திங்கள், 3 அக்டோபர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 8)




ஆட்டோ பல ‘ஹான்’ சத்தங்களுக்கிடையில் குண்டும் குழியுமான தார் சாலையில் குலுங்கிக் குலுங்கிச் சென்றுக் கொண்டிருந்தது. எனக்கென்னவோ குதிரை வண்டியில் போவது போன்று இருந்தது. அந்த ஆட்டோ பயணத்தை நான் மிகவும் இரசித்தேன். ஆட்கள் கூட்டமாக இருந்த ஒரு இடத்தில் ஆட்டோ சிறிது நேரம் நின்றது. ஆட்டோக்காரர், “ஸ்சேர் ஆட்டோ, ஸ்சேர் ஆட்டோ,” என்றுக் கூவ இரு பெண்கள் வந்து ஏறிக்கொண்டனர். நானும் அக்காவும் சற்றுத் தள்ளி அமர்ந்தோம். என் முகத்தில் உள்ள குழப்பத்தை அறிந்துக்கொண்ட அக்கா, “ஸ்சேர் ஆட்டோ என்றால் போகும் வழியில் யாரெல்லாம் ஏற வேண்டுமோ ஏறிக்கொள்வார்கள், சின்னப் பேருந்துப் போல. அனைவரும் ஒரே வண்டியில் செல்வதால் வாடகையும் குறைவு,” என தெளிவுப்படுத்தினார்.

ஆட்டோ போகும் வழியெல்லாம் ஆட்களை ஏற்றுவதும் இறக்குவதுமாக இருந்தது. ஆட்டோவின் உள்ளே நெருக்கமும் அதிகரித்தது. ஒரு சமயத்தில் ஆட்டோவின் பின்னருக்கையில் மட்டும் என்னையும் சேர்த்து 7 பேர் அமர்ந்திருந்தோம். அனைவரும் பெண்கள் என்பதால் எவ்வித தடையுமின்றி நெருங்கி உரசி அமர்ந்திருந்தோம். ஆட்டோ சென்றுக் கொண்டிருக்கும் போதே இன்னொரு நபர் ஓடிவந்து முன்னிருக்கையில் ஆட்டோக்காரர் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டார். இது எனக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது.  என்னருகில் அமர்ந்திருந்த பெண்மணி ஒருவர் நொடிக்கொரு தரம் அழைப்பேசியில் யாரையோ அழைத்து தாம் கடந்து வரும் இடங்களின் பெயரையும், சுமார் எத்தனை மணித்துளிகளில் தாம் வந்து சேர்ந்துவிடுவார் எனவும் அனுமானித்துச் சொல்லிக்கொண்டிருந்தார்.

ஓவ்வொருவரும் தாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் 10 ரூபாய் வாடகைச் செலுத்திவிட்டு இறங்கிச் சென்றனர். ஆட்டோ முருகன் இட்லி கடையை நெருங்கவும் நாங்களும் ஆளுக்கு பத்து ரூபாய் கொடுத்துவிட்டு ஆட்டோக்காரருக்கு நன்றி சொல்லி விடைப்பெற்றோம். நாங்கள் வந்திறங்கும் போது வானம் முற்றிலுமாய் கருத்துவிட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நட்சத்திரங்கள் தலைக்காட்டத் தொடங்கியிருந்தன. வழக்கம் போல நான் இரசித்துப் பார்க்கும் நிலவைத் தேடினேன்; காணவில்லை.

அன்று இரவு உணவிற்கு அருணும் எங்களுடன் இணைந்துக் கொள்வதாக புனிதா அக்காவிற்குக் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான். அதனை அக்கா என்னிடம் கூறிவிட்டு என் முகத்தை நோக்கினார். நான் எவ்வித உணர்ச்சியையும் காட்டாது விடுதியை நோக்கி நடந்துக் கொண்டிருந்தேன். விடுதியை அடைந்ததும் நானும் அக்காவும் படுக்கையில் பாய்ந்தோம். எங்கள் செய்கையைப் பார்த்து நாங்களே சத்தமிட்டு சிரித்துவிட்டோம். மிகுந்த களைப்பாக இருந்ததால் சற்று நேரம் அப்படியே படுத்திருந்தோம்.

“என் நண்பன் முகமதுவை இன்று இரவு உணவுக்குச் சந்திப்பதாகச் சொல்லியிருந்தேன். இந்த அருண் ஏன் திடீரென்று வருகிறான் என்று தெரியவில்லை,” என அக்காவே உரையாடலைத் துவக்கினார். அவருக்கும் அருணின் நடவடிக்கைகளில் அதிருப்தி இருப்பதாகத் தெரிந்தது. இன்னும் பேசாதிருப்பதில் அர்த்தமில்லை என்பதை உணர்ந்துக் கொண்டு எனது மனநிலையையும் தெரியப்படுத்தினேன். “அக்கா, நான் தனியாகச் சென்று பழக்கப்பட்டவள். நீங்கள் என்னுடன் வருவதில் எனக்கு எவ்வித மறுப்பும் இல்லை. ஆனால், அருண் அதிக உரிமைக் கொண்டாடுவது போல் இருக்கிறது. இது எனக்குப் பிடிக்கவில்லை. நாம் எங்கே போகிறோம், என்ன செய்கிறோம் என்று அருணிடம் ஒப்புவிக்க எனக்குப் பிடிக்கவில்லை. பிரகாஷ் எவ்வளவோ கண்ணியமாக நடந்துக் கொள்கிறார். எனக்கு அருணைக் கண்டாலே பிடிக்கவில்லை. உங்கள் நண்பர் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் அமைதியாக இருக்கிறேன்,” என்றேன்.

“எனக்கும் அவன் நடவடிக்கைகள் பிடிக்கவில்லைதான். அதிகம் உரிமைக் கொண்டாடுகிறான். நான் பார்த்துக்கொள்கிறேன். அவன் செய்கை ஏதாவது உனக்குப் பிடிக்கவில்லையெனில் அவனிடம் நேரடியாகச் சொல்லிவிடு. எனக்காக அமைதிக் காக்க வேண்டாம்,” என்றார். மனம் சற்று அமைதியானது. அதற்குள் யாரோ கதவைத் தட்டும் சத்தம். இருவரும் திடுக்கிட்டோம். அருணாக இருக்குமோ? நாங்கள் வருவதற்கு முன்பு அழைக்கச் சொல்லியிருந்தோமே? நான்தான் கதவருகில் சென்றேன்.

“யாரது?” என உரத்தக் குரலில் கேட்டேன். “நான்தான் அருண். புனிதா எங்கே? கதவைத் திற பவனேஸ்,” என்றான். எனக்கு ஆத்திரம் தலைக்கு மேல் ஏறியது. என்ன மனிதன் இவன்? இரு பெண்கள் தங்கியிருக்கும் அறைக்கு முன்னறிவிப்பில்லாமல் வந்து உரிமையோடு கதவைத் திறக்கச் சொல்கிறான்??!! என்ன நினைத்திருக்கிறான் மனதில்? நாங்கள் மலேசியா வாழ் தமிழர்கள்தான். அனைவரிடமும் சகஜமாக அன்போடு பழகுவோம். அதற்காக ஒரு ஆண் மகனை எளிதில் அறைக்குள் விட்டுவிடுவோமென்று நினைத்தானோ? நான் கோபத்துடன் அக்காவைப் பார்த்தேன். கதவைத் திறக்க வேண்டாமென சைகைக் காட்டினார்.

“நாங்கள் கிளம்பிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் கீழே வரவேற்பறையில் காத்திருங்கள். தயாராகியப் பிறகு கீழே வருகிறோம்,” என்றேன். “கொஞ்ச நேரம் கதவைத் திற. புனிதாவிடம் பேச வேண்டும்,” என்றான். “நாங்கள் இரு பெண்கள் வெளியே செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறோம். எப்படி கதவைத் திறப்பது. நீங்கள் காத்திருங்கள். நாங்கள் வருகிறோம்,” என்று சற்றுக் கோபமாகக் கூறினேன். “கொஞ்சம் சீக்கிரம் வாருங்கள்,” என்று சென்றுவிட்டான். அதற்குள் அக்காவின் கைப்பேசி அலறியது. அருண்தான்! அக்கா ஆத்திரத்தில் கத்திக்கொண்டிருந்தாள். அது அவருடைய தனிப்பட்ட விடயம் என்றபடியால், நான் குளியறைக்குச் சென்று முகம் கழுவினேன்.

அதிகம் வெய்யிலில் அலைந்ததால் ஏற்கனவே கறுப்பாக இருந்த முகம் இன்னும் கறுத்திருந்தது. ஆங்காங்கே பருக்கள் தோன்றியிருந்தன. கூந்தல் துடைப்பம் போல் காய்ந்துக் கிடந்தது. கூடவே கொண்டு வந்திருந்த கடலை மாவை தண்ணீரில் குழைத்து முகத்தில் அப்பினேன். அது காயும் வரை காத்திருக்க வேண்டும் என்பதால் அக்காவை முதலில் குளிக்கச் சொன்னேன். பின்னர் நானும் குளித்துத் தயாரானேன். கீழே அருண் காத்திருந்தாலும் நாங்கள் அவசரம் காட்டவில்லை. காத்திருக்கட்டும் என்று நிதானமாகவே கிளம்பினோம்.

நான், அருண், அக்கா மூவரும் இரவு உணவுக்காக காரைக்குடி உணவகத்தை நோக்கிப் பயணமானோம். செல்லும் வழியில் அக்காவின் நண்பர் முகமதுவையும் மகிழுந்தில் ஏற்றிக் கொண்டோம். வேண்டுமென்றே அருணிடம் எதுவும் பேசாது முகமதுவிடம் மட்டும் பேசிக்கொண்டு வந்தேன். காரைக்குடியில் இரவு உணவை முடித்த பிறகு முகமதுவை உரிய இடத்தில் இறக்கிவிட்டோம். மேலும் எங்கே செல்லலாம் என அருண் வினவ எனக்கு நித்திரை வருகிறது என்னை விடுதியில் விட்டுவிடுங்கள் என்றேன். அக்கா தனக்கும் களைப்பாக இருப்பதாகக் கூறினாள்.

“நீங்கள் இருவரும் மிகவும் சுறுசுறுப்பான ஆட்கள் ஆயிற்றே. அவ்வளவு சீக்கிரம் உறங்க மாட்டீர்களே,” என்றான். “காலையிலிருந்து அலைந்ததால் களைப்பாக இருக்கிறது,” என்றார் அக்கா. நான் ஒன்றும் பேசாமல் கண்கள் மூடி உறங்குவது போல் பாவனைச் செய்தேன். அவனிடம் பேசுவதைத் தவிர்க்க எனக்கு வேறு வழி தெரியவில்லை. அப்படியே  கண்ணயர்ந்துப் போனேன். “பீச்சுக்கெல்லாம் வேணாம். நேரமாகிவிட்டது. பாவம் பவனேஸ். காரிலேயே தூங்குகிறாள்,” என்ற அக்காவின் குரல் சத்தமாக ஒலிக்கவும் திடுக்கிட்டு விழித்தேன். “வந்தாச்சுப் புனிதா. கொஞ்ச நேரம் இருந்துவிட்டுச் செல்வோம்,” என்று அவன் சொல்ல அக்கா, “எனக்குத் தூக்கம் வருது. நான் இறங்கமாட்டேன். எங்களை விடுதியில் விட்டுவிட்டு நீங்கள் எங்காவது போங்கள்,” என்று கடுப்போடுச் சொன்னார்.

“இவ்வளவு தூரம் வந்தாச்சு,” என அவன் மீண்டும் சொல்ல அக்கா ஏதும் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டது தெரிந்தது. நான் மீண்டும் கண்களை மூடிக் கொண்டேன். பலத்த மழை பொழிய ஆரம்பித்தது. ஒருவழியாக தங்கும் விடுதியின் முன் மகிழுந்து வந்து நின்றதது. நானும் கண் விழித்தேன். தங்கும் விடுதியின் வாசல் கதவு பூட்டப்பட்டிருந்தது! அக்கா கத்த ஆரம்பித்தார்.

“என்ன விடுதி இது? நாங்கள் வருவதற்குள் எப்படி இதனைப் பூட்டலாம்? யாரையாவது அழைத்துத் திறக்கச் சொல்லுங்கள்!” என்று கடுமையானக் குரலில் கூறினார். சில ஆங்கில ‘நல்ல’ வார்த்தைகளும் அவர் வாயிலிருந்து வெளிவந்தன. நான் பேசுவதற்குக் கூட சக்தியின்றி மிகவும் களைப்புற்றிருந்தேன். “நான் கதவில் ஏறி உள்ளே குதிக்கப் போகிறேன். எனக்கு நித்திரை வருகிறது,” எனக் கூற அருண் அலறிவிட்டான். “அப்படி ஏதும் செய்துவிடாதே. இன்னும் சிறிது நேரத்தில் திறந்துவிடுவார்கள். நான் கூப்பிடுகிறேன்,” எனக்கூறி கதவருகில் கூவிக்கொண்டிருந்தான்.

இரு வேளையாட்கள் வந்து கதவைத் திறந்தனர். மழை பொழிந்திருந்ததால் வாசல் முழுக்க வெள்ளமாக இருந்தது. கவனமாகத் தாண்டித் தாண்டிச் சென்ற போதும் எமது காலணிகள் முழுமையாக நனைந்துவிட்டன. அக்கா தாண்டிச் செல்ல முற்படும் போது வழுக்கி விழந்திருப்பார். நல்ல வேளை, சுதாரித்துக் கொண்டார். நான் மேலே அறைக்குச் செல்ல படிகள் ஏறிக்கொண்டிருக்கும் போது, அருண் அக்காவிடம் ஏதோ பேச வேண்டும் என்று சொல்ல அக்கா என்னவென்று கேட்டு அங்கேயே நின்றுவிட்டாள். அறையைத் திறந்து சாவியை அக்காவிடம் கொடுத்துவிட்டு, உடை கூட மாற்றாமல் அப்படியே படுக்கையில் சாய்ந்து இவ்வுலகை மறந்து துயில் கொண்டேன்.

2 கருத்துகள்:

Incredible-Insights சொன்னது…

i am late to office today , just because u made me read ur writing its just awesome keep going !!!!

து. பவனேஸ்வரி சொன்னது…

நீங்கள் தாமதமாகச் செல்வதற்கு எம்மைக் காரணம் காட்டலாமா?