திங்கள், 19 ஜனவரி, 2009

எங்கே செல்லும்…? (6)


பள்ளிவிடுமுறையும் வந்தது. கவிதா விடுமுறையில் பினாங்கில் இருக்கும் தனது அத்தை வீட்டுற்குச் சென்றுவிட்டாள். இடமோ அவளுக்குப் புதிது. எங்கு கணினி மையம் இருக்கின்றது என்று கூட அவளுக்குத் தெரியவில்லை. மற்றவர்களிடம் கேட்கவும் மனம் வரவில்லை. எனவே தனது நேரத்தையெல்லாம் தன் வயதையொத்த அத்தை மகள் குமாரியுடனேயே கழித்தாள். இருவருக்கும் ஒரே வயதாக இருந்ததால் மிகக் குறுகிய காலத்திலேயே இருவரும் நெருங்கியத் தோழிகளாயினர்.

குமாரியும் கவிதாவும் பல கதைப்புத்தகங்களை வாங்கி மாறி மாறிப் படித்தனர். பூப்பந்து, ‘கேரம்’, பல்லாங்குழி என விளையாடி நேரத்தைப் போக்கினர். அந்த ஒரு மாத காலத்தில் கவிதா நவநீதனை மறந்தே போனாள் என்றுதான் சொல்ல வேண்டும். நீண்ட நாள் விடுமுறைக்குப் பிறகு கவிதா மீண்டும் சுங்கை சிப்புட்டிற்கு வந்தாள். பள்ளித் தொடங்கியது.
மூன்றாம் படிவத்தில் காலடி எடுத்து வைத்தாள். அப்போதுதான் அவள் வாழ்க்கைப் படகு திசைமாற ஆரம்பித்தது.

பூவினைச் சூழும் தேனீக்கள் போன்று அவள் செல்லும் இடமெல்லாம் ஆண்கள் சூழத்தொடங்கினர். பதினைந்தே வயது நிரம்பிய கவிதாவின் மனம் சற்று தடுமாறவே செய்தது. கவிதாவுடன் படிக்கும் மாணவிகள் சிலர் காதல் மயக்கத்தில் மூழ்கியிருந்த சமயம். கவிதாவுக்கோ காதல் என்றால் என்னவென்றே விளங்கவில்லை. எந்தப் பையனாவது பேச்சுக் கொடுத்தால் நக்கலாகப் பேசினாள்; கிண்டல் செய்தாள்; கேள்வி மேல் கேள்வி கேட்டு அவர்களைத் திணறடித்தாள். அவளிடம் பேச வந்த ஆண்களுக்கோ ‘ஏன்’டா இவகிட்ட பேசினோம்’ என்றாகிவிடும்.

கவிதா விளையாட்டுத்தனமாகவே இருந்து வந்தாள். காதல் மயக்கத்தில் இருக்கும் தோழிகளைக் கண்டாள் அவளுக்குச் சிரிப்பு வரும். ஒருசமயம் மாவட்ட அளவிலான ஓட்டப்பந்தயத்தில் கவிதா கலந்துக்கொண்டாள். அவ்வேளையில் பிற பள்ளிகளிலிருந்தும் மாணவர்கள் வந்திருந்தனர். பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய இப்போட்டி மூன்று நாட்கள் தொடர்ந்து நடைப்பெறும். முதல்நாள் காலையிலேயே கவிதா போட்டி நடக்கும் திடலுக்கு அருகாமையில் உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்தாள். அப்போது அவ்விடத்தின் அருகே ஆண் மாணவர்கள் அடங்கிய கூட்டம் ஒன்று வந்தமர்ந்தது.

“ஏய், நாம வேற எங்கேயாவது போய் ‘வார்ம்-அப்’ பண்ணுவோம். அந்தக் குரங்குக் கூட்டம் கண்டிப்பா நம்பல கச்சோர் (தொந்தரவு) பண்ணுவானுங்க,” என்றாள் கோகிலா.

“நாம எதுக்குப் போகணும்? நாமதானே முதல்’ல வந்தோம்? ஏதாவது வாலாட்டிப் பார்க்கட்டும், அப்புறம் தெரியும்!” என்று கடுப்போடு கூறினாள் கவிதா. அவளுக்கு எப்போதும் எதற்கும் பயந்தோ பணிந்தோ போவது பிடிக்காது. என்ன நடந்தாலும் பார்த்துவிடுவோம் என்ற முடிவுடன் இருந்தாள். கவிதா அருகில் இருக்கும் போது அதிகம் பயப்படத்தேவையில்லை என்று எண்ணிய கோகிலா அத்தோடு பேச்சை நிறுத்தினாள்.

“டேய், அங்கப்பாருங்கடா! P.T. உஷா ‘வார்ம்-அப்’ பண்றாங்க,” என்றாள் கூட்டத்தில் ஒருவன்.

இன்னொருவன் திரும்பிப் பார்த்தான். பின்பு சட்டென முகத்தைத் திருப்பிக் கொண்டு தனது காலணிக்குக் கயிறு கட்டுவதில் முனைந்தான். அவனது செய்கையைக் கவிதா கவனிக்கத் தவறவில்லை.

“இன்னிக்கு முதல் பரிசு அவுங்களுக்குத்தான்’டா!” என்றான் இன்னொருவன்.

“ஆமா, பொம்பள பிள்ளைங்க ஓடுறத தான் நாம பார்க்கிறோமே. ஆமை மாதிரி ஓடுங்க. இதுங்க கூட போட்டிப் போட்டா நமக்குக் கூட முதல் பரிசுதான் கிடைக்கும். ஆனா, படம் காமிக்கிறதுல மட்டும் அடிச்சிக்க முடியாது மச்சி. அங்கப் பாரேன், என்னா மாதிரி பில்ம் காமிக்கிதுங்க,” என்றான் இன்னொருவன்.

கவிதா உடற்பயிற்சியை நிறுத்தினாள். அந்தக் கூட்டத்தை நோக்கி ஒரு முறை முறைத்தாள். அத்தோடு நிற்காமல் நேரே விறுவிறுவென்று அவர்களை நோக்கி பெருநடை நடந்துச் சென்றாள்…

தொடரும்…

10 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

\\காதல் மயக்கத்தில் இருக்கும் தோழிகளைக் கண்டாள் அவளுக்குச் சிரிப்பு வரும்\\

விளங்காத வரையில் அப்படித்தான் ...

நட்புடன் ஜமால் சொன்னது…

\\அவளுக்கு எப்போதும் எதற்கும் பயந்தோ பணிந்தோ போவது பிடிக்காது\\

அப்படிதாங்க இருக்கனும் ...

நட்புடன் ஜமால் சொன்னது…

வளமை போல ‘தொடரும்' அருமை

புதியவன் சொன்னது…

கதை சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது
கதையில் நாயகியின் தைரியம் எனக்குப்
பிடித்திருக்கிறது...

தொடருங்கள்...அடுத்த பகுதிக்காக
காத்திருக்கிறேன்...

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,

நட்புடன் ஜமாலின் கருத்துக்கு நன்றி.

\\அவளுக்கு எப்போதும் எதற்கும் பயந்தோ பணிந்தோ போவது பிடிக்காது\\

அப்படிதாங்க இருக்கனும் ...//

அப்படி இருந்தா 'திமிரு' பிடிச்சவள்'னு சொல்றாங்களே அண்ணா...

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம் புதியவன்,

//கதை சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது
கதையில் நாயகியின் தைரியம் எனக்குப்
பிடித்திருக்கிறது...//

உங்களுக்குப் பிடித்திருந்தால் எனக்கும் மகிழ்ச்சிதான். கருத்துக்கு நன்றி.

A N A N T H E N சொன்னது…

//எங்கு கணினி மையம் இருக்கின்றது என்று கூட அவளுக்குத் தெரியவில்லை//

பினாங்கே கணினி மயம் தானே? :D

A N A N T H E N சொன்னது…

//“ஏய், நாம வேற எங்கேயாவது போய் ‘வார்ம்-அப்’ பண்ணுவோம். அந்தக் குரங்குக் கூட்டம் கண்டிப்பா நம்பல கச்சோர் (தொந்தரவு) பண்ணுவானுங்க,” என்றாள் கோகிலா.//
குரங்கா? இதெல்லாம் சரியில்ல... :D
கச்சிரு பன்ற அளவுக்கு கோகிலா ரொம்ப அழகா?

A N A N T H E N சொன்னது…

//அவர்களை நோக்கி பெருநடை நடந்துச் சென்றாள்…//
ஓ.. பெருநடை வீராங்கனையா? நான் என்னமோ ஓட்டபந்தயமுன்னு நினைச்சேன்

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம் அனந்தன்,
வந்துட்டீங்களா?

//பினாங்கே கணினி மயம் தானே? :D//

கவிதா பினாங்கிற்குப் புதுசு'பா. அப்புறம் அவளுக்கு எப்படித் தெரியும்?


//குரங்கா? இதெல்லாம் சரியில்ல... :D
கச்சிரு பன்ற அளவுக்கு கோகிலா ரொம்ப அழகா?//

என்னங்க இப்படி கேட்டுட்டிங்க? வயசான பாட்டியையே இந்தக் காலத்துல விட்டு வைக்க மாட்டாங்க. அப்படி இருக்க, கோகிலா தன்னை அவர்கள் கச்சோர் பண்ணுவானுங்கன்னு பயப்படறது ஒன்னும் பெரிய விசயம் இல்லையே?

//ஓ.. பெருநடை வீராங்கனையா? நான் என்னமோ ஓட்டபந்தயமுன்னு நினைச்சேன்//

விட்டா கதையையே மாத்திருவீங்க போல. வேகமா நடந்துப் போனா'னு சொல்ல வந்தேன்'பா...

உங்கள் கருத்துகளுக்கு ரொம்பெ நன்றி. தொடர்ந்து வரும் ஆதரவுக்கும் நன்றி... :)