புதன், 14 மார்ச், 2012

சென்னைப் பயணம் (பாகம் 10)




பாக்கியா அக்காவின் வீட்டிலிருந்து விருந்தினர் வீட்டிற்குச் சின்னவன் அண்ணா மகிழுந்தில் எங்களை அழைத்துச் சென்றார். எங்களின் போதாத வேளை சாலை விருந்தினர் வீட்டிற்குச் செல்லும் பாதையில் வெள்ளமும் சேறும் நிரம்பி வழிந்தது. மகிழுந்தில் சக்கரம் சேற்றில் மாட்டிக்கொள்ளும் என்ற அச்சத்தினால் சின்னவன் அண்ணா அதனை சற்று தொலைவிலேயே நிறுத்தி வைத்துவிட்டார். சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு நாங்கள் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு நடந்துச் செல்லும் நிலை ஏற்பட்டது. அந்த நள்ளிரவில் சேற்றிலும் வெள்ளத்திலும் நடந்துச் செல்வது புதிய அனுபவமாக இருந்தது.

இளைய தம்பி தினேஸ் என்னுடன் மெதுவாக நடந்து அதன் சுகத்தை அனுபவித்தான். சில்லென்ற சேற்றில் கால் புதைவதும் பின்னர் வெள்ள நீரில் கழுவப்படுவதும், பின் மீண்டும் புதைவதும் கழுவப்படுவதுமாக நடைப்பயணம் சுகப்பயணமானது. பாதணி அணியாமல் நடந்துச் சென்ற அவ்வேளையில் சில கற்கள் பாதங்களைப் பதம் பார்க்கவே செய்தன. நள்ளிரவு நேரமாததால் வீதி வெறிச்சோடிக் கிடந்தது. நாங்கள் நால்வர் மட்டுமே அவ்விடம் நடந்துச் சென்றுக் கொண்டிருந்தோம். சின்னவன் அண்ணாவும், தேவாவும் முன்னே வேகமாக நடந்துச் செல்ல. நானும் தினேசும் பின்னே மெதுவாகச் சென்றுக் கொண்டிருந்தோம். ஒரு இடத்தில் வெளிச்சமின்றி இருட்டாக இருக்க, நாய்கள் சில கூட்டாக குரைக்க ஆரம்பித்தன. ஏற்கனவே எனக்கு நாய்களைக் கண்டால் ஆகாது.

கால்கள் ஓட்டமெடுக்க தயாராகின. தம்பியைப் பிடித்திருந்த கை இன்னும் இருகியது. அவன் எனது செயல்பாட்டினை அறிந்திருக்கவோ/ ஊகித்திருக்கவோ வேண்டும். “அக்கா, தயவு செய்து ஓடிடாதீங்க. பிறகு நாய்கள் துரத்தினா அவ்வளவுதான். மெதுவா நடந்தே போவோம். அதுகள் ஒன்னும் செய்யாது,” என தைரியம் கூறினான்.. இருந்த போதும் அவனின் நடையின் வேகம் அதிகரித்தது. நானும் சற்று வேகமாக நடக்க ஆரம்பித்தேன். ஒருவாறு வீட்டை அடைந்த பிறகுதான் பயம் அகன்று நிம்மதி பிறந்தது. வீட்டை அடைந்த பிறகு தம்பிகளுடன் அன்றைய அனுபவங்கள் பற்றி சிறிது நேரம் கதைத்துக்கொண்டிருந்தேன். பின்னர் அனைவரும் படுக்கைக்குச் சென்றோம்.

மறுநாள் காலையில் கவிதாவின் திருமணத்திற்குச் செல்ல வேண்டும் என்பதால் அதிகாலை 5.30 மணிக்கே எழும்பிவிட்டேன். தம்பிகள் இருவரும் எழும்பி தயாராக ஆரம்பித்தனர். காலை 6.00 மணியளவில் தோழர் அருண்ஷோரி கைப்பேசிக்கு அழைத்திருந்தார். அவரிடம் 10 முழம் மல்லிகைச் சரம் வாங்கிவரச் சொன்னோம். வாங்கி வந்த 10 முழத்தில் 5 முழம் சரத்தை மட்டுமே தலையில் சூட முடிந்தது. மலேசியாவில் 10 முழம் வாங்கினால் கூட தலை நிறைய சூட முடியாது. பூக்களின் இடைவெளி அதிகமாக விட்டு சரம் பின்னி வைத்திருப்பர். தமிழ்நாட்டிலோ மிகவும் நெருக்கமாகவும் அடர்த்தியாகவும் மல்லிகைச் சரம் பின்னியிருந்தனர். 5 முழமே போதுமானதாக இருந்தது.

