வியாழன், 2 ஏப்ரல், 2009

எங்கே செல்லும்…? (19)

ஆனால், அதற்கான பதில் அவளுக்குக் கூடிய விரைவிலேயே கிடைத்தது! ஒருநாள் சற்று சீக்கிரமே பள்ளி முடிந்து வீடு திரும்பிய கவிதா களைப்பு மிகுதியால் அறையில் படுத்திருந்தாள். அவள் வீட்டிலிருப்பதை யாரும் கவனிக்கவில்லை. கவிதாவின் அத்தை அப்போது பாட்டி வீட்டிற்கு வந்திருந்தாள். திடீரென்று தனது பெயரை யாரோ உச்சரிப்பதை உணர்ந்தாள் கவிதா. அறைக்கு வெளியே குமாரியின் தாய் மங்களம் பாட்டியிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

“நேத்துக்கூட ஒரு பையன் வந்து என்கிட்ட சொன்னான். அக்கா, கவிதாவை ஒரு ஆளுக்கூட பஸ் ஸ்டேசன்’ல பாத்தேன்’னு. அது வரவர அத்துமீறிப் போய்க்கிட்டு இருக்கு. நீங்களும் கண்டிக்க மாட்டேங்கறீங்க. அதுமட்டுமில்ல, கவிதானால எம்பொண்ணு பேரும் கெட்டுப்போச்சு. ரெண்டும் ஒரே மாதிரி இருக்கிறதால, எம்பிள்ளதான் ஊர் மேயுதுன்னு நினைச்சுக்கிறாங்க. அது கிட்ட ஒழுங்கா சொல்லி வையுங்க அம்மா. இல்லாட்டி நான் ஒரு நேரம் போல இருக்க மாட்டேன்!” என்று குதித்துக்கொண்டிருந்தாள் மங்களம்.

கவிதாவின் பாட்டி அவளுக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தாள். இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கவிதாவுக்குத் தலைச் சுற்றியது. பேசுவது தன்னைப் பற்றித்தானா என்ற சந்தேகமே வந்துவிட்டது. இரு கைகளால் தலையைப் பிடித்துக்கொண்டுக் கட்டிலில் தொப்பென்று விழுந்தாள். அவர்கள் பேசப் பேச இவளுக்கு உடலில் நடுக்கம் எடுத்தது. ‘அடப் பாவிகளா! இப்படியும் பேசுவீங்களா?’ என்று உள்ளுக்குள் நொந்துக் கொண்டாள் கவிதா.

அன்றிலிருந்து அவள் மங்கைகைக் கண்டால் முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்லத் தொடங்கினாள். அவளது முகத்தைப் பார்க்கவே கவிதாவிற்குப் பிடிக்கவில்லை. மங்கை ஏதாவது கேள்விக் கேட்டாலும் பதிலேதும் கூறாமல் விருட்டென்று எழுந்து சென்றுவிடுகிறாள் கவிதா. இது மங்கைக்கும் சற்று நெருடலாகவே இருந்தது. இருந்த போதிலும் அதனை வெளியில் காட்டவில்லை. அதே சமயம் கவிதாவைத் தூற்றுவதையும் நிறுத்தவில்லை. நிலமை இவ்வாறே தொடர்ந்துச் சென்றது. பழிக்கு மேல் பழி கவிதாவை வந்துச் சேர்ந்தது.

இனியும் பொறுத்துப் பயனில்லை என்பதைக் கவிதா உணர்ந்தாள். அதே வேளை யாரையும் பகைத்துக்கொள்ளவும் அவள் விரும்பவில்லை. பெற்றோரை விட்டுப் பிரிந்திருந்துப் பாட்டி வீட்டில் வசிக்கும் கவிதா உறவினர்களின் வெறுப்பைச் சம்பாதிக்க விரும்பவில்லை. அவள் விரும்பாமலேயே அவள் மீது அனைவரையும் வெறுப்புப் பாராட்டச் செய்துவிட்டாள் மங்களம்.

ஒரு முறை மங்களமும் பாட்டியும் வீட்டு ஊஞ்சலில் தன்னைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டுவிட்டாள் கவிதா. அதற்கு மேல் பொறுக்க மாட்டாமல் நேரே அவர்கள் இருவர் முன்னிலையிலும் போய் நின்றால். அவள் வருகையைச் சற்றும் எதிர்ப்பார்க்காதா மங்களமும் பாட்டியும் ஒரு கணம் திகைத்து நின்றனர். பின்னர் மங்களம் கவிதாவைப் பார்த்தும் முகத்தைச் சுளித்துவிட்டு பாட்டியிடம் வேறு கதைப் பேசத் தொடங்கினாள், கவிதாவிற்கு இரத்தம் சூடேறியது.

“இப்ப என்னைப் பத்தி என்ன பேசுனீங்க?” என்று நிதானமாகக் கேட்டாள். அதற்குள் அவளது அத்தை பொங்கி எழுந்துவிட்டாள்.

“நாங்க ஒன்னும் உன்னப் பத்திப் பேசல! உன் வேலையைப் பார்த்துக்கிட்டுப் போ. பெரியவங்க பேசுற இடத்துல உனக்கு என்ன வேலை?” என்று பாய்ந்தாள். அதற்கு மேல் கவிதாவால் பொறுக்க முடியவில்லை.

“பெரியவங்களா? மொதல்ல பெரியவங்க மாதிரிப் பேசக் கத்துக்குங்க!”

“ஏய், என்னடி ரொம்பெ பேசுற?”

“ஹலோ, மரியாதையாப் பேசுங்க. உங்க வயசுக்கு மரியாதைக் கொடுக்கிறேன். கேவலமா நடந்துக்காதீங்க.”

“யாருடி கேவலமா நடந்துக்கிறா? நீதான் ஊர் ஊரா பையனுங்க கூட திரியிற. பேரைக் கெடுக்கிற நாயி, உனக்கு அவ்ளோ திமிரா?”

“வயசுக்கூட’னு பார்க்கிறேன். வாய்க்கு வந்தபடிப் பேசாதீங்க. நீங்க பாத்தீங்களா நான் எவன் கூடயாவதுப் போனத?”

“அந்தக் கண்றாவிய நான் வேறப் பார்க்கணுமா? அதா…போறவ வர்றவனுங்கெல்லாம் சொல்றானுங்களே?”

“எவன் சொன்னான் உங்கக்கிட்ட? சும்மா, அவன் சொன்னா இவன் சொன்னான்னு இஷ்டத்துக்குப் பேசாதீங்க! யாரு சொன்னான்னு ஆளக் காட்டுக்க!”

“நான் எதுக்குக் காட்டணும்? ஆளலெல்லாம் காட்ட முடியாது!”

“எப்படிக் காட்ட முடியும்? உண்மையா யாராவது சொல்லியிருந்தா தானே காட்ட முடியும். நீதான் பொய் சொல்லிக்கிட்டு அலையிறியே!” என்று இந்தச் சமயம் மரியாதையைக் கைவிட்டாள் கவிதா.

“அனாதை நாயி! உனக்கு அவ்ளோ திமிரா?” என்று அடிக்கக் கையை ஓங்கிக்கொண்டு வந்தாள் மங்களம்…

தொடரும்…

6 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

கண்டபடி பேசுவுபவர் வாயில் மாட்டிக்கொண்ட

அவலாய்
அவள்

புதியவன் சொன்னது…

//“அனாதை நாயி! உனக்கு அவ்ளோ திமிரா?” என்று அடிக்கக் கையை ஓங்கிக்கொண்டு வந்தாள் மங்களம்…
//

மனம் கனக்கிறது...விரைவில் அடுத்த பகுதியை பதிவிடுங்கள்...

Divyapriya சொன்னது…

kadhai engaengayo pogudhu…paavam kavitha…

நான் சொன்னது…

வாழ்த்துகள் பதிவு நன்று

VIKNESHWARAN சொன்னது…

ஹம்ம்ம்ம்...

து. பவனேஸ்வரி சொன்னது…

இத்தொடர்கதையைப் பொறுமையுடன் படித்து கருத்து தெரிவிக்கும் அனைத்து வாசகர்களுக்கும் நன்றி.