சனி, 9 ஜனவரி, 2010

வேண்டாம் மனமே…


என்னவாயிற்று உனக்கு?
நேற்று வரை நன்றாக இருந்தாயே
இன்றென்ன வந்தது மனமே?
ஏன் தடுமாறுகின்றாய்?
என்ன குழப்பம் உன்னுள்ளே?
உறுதியை இழக்கின்றாயோ?
வேண்டாம் தளராதே
நிலையாக இரு!

நீ என்ன குரங்கா
நொடிக்கொரு தரம் மாறுகின்றாயே
நேற்றுவரை வேறொருவனை நினைத்தாய்
இன்று எப்படி இன்னொருவன்?
சே! நினைத்தாலே வெட்கம்
உன்னால் எப்படி முடிகின்றது?
நீ தடம் மாறுவது மட்டுமின்றி
என்னையும் இழுக்கின்றாயே!

என்ன பாவம் செய்தேன்
உனக்கு என்ன குறை வைத்தேன்?
நீ சொல்வதெல்லாம் கேட்டேனே
உன் வாக்கை வேதவாக்காகக் கொண்டேன்
இன்று நீயே என்னை இம்சிக்கலாமா?
உனக்கு என்னதான் வேண்டும்?
ஏன் என்னை அணுஅணுவாய்க் கொல்கிறாய்?
சொல் மனமே சொல்!

உன் போக்கில் தானே
என் வாழ்க்கையை அமைத்தேன்
மீண்டும் மீண்டும் சித்ரவதை ஏன்?
எவ்வளவு சீக்கிரம் மாறுகின்றாய்
நம்பமுடியவில்லை, நீ கூடவா?!
எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன்
எனக்கே துரோகம் செய்கின்றாயே
இது தகுமா சொல் மனமே!

யாருமறியாமல் கோட்டை கட்டினாய்
இரகசியமாய் என்னை வாழவைத்தாய்
திடீரென்று கட்டிய கோட்டை இடிந்ததே
இடிந்த கோட்டையை சரிப்படுத்தாமல்
இன்னொரு கோட்டை கட்டலாமோ?
அரசியலை விட சாக்கடையாய் இருக்கின்றாயே
இனி உன்னை நம்பி எப்படி வாழ்வேன்
எப்படி வாழ்வேன் மனமே?

கழுதை கெட்டால் குட்டிச் சுவர்
நீ கெட்டால் என் நிலமை என்ன?
மூளை சொல்வதையும் சற்று கேள்
உன் பாட்டுக்கு ஆடிக் கொண்டிருக்காதே
கட்டுப்படுத்து, உன்னை நீயே கட்டுப்படுத்து
பட்ட காயம் இன்னும் போதவில்லையா
காதல் வலி அதற்குள் மறந்துவிட்டதா?
வேண்டாம் மனமே வேண்டாம்!

அவனை நம்பாதே
மீண்டும் நம்பி ஏமாறாதே
நான் சொல்வதைச் சற்று கேள்
ஞாபகம் இருக்கிறதா உன் காதலனை
அவனையே நினைத்து உருகினாயே
இன்று என்னவாயிற்று?
நினைத்துப் பார் மனமே
சிந்தித்துப் பார்!

என் மனமே நீ பேதை
உன்னை நினையாதவனை நினைக்கின்றாயே
நீ படும் துன்பம் அவன் அறியமாட்டான்
அறிந்தாலும் இரங்க மாட்டான்
யாரை நினைக்கின்றாய் நீ?
எனக்குக் கொஞ்சம் தெளிவு படுத்திவிடு
மீண்டும் குழப்பத்தில் ஆழ்த்தாதே
எனக்குத் தெளியவில்லை!

திருந்தா மனமே
உடைந்த கண்ணாடிப் பூக்கள் போல்
உன்னைச் சிதைத்துச் சென்றவனை நினைக்கின்றாயா?
அல்லது, புதிதாய் கிடைத்த நட்பை நீ
காதாலாக்க முனைகின்றாயா?
அறிவிழந்த மனமே கேடு வந்து விட்டதா
புதைக் குழியில் விழுவதற்கு ஆசை வந்துவிட்டதா?
வேண்டாம் மனமே வேண்டாம்!

இரக்கம் காட்டு
என் மேல் சிறிதாவது இரக்கம் காட்டு
உன் வழியில் என்னை இழுக்காதே
என்னை முழுமையாக ஆட்கொள்ளாதே
என்னையும் சற்று வாழவிடு
நரக வேதனைத் தருகின்றாயே
காதல் இல்லாமல் வாழ முடியாதா
பாழாய் போன மனமே!

ஏமாறிய மனமே
எத்தனை முறை ஏமாற்றினாய் என்னை
மறுபடியும் ஏமாற மாட்டேன் நான்
உன் முயற்சியைக் கைவிடு!
எதிர்ப்பார்க்காதே; யாரையும் எதிர்ப்பார்க்காதே
எதனையும் யாரிடத்தும் எதிர்ப்பார்க்காதே
எத்தனை முறை ஏமாந்தும் புத்தியில்லை
அதனைத் தாங்க எனக்கு சக்தியில்லை!

வேண்டாம் விட்டுவிடு
நமது நன்மைக்காக விட்டுவிடு
உன் ஆசைகளைச் சற்று கட்டுப்படுத்து
என் இயலாமையை அறிந்துக் கொள்
எனக்குள் தானே நீ வாழ்கின்றாய்
கொஞ்சமாவது இரக்கம் காட்டு
என்னை அழவைக்காதே
தயது செய்து!

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

I am regular reader of your poems. They are very touching!! Keep on writing!

Tamilvanan சொன்னது…

//மூளை சொல்வதையும் சற்று கேள்
உன் பாட்டுக்கு ஆடிக் கொண்டிருக்காதே//

ஆமாம் ம‌ன‌மே
இந்த‌ புத்தாண்டிலாவ‌து
மூளையின் புத்திம‌தியை
ச‌ற்று கேள்

இந்த‌ வ‌ருட‌ம் முழுதும்
சோக‌ க‌விதையை ப‌டித்து
ந‌ம்ம‌ ம‌ன‌சும்
ஆடிக் கொண்டிருக்கிற‌து.

Radhakrishnan சொன்னது…

மனதுடன் பேசும் விதம் மிகவும் அழகு.

து. பவனேஸ்வரி சொன்னது…

அமிர்தராஜ்: நன்றி நண்பரே...உங்களுக்காக மேலும் எழுதுவேன்..

தமிழ்வாணன்: என்ன செய்வது நண்பரே...உணர்ச்சிகளின் வெளிப்பாடுதானே கவிதை....

வெ. இராதாகிருஷ்ணன்: நன்றி நண்பரே...