நான் சேலை அணிய, தம்பிகள் இருவரும் வேட்டி ஜிப்பா அணிந்திருந்தனர். தெரு முழுக்க வெள்ளமாகவும் சேறாகவும் இருந்ததால் அருண்ஷோரி வீதி வரை தனது வண்டியில் ஏற்றிச் சென்றுவிட்டார். வீதியில் சின்னவன் அண்ணா மகிழுந்தில் எங்களுக்காகக் காத்திருந்தார். பின்னர் அனைவரும் திருமண வீட்டிற்குச் சென்றோம். மணப்பெண்ணின் அலங்காரம் இன்னும் முடியவில்லை. வீட்டுப் பெண்கள் சிலர் இன்னும் சேலை கூட அணியாமல் அவசர அவசரமாகத் திருமணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். தாமதமாகிவிட்டதால் நானும் இயன்றவரையில் அவர்களுக்கு அலங்காரம் செய்ய உதவினேன்.

மற்ற யுவதிகளுடன் சேர்ந்து திருமண மண்டபத்தில் வந்திருந்த அனைவருக்கும் இனிப்பும், சுவைபாணமும் வழங்கினோம். நேரமாகிக்கொண்டே இருந்தது. காலையில் நடக்க வேண்டிய திருமணம். மதியம் 1 மணிக்குத்தான் மணமகளின் கழுத்தில் தாலி ஏறியது. திருமணத்திற்குப் பிறகு கச்சேரி ஒன்று ஏற்பாடு செய்திருந்தனர். மனம் திறந்து சொல்கிறேன், அப்படி ஒரு கச்சேரி இவ்விடம் நடத்தப்பட்டிருக்குமானால், அடித்தே கொன்றிருப்பார்கள். அவ்வளவு கொடுமையாக இருந்தது. திருமணத்தில் எம்மாதிரியான பாடல்களைப் பாட வேண்டும் என்று தெரியாமல் கண்ட குப்பைகளையும் பாடிக்கொண்டிருந்தனர். அதிலும், ஈசன் திரையில் இடம்பெற்ற “வந்தானம்மா வந்தானம்” என்ற பாடல் அச்சூழலுக்குத் தேவையானதாக எமக்குத் தோன்றவில்லை.

இப்படியே கச்சேரி போய்க்கொண்டிருக்க எழுச்சிப்பாடல் ஒன்று வித்தியாசமான குரலில் ஒலிக்கத் திரும்பிப் பார்த்தேன். இயக்கப் பாடல்கள் படிக்கும் சாந்தனின் குரல்தான் அது. அவர் பாடிய அனைத்துப் பாடல்களுமே வந்திருந்தோரை மெய்சிலிர்க்க வைத்தன. அவரின் ஒவ்வொரு பாடலுக்கும் கைத்தட்டல்கள் பலமாக ஒலித்தன. கச்சேரிக்குப் பிறகு இராஜேஸ் அண்ணா சாந்தனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அனைவரும் சாப்பிடச் சென்றோம். சாப்பிட்டு முடிந்து கை கழுவச் சென்ற போது இரு ஆடவர்கள் நெருங்கி வந்து, “எங்கிருந்து வருகிறீர்கள்,” என கேட்டனர். மலேசியா என்றேன். என் பதிலில் அவர்களுக்குத் திருப்தி இல்லை போலும், “பிறந்து வளர்ந்ததெல்லாம் எவ்விடம்?” என மீண்டும் கேட்டனர். “எல்லாமே மலேசியா தான்,” எனக் கூறிவிட்டு சட்டென அவ்விடத்தை விட்டு அகன்றேன்.

வீட்டிற்குச் செல்ல காத்திருக்கும் போது, இன்னும் சிலர் என்னிடம் எனது முதுகில் உள்ள சின்னத்தைப் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா எனக் கேட்டனர். புன் முறுவலுடன் மறுத்துவிட்டேன். தேவா இன்னும் ஏதேதோ வாங்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தான். இன்று இரவு தம்பிகள் இருவரும் பெங்களூர் செல்ல வேண்டும். எனவே அவன் அருண்ஷோரியுடன் வெளியில் சென்றுவிட்டான். நானும் தினேசும் வீடு வந்து சேர மாலை மணி 6 ஆகிவிட்டது. மீண்டும் சேலையுடனும் வேட்டியுடனும் வெள்ளத்தையும் சேற்றையும் கடந்துச் செல்ல வேண்டிய நிலை. எங்கள் நிலையைப் பார்க்க எங்களுக்கே சிரிப்பாக இருந்தது. தம்பியின் பயண அனுபவங்களைக் கேட்டுக்கொண்டே விருந்தினர் வீட்டை அடைந்தோம்.

தேவாவும் அருண்ஷோரியும் பிரியாணி வாங்கி வந்திருந்தனர். சாப்பிட்டுவிட்டு, பொருட்களை மூட்டைக் கட்ட ஆரம்பித்தோம். வீட்டைச் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கும் போது மின்சாரம் தடைப்பட்டுவிட்டது. கைப்பேசியில் உள்ள விளக்கின் வெளிச்சத்தினைக் கொண்டு ஒருவாறு வீட்டைச் சுத்தம் செய்தோம். மின்விசிறி கூட இல்லாமல் வியர்த்து வழிந்தது. பெட்டிகளைச் சுமந்துக் கொண்டு மீண்டும் சேற்றினையும் வெள்ளத்தினையும் கடக்க வேண்டிய நிலை. சின்னவன் அண்ணாவின் நண்பர் தம்பிகள் இருவரையும் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். இறுதியாக வீட்டினைச் சுத்தப்படுத்தி, கதவுகளை தாழிட்ட பிறகு நானும் தோழர் அருண்ஷோரியும் கோயம்பேடு நோக்கி பயணமானோம்.

பேருந்து நிலையத்தில் தம்பிகளைத் தனியே அனுப்ப எனக்கு மனம் வரவில்லை. அவர்களிடம் கைப்பேசி வேறு இல்லை. பேருந்து ஓட்டுநரின் உதவியாளரிடம் பேசி அவரது கைப்பேசி எண்களைப் பெற்றுக் கொண்டேன். தம்பிகளை உரிய இடத்தில் இறக்கிவிடுமாறு அவரை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினேன். ஒருவாறு அவர்களை வழியனுப்பிவிட்டு வீடு வந்து சேர இரவு 11.30 மணியாகிவிட்டது. மிகவும் களைப்பாகவும், குளிராகவும் இருந்ததால் குளிக்கவில்லை. முகம் கழுவி, படுக்கைக்குச் சென்றுவிட்டேன். பெங்களூரில் இருக்கும் தோழர் இராஜேஸ் குமாரை அழைத்து தம்பிகள் ஏறிச் சென்ற பேருந்தின் விபரங்களைக் கொடுத்தேன்.

அதிக களைப்பாக இருந்த போதிலும் எம்மால் நிம்மதியாக நித்திரைக்கொள்ள முடியவில்லை. தம்பிகள் இருவரும் பாதுகாப்பாகப் போய் சேர்ந்தார்களோ இல்லையோ என்ற கவலை மனதை அரித்துக் கொண்டிருந்தது. பேருந்து ஓட்டுனரின் உதவியாளருக்கு 3 முறை அழைத்துப் பேசிவிட்டேன். தம்பிகள் இருவரும் உறங்குவதாகச் சொன்னார். அவர்களை எழுப்ப வேண்டாமென்றுச் சொல்லிவிட்டு, உரிய இடத்தில் அவர்களை இறக்கிவிடுமாறு மீண்டும் ஒருமுறைக் கேட்டுக் கொண்டேன். அதீத அசதியால் அவ்வப்போது கோழித் தூக்கம் போட்டுக் கொண்டேன். அதிகாலை 5 மணியளவில் தம்பிகளை உரிய இடத்தில் இறக்கிவிட்டு விட்டதாக பேருந்து ஓட்டுனரின் உதவியாளர் தெரிவித்தார். தோழர் இராஜேஸ் குமாருக்கு விடயத்தைத் தெரியப்படுத்தினேன். தம்பிகள் அவருடன்தான் இருப்பதாகத் தெரிவித்தார். அதன் பிறகு தான் எனக்கு நிம்மதியே வந்தது.

கருத்துகள் இல்லை: