கு அனுப்பினார். படுக்கையில் படுத்தவுடனே அடுத்த வினாடி எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் பிணம் போல் உறங்கிவிட்டேன்.

விடிந்ததும் விடியாததுமாக காலையிலேயே எழும்பிவிட்டேன். அழுக்குத் துணிகளைத் துவைத்துப் போட்டுவிட்டு சில முக்கியமான மின்னஞ்சல்களுக்குப் பதில் எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது பாக்கியா அக்கா அறையில் உள்நுழைந்து என்னோடு கதைக்க ஆரம்பித்தார். என் விரலில் அணிந்திருந்த சிறிய தங்கம் மற்றும் வெள்ளைத் தங்கள் கலந்த கணையாழியை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் நிறைய கணையாழிகள் இருந்த போதும், வெள்ளைத் தங்கம் கலந்த கணையாழி இல்லை என கூறினார். அதே போல் இன்னொரு கணையாழி எம்மிடம் இருந்தபடியால், அதனை அவரது விரலில் அணிவித்தேன். மீண்டும் கலட்டிக் கொடுக்க அவர் முயற்சிக்கையில், “இப்போது கலட்ட வேண்டாம். அடுத்த முறை வரும் போது நானே எடுத்துக் கொள்கிறேன். அதுவரையில் உங்கள் விரலிலேயே இருக்கட்டும்,” என அன்புக் கட்டளை விடுத்தேன். அவரும் மிகுந்த சங்கடத்துடன் அதனை ஏற்றுக் கொண்டார்.

பாக்கியா அக்காவும், கவிதாவும் எமது துணிகளையும் பொருள்களையும் பையில் அடக்க உதவிப் புரிந்தார்கள். வரும் அக்டோபர் அன்று நடக்கவிருக்கும் கவிதாவின் திருமணத்திற்கு நிச்சயம் வருவதாக அவர்களுக்கு உறுதியளித்தேன். அதற்குள் பெங்களூரில் விட்டு வந்திருந்த எமது பெரிய துணிப்பையும் வீட்டிற்கு வந்து சேர்ந்தது. கண்ணன் அண்ணாவும் பாலன் அண்ணாவும் அதனை பேருந்து நிலையத்திலிருந்து எடுத்து வந்திருந்தனர். இன்று வீட்டில் சற்று ஓய்வு இருந்ததால் மதிய உணவிற்குப் பின்னர் கவிதாவின் நீண்ட நெடிய கூந்தலை நான் கொண்டு வந்திருந்த முடி சுருட்டும் கருவியின் மூலம் சுருட்டி விட்டு அழகுப் பார்த்தேன். புது விதமான சிகை அலங்காரத்தில் அவள் உற்சாகம் கொண்டது எனக்கு மகிழ்வை அளித்தது.

பின்னர், பாலன் அண்ணா, கண்ணன் அண்ணா மற்றும் பாக்கியா அக்கா ஆகிய மூவரும் என்னை வழியனுப்புவதற்காகச் சென்னை விமான நிலையம் வரையில் வந்தனர். பாக்கியா அக்காவின் முகத்தின் சோகம் படர்ந்திருந்தது. “கவிதா கல்யாணத்திற்குக் கண்டிப்பா வாங்க,” என்று எனது கைகளைப் பிடித்துக் கொண்டு கூறினார். “நிச்சயம் வருகிறேன்,” என மீண்டும் உறுதி கொடுத்தேன். என்னுடன் சென்னை வந்த புனிதா அக்காவும் அவ்விடம் வர, நாங்கள் அவர்களிடமிருந்து விடைப்பெற்று கனக்கும் இதயத்துடன் விமான நிலையத்தின் உள்ளே சென்றோம்.

புனிதா அக்காவுடன் வந்திருந்த மாது, பார்வையாளர்கள் நுழைவுச் சீட்டொன்று வாங்கி எங்களுடன் விமான நிலையத்தின் உள்ளே வந்தார். உள்ளே வழியனுப்ப வருவதற்குக் கூட நுழைவுச் சீட்டு வாங்க வேண்டுமா என சற்று வியப்பாக இருந்தது. எங்கள் பைகளை நிறுத்து, விமானத்தின் உள்ளே வைக்க அனுப்பிவிட்ட பிறகு புனிதா அக்கா அந்த மாதுவோடு கதைத்துக் கொண்டிருந்தார். நான் அங்கே இருந்த ‘கிருஷ்ணா’ இனிப்பகத்தில் சில இனிப்பு பலகாரங்கள் வாங்கிக் கொண்டேன்.

நேரம் ஆகிக்கொண்டிருந்ததால் புனிதா அக்காவிற்கு நினைவுறுத்திவிட்டு விமானம் ஏறுவதற்கு உள்ளே சென்றோம். அப்போதுதான் நாங்கள் குடிநுழைவுத் துறையின் பாரங்களை இன்னும் பூர்த்தி செய்யாதது நினைவு வந்தது. அவசர அவசரமாக அதனைப் பூர்த்தி செய்தி கொடுக்கும் போதுதான், அந்த அதிகாரியின் கணினியில் ஏதோ கோளாறு ஏற்பட்டது. ஏற்கனவே இங்கே நேரமாகிவிட்டது. ஏற்கனவே ஒரு முறை தாமதத்தால் விமானத்தைத் தவறவிட்ட அனுபவம் இருந்ததால் என்னுள் பதட்டம் குடிக்கொள்ள ஆரம்பித்தது.

“தாமதமாகிவிட்டது. கொஞ்சம் சீக்கிரம் வேலையை முடித்து எங்களை அனுப்புங்கள்,” என அந்த அதிகாரியிடம் கேட்டுக் கொண்டேன். சுமார் 45 வயது இருக்கும் அவருக்கு. மிகவும் அமைதியாக, “ஏன் தாமதமாகிடுச்சி? என்ன செய்துக் கொண்டிருந்தீர்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்,” என கேள்வி மேல் கேள்வி அடுக்கிக் கொண்டிருந்தார். எமக்குச் சின்னதாய் எரிச்சல் உண்டானது. “அதான் தாமதமாகிவிட்டதே? இப்படி கேள்வி கேட்டுக்கொண்டிருந்தால் நாங்கள் எப்படி சீக்கிரமாகப் போவது. தயவு செய்து சீக்கிரம் எங்களைப் போக அனுமதியுங்கள்,” என்றேன்.

புனிதா அக்காவை பரிசோதித்த வேறொரு அதிகாரி அவரை எப்பவோ விட்டுவிட்டார். இந்த அதிகாரியின் கணினியில் ஏற்பட்ட பிரச்சனையாலும், இவர் சாவகாசமாக என்னோடு உரையாடிக் கொண்டிருந்ததாலும் நான் மட்டும் இங்கேயே மாட்டிக் கொண்டேன். “இப்போது தாமதமாகிவிட்டால் இன்னும் ஓரிரு தினங்கள் இங்கேயே தங்கிவிட்டுச் செல்லுங்கள்,” என நக்கலான வசனம் வேறு. “விமான நுழைவுச் சீட்டு நீங்கள் வாங்கித் தருவதாக இருப்பின் நான் இன்னும் சில நாட்கள் இருந்துவிட்டுச் செல்கிறேன்,” என சற்று கடுமையான குரலில், முகத்தில் கட்டாயமாக வரவழைக்கப்பட்ட புன்னகையோடு பதில் சொன்னேன். அவர் முகத்தில் ஈயாடவில்லை.

“அதோ, அந்த வரிசைக்குப் போங்கள். அங்குக் கணினி பிரச்சனை இல்லை,” என்று வேறொரு வரிசையைக் காட்டினார். ஒலிப்பெருக்கியில் கோலாலம்பூருக்குச் செல்லும் பயணிகள் விமானத்தில் ஏறுமாறு அறிவிப்புச் செய்துக் கொண்டிருந்தனர். அவசர அவசரமாக குடிநுழைவுத் துறை பரிசோதனையையும் சுங்கத் துறை பரிசோதனையையும் முடித்துக் கொண்டு, எனது கையில் இருந்த தள்ளு பையை இழுத்துக் கொண்டு ஓடினேன். நான் அணிந்திருந்த தூக்குக் காலணி சத்தம் எழுப்பியதால், உள்ளே இருந்த மற்ற பயணிகளின் கவனத்திற்கு உள்ளானேன். எப்படியாவது விமானத்தில் குறித்த நேரத்தில் ஏறினால் போதும் என அவர்களைச் சட்டை செய்யாது ஒருவாறு விமானத்தை வந்தடைந்தேன்.

விமானத்தில் வந்து அமர்ந்த பிறகுதான் நிம்மதி பெருமூச்சே வந்தது. விமானம் ஆகாயதில் பறக்க ஆரம்பித்தது. நான் கடந்த ஒரு மாத காலத்தில் எமது இந்தியப் பயணத்தில் நடந்த நிகழ்வுகளை அசைப் போட ஆரம்பித்தேன். காலம் எவ்வளவு சீக்கிரமாக ஓடிவிட்டது. நடந்தது அனைத்தும் ஒரு கனவு போல் இருந்தது. இதோ, மீண்டும் மலேசியா! இயந்திரத்தனமான வாழ்க்கைக்கு எம்மை விமானத்திலேயே தயார் படுத்துக்கொண்டேன். தாய் மண்ணே வணக்கம்!

முற்றும்

கருத்துகள் இல்லை: