திங்கள், 6 ஏப்ரல், 2009

எங்கே செல்லும்…? (20)


“அனாதை நாயி! உனக்கு அவ்ளோ திமிரா?” என்று அடிக்கக் கையை ஓங்கிக்கொண்டு வந்தாள் மங்களம். அவ்வளவு நேரம் அமைதியாய் நடப்பதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த கவிதாவின் பாட்டி, “மங்களம்!” என்று கூவிக்கொண்டு அவளருகே ஓடினாள். ஓங்கியக் கையைத் தனது உறுதியானக் கரத்தால் பிடித்து நிறுத்தினாள் கவிதா. அவளது கண்களிலிருந்து நீர் அருவியாய் ஊற்றெடுத்தது.

“திருப்பி அடிக்க எனக்கு ரொம்பெ நேரம் எடுக்காது. இதெல்லாம் உங்க பிள்ளைங்ககிட்ட வச்சுக்கிங்க! என்கிட்ட வேணாம்!” என்று நச்சென்றுக் கூறி, பட்டென்று மங்களத்தின் கையை உதறிவிட்டு, விருட்டென்று அறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டாள் கவிதா.

மங்களத்தால் அந்த அவமானத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கவிதாவின் அறையின் வெளியே நின்றுக்கொண்டு குய்யோ முய்யோ என்று அலறினாள். அவளது அறையை காலால் எட்டி உதைத்தாள். கேட்கத் தகாத கெட்ட வார்த்தைகளால் கவிதாவைத் திட்டினாள். கவிதா அனைத்தையும் அறையின் உள்ளே ஒரு மூலையில் அமர்ந்தவாறுக் கேட்டுக்கொண்டிருந்தாள். வெளியே மங்களத்தின் குரல் மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்தது. பாட்டியின் குரல் கேட்கவே இல்லை.

‘கடவுளே! எனக்கென்று யாருமே இல்லையா? நான் என்ன அனாதையா? என்னைப் பெற்றவர்கள் உயிருடன் தானே இருக்கின்றனர். பின்னர் ஏன் என்னை அனாதை என்றார்? பெற்றோர் இருந்தும் அனாதையா நான்? பாட்டிக்கூட என்னை ஆதரித்து ஒரு வார்த்தைப் பேசவில்லையே. அத்தைச் சொன்னதை அப்படியே எல்லாரும் நம்பிவிட்டார்களா? என்மீது யாருக்குமே நம்பிக்கை இல்லையா? யாருமே எனது நிலையை நினைத்துப்பார்க்க மாட்டார்களா?’

‘இவ்வளவு அவமானங்களையும் தாங்கிக்கொண்டு நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறேன்? எனக்காக யார் இருக்கிறார்கள்? நான் செத்தால் யார் எனக்காக அழுவார்கள்? என் தாய் தந்தை அப்போதாவது என் பிணத்தைப் பார்க்க வருவார்களா?’ என பலவாறாகச் சிந்திந்தாள் கவிதா. அப்படியே ஒருவாறு உறங்கிப் போனாள். எழுந்தப் பிறகுக் கூட அவள் அறையை விட்டு வெளியாகவில்லை. உணவு உண்ணவில்லை. குளிக்கவில்லை. செத்தப் பிணம் போல் கட்டிலேயே சரிந்துக்கிடந்தாள்.

மறுநாள் காலையில் பள்ளிக்கூடம் சென்றாள். அவள் முகத்தில் எந்தவொரு உணர்ச்சியும் இல்லை. பாடத்தில் கவனம் செல்லவில்லை. திடீர் திடீரென்று நேற்றைய சம்பங்கள் அகக்கண் முன்னே வந்து கண்களைக் கனக்கச் செய்தது. ‘தலைவலி’ என்று தனது நண்பர்களையும் ஆசிரியரையும் சமாளித்தாள். அவளது வீங்கிப் போன கண்கள் மட்டும் அவள் மீளாத துயரில் இருக்கின்றாள் என்பதை பறைச்சாற்றிக்கொண்டு இருந்தது.
பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தாள். பாட்டியிடம் எதுவும் பேசவில்லை. உணவு உண்ணவில்லை. அறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டாள். அவளது பாட்டி வெளியிலிருந்துப் புலம்ப ஆரம்பித்தாள்.

“நான் என்னப் பண்ண? நீங்க ரெண்டு பேரும் அடிச்சிக்கிட்டு எம்மேல கோவத்த காமிக்கிறீங்க. நேத்துலேர்ந்து எதுவுமே சாப்பிடல. ஆக்கி வச்ச சோறு கறி என்னத்துக்கு ஆவுறது? எல்லாருக்கும் மத்தியில நாந்தான் மாட்டிக்கிட்டு முழிக்கிறேன். நாய் பொழப்பா போச்சு எம்பொழப்பு!” என்று அழுது தீர்த்தாள். கவிதாவிற்கு மனசுக் கேட்கவில்லை. இருந்தும், வெளியில் செல்ல மனம் இடம் தரவில்லை. மனதைக் கல்லாக்கிக் கொண்டு அறையிலேயே கிடந்தாள்.

