புதன், 14 மார்ச், 2012

சென்னைப் பயணம் (பாகம் 11)
காலை மணி 10 அளவில் ‘ஏழாம் அறிவு’ படம் பார்க்கச் செல்லலாம் என பாக்கியா அக்கா அழைத்தார். குடும்பம், உனவினர், நண்பர்கள் என சுமார் 30 பேர் படம் பார்க்கக் கும்பலாகப் புறப்பட்டுச் சென்றோம். படம் பார்த்து முடிந்த பிறகு, நான் மட்டும் தனியே ஆட்டோவில் கோயம்பேடு பேருந்து அருகே நடக்கும் பட்டினி போராட்டத்திற்குச் செல்வதாகக் கூறினேன். அம்மா என்னை பரிதாபமாகப் பார்த்தார். “இப்படியே போராட்டம் போராட்டம் என்றிருந்தால் உடம்பை எப்படியம்மா கவனிக்கிறது? காலையிலிருந்து இன்னும் சாப்பிடக் கூட இல்லை,” என பெரிய சித்தி பரிவுடன் கூறினார்.

அவர்களுக்குப் பதிலாக சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு ஆட்டோ பிடித்து கோயம்பேட்டிற்குச் சென்றேன். அன்றைய தினம் பேரறிவாளனின் தாய் பார்வதியம்மாள், பட்டினி போராட்டம் நடக்கும் இடத்தின் உரிமையாளர் செளர்தர்ராஜன், கீரா அண்ணா ஆகியோர் அவ்விடம் இருந்தனர். ஒருவர் மாற்றி ஒருவராக பிரமுகர்கள் உரையாற்றிக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென அடுத்ததாக உரையாற்ற வருமாறு எம் பெயரை அறிவித்துவிட்டனர். இந்தத் திடீர் அறிவிப்பால் நான் அதிர்ச்சியடைந்தேன். என்ன பேசுவதென்றே எனக்குத் தெரியவில்லை. “மனசுல பட்டத தைரியமா பேசு,” என கீரா அண்ணா தெம்பூட்டினார்.

நானும் சில நிமிடங்களுக்கு ஏதேதோ பேசினேன். கூட்டம் அமைதியாக என் பேச்சினை செவிமடுத்தது. இருந்த போதிலும், எமது குரலில் இருந்த நடுக்கத்தை என்னாலேயே உணர முடிந்தது. பேசி முடிந்து அமரும் போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் வந்து, “இவ்வளவு அருமையாக பேசுவீர்கள் என்று தெரிந்திருந்தால் முன்னதாகவே உங்களைப் பேசச் சொல்லியிருப்போமே,” எனப் புன்னகைத்தார். நானும் பதிலுக்குப் புன்னகைத்து வைத்தேன். கீரா அண்ணா அப்போதே அண்ணிக்கு அழைத்து, “தங்கச்சி அருமையா பேசினா. நான் கூப்பிடும் போதெல்லாம் நீ நிகழ்ச்சிக்கு வரமாட்ற. நாங்க தான் மனைவி பிள்ளைகளைப் போராட்டத்துக்குக் கூட்டி வர்றதில்லனு மைக்கிலேயே சொல்லிட்டா,” என்றார். அவர்களின் ஆதரவும் அன்பும் எம்மை நெகிழச் செய்தன.

எனக்கு அடுத்ததாக பேரறிவாளனின் தாயார் உரையாற்றினார். அவரின் பேச்சு வந்திருந்தோரின் நெஞ்சைக் கலங்கச் செய்தது. “நான் செய்த தப்பு ஒரு நல்லவனைப் பெற்றது,” என அவர் கூறிய போது அவரின் கண்கள் குளமாயின. தள்ளாத வயதிலும் நீதி வேண்டி அந்தத் தாய் படும் அலைச்சலும், சிரமும் சொல்லில் அடங்கா. போராட்டம் முடிந்த பிறகு அண்ணா சில தோழர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். போராட்டத்திற்காக அவ்விடத்தினை இலவசமாக வழங்கிய செளந்தர்ராஜன் ஐயா எனது பெயரட்டையைக் கேட்டுப் பெற்றுக் கொண்டார். இலவசமாக எனக்கு இரு புத்தகங்களையும் வழங்கினார். சற்று நேரம் அவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன்.

பின்னர் தலைவர் பிரபாகரன் உருவம் பதித்த சாவி மாட்டல்களையும் (கீ செயின்ஸ்), சில புத்தகங்களையும் வாங்கிக் கொண்டேன். புத்தகம் என்றால் எனக்கு அலாதிப் பிரியம். மாலை 6 மணியளவில் கோடம்பாக்கத்தின் அமைந்திருக்கும் அண்ணாவின் அலுவலகத்திற்குச் சென்றோம். திரைப்படத்துறையைச் சார்ந்த அண்ணாவின் தோழர்கள் சிலர் எங்களுடன் அலுவலகத்திற்கு வந்தனர். நாளை நான் மலேசியா திரும்ப இருப்பதால் இன்று தன் கையால் சமைக்கப்படும் உணவை கண்டிப்பாகச் சாப்பிட வேண்டும் என ஏகலைவன் அண்ணா அன்புக் கட்டளையிட்டார். அவரின் கட்டளையை என்னால் மீற முடியவில்லை.

கடைக்குச் சென்று கோழி இறைச்சி வாங்கி வந்து அவர் சமையலை ஆரம்பித்தார். அவர் சமைக்கட்டும் என நான் காத்திருந்தேன். அண்ணாவும் தோழர்களும் பல விடயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டே மது அருந்த ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் ஆடல், பாடல்கள் அவ்விடம் அரங்கேறின. மிகவும் மகிழ்ச்சியான சூழலாக அது விளங்கியது. தோழர் அருண்ஷோரியும் அவ்விடம் வந்துச் சேர்ந்தார். ஒரு சமயம் கீரா அண்ணா மெய்மறந்து ஆட ஆரம்பித்தார். அவர்களின் சேட்டைகளைப் பார்த்துக்கொண்டே நான் நாற்காலியிலேயே உறங்கிவிட்டேன்.

சமையல் முடிந்த பிறகு அருண்ஷோரி என்னை எழுப்பிவிட்டார். அனைவரும் சாப்பிட உட்கார்ந்தோம். ஏகலைவன் அண்ணாவின் சமையல் நன்றாகவே இருந்தது. அவரின் சமையலை விட அவர் எம்மீது காட்டிய அன்பு எமக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்படிப்பட்ட உறவுகள் கிடைக்கப் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என தோன்றியது. மிகவும் களைப்பாக இருந்ததால் உண்டவும் நான் அனைவரிடமும் விடைப்பெற்றுக் கொண்டேன். இரவு 11 மணியளவில் வீட்டை அடைந்தேன். நேரமாகிவிட்டதால் அப்படியே படுக்கையில் சாய்ந்து கண்ணயர்ந்தேன்.

காலை 7 மணிக்கே எழும்பிவிட்டேன். குளித்து, சேலை உடுத்திக் கொண்டேன். தோழர் அருண்ஷோரியுடன் கீரா அண்ணாவின் வீட்டிற்குச் சென்றேன். அண்ணியுடன் பேசி விடைப்பெற்ற பிறகு, நான், கீரா அண்ணா, அருண்ஷோரி மூவரும் புத்தகம் வாங்க கடைக்குச் சென்றோம். நான் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகங்களைக் கீரா அண்ணா பட்டியலிட்டு வைத்திருந்தார். நாங்கள் வாங்கிய புத்தகங்கள் மட்டுமே 10 கிலோவைத் தாண்டிவிட்டன. காலையிலேயே மலை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. புத்தகங்கள் வாங்கிய பிறகு நானும் அருண்ஷோரியும், ‘கோவை மாநாடு’ தொடர்பான பத்திரிக்கைச் சந்திப்பிற்குச் சென்றோம்.

அவ்விடம் கொளத்தூர் மணி ஐயாவும், பார்வதி அம்மாவும் வந்திருந்தனர். பார்வதி அம்மா எம்மை அடையாளம் கண்டுக் கொண்டு பேசினார். அவரின் எளிமை எம்மை வெகுவாகக் கவர்ந்தது. அவர் எனது மலேசியத் தொடர்பு எண்களைக் கேட்ட போது நான் நெகிழ்ந்துப் போனேன். நேரமாகிக் கொண்டிருந்ததால் அவரிடமிருந்து விடைப்பெற்றுக்கொண்டு, மருத்துவமனை அருகே ‘மரணதண்டனைக்கு எதிராக பெண்கள் ஆர்ப்பாட்டம்’  நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் இடத்திற்கு விரைந்தோம். தோழர் இரமணி அவ்விடம் இருந்தார். சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டேன். பெண்கள் பலரும் அவ்விடம் குழுமியிருந்து ஆர்ப்பாட்டம் செய்தது பாராட்டக்கூடிய விடயமாக இருந்தது.

ஆடல், பாடல், பறை அடித்தல் போன்ற கூத்துகளும் அவ்விடம் அரங்கேறின. பனகல் மாளிகை அருகே கூடங்குளத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்துக்கொண்ட பெண்கள் சிலரையும் அவ்விடத்தில் காண நேர்ந்தது. அவர்கள் அனைவரிடமும் பேசி விடைப்பெற்றுக் கொண்டேன். இறுதிவரை போராட்டத்தில் கலந்துக்கொள்ள முடியாமல் போனதற்காக உண்மையிலேயே வருந்தினேன்.

சற்று நேரத்திற்கெல்லாம் கொளத்தூர் மணி ஐயாவும் அவ்விடத்திற்கு வந்துச் சேர்ந்தார். சென்ற முறை தமிழ்நாட்டுப் பயணம் மேற்கொண்ட போது அவரைச் சந்தித்து உரையாடியுள்ளேன். அதனை அவர் இன்னமும் நினைவு வைத்திருந்தார். அவரிடமும் சிறிது நேரம் உரையாடிவிட்டு வீட்டிற்குக் கிளம்பினோம்.

வீட்டை அடைந்தவுடன் அவசர அவசரமாக குளித்து உடைமாற்றிவிட்டு, பொருட்களை மூட்டைக் கட்ட ஆரம்பித்தேன். அன்றைய தினம் மாப்பிள்ளை வீட்டார் தங்கியிருக்கும் விருந்தினர் வீட்டில்தான் மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தனர். கண்ணா அண்ணா எம்மை அங்கு அழைத்துச் சென்றார். மதிய உணவு உண்டு முடித்து அனைவரிடமும் விடைப்பெற்றுக் கொண்டேன். கண்ணா அண்ணாவும் அம்மாவும் எம்மை வழியனுப்ப விமான நிலையம் வரை உடன் வந்தனர். நான் அம்மண்ணிலிருந்துக் கிளம்பப் போகிறேன் என்பதாலோ என்னவோ வானம் கதறியழுதுக் கொண்டிருந்தது.

அந்தக் கொட்டும் மழையிலும் தோழர் அருண்ஷோரி எம்மை வழியனுப்ப விமான நிலையம் வரையில் வந்திருந்தது எம்மை நெகிழச் செய்தது. சிறிது நாள் பழகிய போதிலும் இவர்கள் எம்மீது காட்டும் பாசத்திற்கும் அன்பிற்கும் விலையேது? சிறிது நேரம் கதைத்துவிட்டு, இறுதியாகக் கைக்குலுக்கிப் பிரிந்த போது நெஞ்சம் வலிக்கவே செய்தது. பயணிகள் காத்திருக்கும் இடத்தில் அமர்ந்து அனைவருக்கும் கைப்பேசியில் அழைத்து நால் செல்வதைத் தெரியப்படுத்திக் கொண்டிருந்தேன். பார்வதியம்மாவுக்கும் மறவாமல் தெரியப்படுத்தினேன்.

பயணத்திற்காகக் காத்திருந்த வேளையில் தூரத்தில் ஏதோ பழக்கப்பட்ட முகம் ஒன்று எம்மை நோக்கி புன்னகைத்தது. அவ்வுருவம் என்னருகே வரவும் யாரென்று கண்டுக்கொண்டேன். மலேசியாவைச் சேர்ந்த விரிவுரையாளர் இளந்தமிழ் ஐயா! மலேசியத் தமிழ் வலைப்பதிவாளர்கள் சந்திப்பிலும் இன்னும் பிற பொது நிகழ்ச்சிகளிலும் அவரைச் சந்தித்துள்ளேன். அவரைச் சென்னை விமான நிலையத்தில் சந்திப்பேன் என நான் ஒரு போதும் நினைக்கவில்லை. எவ்வளவு சிறிய உலகம்! நான் வரும் போது ஒருவர் எம்மை அடையாளம் கண்டுக்கொண்டார், போகும் போது இன்னொருவரைப் பார்க்கிறேன்.

இளந்தமிழ் ஐயாவோடு சிறிது நேரம் கதைத்துக் கொண்டிருந்தேன். அடுத்ததாக நடத்தவிருக்கும் நிகழ்வுகளைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். நாங்கள் இருவரும் ஒரே விமானத்தில் தான் பயணம் செய்ய இருக்கிறோம். சரியாக இந்திய நேரம் மாலை 5.50 மணிக்கு விமானம் சென்னையிலிருந்துப் புறப்பட்டது.  விமானத்தில் ஏறிய சில நொடிகளிலேயே அசதியில் கண்ணயர்ந்தேன். எனது இனிமையான பயண அனுபவங்கள் கனவுகளாக மாறி தமிழ்நாட்டினையே சுற்றிக்கொண்டிருந்தன. அடுத்த முறை மீண்டும் வருவேன்… தமிழ்நாட்டு கிராமங்களைக் காண….

***முற்றும்***

கருத்துகள் இல்லை: