வியாழன், 3 நவம்பர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 23)




குத்துவிளக்கு ஏற்றச் சொன்னார்கள். சக்சேனாவிடம் நான் எதுவும் பேச மாட்டேன், என்னை யாருக்கும் அடையாளப்படுத்தாதீர்கள் என மீண்டும் ஒரு முறை வலியுறுத்தினேன். பல பிரச்சனைகள் பற்றி அவ்விடம் கலந்துரையாடப்பட்டது. நேரமாகிக் கொண்டே சென்றது. காலையிலிருந்து கடுமையான வயிற்று வலி. நிகழ்வு முடிந்த பிறகு பேருந்து எடுக்கும் இடம் சென்றோம்.

மாலை நேரமாதலால் பேருந்தில் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. உட்கார இடம் கிடைக்கவில்லை. நானும் பாக்கியா அக்காவும் நின்றுக் கொண்டிருந்தோம். அடுத்த நிறுத்தத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க முதிய பெண் ஒருத்தர் பேருந்தில் ஏறினார். நின்றுக்கொண்டிருந்த எங்களை இடித்துத் தள்ளிவிட்டு எங்கள் பின்னால் சென்று நின்றுக்கொண்டார். அவர் இடித்ததால் நிலைத் தடுமாறிய பாக்கியா அக்காவின் தோளை நல்லவேளையாக நான் பிடித்துக் கொண்டேன். நானும் பாக்கியா அக்காவும் நின்றுக்கொண்டே நிகழ்வைப் பற்றி கதைத்துக் கொண்டிருந்தோம்.

“ஏம்மா, தலையை திருப்பாதே! முடி முகத்தில படுது,” என அதே மூதாட்டி குரல் கொடுத்தாள். பாக்கியா அக்காவின் நீண்டு விரிந்த கூந்தலைத் தான் அந்த மூதாட்டிச் சொன்னார். அக்கா, தனது கூந்தலை முன் பக்கம் இழுத்துவிட்டார். நான் பேசாமல் இருந்தேன். சற்று நேரத்தில் இன்னொரு நிறுத்தத்தில், மற்றுமொரு பெண்மணி ஏறினார். இவருக்குச் சுமார் 40 வயது இருக்கும். அவரும் பேருந்தில் பின்னால் வர, நானும் பாக்கியா அக்காவும் ஒதுங்கி வழி விட்டோம்.

இதற்கு முன் ஏறிய மூதாட்டி அப்படியே சிலை போல் நிற்க, இந்தப் பெண் அவரை உரசிக் கொண்டு செல்ல வேண்டியதாயிற்று. “ஏம்மா, இடிக்காம போகத் தெரியாதா? இப்படி இடிச்சிக்கிட்டு போறிங்க. கண்ண தொறந்து பார்க்க மாட்டீங்களா?” என கேட்டதும் நான் சற்று அதிர்ந்துத்தான் போனேன். பொது பேருந்தில் இவ்வாறு தெரிந்தோ தெரியாமலோ இடிப்பதும் உரசுவதும் சகஜம்தானே? எதற்காக இவர் இப்படிப் பேசுகிறார்.

“நாங்க வர்றோம்னு தெரியுது தானே? எதுக்கு வழியை அடைச்சிக்கிட்டு நிக்கறீங்க? தள்ளி நிக்க வேண்டியது தானே?” அந்தப் பெண்மணி பதிலுக்குக் கூறினார். “நான் எதுக்குத் தள்ளி நிக்கணும்? நீ தள்ளிப் போக வேண்டியது தானே,” என மூதாட்டி ஒருமையில் பேச ஆரம்பித்து விட்டார். “இடிக்கறதையும் இடிச்சிப்புட்டு பேச்சு வேற,” என மூதாட்டி தொடர்ந்து பேசினார். ஆஹா, இன்று பேருந்தில் குடுமிப்புடி சண்டை ஒன்று நடக்கும் போலிருக்கே எனத் தோன்றியது.

“இடி படாம போகணும்னா கார்ல போக வேண்டியதுதானே? எதுக்கு ‘பஸ்’ல வரணும்,” என அந்தப் பெண் கேட்க. “நான் எதுல வேணும்னாலும் போவேன். எவ என்னை என்ன கேட்கறது?” என மூதாட்டி கத்த, எந்நேரத்திலும் போர் மூளும் அபாயம் தென்பட்டது. நல்ல வேளையாக மூதாட்டி இறங்க வேண்டிய இடம் வந்தது. “நான் கார்ல போவேன், பஸ்லெ போவேன், நடந்துப் போவேன். இவ யார் என்னைக் கேட்கறதுக்கு? இவ கார்ல போக வேண்டியதுதானே? என்னைச் சொல்றா,” என எங்கள் பக்கம் திரும்பி முனகியவாறே மூதாட்டி இறங்கிச் சென்றார்.

நானும் அக்காவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். நாங்கள் இறங்க வேண்டிய இடமும் வந்தது. வீட்டை அடைந்து குளித்து, உடை மாற்றி உறங்கச் சென்றோம். அன்று இரவு முழுக்க எனக்குச் சரியான வயிற்றுப் போக்கு. குறைந்தது 10 முறைக்கு மேல் கழிவறைக்குச் சென்றுவிட்டேன். காலையிலும் அதே நிலை. அன்று ஒரு நண்பரைச் சந்திக்க திட்டமிட்டிருந்தேன். உடல்நிலை காரணமாக சந்திப்பை தவிர்க்க வேண்டியதாயிற்று. உடல் சக்தி அனைத்தையும் இழந்து, சோர்ந்து படுக்கையில் சாய்ந்திருந்தேன். எழ முடியவில்லை. பாக்கியா அக்காவும், சித்தியும் பல தடவை எழுப்பிப் பார்த்தார்கள், முடியவில்லை.

லேசாக காய்ச்சல் வேறு. பாக்கியா அக்கா என் நிலையைப் பார்த்து ரொம்பவே கவலையானார். மறுநாள் உடல் நிலை சற்று சீரானது. மாலை நானும் பாக்கியா அக்காவும் கண்ணன் அண்ணாவுடன் மோட்டார் வண்டியில் சந்திரா பேரங்காடிக்குச் சென்றோம். ஒரு வண்டியில் மூன்று பேர் பயணம் செய்வது சற்று விசித்திரமாக இருந்தது. சந்திரா பேரங்காடி நடிகர் விஜய்க்குச் சொந்தமானது என கண்ணன் அண்ணா கூறினார். அங்கே இருந்த திரையரங்கில், ‘தெய்வத்திருமகள்’ திரைப்படத்திற்கான நுழைவுச் சீட்டுக்களை வாங்கிக் கொண்டோம். இன்று இரவு வீட்டில் அனைவரும் படம் பார்க்கச் செல்லலாம் என முன்பே திட்டம் தீட்டியிருந்தோம். பாலன் அண்ணாவிற்கும் சேர்த்து நுழைவுச் சீட்டு வாங்கினோம்.

திரும்ப வீட்டிற்கு வந்து குளித்து, சாப்பிட்டுவிட்டு திரையரங்கிற்குச் செல்ல தயாரானோம். இரவு 9.10-க்கு படம். கண்ணன் அண்ணா மோட்டார் ஓட்ட, அவருக்குப் பின்னால் பாக்கியா அக்கா அமர்ந்துக் கொண்டார். நீங்களும் ஏறுங்கள் என என்னைத் துரிதப்படுத்த, “நீங்கள்?” என குழப்பத்தோடு கவிதாவை ஏறிட்டேன். “அவள் வருவாள். நீங்க முதல்ல ஏறுங்கோ,” என பாக்கியா அக்கா அவசரப்படுத்தினார். சரியென்று பாக்கியா அக்காவின் பின்னால் நானும் ஏறி அமர்ந்தேன். கொஞ்சம் தள்ளி உட்காருங்கள் என்று சொல்லிவிட்டு பட்டென்று கவிதாவும் அதே வண்டியில் ஏறி அமர்ந்துக் கொண்டாள்.

ஒரு வண்டியில் நான்கு பேர். கண்ணன் அண்ணா வண்டி ஓட்ட, நாங்கள் மூவரும் பின்னால் அமர்ந்திருந்தோம். அது எனக்கு முற்றிலும் புதுமையான அனுபவமாக இருந்தது. சாலையில் வண்டிச் செல்லும் போது நான் மிகுந்த பரவசமடைந்தேன். ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் யாருமே எங்களை வினோதமாகப் பார்க்கவில்லை. இங்கு இப்படி மூன்று நான்கு பேர் ஒன்றாக மோட்டார் வண்டியில் செல்வது சகஜம் போலும்  என அனுமானித்துக் கொண்டேன். படம் முடிந்து மீண்டும் அதே போல் நால்வரும் மோட்டார் வண்டியில் வீடு திரும்பினோம். பாலன் அண்ணா எங்கள் நால்வரையும் பார்த்துச் சிரித்துக்கொண்டே தனது வண்டியில் நண்பருடன்  சென்றுவிட்டார்,

வீடு வந்து சேர அதிகாலை 1.30 ஆகிவிட்டது. வந்ததும் நித்திரையாகிப்போனேன். மறுநாள் காலையிலேயே எழுந்து பாக்கியா அக்காவுடனும் கவிதாவுடனும் கதைத்துக் கொண்டிருந்தேன். நான் இந்தியா செல்கிறேன் என்று தெரிந்தவுடனேயே எனக்குத் தெரிந்தவர்களும் அலுவலக நண்பர்களும் ஏராளமான பொருட்கள் வாங்கி வரும்படி வேண்டியிருந்தனர். வந்து இத்துணை நாட்களிலும் நான் ஒன்றும் வாங்காமலே ஊர் சுற்றிக் கொண்டிருந்தேன். ஊர் திரும்ப இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. அன்று மாலை தி நகருக்குச் செல்வது என முடிவு செய்தோம்.

நான், பாக்கியா அக்கா, கவிதா, கண்ணன் அண்ணா, சித்தி, குழந்தைகள் என குடும்பமே வெளியே செல்ல தயாரானோம். தி நகரில் தேவையான பொருட்கள் வாங்கியப் பிறகு அனைவரும் மெரினா கடற்கரைக்குச் சென்றோம். நாங்கள் மெரினாவை அடைந்த பொழுது நன்றாக இருட்டிவிட்டது. பலத்த காற்று வீசிக்கொண்டிருந்தது. மழை வருவதற்காக அறிகுறிகள் தெரிந்தன. இருந்த போதும், அனைவரும் குதூகலமாக மெரினாவில் ஓடித் திரிந்துக் கொண்டிருந்தோம்.

மெரினா கடற்கரை பரந்து விரிந்துக் கிடந்தது. ஆங்காங்கே சிலர் மணலில் அமர்ந்துக் கதைத்துக் கொண்டிருந்தனர். பெட்டிக் கடைகளில் பானங்கள், நொறுக்குத் தீனிகள் என அங்கங்கே விற்பனையாகிக் கொண்டிருந்தன. திடீரென மழைத்துளிகள் மண்ணில் விழ அவ்விடம் அமைந்திருந்த மீன் கடை ஒன்றுக்குள் நாங்கள் அனைவரும் நுழைந்தோம். இருந்த போதும் பலத்த காற்றினால் சாரல்கள் கடையில் உள்ளேயும் வர நாங்கல் நனையவே செய்தோம்.

அங்கே கடையில் சுடச்சுட பொரித்து எடுக்கப்பட்ட மீனையும் இறால்களையும் வாங்கி உண்டோம். அது அதிக சூடாக இருந்ததால் கண்ணன் அண்ணாவும், சித்தியும் எனக்கு ஆற வைத்து ஊட்டி விட்டனர். மழையால் உடல் நனைய, அவர்களின் எல்லையற்ற அன்பில் என்னுள்ளம் நனைந்துக் கொண்டிருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் மழை நின்றது. மீண்டும் கடலின் அலையோடு விளையாட ஆரம்பித்தோம்.

அவ்விடம் பொய்க் குதிரைகள் பூட்டப்பட்ட சுற்றும் இராட்டினம் ஒன்று இருந்தது. சித்தியின் குழந்தைகள் அதில் ஏறி விளையாட ஆசைப்பட்டனர். உடனே, என்னையும் கவிதாவையும் அவர்களுடன் சேர்த்து ஏற்றிவிட்டு விட்டனர். சிறுப்பிள்ளைத் தனமாக இருந்த போதும் அதனை நான் பெரிதும் விரும்பினேன். இராட்டினம் சுற்றி நின்ற பிறகும் எனது தலை சுற்றிக் கொண்டே இருந்தது. கடற்கரையில் நன்றாக உலவி விட்டு இரவு வீடு வந்துச் சேர்ந்தோம். அன்று இரவு முழுக்க அழகிய இந்தக் குடும்பத்தின் பாசத்தினைப் பற்றி நினைத்துக் கொண்டே நித்திரையில் ஆழ்ந்தேன்.



கருத்துகள் இல்லை: