செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

என்னைச் சேர்வாயா?



காதலை விட கொடிய ஆயுதம்
அவனியில் வேறெதுவும் இல்லை
ஈவிரக்கமின்றி கதறக் கதற
உயிரோடு கொன்று புதைக்கின்றதே!

பேதை நான் என்ன செய்வேன்
ஏனடா உன்னைச் சந்தித்தேன்
உன்னுடன் கதைக்காமல்
உறக்கம் கூட வரமாட்டேன் என்கிறது!

உலாவலாம் என்று கடற்கரைச் சென்றேன்
‘துணை எங்கே?’ என்று முழு நிலா கேட்கிறது
உறங்கலாம் என்று பொம்மையை அணைத்தேன்
‘இப்பொழுது மட்டும் தேவையா?’ என்று முறைக்கிறது!

ஒரு பக்கம் இன்பமாகவும்
மறுபக்கம் துன்பமாகவும்
இரு பக்கமும் குழப்பமாக
தீர்வு காணாத நமது உறவு!

நான் என்ன செய்ய வேண்டும்
எப்படி இருக்க வேண்டும்
எது செய்தால் பிடிக்கும்
ஏதாவது சொன்னால் தானே தெரியும்?

இந்த உணர்ச்சி எனக்குப் பிடிக்கவில்லை
சில வேளைகளில் பிடிக்கிறது
சில வேளைகளில் வெறுப்பாய் உள்ளது
மொத்தத்தில் பைத்தியம் பிடிக்கிறது!

பசிக்கிறது, உண்ண முடியவில்லை
நித்திரை வருகிறது உறங்க முடியவில்லை
கதறி அழ வேண்டும் போல் இருக்கிறது
கண்ணீர் கூட வரமாட்டேன் என்கிறது!

அழுது அழுது கண்ணீர் வற்றிவிட்டதடா
இனி அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது
பெண்களின் கடைசி ஆயுதத்தையும் இழந்து
உன்னிடம் எவ்வாறு காதலை நிரூபிப்பேன்?

உன் மனதில் என்னதான் இருக்கிறது?
நான் வேண்டுமா, இல்லை வேண்டாமா?
முடிவாக கூறாமல் இழுபறி செய்கின்றாய்
பதிலேதும் கூறாமல் என்னை நீ கொல்கின்றாய்!

விலகி இருக்கவும் முடியாமல்
நெருங்கி வரமும் இயலாமல்
இந்த உறவிற்குப் பெயரும் தெரியாமல்
விழி பிதுங்கி வழி மறந்து நிற்கிறேன்!

கடந்து வந்த பாதைகளில்
விழுந்து எழுந்து பின் மீண்டும் விழுந்து
இப்படியே அடிப்பட்டு இரணப்பட்டு
ஆறாத வடுக்களுடன் தீராத ஆசைகளுடன் நான்!

தாய், தந்தை, அண்ணன், தம்பி
அனைவர் மீதும் வைக்க வேண்டிய அன்பை
ஒட்டுமொத்தமாக உன் மீது வைத்துவிட்டு
இப்போது வாடித் துடிக்கின்றேன்!

எதற்காகக் கோபிக்கின்றாய்
என்னதான் நினைக்கின்றாய்
ஒன்றுமே புரியாத, புரிந்துக்கொள்ள முடியாத
முட்டாளாய் நான்!

நான் பேசிய காதல் வார்த்தைகள் சத்தியம்
உன் மீது கொண்ட அன்பு நித்தியம்
அது அமுதசுரபி போல் பெருகுமே அன்றி
ஒரு நாளும் தேய்ந்து மறையாது!

எனக்குள் என்றுமே நீ இருப்பாய்
நீ என்னை வெறுத்தாலும் கூட
என்னுயிரோடு உயிராய், சுவாசமாய், ஆவியாய்
என்னுள்ளே நீ வியாபித்திருப்பது உண்மை!

உன்னைக் கோபிக்கக்கூட முடியவில்லை
கதைக்காத நில நிமிடங்கள் கூட வருடங்களாய்
உன் நினைவுகள் என்னை கொஞ்சம் கொஞ்சமாய்
இரத்தம் சொட்டச் சொட்ட அறுத்தெறிகின்றன!

உறக்கமில்லா இரவுகளில்
தவிர்க்க முடியா எண்ணங்களால்
பசலைப் பூத்து வாடுகிறேன்
கண்ணா உன்னைத் தேடுகிறேன்!

வாக்கொன்று கொடுப்பாயா
வருத்தத்தைத் துடைப்பாயா
கரம் பிடித்துச் செல்வாயா
பாதியிலே மறைவாயா?

உனக்காக நான் இருப்பேன்
இறக்கும் வரை பார்த்திருப்பேன்
காதல் ஒன்று வந்ததென்றால்
சொல்லிவிடு வந்திடுவேன்!

வெகுதூரம் இருப்பதனால்
நம்பிக்கை நீ இழக்காதே
காதலிக்கும் பாவையர்க்கு
கடலும் சிறு துளியே!

உன்னோடு நான் வாழ
என்னோடு நீ கூட
நாம் வாழும் வாழ்க்கையை
சரித்திரமும் கூறிடுமே!

நீரில்லாமல் மீனில்லை
கடலில்லாமல் அலைகளில்லை
ஊடல் இல்லாத காதல் இல்லை
நீ இல்லாது வாழ்க்கை இல்லை!

ஒரு கணம் இறக்கிறேன்
மறு கணம் பிறக்கிறேன்
இவ்வாறு இறப்பும் பிறப்பும் அருளிய
கண் கண்ட தெய்வம் நீயல்லவா?

கனத்த இதயத்தோடு காத்திருக்கிறேன்
நிறைந்த எதிர்ப்பார்ப்போடு பார்த்திருக்கிறேன்
உடலின் கடைசி இரத்தம் காயும் முன்பே
உயிரே என்னைச் சேர்வாயா?

4 கருத்துகள்:

logu.. சொன்னது…

hi..hi... Kathalla ithellam saatharanamappa...

து. பவனேஸ்வரி சொன்னது…

லோகு: உண்மைதான் நண்பரே...

eye brows சொன்னது…

pirivin vali,yai varthayilummmmmmm sollalam pola.............

து. பவனேஸ்வரி சொன்னது…

வார்த்தைகள் அதிகம் கிடைக்கவில்லை நண்பரே...வலிகளை வார்த்தைகளால் கூறிட இயலாது என்பதனை இக்கவிதையை எழுதும் போது தெரிந்துக்கொண்டேன்...