“கவி… கவி… கதவைத் திற… அக்கா வந்திருக்கேன்.” என்று சிறிது நேரத்திற்கெல்லாம் தேவியின் தாய் கமலம் அவ்விடம் வந்து கவிதாவின் அறைக்கதவைத் தட்டினார். கவிதா மலர்ந்த முகத்துடன் கதவைத் திறந்தாள்.

“என்னடி பண்ற? சாப்டியா?” என்றார் கமலம். தேவிக்கு நெஞ்சடைத்தது. ‘கடவுளே நான் அழுதுறக் கூடாது,’ என்று தெய்வங்களை வேண்டிக் கொண்டாள். கம்மியக் குரலில், “சாப்பிட்டென்’கா. நீங்க சாப்டிங்களா?” என்று வினவினாள். கமலம் கவிதாவைப் பரிதாபமாகப் பார்த்தார். கவிதாவால் அந்தப் பார்வையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவள் கண்களில் நீர் திரண்டு, இரு துளிகள் கன்னத்தில் வழிந்தோடிக் தரையைத் தொட்டன. சட்டென்று அதனைத் துடைத்துக்கொண்டாள்.

“ரூம்லேயே அடைஞ்சிக்கிட்டு என்னப் பண்ற? வீட்டுப் பக்கட்டே வரமாட்ற? வீட்டுக்கு வா… போகலாம். இன்னைக்கு எங்க வீட்ல சைவம்தான். வந்து சாப்பிடு,” என்றழைத்தார்.

“நான் சாப்டேன்’கா,” என்றாள் கவிதா.

“என்கிட்டயே பொய் சொல்றியா? பாட்டி எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டாங்க. மத்தவங்க பேசினா பேசிட்டுப் போறாங்க. அதுக்காக நீ ஏன் சாப்பிடாம உடம்பைக் கெடுத்துக்கிற? வா, வந்து சாப்பிடு. தேவி உனக்காகக் காத்துக்கிட்டு இருக்கா. நாந்தான் உன்னைக் கூட்டிட்டு வர்றேன்னு சொல்லிட்டு வந்தேன்,” என்று கவிதாவின் கையைப் பிடித்து இழுத்தாள் கமலம்.

அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த அழுகை கவிதாவிற்குப் பீறிட்டுக் கொண்டு வந்தது. ‘எனக்கு இந்த மாதிரி ஒரு அம்மா இல்லையே?’ என்று மனதுக்குள் ஏங்கித் தவித்து அழுதாள். கமலம் அவளைக் கட்டியணைத்துத் தேற்றினார். அவரது கண்களும் கலங்கி நின்றது. கையோடு கவிதாவைக் கூட்டிக்கொண்டு தன் வீடு நோக்கி நடந்தாள் கமலம்.


தொடரும்…

7 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

\\“என்னடி பண்ற? சாப்டியா?” என்றார் கமலம். தேவிக்கு நெஞ்சடைத்தது. ‘கடவுளே நான் அழுதுறக் கூடாது,’ என்று தெய்வங்களை வேண்டிக் கொண்டாள்.\\

அக்கறை தெரிகிறது.

புதியவன் சொன்னது…

//‘இவ்வளவு அவமானங்களையும் தாங்கிக்கொண்டு நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறேன்? எனக்காக யார் இருக்கிறார்கள்? நான் செத்தால் யார் எனக்காக அழுவார்கள்? என் தாய் தந்தை அப்போதாவது என் பிணத்தைப் பார்க்க வருவார்களா?’ //

உணர்வுக் குவியல்...இந்த பாகத்தில் கொஞ்சம் சோகம் அதிகம்...
தொடருங்கள் காத்திருக்கிறோம்...

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

இந்தப் பெண்களே இப்படி தான் போல சகோதரி... :P

கதை நல்லா போகுது... வாழ்த்துகள்...

Sathis Kumar சொன்னது…

தொடர் அருமையாக இருக்கிறது. ’அனாதை’ என்று பிறரால் அந்நியப்படுத்தப்பட்ட கவிதாவின் தனிமைச் சூழலை நன்கு உருவகப்படுத்தியிருக்கிறீர்கள்.

வாழ்த்துகள்...

"உழவன்" "Uzhavan" சொன்னது…

//‘எனக்கு இந்த மாதிரி ஒரு அம்மா இல்லையே?’ என்று மனதுக்குள் ஏங்கித் தவித்து அழுதாள்//

இந்த தாய்ப்பாசம் கவிதாவிற்கு எப்போதும் கிடைக்கட்டுமாக!

RAJMAGAN சொன்னது…

kathaikku aanivere aluthamanaa
uyorotamthan..
adutha todarukkage anavaivarukum
ariya aaval..

கிருஷ்ணா சொன்னது…

யதார்த்தங்கள் எதிர்பார்க்க வைக்கின்றன.. வாழ்த்துக்கள்! தொடருங்கள்..